Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

மணல் மாளிகை

பசிக்கொண்ட குழந்தை தன் பசியாற தாயின் முந்தானையை இழுப்பதுப்போல இரவு மறைந்து சூரியனும் முகம் காட்ட, இயற்கையின் இரைச்சலோடு, இதமான குளிர்ந்த காற்றும் இடை இடையே வந்து சுரம் மீட்ட, ஐந்து அறிவு ஜீவ ராசிகளின் ஐஸ்வா்யதோடும், அன்பும்,பண்பும் ஆறாக பெருகி அருவியாக ஒடிக்கொண்டு இருக்கும், மலையும், வயலும் அதை சார்ந்த விவசாயமும்.இதில் பிணைந்த வாழ்க்கை முறையும் என வனப்புள்ள எழிலுார் தான் நம் கதையின் கதாநாயகி எழிலரசியின் ஊர்.

 

எழிலரசிக்கு ரொம்ப பிடித்தது அவ குடும்பம் தான், அப்படி என்ன பெரிய குடும்பமும் பார்க்குறீங்களா,

 

அவ வளா்க்கிற பூனை, நாய், கோழி, ஆடு, மாடு, நேத்து லெஷ்மிக்கு (பசுமாடு)பிறந்த கன்னுக்குட்டி இது தான் அவ வாழ்க்கை,உலகம் எல்லாமே.

 

இவளுக்கு அப்பா, அம்மா இல்லையான்னு தான நினைக்கிறீங்க, இருக்காங்க அப்பா ராமு வெளி ஊா்ல லேத்து பட்டறை வச்சிருக்காரு, அம்மா பிச்சாயி கீரை கட்டு வித்துக்கிட்டு இருக்காங்க.

 

அவங்க நிலத்துலே விவசாயம் பண்ணுறதால நல்ல வருமானம் கிடைக்கும், காலையில கீரை தட்டை தலையில வச்சி எழிலுார ஒரு தரம் சுத்தி வரதுகுள்ள பொழுது சாய்ஞ்சிரும்.

 

எழிலு பெரிய பொண்ணு ஆகுற வரைக்கும் பிச்சாயிக்கு எதுக்கும் கவலை பட்டது இல்லை, மாரியம்மாவ (எழில் தோழி)துணைக்கு வச்சிக்கிட்ட எழிலுக்கு பல்லாங்குழி, கண்ணாபூச்சினு பொழுது ஒடிடும்.

 

ஆனா, அவ வயசுக்கு வந்த நாளிருந்து தான் எழில் வாழ்க்கை வழி மாறிபோகுமுனு யாரு கண்டா,

 

பிச்சாயி கலைத்துப்போயி நடந்து வந்துக்கொண்டு இருக்கும் போது,” பிச்சாயி, என்னடி இவ பிள்ளைக்கு என்ன ஆச்சினு அறியாம, சவுகாசமா நடந்து பொறவ” என காமாட்சி சாமியார் வீட்டு புளி மரத்துல புளியப்பழம் பறிக்க வந்தப்போது பிச்சாயிடம் சொன்னதும் தட்டு கூடையை துாக்கி எறிந்த வேகத்தில் வீட்டின் வாசலில் தான் நின்றாள் பிச்சாயி.

 

“கண்ணம்மா, கண்ணம்மா என்னாச்சி என் மகளுக்கு” என்று வாசலில் நின்ற கண்ணம்மாவிடம் கேட்டப்படியே வீட்டினுள் நுழைந்தாள் பிச்சாயி.

 

அங்கு எழிலின் தோற்றத்தை பார்த்ததும், “கண்ணு” என்று ஒடி வந்தவளுக்கு அழுகையும், சந்தோஷமாய் இருந்தது.

 

“ஆத்தி, ராசாத்தி உங்க அண்ணணுக்கு சேதி சொல்ல, பெரியவன் கருப்பனை அனுப்பி விடு” என்ற பிச்சாயிக்கு நிலைக்கொள்ளவில்லை.

 

ராமு வந்த கையோடு, சடங்கும், சம்பிரதாயமும் முடிந்தது, தாவணியில் ஏழிலை பார்க்க ஒரு கூட்டமே நின்றது. பெண்களே பொறாமைப்படும் அளவிற்கு ஒரு அழகு.

 

அளவான நெற்றி, இரு புருவத்தை இணைக்கும் வகையில் சிகப்பு பொட்டு,வண்டுப்போன்ற கண்கள், அதில் மை கொஞ்சும் கண் அசைவுகள், முகத்திற்கு ஏற்ற மூக்கு, அதில் பச்சை நிற மூக்குத்தி, சிவந்த இதழ், வரிசையான பற்கள் அதில் வசீகரிக்கும் சிரிப்பு, எலுமிச்சை நிறம் என அழகும், அன்பும் கொண்டவளாகவும், பெயருக்கு ஏத்த அழகு என பலா் பேசும் படி இருந்தாள் எழில்.

 

பிச்சாயிக்கு தன் மகளை நினைத்து பெருமையாக இருந்தது.எழிலும் அவள் அழகின் மேல் சற்று கா்வமாக தான் இருந்திருக்கக்கூடும்.

 

எழில் மீது காதல் கொண்ட பாலு, எழிலை பின்தொடா்வது, கோயில், குளம், என எழில் செல்லுமிடம் எங்கும் வருவதுமாக இருந்தான் பாலு.

 

பாலு கலையான முகம், கட்டுமஸ்தான உடல் வாகு, கடின உழைப்பாளியான பாலு தன் உழைப்பால் படிப்படியாக உயர்ந்து கட்டிட பணியில் மேஸ்திரியாக இருப்பவன். பாலுவிற்கும் எழிலின் மீது ஒரு உண்மையாவே பாசமாக தான் இருந்தான்.

 

எறும்பு ஊற கல்லும் தேய்யும்னு சொல்லுறது கல்லுக்கு மட்டும் இல்ல, காதலுக்கும் தான் பாலு மேல எழிலுக்கும் காதல் ஏற்பட்டது.

 

காதல் விவகாரத்தை பாலு அவங்க விட்டுல சொன்னதும், எழில்ல பொண்ணுக்கேக்க வந்துட்டாங்க பாலு வீட்டுல, ராமுவிற்கு முதல்ல பிடிக்கலனாலும் அப்புறம் ஒத்துக்கிட்டாரு, அவங்க விவசாயப்பண்ணுன நிலத்தை வித்துட்டு, பாலுவிற்கும் எழிலுக்கும் கல்யாணம் நடந்து முடிந்தது.

 

எழிலும், பாலும் நல்ல பொருத்தமான ஜோடினு ஊரே மூக்கு மேல் விரல் வச்சிதான் இருந்திருக்கும்.

 

அவங்க வாழ்க்கை நல்லா சந்தோஷமா போயிட்டு இருந்த நேரத்துல,

 

பாலுவோட தாய்மாமன் எழில் கிட்ட தப்பா நடந்துக்க முயற்சி செய்தாரு, ஆனா, எழில் அவர அசிங்கப்படுத்தி அனுப்பிட்டா.

 

அதனால தாய்மாமன் “ஏய், என்னடி என்னையே அசிங்கப்படுத்திட்ட இல்ல, எப்படி என் மாப்பிள்ளையோட நீ சந்தோஷமா வாழ்றனு பாக்குறேன் டி ” னு கோபமாக வீட்டை விட்டு வெளியேறினார் பாலுவோட தாய்மாமன்.

 

பாலுவும் எழிலும் அன்பான காதல் ஜோடினு சொன்னாலும், சண்டைனு வந்துட்டா அவ்வளவு தான் அவங்க சமாதானப்படுத்தவே முடியாது. அன்னைக்கு அப்படிதான் அவங்களுக்கு சண்டை நடந்தது.

 

எழில் 5வது வரைக்கும் தான் படிச்சிருக்கானாலும், அவளுக்கு கட்டிட வேலை பாக்க தெரியும். அவங்க அப்பா லேத்து வைக்கிறதுக்கு முன்னாடி அவரும் கட்டிட வேலைத்தான் பாத்துக்கிட்டு இருந்தாரு. அதனால எழிலுக்கும் அந்த வேலை நல்லா தெரியும்.

 

எழிலுக்கு வீட்டுல இருக்குறது பிடிக்கல, அது மட்டுமில்லாம பாலு ரொம்ப கஷ்டப்படுறதும் எழிலுக்கு கஷ்டமா இருந்தது. எழிலும் வேலைக்கு போகனும் ஆசைப்பட்டா, ஆனா பாலுவிற்கு இது சுத்தமா பிடிக்கல, தன் பொண்டாட்டி கஷ்டப்படக்கூடாதுனு பாலு நினைச்சான்.

 

அதனால, பாலுவுக்கும் எழிலுக்கும் அடிக்கடி சண்டை வந்துகிட்டே இருந்தது. எழில் பாலு பேச்சை கேக்காம அவனுக்கு தெரியாம வேலைக்கு போக ஆரம்பிச்சா.

 

பாலு வேலை பாக்குற இடத்திற்கு பக்கத்துல எழிலு பாலுவிற்கு தெரியாம வேலை பாத்துக்கிட்டு இருந்தா,

 

எழிலு மண்ணு சலிக்கிறது, கலவை சட்டி துாக்குறதுனு எல்லா வேலையும் பாத்துக்கிட்டு இருந்தா, பாலுவோட சித்தப்பா பையன் கல்யாணத்துக்கு பத்திரிக்கை வைக்க வந்தவன் வீடு பூட்டி இருக்குனு பத்திரிக்கைய பாலு வேலைபாக்குற இடத்துல வந்து வச்சது மட்டுமில்லாம, எழில் வேலை பாக்குற விஷயத்தையும் காதுல போட்டுட்டு போயிட்டான்.

 

பாலு ரொம்ப கோபமாக வீட்டுக்கு போன வேகத்துல எழில்கிட்ட பயங்கரமா சண்டை போட்டு, எழில்ல கண்மூடித்தனமா அடிச்சதுல எழிலோட முன் பல்லு விழுந்துடுச்சி, வீட்டை விட்டு கழுத்தப்புடிச்சி வெளியில தள்ளிவட்டான் பாலு.

 

எழிலும் அவங்க அம்மா வீட்டுல தான் இருந்தா, எழில் அப்பா பாலுகிட்ட போயி பேசி பாக்கலாம்னு பாலுவ தேடி அவன் வேலைபாக்குற இடத்துக்கு போனாரு.

 

பாலுவும், அவன் தாய்மாமனும் குடிச்சிக்கிட்டு இருந்தாங்க, பாலுகிட்ட ராமு எவ்வளவோ கெஞ்சிப்பாத்தும் பாலு கேக்குற நிலைமையில இல்லை,

 

ராமு பாலுவோட கால்ல புடிச்சி கெஞ்சிக்கிட்டு இருந்தாரு, ஆத்திரத்துல பாலு வேகமா ராமுவ எட்டி விட்டதும், ராமு பக்கத்தில இருக்குற ஆலோ பிளாக் கல்லுல மோதி, அதே இடத்துல செத்துட்டாரு.

 

தாய்மாமன் பாலுகிட்ட ” மாப்பிள்ளை நீ ஊர விட்டு போயிடு, இன்னொரு தடவை இந்த ஊர் பக்கம் வந்துடாத, அத்தை கிட்ட பணத்தை வாங்கிட்டு நீ உங்க சித்தி இருக்கிற பட்டணத்துக்கு போயிடு மாப்பிள்ளை” னு பாலுவை அனுப்பி வைத்துவிட்டு.

 

ராமுவை துாக்கி கொண்டுபோயி, ராமுவின் வீட்டிற்கு பின் புறம் உள்ள கிணத்துல வீசினான் பாலுவோட மாமன்.

 

தன் மேல சந்தேகம் வரக்கூடாதுனு உரம் வாங்க பக்கத்து ஊருக்கு சென்று விட்டு காரியம் முடிந்து 4 நாட்கள் கழித்தப்பின்பே எழிலுாருக்கு வந்தான் தாய்மாமன்.

 

எழிலின் மொத்த அழகும் பல் இல்லாததால் கலையிழந்து போனது, “பல்லு போனா சொல்லு போன மாதிரி னு சொல்லுவாங்க எழிலு நீ தங்கப்பல்லுகட்டிக்க எழிலுனு மாரியம்மா சொன்னதும்.

 

“அதுக்கு காசு நிறையா செலவு ஆகும்” மாரி

 

“நீ ஒன்னும் கவலைபடாத எழிலு, காச மட்டும் சேத்து வை, நம்ப தம்பிக்கடை சுப்பையாகிட்ட கேட்டு பாக்கலாம், அவர்தான் நம்ம ஊர்லே தங்கப்பல்லுக்கட்டிருக்காரு” என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போதே.,

 

பெரிய கண்ணு, கந்துவட்டிக்கு காசுக்குடுக்குறவரு, பிச்சாயிக்கிட்ட சத்தம் போட்டுகிட்டு இருக்குறது கேட்டதும்,

 

எழிலு வெளிய வந்து கேட்டுகிட்டு இருந்தா, “இங்க பாரு பிச்சாயி உன் புருசன் உன் பெண்ணுக்கு கல்யாணத்துக்கு மரப்பாத்திரம் வாங்க, என் கிட்ட 25,000 கடன் வாங்கிருக்கான் இங்க பாரு பணத்தை குடுக்கிறியா, இல்ல வீட்டை எழுதி வைக்கிறியா ” என்று ரவுடிகளுக்கே உரிய தோரணையில் பேசிக்கொண்டு இருந்தான் பெரிய கண்ணு, பிச்சாயி வீட்டை எழுதிக்கொடுக்க சம்மதித்தாள்.

 

பிச்சாயிடம் வீட்டு பத்திரத்தை வாங்கிக்கொண்டு, ” பிச்சாயி, நீ வீட்டுல தங்கிக்கோ, ஆனா ஒரு மாத வாடகையா 500 ரூபாய் மட்டும் என் ஆளுக்கிட்ட குடுத்துடு, வரட்டா” என்று புல்லட்டில் கிளம்பினான் பெரிய கண்ணு.

 

எழிலுக்கும், பிச்சாயிக்கும் தலையில் இடியை இறக்கியது போல இருந்தது. வறுமையும், பசியும் இருவரையும் படாய்படுத்தியது.

 

எழில் மறுபடியும் தன் கணவனை தேடி போனாள், அவா்கள் வீட்டில் இவளுக்கு தகுந்த மரியாதை கிடைக்கவில்லை.

 

தன் மாப்பிள்ளை காணாமல் போயிவிட்டதாகவும், அதற்கு காரணம் எழில்தான் என்று பாலுவின் தாய்மாமன் அவா்கள் குடும்பத்தை இவளுக்கு எதிராக திருப்பி வைத்து இருந்தான். பாலுவை வெளி ஊருக்கே அனுப்பியதே எழிலை அடையதான்.

 

எழில் தன் நிலையை நிலைத்து வேதனைப்பட்டாள். கந்து வட்டி கடன் ஒருப்புறம், பசியும் வறுமையும் மறுபுறம் என அவதிப்படுக்கொண்டு இருந்தாள் எழில்.

 

மறுபடியும் கட்டிட வேலையே செய்தாள், மழையிலும், வெயிலிலும் ஒரு வேலை சோறு என படாதபாடுபட்டாள் எழில். கஷ்டப்பட்டு காசு சேர்த்து தங்க பல் கட்டிக்கொண்டாள் எழில்.

 

அன்று இரவு,

 

எழில் தனியாக வீட்டிற்கு நடந்து வந்துக்கொண்டு இருந்தாள், சேது ராமன்(தாய் மாமன்) எழிலை வழிமறித்து “எழில் உன்னை நான் கல்யாண பண்ணிக்கிறேன்னு சொல்லி பாத்தேன்,என்னை ஏத்துக்கவே மாட்டுற அவ்வளவு திமிராடி உனக்கு, உன்னை என்னை பண்ணுறேன் பாரு” என்று அவளை பிடித்து இழுத்துக்கொண்டு முள் கூட்டிற்குள் போனான்சேது ராமன்.

 

அத்திப்பூ போல இருந்த அவளை நாசம் செய்தான். எழிலிற்கு தன்னை மாய்த்து கொள்ளலாம் என்ற அளவுக்கு வேதனையாகவும் வலியாகவும் இருந்தது.

 

செத்து விடலாம் என்ற நினைத்த அவளுக்கு தன்னை நாசம் செய்தவன் மீது கோபமாக இருந்தது, பசியும்,வறுமையும் அவள் கண்முன் வந்து சென்றது, தன் தாய்க்காவது வாழ்ந்தாக வேண்டும் என நினைத்தாள்,

 

தன் வாழ்க்கை நாசம் செய்த சேதுராமனை நேரில் சந்தித்தாள் எழில்.

 

” உன் ஆசைக்காக என் வாழ்க்கைய நாசம் பண்ணுன, எனக்கு என்ன பரிகாரம் சொல்லு,நான் ஊர்க்காரவங்கிட்ட சொன்னா என்ன நடக்கும் தெரியுமில்ல,” என்று அவள் முடிப்பதற்குள்.

 

சேதுராமன் “நான் என் பண்ணை வீட்டை தரேன், ஆனா ஒண்ணு நீ எனக்கு ஒத்துப்போகனும்” என்றதும்,

 

“இனி என்கிட்ட இழக்க ஒண்ணுமில்ல, என்னை நான் காட்சிப்பொருளா ஆக்கித்தான் ஆகனும் வேற வழியில்ல” என்று தன் மனதில் நினைத்துக்கொண்டு,

 

நான் எப்போ வீட்டுக்கு போறது என்று கேட்டவளின் கண்ணில் கவலை மட்டும் ஊஞ்சலாடி கொண்டு இருந்தது.

 

மறுநாள் இரவு 10:30 மணிக்கு,

 

குதிரை வண்டி எழிலின் வீட்டின் முன்பு நின்றது, பிச்சாயியும், எழிலும் வண்டியில் ஏறினா், வாழ்க்கை வழிமாறி சிகப்பு வெளிச்சத்தை தேடி சென்றது.

 

பிச்சாயிக்கு எழிலின் வாழ்க்கையில் நடந்த எதுவும் தெரியாமல் மகளின் பேச்சை கேட்டு ஏறி சென்றாள்.

 

எழில் “பண்ணையாரு வீட்டை நம்மக்கிட்ட குடுத்துட்டு, பட்டணத்துக்கு போயிட்டாரு நம்ம அங்க இருப்போம்” என்று சொல்லி தான் அழைத்து செல்கிறாள்.

 

பிச்சாயிக்கு வெளி உலகம் தெரியாது, என்பதால் எழில் இப்படி சொல்லிவிட்டாள்.

 

வேலையாட்கள், கார், மர வகை பொருட்கள், என அரண்மனை மாதிரி இருந்தது வீடு.

 

எழில் ஒரு அரசிப்போல அந்த வீட்டில் வாழ்ந்தாள், அது சிகப்பு விளக்கு ஏறியும் வீடு என பலரால் உறுதி செய்யப்பட்டது, எழிலூரில் இருந்து 25 கிலோமீட்டர் தூரத்தில் தான் அந்த மணல் மாளிகை இருந்தது.

 

அபரிமிதமான வளா்ச்சி, பணம், வைர நகைகள், தங்க நகைகள், பட்டு புடவை என ஆடம்பரமான வாழ்க்கை ஊரின் பல பணம் படைத்தவா்களுக்கு கனவு கன்னிப்போல எழில் அரசி இருந்தாள்.

 

அவளுக்கு பணிவிடை செய்யும் பெண்கள் பலா் இருந்தனா். உச்சி முதல் பாதம் வரை பணிவிடைகளுக்கும் அலங்காரங்களும் நடந்த வண்ணமே இருந்தன.

 

சந்தனம் அரைத்தும், சாம்பிராணியால் கூந்தலுக்கு பக்குவமும் செய்தும், வாசனை திரவியங்களால் நிறைந்து இருந்தாள் எழில்.

 

குளித்து முடித்ததும் ஆட்டுக்கால் சூப்பு, என பல விதமான அசைவ உணவுகள் உண்பதையும் வழக்கமாக வைத்து இருந்தாள் எழில்.

 

10 வருடங்கள் கடந்த நிலையில், வசந்தம் பேசிக்கொண்டு இருந்தது.

 

திடீரென ஒரு நாள் உடல் நிலை பாதிக்கப்பட்டதும், தொடா்ந்து இருமல், ரத்த வாந்தி என மயங்கி கிடந்தாள்.

 

மருத்தவரிடம் காண்பிக்கையில் எழிலுக்கு ரத்தப்புற்று மற்றும் ஆஸ்துமா இருப்பது தெரியவந்தது.

 

சரி செய்ய பணம் அதிகம் செலவு செய்யவேண்டும் என்றதும். எழிலின் தாய்க்கு மூச்சே நிற்பதுப்போல இருந்தது.

 

படுக்கை அறையில் நலம் விசாரித்தவா்கள், வீட்டின் வாசலில் பணத்தை கொடுத்து விட்டு சென்றனா். கூப்பிட்டாலும் கூட வந்து பார்க்க தயங்கினா்.

 

உடல் நிலையை சரி செய்ய பலரிடம் கடன் வாங்கியதால், ஒவ்வொருவருக்கும் காரு,தோட்டம், நகைகளை, விற்று ஆகவேண்டியதாகி போனது.

 

வேலையாட்களை வரவேண்டாம் என பிச்சாயி சொல்லிவிட, அந்த வீட்டில் எழிலின் இருமல் சத்தமும், பிச்சாயின் அழுகை சத்தம் மட்டுமே கேட்க முடிந்தது.

 

இருந்த வீட்டை விற்று, தன் மகளோட குடிசை வீட்டிற்கு வந்தாள் பிச்சாயி.

 

அழகு மங்கி, கண்ணை சுற்றி கருவளையும் விழுந்து, உடல் மெலிந்து நிறம் கருத்து பார்க்கவே பரிதபமாக இருந்தாள் எழில்,

 

உயிரோட ஒரு இரவை கடப்பதே பெரிய காரியம், எழிலுக்கு சுய நினைவு மழுங்கி, மூச்சு இழுக்க ஆரம்பித்து, கடைசியாக இழுத்த மூச்சி அப்படியே நின்று விட்டது, எழில் வாழ்க்கைக்கான அர்த்தம் தெரியாமல் இறந்து விட்டாள்.

 

பிச்சாயி, தன் மகளின் உடலை தட்டு வண்டியில் மேல் படுக்க வைத்து, எழிலுாரு இழுத்து சென்றாள்.

 

எழிலூாருக்கு நுழைய வருகையில் ஊா் மக்கள் தடுத்து நிறுத்தினா்,

 

அழுகையோடும், கவலையோடும் தெரு தெருவாக அழைந்தாள் பிச்சாயி,” ஐயா, சாமி என் பிள்ளை செத்துப்போச்சியா, துாக்கிப்போடனும் சாமி கொஞ்சம் வாங்க ஐயா” என்று ஒவ்வொருவரின் காலிலும் விழுந்தாள் பிச்சாயி,

 

” சீ, நிறுத்துடீ இப்படிப்பட்ட கேவலமான தொழில பண்ணவள இந்த மண்ணள புதைச்சா எங்களுக்குத்தான் கேவலமா நினைப்பாங்க” என சேது ராமனே பேசுவதை தான் பிச்சாயினாள் தாங்கிக் முடியவில்லை.

 

பிச்சாயி தன் மகளை தட்டு வண்டியில் வைத்து தள்ளிக்கொண்டு எங்கு செல்வது என தெரியாமல் நடந்து சென்றாள்.

 

பிச்சாயி நில்லு, என்றப்படியே சுந்தரம் ஒடி வந்தான், பிச்சாயின் தம்பி.

 

நம்ம மயானத்துல எரிச்சிடலாம் பிச்சாயி, ஆனா கொஞ்சம் காசு செலவாகும். நீ எவ்வளவு வச்சி இருக்க என்றான் சுந்தரம்.

 

“என்கிட்ட காசு இல்லை, சுந்தரம்” என்றாள் பிச்சாயி கண்ணீரோடு.

 

பிச்சாயிக்கு, எழிலின் தங்கப்பல்லு தென்பட்டது, சுந்தரம் தங்கப்பல்லு எடுத்து வித்துட்டலாம்.

 

சரின்னு சொல்லியப்படியே, தங்கப்பல்லை எடுக்கலானான் சுந்தரம்.

 

மழை பெய்ந்தப்படியே இருந்தது,

 

சின்னய்யா, “சுந்தரம் என்னப்பா இங்க வந்துருக்க, சொல்லிருந்தா நானே வீட்டுக்கு வந்து இருப்பேனே”.

 

“சின்னு எழில்ல எரிக்கனும், காசுக்கூட வாங்கிக்க வெளியில சொல்லாதா சின்னு பாவமா இருக்கு”,

 

“சரி காசக்குடு சுந்தரம்”, என்றப்படி எழிலின் உடலை தகன மேடையில் தூக்கி வைத்தான் சின்னய்யா.சுந்தரம், சின்னய்யா, பிச்சாயி என மூவரும் சுற்றி நின்றனா்.

 

பிச்சாயி, தன் மகளின் மேல் விழுந்து புரண்டுக்கொண்டு இருந்தாள்,

 

“அடியே, நான் பெத்த செல்வமே, நான் தவம் இருந்து பெத்தவளே, இப்படி தரங்கெட்டவங்க பெயரயோட போறீயே டி, நாலு பேரு தூக்கிட்டுப் போவாங்க, அதுக்கு கூட நாதியில்லாம போயிட்டியே டி, பாவி நாய் துணிய இழுத்துக்கிட்டு ஊரையே சுத்தி வர மாதிரி உன்னை வச்சிக்கிட்டு நான் இன்னிக்கு சுத்துறேனே,” என்று குலுங்கி குலுங்கி அழுதுக்கொண்டு இருந்தாள் பிச்சாயி.

 

சுந்தரம் பிச்சாயிய புடி, என்று சைகை செய்து சின்னய்யா, எழிலின் உடலில் கொள்ளி வைத்தாரு சின்னய்யா,

 

பூப்போல இருந்த அவள் இன்று சாம்பல் ஆகிறாள் என்பதை பிச்சாயினாள் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை.

 

சுந்தரத்தை தள்ளிவிட்டு, ஓடியவள் நேராக எழில் உடல் எரிந்துக்கொண்டு மேடையில் போய் விழுந்தாள்,

 

எரிந்து சாம்பலானது இருவரின் உடல் மட்டுமல்ல இருவரின் உணர்வுகளும் தான்.

 

சிவப்பு விளக்கில் வாழ்பவர்களுக்கு தரங்கெட்டவா்கள் எனும் பெயர் எனில், சிகப்பு விளக்கை தேடி வருபவா்களுக்கு என்ன பெயர்………!

 

விலை மாதுவா வாழ்பவா்களை விலை கொடுத்து வாங்குபவா்களுக்கு என்ன பெயா்………..!

 

தேகத்தை காட்சி பொருளாக்குபவா்களுக்கு தேவதாசிகள் எனும் பெயர் எனில், காண வந்தவா்களுக்கு என்ன பெயர்……………!

 

வாழ்க்கை சரியாக அமைந்து இருந்தால் வாழ்வாதாரத்திற்காக வந்து இருக்கமாட்டார்கள்……..!

 

வயிறு பசி தீா்ந்து இருந்தால் வறுமையை காரணம் காட்டி வந்திருக்க மாட்டார்கள்………….!

 

இரவில் மட்டும் மின்மினி பூச்சிகளாய் வாழ்பவா்களின், இரவு மட்டுமல்ல எப்போழுதுமே இருட்டுத்தான்…………..!

 

இந்த கதை வாழ்க்கையில் வழி மாறிய ஒவ்வொரு மின்மினி பூச்சிகளுக்கும் சமா்ப்பணம்.

 

– மீனாகூஷி சிவக்குமார்

 

 




Comments are closed here.

You cannot copy content of this page