Share Us On
[Sassy_Social_Share]கனியமுதே! – 1
2495
0
அத்தியாயம் – 1
‘மாசி மாசம் பொறந்து மூணு நாளாச்சு. சீதோஷணம் சரியா இருக்கு. இந்த சமயத்துல மீன் குஞ்சை வாங்கி கொளத்துல விட்டா, சரியா ஊர் திருவிழா நேரத்துல வலைவிரிக்கலாம். நல்ல லாபம் கிடைக்கும்’ – மனக்கணக்குப் போட்டபடியே தன்னுடைய ஓட்டை பைக்கில் அந்த பண்ணைக்குள் நுழைந்தான் மலையமான்.
‘அங்கப்பன் மீன் பண்ணை’ – மூன்று கிராமங்கள் சந்திக்கும் ஒரு முக்கியமான இடத்தில் கணக்கில்லாத இடத்தை வளைத்துப் போட்டு அமைக்கப்பட்டிருந்தது அந்த மீன் பண்ணை. சுற்றிலும் தென்னை மரங்கள் சூழ்ந்திருக்க, உள்ளே வெட்டப்பட்டிருக்கும் நாற்பது ஐம்பது குளங்களிலும் நாட்டு மீன்கள் எப்போதும் மேய்ந்துக் கொண்டிருக்கும்.
பண்ணையை சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து மட்டும் அல்ல, தரமான மீன் குஞ்சு வேண்டும் என்பதற்காக தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலிருந்தும் மீன் குளம் வைத்திருக்கும் விவசாயிகள் அங்கப்பனை தேடி வருவதுண்டு.
திறமையான மனிதர். ஆரம்ப காலத்தில் பத்து ரூபாய் கூலிக்கு மில்லில் தவிடு அள்ளி கஷ்ட்டப்பட்டு, இன்று தன் கடின உழைப்பால் இவ்வளவு பெரிய பண்ணைக்கு முதலாளி ஆகியிருக்கிறார். அவருக்கு படிப்பறிவு இல்லை என்றாலும், கல்லூரி மாணவர்கள் ஆண்டுதோறும் ப்ராஜெக்ட்டிற்காக அவருடைய பண்ணையை தேடி வருவதுண்டு.
ஆம், அவர் தன் பண்ணையில் டெக்னாலஜியை பயன்படுத்தி, மீனிலிருந்து சினையை பிரித்து செயற்கை முறையில் தரமான குஞ்சுகளை உற்பத்தி செய்து கொண்டிருந்தார். நாட்டு மீன் வகைகள் பலவற்றை பாடம் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்து கொண்டிருந்தார்.
பண்ணையும் மீன்களும் தான் அவருக்கு உயிர். குடும்பம் குட்டியெல்லாம் அடுத்துதான். டவுனில் மாளிகை போல் வீட்டை இழைத்துப் போட்டிருந்தாலும் இருபத்திநான்கு மணிநேரமும் பண்ணையில் தான் இருப்பார். அப்போதும் இருந்தார்.
பெட்டியில் இருக்கும் மீன் குஞ்சுகளை தரம் பார்த்து வகைப் படுத்திக் கொண்டிருந்தவர், மரத்தில் கட்டியிருந்த நாய், சல் சல்லென்று குரைத்ததும் நிமிர்ந்து பார்த்தார். மலையமான் வந்து கொண்டிருந்தான்.
“வா மாப்ள. என்ன இந்த தரம் லேட்டா வந்துருக்க. ரெண்டு நாள் முன்னமே எதிர்பார்த்தேன்” என்றார்.
மலையமானைவிட வசதியில் எட்ட முடியாத உயரத்தில் இருந்தாலும் அவனை உறவு சொல்லி விளித்தார். அவனை மட்டும் அல்ல, பெரும்பாலும் அனைவரிடமும் அவர் அப்படித்தான் பேசுவார். அவருடைய அபரிதமான வளர்ச்சிக்கு அந்த குணமும் ஒரு காரணம்.
“ரெண்டு நாளா ராத்திரிக்கு ராத்திரி நல்ல மழையாச்சே மாமா. கொளம் ஒடப்பு எடுத்திருச்சுன்னா குஞ்செல்லாம் வாய்க்காலோட போயிடும்! அதான் மழை கொஞ்சம் கொறையட்டும்னு பார்த்தேன்”
“அதென்ன, இன்னைக்கு மட்டும் மழை வராதுன்னு மானம் உங்கிட்ட சொல்லிட்டு போச்சா?” என்றார் சிரித்துக் கொண்டே.
“சோனல் ஒன்னும் போடல மாமா. இன்னைக்கெல்லாம் மழை வராது. பெட்டிய பார்க்கலாமா?” – துல்லியமாக கணித்துக் கூறுபவனை மனதிற்குள் மெச்சியபடியே,
“வா வா… இப்பதான் எடுத்து வச்சுக்கிட்டு இருக்கேன். வந்து பாரு” என்றார்.
“சின்னதும் பெருசுமா இருக்கே மாமா. ரெண்டே நாள்ல ஒன்ன ஒன்னு அடிச்சு சாப்பிட்டு பாதியா கொறஞ்சுடும். வேற காமிங்க… ஒரே சைசா இருக்க மாதிரி எடுங்க”
அவன் ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் நுணுக்கமாக கவனிப்பதை பார்க்கும் போது சின்ன வயதில் தன்னை பார்ப்பது போலவே இருந்தது அவருக்கு. பெரிய ஆளாக வருவான் என்று நினைத்துக் கொண்டவர், உள்ளேயிருந்து அவன் கேட்ட விதமான மீன் குஞ்சு பெட்டிகளை கொண்டு வந்து கொடுத்தார்.
சரியான விலைக்கு பேரம் பேசி பத்து பெட்டிகளை வாங்கி கொண்டவன், “அப்போ நா கிளம்புறேன் மாமா” என்றான்.
மீன் குஞ்சு பெட்டிகளை அடுக்கியபடி, “இரு இரு” என்று அவனை தடுத்தவர், “முருகா, அந்த பத்திரிக்கையில ஒன்ன எடுத்து மலையனுக்கு குடு” என்று வேலையாளுக்கு பணித்தார்.
“பொண்ணுக்கு கல்யாணம். மறக்காம வந்துடு. நாராயணனுக்கும் சொல்லு” என்றார். நாராயணன், மலையமானின் சகோதரியின் கணவன்.
வேலைக்காரன் கொடுத்த பத்திரிக்கையை வாங்கி வண்டி சீட்டில் போட்டுக்கொண்டு, “வந்துடறேன் மாமா” என்றான்.
வேலைக்காரனைவிட்டு பத்திரிகை கொடுக்க சொல்கிறாரே என்கிற எண்ணமெல்லாம் அவனுக்கு எழவே இல்லை. அவர் உயரத்திற்கு அவனை மதித்து அவர் பத்திரிகை கொடுத்ததே பெரிய விஷயம். நேரம் இருந்தால் கட்டாயம் திருமணத்திற்கு போக வேண்டும், இல்லையென்றால் மாமாவையாவது அனுப்ப வேண்டும் என்று எண்ணிக் கொண்டு விடைபெற்றான்.
‘கவின் வெட்ஸ் கனிமொழி’ – வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பாதகை அந்த திருமண மண்டபத்தின் வாயிலில் வரவேற்பிற்காக வைக்கப்பட்டிருந்தது. குலைதள்ளிய வாழை மரங்கள் பந்தல் காலோடு சேர்த்துக் கட்டட்டப்பட்டிருந்தன. பந்தல் முழுவதும் தென்னையோலை தோரணங்களும், சரமாய் கோர்க்கப்பட்ட காகித பூக்களும் காற்றில் அசைந்தாடிக் கொண்டிருந்தன. மண்டபத்தின் உள்ளே முழங்கும் மங்கள வாத்தியத்தின் ஓசை ஒலிபெருக்கியில் உபயத்தால் தெருவெங்கும் எதிரொலித்தது.
கணக்கில்லா மகிழுந்துகள் மண்டபத்தை சுற்றிச்சுற்றி நிறுத்த இடம் தேடி ஊர்ந்துக் கொண்டிருந்தன. வழியெங்கும் வைக்கப்பட்டிருந்த பாதாகைகளில் அந்த திருமணத்தை நடத்திவைக்க வரும் முக்கிய மந்திரியின் முகமும், அவரை வரவேற்கும் வசனங்களும் நிறைந்திருந்தன. கரைவேட்டி தொண்டர்கள் முழக்கமிடத் தயாராக வாயிலிலேயே காத்திருந்தார்கள். பத்திரிக்கையாளர்கள் கூட ஆங்காங்கே தென்பட்டார்கள். கூட்டம் அலைமோதியது. ஆனால் வரவேற்பில் மட்டும் ஒருவரும் இல்லை.
திருமணத்திற்கு வருவோரெல்லாம், மேஜையில் அனாமத்தாக இருந்த சந்தன குமிழையும், குங்கும சிமிழையும் வியப்புடன் பார்த்துவிட்டு, தானாக சந்தன குங்குமத்தை எடுத்துக் கொண்டு உள்ளே நுழைந்தார்கள்.
மணமேடையில் ஏதோ பதட்டம் தெரிந்தது. பெண்வீட்டார் அடிக்கடி மணமகன் அறைக்குள் சென்று வந்து கொண்டிருந்தார்கள். பிறகு பெண்ணின் சகோதரி ஒரு பையோடு மணமகள் அறைக்குள் நுழைந்தாள்.
“அந்த புடவையை அவுத்துட்டு இதை கட்டிவிடுங்க” – மணப்பெண்ணை அலங்கரிக்க வந்திருந்த பெண்ணிடம் தன் கையிலிருந்த பையை நீட்டினாள்.
சகோதரி ஏதோ தெரியாமல் கூறுகிறாள் என்று நினைத்து, “கீர்த்தி, இதுதான் கல்யாண புடவை” என்றாள் மணப்பெண் தான் உடுத்தியிருந்த புடவையை ஆசையோடு வருடியபடி.
அந்த பெண்ணின் முகம் சட்டென்று மாறியது. கண்களில் ஏதோ கலக்கம். சொல்ல முடியாத துக்கம். உதட்டை கடித்துக் கொண்டு, “இதுதான் கல்யாணப்புடவை” என்று கூறிவிட்டு விருட்டென்று அங்கிருந்து வெளியேறினாள்.
கனிமொழி திகைப்புடன் அவள் முதுகையே வெறித்தாள். அவளுக்கு எதுவும் புரியவில்லை.
“மேடம், டைம் ஆயிடிச்சு. மாத்திடலாமா?”
“ஹாங்! இருங்க…” – அலைபேசியை தேடினாள். காணவில்லை. அருகிலிருந்த பெண்ணிடம் சொல்லி, “அம்மாவை வர சொல்லு” என்றாள். அவள் வெளியே செல்வதற்குள், “பொண்ணு ரெடியா? சீக்கிரம் புடவையை மாத்தி வர சொல்லுங்க” – வெளியேயிருந்து கணீரென்று ஒலித்தது ஒரு ஆண் குரல். அவள் தந்தையின் குரல்.
அதற்கு மேல் எதற்கும் நேரமில்லை. கனிமொழி புது கல்யாணப் புடவையை அணிந்துக் கொண்டாள். உறவுக்கார பெண்கள் அவள் கையை பிடித்து மாணவறையை நோக்கி அழைத்து வர, கனிமொழி மாப்பிள்ளையை நிமிர்ந்து பார்த்தாள். அவ்வளவுதான்…!
‘யார் இவன்!’ – அவள் இதயம் முரசு கொட்டியது. உடல் வெடவெடத்தது. முகமெல்லாம் வியர்வை முத்துக்கள் அரும்பிவிட்டன. சட்டென்று அருகிருந்த பெண்ணின் கையை இறுக்கிப் பிடித்தவள் பதட்டத்துடன் நிமிர்ந்து தன் பெற்றோரை தேடினாள். அங்குதான் இருந்தார்கள். அவளை நிமிர்ந்து பார்க்காமல் புரோகிதர் சொல்லும் பூஜையை கர்மா சிரத்தையாக செய்து கொண்டிருந்தார்கள்.
அவளால் முன்னோக்கி நடக்க முடியவில்லை. கால்கள் பின்னிக் கொண்டன. அவளை சுற்றி இருந்த பெண்கள் பிறர் அறியாமல் அவளை முன்னிக்கி உந்தி தள்ளி மணவறையில் அமரவைத்தார்கள். என்ன நடக்கிறது என்று புரியாமல் அவள் குழம்பிக் கொண்டிருக்கும் போதே, கெட்டிமேளம் கொட்டியது. மினிஸ்டர் எடுத்து அவன் கையில் கொடுத்த, கொம்பு மஞ்சள் கட்டப்பட்ட மஞ்சள் கயிற்றை, அவள் கழுத்தில் அணிவித்தான் அவன். நொடி பொழுதில் முகம் தெரியாதவனுக்கு மனைவியாகிவிட்டாள் கனிமொழி.
அங்கப்பன் மணிமேகலை தம்பதியின் இரண்டாவது மகள் கனிமொழி. அவள் பிறந்த பிறகுதான் அங்கப்பனின் தொழில் சூடுபிடித்து செல்வம் பெருகியது. கடைக்குட்டி என்பதால் தாய்க்கு மிகவும் செல்லம். பணத்தை எண்ணி எண்ணி செலவு செய்து, சொத்தை சேர்த்துக் குவிக்கும் அங்கப்பன் கூட சின்ன மகளிடம் கணக்கு பார்க்க மாட்டார். கேட்டதெல்லாம் கிடைக்கும்… நினைத்ததெல்லாம் நடக்கும் வரம் கொண்டு பிறந்திருந்த அந்த செல்வ சீமாட்டிக்கு திருமண வயது வந்த போது மாப்பிள்ளையை சல்லடைப் போட்டு சளித்தார்கள்.
கவின், பார்க்க அழகாக இருந்தான். பொறியியலில் முதுகலை முடித்திருந்தான். பெங்களூரில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் நல்ல வேலையில் இருந்தான். ஓரிரு முறை சில வெளிநாடுகளுக்கும் சென்று வந்திருந்தான்.
மூத்த மகள் கீர்த்திக்கு அமைந்த வரன் போலவே இளையமகள் கனிமொழிக்கும் அமைந்துவிட்டதில் மணிமேகலைக்கு உள்ளம்கொள்ளா மகிழ்ச்சி. நிறைந்த மனதும் புன்னகை மாறா முகமுமாக மண்டபத்தில் வளையவந்துக் கொண்டிருந்தாள். அப்போது தாயிடம் வந்த மூத்தவள் கீர்த்தி, “ம்மா, இங்க கொஞ்சம் வா” என்று கையை பிடித்து ஸ்டோர் ரூம் பக்கம் அழைத்துச் சென்றாள்.
மகளின் பதட்டமான முகத்தை கண்டு துணுக்குற்ற மணிமேகலை,
“என்ன கீர்த்தி?” என்றாள் பயத்தை உள்ளடக்கியபடி.
“அவன் சரியில்லம்மா” – தயக்கத்துடன் சொன்னாள் கீர்த்தி.
“யாரு? யாரு சொல்ற?”
“அவன்தான், கவின்”
“என்னடி சொல்ற!” – தாய் பதறினாள்.
மகள் நடந்ததை சொன்னாள். மாப்பிள்ளையின் பூர்வீகம் தமிழ்நாடு என்றாலும் மூன்று தலைமுறையாக அவனுடைய குடும்பம் கர்நாடகாவில் செட்டில் ஆகிவிட்டது. தமிழகத்தில் அவனுக்கு பெரிதாக உறவினர்கள் இல்லை என்பதால், இங்கே திருமண ஏற்பாடு முழுவதும் பெண் வீட்டு சார்பாக விமர்சையாக செய்யப்பட்டிருந்தது. மறுநாள் பெங்களூரில் நடக்கவிருக்கும் வரவேற்பு மாப்பிள்ளை வீட்டின் செலவு.
முதல்நாள் இரவே மாப்பிள்ளையின் குடும்பம் திருமண மண்டபத்திற்கு வந்துவிட்டது. அவர்களை கவனிக்க பெண்வீட்டிலிருந்து கீர்த்தியும் அவள் கணவன் சீனுவும் சில நெருங்கிய உறவினர்களோடு வந்து தங்கியிருந்தார்கள்.
இரவு உணவிற்கு பிறகு மண்டபத்தில் தங்கியிருந்த உறவினர்களில் மூத்தவர்களெல்லாம் உறங்க சென்றுவிட, இளையவர்கள் கார்ட்ஸ் விளையாடிக் கொண்டிருந்தார்கள். திருமணத்தில் சமையல், மண்டப அலங்காரம் கான்டராக்ட் எடுத்தவர்கள் எல்லாம் தொடர்ந்து வேலை செய்து கொண்டிருந்தார்கள்.
கீர்த்தியோ, பயங்கர டென்ஷனில் இருந்தாள். வெகு நேரமாக சீனு எங்கு போனான் என்றே அவளுக்கு தெரியவில்லை. போன் அடித்துப் பார்த்தால் ரூமில் ரிங் வருகிறது.
‘போனையும் விட்டுவிட்டு போய்விட்டான்’ என்று அலுப்புடன் நினைத்துக் கொண்டவள், மண்டபத்தில் ஒவ்வொரு தளமாக ஏறி இறங்கி அவனை தேடிக் கொண்டிருந்தாள். வீட்டுக்கு போன் அடித்துக் கேட்டால் அங்கும் வரவில்லை என்றார்கள். நேரம் நள்ளிரவை தாண்டிவிட்டது. எங்கு போயிருப்பான் என்று கவலையுடன் யோசித்துக் கொண்டிருந்தவள், ‘ஒருவேளை மொட்டை மாடியில் போய் படுத்துவிட்டானோ!’ என்று எண்ணி அவசரமாக மேலே ஓடினாள்.
மாடியில் வெளிச்சமே இல்லை. நிலவொளியின் மங்கலாக வெளிச்சத்தில் யாரோ புகைபிடித்துக் கொண்டிருப்பது தெரிந்தது. கணவனோ என்று அருகில் சென்றவள் அங்கே நின்றவனை கண்டதும் சினேகமாக புன்னகைத்து, “ஓ நீங்களா! இங்க என்ன பண்றிங்க? தூங்கலையா, காலையில சீக்கிரம் எழுந்துக்கணுமே!” என்றாள்.
அதுவரை அவன் எதை யோசித்துக் கொண்டிருந்தானோ.. அவன் மனதில் என்ன ஓடிக் கொண்டிருந்ததோ.. தெரியவில்லை. சட்டென்று கீர்த்தியின் கையை பிடித்து இழுத்து அவள் இடுப்பை வளைத்து முகம் நோக்கி குனிந்தான். அவள் பதறி எதிர்திசையில் விசை கொடுத்து திமிறி விலக முயன்றாள். அவன் விடாமல் அவளிடம் முரட்டுத்தனமாக நடந்துக் கொண்டான். பலவந்தமாக அவளை முத்தமிட முயன்றான். தன் ஒட்டுமொத்த பலத்தையும் ஒன்றாக திரட்டி அவனை உதறி தள்ளிய கீர்த்தி தடதடவென்று படியிறங்கி கீழே ஓடி வந்துவிட்டாள்.
மகள் சொன்னதை கேட்டு நெஞ்சை பிடித்துக் கொண்ட மணிமேகலை, “நேத்தே இதை ஏண்டி சொல்லல?” என்று மகளிடம் பாய்ந்தாள்.
“யாருகிட்ட சொல்றது? பயமா இருந்தது. நீ இப்பதானே இங்க வந்த?” என்று அவள் அழுகுரலில் சொல்லிக் கொண்டிருக்கும் போதே படாரென்று வெகு வேகமாக கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்த சீனு, “அறிவுகெட்டவளே! எதுக்குடி ராத்திரி நேரத்துல மாடிக்கு போன நீ?” என்று மனைவியிடம் கையை ஓங்கி கொண்டு பாய்ந்தான். அவன் முகம் கோபத்தில் ஜிவுஜிவுத்தது.
“தம்பி தம்பி…” என்று மருமகனை தடுத்த மணிமேகலை, “உங்கள தேடித்தான் ப்பா போனாளாம், விடுங்கப்பா” என்று தடுத்தாள்.
“நா என்ன பச்சப்புள்ளையா? வெளியே போனா, வராம அப்படியே போயிடவா போறேன்!” என்று தாண்டியவன், மனைவியிடம் சொல்லாமல் நண்பர்களுடன் சரக்கடிக்க போன தன் தவறை அறவே மறந்துவிட்டான்.
அவன் போட்ட சத்தத்தில் பயந்து போன மணிமேகலை, “சத்தம் போடாதீங்க தம்பி, கொஞ்சம் அமைதியா இருங்க பேசிக்கலாம்” என்று அவனை சமாதானம் செய்ய முயன்றாள்.
“பேசிக்கலாமா! என்ன பேசிக்கிறது? இதுக்கு மேலையும் அந்த பொம்பள பொருக்கி பயலுக்கு பொண்ணு கொடுக்க போறிங்களா? முதல்ல போயி மாமாவை கூப்பிடுங்க” என்று மாமியாரை அதட்டினான்.
சற்று நேரத்தில் அங்கப்பனும் அந்த அறையில் இருந்தார். நடந்த விஷயத்தை இன்னொரு முறை தந்தையிடம் கூறினாள் கீர்த்தி. கூடவே “ராத்திரி அவன் பிடிச்சது சிகரெட் இல்லப்பா. வேற ஏதோன்னு நெனைக்கிறேன். வேற மாதிரி ஸ்மெல் வந்துச்சு” என்று கூடுதல் தகவலையும் கொடுத்தாள்.
அவர் இடிந்து போய் அமர்ந்துவிட்டார். திருமணத்திற்கு அழைக்கப்பட்ட அத்தனை பெருந்தனக்காரர்களும் வந்துவிட்டார்கள். சொந்தபந்தங்களெல்லாம் கூடிவிட்டார்கள். அறிந்தவர் தெரிந்தவரெல்லாம் மாணவறையை பார்த்தபடி அட்சதை தூவ காத்திருந்தார்கள். தாலி எடுத்துக் கொடுக்கவிருக்கும் அமைச்சர் இன்னும் சற்று நேரத்தில் வந்துவிடுவார்.
என்ன செய்வது என்று அவர் புரியாமல் திகைத்து அமர்ந்திருக்கவும், கடும் கோபத்துடன் சீனு அவரிடம் பேசினான்.
“மாமா, அந்த டாஷ் பய என் பொண்டாட்டிகிட்ட மிஸ்பிகேவ் பண்ணியிருக்கான். அவன் உங்க மருமகனா ஆயிட்டான்னா அதுக்கு அப்புறம் எனக்கும் இந்த குடும்பத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்ல. உங்க மூத்த பொண்ண நீங்க மறந்துடுங்க” என்றான்.
அவன் அவ்வளவு நிதானமாக நடந்துகொண்டதே பெரிய விஷயம். வேறு ஒருவனாக இருந்திருந்தால் இந்நேரம் மணமகன் அறைக்குள் புகுந்து கைகலப்பு செய்திருப்பான் என்று எண்ணியவர், “என்ன மாப்ள பண்றது! ஊரை கூட்டிட்டோமே!” என்றார். விஷயம் வெளியே தெரிந்தால் இரண்டு மகள்களின் பெயருமே ஊரார் வாயில் அரைப்படக் கூடும் என்கிற பயம் அவர் கண்ணில் தெரிந்தது.
அதே நேரம் இந்த திருமணத்தை நடத்துவதிலும் அவருக்கு விருப்பம் இல்லை. என்ன செய்வது என்று மாற்று வழியை யோசித்தார். ஏனோ தெரியவில்லை, அப்போது அவர் மனதில் அவன் தோன்றினான்.
வெகு பதட்டமாக கணவனை தேடி மணிமேகலை ஓடிவந்த போது அவர் மலையமானை தான் வரவேற்றுக் கொண்டிருந்தார்.
“வா மாப்ள” என்று அவனை வரவேற்கும் போதே வாட்டசாட்டமான அவனுடைய உருவத்தை பார்த்து, ‘இவன் மட்டும் கொஞ்சூண்டு படிச்சிருந்தா இப்படி பெங்களூரு கல்கத்தான்னு அலையாம இவனுக்கே நம்ம பொண்ண கொடுத்திருக்கலாம்’ என்கிற எண்ணம் தானாக அவருக்குள் எழுந்தது. வெறும் எண்ணம் மட்டும்தான். அதற்காக பெண்ணையெல்லாம் கொடுத்துவிட மாட்டார். வசதி வாய்ப்பும் வேண்டுமல்லவா? ஏதோ அவனுடைய திறமையும், வனப்பும், மாப்பிள்ளை என்கிற அழைப்பும் அவரை அப்படி யோசிக்க வைத்துவிட்டது.
புன்னகையுடன் அவன் கையை பிடித்து குலுக்கியபடி, “எங்க நாராயணனை காணும்? வரலையா அவன்?” என்று விசாரித்தான்.
“வண்டிய நிறுத்திட்டு வராரு மாமா”
“சரி நீ உள்ள போயி உட்காரு” என்று சொல்லிக் கொண்டிருந்தவரை தான், “கொஞ்சம் இப்படி வாங்க” என்று ஸ்டோர் ரூமுக்கு அழைத்துக் கொண்டு வந்தாள் மணிமேகலை.
அங்கப்பன் சற்று நேரம் வெகு தீவிரமாக எதையோ யோசித்தார். பிறகு சீனுவிடம், “அந்த பெங்களூரு குடும்பம் வெளியே தெரியாம மண்டபத்தை விட்டு போகணும். அதுக்கு என்ன செய்யணுமோ செய்யுங்க” என்றார்.
“கல்யாணத்த நிறுத்த போறிங்களா?” – அதில் எந்த ஆட்சேபனையும் தனக்கு இல்லை என்றாலும் விபரம் தெரிந்து கொள்வதற்காக குறுக்கிட்டாள் மணிமேகலை.
“கல்யாணம் நடக்கத்தான் போகுது. மாப்பிள்ளைதான் வேற” என்று கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறினார் அங்கப்பன்.
அங்கப்பன் தன்னை தனியாக அழைத்ததும், ஏதோ தேங்காய் மூட்டையையோ அல்லது மாங்காய் மூட்டையையோ தூக்க வேண்டும் என்பது போன்ற வேலை சொல்ல போகிறார் என்றுதான் நினைத்தார் நாராயணன். ஆனால் அவர் சொன்ன விஷயமோ இவர் கற்பனைக்கும் எட்டாததாக இருந்தது. ஆரம்பத்தில் இது சரிவருமா என்று சந்தேகித்து ஒதுங்கி கொள்ளத்தான் பார்த்தார். ஆனால் அங்கப்பனின் நல்லவிதமான பேச்சு அவருக்கு ஆசையை தூண்டியது.
எவ்வளவு பெரிய கோடீஸ்வரன்! அவரே வலிய வந்து பெண்ணை கொடுக்கிறேன் என்கிறார். வேண்டாம் என்று சொன்னால் ஒன்று அவர் ஆசையே இல்லாத யோகியாக இருக்க வேண்டும்.. இல்லையென்றால் முட்டாளாக இருக்க வேண்டும். அவர் இரண்டும் இல்லை. விளைச்சலுக்கு பாயும் நீரில் விழலான தானும் கொஞ்சம் பயனடையலாம் என்று கணக்கு போட்டு தலையை பெரிதாக ஆட்டினார்.
‘கல்யாணம் முடிஞ்சிடுச்சுன்னு நெனச்சுக்கங்க ண்ணே. இந்தா போயி மலையன ரெடி பண்ணி கொண்டாறேன்” என்று துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு மைத்துனனிடம் சென்றார்.
திருமண மண்டபத்துக்கு வெளியே ஆட்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத இடத்தில், அவர்கள் இருவரும் ஒதுங்கி நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். முகத்தில் எதிர்பார்ப்புடன் மாமன் மருமகனை நோக்க அவரை எரிச்சலுடன் எதிர்கொண்டான் மருமகன்.
“மாமா, கல்யாணத்துக்கு வந்தோமா.. மொய் எழுதினோமா.. விருந்து தின்னோமான்னு போயிகிட்டே இருக்காம என்ன விளையாட்டு இது?யாரு காதுலையாவது விழுந்து தொலைச்சிட போகுது. புடிச்சு கட்டி வச்சுட போறானுங்க” என்றான்.
“எதுக்கு கட்டி வைக்கிறானுங்க? இங்க நானா எதையும் சொல்லல. அங்கப்பன் அண்ணன்தான் என்னைய அழச்சு பேசுனாரு” என்றார்.
“கேப்பையில நெய் வடியுதுன்னா ‘ஆ’ன்னு வாயை பிளக்கறதுக்கு நா ஒன்னும் கேனையன் இல்ல. வேலைய பாரு மாமா” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அங்கு வந்த சீனு, “என்ன சொல்றாப்ல? டைம் ஆயிடிச்சு. மாமா உள்ள கூட்டிகிட்டு வர சொல்றாங்க” என்றான்.
மலையமான் அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தான். ‘என்னங்கடா நடக்குது இங்க!’
“நீங்க போங்க தம்பி, இந்தா கூட்டியாறேன்” என்று அவனை அங்கிருந்து அனுப்பிய நாராயணன் மைத்துனனிடம் திரும்பினான்.
அதுவரை அவர் ஏதோ உளறி கொண்டிருக்கிறார் என்று எதையும் நம்பாமல் அவரை திட்டிக் கொண்டிருந்தவன் இப்போது, “என்னய்யா நீபாட்டுக்கு என்னைய கூட்டியாரேங்குற!” என்று மிரண்டான்.
“நாந்தான் சொன்னேன்ல, நீதான் நம்பல. நெசமாவே அங்கப்பண்ணே உன்ன மாப்ள கேட்டாருடா. சரி வா நேரமாயிட்டு…”
“இரு இரு… எங்க கூப்பிட்ற?”
“மாப்ள ரூமுக்கு… பவுடர் கிவுடரு போட்டுக்கலாம்ல” – அவன் கையைப் பிடித்து அவர் முன்னுக்கு இழுக்க,
“யோவ்! வாயில நல்லா வந்துர போவுது! என்னய்யா நீ!” என்று அவன் பின்னுக்கு இழுத்தான்.
“என்னடா உன் பிரச்சனை? அந்த பொண்ண பார்த்தியா? பார்க்கலன்னா அந்தா தெரியுது பாரு கட்டவுட்டு. அதுல பாரு. சும்மா தக தகன்னு தங்கத்துல செஞ்சு வச்ச செல மாதிரி இருக்கு. அதுமட்டுமா, காசு கொட்டி கெடக்கு. பத்தாததுக்கு காலேஜுக்கு படிச்சிருக்கு. அந்த பொண்ண கட்டிக்க உனக்கு கசக்குதா?”
“கசக்கவும் இல்ல இனிக்கவும் இல்ல… பயமா இருக்குய்யா. வந்துரு போயிருவோம்” என்று அங்கிருந்து தப்பித்து ஓடுவதில் அவன் குறியாக இருக்க, அவரோ அவனை இழுத்துப் பிடிப்பதில் முனைப்பாக இருந்தார்.
“பயமா இருக்கா! எதுக்குடா பயம்? பொம்பள புள்ள… அதுவே உன்ன கட்டிக்க பயப்படாம சரின்னு சொல்லிடிச்சு. உனக்கென்னடா ஆம்பள சிங்கம்” என்றார்.
‘என்னது! அந்த புள்ள என்னைய கட்டிக்க சரின்னு சொல்லிடிச்சா!’ – வியப்புடன் வெளியே வைக்கப்பட்டிருந்த பாதாகையில் அவள் முகத்தை பார்த்தான். தெத்துப்பல் தெரிய அழகாக சிரித்துக் கொண்டிருந்தாள். மையிட்ட வசீகரமான பெரிய கண்கள். கலையான தமிழ் முகம். மற்றபடி மாமா சொன்னது போல் தங்கச்சி சிலையெல்லாம் கொஞ்சம் ஓவர் தான்… மனதிற்குள் அவன் அவளுக்கு மார்க் போட, ‘டேய்! நீ ஓவரா பண்ணாதடா… அந்த பொண்ணுக்கும் உனக்கும் ஏணி என்ன.. ராக்கெட்டே வச்சாலும் எட்டாது’ என்று மனசாட்சி இடித்துக் கூற, “இல்ல மாமா… இது சரி வராது” என்றான்.
மறுப்பு வார்த்தையில் மட்டும் தான் இருந்தது. குரலில் இல்லை. ஆம், தன்னை அறியாமலே அவனுக்குள் சின்ன சலனம் எழுந்திருந்தது. ‘இவ நமக்கு சரின்னு சொல்லிட்டாளா!!’ என்கிற சலனம். அந்த சலனத்தையே கெட்டியாக பிடித்துக் கொண்ட நாராயணன், கரைக்கும் விதத்தில் கரைத்து மலையமானை மணமேடை ஏற்றிவிட்டார்.
Comments are closed here.