Share Us On
[Sassy_Social_Share]கனியமுதே! – 4
1682
0
அத்தியாயம் – 4
விருந்தை முடித்துக் கொண்டு மணமக்களோடு வீடு வந்து சேர்ந்திருந்தது மலையமானின் குடும்பம். வந்ததிலிருந்து வாசலில் குடும்பத்தோடு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். விருந்துக்கு யார் யாரெல்லாம் வந்திருந்தார்கள்.. என்னென்ன பேசிக் கொண்டார்கள்.. என்றெல்லாம் ஏதேதோ.. கனிமொழிக்கு அவர்களோடு ஒட்ட முடியவில்லை. விலகி வீட்டுக்குள் வந்தாள். அவளுடைய கனமான பெட்டிகள் இரண்டும் கூடத்தில் சுவற்றோரமாக நின்று அவளை வரவேற்றது. அவைகளை காரிலிருந்து இறக்கி கைக்கு ஒரு பெட்டியாக அவன்தான் தூக்கிக் கொண்டு உள்ளே வந்தான்.
‘ஏன் இங்கே வைத்து விட்டு போய்விட்டான்!’ – ஒரு கணம் அப்படி யோசித்தவள் மறுகணமே மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டாள்.
ஒரு திண்ணை, கூடம், சமையலறை… அவ்வளவுதான் அந்த வீடு. சமையலறை பெயருக்குத்தான். சமைப்பதெல்லாம் பின்புறம் போடப்பட்டிருக்கும் கொட்டகையில் தான் என்பது அவள் பின்னர் தெரிந்துக் கொண்ட விஷயம். இதில் அவளுடைய பெட்டிக்கு இந்த சுற்றோரத்தை விட வேறு சிறந்த இடம் என்ன கிடைக்கும்! – உள்ளம் குமுற, மூலையில் வைக்கப்பட்டிருந்த பாயை எடுத்து விரித்துப் போட்டு அமர்ந்தாள். மாலை சூரியன் உடைந்த ஓட்டில் ஊடுருவி அவள் அமர்ந்திருந்த பாயில் வட்டமாக விழுந்தான். அதன் அழகை அவளால் ரசிக்க முடியவில்லை.
‘இதுதான் உங்கள் மகளை நீங்கள் வாழ வைக்கும் வீடா!’ என்று பெற்றோரின் மீது ஆத்திரம் பொங்கியது. வெகுநேரம் அப்படி வெந்து கொண்டே அமர்ந்திருந்தவள் மனதை திசைதிருப்ப கையிலிருக்கும் போனில் கவனத்தை செலுத்த முயன்றாள்.
ஒரு குட்டி உருவம் கதவுக்கு பின்னாலிருந்து அவளை எட்டிப்பார்த்தது. கீழே குனிந்து போனை பார்த்துக் கொண்டிருந்தாலும் அவளால் அதை உணர முடிந்தது.
‘யார் பார்த்தால் எனக்கென்ன?’ என்று எரிச்சலாக உணர்ந்த கனிமொழி நிமிர்ந்து பார்க்கவே இல்லை. வெகுநேரமாகியும் அந்த உருவம் அங்கிருந்து நகரவே இல்லை. அவளுக்குள் சின்ன ஆர்வம் துளிர்க்க மெல்ல தலையை உயர்த்திப் பார்த்தாள். குண்டு கன்னங்களும் மையிட்ட பளிங்கு விழிகளுமாக இருந்த அந்த சிறுமி வெடுக்கென்று தலையை உள்ளே இழுத்துக் கொண்டாள்.
கனிமொழியின் ஆர்வம் அதிகமானது. போனை கீழே வைத்துவிட்டு பார்வையை கதவு பக்கமே பதித்திருந்தாள். மீண்டும் அந்த சிறுமி எட்டிப் பார்த்த போது, “வா” என்று தலையசைத்தாள். சின்ன தயக்கத்தோடு அவளிடம் நெருங்கினாள் அவள். கலையான முகம்… அழகான சிரிப்பு… ஐந்து வயதிருக்கும் அவளுக்கு. தாமரையின் மகள். திருமணமாகி ஐந்தாறு வருடம் கழித்து பிறந்தவளாம். சொல்லிக் கொண்டார்கள்.
“உன் பேரென்ன?”
“அம்முக்குட்டி”
“அம்முக்குட்டியா! ஸ்கூல் போறியா?”
“ம்ம்ம்”
“ஸ்கூல்ல பேர் என்ன?”
“அபி”
“வா… இப்படி உட்காரு” – தன் பக்கத்தில் அமர்த்திக் கொண்டாள்.
“எதுக்கு என்னை அப்படி பார்த்த?”
“நீங்க புது மாமி” – சிறு வெட்கத்துடன் கூறினாள்.
அவள் அந்த உறவுமுறையை சொன்னதில் சட்டென்று அவளுக்குள் ஒரு இறுக்கம் உண்டானது. மௌனமாகிவிட்டாள். அதை உணராத சிறுமி, “நீங்க ஏன் இவ்வளவு வளவி போட்டுருக்கீங்க?” என்றாள் கண்களில் ஆர்வம் மின்ன.
கசந்த புன்னகையுடன், “தெரியல” என்றாள் கனிமொழி.
“எனக்கு ஒரு வளவிதான் இருக்கு” – தன் வளையலை தொட்டுப் பார்த்தபடி சோகமாக அவள் சொன்ன விதத்தில் கனிமொழியின் முகத்தில் மீண்டும் புன்னகை வந்தது.
“நிறைய வளையல் வேணுமா உனக்கு?” என்றாள்.
“ஆமான்னு சொல்லுடி அம்முக்குட்டி… இனி மாமிதான் உனக்கு எல்லாம் செய்யணும்” – போகிற போக்கில் கிண்டலாக சொல்லிக் கொண்டே சமையலறை பக்கம் போனாள் தாமரை.
அவள் கிண்டலாகத்தான் சொன்னாளா அல்லது தன்னை பணம் காய்க்கும் மரமாக நினைக்கிறாளா என்கிற சந்தேகம் அவளுக்குள் எழுந்தது. அந்த வீட்டிலிருந்த ஏழ்மை நிலையும் அவள் பிறந்தகத்தில் இருக்கும் செல்வ செழிப்பும் அவளை அப்படி எண்ண வைத்தது. அதன் பிறகு அந்த சிறுமியிடம் கூட அவளால் இயல்பாக பேச முடியவில்லை.
கையில் தண்ணீர் செம்புடன் சமையலறையிலிருந்து மீண்டும் வாசல் பக்கம் சென்ற தாமரை, கூடத்தில் கனிமொழியிடம் நின்று, “எதுக்கு இங்க தனியா உட்கார்ந்திருக்க? அப்படி வெளியே வந்து உட்காரேன், காத்தோட்டமா இருக்கு” என்றாள்.
போனில் பதித்த பார்வையை விலக்காமல், “வேண்டாம்” என்றாள் கனிமொழி. அவள் முகத்தையே ஆர்வத்தோடு பார்த்துக் கொண்டிருந்த அபியையும் அவள் கண்டுகொள்ளவில்லை.
தாமரையின் முகம் சுருங்கிவிட்டது. தன்னை தான் நிமிர்ந்து பார்க்கவில்லை.. தன் மக்களிடம் கூட ஒதுக்கம் காட்டுகிறாளே என்று ஆற்றாமைப்பட்டவள், “அம்முக்குட்டி, வாடா அம்மா உனக்கு பால் ஆத்தி தாரேன்” என்று அழைத்தாள்.
“நா இங்கேயே இருக்கேம்மா… புது மாமி கூட” – கள்ளமில்லாமல் அவளோடு ஒட்டிக்கொள்ள முயன்றாள் அந்த சிறுமி. அப்போதும் கனிமொழி அந்த குழந்தையை ஏறிட்டு பார்க்கவில்லை. அதை தாங்க முடியாத தாமரை, “அப்புறம் வரலாம்… நீ வா” என்று குழந்தையை கிட்டத்தட்ட இழுத்துக் கொண்டு வெளியே வந்தாள்.
**********************
என்னதான் குடும்பத்தோடு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தாலும் ‘அவள் தனியாக இருக்கிறாளே!’ என்று மலையமானின் மனம் அவளையேதான் சுற்றிக் கொண்டிருந்தது.
‘அம்மாவுக்குத்தான் வயசாகி மூளை மழுங்கிவிட்டது. இந்த அக்காவுக்கு என்ன வந்தது? புதிதாக வீட்டுக்கு வந்திருக்கும் பெண்ணுக்கு என்ன வேண்டும் ஏது வேண்டும் என்று பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறதா!’ என்று மனதிற்குள் தவித்துக் கொண்டிருந்தான். அவர்களிடம் நேரடியாகவும் சொல்ல முடியவில்லை. அவர்களுக்கு தானாகவும் தெரியவில்லை.
வேலை இருப்பது போல் எழுந்து வைக்கோல் போருக்கும் கொட்டகைக்கும் ஒரு நடை நடந்துவிட்டு வந்தான். அப்படியாவது அவர்கள் மீட்டிங்கை கலைத்துவிட்டு வீட்டுக்குள் செல்வார்கள் அவளை பார்ப்பார்கள் என்று அவன் போட்ட கணக்கு வீணாகிப் போனது. அவனைத் தவிர மற்ற மூவரும் ஊர் கதை பேசிக் கொண்டு அமர்ந்த இடத்திலேயேதான் அமர்ந்திருந்தார்கள். பொறுத்தது போதும் என்று பொங்கி எழுந்தவன், “அக்கா, உள்ள போயி குடிக்க ஒரு செம்பு தண்ணி கொண்டு வா” என்றான்.
அவளும், “சித்த உட்கார்ந்து பேச விடறானா!” என்று புலம்பிக் கொண்டே எழுந்துச் சென்றாள். உள்ளே போனவள் கனிமொழியை அழைத்துக் கொண்டு வருவாள் என்று பார்த்தால், தரதரவென்று அபியை பிடித்து இழுத்துக் கொண்டு வந்தாள்.
‘துணைக்கு இருந்த ஒரு சின்ன பிள்ளையையும் இப்படி பிடிச்சு இழுத்துக்கிட்டு வருதே இந்த அக்கா’ என்று பதறியவன், “எதுக்குக்கா பிள்ளையை இப்படி பிடிச்சு இழுத்துகிட்டு வர்ற?” என்று தமக்கையிடம் விரைந்தான்.
“அவ என்னடா இவ்வளவு ராங்கி பிடிச்சவளா இருக்கா? பச்ச புள்ளைகிட்ட கூட மூஞ்சியை திருப்புறா” என்றாள் கோபத்துடன்.
மலையமானின் முகம் வாடிவிட்டது. “ஏன் க்கா? என்ன ஆச்சு?” என்றான். நடந்ததை கொஞ்சம் கூட்டி குறைத்து சொன்னாள் தாமரை.
அவளுக்கு இந்த திருமணம் பிடிக்கவில்லை என்று தெரியும். ஆனால் குழந்தையிடம் கூட வெறுப்பைக் காட்டும் அளவுக்கா என்று அவனுக்கு மனம் சோர்ந்து போனது.
“சரி விடுக்கா… நம்ம வீட்டை பத்தி அவளுக்கு எதுவும் தெரியாது. அதான் இப்படி பண்றா. நீ எதையும் மனசுல வச்சுக்காத. நா குளத்துப்பக்கம் போயி மீனுக்கு தீனி வச்சுட்டு வர்றேன்” என்று வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பிவிட்டான். இருட்டும் வரை வீடு திரும்பவில்லை.
*****************
கனத்த மனதுடன் வீட்டிலிருந்து கிளம்பிய மலையமான் குளத்திற்கு வந்து மீனுக்கு தீனி வைத்துவிட்டு அங்கிருந்து வயலுக்கு சென்று போர் கொட்டகையில் படுத்துவிட்டான். மனம் சஞ்சலத்தில் ஆழ்ந்திருந்தது. ‘தப்பு பண்ணிவிட்டோமோ.. இது சரி வராதோ!’ என்கிற யோசனையை அவனால் தவிர்க்கவே முடியவில்லை.
“என்னடா புது மாப்ள! பொண்டாட்டியை வீட்ல விட்டுட்டு இங்க வந்து தனியா படுத்திருக்க?” – பரிகாசத்தோடு வந்து சேர்ந்தார் நாராயணன். அவர் குரலைக் கேட்டதும் எழுந்து அமர்ந்தவன், “நீ என்னைய ஒரு வழி பண்ணாம விட போறது இல்ல” என்றான்.
“நா என்னடா பண்ணினேன்?” – மடித்துக் கட்டியிருந்த லுங்கியை இறக்கிவிட்டபடி அவனுக்கு அருகில் வந்து அமர்ந்தார்.
“அவளுக்கு இங்கல்லாம் சரிப்பட்டு வராது போலருக்கு. ரொம்ப காண்டுல இருக்கா. அம்முகுட்டி கிட்ட கூட சரியா பேசலையாமே!”
“அட யாருடா இவன்! அம்மு குட்டிகிட்ட பேசல.. ஆட்டு குட்டிகிட்ட பேசலன்னு. நீ போயி அந்த புள்ளைகிட்ட முதல்ல பேசுடா. நீ பேசி கரெக்ட் பண்ணினா தானே அப்புறம் நாங்கல்லாம் மிங்கில் ஆக முடியும்”
“கரெக்ட் பண்றது… மிங்கில் ஆகுறதா! மாமா, அவ நம்ம வீட்டு மருமக”
“அதுக்கு முன்னாடி உன் பொண்டாட்டி மாப்ள…”
“நீயும் இதை சொல்லிகிட்டே தான் இருக்க.. ஆனா அங்க ஒரு பருப்பும் வேகற மாதிரி தெரியல”
“டென்சன் ஆகாதடா மாப்ள. அந்த புள்ள கொஞ்சம் அப்படி இப்படி நடந்துக்கிட்டாலும் நீ பொறுத்து போ. தானா போயி அதுகிட்ட பேசி பழகு.. அடி மேல அடி குடுத்தா அம்மியும் நகரும்டா”
மலையமான் அவரை ஏற இறங்க பார்த்தான். “என்னடா அப்படி பார்க்கற?”
“அவளுக்கிட்ட என்னைய கோர்த்துவிட்டுட்டு எப்படிய்யா இப்படி மனசாட்சியே இல்லாம அம்மி நகரும், ஆட்டுக்கல்லு நகரும்னு டயலாக் விடுற?”
“என்ன! டயலாகா!”
“உன் வாய பத்தி தெரிஞ்சும் உன் பேச்சை நம்புனேன் பாரு… எப்படி எப்படி? அவ.. என்னைய கட்டிக்க.. ஓகே சொல்லிட்டா! ம்ம்ம்?”
“ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்தை பண்ணுன்னு அந்த காலத்துல சொல்லி வச்சிருக்காங்கடா.. என்னைய என்ன பண்ண சொல்ற?”
“அக்கா புருஷனாச்சேனு பார்க்குறேன்.. போயிரு”
“நா இன்னைக்கு இங்க தான் படுக்க போறேன். நீ வேணுன்னா போ” – அவனை எப்படியாவது வீட்டுக்கு அனுப்பிவிட வேண்டும் என்கிற குறிக்கோள் அவருக்கு. அவரோடு வழக்கடிக்க முடியாமல் அவனும் அங்கிருந்து கிளம்பினான்.
அவன் வீடு வந்து சேர்ந்த போது நன்றாகாவே இருட்டிவிட்டது. வண்டியை நிறுத்துவதற்கு வீட்டுக்கு பக்கவாட்டில் உள்ள கொட்டகைக்கு வந்த போதுதான் கொல்லைப்புறத்தில் கனிமொழியை கண்டான்.
******************
இரவு உணவுக்கு பலகாரம் செய்திருப்பதாக சொல்லி அவளை அழைத்தாள் தாமரை. கொல்லைப்புறத்தில் சமையலுக்காக போடப்பட்டிருந்த கொட்டகை சற்று விசாலமாக, அங்கேயே அமர்ந்து உணவு உண்ணும் அளவுக்கு இருந்தது. குழந்தை அபி ஒரு பக்கம் வெங்காயம் கத்திரிக்காயை உருட்டி விளையாடிக் கொண்டிருக்க, அடுப்பில் அலமேலு அமர்ந்திருந்தார்.
“எங்க மலையனை இன்னும் காணும்!” என்றபடி தடுக்கை எடுத்து போட்டு தட்டை வைத்தாள் தாமரை.
கனிமொழிக்கு உணவுக்கு முன் வேறு ஒரு வேலை செய்ய வேண்டியிருந்தது. தாமரையின் முகத்தை தயக்கத்துடன் நோக்கினாள்.
“என்ன கனி?” – சற்று முன் அவள் நடந்துகொண்டதை மனதில் வைத்துக்கொள்ளாமல் தன்மையாகவே கேட்டாள் தாமரை.
“பாத்ரூம் எங்க இருக்கு?”
“வா, நா கூட்டிட்டு போறேன்” என்று அவளை கொல்லைப்புறத்திற்கு அழைத்துச் சென்றாள். வெளியே ஒரே கும் இருட்டு. அவள் தயங்கி நிற்கும் போதே, “அதோ அங்க இருக்கு பாரு. நா இங்கேயே நிக்கிறேன். நீ போய்ட்டு வா” என்றாள் தாமரை.
‘இந்த இருட்டுக்குள்ள எப்படி போறது!’ – “லைட் இல்லையா?”
“நிலவுதான் எரிக்குதே! என்னாத்துக்கு லைட்டு. நீ போயிட்டு வா.. நா இங்கேயே நிக்கிறேன். ஒன்னும் பயம் இல்ல” என்று உந்தினாள்.
‘கடவுளே!’ என்று அலுத்துக் கொண்டபடி “டார்ச்சாவது இருக்கா?” என்றாள்.
“டார்ச்சா!” என்று இழுத்தவள், “விளக்கு வேணுன்னா ஏத்திக்கிட்டு வரவா?” என்றாள்.
கனிமொழியின் பற்கள் நறநறத்தன. ‘ஒரு டார்ச்சுக்கு கூடவா இந்த வீட்ல பஞ்சம்’ என்று எண்ணியவளின் கோபம் தன் தந்தையின் மீதுதான் திரும்பியது. அவரை திட்டித் தீர்த்துக் கொண்டே உள்ளே சென்று தன்னுடைய கைபேசியை எடுத்துக் கொண்டு வந்து அதில் டார்ச்சை இயக்கி பாத்ரூமை நோக்கி நடந்தாள். குண்டும் குழியுமான தரை. தாவி செல்லும் தவளை, ரிங்காரமிடும் பூச்சிகள்.. பயந்துகொண்டே சென்றாள்.
கழிவறையோ.. குளியலறையோ, வெகு சுத்தமாக இருக்க வேண்டும் அவளுக்கு. ஆனால் அவள் வந்து நின்ற இடம்! செல்போனை உயர்த்திப் பிடித்து சுத்தமாக இருக்கிறதா என்று பார்த்தாள். கிணற்றங்கரையை ஒட்டியே குளியலறையும் கழிவறையும் தனித்தனியாக இருந்தது.
கொட்டகையில் நின்று அவளுடைய செய்கைகளை பார்த்துக் கொண்டிருந்த மலையமானுக்கு அன்று காலை அவளுடைய வீட்டில் தான் பயன்படுத்திய குளியலறை நினைவிற்கு வந்தது. அங்கே பொருத்தப்பட்டிருந்த நவீன பைப்பை திறப்பதற்குள் அவன் படாத பாடுபட்டான். இங்கே இவள் இந்த கிணற்றங்கரையில் கால் வைப்பதற்கே சங்கடப்படுகிறாள். இருவருக்கும் எப்படி ஒத்து வரப் போகிறதோ என்று கலங்கினான்.
“என்ன பார்க்கற? உள்ள தொட்டி இருக்கு. தண்ணி தூக்கி ஊத்தியிருக்கேன். போயிட்டு வா” என்றாள் தாமரை தூரத்திலிருந்து.
அவளுக்கு அழுகை வரும் போல் இருந்தது. உள்ளே போகவே என்னவோ போல் இருந்தது. பல்லை கடித்துக் கொண்டு உள்ளே சென்றவள், வெளியே வந்து கிணற்றில் தண்ணீர் இறைத்து கையையும் காலையும் மாற்றி மாற்றி கழுவினாள். குளித்துவிட்டால் கூட பரவாயில்லை என்று தோன்றியது. ஆனால் அதற்கும் தொட்டியில் இருக்கும் தண்ணீரைத்தான் பயன்படுத்த வேண்டும் என்பதால் மௌனமாக கை காலை மட்டும் கழுவிக் கொண்டு வீட்டை நோக்கி நடந்தாள்.
உடை பாதி நனைந்துவிட்டது. ஈரத்தை துடைத்துவிட்டு உடை மாற்றிக்கொள்ளலாம் என்று கூடத்திற்கு சென்றாள். அங்கே மலையமான் கொசுவலை கட்டிக் கொண்டிருந்தான். அவனைப் பார்த்ததும் இவள் தயங்கி நிற்க, “படுக்கற நேரத்துல கட்ட முடியாது. இப்பவே கட்டி வச்சாத்தான் கொசு உள்ள போகாது” என்றான் விளக்கம் கொடுப்பவன் போல்.
‘உன்கிட்ட கேட்டேனா?’ என்பது போல் தலையை சிலுப்பிக் கொண்டு, தன் பெட்டியை திறந்து துண்டையும் மாற்றுடையையும் எடுத்துக் கொண்டு சமையலறைக்கு வந்தவள், கொல்லைப்புற கதவையும் சமையலறை கதவையும் மூடி தாழிட்டு அதை உடை மாற்றும் அறையாக மாற்றினாள்.
அவள் உடை மாற்றிக் கொண்டு வெளியே வந்த போது, அலமேலுவும் தாமரையும் அவளை வியப்புடன் பார்த்துவிட்டு பிறகு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். வேறொன்றும் இல்லை. அவள் நைட் பேண்ட் அணிந்திருந்தாள்.
மனதிலிருக்கும் எதையும் காட்டிக் கொள்ளாமல் “வா உட்காரு” என்று அலமேலு அவளுக்கு தடுக்கை காட்ட, “மலையா, நீயும் வந்து சாப்பிடு வா…” என்று வெளிப்புறம் நோக்கி குரல் கொடுத்தாள் தாமரை.
மீண்டும் இருவரும் அருகருகே அமர்ந்து சாப்பிடும் சூழ்நிலை உண்டானது. தட்டில் வைக்கப்பட்ட பதார்த்தத்தை பார்த்ததும் , ‘ஏதோ பலகாரம் என்றார்களே!’ என்கிற வியப்புடன் அவள் புருவம் உயர்ந்தது. காரணம், கட்டியும் முட்டியுமாக பரிமாறப்பட்ட உப்புமா.
அக்காள் மகளை மடியில் தூக்கிவைத்து உணவு ஊட்டிவிட்டபடியே தானும் உண்டு முடித்து எழுந்துவிட்டான் மலையமான். அவளுக்கு தான் இறங்கவே இல்லை. “ஏதோ எனக்கு தெரிஞ்ச மாதிரி கிண்டினேன். உனக்கு புடிக்கல போலருக்கே!” என்றார் அலமேலு சின்ன வருத்தத்துடன்.
அவரிடம் எந்த தாட்சண்யமும் இல்லாமல், “எனக்கு உப்புமாவே பிடிக்காது” என்றாள் கனிமொழி. தாமரையின் முகம் இறுகியது. ‘என்ன எதுக்கெடுத்தாலும் இப்படி துடுக்காவே பேசுறா!’ என்று எண்ணிக் கொண்டாள்.
அலமேலுவுக்கும் என்னவோ போல் ஆகிவிட்டது. “பிடிக்கலைன்னா வச்சுடு கண்ணு.. சூடா பால் காச்சி தாரேன் குடி” – மருமகளை நோகாமல் பேசினார். அதையும் வேண்டாம் என்று மறுத்துவிட்டு எழுந்துகொண்டாள் கனிமொழி.
வெளியே சென்றிருந்த நாராயணன் வந்து உணவுண்ட பிறகு மகளை தூக்கிக் கொண்டு கணவனோடு தாமரை தங்கள் வீட்டுக்கு கிளம்ப, அவர்களோடு அலமேலுவும் கிளம்பினார். புது மணமக்களுக்கு தனிமை கொடுப்பதற்காக அவர்கள் முன்கூட்டியே செய்த ஏற்பாடு அது.
****************
வீடு ஓவென்று இருந்தது. அலைபேசியில் தலையை கொடுத்திருந்த கனிமொழியின் மனம் பதட்டத்தில் படபடத்தது. நேற்று இரவும் அவனோடு தனிமையில் தான் இருந்தாள். ஆனால் அது அவளுடைய வீடு. அங்கே இருந்த துணிச்சல் இப்போது இல்லை.
பக்கத்தில் வருவானோ! அத்து மீறுவானோ! என்று ஏதேதோ யோசனைகள். காட்டுமிராண்டி பயல்.. பாய்ந்தாலும் பாய்ந்து விடுவான் என்று பயமாகவும் இருந்தது. அப்படி மட்டும் ஏதாவது செய்யட்டும்.. கடித்து குதறிவிடுகிறேன் என்று கோபத்தோடும் எண்ணிக் கொண்டாள்.
எண்ணமெல்லாம் அவளுக்குத்தான்.. அவன் அவள் பக்கத்தில் வரவே இல்லை. அதற்காக அவனை உலக மகா உத்தமன் என்றெல்லாம் எண்ணிவிட முடியாது. திண்ணை கட்டையில் அமர்ந்து அவளை கள்ளப்பார்வை பார்க்கத்தான் செய்தான். பக்கத்தில் வர பயம்.. அவ்வளவு தான்.
எவ்வளவு நேரம் அப்படி தூரத்தில் இருந்தே பார்த்துக் கொண்டிருக்க முடியும்? அவள் அவனுடைய மனைவி தானே! அழகாக வேறு இருக்கிறாள்.. மிகவும் அழகாக.. தொண்டையை கணைத்துக் கொண்டு எழுந்து உள்ளே வந்தான்.
கனிமொழி வெடுக்கென்று நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்த்தாள். அங்கே எதிர்பார்ப்பு இருந்தது. நறநறவென்று பல்கலைக் கடித்தவள், “எனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்ல, தெரியும்ல?” என்றாள் கடுப்புடன்.
அவனோ, “தெரியாதே” என்று இலகுவாக தோளை குலுக்கினான். கனிமொழியின் விழிகள் விரிந்தன. ‘இவன் என்ன இப்படி பேசுகிறான்!’ என்று எண்ணினாள். அவனுடைய அந்த அணுகுமுறை அவளுக்கு புதிதாக இருந்தது.
“உனக்கு என்னை பிடிச்சிருக்குன்னு சொல்லித்தான் இந்த கல்யாணத்துக்கு என்னை சம்மதிக்க வச்சாங்க. இல்லைன்னா நா எதுக்கு உன் கழுத்துல தாலி கட்ட போறேன்?” என்றான்.
அவன் சொன்ன விஷயம் அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் அதை ஒதுக்கிவிட்டு அலட்சியமாக, ‘ஆஹா! பெரிய தாலி! அப்படியே பத்து பவுன்ல கொண்டு வந்து மாட்டிட்டான். பேச்சை பாரு’ என்று முணுமுணுத்தாள்.
“அவசர கல்யாணம். பத்து பைசாவுக்கு வாங்கியிருந்தாலும், கல்யாணத்தன்னைக்கு நீ கட்டியிருந்த புடவையும், இப்போ உன் கழுத்துல கிடக்குற மஞ்சள் கயிறும் என் சொந்த காசுல வாங்கினது. நா எவன்கிட்டயும் கையேந்தல” என்றான் நிமிர்வாக. கனிமொழி அவனை வெறித்துப் பார்த்தாள். அவளுடைய பார்வையை தயங்காமல் எதிர்கொண்டவன்,
“கொசு கடிக்குது. கொசுவலைக்குள்ள போயி படு. நா இந்த பக்கம் படுத்துக்கறேன். ஏதாவது வேணுன்னா எழுப்பு” என்றான் சாதாரணமாக. அவனிடம் கோபம் ஏமாற்றம் எதையும் காணமுடியவில்லை அவளால். சற்று நேரத்திற்கு முன் எதிர்பார்ப்பு நிறைந்த கண்களோடு அவளை பார்த்தவன் அவன்தானா என்றிருந்தது அவளுக்கு. குழப்பத்துடன் கொசுவலைக்குள் நுழைந்து கண்மூடி படுத்துக் கொண்டாள்.
Comments are closed here.