Share Us On
[Sassy_Social_Share]மல்லிச்சரம்-1
1538
1
மல்லிச்சரம்
மல்லிச்சரம்
டிங் ……..டிங்…..டிங் ………டிங் ……….டாங் …….கடிகாரத்தின் சத்தம் அந்த நிசப்த இரவைக் கலைத்து அதிகாலை மணி மூன்று என்பதை பறைசாற்றியது.
அப்போது தான் மாதவிக்கு உறைத்தது தான் இவ்வளவு நேரம் அழுது கொண்டே இருக்கிறோம் என்று இப்படி யாரோ ஒருவன் கூறிய வார்த்தைக்காக தன்னையே நொந்து கொள்வது மதியீனம் தான் என்று புத்தி கூறியது ஆனால் அவன் கூறிய வார்த்தைகள் இதயத்தில் முள்ளாய் தைத்தது அதன் தாக்கம்தான் கண்களில் ரத்தம் கசிந்தது.
“எப்படி அவனால் அப்படி பேச முடிந்தது?”
இவளை பற்றி அவனுக்கு என்ன தெரியும் ? சரி அவளாவது அவனது கம்பெனியில் ஓராண்டுகாலம் உழைத்திருக்கிறாள். ஆனால் அவள் தாயைப் பற்றி அவன் எப்படி அவதூறு கூறலாம் ? அதற்கு அவனுக்கு என்ன உரிமை இருக்கிறது அவன் யார் அவள் தாயை பற்றி விமர்சிக்க ஆத்திரம் ஆத்திரமாக வந்தது .அவள் அலுவலகத்தில் புது எம்டியை நினைத்து,
பெயரைப் பார் ‘சத்யன் ‘பேச்சில் சத்தியமே இல்லாமல் ,எந்த முட்டாள் இவனுக்கு இந்த பெயரை வைத்தது ? மேல் நிலையில் உள்ள மக்களின் பேச்சு போல் அவன் பேசவும் இல்லை , நடக்கவும் இல்லை .அவனது தந்தை எவ்வளவு தங்கமானவர் , அதற்கு நேர் எதிர்ப்பதமாக அல்லவா இவன் இருக்கிறான். இந்தப் பேச்சுக்கு எல்லாம் இவன் நிச்சயம் பதில் கூறித்தான் ஆக வேண்டும் அவன் கேட்டதற்கு அவள் எதிர் கேள்வி கேட்கும் நாள் வெகு தொலைவில் இல்லை காலம் நிச்சயம் மாறும் .இப்படி பல சிந்தனைகள் மூளைக்குள் ஓடிக்கொண்டே இருந்த போதும் எப்படியோ நித்திராதேவி அவளை நினைவிழக்கச் செய்துவிட்டாள் .
“மாது ……..மாது எழுந்துரும்மா வேலைக்கு நேரமாகிவிட்டது பார் !” என்ற தாயின் குரல் எங்கோ கிணற்றுக்குள்ளிருந்து கேட்டது.அது கனவுபோலவும் இருந்தது . அவள் மூளை விழித்துக் கொண்டாலும் அவள் இமைகள் திறக்க மறுத்தன. உடலில் உள்ள அத்தனை சக்தியையும் ஒன்று திரட்டி இமைகளில் நிலைநிறுத்தி மெல்ல திறக்க முயன்றாள், சற்றே கடின முயற்சிக்கு பிறகே அவளால் கண்களை திறக்க முடிந்தது . ஆனால் இமைகள் சுமையாய் இருந்தன . கண்களில் அப்படி ஒரு எரிச்சல் ,இலவச இணைப்பாக தலைவலியும் சேர்ந்து கொண்டது .
வெகுநேரம் மகள் படுக்கையிலேயே இருப்பதை உணர்ந்த தாய் ,அவள் அருகில் சென்று அமர்ந்தாள் .மகளின் வீங்கிய கண்களை பார்த்ததால் தாய் உள்ளம் பதறியது “என்ன மாதும்மா உடம்புக்கு முடியலையா ? முகம் வீக்கமாகத் தெரியுதே? என்று நெற்றியை பாசமாக வருடிப்பார்த்தார்.
தாயின் முகத்தையே பார்த்த மாதவிக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. இப்படிப்பட்ட சாந்தமான அன்பான தாயை அவன் எப்படியெல்லாம் கூறிவிட்டான் ? மீண்டும் பழைய நினைவுகள் …….. தாங்கமாட்டாமல் அப்படியே தாயின் மடியில் கவிழ்ந்து அழுதாள் .
கமலத்திற்கு ஒன்றும் விளங்கவில்லை .மகள் எதற்காக அழுகிறாள் என்ற குழப்பம் மனதில் எழ ,”என்னாச்சும்மா ………………. மாது……. உடம்புக்கு முடியலையா ?இல்லை ஆபீசில் யாராவது திட்டினார்களா ? இல்லை உன் தம்பிக்கும் உனக்கும் சண்டையா ?சொல்லும்மா. நான் கூட உன்னை எதுவும் சொல்லவில்லையே .எதற்காக இப்படி அழுகிறாய் ?”கண்கள் பனித்தன ..
‘என்னவென்று சொல்வேன் அம்மா உன்னை பற்றி ,உன் கடந்த கால வாழ்க்கையைப் பற்றி கொச்சையாக பேசி விட்டார்களே இதை எப்படி உன்னிடம் சொல்வேன் ‘மனம் ஓ……..வென்று கதறியது ,இருப்பினும் சமாளித்துக்கொண்டு ,
“ரொம்ப தலை வலிக்குது அம்மா “ என்று முணுமுணுத்தாள் மாதவி.
“தலை வலியாடா கண்ணா, நான் பயந்தே போயிட்டேன் .சரி நீ ஆபீசுக்கு லீவு சொல்லிவிட்டு படுத்துக்கொள் உனக்கு சூடாக டீ போட்டு எடுத்து வரேன் “என்றபடி எழுந்தாள் கமலம்
லீவா ………?இனி அந்த ஆபிசுக்கு போவதே கேள்விக்குறி தான் அம்மா .இவ்வளவு அவமானம் நடந்தும் நான் எந்த முகத்தை வைத்துக் கொண்டு அங்கே கால் பதிப்பேன் ?கடவுளே ,இனி என்ன செய்வது ?’மணிக்கு இன்னும் படிப்பு முடியவில்லையே .அவன் சொந்தக் காலில் நிற்கும் வரை நான் சம்பாதிப்பது மிகவும் அத்தியாவசியமாயிற்றே .இந்த வேலையை விட்டால் வயிற்றுப் பாட்டிற்கு என்ன செய்வது ? ஆனால் உயிரை விடவும் மானம் பெரிதல்லவா தினமும் அவனிடம் வசை வார்த்தை வாங்கிக் கொண்டு எப்படி அவளால் அங்கே முழு கவனத்துடன் வேலை பார்க்க முடியும் ?அதுவும் அவள் அவனுக்கு உடன் கீழே வேலை பார்க்கும் பி.ஏ..அல்லவா . ‘எனக்கு ஏன் இந்த சோதனை அப்பா இறந்த பிறகு அம்மா மிகவும் சிரமப்பட்டு தான் எங்களை வளர்த்தாள்.இப்போது தான் அவர்களுக்கு ஓய்வு கொடுத்து நான் இந்தக் குடும்பத்தை நடத்துகிறேன் . அதற்கு இப்படி ஒரு இக்கட்டான தடையா !.?’ யோசித்து யோசித்து தலை இன்னும் பாரமாகி விட்டது .
“மாது……..இந்தாம்மா சூடான இஞ்சி டீ ,உடனே முகம் கழுவி வா.சூடாக குடித்தால் தான் தலைவலி சற்றே மட்டுப்படும் “கமலம் அக்கறையாகக் கூறினாள்.
அந்த தாயுள்ளத்திற்கு மதிப்பு கொடுத்து முகம் கழுவி டீ குடித்தாள் மாதவி,சற்று உடல் தெளிவடைந்ததை போல் உணர்ந்தாள் .
“இப்படி படு மாது தைலம் தேச்சு விடறேன். கொஞ்ச நேரம் தூங்கு. டிபன் செய்ததும் எழுப்பறேன். பிறகு எழுந்தால் போதும் “ என்ற கமலம் ,மாதவியை படுக்க வைத்து தைலம் தேய்த்து விட்டாள் .தைலத்தின் எரிச்சலில் கண்களை மூடியவள் தாயின் அன்பான ஸ்பரிசத்தால் நிமிடத்தில் கண்ணயர்ந்தாள் .
செல்போனின் அலறல் சத்தம் கேட்டு வாரிச்சுருட்டிக்கொண்டு எழுந்து போனை எடுத்தாள் மாதவி. மாலினி தான் கூப்பிடுகிறாள் ,அவசரமாக காதுக்குக் கொடுத்தாள்.
“ஏய் மாதவி எங்க இருக்க ? ஏன் லேட் ? என்று கேள்விகளை அடுக்கினாள் மாலினி .
“இன்னைக்கு நான் லீவ் மாலினி உடம்புக்கு முடியலை “
“என்னாச்சு மாதவி ?” அக்கறையாய் வந்தது குரல்
“தலைவலி “
“ ஓ………இப்போதுதான் எம்.டி. உன்னைப் பற்றி விசாரித்தார் இன்னும் வரவில்லை என்றதும் , வந்தவுடன் அவரைப் பார்க்க வரச் சொல்ல வேண்டும் என்று விட்டுச் சென்றார்.அதற்காகத்தான் நான் உன்னை அழைத்ததே”
அவன் பேசியதற்கு மன்னிப்பு கேட்க கூப்பிட்டு இருப்பானோ ?என எண்ணி ,அவளுக்கே சிரிப்பு வந்தது . அப்படி ஒரு ஏளனமான புன்னகையோடு…. நான் நோக வேண்டும் என்பதற்காகவே பேசியவன் எப்படி மன்னிப்பு கேட்பான் ?நிச்சயம் மாட்டான் .
“ஹலோ ……ஹலோ …..மாதவி “ மாலினியின் குரல் எழுப்பி விட ……
“மாலினி எனக்காக நம்ம எம்டியிடம் லீவு சொல்லிவிடேன் ப்ளீஸ் …….” நீ அவரிடம் சொல்வதுதான் முறை மாதவி “
“எனக்கும் தெரியும் தான் மாலினி , ஆனால் எனக்கு மிகவும் தலைவலியாக உள்ளது அதனால் உன்னை வேண்டி கேட்டுக் கொள்கிறேன் ‘என்றாள் அழும் குரலில்,
“ஏய் …. என்ன இது வேண்டுகிறேன் என்று பெரிய வார்த்தையெல்லாம் நான் போய் சொல்லி விடுகிறேன் போதுமா ?”
“மாலினி ……ஒரு வாரம் என்று சொல்லிவிடு முடிந்தால் நான் பிறகு ஒருமுறை அவருடன் தொடர்பு கொண்டு பேசிக் கொள்கிறேன் .
“ஏய் மாதவி என்ன உளறுகிறாய் ?தலைவலிக்கு போய் யாராவது ஒரு வாரம் விடுப்பு எடுப்பார்களா , கேட்டால் நம் எம்.டி சிரிப்பார் “
“தலைவலி மட்டுமில்லை மாலினி ,எனக்கு சில சொந்த வேலைகளும் இருக்கின்றது .அதனால் தான் ………..”
“சொந்த வேலையா? ஏய்,பெண் பார்க்கும் படலம் ஏதாவதா…….என்னிடம் சொல்லாமல் மறைக்கின்றாயா?” சீண்டினாள் மாலினி.
தான் இருக்கும் நிலையில் அது ஒன்று தான் குறைச்சல் என்று தன்னையே நொந்து கொண்டவள் “அப்படி எல்லாம் இல்லை மாலினி தம்பி படிப்பு சம்பந்தமான வேலை அதான் . நீ கொஞ்சம் எம்.டியிடம் மட்டும் மறக்காமல் சொல்லிவிடுகிறாயா?”
“சரி சரி நான் பார்த்துக் கொள்கிறேன் .நீ உடம்பைப் பார்த்துக் கொள் “என்று இணைப்பை துண்டித்தாள்.
எம்.டி.யிடம் கூறுவது தான் முறையாம்!! என் இந்த நிலைக்கு அவர் தான் காரணம் என்று அவருக்கே தெரியுமே! இதில் அவருக்கு விளக்கிக் கூற என்ன இருக்கிறது .
மெல்ல நினைவுகள் பின்னோக்கிச் சென்றன
அந்தக் கம்பெனியில் மாதவி வேலைக்குச் சேர்ந்து ஒரு வருடம் முழுமை பெற்றிருந்தது.
தயாநிதி அந்தக் கம்பெனியின் எம்.டி. மிகவும் நேர்மையான மனிதர், அவரின் நிர்வாகத் திறமையே தனி என்று தான் சொல்ல வேண்டும். அவரின் அடுக்கடுக்கான கேள்விகளுக்கு டான் டான் என்று பதில் சொன்னது மட்டுமல்லாமல் பதில் தெரியாத கேள்விகளுக்கு முகத்திற்கு நேரே “தெரியாது சார் சாரி ,நான் தெரிந்து கொண்டு வேண்டுமானால் சொல்கிறேன் “ என்று நேர்மையான பதிலளித்த மாதவியை அவருக்குப் பிடித்துப் போயிற்று. பெரும்பாலும் இவ்வாறு தேர்வுக்கு வருபவர்கள் தெரியாது என்று கூற முடியாமல் மழுப்புவதும் தவறாக ஏதோ ஒன்றை கூறுவதும் அவருடைய அனுபவத்தில் அவர் அடிக்கடி சந்திக்கும் ஒன்றுதான் . ஆனால் அப்படி இல்லாமல் வித்தியாசமாக இருந்த மாதவியை அவர் தேர்வும் செய்துவிட்டார்.
அவர் தேர்வு எப்போதும் சோடை போவதில்லை .அந்த நம்பிக்கை கெடாமல் பார்த்துக் கொண்டாள் மாதவி. முதல் வேலை என்பதாலும் ,அவள் வாழ்வில் மிகவும் அடிபட்டு வளர்ந்தவள் என்பதாலும் தனக்கு கிடைத்த ஊன்றுகோலை கெட்டியாகப் பிடித்துக்கொண்டாள். சில சமயங்களில் தயாநிதியே வியக்கும் அளவுக்கு கொடுத்த வேலையை திறம்பட முடித்துக் கொடுப்பாள் .
மாதவியிடம் ஒரு வேலையை கொடுத்து விட்டால் அதை மறந்து கூட விடலாம் என்று தயாநிதி நினைத்துக்கொள்வார் . வீட்டிலும் மற்றவர்களிடமும் தனக்கு ஒரு நல்ல பி.ஏ. கிடைத்திருப்பதாக பெருமை அடித்துக் கொள்வார் . இதனால் மாதவியை பார்க்க வேண்டும் என்ற ஆசை சத்யனுக்கு உண்டு ,இருப்பினும் அவன் அவர்களது கோவைக் கிளையில் மிகவும் பிசியாக இருப்பதால் வாரம் ஒருமுறையே சென்னை வருவான். அப்போதுதான் தந்தையும் மகனும் கம்பெனி சம்பந்தமான விஷயங்களை பகிர்ந்து கொள்வார்கள் . தன் அனுபவத்தில் தோன்றிய வழிகளை தந்தை கூறுவதும் , தன் அறிவைக் கொண்டு ஒரு பிரச்சினைக்கு எப்படி தீர்வு கண்டு கொள்வது என்பதை மகனும் கலந்துரையாடுவார்கள் .கடைசியில் சுமுகமான முடிவுக்கு வருவார்கள்.
சத்யன் – தயாநிதி ,சாவித்திரியின் ஒரே செல்வமகன் எம்.பி.ஏ படித்து விட்டு அவர்களின் சொந்த கம்பெனியின் கோவைக்கிளையை திறம்பட நடத்தி வருபவன் .அவனை பிடிக்காத ஆளே இருக்க மாட்டார்கள். காரணம் அவனது குணம்.செக்யூரிட்டி முதல் பி.ஏ.வரை ஒரே மாதிரியாக நடந்து கொள்வது அவனது குணாதிசயம் ,கம்பெனியில் வேலை பார்க்கும் அத்தனை பேரின் பெயர்களும் அவனுக்கு மனப்பாடம் .எல்லோரையும் பெயர் சொல்லியே அழைப்பான். இதனால் அவன் கம்பெனியில் அனைவருக்கும் எம்.டி மீது திருப்தியே . ஏன் ,செக்யூரிட்டியையும் “தனசேகர் அண்ணா “ என்று உரிமையோடு தான் அழைப்பான்,இதனால் தனசேகர் பலமுறை நெகிழ்வதுண்டு ,யாரேனும் இரண்டு மூன்று நாள் விடுப்பு எடுத்தால் அவர்கள் ஆபீசுக்கு வந்தவுடன் அவனே நேரில் சென்று ஏதேனும் உடம்பு முடியவில்லையா ?என்று விசாரித்து வருவான். அங்கு யார் வீட்டில் எந்த வகை விசேஷம் என்று இவனை அழைத்தாலும் தவிர்க்காமல் சென்று ஐந்து நிமிடம் தலையை காட்டிவிட்டு வருவான்
இதனால் எம்.டி.என்பதைவிட அவனை அனைவரும் தோழனாகவே எண்ணுவார்கள் .சரி இவனது புராணத்தை பிறகு வைத்துக் கொள்ளலாம் .இப்போது மாதவியின் நிலையைக் கவனிப்போம்.
அந்தக் கம்பெனியில் நல்ல ஒரு பி.ஏ.வாக உலா வந்து கொண்டிருந்தாள் மாதவி..
அந்த விஸ்தாரமான ஆபீஸ் கேண்டினுள் நுழைந்தாள் மாதவி
“ஹாய் மாதவி , கம் ஹியர் வெயிட்டிங் ஃபார் யூ “என்ற சோனாவின் குரல் கேட்டு முகம் மலர்ந்தாள்
‘ஹாய் ‘என்று கையை அசைத்தவாறு அவள் அருகில் சென்றாள் மாதவி.
இரண்டு காப்பிகளுடன் அமர்ந்திருந்தாள் சோனா . சூடான காப்பியை சுகமாக ரசித்தார்கள்
“ஹேய் மாதவி இன்னைக்கு ஒரு காமெடி நடந்ததுப்பா என் வீட்ல “
“என்ன ?” தோள்களை குலுக்கியவள் அங்கு இருந்த ஒரு உருளைக்கிழங்கு சிப்ஸ்சை ஒரு கடிகடித்தாள் .
“காலையில் அம்மா கஞ்சி தண்ணியை கொல்லையில கொட்ட சொன்னாங்க, நானும் எடுத்துட்டு போய் எப்பவும் கொட்டற புதர் பக்கமாய் ஊத்தினேன் .பார்த்தா செம ஷாக் !!!!”
“இதுல என்ன ஷாக்? ஏதாவது பாம்பு உள்ளேயிருந்து வந்ததா?” ஆர்வமாய் கேட்டாள் மாதவி
“பாம்பு வந்தா தான் பரவாயில்லையே தலை புல்லா கஞ்சி தண்ணியோட ஒரு மனிசன் எழுந்திருக்கிறான்…!பயந்தே போயிட்டேன் ,பேச்சே வரலை எனக்கு .ரொம்ப கஷ்டமா போச்சு” பரிதாபமாக கூறினாள் சோனா.
அடக்க முடியாமல் வயிற்றை பிடித்துக் கொண்டு சிரித்தாள் மாதவி.
“அப்புறம் அந்த ஆள் அசிங்கமா திட்டலையே ?”சிரிப்பினூடே கேட்டாள்
“இல்ல, நான் தான் நூறு தடவை சரிகேட்டேனே. பரவாயில்லைங்க தெரியாமதானே செஞ்சீங்கன்னு சொல்லிட்டு கொஞ்சம் தண்ணீர் வாங்கி முகம் கழுவிட்டுப் போனார் ”
” ஆள் என்ன யங்கா?”
“ஆமாம்பா, முகம் கழவின உடனே தான் பார்த்தேன் செம ஹேன்ட்சம் !”
“அதான் நல்லா ஜொள்ளு விட்டுருக்கான் சரி அவன் எதுக்கு உன் வீட்டு புதர்ல ஒளிஞ்சு இருந்தான் – பாத்து டி உன்னை சைட் அடிக்க வந்திருக்கப் போறான் ” சிரிப்பை நிறுத்தவே முடியவில்லை மாதவியால்
“சேச்சே, இல்லையா அவன் எங்க வீட்டுப் பக்கத்துல இருக்கற கிரவுண்டுல கிரிக்கெட் விளையாட வந்தானாம் பந்து எங்க வீட்ல விழுந்துடுச்சாம் .அப்பா கிட்ட பர்மிஷன் கேட்டுட்டு தான் உள்ள வந்து பந்தை தேடி இருக்கான். அது தெரியாம நான் கஞ்சியை கொட்டிட்டேன் ” நிஜமான வருத்தத்துடன் கூறினாள்.
” இதுக்கு ஏன்பா இவ்வளவு ஃபீல் பண்ற- நாளைக்கு ஊத்தும் போது கொஞ்சம் பாயாசமும் சேர்த்து ஊத்திடு. மனுஷன் வழிச்சு சாப்பிட்டுகிட்டே சந்தோஷமா போகட்டும்” என்றாள் இயல்பாய்
இதைக்கேட்டு சோனா சத்தமாக சிரித்தாள். “ஹே மாதவி நினைக்கவே காமெடியா இருக்கு. முடியல என்னால் ” என்று தனது வலது கையை உயர்த்த அதில் சத்தமாக தன் வலது கையை பதித்தாள் மாதவி .இருவரும் சிரித்து அடங்கிய பின் .
“நாம கிளம்பலாம் சோனா எனக்கு ஒரு மீட்டிங் இருக்கு லஞ்சுக்கு உன் கூட முடியாதுன்னு நினைக்கிறேன் , எனிவே நான் மெசேஜ் பண்றேன.” என்றவள் சேரைத் தள்ளி எழுந்தாள் .அப்போது அவளது சேர் அவள் பின்புறம் இருந்த சேர் மீது மோதியது
அதில் இருந்த இளைஞன் திரும்பி மாதவியைப் பார்த்தான்
“சாரி சார் தெரியாம இடிச்சிட்டேன் “”
“ இட்ஸ் ஓகே” என்றவன் குறும்பாய் சிரிப்பது போல் தோன்றியது மாதவிக்கு .
“வா போகலாம் . – ” என்று சோனா வைப் பார்த்தவள் குழம்பினாள்.இவள் ஏன் திருட்டு முழி முழிக்கிறாள் ?
“ஹேய் சோனா வா போகலாம்” என்று இவள் அதட்டியவுடன் தான் நினைவுக்கு வந்தாள் சோனா
“சாரி சார்” என்று அந்த இளைஞனிடம் உரைத்து விட்டு “வா சீக்கிரம் போகலாம்” மாதவியை இழுத்துக் கொண்டு விரைந்தாள் சோனா’
“அதுதான் அந்த ஆள்கிட்ட நான் மன்னிப்பு கேட்டுட்டேனே’நீ ஏன் டி மறுபடி கேட்ட? புரியாமல் கேட்டாள்
“அட… லூசு அவனுக்குத்தான் எங்க வீட்ல நான் கஞ்சிய அபிஷேகம் பண்ணினேன். “சோனா படபடப்பாய் கூற,
“அய்யோ | “”என்று தன் அதிர்ச்சியை வெளிப்படுத்தினாள் மாதவி
“நம்ம பேசினதை கேட்டிருப்பாரோ ? ” வார்த்தை வரவில்லை மாதவிக்கு .
“ஊரே கேட்டிருக்கும். நாம தான் பயங்கரமா சிரிச்சோமே. உன் பின்னால் இருந்தவனுக்கு காது செவிடாகவா இருந்திருக்கும் ?”
“சரி அவனுக்கு இங்க என்ன வேலை?”
“யாருக்கு தெரியும். புதுசா ஏதாவது வேலையில் சேர்ந்திருக்கலாம் ”
” பார்த்தால் செழிப்பான குடும்பத்து பிள்ளை மாதிரித் தெரியுதே ?”
“சரி, யாராக இருந்தால் நமக்கு என்ன? இவ்வளவு பெரிய கம்பெனியில் எங்கோ ஒரு மூலையில் வேலை பார்ப்பவனை பற்றி நாம் ஏன் கவலைப்பட வேண்டும். நீ உன் மீட்டிங்கிற்கு போ.. எனக்கும் நிறைய வேலை இருக்கு” என்று தன் தளத்திற்கு விரைந்தாள் சோனா!
‘ம நாங்கள் பேசியதை கேட்டதால் தான் அவன் குறும்பாய் சிரித்தானோ?’ சிந்தனைகள் எங்கெங்கோ ஓட உடனே எல்லாவற்றையும் இழுத்துப்பிடித்து மீட்டிங்கிற்கு தான் செய்ய வேண்டிய வேலைகளில் மனதை நிலைப்படுத்தினாள்
1 Comment
Notice: Undefined offset: 180 in /home/sahaptha/public_html/wp-content/themes/sahapthem/functions.php on line 408
JAYALAKSHMI PALANIAPPAN says:
Interesting. When next episode??