Share Us On
[Sassy_Social_Share]கனியமுதே! – 10
1721
0
அத்தியாயம் – 10
திருமணம் ஆன நாளிலிருந்து கனிமொழி அந்த வீட்டில் ஒரு தற்காலிக விருந்தாளி போலத்தான் இருந்தாள். வீட்டு வேலைகள் எதையும் விரல் நுனியால் கூட தொட்டதில்லை. அடுப்பு எந்த திசையில் அமைந்திருக்கிறது என்பதைக் கூட கவனித்ததில்லை. வீட்டுக்கு யார் வந்தாலும் போனாலும் அவர்களிடம் முகம் கொடுத்து பேசியதில்லை.
அதுமட்டும் அல்ல.. அவள் தினமும் கல்லூரிக்கு சென்று வந்து கொண்டிருந்ததால் அவளுடைய தேவைகள் எதற்கும் அவள் மலையமானையோ அல்லது மற்றவர்களையோ சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போனது.
அலமேலுவின் எளிமையான சமையல் அவளுக்கு ருசிப்பதில்லை. எனவே பிரட் ஜாம் நூடுல்ஸ் பிஸ்கெட்ஸ் போன்ற இன்ஸ்டன்ட் உணவு பாக்கெட்டுகளோடு அவள் வீட்டுக்கு வரும் நாட்கள் அதிகமாகியிருந்தன.
வேலைக்கு சேர்ந்த முதல் இரண்டு நாட்கள் கல்லூரிக்கு பேருந்தில் சென்று வந்து கொண்டிருந்தவள் மூன்றாவது நாள் மாலை பெற்றோர் வீட்டுக்குச் சென்று அங்கிருந்த தனது பழைய ஸ்கூட்டியை போக்குவரத்து வசதிக்காக எடுத்துக்கொண்டு வந்துவிட்டாள்.
அவள் தேவையில்லாமல் ஊர் சுற்றும் பெண் இல்லை என்றாலும், ஸ்பெஷல் க்ளாஸ் மற்றும் மீட்டிங் காரணமாக வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் இருட்டிய பிறகு தான் வீட்டுக்கு வருவாள். அதை பற்றி வீட்டில் இருப்பவர்களிடம் முன்கூட்டியே சொல்லிவிட்டு செல்ல வேண்டும் என்கிற அக்கறை அவளுக்கு அறவே இல்லை.
அவள் தாமதமாக வீட்டுக்கு வரும் நாட்களிலெல்லாம் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு வழி மேல் விழி வைத்து காத்திருப்பது அலமேலுவிற்கு வழக்கமான ஒன்றாகிப் போனது.
திடகாத்திரமான ஆண் பிள்ளைகளே வண்டியை கொண்டு போய் லாரியில் செருகுவதும், மரத்தில் மோதுவதுமாக இருக்கும் காலத்தில் இந்த பெண் ஊது பத்தி போல் இருந்துக் கொண்டு இவ்வளவு பெரிய வண்டியை விர்ரென்று விரட்டிக் கொண்டு போவதும் வருவதுமாக இருக்கிறாளே என்கிற பயம் அவருக்கு.
அவளுக்கு எதை பற்றியும் கவலை இல்லை.. யாரை பற்றியும் அக்கறை இல்லை.. தான்.. தன்னுடைய பொருட்கள்.. தன்னுடைய வசதி என்று தனக்கென்று ஒரு தனி வாழ்க்கையை அந்த வீட்டுக்குள்ளேயே அமைத்துக் கொண்டாள். அதற்குள் மலையமானும் நுழைய முடியாது.. மற்றவர்களும் நுழையமுடியாது.
மனைவியின் மெத்தனமான நடவடிக்கைகளை கவனிக்கவோ கண்டிக்கவோ மலையமான் அதிகம் வீட்டில் இருப்பதில்லை. அவனுடைய பொழுது பண்ணையை மேம்படுத்துவதிலேயே கழித்துக் கொண்டிருந்தது. அலமேலு அனைத்தையும் தனக்குள்ளேயே போட்டு புதைத்துக் கொண்டார். மகனுடைய கவனத்திற்கு எதையுமே கொண்டு செல்லவில்லை.
ஏற்கனவே தாமரை இலை தண்ணீர் போல் ஒட்டாத வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டிருக்கும் மகனுக்கும் மருமகனுக்கும் இடையில் இது ஒரு கூடுதல் பிரச்சனையாகிவிடக் கூடாது என்பது அவருடைய எண்ணம்.
தாமரைக்கு இங்கு நடக்கும் எதுவும் முழுமையாக தெரியவில்லை என்றாலும் வீட்டுக்கு வரும் போதெல்லாம், வயதான தாய் ஒற்றை ஆளாக வீட்டு வேலை தோட்ட வேலை இரண்டையும் சேர்த்து செய்வதோடு அடுப்பிலும் கிடந்து வாடுவதை கண்டு அவளுக்கு பொறுக்க முடியவில்லை. கனிமொழியை கண்டால் ஜாடை மாடையாக ஏதாவது பேசுவாள்.
‘ஒரு நாள் இருக்குடி உனக்கு’ என்று கனிமொழி மனதிற்குள் கருவி கொண்டிருந்தாள்.
ஒரு முயற்சி எடுத்தால் அதில் ஆயிரம் தடங்கல்கள் வரும். அவற்றையெல்லாம் சமாளித்துத்தான் வெற்றி கனியை ருசிக்க வேண்டியிருக்கும். மலையமானுக்கு மட்டும் வெற்றி சிறப்புச் சலுகையில் சுலபமாக கிடைத்துவிடுமா என்ன? அவனுடைய முயற்சிக்கும் தடங்கல் வந்தது. சின்ன தடங்கல் தான்.. ஆனால் சீரியஸானது.
அவனுடைய பண்ணையில் இருக்கும் பால் வளம் திடீரென்று குறைந்துவிட்டது. என்ன ஏதென்று தெரியாமல் தடுமாறிப் போனவன், கால்நடை மருத்துவரை அழைத்து வந்து ஆலோசனை கேட்டான். .அதன் பிறகுதான் மாடுகளுக்கு ஊட்டச்சத்து பற்றாகுறை ஏற்பட்டிருப்பது தெரிந்தது.
வைக்கோல், புண்ணாக்கு பருத்திக்கொட்டை என்று அனைத்தையும் நேரம் தவறாமல் கொடுத்துக் கொண்டுதான் இருந்தான். ஆனால் பசும் புல்லின் தேவை அதிகமிருந்தது. ஓரிரண்டு மாடுகள் என்றால் வயற்காட்டுப் பக்கம் அவிழ்த்துவிட்டால் மேய்ந்துவிட்டு வந்துவிடும். ஆனால் பண்ணை மாடுகளை அப்படி தரிசில் அவிழ்த்துவிட்டு மேய்க்க முடியாது. எனவே பக்கத்தில் இருந்த அரசு பண்ணையிலிருந்து தீவன புல் விலைக்கு வாங்கி போட்டுக் கொண்டிருந்தான். மாடுகளின் எண்ணிக்கை அதிகம் இருந்தால் கட்டுபடியாகவில்லை. எனவே தீவன புல்லின் அளவை குறைத்து வைக்கோலின் அளவை கூட்டி சமாளித்தான். விளைவு பால் வளம் குறைந்து போயிற்று. மீண்டும் அரசு பண்ணையிலிருந்து மலையமானின் பண்ணைக்கு தினமும் இரண்டு மினி ட்ரக் பசும் புல் இறக்குமதியாக துவங்கியது.
தோசைக்காரியிடம் மாவு விலைக்கு வாங்குவது போல் தன்னையுடைய தினப்படி தேவைக்கு பிறரை எதிர்பார்த்து நிற்பது சரியாக படவில்லை அவனுக்கு. எனவே தானே தன்னுடைய பண்ணையில் ஒரு இடத்தை ஒதுக்கி தீவன புல்லை பயிரிடலாம் என்று யோசனை செய்தான். அதற்காக நிலத்தை தேர்வு செய்ய பார்த்தால், தோப்பு முழுவதும் தென்னை மர நிழல். வயலோ பொன் விளையும் பூமி. அங்கு கொண்டு போய் இந்த புல்லை பயிரிட முடியாது. என்ன செய்யலாம் என்று யோசித்துவிட்டு நாராயணனிடம் உதவி கேட்டான்.
அவர் பயன்படுத்தாமல் தரிசாக போட்டு வைத்திருக்கும் நிலத்தில், தான் தீவன புல் பயிரிட்டு கொள்வதாகவும், ஈடாக குத்தகை பணம் ஆண்டு தோறும் கொடுத்து விடுவதாகவும் கூறினான்.
சற்றும் யோசிக்காமல், “நா அதுல இந்த வருஷம் வெள்ளாமை பண்ணலாம்னு இருக்கேண்டா” என்றார்.
அவன் அதை எதிர்பார்க்கவில்லை. அவர் கேட்கும் போதெல்லாம் அவன் எண்ணிப்பார்த்து கொடுத்ததில்லை.. அள்ளி தான் கொடுப்பான். அந்த உரிமையில் தான் உதவி கேட்டு வந்தான். தனக்கு எதையும் அவர் மறுக்க மாட்டார் என்று நம்பினான். ஆனால் ஏமாற்றம் தான் மிஞ்சியது. தாயும் பிள்ளையாக இருந்தாலும் வாயும் வயிறும் வேறுதான் என்று எண்ணிக் கொண்டு “சரி மாமா.. ஒன்னும் பிரச்சனை இல்ல… நா பார்த்துக்கறேன்” என்று கூறிவிட்டு எழுந்தான்.
தம்பியின் தலை மறைந்ததும், “நமக்கு ஒண்ணுன்னா அவன்கிட்ட தானே போயி நிக்கிறோம்? உங்ககிட்ட அவன் ஓசியிலையா கேட்டான்? குத்தகை பணம் தான் கொடுக்குறேன்னு சொன்னான்ல? எப்படி இல்லைன்னு சொன்னிங்க?” என்று கணவனிடம் எகிறினாள்.
அதைவிட ஒரு படி அதிகமாக மனைவியிடம் எகிறினார் நாராயணன். “அவனோட மாமனார் கணக்கிலாம சொத்து வச்சுக்கிட்டு காத்துகிட்டு இருக்காரு. அங்க போயி கேட்க
வேண்டியது தானே? எதுக்கு இங்க வந்து நிக்கிறான்?” – அவருடைய கோபம் அது ஒன்றுதான்.
“அந்த மனுஷன் கிட்ட அவ்வளவு காசு இருக்கு. இவன் ஏன் அடஞ்சுக்க மாட்டேங்கிறான்? இவனால நமக்கும் ஒன்னும் கிடைக்க மாட்டேங்குதே! எவ்வளவு ஆசையா அந்த கல்யாணத்தை பண்ணி வச்சோம்! ஒண்ணுக்கும் உபயோகம் இல்லாம மாட்டை வாங்கி கட்டி வச்சுக்கிட்டு அதுக்கு புல்லுக்கு என்கிட்ட வந்து நிக்கிறான்..” என்று சத்தம் போட்டு மனைவியை அடக்கினார்.
நாராயணன் அதோடு விட்டுவிடவில்லை. அங்கப்பனை தேடித் சென்று விஷயத்தை சொன்னார். கூடவே இப்படி அவரிடம் விஷயத்தை கொண்டு வந்து சேர்ப்பதற்காக தன்னிடம் அவன் சத்தம் போட்டு ரகளை செய்ததையும் சேர்த்து சொல்லிவிட்டு சென்றார்.
இனி தானாக சென்று உதவ முடியாது. மலையமானும் கேட்க மாட்டான். கையை கட்டிப்போட்டது போல் இருந்தது அங்கப்பனுக்கு. மருமகன் தன்னிடம் நெருங்கி வராததற்கு காரணம் தன் மகள் அவனிடம் காட்டும் விலகல் தான் என்பதை அனுபவம் அவருக்கு உணர்த்தியது.
எனவே மகளை அலைபேசியில் அழைத்து நல்லவிதமாக பேசினார். அவனுடைய கஷ்டத்தை எடுத்து சொல்லி புரிய வைக்க முயன்றவர் கடைசியாக, “நீ மாப்பிளைகிட்ட பேசும்மா. நா சொன்னேன்னு எதையும் சொல்லிக்காம நீயா பேசுற மாதிரி பேசி நம்ம கொள்ளையில பயிர் பண்ணிக்க சொல்லு” என்றார்.
தந்தை பேசிய எதையும் குறுக்கிடாமல் கேட்ட கனிமொழி, “தேவை இருக்கறவங்க தானா வந்து கேட்பாங்க. நாம ஒன்னும் வலிய போயி உதவி செய்யணும்னு அவசியம் இல்ல” என்றாள்.
அங்கப்பனுக்கு கோபம் வந்துவிட்டது. “என்னம்மா நீ? அங்க அந்த மனுஷன் அவ்வளவு கஷ்டப்படறாரு. நீ பொறுப்பிலாம பேசுற” என்று எரிந்து விழுந்தார்.
“அவ்வளவு அக்கறை இருந்தா நீங்களே பேசிக்கங்க. என்னை எதுக்கு தூது அனுப்புறிங்க? உங்க ரெண்டு பேருக்கும் இடையில நா என்ன கொரியர் சர்வீஸா? போங்கப்பா” என்று பதிலுக்கு அவளும் எரிந்து விழுந்துவிட்டு அழைப்பை துண்டித்துவிட்டாள்.
அங்கப்பன் அதோடு நின்றுவிடவில்லை. மருமகனிடம் பேச சொல்லி தொடர்ந்து மகளுக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டே தான் இருந்தார். ஆனால் அவளோ எதற்கும் அசைந்து கொடுக்காத சகலகலா வில்லியாக இருந்தாள்.
வாய் திறந்து கேட்டும் நாராயணன் தனக்கு உதவ மறுத்துவிட்டது பெரிய வருத்தம் அவனுக்கு. அவர் இடத்தில் தான் இருந்திருந்தால் வெறும் இடத்தை மட்டும் கொடுத்திருக்க மாட்டோம்.. பயிரிட்டு தண்ணீர் பாய்ச்சி புல்லை வளர்த்தே கொடுத்திருப்போம் என்று எண்ணினான். மனதிற்குள் ஒரு கசப்பான உணர்வு தோன்றியது. அதை உள்ளுக்குள்ளேயே விழுங்கிக் கொண்டான். இந்த உணர்வுகளையெல்லாம் வளரவிட்டால் உறவில் விரிசல் விழுந்துவிடும் என்று தன்னைத்தானே தேற்றி கொண்டு வெளி ஆட்களிடம் பேசிப் பார்த்தான். எங்கெங்கோ அலைந்தான். தோதான இடம் ஒன்றும் கிடைக்கவே இல்லை. அப்போதுதான் அவனுடைய ஒன்றுவிட்ட சித்தப்பா ஒருவர் தானாக அவனை தேடி வந்தார்.
பழனி சித்தப்பாவிடம் அப்படி ஒரு இடம் இருப்பது மலையமான் அறிந்ததுதான். அது ஒன்றுக்கும் உதவாத இடம். எதை பயிரிட்டாலும் விளைச்சல் இருக்காது. பூச்சிவிழுந்த நிலம் என்று பல ஆண்டுகளாக தரிசாகவே போட்டு வைத்திருந்தார். அதில் இப்போது ஆள் உயரத்திற்கு முற்செடிகளும் காட்டுப் பூண்டும் காடாக மண்டிக் கிடந்தது.
பழனி தன்னுடைய இடத்தைப் பற்றி கூறியதும் ‘அந்த இடமா!’ என்று அவனுக்கு மலைப்பாகத்தான் இருந்தது.
அஞ்சு வருஷத்துக்கு குத்தகைக்கு எழுதிக் கொடுக்குறேன். குத்தகைக்கு பணமெல்லாம் ஒன்னும் வேண்டாம். என்னோட இடத்தை சுத்தம் பண்ணி ஏதாவது மருந்து கிருந்து அடிச்சு அந்த பூமியை உறுப்புடியாக்கி கொடு போதும்” என்றார். அவனுக்கும் வேறு இடம் கிடைக்கவில்லை. ஐந்து வருட குத்தகைக்கு கொடுக்கிறேன் என்கிறார். முயன்று பார்க்கலாம் என்று எண்ணினான்.
பொக்லிங்கை நாள் வாடகைக்கு எடுத்திருந்தான் மலையமான். பொக்லிங் ட்ரைவர் செடிகளை வெட்டி மண்ணை தோண்டி வேர்களையும் அழித்து ஓரமாக தள்ளிவிட அதை கூலி ஆட்கள் அள்ளி அப்புறப்படுத்தினார்கள். மேற்பார்வையோடு நிறுத்திக்கொள்ளாமல் அவர்களோடு சேர்ந்து களத்தில் இறங்கி வேலை பார்த்தான் மலையமான்.
அவன் கையிலும் காலிலும் முற்களை குத்திக்கொண்டு காயத்தோடு வரும் போது அலமேலுவின் தாய் மனம் பதறும். “எதுக்குடா இந்த மாதிரி பண்ற?” என்று அவர் புலம்பலை ஆரம்பிக்கும் போதே, “அட சும்மா இரும்மா” என்று ஒரே அதட்டலில் தாயை அடக்கிவிடுவான் மலையமான்.
அதற்குமேல் அந்த பெண்மணியால் என்ன செய்ய முடியும்? அவன் காதில் விழாமல் கண்டதையும் புலம்பியபடி, நல்லெண்ணெயையும் கள்ளிப்பாலையும் கலந்து அவன் காயத்துக்கு மருந்து போடுவார். மறுநாளே மீண்டும் அந்த வேலைக்கு போய் புதுக் காயங்களோடு வருவான். முதியவளுடைய புலம்பல்களும் அவனுடைய அதட்டல்களும் தொடர்ந்துக் கொண்டிருந்தன.
மகளிடம் சொல்லிச் சொல்லி பார்த்த அங்கப்பன் ஒரு கட்டத்திற்கு மேல் அலமேலுவிடம் வந்து நின்றார்.
“என்னக்கா இது? மாப்ள எதுக்கு அந்த காட்டுக்குள்ள கெடந்து கஷ்டப்படறாரு? நம்மகிட்ட இல்லாத இடமா. நீங்க கொஞ்சம் சொல்லுங்கக்கா” என்றார்.
அன்று இரவு மலையமான் வீட்டுக்கு வந்ததும் அலமேலு விஷயத்தை சொன்னார். “இந்த தடவ யாரும் அவருகிட்ட போயி சொல்லல. அவரேதான் நீ படர கஷ்டத்தை பார்க்க முடியாம வந்து சொல்லிட்டு போறாரு. வெளியில குடுக்குற குத்தகையை அவருகிட்ட கொடுத்துட்டு வேலையை பாரேம்ப்பா” என்றார்.
அதிகம் பேசவோ சத்தம் போடவோ தெம்பில்லாதவன் போல் “வேண்டாம்மா” என்று மட்டும் சொல்லிவிட்டு, கயிற்றுக் கட்டிலை தூக்கிக் கொண்டு வாசலுக்கு போனான் அவன்.
அலமேலுவின் வயிறு எரிந்தது. மகன் தன் வாழ்க்கையில் ஒரு இன்பத்தையும் அனுபவிக்கவில்லையே! கஷ்டப்பட மட்டுமே பிறந்தவனா என்று கலங்கியபடி படுக்கைக்கு மகள் வீட்டை நோக்கி நடந்தார்.
‘யார் எப்படி போனால் எனக்கென்ன!’ என்று நடப்பதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருக்க கனிமொழி எவ்வளவோ முயன்றுப் பார்த்தாள். ஆனால் ஒரே வீட்டில் இருப்பதாலோ என்னவோ ஓரளவுக்கு மேல் மலையமானின் கஷ்டங்களை பார்க்கும் போது அவளுக்கும் சங்கடமாகத்தான் இருந்தது.
இவன் கேட்டும் நாராயணன் உதவி செய்யவில்லை என்பதை அலமேலுவின் புலம்பல்கள் மூலம் அவள் அறிந்திருந்தாள். என்னவோ தெரியவில்லை… நாராயணன் மீது அவளுக்கு கோபம் வந்தது. அவளுக்கு ஏன் கோபம் வர வேண்டும்? யாருக்கு யார் உதவி செய்தாலும் செய்யவில்லை என்றாலும் அவளுக்கு என்ன? யார் மீது அவளுக்கு அக்கறை? எதை பற்றியும் அவள் யோசிக்கவில்லை.
‘உனக்கு நல்லா வேணும்டா.. என்னோட அப்பா உனக்கு ஏதாவது செய்ய முடியாதான்னு உன்னையே சுத்தி சுத்தி வர்றாரு… அவரை ஒதுக்கிட்டு ஊர்ல இருக்கவன்கிட்டயெல்லாம் போயி நிக்கிறல்ல. அதுக்குதான் அந்த காட்டு முள்ளு உன் கையையும் காலையும் இப்படி கிழிச்சுவிட்டு அனுப்பியிருக்கு’ என்று மீண்டும் அவன் மீதே தன் கோபத்தை திருப்பிவிட்டு, தன் வீம்பையும் பிடிவாதத்தையும் இறுக்கிப் பிடித்துக் கொண்டாள்.
மனைவியின் பிடிவாதமும் கோபமும் வழக்கமானதுதான் என்பதால் மலையமான் எதுவும் அலட்டிக்கொள்ளவில்லை. அவன் தன் போக்கில் வேலையிலேயே குறியாக இருந்தான்.
முழுதாக ஒரு மாதம் பிடித்தது அந்த நிலத்தை சுத்தம் செய்து உழுது, உரம் அடித்து , நீர் பாய்ச்சி பதப்படுத்த. அதன் பிறகு தீவன புல்லை பயிரிட்டு பஞ்சகவ்யம் தெளித்து பூச்சிகளிடமிருந்து செடிகளை பாதுகாத்தான். செழித்து வளரும் பசும்புல்லை பார்க்கும் போது பட்ட கஷ்டமெல்லாம் மறந்து போய் மனம் நிறைந்தது அவனுக்கு.
Comments are closed here.