Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

கனியமுதே! – 6

அத்தியாயம் – 6
கையிலிருந்த சொற்ப காசை வைத்து சிமெண்டும் மணலும் வாங்கிப் போட்டு கொத்தனாரை வர சொல்லி வேலையை ஆரம்பித்துவிட்டு, பணத்து நாயாய் பேயாய் அலைந்தான் மலையமான். இதுவரை அவன் சம்பாதித்த பணத்தில் முக்கால்வாசி அக்காவின் குடும்பத்திற்கே கொடுத்துவிட்டான். மீதி பணம் கொஞ்சம் வெளியில் இருந்தது. அதில் சிறிதளவாவது வசூல் செய்துவிடலாம் என்று அலைந்து பார்த்துவிட்டு எதுவும் நடக்காமல், பால் டிப்போவில் வந்து முன்பணம் கேட்டான்.

அவன் நாணயமானவன் என்று தெரிந்தும், டிப்போவில் முன்பணம் கொடுக்கும் வழக்கம் இல்லாததால் மறுத்துவிட்டார்கள். அவனிடம் மீனை மொத்தமாக வாங்கும் வியாபாரியிடமும் கேட்டு பார்த்தான். அவரிடமும் கையிருப்பு இல்லாமல் போய்விட்டது அவனுடைய துரதிஷ்டம். வேறு வழியில்லாமல் ஒரு லோக்கல் ஃபைனான்சியரை பார்த்து வட்டிக்கு வாங்கினான்.

மனதிற்கு மிகவும் உறுத்தலாக இருந்தது. இதுதான் அவன் வாழ்க்கையிலேயே வாங்கும் முதல் வட்டி கடன். இதுவே கடைசியாகவும் இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டான். மனைவி என்று வீட்டுக்கு ஒருத்தி வந்துவிட்டாள். அவளுடைய அடிப்படை தேவைகளைக் கூட பூர்த்தி செய்யவில்லை என்றால் அவன் என்ன ஆண்மகன்! – மனதிலிருந்த சஞ்சலத்தை தூக்கி தூர எறிந்துவிட்டு வேகமாக வீட்டுக்கு கிளம்பினான்.

அவளுக்கு கால் வலி எப்படி இருக்கிறதோ என்கிற கவலை ஒரு பக்கம் நெஞ்சுக்குள் முணுமுணுவென்றது. வீக்கம் குறையவில்லை என்றல் மருத்துவமனைக்காவது அழைத்துச் செல்ல வேண்டும் என்று எண்ணியபடி வண்டியின் வேகத்தை கூட்டினான்.
மலையமான் வீட்டுக்கு வந்த போது வாசலில் ஒரு கார் நின்றது. அவன் வண்டியை மர நிழலில் நிறுத்திவிட்டு வருவதற்குள் வீட்டுக்குள் பேசிக் கொண்டிருந்த பெண்களில் ஒரு குரல் மட்டும் வாசல் வரை கேட்டது. கனிமொழியின் தாய் குரல்… அவனுடைய மாமியாரின் குரல்…


“பொண்ணுக்கு இப்படி அடிபட்டிருக்கு. ஒரு போன் பண்ணி சொல்ல மாட்டிங்களா? நாங்களா இப்ப வந்ததுனால தெரிஞ்சுது. இல்லலைன்னா மறச்சிருப்பீங்க அப்படித்தானே? சரி அடிபட்டதுதான் பட்டுச்சு, ஹாஸ்ப்பிட்டலுக்காவது கூட்டிட்டு போகக் கூடாதா?” என்று அவள் கடுமையாக பேச, “ம்மா… சத்தம் போடாத ம்மா..” என்று கீர்த்தி தாயை அடக்கினாள்.

“உங்க பொண்ணு தானாதான் போயி விழுந்துடிச்சு. நாங்க யாரும் பிடிச்சு தள்ளிவிடலை. இந்த மாதிரி சின்ன காயத்துக்கெல்லாம் ஆசுபத்திரிக்கு தூக்கணும்னா நாங்கல்லாம் ஆசுபத்திரியிலேயே தான் குடியிருக்கணும். இது கிராமம்.. வய வரப்பு, தோப்பு தொரவுன்னு இருக்கற இடம். மூளும் தான் குத்தும், கல்லும் தான் இடறும்.. அதுக்கெல்லாம் பார்த்தா முடியுமா?” என்று அலமேலுவும் சரிக்கு சரி மடையடைக்க அவர்களுக்குள் சின்ன வாக்குவாதம் உண்டானது.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த கனிமொழி தாயிடம் சீறினாள். “நீங்க எல்லாரும் தான் என்னைய மொத்தமா பொதக்குழியில தள்ளிவிட்டுட்டிங்களே! அப்புறம் நா கீழ விழுந்தா என்ன மேல விழுந்தா உனக்கு என்ன? பேசாம வந்த வேலையை பார்த்துகிட்டு கிளம்பு முதல்ல” என்றாள் ஆத்திரத்துடன்.

அந்த வார்த்தை மணிமேகலையை தாக்கியதோ இல்லையோ, வெளியே நின்றுக் கொண்டிருந்த மலையமானை வெகுவாக தாக்கியது.

வீட்டுக்குள் செல்ல இருந்தவன் அப்படியே திரும்பிவிட்டான். என்னதான் அவன் அவளுக்கு இணையானவன் இல்லை என்றாலும் அதை அவளுடைய வார்த்தைகளில் கேட்கும் போது பலமாக காயப்பட்டுப்போனான். நிராகரிப்பை சகிப்பதென்பது சாதாரண காரியமல்ல. அதற்கு பக்குவம் தேவை. அவன் தன்னை பக்குவப் படுத்திக்கொள்ள வெகுவாக முயன்றான். ஆனால் பக்குவம் என்பது என்ன இன்ஸ்டெண்ட் காஃபியா, உடனே போட்டுக்கொள்வதற்கு? முயற்சிதானே செய்ய முடியும்! அவனும் அதைத்தான் செய்தான். இந்த மனநிலையில் உள்ளே இருப்பவர்களை நேருக்கு நேர் சந்தித்தால் முகத்தை காட்டிவிடுவோம் என்று எண்ணி ஒதுங்கிப் போனான். அதுவே சூழ்நிலையை மேலும் மோசமாக்காமல் காத்தது.

கனிமொழியை பார்க்க மணிமேகலையும் கீர்த்தியும் தான் வந்திருந்தார்கள். வந்த இடத்தில் மகளுடைய காயங்களை பார்த்ததும், ஒரு தாயாக அவள் கொதித்துவிட்டாள்.

தாயின் கொதிப்பு கனிமொழிக்கு எந்த விதத்திலும் ஆறுதல் அளிக்கவில்லை. அவளுடைய கனவுகளை ஒட்டுமொத்தமாக அழித்து அவள் மனதை ரணமாக்கிவிட்டு இந்த சின்ன காயத்திற்கு போய் இப்படி பதறுவது அவளுக்கு கோபத்தைத்தான் கிளறிவிட்டது. துடுக்காக பேசி தாயின் வாயை அடைத்தவள், அந்த வார்த்தை மற்றவர்களையும் காயப்படுத்தும் என்பதை யோசிக்கவில்லை. ஆம், அவளுடைய வார்த்தைகளில் காயப்பட்டுப் போனது மலையமான் மட்டும் அல்ல, அலமேலுவும் தான்.

மருமகளின் சுடுசொல்லில் அதிர்ந்து போன அலமேலு அவளை வெறித்துப் பார்த்தார். பிறகு எதுவும் சொல்லாமல் எழுந்து சமையலறைக்கு சென்றுவிட்டார்.

மணிமேகலை மகளை மருத்துவமனைக்கு கிளம்ப சொல்லி எவ்வளவோ பிடிவாதம் செய்தாள். அதட்டி.. கெஞ்சி.. சாந்தமாக பேசி.. ம்ஹும்… எதுவும் நடக்கவில்லை.

“கல்யாணம்ங்கற பேர்ல என்னைய வீட்டைவிட்டு தான் துரத்திட்டிங்கள்ல. இனி என்னைய நானே பார்த்துக்கறேன்” என்று முரட்டுப் பிடிவாதத்துடன் மறுத்துவிட்டாள் மகள். இப்படி ஒரு திருமணத்தை தனக்கு செய்துவைத்து விட்டார்களே என்று பெற்றோரின் மீது அவ்வளவு ஆத்திரம் அவளுக்கு.


வேறு வழியே இல்லாமல், தன் பணத்திமிரை தள்ளிவைத்துவிட்டு அலமேலுவிடம் இறங்கி சமாதானமாக பேசி மகளை கவனித்துக்கொள்ளும்படி கூறிவிட்டு, மூத்த மகளுடன் அங்கிருந்து கிளம்பினாள் மணிமேகலை.

*********************

மூன்று நாட்களாக நடந்த வேலை இன்று ஒருவழியாக முடிவிற்கு வந்துவிட்டது. வீட்டின் கொள்ளை வாசற்படியிலிருந்து கிணற்றங்கரை வரைக்கும் சிமென்டில் நடைபாதை போட்டாகிவிட்டது. கிணற்றங்கரை தரையெல்லாம் பெயர்த்துவிட்டு புதிதாக பூசி, குளியலறை கழிவரையெல்லாம் பழுதுபார்த்து பெயிண்ட் அடித்து, லைட் கனெக்ஷனும் கொடுத்து பிரமாதமாக தயார் செய்துவிட்டான். போதா குறைக்கு ஒழுகும் வீட்டை தற்காலிகமாக பாதுகாக்க, ஓட்டின் மீது தார்பாயை வாங்கி விரித்துவிட்டு அதையும் சரிக்கட்டினான்.

எல்லாமே அவனுக்கு திருப்தியாக இருந்தது. ‘இனி அவள் மண்ணில் கால் வைக்க வேண்டியதில்லை. இருட்டிற்கு பயப்பட வேண்டியதில்லை. வீடு ஒழுகுவதை எண்ணி கவலைப்பட வேண்டியதில்லை’ என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டவன், அதற்கான அங்கீகாரம் அவள் முகத்தில் சிறிதேனும் தெரிகிறதா என்று அடிக்கொரு முறை அவள் முகத்தை முகத்தைப் பார்த்தான். அவன் எதிர்பார்த்த மெச்சுதலோ மகிழ்ச்சியோ அவளிடம் இல்லவே இல்லை. மாறாக அவனை தலையில் தட்டும் அலட்சியம் தான் விரவியிருந்தது. பெருமூச்சை வெளியேற்றிவிட்டு இயல்பாக இருக்க முயன்றான் மலையமான்.

வழக்கம் போல அன்றும் இரவு உணவிற்கு பிறகு அலமேலு மூட்டையைக் கட்டிக் கொண்டு மகள் வீட்டிற்கு சென்றுவிட புதுமணத்தம்பதிகள் இருவரும் தனித்துவிடப்பட்டார்கள்.
மலையமானிடம் அவள் காட்டும் அலட்சியம் அவனை அவளிடமிருந்து தள்ளி நிறுத்தியது. அவள் இருக்கும் பக்கம் கூட திரும்பாதே என்று அவனுடைய தன்மானம் உருப்போட்டுக் கொண்டே இருந்தது. ஆனாலும் அவள் என் மனைவி என்கிற எண்ணமும் இந்த திருமணத்தை எப்படியாவது வெற்றி பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்கிற பிடிவாதமும் அவன் பார்வையை அவள் பக்கம் திருப்பியது.

“கால் வலி எப்படி இருக்கு?” – அவளிடம் நெருங்கி கேட்டான். அன்று அவளுடைய தாய் வந்துவிட்டு சென்ற பிறகு, வெகுநேரம் கழித்து கோபம் தணிந்த பிறகு மீண்டும் வீட்டுக்கு வந்து அவளை மருத்துவமனைக்கு அழைத்தான். அவள் ‘வேண்டாம்’ என்று ஒற்றை வார்த்தையில் அவன் மூக்கை உடைத்துவிட்டு போனில் புதைந்து கொண்டாள். ஓரிரு நொடிகள் அவளை வெறித்துப் பார்த்தவன் பிறகு, ஆலமரத்தடியில் சர்பத் கடை வைத்திருக்கும் மணியண்ணனிடம் ஐஸ்கட்டி வாங்கிவந்துக் கொடுத்து, “கால்ல வையி. வீக்கம் வடியும்” என்றான்.

மூன்று நாட்களாக அந்த வைத்தியம் தான் ஓடிக் கொண்டிருந்தது. இன்று சுத்தமாக வீக்கம் வடிந்து அவள் இயல்பாக நடப்பதை கவனித்திருந்தாலும் அவளிடம் ஏதாவது பேச வேண்டும் என்கிற ஆசையில் கேட்டான்.

தன் கால் வலியை காரணமாக பிடித்துக் கொண்டு தன்னிடம் வழிகிறானோ என்று அவன் முகத்தை ஆராய்ச்சி பார்வை பார்த்தாள் கனிமொழி.

ம்ஹும்… வழிச்சலென்ன.. இப்படி அடிபட்டுக் கொண்டாளே என்கிற கனிவு கூட இல்லை அந்த முகத்தில். ‘கேட்க வேண்டியது என் கடமை.. கேட்கிறேன்’ என்பது போலத்தான் இருந்தது அவன் முகபாவம். அது வெறும் பாவம் மட்டும்தான் என்பதை அறியாமல் பல்லை கடித்தாள் கனிமொழி.

அப்போது மட்டும் அல்ல.. கடந்த மூன்று நாட்களாகவே அவன் அவளை அப்படித்தான் பார்க்கிறான். அவன் என்னவோ பெரிய இவன் போலவும், இவள் அவனிடம் அடைக்கலமாகி இருப்பவள் போலவும் உணர வைக்கும் பார்வை. அவளுக்கு கடுப்பாக இருந்தது.

“வலிச்சா என்ன செய்ய போறீங்க? என்னோட வலியை நீங்க வாங்கிக்க போறிங்களா?” என்றாள் பட்டென்று.

அவன் புருவம் சுருங்கியது. “யாரு வலியையும் யாரும் வாங்கிக்க முடியாது. அவங்கவங்களுக்கு விதிச்சதை அவங்கவங்க தான் அனுபவிக்கனும். ஒருத்தருக்கொருத்தர் ஒத்தாசையா இருந்தா வண்டி கொஞ்சம் ஈஸியா ஓடும் அவ்வளவுதான்” என்றான் திருத்தமாக.

அவன் வார்த்தையில் இருந்த இருபொருள் அவளுக்கு நன்றாகவே விளங்கியது. அவளுடைய கால் வலியை பற்றி பேசுவது போல் அவர்களுடைய வாழ்க்கையைப் பற்றி பேசுகிறான்! அவள் கண்களில் நீர் கோர்த்தது. “என்னால இங்க இருக்க முடியல” என்றாள் தன்னை மீறி.

தன் பெற்றோரிடமும் கூட பிறந்தவளிடமும் கூட பிடிவாதத்துடன் சொல்லாமல் இருந்த ஒன்றை அவனிடம் மனம்விட்டு சொல்லிவிட்டாள். மலையமானின் உதடுகள் அழுந்த மூடின. சற்று நேரம் அவளை இமைக்காமல் பார்த்தவன், “என்னால இந்த கிராமத்தவிட்டு வர முடியாது. என் பொழப்பு இங்கதான்” என்றான்.

வெடுக்கென்று நிமிர்ந்தவள், “நா என்னை பத்தி பேசிகிட்டு இருக்கேன்” என்றாள் எரிச்சலுடன்.

“இனி அந்த பேச்சுக்கு அர்த்தம் இல்ல” – நிதானமாகக் கூறினான்.
அவன் கூற்றிலிருந்த உண்மையை கசப்புடன் உணர்ந்தவள் உடைந்து அழுதாள். கண்களில் கண்ணீர் கரகரவென்று வழிந்தது. மலையமான் திகைப்புடன் அவளை பார்த்தான். அவளுடைய கண்ணீருக்கான காரணம் தான் தான் என்று உணர்ந்தவன் உள்ளுக்குள் நொருங்கிப் போனான்.

திருமணமான நாளிலிருந்து அன்று வரை மனவேற்றுமைகளை ஒதுக்கிவைத்துவிட்டு அவளோடு ஒரே அறையில் இரவை கழித்தவன் அன்று கயிற்றுக் கட்டிலை தூக்கிக் கொண்டு வாசலுக்குப் போய்விட்டான். மேக மூட்டமில்லாமல் நிர்மலமாக இருந்த வானத்தை வெறித்தபடி மல்லார்ந்து படுத்தவனுக்குள் இந்த திருமணம் நிலைக்கும் என்கிற நம்பிக்கை வலுவிழந்து போயிருந்தது.

******************


மீனுக்கு தீனி வைத்துவிட்டு, தோப்பில் பிடுங்கிப் போடப்பட்ட தேங்காய்களை பொருக்கி ஒன்றுசேர்த்து மினி ட்ரக்கில் ஏற்றி கொண்டிருந்த வேலையாட்களுடன், தானும் வந்து சேர்த்துக் கொண்டான் மலையமான். ஒரு ஆள் கூலியை மிச்சம் பண்ணலாமே! அவனுடைய இரண்டு குளங்களையும் சுற்றி கிட்டத்தட்ட இருபது தென்னைமரங்கள் நின்றுக் கொண்டிருந்தன. அது தவிர தோப்பில் நூறு மரங்கள் இருக்கும். வெளியிலிருந்து மூன்று ஆட்களை நாள் கூலிக்கு அழைத்திருந்தான். அப்படியும் வேலை ஒரு நாளில் முடிந்துவிடாது என்பதால் தானும் இணைந்துக் கொண்டான்.

டவுனில் இருக்கும் நான்கைந்து ஹோட்டல்களில் தேங்காய்களை பிரித்துக் கொடுத்துவிடுவான். மொத்தமாக வியாபாரியிடம் கொடுக்கலாம், ஆனால் காய்க்கு ஒரு ரூபாய் குறைத்துவிடுவார் என்பதால் இந்த ஏற்பாடு செய்திருந்தான். இந்த வாய்ப்பு எல்லோருக்கும் கிடைத்துவிடாது. பழக்கவழக்கம் இருக்க வேண்டும்.
மைத்துனனின் தோப்புக்குள் நாராயணனின் பைக் சத்தம் கேட்டது. உழவு செய்யும் நேரத்தில் உதவிக்கு வராதவர் சரியாக அறுவடை நேரத்தில், “என்னடா மாப்ள! லோடு ஏத்தியாச்சா?” என்று வந்து நின்றார்.

“ஆயிக்கிட்டு இருக்கு மாமா” – அவரிடம் நின்று பேசாமல் வேலை பார்த்தபடியே பதில் சொன்னான். அவன் அப்படித்தான்… வேலையென்று வந்துவிட்டால் வெள்ளைக்காரன்.

“கல்யாணம் ஆகி ஒரு வாரம் ஆயிடிச்சு. இன்னும் நாலு நாள்ல தாலி பிரிச்சு கோர்க்கணும். அதுக்குள்ள ஒரு நாள் நம்ம வீட்டுக்கு உன் பொண்டாட்டியோட வந்து சாப்பிட்டுட்டு போடா” என்றார்.

“அதுக்கு என்ன மாமா, பார்த்துக்கலாம்”

“நாளைக்கு வர்றேன்னு தாமரைகிட்ட சொல்லிடட்டுமா?” – ஆவலோடு கேட்டார்.

மலையமான் நிமிர்ந்து அவரை பார்த்தான். கனிமொழி என்ன சொல்வாளோ என்கிற எண்ணம் எழுந்தது. சமாளித்துக்கொள்ளலாம் என்று எண்ணியபடி, “சரி மாமா” என்றான்.

அவர் முகத்தில் மகிழ்ச்சி வந்தது. “சரி, அப்போ நா கிளம்பறேன். அம்முக்குட்டிக்கு ஸ்கூல் பீஸ் கட்டணும். பணத்துக்கு என்ன பண்ணறதுன்னு தெரியல. வெளியே எங்கேயும் கிடைக்குதான்னு பார்க்கறேன்” என்று கூறிவிட்டு கிளம்பினார்.

மலையமான் அப்படியே நின்றுவிட்டான். நிச்சயமாக இந்த முறை தேங்காய் விற்கும் பணம் அவருடைய வரவில் சேர்ந்துவிடும் என்கிற நம்பிக்கையுடன் பைக்கை உதைத்து கிளப்பிக் கொண்டு அங்கிருந்து சென்றார் நாராயணன்.

அவர் புறப்பட்டு ஒரு ஐந்து நிமிடம் இருக்கும். “ஏ… ம..லை..யோ..வ்…!” என்கிற தாயின் குரல் தூரத்தில் ஒலித்தது.

“இங்க இருக்கேன்” என்று குரல் கொடுத்தபடி தாய் வரும் திசையில் வேக நடைபோட்டான் மகன்.

“எதுக்கு ம்மா இப்படி மூச்சு வாங்க வந்து நிக்கிற? என்ன அப்படி தலை போற காரியம்?”

“அவ எங்கையோ கெளம்பி போறா. எங்கன்னு கேட்டா பதில் சொல்லல. சுடிதாரை மாட்டிகிட்டு கைப்பையை தூக்கிகிட்டு கெளம்பிட்டா. என்னான்னு வந்து கேளு” என்றாள் அவசரமாக.

“யாரு! கனியா?”

“வேற எவ போறான்னு நா இப்படி உன்ன தேடி ஓடியாறேன்?”
தாயிடம் இருந்த பதட்டம் இப்போது அவனை தொற்றிக் கொண்டது. வண்டியில் தொங்கிக்கொண்டிருந்த சட்டையை அவசரமாக எடுத்து மாட்டிக் கொண்டு, மடித்துக் கட்டியிருந்த கைலியை சரியாக இறக்கிவிட்டு வண்டியில் ஏறி அமர்ந்தவன், “கடைக்கு எதுவும் போவாளா இருக்கும். நா போயி என்னன்னு கேக்குறேன். நீ வீட்டுக்கு போ” என்று தாய்க்கு சமாதானம் சொல்லிவிட்டு வண்டியை கிளப்பினான்.

அடுத்த ஐந்து நிமிடத்தில் கனிமொழியின் வழியை மறித்து நின்றது மலையமானின் பைக். அவர்களுடைய தோப்பை தாண்டி சற்று தூரம்தான் வந்திருந்தாள். அவர்கள் வசிப்பது நெருக்கமான குடியிருப்பு பகுதி இல்லை என்பதால் ஆள்நடமாட்டம் அதிகம் இல்லை. திடீரென்று ஏதோ ஒரு பைக் தன் வழியை மறித்து வந்து நிற்கவும் திடுக்கிட்டுப்போனவள், வந்தவன் யார் என்பதை பார்த்ததும் ஆசுவாசமாக மூச்சுவிட்டாள். அவனோ கடுங்கோபத்துடன் அவளை முறைத்துப் பார்த்தான்.

“எங்க கிளம்பிட்ட இந்த வெயில்ல? அதுவும் தனியா!” – விடைத்திருந்த நாசியும், புடைத்திருந்த நெற்றி நரம்பும் அவன் கோபத்தின் அளவைக் காட்ட, ‘உனக்கு மட்டும்தான் கோபப்படாத தெரியுமா!’ என்று பல்லை கடித்த கனிமொழி,

“ஏன், உங்ககிட்ட அவுட் பாஸ் வாங்கிகிட்டு தான் நான் வீட்டைவிட்டு வெளியே போகணுமா?” என்றாள் துடுக்காக.

அவள் சொன்ன ஆங்கில வார்த்தையின் அர்த்தம் அவனுக்கு சுத்தமாக புரியவில்லை என்றாலும், அவள் தன்னுடைய கேள்விக்கு பதில் சொல்லாமல் நக்கலடிக்கிறாள் என்பதை புரிந்துக் கொண்டவன், அவளை வெறித்துப் பார்த்துவிட்டு, “வண்டில ஏறு.. நீ எங்க போகணுமோ கொண்டு போயி விடறேன்” என்றான் இழுத்துப் பிடித்த பொறுமையுடன்.

அவனுடைய பழைய கைலியையும், களைந்த கேசத்தையும், ஓட்டை வண்டியையும் பார்வையால் அலைந்துவிட்டு, “வேண்டாம்” என்றாள் ஒற்றை வார்த்தையில்.

மலையமானுக்கு கண்மண் தெரியாத ஆத்திரம்… “நா விவசாயக்காரன். இப்படித்தான் இருப்பேன். உன்ன கடத்திகிட்டு போயி ஒன்னும் நா தாலி கட்டல. உன் அப்பா கெஞ்சினாரு. அவரு முகத்துக்காக…” என்று சொல்லிக் கொண்டே போனவன், அவளுடைய அடிபட்ட முகத்தைப் பார்த்து, பல்லை கடித்து தொடர்ந்து பேசாமல் வார்த்தைகளை விழுங்கினான்.

“தாலி பிரிச்சு கோர்க்கறதுக்குள்ள இப்படி தனியா அடியாள் மாதிரி போனா ஊருக்குள்ள இருக்கவனுங்க என்னைய பத்தி என்ன நினைப்பானுங்க? இது என் மரியாதை பிரச்சனை. வம்பு பண்ணாம வண்டியில ஏறு” என்றான். அவன் குரலை தனித்துக் கூறினாலும் அதில் ஓர் அழுத்தம் இருந்ததை உணர்ந்தவள்,

“நா வெளியே போறது பிரச்சனையா? இல்ல தனியா வெளியே போறது பிரச்சனையா?” என்றாள் இறுகிய குரலில்.

“உன்ன யாரும் வெளியே போகக் கூடாதுன்னு சொல்லல” என்று அவன் சொல்லி முடிக்கும் முன் அவள் திரும்பி வீட்டுக்கு நடக்க துவங்கியிருந்தாள். என்னடா இது வாழ்க்கை என்றிருந்தது அவனுக்கு. அவள் வீட்டுக்கு போய் சேர்ந்துவிட்டாள் என்பதை தூரத்திலிருந்தே பார்த்து உறுதி செய்துக் கொண்டு மீண்டும் தோப்புக்கு கிளம்பினான் அவன்.

வாசகர்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

இணைப்பு இங்கே




Comments are closed here.

You cannot copy content of this page