Share Us On
[Sassy_Social_Share]கனியமுதே! – 7
1812
0
அத்தியாயம் – 7
வீட்டுக்கு பக்கவாட்டில் சற்று தொலைவில் இருக்கும் நெல்லிமரத்தடியில் ஒரு பிளாஸ்டிக் சேரை போட்டு அமர்ந்திருந்த கனிமொழி யாரிடமோ போனில் பேசிக் கொண்டிருந்தாள். கண்களில் வழியும் கண்ணீரை துடைத்துவிட்டுக் கொண்டே கிட்டத்தட்ட ஒரு மணிநேரமாக பேசிக் கொண்டிருந்தாள். வீட்டின் மறுபக்கம், மாடுகளிடம் வேலை செய்து கொண்டிருந்த அலமேலு வெகு நேரம் கழித்து மருமகளை தேடிவந்தார்.
மாமியார் தன்னிடம் வருவதை உணர்ந்து முகத்தை சீராக்கிக்கொண்டு சாதாரணமாக பேசுவது போல் பேசிவிட்டு அழைப்பை துண்டித்தவள், ‘என்ன?’ என்பது போல் மூத்தவளை நோக்கினாள்.
“தாமரை நேத்தே வந்து அழைச்சுட்டு போனாளே! நேரமாயிடிச்சே கிளம்பலையா நீ?”
அவளுக்கு அங்கெல்லாம் செல்ல விருப்பமே இல்ல. ஆனால் நேற்று இரவே மலையமான் அவளிடம் கண்டித்து சொல்லியிருந்தான். அவன் காட்டிய கண்டிப்பே அவளுக்கு மேலும் எரிச்சலை ஊட்ட, “எனக்கு வயிறு வலி. எங்கேயும் போக முடியாது” என்றாள்.
“ஐயையோ! என்ன கண்ணு இப்படி சொல்ற? அங்க அவ காலையிலிருந்து ஆக்கிக்கிட்டு கெடக்குறாளே! முதல்லயே சொன்னியா நீ?” என்று பதறினார்.
அதேநேரம், “எதுக்கும்மா இந்த கத்து கத்துற? மீன் குளம் வரைக்கும் கேக்குது உன் சத்தம்” என்று அதட்டியபடியே மரத்தடியில் வண்டியை கொன்டு வந்து நிறுத்திவிட்டு இறங்கினான் மலையமான்.
“உம்பொண்டாட்டிக்கு வயித்து வலியாம். தாமரை எதிர்பார்த்துக்கிட்டு இருப்பா..” என்றார் வருத்தமும் மகள் மீதான பயமுமாக.
சட்டென்று அவள் புறம் திரும்பினான் மலையமான். சற்றுமுன் போனில் அழுது கொண்டிருந்ததால் கண் இமைகள் தடித்து விழிகள் சிவந்திருந்தன. முகமும் சோர்வாகத் தெரிந்தது. உண்மையிலேயே அவளுக்கு வயிற்று வலி என்று நம்பிவிட்டான் அவன்.
“அவ வயித்துக்கு சேராதது எதையும் கொடுத்துட்டியாம்மா?” என்றான் தாயிடம் திரும்பி.
அலமேலுவுக்கு முணுக்கென்று கோபம் வந்தது. ‘அக்காகாரி அங்க சமைச்சு வச்சுக்கிட்டு காத்துகிட்டு இருக்கா. இவன் என்னடான்னா இங்க பொண்டாட்டியை தாங்கிகிட்டு இருக்கானே!’ என்கிற எரிச்சல் மேலிட அதை அவனிடம் காட்டியும்விட்டார்.
“நா என்னாத்தடா கொடுத்தேன் உன் பொண்டாட்டிக்கு? நீங்க அங்க கெளம்புறீங்களா இல்லையா?”
“அட ஏம்மா நீ வேற.. அவளுக்கு வயிறு வலிக்குதுங்கறா.. நீ அக்கா வீட்டுக்கு போகலைன்னு பாட்டு பாடுற?” என்று தாயிடம் கடுப்படித்துவிட்டு, “ரொம்ப வலிக்குதா? சீரக தண்ணி எதுவும் குடிக்கிறியா.. இல்ல ஆசுபத்திரிக்கு போகணுமா?” என்றான் மனைவியிடம்.
“என் மக அங்க அங்காளி பங்காளிகளோட ஒரே தெருவுல குடியிருக்குறா. இப்படி வர்றேன்னு சொல்லிப்புட்டு போகாம இருந்து அவ மானத்த வாங்கிப்புடாதிங்க” என்று புலம்பியபடியே அங்கிருந்துச் சென்றார் அந்த பெண்மணி.
மாமியாரின் புலம்பலில் இருந்த நியாயம் கனிமொழியின் மனதை சுட்டது. வர முடியாது என்றால் அதை அவள் நேற்றே சொல்லியிருக்க வேண்டும். அப்போது அமைதியாக இருந்துவிட்டு கடைசி நேரத்தில் இப்படி நாடகமாடுவது ஏதோ பெரிய குற்றம் செய்வது போல் உறுத்தலாக இருந்தது. அதற்காக அவனோடு ஜோடி போட்டுக்கொண்டு போகவா முடியும்! ஈகோ அவள் பிடிவாதத்தை இழுத்துப் பிடித்துக்கொள்ள மெளனமாக அமர்ந்திருந்தாள்.
“சரி வா.. ஆஸ்பத்திரிக்கு போயிட்டு வந்துடலாம்” – அவளிடமிருந்து பதில் வராததால் தானே முடிவெடுத்து அழைத்தான் மலையமான்.
“தேவையில்லை.. கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்தா சரியாயிடும்” – முணுமுணுத்துவிட்டு எழுந்து கொண்டாள். அவள் மறுத்த விதத்தையும் நடந்து சென்ற நிமிர்வையும் கண்ட போதுதான் அவனுக்கு சந்தேகம் வந்தது.
‘ஒருவேளை விருந்தை தவிர்ப்பதற்காக வலி என்கிறாளோ!’ – கண்களில் குழப்பத்துடன் தனக்கு முதுகுகாட்டி சென்று கொண்டிருப்பவளைப் பார்த்தான். அவளிடம் விளக்கம் கேட்பதோ அல்லது விருந்துக்கு கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்வதோ அவர்களுக்குள் இருக்கும் விரிசலை இன்னும் அதிகமாகத்தான் ஆக்கும் என்பதால் அவளை அவள் போக்கிலேயே விட்டுவிட்டான்.
அன்று கடைசி வரைக்கும் கனிமொழி அழுத்தமாகவே இருந்துவிட மலையமான் மட்டும் அக்கா வீட்டுக்கு சென்றுவந்தான். அன்றிலிருந்து கனிமொழியின் மீது தாமரையின் மனதில் தீராத கோபம் கனன்றுக் கொண்டே இருந்தது.
**************
அன்று காலை பதினோரு மணிக்கு மேல் கனிமொழியை காண அவள் வயதையொத்த ஒரு பெண் வந்திருந்தாள். கூட படித்தவளாம். “வாம்மா” என்று அலமேலு வந்து அழைத்த போது முகம் கொடுக்காமல் தலையசைத்தாள். முதல்நாள் தோழி தன்னிடம் போனில் அழுத அழுகையில் இந்த வீட்டிலிருப்பவர்கள் அனைவரின் மீதும் அவளுக்கு கோபமிருந்தது.
இவ்வளவு அழகான.. படித்த.. வசதியான வீட்டுப் பெண் கிடைத்தால் அவளை எப்படி பார்த்துக்கொள்ள வேண்டும்! கீழே விழுந்து அடிபட்டுக் கொண்டதைக் கூட கண்டுகொள்ளவில்லையாமே என்று உள்ளுக்குள் கரித்துக் கொட்டினாள்.
இத்தனைக்கும் கனிமொழி ஒன்றும் பெரிதாக சொல்லவில்லை. கீழே விழுந்துவிட்டேன் என்றாள். உடனே, “ஹாப்பிட்டால் போனியா?” என்று கேட்டாள் அவள். அதற்கு “இல்லை…” என்று கனிமொழி பதில் சொன்னதும், “ஏன் உன்ன யாரும் கூட்டிட்டு போகலையா?” என்று அடுத்த கேள்வியைக் கேட்டாள்.
கனிமொழிக்கு பழைய நியாபகம் வந்துவிட்டது. எப்படியெல்லாம் வாழ்ந்தோம் என்கிற ஏக்கம் மேலிட அழுது குமித்துவிட்டாள். கூடவே தன் பக்க நியாயங்களை கொட்டித் தீர்க்கவும் செய்தாள். தோழி அழுத அழுகையும், அவள் சொன்ன ஒரு பக்க நியாயமும் அந்த வீட்டு மனிதர்களையெல்லாம் அரக்கர்களாக மாற்றிக் காட்டியது அந்த புதியவள் மனதில்.
அதனால்தான் இப்போது அலமேலு அன்பொழுக, “வாம்மா” என்று அழைத்த போது புன்னகைக்கு கூட பஞ்சமானவளாக தலையை மட்டும் அசைத்தாள் அந்த பெண்.
அலமேலுவின் முகம் சிறுத்துவிட்டது. அவர் வேறு எதுவும் பேசாமல் பின் கொட்டகைக்குச் சென்று சமையல் வேலையில் இறங்கிவிட்டார். கனிமொழி தனக்குப் பிடித்தமான நெல்லி மரத்தடிக்கு தோழியை அழைத்து சென்றாள்.
தோழிகள் இருவரும் நேரம் போவது தெரியாமல் மணிக்கணக்காக பேசிக் கொண்டிருந்தார்கள். கனிமொழி தன்னுடைய மனத்துயரை எல்லாம் தோழியிடம் கொட்டித் தீர்த்துக் கொண்டிருக்கும் போது மலையமானின் பைக் மர நிழலில் வந்து நின்றது.
மனைவியுடன் பேசிக் கொண்டிருக்கும் அந்த புது பெண்ணை பார்த்தபடி பைக்கிலிருந்து இறங்கியவன் பிறகு கனிமொழியை பார்த்தான். அவள் ஏதாவது சொல்வாள் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது அந்த பார்வையில். அதை உதாசீனம் செய்து கீழே குனிந்துக் கொண்டாள் அவள். அவள் பார்வை அவனிடமிருடந்த்து விலகிய மறு நொடியே அந்த புது பெண்ணிடம் திரும்பியவன், தங்களுக்குள் நடந்த மௌன நாடகம் எதையும் காட்டிக்கொள்ளாமல் சின்ன புன்னகையுடன், “வாங்க…” என்றான்.
அலமேலுவிடம் காட்டிய அலட்சியத்தை அவனிடம் காட்ட முடியவில்லை அந்த பெண்ணுக்கு. அமர்ந்திருந்த சேரிலிருந்து எழுந்தேவிட்டாள். அவ்வளவு ஆளுமையான தோற்றம் அவனுடையது. அதை கனிமொழிதான் அன்றுவரை உணரவில்லை.
“நல்லா இருக்கீங்களா அண்ணா? நா ப்ரீத்தி… கனியோட ஃபிரண்ட். சின்ன வயசிலிருந்து ஒன்னாதான் படிச்சோம்” என்றாள் அவன் கேட்காத விளக்கத்தையெல்லாம் கொடுத்தபடி.
கனிமொழி முகத்தை சுளித்துக் கொண்டு தோழியை பார்த்தாள். அந்த தோழியின் பார்வையோ முற்றிலும் மலையமானிடமே இருந்தது.
“சரிம்மா… பேசிகிட்டு இருங்க” என்று கூறிவிட்டு அவன் உள்ளே சென்றுவிட, “ஏய், எதுக்குடி எழுந்து நிக்கிற? விட்டா கை கட்டி கும்பிடு போடுவ போல!” என்றாள் கடுப்புடன்.
ப்ரீத்தி தோழியை முறைத்தாள். “ஏண்டி நீ சொன்ன பட்டிக்காட்டான்… கருப்பன்… அதெல்லாம் இந்த அண்ணாவை தானா!” என்றாள் ஆச்சரியமாக.
“ஏன்? பார்த்தா தெரியலையா உனக்கு?”
“சத்தியமா தெரியலடி” என்றாள். கனிமொழி தோழியை கடுமையாக முறைத்தாள். “நிஜமாத்தாண்டி சொல்றேன். நீ கொடுத்த பில்ட்-அப் பார்த்து என்னென்னவோ கற்பனை பண்ணிட்டேன். கனி, நீ சொல்ற அளவுக்கு அந்த அண்ணா ஒன்னும் அவ்வளவு மோசமா இல்ல. சொல்லப்போனா நல்லாவே இருக்காங்க.. கம்பீரமா. இங்கிலிஷ்ல சொன்னா மேன்லியா..” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, “ப்ச்” என்று சலிப்புடன் உச்சுக்கொட்டினாள் கனிமொழி.
*****************
ப்ரீத்தி வந்து சென்றதிலிருந்து அவளுக்குள் ஒரு சின்ன குறுகுறுப்பு.. ‘அப்படியென்ன கம்பீரமா இருக்கான்! நம்ம கண்ணுக்கு ஒன்னும் தெரியலையே!’ – ஈர கூந்தலை உளர்த்துவது போல் காலை வெயிலில் வாசல்பக்கம் வந்து நின்றவளின் கண்கள் அடிக்கடி மரத்தடிப் பக்கம் சென்று மீண்டது.
ஹோட்டல்களுக்கு ஏற்றிவிட்டது போக மீதமிருந்த தேங்காய்கள் குட்டி மலை போல் குவிந்துக் கிடைக்க, அவற்றை உரிப்பாறையில் குத்தி விறுவிறுவென்று உரித்து, தேங்காயையும் மட்டையையும் பக்கத்துக்கு ஒன்றாக வீசிக் கொண்டிருந்தான் மலையமான். மேல் சட்டை அணியாமல் வெறும் பணியனோடு லுங்கியை மடித்துக் கட்டிக் கொண்டு அவன் வேலை செய்த வேகத்தில் நெற்றி நரம்பெல்லாம் புடைத்திருந்தது. கருத்துத் திரண்ட மேனி வியர்வையில் குளித்திருக்க, புஜங்கள் இரண்டும் மல்யுத்த வீரனை நினைவுபடுத்தின.
எச்சிலை கூட்டி விழுங்கியபடி பார்வையைத் திருப்பிக் கொண்ட கனிமொழிக்கு முழுதாக ஒரு நிமிடம் கூட தாக்குப் பிடிக்க முடியவில்லை. இனம்புரியாத ஏதோ ஒரு ஈர்ப்பில் அகப்பட்டுக் கொண்டவளின் பார்வை மீண்டும் தானாக அவன் பக்கம் திரும்பியது.
காலையிலிருந்து இடைவிடாமல் இந்த வேலையை செய்து கொண்டிருக்கிறானே! எப்படி முடிகிறது! என்று அதிசயப்பட்டாள். அப்போதுதான் இன்னொரு விஷயமும் அவளுக்கு உரைத்தது. அவன் ஓய்வாக அமர்ந்து அவள் பார்த்ததே இல்லை. பரபரவென்று ஏதாவது ஒரு வேலை செய்து கொண்டேதான் இருப்பான். செய்வதற்கு ஒன்றுமே இல்லையென்றால் சும்மாவேனும் மண்வெட்டியை எடுத்து மண்ணை கொத்திக் கொண்டிருப்பானோ என்று கூட தோன்றியது அவளுக்கு. நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த உழைக்கிறான் என்று எண்ணிக்கொண்டாள்.
இப்போதெல்லாம் மலையமான் என்னும் மனிதன் யார் என்கிற ஆராச்சி அவளுக்குள் தோன்ற துவங்கியிருந்தது. அதன்பொருட்டு முதல்நாள் நடந்த சம்பவம் ஒன்றை யோசித்துப் பார்த்தாள்.
இரவு வேலை முடிந்து பண்ணையிலிருந்து வீட்டுக்கு திரும்பிய அங்கப்பன், போகிற வழியில் அப்படியே மகளை பார்த்துவிட்டு செல்லலாம் என்று வந்திருந்தார். அப்போது மருமகனிடம், “கல்யாணத்துக்கு செய்ய வேண்டிய சீர் எதுவும் செய்யாம இருக்கு. தாலி பிரிச்சு கோர்க்கற அன்னைக்கே எல்லாத்தையும் கொண்டு வந்து இறக்கிடறேன்” என்றார்.
மலையமான் கனிமொழியை நிமிர்ந்து பார்த்தான். ‘இதுக்கெல்லாம் ஆசைப்பட்டுத்தானே அவசர தாலி கட்டின.. நல்லா வாங்கி வச்சுக்கோ’ என்கிற எண்ணம் மனதில் ஓட அவள் கண்களில் அலட்சியம் தோன்றியது. அந்த பார்வையை ஒரு ஓரிரு நொடிகள் நேருக்கு நேர் சந்தித்தவன் பிறகு மாமனாரிடம் திரும்பி,
“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் மாமா. வீடு பழுதுபார்க்கணும். நீங்க கொண்டு வர்ற சாமானெல்லாம் அதுக்கு இடைஞ்சலா இருக்கும். அப்புறம் பார்த்துக்கலாம்” என்றான்.
“இந்த வீட்டை இதுக்குமேல என்ன மாப்ள பழுது பார்க்க போறீங்க? தட்டிவிட்டுட்டு புதுசா மனை போட்டுடலாமே! செலவை பத்தி யோசிக்காதிங்க, பார்த்துக்கலாம்” என்றார் அங்கப்பன்.
‘சபாஷ்! சீர் வரிசை பற்றி பேச வந்தவரிடம், வீடு கட்டுவதற்கே அடி போட்டுவிட்டாயே! பெரிய ஆள்தான்டா நீ!’ – கனிமொழியின் உள்ளம் மலையமானை எண்ணி கசந்தது.
அவன் சற்று நேரம் எதுவும் பேசவில்லை. பிறகு மெல்ல, “நா பார்த்துக்கறேன் மாமா” என்றான். அவன் குரலில் இருந்த அழுத்தத்தை அங்கப்பனும் கவனித்தார்.. அவர் மகளும் கவனித்தாள்.
‘அவ்வளவு நல்லவனாடா நீ!’ – அப்போது தோன்றிய எண்ணம் இப்போதும் அவள் மனதில் எழ, ஈர கூந்தலை உளர்த்துவதுபோல் ஓரக்கண்ணால் அவனை நோட்டமிட்டாள்.
அவன் என்னதான் மும்மரமாக வேலை செய்து கொண்டிருந்தாலும், அவளுடைய பார்வை தன்னை துளைப்பதை உணராமல் இருப்பானா என்ன! சும்மாவே அவனுடைய பார்வை அவள் செல்லுமிடமெல்லாம் அவள் அறியாமல் தொடரும். இப்போது அவனை பார்க்க வேறு செய்கிறாளே! ‘என்னத்த அப்படி உத்து உத்து பார்க்கறா!’ – உள்ளே குறுகுறுத்தது. சிந்தனைகள் எக்குத்தப்பாக ஓட உள்ளம் குதூகலித்தது. ஒரு நொடிதான்… ஒரே நொடியில் கவனம் சிதறி கையை பாறையில் குத்திக் கொண்டான். கண்ணிமைக்கும் நேரத்திற்குள் ரெத்தம் வெள்ளமாக பெருகியது.
‘ஐயோ!’ என்று அதிர்ந்தாள் கனிமொழி. கண் எதிரில் அவ்வளவு இரத்தத்தைப் பார்த்ததும் அவளுடைய கோபமும் பிடிவாதமும் போன இடம் தெரியாமல் ஓடிவிட மனிதம் மேலெழுந்தது. தயக்கத்தை கடந்து அவள் அவனிடம் உதவிக்கு ஓடுவதற்குள், அவன் கையை உதறிக் கொண்டு கொல்லைப்புறம் நோக்கி நடக்க துவங்கியிருந்தான்.
கனிமொழி அவசரமாக வீட்டுக்குள் நுழைந்து கொல்லைப்புறம் ஓடினாள். அவன் கிணற்றங்கரையில் காயத்தை கழுவிக் கொண்டிருந்தான். வேகமாக அவனிடம் நெருங்கி, “ரொம்ப காயமா?” என்றாள்.
அவள் முகத்தில் இருந்த பதட்டத்தை கவனித்தபடியே, “இல்லல்ல… அதெல்லாம் ஒன்னும் இல்ல..” என்று கூறிவிட்டு கொடியில் காய்ந்த வேட்டியை கிழித்து நீரில் நனைத்து கையில் சுற்றிக் கொண்டு மீண்டும் வாசல் பக்கம் சென்றான்.
அவனை பொறுத்தவரை இந்த காலமெல்லாம் அவனுக்கு ஒரு பொருட்டே அல்ல. குபுகுபுவென்று இரத்தம் தான் வந்ததே தவிர உண்மையில் காயம் ஒன்றும் பெரிதாக ஆழமெல்லாம் இல்லை என்று எண்ணியவனுக்கு, அவளுடைய பதட்டமும் பார்வையும் ஆச்சரியமாக இருந்தது.
‘என்ன இன்னைக்கு! குட்டிப்போட்ட பூனை மாதிரி பின்னாடியே சுத்துறா!’ – முணுமுணுத்தபடியே மீண்டும் பாறையை நிமிர்த்தி வைத்து தேங்காய் உரிக்கத் துவங்கினான்.
‘அடப்பாவி! உன்னோட சின்சியாரிட்டிக்கு அளவே இல்லையாடா!’ – ஏதோ உலக அதிசயத்தை பார்ப்பது போல் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள் கனிமொழி.
‘அடங்க மாட்டேங்கிறாளே!’ என்று எண்ணியபடி அவன் வேலையில் கவனத்தை குவிக்க முயன்றுகொண்டிருக்க, அவளோ மனம் கேட்காமல் அவன் அருகில் சென்று, “இரத்தம் நிறைய வந்ததே! திரும்ப ஏன் இதை பண்ணிக்கிட்டு இருக்கீங்க?” என்றாள்.
கையிலிருந்த தேங்காயை தூர போட்டுவிட்டு நிமிர்ந்து நின்று அவள் முகத்தை பார்த்தான் மலையமான். ‘நீ அந்த முட்டக்கண்ண வச்சுக்கிட்டு என்னைய குறுகுறுன்னு பார்த்ததுக்கே கைல குத்திக்கிட்டேன்! இப்ப இப்படி பக்கத்துல வேற வந்து நின்னு பேசுற… எங்கெல்லாம் குத்திக்கப் போறேனோ!’ – என்று பெருமூச்சு விட்டவன் ஒரு இளநீரை எடுத்து வெட்டி அவளிடம் நீட்டி, “அப்படி ஓரமா போயி உட்கார்ந்து குடி” என்றான்.
‘உனக்கு போயி பாவம் பார்த்தேன் பாரு’ என்று பொருமியவள், “நீங்களே குடிங்க… அப்படி ஓரமா உட்கார்ந்து…” என்று முகத்தை திருப்பிக் கொண்டு போய்விட்டாள்.
****************
தாலி பிரித்து கோர்க்கும் விழா அங்கப்பன் வீட்டில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மலையமானின் குடும்பம் நெருங்கிய உறவினர்களை அழைத்திருந்ததால், எல்லோரையும் அழைத்துச் செல்ல வாடகை காருக்கும் வேனுக்கும் சொல்லியிருந்தார்கள். புறப்படும் நேரம் நெருங்கிவிட்டது. அழைத்திருந்தவர்கள் எல்லாம் வீட்டுக்கு வந்துவிட்டார்கள். வேணும் காரும் தயாராக இருந்தது. தாமரையை காணுமே என்று கூட்டத்தில் சலசலப்பு கிளம்பியது.
அவளோ கனிமொழியின் மீது கொண்டிருந்த கோபத்தை விடுவதாக இல்லை. ‘நா கூப்பிட்டப்ப அவ என் வீட்டுக்கு வரல.. இப்ப நா எப்படி அவ வீட்டுக்கு வருவேன்?’ என்று பிடிவாதமாக தன் வீட்டிலேயே அமர்ந்துக் கொண்டதோடு, கணவனையும் போகக் கூடாது என்று கட்டுப்படுத்தினாள்.
‘இது என்ன சாதாரணமா நடந்த கல்யாணமா? அந்த பெண்ணுக்கே தெரியாம நடந்த கல்யாணம். அது ஏதோ கோவமா இருக்கு, அதான் இந்த விருந்து கிருந்தெல்லாம் வேண்டாம்னு சொல்லிடிச்சு. இதையெல்லாம் பெருசா எடுத்துக்கிட்டு நீயும் போட்டி போடுவியா? இது நா நடத்தி வச்ச கல்யாணம். நானே அங்க நடக்குற நல்லதுக்கு போகலேன்னா எப்படி? கெளம்பி வா தாமரை” என்று எவ்வளவோ எடுத்து சொல்லி மனைவியை அழைத்தார் நாராயணன்.
அவள் பிடிவாதக்காரி. முடியாது என்றால் முடியவே முடியாது என்று அழுத்தமாக அமர்ந்திருந்தாள். வேறு வழியில்லாமல் மைத்துனனை அழைத்து விபரம் சொன்னார். பக்கத்துத் தெருதானே! அவர் ஃபோனை வைப்பதற்குள் அவன் நேரில் வந்து நின்றான்.
சகோதரியை சமாதானம் செய்ய முயன்றான். அவளோ அவன் மனைவியின் பண கொழுப்பையும், படிப்பு திமிரையும் பற்றி அவனுக்கு பாடம் எடுத்தாள். மனதில் எதையும் ஏற்றிக்கொள்ளவில்லை என்றாலும் அனைத்தையும் பொறுமையாக காதில் வாங்கி கொண்டிருந்தான் மலையமான். அவனுடைய பொறுமை தமக்கையின் கோபத்தை குறைத்தது.
தம்பிக்காக விழாவிற்கு வந்திருந்த தாமரை கனிமொழியின் முகத்தை ஏறிட்டு பார்க்கவே இல்லை. அவளுடைய வீட்டு ஆட்களிடம் முகம் கொடுத்து பேசவில்லை. முகத்தை உர்ரென்று வைத்துக் கொண்டுதான் சுற்றிக் கொண்டிருந்தாள். அப்போது தான் அலமேலு ஒரு நகை பெட்டியுடன் அவளிடம் வந்தாள்.
“இந்தா, நேத்து மலையன் வாங்கியாந்தான். நீயே உன் கையால உன் தம்பி பொண்டாட்டிக்கு போட்டுவிடு” என்று மக்களிடம் நீட்டினாள்.
அதை பிரித்துப் பார்த்த தாமரையின் முகத்தில் முதலில் அதிர்ச்சி, பின் கடுமையான கோபம். பெட்டியில் தாலியும் கூடவே ஒரு மெல்லிய தாலி சங்கிலியும் இருந்தது. இதைப்பற்றி ஒரு வார்த்தை கூட அவளிடம் அவன் சொல்லவே இல்லையே!
கோபம் பொங்கியது. கூட்டம் கூடியிருக்கையில் எதையும் காட்டிக்கொள்ள முடியாமல் செய்ய வேண்டிய சம்பிரதாயங்களை செய்து தாலியை சங்கிலியில் கோர்த்து கனிமொழிக்கு அணிவித்தாள். விழா சிறப்பாக முடிந்தது. அதற்கு பிறகுதான் வீட்டில் ஒரு பெரிய கச்சேரி ஆரம்பமானது.
Comments are closed here.