Share Us On
[Sassy_Social_Share]கனியமுதே! – 9
1607
0
அத்தியாயம் – 9
தன்னுடைய வருமானத்தை அதிகப்படுத்தியே ஆக வேண்டிய கட்டாயத்தில் இருந்தான் மலையமான். வெளியே வாங்கிய கடனுக்கு மாதாமாதம் வட்டி கட்ட வேண்டும். பேங்கில் வாங்கிய விவசாய லோனுக்கு தவணை கட்ட வேண்டும். அது தவிர விவசாயத்திற்கு தேவைப்படும் சிறு முதலீடு, வீட்டு செலவு, அக்கா வீட்டின் அவசர தேவைகள், கனிமொழியின் அத்தியாவசிய வசதிகள் என்று அவன் பூர்த்தி செய்ய வேண்டிய விஷயங்கள் வரிசைகட்டி நின்றன.
நிச்சயம் ஒரு கணிசமான தொகை மாத வருமானமாக வேண்டும். இல்லையென்றால், ஒன்று அவன் கையாலாகாதவனாகிவிடுவான்.. அல்லது கடன்காரனாகிவிடுவான். இரண்டுமே கேவலம்… அவனுடைய சிந்தனையும் தேடலும் ஏதாவது செய்ய வேண்டும்.. எப்படியாவது ஒரு வழியை கண்டுபிடிக்க வேண்டும் என்பதிலேயே இருபத்தி நான்கு மணிநேரமும் இருந்தது. அந்த நேரத்தில் தான் டவுனில் ஒரு மளிகை கடை லீசுக்கு வந்தது.
நல்ல இடம்… ஓரளவுக்கு வருமானம் இருக்கும்… எடுத்து நடத்தலாமா என்று யோசித்தான். ஆனால் மனம் ஏனோ ஒப்பவில்லை. புது தொழில்… ஆழம் தெரியாமல் காலை வைத்து நட்டமாகிவிட்டால் நிலைமை இன்னும் மோசமாகிவிடுமே என்று யோசனையாக இருந்தது. அப்போதுதான், மின்னல் போல அவனுக்குள் அந்த எண்ணம் உதித்தது.
‘கடையில போடற பணத்தை வச்சு பண்ணையை கொஞ்சம் விரிவாக்குனா என்ன!’
பண்ணை என்றால் வெறும் மீன் பண்ணை அல்ல. விவசாயத்தோடு கால்நடைகள், கோழி, வாத்து மற்றும் மீன்களை கூட்டாக வளர்த்து பண்ணை கழுவுகளை மறுசுழற்சி செய்யும் ஒருங்கிணைந்த பண்ணை. இயற்கையின் விளைவுகளாலும் மற்ற சந்தர்ப்ப சூழ்நிலைகளாலும் விவசாயிகளால் ஆண்டு முழுவதும் விவசாயத்தை மட்டுமே நம்பி இருக்க முடிவதில்லை. எனவேதான் வேளாண்மையில் இந்த ஒருங்கிணைந்த பண்ணையம் அவசியமாகிறது. மலையமானும் அதைத்தான் கையில் எடுக்க நினைத்தான்.
ஏற்கனவே மீன் குளம் இருக்கிறது. மாடுகளை பராமரிப்பதும், கோழி வளர்ப்பதும் தெரியாத வேலை அல்ல. இப்போது அனைத்தையும் ஒன்றாக ஒருங்கிணைத்து பண்ணையாக மாற்ற வேண்டும். தெரிந்த தொழில்… சறுக்கினாலும் சுதாரித்துக்கொள்ள முடியும் என்று மனம் திடப்பட்டது.
வீட்டில் ஏற்கனவே பத்து மாடுகள் நிற்கின்றன. அதோடு இன்னும் பத்து பதினைந்து மாடுகளை வாங்கி, மீன் குளக்கரையில் ஷெட் போட்டு அவைகளை பராமரிக்க வசதி செய்ய வேண்டும். கோழி வளர்ப்பிற்கு கொட்டகை அமைக்க வேண்டும். பண்ணை கழிவு மறுசுழற்சி முறையால் மீன்களுக்கும் கோழிகளுக்கும் தீவனம் வாங்கும் செலவு பாதியாக குறையும். கால்நடை கழிவுகளால் குளத்தில் மிதவைகள் வளர்ச்சி ஊக்குவிக்கப்பட்டு மீன் வளம் பெருகும். பாலும் முட்டையும் அவனுடைய மாத வருமானத்தை மேம்படுத்தும். பலவற்றையும் யோசித்து இதை தன்னால் செயல்படுத்த முடியும் என்கிற நம்பிக்கையோடு துணிந்து பணத்துக்கு ஏற்பாடு செய்ய துவங்கினான்.
ஆனால் பணம் புரள்வது என்பது அத்தனை சுலபமா என்ன? அதுவும் ஒரு விவசாயிக்கு? குதிரைக்கு கூட கொம்பு முளைக்க வைத்துவிடலாம். ஆனால் பணத்தை அவ்வளவு எளிதாக புரட்டிவிட முடியாது. மலையமான் அலையாத பேங்க் இல்லை. அந்த டாக்குமெண்ட்… இந்த டாக்குமெண்ட் என்று அவனை நடையாய் நடக்கவிட்டு கடைசியில் ஜாமீன் கையெழுத்தில் வந்து நின்றார்கள். அவன் யாரிடம் போவான்?
“கையில வெண்ணையை வச்சுக்கிட்டு எதுக்குடா இப்படி நெய்க்கு அலையுற? உன் மாமனாரே ஒரு பணப் பெட்டகம். அவருகிட்ட ஒரு வார்த்தை சொல்லேண்டா. உனக்கு சங்கடமா இருந்தா நா வேணுன்னா போயி பேசுறேன். இந்த பேங்கு.. லோனு.. கையெழுத்து எதுவும் தேவையில்லை” என்றார் நாராயணன்.
மலையமான் மறுப்பாக தலையசைத்தான். “எதுக்குடா வீம்பு பிடிக்கிற?” என்று கடுப்படித்தார்.
‘இவனுக்கு இந்த கல்யாணத்தை எதுக்கு செஞ்சு வச்சோம்? அங்கப்பன் அண்ணன்கிட்டேருந்து அஞ்சு பைசா கூட அடஞ்சுக்க மாட்டேங்கிறானே! இவனால நமக்கும் ஒன்னும் இல்லாம போயிடும் போலருக்கே!’ என்று உள்ளுக்குள் பொருமினார்.
அவருடைய பொருமலோ ஆலோசனையோ எதுவும் அவன் செவியில் ஏறவில்லை. பேங்கில் லோன் கிடைக்காது என்று தெரிந்துவிட்டது. இனி அடுத்த வழி என்ன என்று யோசித்தவன், தோப்பை மட்டும் கையில் வைத்துக் கொண்டு வயலை அடகு வைக்கலாமா.. பணம் போதுமா என்று கணக்கு போட்டான். போதும் என்றுதான் தோன்றியது.
அடுத்து வந்த நாட்களில் ஊரில் உள்ள வசதியான ஆட்களிடம் வயலை அடகு வைப்பதைப் பற்றி பேசவும் துவங்கினான். அதற்கு மேல் பொறுக்க முடியாத நாராயணன், மலையமான் அறியாமல் அங்கப்பனின் தோப்புக்குச் சென்று அவரை சந்தித்தார்.
அங்கப்பனுக்கு மருமகன் தன்னிடம் நெருங்கி வராதது ஒரு பக்கம் வருத்தம் தான். ஆனால் அவனுடைய குணம் அவரை வெகுவாக ஈர்த்தது.
அவனிடம் இருக்கும் இந்த பிடிவாதமும் துடிப்பும் தொடர் முயற்சியும் அவனுடைய திறமைக்கு இன்னும் வலு சேர்க்கும் என்று பூரிப்புடன் எண்ணிக் கொண்டார்.
“மாப்பிளைகிட்ட நா பேசிக்கிறேன். நீ கவலைப்படாத” என்று நாராயணனுக்கு சமாதானம் சொன்னவர், சொன்னது போலவே அடுத்த சில நாட்களில் மருமகனை சந்தித்துப் பேசவும் செய்தார்.
தென்னங்கீற்றின் சலசலப்போடு வீசிய தென்றல் காற்றின் குளுமை மலையமானை தீண்டவில்லை. சூழ்நிலையும் சொந்தங்களும் அவனுக்கு பெரிய அழுத்தத்தை கொடுத்துக் கொண்டிருந்தது. கைகளை ஆட்டி கால்களை உதைத்து விளையாடும் கைக்குழந்தையை, பையில் போட்டு பொட்டலம் கட்டியது போல் வெகு இறுக்கமாக உணர்ந்தான்.
மருமகனின் முகபாவத்தை வெகு கூர்மையாக ஆராய்ந்தார் அங்கப்பன். அங்கே மறுப்பு தெரிந்தது. அதை வாய்விட்டு அவன் சொல்லிவிட்டால் அந்த வார்த்தையிலிருந்து பின்வாங்கவே மாட்டான் என்பதை அறிந்திருந்தவர், அவன் வாயை திறப்பதற்குள் அவசரமாக பேசினார்.
“மாப்ள… நா பணம் கொடுக்கறேங்கிறேனா இல்ல காசு கொடுக்கறேங்கிறேனா? நாலு கையெழுத்து… அதைக் கூடவா நா போட கூடாது? பேங்குக்காரன் லோனு கொடுக்க போறான், நீங்க தொழில் பண்ண போறீங்க. இடையில நா என்ன பண்ண போறேன். நீங்க பணத்தை சரியா திருப்பி கட்டிடுவீங்கன்னு உறுதி கொடுத்து கையெழுத்து போட போறேன். இதுல எனக்கு என்ன நட்டமாயிட போகுதுன்னு இப்படி யோசிக்கிறீங்க?”
“நீங்க என் மருமகனுங்கறதுனாலையோ.. இல்ல கனியோட புருஷனுங்கறதுனாலையோ இதை நா செய்யிறேன்னு சொல்லல மாப்ள. மலையமான்ங்கற தனி மனுஷனோட திறமைக்கு கைகொடுக்கணும்னு நெனைக்கிறேன். அந்த திறமையை நம்பி தானே மாப்ள என் பொண்ணையே கொடுத்தேன். கையெழுத்து போட மாட்டேனா?” என்றார்.
மலையமானின் முகம் சற்று தெளிந்தது. அவர் கனிமொழியை வைத்து தனக்கு உதவிக்கு வரவில்லை என்பது உவப்பாக இருந்தது. ஆனாலும் அவருடைய உதவியை ஏற்றுக்கொள்வதில் இன்னும் கூட அவனுக்கு தயக்கம் இருந்தது.
அங்கப்பனுக்கு சங்கடமாகிவிட்டது. “என் பணத்தைத்தான் தொடமாட்டேங்கிறீங்க. பேங்குல ஒரு கையெழுத்து கூடவா மாப்ள நா போட கூடாது. அதுக்கு கூடவா ஆகாதவனா போயிட்டேன்” என்றார் மிகுந்த வருத்தத்துடன். அதற்கு மேல் அவனால் மறுக்க முடியவில்லை.
பத்து லட்சம்… அவனுக்கு அது பெரிய தொகைதான். வெகு கவனமாக கையாண்டான். மாடுகளுக்கு ஷெட்டும் கோழிக்கு கொட்டகையும், குளத்தங்கரை ஓரமாகவே போட்டான். பின்னாளில் ஆட்களின் கூலியை குறைப்பதற்காக, கழிவுகளின் சுலபமான தற்சுழற்சிக்கு ஏதுவாக சிமெண்ட் தரை போட்டு பைப் கனக்ஷன் கொடுத்துக் கொண்டான். மாடுகளை தேடித் தேடி தேர்ந்தெடுத்து வாங்கினான். நாட்டுக்கோழிகளில் நல்ல ஜாதி கோழியை தேர்ந்தெடுத்து அளவாக வாங்கினான். குஞ்சுகளை அடை வைத்து பெருக்கிக்கொள்ளலாம் என்பது எண்ணம்.
இப்படியாக முதற்கட்ட வேலைகள் முடிவடையவே ஒரு மாதம் ஆகிவிட்டது. அந்த ஒருமாத காலமும் அவனை வீட்டில் பார்ப்பதே அரிதாகிப் போனது. அந்த அளவுக்கு அர்ப்பணிப்போடு அவன் பார்த்துப்பார்த்து பண்ணையை அமைத்தான். அதற்கு பிறகும் அவனால் ஓய்ந்து அமர முடியவில்லை. அதிகாலை மூன்று மணிக்கெல்லாம் பண்ணைக்கு சென்றுவிடுவான்.
இவன் மாடுகளை இடம் மாற்றி கட்டி ஷெட்டை சுத்தம் செய்ய துவங்கிய பிறகுதான் வேலை செய்யும் ஆட்களே வருவார்கள். அவர்கள் வந்ததும் செய்து கொண்டிருந்த வேலையை அவர்களிடம் கொடுத்துவிட்டு சாம்பிராணி புகையை தயார் செய்வான். ஷெட் சுத்தமானதும், இவன் புகைப் போடுவான். ஆட்கள் பால் கறக்க துவங்கிவிடுவார்கள். இவன் கோழிகளை திறந்து கொட்டகை மாற்றினால் வேலையாள் தரையை சுத்தம் செய்து கோழிகளுக்கு தீனி வைப்பான். இந்த வேலை இங்கு நடந்துக் கொண்டிருக்கும் போதே பால் வேன் தோப்புக்குள் நுழைந்துவிடும். விடிவதற்கு முன்பே கறந்த பாலை அளந்து வேனுக்கு ஊற்றிவிட்டு வேண்டும். அப்போதுதான் அவர்கள் காலை ஆறு மணிக்குள் அதை டவுனில் விநியோகம் செய்து முடிக்க முடியும்.
அதன் பிறகும் மீன் குளத்திலும், தென்னந்தோப்பில் அவனுக்கு வேலை இருக்கும். அதையெல்லாம் முடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்து குளித்துவிட்டு காலை உணவை உண்டு முடித்தால் சற்று நேரம் கூட ஓய்விருக்காது. வயல் ஏதாவது வேலையை வைத்துக் கொண்டு அவனை அழைக்கும். மீண்டும் பண்ணைக்கு வந்து ஒரு முறை சுற்றி வந்தால் மீண்டும் பால் கறக்க ஆட்கள் மதியமே வந்துவிடுவார்கள். அப்போதுதான் மலை வரும் பால் வேனுக்கு சரியான நேரத்தில் பால் ஊற்ற முடியும். அவர்களோடு சேர்ந்து மலையமானும் பால் கறந்து வேனுக்கு ஊற்றி கணக்கை குறித்துக் கொண்டு மாலை ஐந்து மணி போலத்தான் மதிய உணவுக்கு வீட்டுக்கு வருவான். சில நேரங்களில் வர முடியாமலும் போகும். கணக்கெடுத்துப் பார்த்தால் இருபத்தி நான்கு மணிநேரத்தில் பதினெட்டு மணிநேரம் பண்ணையிலும் வயலிலுமேதான் செலவிட்டான் மலையமான். உழைப்பென்றால் சாதாரண உழைப்பல்ல. தூக்கத்தை துறந்து, உடலை வருத்தி மிக கடுமையாக உழைத்தான்.
அவனுடைய அந்த கடின உழைப்பை கனிமொழி எள்ளளவும் அங்கீகரிக்கவில்லை. மாட்டுக்காரன் என்று ஏளனமாகத்தான் நினைத்தாள். மாடுகளோடும் கோழிகளோடும் பண்ணையடிப்பவனிடம் வந்து மாட்டிக் கொண்டோமே என்று புழுங்கி கொண்டுதான் இருந்தாள்.
அவன் மனைவி அங்கீகரிக்காத அவனுடைய உழைப்பை அந்த மகாலக்ஷ்மி அகீகரித்தாள். மலையமானின் பொருளாதாரம் மெல்ல முன்னேற்ற பாதையை நோக்கி நகர துவங்கியது.
இதற்கிடையில் இன்னொன்றும் நடந்திருந்தது. மலையமான் பண்ணை அமைக்கும் வேலையில் மும்மரமாக இருந்த சமையத்தில் கனிமொழிக்கு வேலைக்கான அப்பாயிண்ட்மெண்ட் ஆடர் வந்திருந்தது.
வேலையில் சேரும் நாள் வரை அவனுக்கு எதுவும் தெரியாது. அன்று காலை வேலைக்கு கிளம்பி வெளியே வந்துதான் அலமேலுவிடம் விஷயத்தை சொன்னாள். அவருக்கு எதுவுமே புரியவில்லை. ‘என்ன கண்ணு இப்படி பொசுக்குன்னு சொல்ற? மலையனுக்கு சொன்னியா? உங்க அப்பாவுக்கு தெரியுமா?” என்றெல்லாம் கேட்டார். அவள் வழக்கம் போல், “என்னோட அப்பாகிட்ட நா சொல்லிக்கிறேன்.. உங்க பையன்கிட்ட நீங்க சொல்லிக்கங்க” என்று கூறிவிட்டு கிளம்பிவிட்டாள்.
முன்பு ஒருமுறை நடந்தது போலவே அன்றும் அரக்க பறக்க அவர் மகனைத் தேடி பண்ணைக்கு ஓடி விஷயத்தை சொன்னார்.
அவளுடைய தன்னிச்சையான முடிவில் உள்ளுக்குள் கலங்கினாலும் வெளியே எதையும் காட்டிக்கொள்ளவில்லை அவன்.
“வேலைக்கு தானே போறா… படிச்ச பொண்ணு, எத்தனை நாளைக்கு வீட்ல உட்கார்ந்திருப்பா! போகட்டும் விடு” என்று தாய்க்கு சமாதானம் கூறிவிட்டு தன் வேலையில் கவனத்தை திருப்பினான்.
இந்த விஷயம் நாராயணனின் மூலம் அங்கப்பனின் செவியை எட்டிய போது வெகுவாக வருத்தப்பட்டார். மருமகனை சந்தித்து சமாதானம் சொன்னதோடு மகளை அழைத்து கண்டிக்கவும் செய்தார். “படிக்காதவனுக்கு என்னைய கல்யாணம் பண்ணி வச்சதும் இல்லாம, நா வேலைக்கு போகாம அவன் கூட உட்கார்ந்து வறட்டி தட்டணும்னு சொல்றிங்களா?” என்று தந்தையிடம் எகிறிவிட்டு அவள் கோபமாக வீட்டுக்கு வந்த போது அங்கே மலையமான் சாமியாடிக் கொண்டிருந்தான்.
“என்ன நெனச்சுக்கிட்டு இருக்கீங்க எல்லாரும். இந்த வீட்ல ஒரு தும்மல் போடறதுக்குள்ள அங்க போயி பத்த வச்சுட்டு வந்துடறீங்க. அந்த மனுஷன் எதுக்கெடுத்தாலும் என்னைய விசாரிக்க காரை போட்டுக்கிட்டு பண்ணைக்கு வந்துடறாரு..” என்று காட்டுக்கத்துக் கத்தினான்.
“அவரு என்னடா வெளி ஆளா? உன் மாமனார்தானே? உன் கஷ்டத்தை…” என்று நாராயணன் ஆரம்பிக்கும் போதே, “வாய முடுயா மாமா… நா எங்கேயோ போறேன் யருகிட்டேயோ கடன் வாங்கறேன். எப்படியோ கஷ்டப்படறேன். உனக்கு என்னயா வந்தது? எதுக்கு எல்லாத்தையும் அவருகிட்ட போயி சொல்ற?” என்று அவரிடம் சீறினான்.
“மலையா! என்னடா பேசுற நீ?” – அலமேலு அதட்ட, “பேசாம என்னம்மா செய்வான்! அவன்தான் எங்களை வெட்டிவிடறதுலேயே குறியா இருக்கானே” என்று தாமரை கண்ணை கசக்கினாள்.
“அறிவுகெட்ட தனமா பேசாதக்கா. உன் புருஷன்கிட்ட என் பொண்டாட்டி வேலைக்கு போறதை பத்தி நா ஏதாவது சொன்னேனா? எதுக்கு அவருகிட்ட போயி இல்லாததையெல்லாம் சொல்லிட்டு வந்தாருனு கேளு முதல்ல”
“நா என்னடா இல்லாததை சொன்னேன்? அந்த புள்ள உன்கிட்ட சொல்லிட்டு போனிச்சா? சொல்லாம தானே பேக்கை மாட்டிகிட்டு கெளபிடிச்சு” என்று எகிறினார் நாராயணன். மலையமானின் கோபம் எல்லை மீறியது.
“என் பொண்டாட்டி படிச்சவ. அவளுக்கு நல்லது கெட்டது நாளும் தெரியும். உன்கிட்டேயும் என்கிட்டேயும் ஆலோசனை கேட்டுகிட்டுதான் அவ எதையும் செய்யணும்னு இல்ல. நா பண்ணை ஆரம்பிக்கும் போது அவளுக்கிட்ட சொல்லிட்டுதான் ஆரம்பிச்சேன்னா? எதுக்குயா இந்த வேலை உனக்கு?” என்று சத்தம் போட்டான்.
கனிமொழிக்கு தன் காதுகளையே நம்ப முடியவில்லை. ‘அட! பெரியார் பேரனா இவன்! இவ்வளவு முற்போக்கா பேசுறான்! நாம இவனை கஞ்சி காய்ச்சலாம்னு வந்தா இவன் வீட்ல இருக்க எல்லாரையும் கூழே காய்ச்சிகிட்டு இருக்கானே!’ என்று வியந்து போனாள்.
“அட விட்டுத் தொலைடா… நாந்தான் வாயி இருக்க முடியாம புலம்பிகிட்டு கிடந்தேன். அதை கேட்டுட்டு தெரியாத்தனமா அங்க போயி சொல்லிப்புட்டாரு. அதனால என்ன இப்ப குடியா முழுகி போயிட்டு?” – அலமேலு அதட்டிப் பேசினார்.
“அதென்ன இவ்வளவு சாதாரணமா சொல்ற? என்னைய பார்த்து பேசின மாதிரி அந்த மனுஷன் அவளை கூப்பிட்டு பேசியிருந்தா என்ன ஆகும்னு தெரியுமா உனக்கு? அவ பார்க்கற பார்வையிலேயும், திருப்புற திருப்புலேயும் இந்த வீட்ல நீயும் குடியிருக்க முடியாது, நானும் குடியிருக்க முடியாது…” என்றான்.
வெளியே நின்றுக் கொண்டிருந்த கனிமொழி அதிர்ச்சியில் ஒரு நொடி வாயை பிளந்தாள். மறு நொடியே, ‘அவ்வளவு பயமாடா உனக்கு என்மேல!’ என்று எண்ணி சிரித்தாள். அதுதான் திருமணத்திற்கு பிறகு அவளிடம் தோன்றிய முதல் சிரிப்பு. மலையமானின் பேச்சை மறுத்து யாரும் பேசாதது அவளுக்கு இன்னும் உவப்பாக இருந்தது.
நிமிர்ந்த நடையுடன் வீட்டுக்குள் நுழைந்தாள். அவளைக் கண்டதும் மற்றவர்கள் எதுவுமே நடக்காதது போல் திசைக்கு ஒருவராக மெல்ல நழுவினார்கள். அந்த கணம் கனிமொழி தன்னை ஒரு ராணி போல் உணர்ந்தாள். அந்த வீடே தனக்கு கட்டுப்பட்டிருப்பதை ஒருவித ஆதிக்க மனப்பான்மையோடு எண்ணிப்பார்த்தாள். அந்த உணர்வு அவளுக்கு பிடித்திருந்தது.
Comments are closed here.