Share Us On
[Sassy_Social_Share]கனியமுதே! – 2
1695
0
அத்தியாயம் – 2
அங்கப்பனின் முடிவில் மணிமேகலைக்கு துளியளவும் உடன்பாடில்லை. அவள் கணவனை கடுமையாக எதிர்த்தாள். கல்யாணம் நின்றால் நின்றுவிட்டு போகட்டும். ஓரிரண்டு ஆண்டுகள் போனாலும் வேறு நல்ல மாப்பிள்ளையாக பார்த்துக்கொள்ளலாம் என்று கூறி கண்ணீர் விட்டு அழுதாள். அவரிடம் எதுவும் எடுபடவில்லை. எப்படிப்பட்ட மணமகனை தன் மகளுக்கு கொண்டுவர வேண்டும் என்று எண்ணி ஊரெல்லாம் சல்லடை போட்டாள்! கடைசியில் இந்த காட்டுப்பயல் தான் கிடைத்தானா! மனம் ஆறவில்லை அவளுக்கு.
கீர்த்தியும் வேண்டாம் என்றுதான் சொன்னாள். சீனு கூட யோசித்தான். ‘பொறுமையா பார்த்துக்கலாம் மாமா’ என்று சொல்லிப் பார்த்தான். ஆனால் அங்கப்பன் யாருக்கும் கட்டுப்படவில்லை. சந்தித்து வெகு காலமாகிவிட்ட தோல்வியை எதிர்கொள்ள பயம்… மலையமானின் மீதிருந்த அபரிதமான நம்பிக்கை… ஆகிய இரண்டு காரணங்களையும் மனதில் கொண்டு அங்கப்பன் நினைத்ததை நடத்தி முடித்தார்..
திருமணம் முடிந்ததும் மணமக்களை முதலில் பெண் வீட்டிற்குத்தான் அழைத்துக் கொண்டு வந்தார்கள். காரிலிருந்து இறங்கியதும் ஆரத்தி எடுக்கக் கூட தாமதிக்காமல் விறுவிறுவென்று உள்ளே நுழைந்து தன்னுடைய அறையில் அடைந்துக் கொண்டாள் கனிமொழி. மாலையும் கழுத்துமாக தன் அருகில் நின்றவனின் முகம் கன்றி சிவந்ததை பற்றி அவளுக்கு எந்த அக்கறையும் இல்லை.
வீட்டில் குடும்பத்தினரும் ஓரிரண்டு முக்கிய உறவினர்களும் மட்டுமே இருந்ததால் சூழ்நிலை அவர்களுக்குத் தெரிந்தே இருந்தது. யார் முகத்திலும் ஈயாடவில்லை. மணிமேகலை மலயமானை திரும்பியும் பார்க்காமல் விடைத்துக் கொண்டு போய்விட்டாள். வீட்டுக்கார பெண்மணியே அப்படி போனதும் மற்றவர்களும் அவனை உபசரிக்க தயங்கினார்கள்.
அந்த சங்கடமான சூழ்நிலையில் அங்கப்பன் தான், “வாங்க மாப்ள… உள்ள வந்து உட்காருங்க. இனி இது உங்க வீடு தான்” என்றார் கணீர் குரலில். அவர் முதல் முறையாக தன்னை பன்மையில் விளிப்பதை கவனித்தபடியே உள்ளே வந்து அமர்ந்தான் மலையமான். அவன் கூடவே நாராயணனும் இருந்தார்.
தன் மூத்த மகளை அழைத்து, “போயி கனிய கூட்டிட்டு வா” என்றார் அங்கப்பன். அவளும் தங்கையை தேடித் சென்றாள்.
கனிமொழியின் அறையில் மணமாலை விசிறியடிக்கப்பட்டு தரையில் கிடைக்க, அவள் கால்களை கட்டி கொண்டு முழங்காலில் முகம் புதைத்து மெத்தையில் அமர்ந்திருந்தாள். தங்கையிடம் பேச தயங்கி தரையில் கிடந்த மாலையை எடுத்து மேஜையில் வைத்துவிட்டு கீழே உதிர்ந்துக் கிடந்த பூக்களை கைகளால் சேகரித்து அள்ளினாள் கீர்த்தி.
அரவம் கேட்டு நிமிர்ந்த கனிமொழி, “என் வாழ்க்கையை விட அந்த பூ உனக்கு பெருசா போயிட்டு இல்ல?” என்று கத்தினாள் கனிமொழி. பதில் சொல்ல முடியாமல் உதட்டை கடித்தாள் தமக்கை.
“உனக்கு மட்டும் லண்டன் மாப்பிளை. எனக்கு காட்டானா?”
“சாரிடி… அந்த கவின் ரொம்ப கேவலமானவன்…”
“ஓஹோ! இவன் ரொம்ப நல்லவனோ! நீ போயி பார்த்துட்டு வந்தியா?”
“என்னடி இப்படி பேசுற?”
“அந்த கவின் வேண்டாம்னா அவனை விரட்டிவிட்டதோட என்னைய விட்டிருக்கலாம்ல? எதுக்குடி இவன்கிட்ட தள்ளிவிட்டிங்க?”
“அதை நானும் அவரும் அப்பாகிட்ட எவ்வளவோ சொல்லிப் பார்த்துட்டோம். அவரு கேட்கல”
“நா என்ன செத்தா போய்ட்டேன். என்கிட்ட வந்து சொல்லியிருக்க வேண்டியதுதானே? அப்படியே ஜன்னல் ஏறி குதிச்சு, எங்கேயாவது ஓடி போயிருப்பேன்ல? இப்படி புதை குழியிலே விழுந்துட்டேனே! பாவி! நீயெல்லாம் ஒரு அக்காவா? என் முகத்துலயே முழிக்காத வெளியே போ… போன்னு சொல்றேன்ல” – அவள் ஆக்ரோஷமாக கத்தியபடி எழுந்து தமக்கையை வெளியே பிடித்து தள்ள முயன்ற போது, அங்கே வந்து சேர்ந்தார் அங்கப்பன்.
தந்தையை பார்த்ததும் சகோதரியை உதறிவிட்டு அவரை முறைத்தாள்.
“அவன் மோசமான பய ம்மா”
“நீங்க பார்த்த மாப்ள தானே? நானா லவ் பண்ணி கூட்டிட்டு வந்தேன்?” – நங்கூரமிட்டது போல் கேட்டாள்.
அவரால் பதில் சொல்ல முடியவில்லை. “சரிதான், ஊருபேரு தெரியாதவனை தேடி, பெங்களூரு பம்பாய்ன்னு போயிருக்க கூடாது. அதுதான் என் தப்பு தான்”
“ஒரு தப்பை மறைக்க… இன்னொரு பெரிய தப்பை பண்ணியிருக்கீங்க. அதுக்கு என்ன சொல்ல போறீங்க?”
“இல்லம்மா… இந்த பையன் ரொம்ப நல்லவன்”
“அவ்வளவு நல்லவனா இருந்தா ரோட்ல எவளாவது பிச்சைக்காரி இருப்பா, அவளுக்கு வாழ்க்கை கொடுக்க சொல்லுங்க. என் தலையில எதுக்கு கட்டுனீங்க?”
“கனி…” – அதட்டினார்.
“என்ன கனி? இல்ல என்ன கனின்னு கேக்குறேன்? ரொம்பதான் அதட்டறீங்க! என் மூஞ்சிய பாருங்க, நல்லா பாருங்க. எனக்கு அவன் புருஷனா? சொல்லுங்க ப்பா” – அவள் உதடு துடித்தது. முகமெல்லாம் சிவந்து கண்களில் தீப்பொறி பறந்தது.
“அவனுக்கு என்னம்மா குறைச்சல்? ஏன் இப்படியெல்லாம் பேசுற?”
“அவனுக்கு என்ன குறைச்சலா! ஏய், அம்மாவை கூப்பிடு… கூப்பிடுடி” – தந்தையை புறக்கணித்து தமக்கையிடம் சீறினாள். தங்கையின் கடும் கோபத்தில் பயந்து போய் நின்றுக் கொண்டிருந்த கீர்த்தி உடனே அங்கிருந்து வெளியேறினாள்.
“இப்ப உனக்கு எதுவும் புரியாது கனி. கொஞ்ச நாள் போனா தெரியும். அவனை மாதிரி ஒரு பையன் கிடைக்கவே மாட்டான். அவன் எவ்வளவு பெரிய ஆளா வர போறான்னு பார்த்துகிட்டே இரு” என்றார் சற்று கோபமாகவே.
“என்னங்க..” – மகள் இருக்கும் மனநிலையில், அவளிடம் போய் இப்படி குரலை உயர்த்துகிறாரே இந்த மனிதர் என்னும் கடுப்பில் கணவனை அதட்டியபடி உள்ளே நுழைந்தாள் மணிமேகலை.
தாயைக் கண்டதும் தன் கழுத்திலிருந்த மஞ்சள் கயிறை இழுத்து அவள் முகத்துக்கு நேராக நீட்டிய மகள், “தங்கத்துல தாலி வாங்க கூட துப்பில்லாதவன். உனக்கு தெரிஞ்சுதான் எனக்கு இந்த அநியாயம் நடந்ததா?” என்றாள்.
மகளின் கண்மண் தெரியாத கோபத்தில் ஒரு நொடி திகைத்து நின்றவள், “நா என்னடி செய்ய முடியும்? எல்லாம் உங்க அப்பாவோட முடிவு” என்று ஆரம்பித்தாள்.
“உனக்கு தெரியுமா தெரியாத?”
“நா வேண்டான்னு தான் சொன்னேன். அவரு எங்க கேட்டாரு”
“அப்போ உனக்கு தெரியும், இல்ல?” – தாயை வெறித்துப் பார்த்தவளின் கண்களில் முதன்முறையாக கண்ணீர் கசிந்தது.
பதறிப்போன மணிமேகலை மகளிடம் பாய்ந்துச் சென்று அவளை அணைத்துக் கொண்டாள். தாயிடம் எந்த சலுகையும் எடுத்துக்கொள்ளாமல் இறுகி போய் நின்றாள் மகள்.
***********************
“மூணு நாளா நச நச ன்னு மழை பெய்து. தெக்கால இருக்க ஓடு பூரா சரிஞ்சு வந்துட்டு. வீட்டுக்குள்ள ஒரு இடம் விடாம ஒழுவுது. இந்த ஓட்ட பிரிச்சு மாத்தி, வீட்ட பழுது பார்க்க சொன்னா கேக்குறானா! எத்தன வருஷத்துக்கு நா இந்த குடோனை கட்டிக்கிட்டு அழுவ முடியும்” என்று புலம்பிக் கொண்டே மாடுகளுக்கு தண்ணீர் காட்டிக் கொட்டகையில் பிடித்துக் கட்டிக்கொண்டிருந்தார் அலமேலு.
“போடுவான்மா… நீ சும்மா அவனை புடுங்கி எடுக்காத. காசு வேணாமா? மீனு விக்கிற காசும் பாலு விக்கிற காசும் சோத்துக்கே பத்தாது. மத்தபடி இந்த விவசாயத்துல என்ன கிடைக்கும்? பேசாம அவனை ரெண்டு வருஷம் துபாய்க்கு அனுப்பு. அங்க சம்பாரிக்குற பணத்துல வீட்டை கட்டிப்புடலாம். அப்பறம் ஒரு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணமும் பண்ணிடலாம்” – வாசலை பெருக்கியபடி தாயை தாளித்தாள் தாமரை.
அவன் இதுவரை மீனும் பாலும் விற்ற காசை, உனக்கும் உன் குடும்பத்திற்கும் செலவு செய்யாமல் சேமித்திருந்தால் பெரிய பங்களாவே காட்டியிருக்கலாம் என்று தோன்றியதை வெளியே சொல்லாமல், “ஆமாடி, அவனை துபாய்க்கு போக சொல்லிட்டு நா இங்க தனியா கெடந்து சாவுறேன். கூழோ கஞ்சியோ, உள்ளூருல குடிச்சிட்டு கெடந்தா போதும், நீ வேலைய பாரு” என்றார் கடுப்புடன்.
“இப்படியே சொல்லிக்கிட்டு இரு. அவனுக்கும் வயசாயிகிட்டே போவுது. எவளையாவது புடிச்சு இழுத்துகிட்டு வந்துட போறான்” – அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே கார் ஒன்று அவர்கள் வீடு இருக்கும் தோப்புக்குள் நுழைந்தது.
“யாருடா இது, நம்ம வீட்டுக்கு கார்ல வாரது!” – தூக்கி செருகியிருந்த புடவையை இறக்கிவிட்டபடி தாமரை பார்வையை கூர்மையாக்க, அலமேலு, “இந்த மாசம்தான் லேனு பணம் கட்டியாச்சே! அப்பறம் எதுக்கு பேங்குகாரன் கார போட்டுக்கிட்டு வீட்டுக்கு வாரான்?” என்றார் விவசாய லோனின் தாக்கத்துடன்.
“யம்மா, இது பேங்கு காரு இல்லம்மா. பெரிய காரா இருக்கு. இரு வாராது யாருன்னு பார்ப்போம்” – இருவரும் பார்த்துக் கொண்டிருந்த வேலையை அப்படியே போட்டுவிட்டு முன்னோக்கி வர கார் அவர்கள் வாசலில் வந்து நின்றது.
காரிலிருந்து முதலில் இறங்கிய நாராயணனை கண்டதும் இருவர் முகத்திலும் வியப்பு.. ‘என்ன இவரு வந்து எறங்குறாரு’ என்று அவர்கள் யோசித்து முடிப்பதற்குள், பின் இருக்கையிலிருந்து மாலையும் கழுத்துமாக மலையமான் இறங்கினான், கூடவே கனிமொழி.
**********************
திருமணத்துக்கு போய்விட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டு சென்ற மகன் தன்னுடைய திருமணத்தையே முடித்துக் கொண்டு மாலையும் கழுத்துமாக வந்து இறங்கியதை கண்டு அதிர்ந்து போன அலமேலு, ஒரு கணம் எதுவுமே சொல்ல தோன்றாமல் அப்படியே நின்றுவிட்டார்.
தாமரைதான், “மலையா! என்னடா இது?” என்றாள் ஆத்திரத்துடன்.
அந்த பெயரை கேட்டதுமே கனிமொழி அதிர்ந்தாள். அவனை மட்டுமல்ல, அவனுடைய பெயரைக் கூட அவளுக்கு பிடிக்கவில்லை. உடலும் மனமும் இறுகி போனவளாக கற்சிலை போல் அவள் நிற்க,
அவசரமாக மனைவியிடம் நெருங்கிய நாராயணன், “ரெண்டு பேரும் உள்ள வாங்க” என்று மாமியாரையும் சேர்த்து கொல்லைப்புறம் அழைத்துச் சென்று நடந்ததை மேலோட்டமாக கூறினார்.
அலமேலுவுக்கு ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ஆண் பிள்ளை வேண்டும் என்று வரம் வாங்கி பெற்று வளர்த்த மகனின் வாழ்க்கை துணியை தான் தேர்ந்தெடுக்கவில்லை, அவனுடைய திருமணத்தில் தனக்கு எந்த பங்கும் இல்லை என்பதை ஜீரணிக்க முடியவில்லை.
“எம்புள்ள என்ன சாதிசனம் இல்லாதவனா? இப்படி தனியா போயி தாலிகட்டிட்டு வந்து நிக்கிறானே!” என்றார் ஆற்றாமையுடன்.
“ஏன் என்னைய பார்த்தா ஆளா தெரியல? நான்தானே நின்னு அவனுக்கு எல்லாம் செஞ்சேன். என்னையைவிட எந்த சாதிசனம் அவனுக்கு பெருசு?” என்று எகிறினார் நாராயணன்.
தாமரை பல்லை கடித்தாள். “நீங்க மட்டும் இருந்துட்டா போதுமா? பெத்து வளர்த்த தாயின்னு இங்க ஒரு பொம்பள இருக்கறதயே மறந்துட்டிங்களா?” என்றாள்.
“நா எதையும் மறக்கல, எல்லாத்தையும் நெனச்சு பார்த்துதான் இந்த கல்யாணத்தை நடத்தி வச்சேன். இந்த வீடு இன்னும் ரெண்டு மழைக்கு தாங்காது. வர்ற வருமானமெல்லாம் கைக்கும் வாய்க்குமே பத்தல. இந்த லட்சணத்துல இவனுக்கு எப்ப பொண்ணு பார்த்து கல்யாணம் பண்ணி இந்த வீட்டுக்கு பேரன் பேத்தியை கொண்டுக்கிட்டு வர போறீங்க?” என்றார் மாமியாரை பார்த்து காட்டமாக.
மகன் குருவி போல் சேர்க்கும் பணத்தையெல்லாம் போர் போட வேண்டும், வீடு கட்ட வேண்டும், குளம் வெட்ட வேண்டும் என்று சுரக்க சுரக்க துணி போட்டு துடைப்பது போல் துடைத்து எடுத்துக் கொண்டு அவனை வெறும் ஆளாக விட்டது மட்டும் அல்லாமல் என்ன பேச்சு பேசுகிறான் இந்த ஆள் என்று மனதில் நினைப்பதை வெளியில் சொல்ல முடியாமல் மகளை முறைத்தார் அலமேலு.
கணவன் அடித்த பகல் கொள்ளையில் தனக்கும் பங்கிருந்ததால் தாயின் பார்வையை தவிர்த்து, “அதுக்காக இப்படி திடுதிப்புன்னு கல்யாணம் பண்ணி வச்சுடுவீங்களா? ஊரு காரி துப்பாது?” என்று கணவனிடம் பாய்ந்தாள்.
“ஏண்டி துப்புது? இந்த பொண்ண யாருன்னு நெனச்ச? அங்கப்பன் அண்ணன் பொண்ணு. இந்த வீட்டோட தலையெழுத்தையே மாத்த வந்த ராசாத்தி” என்றார் அழுத்தமாக.
அந்த வார்த்தை பெண்கள் இருவரையும் மௌனமாக்கியது. ஆனாலும் உள்ளுக்குள், ‘இவள் குடும்பத்துக்கு ஒத்துவருவாளா?’ என்கிற உதைப்பு அலமேலுவுக்கும், ‘படிச்சவ.. பணக்காரி.. நம்மள மதிப்பாளா!’ என்கிற உதைப்பு தாமரைக்கும் இருக்கத்தான் செய்தது.
நாராயணன், பெண்கள் இருவரையும் சமாதானப்படுத்தி முன் வாசலுக்கு அழைத்துக் கொண்டு வந்த போது அங்கே இன்னொரு கார் வந்து நின்றது. அதிலிருந்து அங்கப்பனின் குடும்பம் இறங்கியது.
“வாங்க வாங்க… எல்லாரும் வாங்க” – நாராயணன் ஆர்ப்பாட்டமாக வரவேற்றார்.
தன் கையிலிருந்த ஆரத்தித் தட்டோடு மணமக்களை நெருங்கிய தாமரை, அவர்களுக்கு திருஷ்டி கழித்து உள்ளே அழைத்தாள்.
அந்த வீடு தோப்புக்குள் இருக்கும் ஒரு தனி வீடுதான். ஆனாலும் எப்படித்தான் விஷயம் தெரிந்ததோ.. அதற்குள் அக்கம் பக்கத்து தோப்புகளில் வசிக்கும் பெண்கள் அங்கே வந்துவிட்டார்கள்.
பாயை விரித்து பெட்டியில் துவைத்து மடித்து வைக்கப்பட்டிருந்த வெள்ளை வேட்டி ஒன்றை அதன் மீது விரித்து மணமக்களை அமரச் சொன்னார்கள். வீட்டில் கறந்த பாலை சுண்டக் காய்ச்சி, அதில் வாழை பழத்தையும் சர்க்கரையையும் கரைத்து பாலும் பழமும் தயார் செய்து மலையமானிடம் நீட்டி, “நீ ஒரு வாய் குடிச்சிட்டு பொண்ணுக்கும் குடு” என்றாள் வந்திருந்த பெண்களில் ஒருத்தி.
அதை கையில் வாங்கியவனுக்கு தயக்கமாக இருந்தது. தான் குடித்துவிட்டு கொடுத்தால் அவள் குடிப்பாளா என்கிற சந்தேகத்துடன் திரும்பி அவள் முகம் பார்த்தான்.
தன்னை திருமணம் செய்துகொள்ள அவளுக்கு சம்மதம் என்று எண்ணித்தான் தாலி கட்டினான். ஆனால் திருமணத்திற்கு பின் பெண் வீட்டில் நடந்த வாக்குவாதங்கள் அவனை பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
“என்ன மாமா இது?” என்று அவன் நாராயணனிடம் கேட்ட போது, “போக போக சரியாயிடும்டா” என்று சாதாரணமாக சொல்லிவிட்டார். ஆனால் சரியாகும் என்கிற நம்பிக்கை அவனுக்கு துளியும் இல்லை. அவள் முகத்திலிருக்கும் கடினத்தன்மை அதற்கு இடம் கொடுக்கவில்லை.
“என்ன தம்பி அப்படி பார்க்கற! குடிச்சிட்டு பொண்ணுக்கும் குடு” – வேறொரு சமயமாக இருந்திருந்தால், இப்படி ஒருவன் தன் புது மனைவியை வெறித்துப் பார்த்ததற்கு கேலியும் கிண்டலும் பறந்திருக்கும். ஆனால் அங்கிருந்த கனத்த சூழ்நிலை அனைவருக்கும் புரிந்தே இருந்ததால் அக்கம் பக்கத்து வீட்டு பெண்கள் கூட இயல்பு நிலையை தொலைத்திருந்தார்கள்.
பாலை ஒரு மிரடு அருந்திவிட்டு டம்ளரை அவளிடம் நீட்டினான் மலையமான். அவளிடம் அசைவே இல்லை. “வாங்கி குடிம்மா” – பக்கத்து வீட்டு பெண்ணின் குரல் உந்த, அங்கே நின்றுக் கொண்டிருந்த அங்கப்பனும் “வாங்கு கனி” என்றார் அழுத்தமாக.
அப்போதும் அவள் மலையமானின் தன்மானத்தை காலால் எட்டி உதைத்துவிட்டு அழுத்தமாகவே அமர்ந்திருக்க, “அவளுக்கு பால் பிடிக்காது” என்று சமாளித்தாள் மணிமேகலை.
குனிந்த தலை நிமிரவில்லை என்றாலும், பக்கத்தில் அமர்ந்திருப்பவனின் பார்வை வெகு தீவிரமாக தன் மீது படிவதை உணர்ந்த கனிமொழியின் இதழ்கடையோராம் ஓர் அலட்சிய புன்னகை தோன்றி மறைந்தது.
அதைக் கண்டதும் அவனுக்குள் சுறுசுறுவென்று கோபம் பொங்கியது. கட்டுப்படுத்திக் கொண்டு அமர்ந்திருந்தான்.
“வந்து விளக்கேத்தும்மா” – அதே பெண் கூற வேண்டா வெறுப்பாக எழுந்தாள் கனிமொழி.
மலையமான் எழுந்து வாசல் பக்கம் செல்ல எத்தனித்தான். “எங்கப்பா போற? உள்ள வந்து சாமி கும்பிடு” – அவனையும் இழுத்துப் பிடித்தாள்.
சமையலறையில் ஒரு பக்கமாக வைத்திருந்த பூஜை அலமாரியில் சாமி படமும் காமாட்சி விளக்கும் இருந்தது. கடனே என்று தீக்குச்சியை கொளுத்தி திரியில் வைத்தாள். அது எரிந்தது. அவ்வளவுதான். அவள் மனதில் எந்த ஒரு ஒட்டுதலும் இல்லை.
மலையமானிடம் குங்குமச் சிமிழை நீட்டி, “பொண்ணுக்கு பொட்டு வச்சுவிடு” என்றாள்.
‘இது என்னடா பெரிய தொல்லையா போச்சு!’ – கடனே என்று குங்குமத்தை தொட்டு அவள் நெற்றியில் ஒற்றினான் அவன்.
அதன் பிறகு அவன் வாசல் பக்கம் வந்துவிட அவள் கூடத்தில் போடப்பட்டிருந்த பாயிலேயே மீண்டும் வந்து அமர்ந்துக் கொண்டாள். அவளோடு மணிமேகலையும் கீர்த்தியும் உடன் அமர்ந்தார்கள்.
வீட்டுக்குள் சமையலறை பக்கம் பெண்களும், வாசலில் ஆண்களும் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார்கள். ஒரு பத்து பதினைந்து நிமிடம் கழித்திருக்கும். அங்கப்பன் உள்ளே வந்தார். கூடவே வந்த நாராயணன் சமையலறை பக்கம் சென்று தன் மாமியார் அலமேலுவை அழைத்துக் கொண்டு வந்தார்.
“அக்கா, நாம ஒன்னும் ஒருத்தரை ஒருத்தர் தெரியாதவங்க இல்ல. எங்க சித்தப்பா பொண்டாட்டியோட சின்ன அம்மாயியும், உங்க பெரியப்பா பொண்டாட்டியோட பெரிய அப்பாயியும் ஒரே வீட்ல பொறந்தவங்க தான்.. கூட்டி கழிச்சு பார்த்தா நா உங்களுக்கு தம்பி முறைதான். ஏதோ விட்ட குறை தொட்ட குறை.. நம்மள இந்த கல்யாணத்துல ஒன்னு சேர்த்துருக்கு. அதனால மனசுல எதையும் வச்சுக்காதிங்க. எதுவா இருந்தாலும் நா இருக்கேன். இனிமே இந்த குடும்பம் என்னோட பொறுப்பு” என்றார் தன்மையாக.
அலமேலுவின் முகம் மலர்ந்தது. அத்தனை பெரிய கோடீஸ்வரர் அவரை அழைத்து சமாதானம் சொன்னதோடு, அக்கா என்று முறை சொல்லி அழைத்தது மனதிற்கு இதமாக இருந்தது.
“பரவால்லைங்க தம்பி, திடீர்னு இப்படி நடந்துடுச்சேன்னு தான் வருத்தம். வேற ஒன்னும் இல்ல” என்றார்.
“இன்னைக்கே இரண்டாம் அழைப்பையும் அழைச்சிடறோம். நாளைக்கு நீங்க எல்லாரும் வீட்டுக்கு வாங்க. விருந்து ஏற்பாடு செய்யறோம். முடிச்சிட்டு மூணாவது அழைப்பை அழைச்சுக்கிட்டு வந்துடலாம்” என்றார்.
ஓரிரு நொடிகள் யோசித்தவர், சர்க்கரையாக பேசும் அந்த மனிதனை மறுக்க முடியாமல் சரி என்று தலையாட்டினார். பெண்ணும் மாப்பிள்ளையும் மணமகன் வீட்டிலிருந்து மீண்டும் மணமகள் வீட்டிற்கு பயணப்பட்டார்கள்.
Comments are closed here.