Share Us On
[Sassy_Social_Share]கனியமுதே! – 3
1710
0
அத்தியாயம் – 3
மலையமானுக்கு பெரும் சங்கடமாக இருந்தது. கால் பந்து போல் இங்கும் அங்கும் உதை படுவதாகத் தோன்றியது. ஆனாலும் சடங்கு சம்பிரதாயம் இதெயெல்லாம் உதாசீனப் படுத்தகூடியவன் அல்ல என்பதால் பொறுத்து கொண்டான். அந்த பெண்ணின் கழுத்தில் தாலி கட்டிவிட்டோம். இனி அதில் வரும் நல்லது கெட்டது அனைத்திற்கும் தான் தலை கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தான்.
வீட்டுக்குள் நுழைந்ததுமே கனிமொழி விறுவிறுவென்று படியேறி மாடிக்கு சென்றுவிட்டாள். எதிர்பார்த்தபடியே அங்கப்பனை தவிர அந்த வீட்டில் பெரிதாக அவனை யாரும் கண்டுகொள்ளவில்லை. போன முறையாவது நாராயணன் கூட இருந்தார். இப்போது அவரும் இல்லை. மண்டபத்தில் காண்ட்ராக்ட் எடுத்த ஆட்களுக்கு மீதி பணம் செட்டில் பண்ணும் வேலையாக அங்கப்பன் வெளி வராண்டாவிற்கு சென்றுவிட, அவன் பிடித்து வைத்த பிள்ளையார் போல் ஹால் சோபாவில் அமர்ந்தே இருந்தான்.
வெகு நேரம் கழித்து வந்த அங்கப்பன் அவனை இரவு உணவிற்கு அழைத்துச் சென்றார். முதல் முறையாக அப்படியொரு ஆடம்பரமான உணவு மேஜையில் அவனுக்கான விருந்து காத்திருந்தது.
என்ன சமாதானம் சொல்லி அழைத்து வந்தார்களோ, அவளும் சரியான நேரத்திற்கு உணவு கூடத்திற்கு வந்தாள். முதலில் அவளை அவனுக்கு அடையாளமே தெரியவில்லை. அவள் கையிலிருந்த மருதாணியையும், கல்யாண வளையல்களையும் கண்டுவிட்டுத்தான் நன்றாக அவள் முகத்தை பார்த்தான். அவளேதான்! சற்று நேரத்திற்கு முன் புடவையில் பெரிய மனுஷியாக தெரிந்தவள் இப்போது, நைட் பேண்டில் சிறுமி போல் தெரிந்தாள். அவனுக்கு பகீரென்றது. இவள் எப்படி நம்முடைய வாழ்க்கை முறையை தங்குவாள் என்று கவலையாக இருந்தது.
டேபிளில் இவன் ஒரு பக்கம் அமர்ந்திருக்க அவள் மறுபக்கம் சென்று அமர்ந்தாள். முகத்தில் ஒருவித கோபமும் பிடிவாதமும் தெரிந்தது. கீர்த்தி பரிமாறினாலும், அங்கப்பன் கூடவே இருந்து கவனித்துக் கொண்டார். இரவு உணவிற்கு பிறகு மீண்டும் கனிமொழி மாடிக்கு சென்றுவிட, அங்கப்பன் மலையமானோடு அமர்ந்து பேசினார்.
குறிப்பிட்டு எதுவும் பேசாமல் பொதுப்படையாக பேசிக் கொண்டிருந்தவர், சற்று நேரம் கழித்து தன்னுடைய மகளின் கோபத்தை சற்று பொறுத்துக்கொள்ளும்படி அவனிடம் வேண்டினார். அவன் மறுத்துப்பேச முடியாமல் மையமாக தலையாட்டிவைத்தான். அதன் பிறகு தான் அதை சொன்னார்..
“மாடியில தான் கனியோட ரூம். மேல போங்க”
ஏதோ சிங்கத்தின் குகைக்குள் போகச் சொல்வது போல அவனுக்குள் பதட்டம் தொற்றிக் கொண்டது. அதை வெளியே காட்டாமல் இருக்க வெகுபாடு பட்டவன், சங்கடத்துடன் எழுந்து மாடிக்குச் சென்றான்.
அங்கே கட்டிலில் முழங்காலில் முகம் புதைத்து குனிந்து அமர்ந்திருந்தாள் கனிமொழி. அவளிடம் என்ன பேசுவதென்று அவனுக்கு தெரியவில்லை. பேச வேண்டுமா என்பது கூட கேள்வியாகத் தான் இருந்தது.
அறைக்குள் யாரோ வந்திருப்பதை உணர்ந்தும் தலை நிமிராமல் அமர்ந்திருந்தவள், வந்தவர்கள் எதுவும் பேசாமல் இருக்கவும், ‘ஒருவேளை அவனாக இருக்குமோ!’ என்கிற எண்ணம் தோன்ற சட்டென்று நிமிர்ந்தாள். அவனேதான்.. அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். முகம் இறுக அவன் பார்வையை எதிர்கொண்டாள் கனிமொழி.
நாள் முழுக்க ஒன்றாகவே இருந்திருந்தாலும் அப்போதுதான் இருவரும் ஒருவரையொருவர் நேருக்கு நேர் பார்த்துக் கொண்டார்கள். அவள் முகம் வீங்கியிருந்தது. கண் இமைகள் தடித்து விழிகள் சிவந்திருந்தன. அழுதிருக்கிறாள் என்பதும் அதற்கான காரணம் தன்னை திருமணம் செய்து கொண்டது தான் என்பதும் புரிந்துவிட, அவமானத்தில் அவன் முகம் கன்றியது.
“எதுக்கு இப்ப அழுவுற?” என்றான். எவ்வளவு முயன்றும் குரலில் கோபத்தின் சாயலை தவிர்க்க முடியவில்லை. நடந்து முடிந்துவிட்ட திருமணத்தின் மீது கோபம்… அதை நடத்திவைத்த அங்கப்பனின் மீது கோபம்… அவளுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் என்று பொய் உரைத்த மாமன் மீது கோபம்… அவரை அப்படியே நம்பிவிட்டதில் தன் மீதும் கோபம்.. கோபம்.. கோபம்.. கோபம்.. அடி நெஞ்சிலிருந்து அத்தனை கோபம் பொங்கி எழுந்தது.
கனிமொழிக்கும் ஆத்திரம் பொத்துக் கொண்டு வந்தது. அவளுடைய வாழ்க்கையையே அழித்துவிட்டு எவ்வளவு திமிராக அவளிடம் குரலை உயர்த்துகிறான்! நெற்றிக்கண்ணை திறக்காத குறையாக அவனை முறைத்துப் பார்த்தவள் விருட்டென்று கட்டிலிலிருந்து எழுந்து குளியலறைக்குள் நுழைந்து கதவை பட்டென்று சாத்தினாள்.
முகத்தில் அறை வாங்கியது போல் இருந்தது அவனுக்கு. மூடிய கதவையே சற்று நேரம் வெறித்துப் பார்த்தவன், பற்களை நறநறத்தபடி பால்கனி கதவை திறந்து கொண்டு வெளியே வந்தான். ஒரு நொடி கூட அவனால் அந்த அறையில் இருக்க முடியவில்லை. இவளை எப்படி சாமாளிக்கப் போகிறோம் என்று ஆயாசமாக இருந்தது.
அவன் முகத்தை பார்க்கக் கூட பிடிக்காமல் குளியலறைக்குள்ளேயே அமர்ந்திருந்த கனிமொழி, இரவு முழுவதும் உள்ளேயே இருக்க முடியாது என்பதை உணர்ந்து வெகுநேரம் கழித்து வெளியே வந்தாள்.
அறையில் அவனை காணவில்லை. பால்கனி கதவு திறந்திருப்பதை கவனித்துவிட்டு வெளியே எட்டிப்பார்த்தாள். அங்கே கிடந்த சேரில் கண்மூடி சாய்ந்து அமர்ந்திருந்தான்.
‘பெரிய மகாராஜா! உட்கார்ந்திருக்கறதை பாரு… ஆளும் மூஞ்சியும்…’ – கடுப்புடன் எண்ணியபடி வெடுக்கென்று முகத்தை திருப்பிக் கொண்டு உள்ளே வந்தாள். அறைக்கதவை யாரோ மெலிதாக தட்டினார்கள். எரிச்சலுடன் சென்று பார்த்தாள். அங்கப்பன் நின்றுக் கொண்டிருந்தார். கையிலிருந்த வேட்டி சட்டையை அவளிடம் கொடுத்து, “இது மாப்பிளையோடது. மாத்திக்க சொல்லி குடு” என்று அவளிடம் கொடுத்துவிட்டு சென்றான்.
“அவனுக்கு நான் என்ன அசிஸ்டெண்டா!’ – அலட்சியமாக அதை மேஜையில் தூக்கி எறிந்துவிட்டு, லைட்டை அணைத்துவிட்டு போர்வையை தலைவரை இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்துவிட்டாள்.
சேரில் அமர்ந்த நிலையிலேயே உறங்கிவிட்ட மலையமான், அதிகாலையில் கண்விழித்து அறைக்குள் வந்தான். இரவு கழுத்துவரை இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்திருந்தவள் இப்போது போர்வை எங்கே போனது என்று தெரியாமல் உதைத்துத் தள்ளிவிட்டு, ஒரு காலை நீட்டி, மறு காலை மடக்கி தலையணையை கட்டிபிடித்துக் கொண்டு ஒருக்களித்து படுத்திருந்தாள். இதழ்கடையோராம் தலையணை ஈரமாகியிருந்தது. சின்னதாய் ஒரு குறட்டை ஒலி வேறு…
மலையமானின் முகத்தில் சின்ன புன்னகை தோன்றியது. இரவெல்லாம் வெளியே அமர்ந்த நிலையிலேயே உறங்கிய அலுப்புக் கூட மறந்து போய்விட்டது அவனுக்கு. அவள் மீதிருந்து பார்வையை விளக்க முடியவில்லை. மனைவி என்றெல்லாம் எண்ணவில்லை. ஆனால் என்னவோ, அவளை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போலிருந்தது. அழகான மலரை பார்ப்பது போல்.. அதிகாலை பனியை ரசிப்பது போல்..
‘அழகிதான்.. பாவம், நம்மகிட்ட வந்து மாட்டிக்கிட்டா’ – இரவெல்லாம் திமிர் பிடித்தவள் என்று அவளை கரித்துக்கொட்டியவன் இப்போது இரக்கப்பட்டான். கூடவே, சுவற்றில் பொருத்தப்பட்டிருந்த ஆள் உயர கண்ணாடியை பார்த்து, ‘உனக்கு என்னடா மலையா குறைச்சல்?’ என்று மீசையை முறுக்கிவிட்டபடி தன்னுடைய உடற்கட்டையும் முக அமைப்பையும் அளவெடுத்தான்.
‘நல்லாதானே இருக்கோம்! என்ன.. கொஞ்சம் கலரு தான் கம்மி… வயக்காட்டுல வேலை செய்யிறவன் வேற எப்படி இருப்பான்!’ என்று தனக்குத்தானே சமாதானம் சொல்லிக் சொல்லிக் கொண்டான்.
‘நீயும் நல்லா படிச்சு அவ அக்கா புருஷன் மாதிரி அமெரிக்கா ஆப்பிரிக்கான்னு வேலைக்கு போகாம விட்டுட்டியேடா!’ என்று கண்ணாடிக்குள் இருந்து அவன் பிம்பம் அவனை குற்றம் சாட்டியது.
‘அட ஏண்டா நீ வேற! இவ என் பொண்டாட்டியா வந்து உசுர எடுக்கப் போறான்னு நா என்ன கனவா கண்டேன்!’ என்று அலுத்துக் கொண்டவன், பெருமூச்சுடன் குளியலறைக்குள் நுழைந்தான்.
அவன் ரெஃப்ரஷ் செய்துவிட்டு வெளியே வந்த போது கனிமொழி விழித்திருந்தாள். குளியலறையிலிருந்து வெளியே வந்தவனை ஏற இறங்க பார்த்தவளின் பார்வையில், ‘பாத்ரூமை ஒழுங்கா க்ளீனா வச்சுட்டு வந்திருக்கியா?’ என்கிற கேள்வி இருந்தது.
அவளுடைய பார்வையை பார்த்தவனுக்கு, உண்மையிலேயே பாத்ரூம் சுத்தமாக இருக்கிறதா என்பதை இன்னொரு முறை சரிபார்க்க வேண்டும் என்கிற எண்ணம் எழ, ‘கண்ணாலேயே மெரட்டுறாளே!’ என்று எண்ணியபடி உடலை சற்று விறைப்பாகவே வைத்துக் கொண்டு வெளியே வந்தான்.
கீழே அங்கப்பன் வேலையாளிடம் ஏதோ ஏவிக் கொண்டிருக்கும் சத்தம் கேட்டது. இவளை கட்டிக்கிட்டு மாரடிக்கிறதுக்கு பேசாம கீழ போயி அந்த மனுஷன்கிட்டயாவது ஏதாவது பேசிகிட்டு இருக்கலாம் என்று எண்ணி கீழே வந்தான்.
அவனை பார்த்ததும், “வாங்க மாப்ள.. எழுந்தாச்சா?” என்றார் உபச்சாரமாக.
“ஆமா மாமா.. என்ன காலையிலேயே சத்தம்போட்டுகிட்டு இருக்கீங்க?” என்றான்.
“பண்ணைக்கு போகணும் மாப்ள. இந்த ட்ரைவர் பயல இன்னும் காணும்” என்றார்.
“கார் தானே எடுக்கணும். வாங்க நா கூட்டிட்டு போறேன்” என்றான்.
“இல்லல்ல மாப்ள… நீங்க இருங்க. நா டூவீலரை எடுத்துக்கிட்டு போயிட்டு வந்துடறேன். அது சரி, நேத்து உங்க ட்ரெஸை மேல கொண்டுவந்து கனிகிட்ட கொடுத்துட்டு வந்தேனே, மாத்திக்கலையா நீங்க?” – மகளின் லட்சணத்தை மறந்துவிட்டு அந்த கேள்வியை கேட்டுவிட்டார். மலையமானின் முகம் சட்டென்று சுருங்கியது.
“குளிச்சிட்டு மாத்திக்கிறேன் மாமா” என்றான். அவர் சங்கடத்துடன் தலையசைத்துவிட்டு, “சரி மாப்ள, நீங்க இருங்க. நா பண்ணைக்கு ஒரு எட்டு போயிட்டு வந்துடறேன்” என்று கூறிவிட்டு நகர்ந்தார்.
மலையமான் வெளி வராண்டாவிற்கு வந்தான். “வாங்க வாங்க. உட்காருங்க” – படித்துக் கொண்டிருந்த நாளிதழை மடக்கி வைத்துவிட்டு சகலையை உபசரித்தான் கீர்த்தியின் கணவன்.
புன்னகையுடன் தலையசைத்துவிட்டு அங்கே கிடந்த நாற்காலி ஒன்றில் அமர்ந்தான் மலையமான்.
“நன் சீனு. கனிமொழியோட அக்கா ஹஸ்பண்ட். மாணிக்கம் தானே உங்க பேரு?”
“இல்லைங்க, மலையமான்…”
அவனுடைய பெயரை தவறாக சொல்லிவிட்ட வருத்தத்துடன், “ஓ! சாரி…” – என்றான். மலையமான் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல், “பரவால்லைங்க” என்றான்.
“மாமா மாதிரியே நீங்களும் பண்ணை வச்சிருக்காதா சொன்னாங்க. மீன் பிசினஸ் இங்க ரொம்ப நல்லா போகுது இல்ல” என்றான் சீனு, அவனிடம் ஏதாவது பேசிக் கொண்டிருக்க வேண்டுமே என்பதற்காக.
“இல்லைங்க, என்னோடது பண்ணையெல்லாம் இல்ல. தென்னந்தோப்பு இருக்கு, அதுலையே ரெண்டு கொளம் வெட்டிவிட்டிருக்கேன். விவசாய நிலம் கொஞ்சம் இருக்கு. பத்து பதினஞ்சு மாடு வச்சு பால் கறந்து வியாபாரம் பண்ணுறோம்”
“ஓ! மல்டிடாஸ்கிங்!”
“என்னதுங்க?”
“இல்ல… ஒரே நேரத்தில பல வேலை செய்யிறீங்க”
“ஆமாங்க, விவசாயிங்க நாங்கல்லாம் இப்படி பல வேலையும் செஞ்சு சம்பாரிச்சாதான் உண்டு. ஆப்பீஸ் வேலை மாதிரி ஒரே வேலையில உட்கார்ந்திருக்க முடியுமா?” – மலையமானின் சகஜமான பேச்சில் சீனு ஆச்சரியப்பட்டான்.
அன்றைய விருந்துக்கு சமைக்க சமையல் ஆட்கள் வந்துவிட்டார்கள். வாசலில் படுதாவை விரித்து, காய்கறிகளை கடைபரப்பி, வெங்காயம் தக்காளியை வெட்ட துவங்கினார்கள்.
அவர்களை மேற்பார்வை பார்க்க வெளியே வந்த கீர்த்தி, கணவன் குடித்துவிட்டு வைத்திருந்த காபி கப்பை எடுத்துக் கொண்டு மலையமானை பார்த்து, “உங்களுக்கும் காபி வேணுமா?” என்றாள்.
சீனுவுக்கு பகீரென்றது. நேற்று கல்யாணம் ஆனா புது மாப்பிள்ளை. காபியை கொண்டு வந்து அவன் கையில் கொடுக்காமல், காபி வேண்டுமா என்று ஏதோ வேலைக்காரனிடம் கேட்பது போல் கேட்கிறாளே என்று எண்ணி மனைவியை பார்த்தான்.
மலையமான் அலட்டிக்கொள்ளவில்லை. “கொண்டுவாங்க. சர்க்கரை கொஞ்சம் கம்மியா” என்றான்.
அவனுடைய இடத்தில் தான் இருந்திருந்தால் கூட காபி வேண்டாம் என்றுதான் கூறியிருப்போம், இவன் எப்படி புது இடத்தில், அதுவும் அவனுக்கு சற்றும் பொருத்தம் இல்லாத இடத்தில் இவ்வளவு கூலாக இருக்கிறான் என்று வியந்தான் சீனு.
மலையமானுக்குள் எத்தனை பெரிய போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது என்று அவனுக்கு தெரியாது.
வாசலில் பத்து பேர் அமர்ந்து காய்கறி வெட்டிக் கொண்டிருக்கிறார்களே! அது யாருக்காக? அவனுக்கு விருந்து சமைப்பதற்காக. ஆனால் அந்தப் பெண்… ஒரு காப்பிக்கு அவனிடம் அலட்சியம் காட்டுகிறாள். உள்ளுக்குள் கொதிப்பாக இருந்தாலும் வெளியே கூலாக காட்டிக்கொண்டான். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எதையும் பேசி இன்னும் ஒட்டியே வராத உறவை வெட்டிவிட அவனுக்கு மனமில்லை. பொறுத்துப்போனான்.
கீர்த்தி கொண்டு வந்து கொடுத்த காபியை முழுவதுமாக பருகிவிட்டு வீட்டை சுற்றி நடந்து கொண்டிருந்தான். அதற்குள் அங்கப்பன் பண்ணையிலிருந்து வந்துவிட்டார். கையில் ஒரு பையோடு அவனிடம் நெருங்கியவர், “இதுல உங்க சட்டை வேட்டி இருக்கு மாப்ள. வீட்ல போயி வாங்கிட்டு வந்தேன். குளிச்சிட்டு மாத்திக்கங்க… அவங்கள்லாம் கிளம்பிகிட்டு இருக்காங்க. மாதியான சாப்பாட்டுக்கு வந்துடறதா சொன்னாங்க” என்றார்.
அவர் கொடுத்த பையை வாங்கி கொண்டு மாடிக்கு சென்றான் மலையமான். நல்லவேளை அங்கு கனிமொழி இல்லை. நிம்மதியாக உணர்ந்தான். இரவெல்லாம் அமர்ந்த நிலையிலேயே உறங்கியது என்னவோ போல் இருந்தது. சற்று படுத்து ஓய்வெடுக்க வேண்டும் போலிருந்தது. ஆனால் அந்த கட்டிலில் படுக்க அவனுக்கு விருப்பம் இல்லை. கீழே படுக்கவும் மனமில்லை. அது தன்னை தானே தாழ்த்திக்கொள்ளவது போல் இருக்கும் என்பதால் நேரடியாக குளியலறைக்குள் நுழைந்தான்.
அன்றைய காலை உணவின் போது வீட்டு ஆண்கள் அனைவரும் டைனிங் டேபிளில் அமர்ந்திருந்தார்கள். கனிமொழி மலையமானோடு சேர்ந்து அமர்ந்து உணவருந்த வேண்டும் என்று அங்கப்பன் கண்டிப்புடன் கூறியிருந்தார். எனவே முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டு அவனுக்கு பக்கத்து சேரில் வந்து அமர்ந்தாள்.
பலவிதமான பலகாரங்கள் பாத்திரங்களில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அங்கப்பன் அங்கே இருந்ததாலோ என்னவோ அவனுக்கு அங்கே எந்த சங்கடமும் ஏற்படவில்லை. என்ன ஒன்று, கனிமொழிக்குத்தான் அரை இட்லி கூட இறங்கவில்லை. அதில் அவனுக்கு வருத்தம் தான். பக்கத்தில் அமர்ந்து சாப்பிடக் கூட அவள் விரும்பவில்லையே!
மலையமானின் குடும்பத்தினர் சில நெருங்கிய சொந்தபந்தங்களோடு விருந்துக்கு வந்திருந்தார்கள். அங்கப்பனும் தன் பக்கத்திலிருந்து உடன்பிறப்புக்களையும், மாமன் மச்சான் உறவுகளையும் அழைத்திருந்தார்.
உறவுகள் கூடியிருந்ததாலோ என்னவோ மனக்கசப்புகளை ஒருவருக்கொருவர் காட்டிக்கொள்ளவில்லை. விருந்து நன்றாகவே முடிந்தது. மணமக்கள் மாப்பிள்ளை வீட்டுக்கு கிளம்புவதற்கு சிறிது நேரத்திற்கு முன் அங்கப்பன் மலையமானை தனியாக அழைத்துப் பேசினார்.
“மாப்ள, இப்போ போயிட்டு நைட்டு திரும்பி வந்துடறீங்களா? கொஞ்ச நாள் இங்க இருக்கலாம்” – நாசுக்காக கேட்டார்.
“ஏன் மாமா?”
“இல்ல, அங்க வீடெல்லாம் கொஞ்சம் ஒருமதிரி இருக்கு. கனி வசதியா வளர்ந்த புள்ள” என்று இழுத்தார்.
மலையமானின் முகத்தில் சட்டென்று ஒரு இறுக்கம் வந்து ஒட்டிக் கொண்டது. “அது சரிவராது மாமா” என்றான்.
“நம்ம வீட்ல இருக்கறது உங்களுக்கு சங்கடமா இருந்தா, இங்கேயே டவுன்ல வேற வீடு பார்த்துக்குவோம் மாப்ள” – குரலில் சின்ன வற்புறுத்தல் தெரிந்தது.
“எனக்கு பொழப்பு அங்கதான் மாமா. வீட்டோட தோப்பு தொறவு குளமெல்லாம் இருக்கு. எல்லாத்தையும் அங்க போட்டுட்டு நா இங்க வந்து என்ன பண்றது?”
“அதனால என்ன மாப்ள? நா இங்கேருந்துதானே பண்ணைக்கு போயிட்டு வாரேன். நீங்களும் அதே மாதிரி பண்ணலாமே!” – என்னதான் அவர் நாவில் தேனை தடவிக் கொண்டு இனிக்க பேசினாலும் அவனுக்கு உள்ளே சுருக்கென்று குத்தத்தான் செய்தது. இப்படியெல்லாம் வருமென்று எதையும் யோசிக்காமல் அவசரப்பட்டுவிட்டோமோ என்று கலங்கினான்.
“உங்க பொண்ணுக்கு தேவையான வசதியை என்வீட்ல செஞ்சு கொடுக்க முயற்சி பண்றேன் மாமா. மத்தபடி தனிக்குடித்தனம்.. டவுன்ல வீடு பார்க்கறது இதெல்லாம் நடைமுறைக்கு ஒத்துவராது” என்றான் காரராக.
அதற்குமேல் அங்கப்பன் ஒன்றும் சொல்லவில்லை. ஆமோதிப்பாக தலையை மட்டும் அசைத்துவிட்டு சமையலறை பக்கம் திரும்பியவர், இதைப் பற்றி மருமகனிடம் பேச சொன்ன மனைவியை பார்த்து உதட்டை பிதுக்கினார்.
Comments are closed here.