Share Us On
[Sassy_Social_Share]கனியமுதே! – 11
1721
0
அத்தியாயம் – 11
அது ஒரு ஞாயிற்றுக் கிழமை. கனிமொழி வீட்டில் இருந்த நாள். எப்பொழுதும் பழைய கைலியும் டீஷர்டுமாக விடிவதற்கு முன்பே பண்ணைக்கு போகிறவன் சாப்பாட்டுக்கு மட்டும் தான் வீட்டுக்கு வருவான். அன்று என்னவோ வழக்கத்துக்கு மாறாக பால் கறந்து வேனுக்கு ஊற்றியதும் வீட்டுக்கு வந்து குளித்துவிட்டு வெள்ளையும் சொள்ளையுமாக வெளியே கிளம்பினான். என்ன ஏதென்று யாரும் கேட்கவில்லை. கனிமொழியும் கண்டுகொள்ளவில்லை.
மாலை மூன்று மணியிருக்கும்.. கை நிறைய துணிக்கடை பைகளோடு திரும்பி வந்தான். அதன் பிறகுதான் விஷயம் தெரிந்தது.
ஊரில் அம்மன் கோவில் திருவிழாவிற்கு காப்புக் கட்டியிருந்தார்கள். மூன்று நாள் திருவிழா. முதல் நாள் மதுக்காட்டுதல், இரண்டாம் நாள் காவடி, மூன்றாம் நாள் பல்லக்கு.
பொங்கல் தீபாவளியைவிட திருவிழாவைதான் அந்த கிராமத்தில் சிறப்பாக கொண்டாடுவார்கள். வெளியூரிலிருந்து விருந்தாளிகளை அழைப்பது, புது துணி எடுப்பது, பலகாரம் செய்வது, கறி விருந்து ஆக்குவது என்று அமர்க்களமாக கொண்டாடுவார்கள்.
“ஊர்ல இருக்கவனெல்லாம் குடும்பத்தோட டவுனுக்கு துணி எடுக்க போயி அதையே ஒரு திருவிழா மாதிரி கொண்டாடிட்டு வர்றானுங்க. நீ என்னடான்னா தனிக்காட்டு ராஜா மாதிரி நீயா போயி உனக்கு புடிச்ச துணியா வாங்கியாந்துட்டு, மெதுவா எங்களை கூப்பிட்ற” என்று புலம்பிக்கொண்டே வீட்டுக்குள் நுழைந்தாள் தாமரை.
மகள் குரல் கேட்டு கொல்லைப்புறத்திலிருந்து உள்ளே வந்த அலமேலு மகளையும் பேத்தியையும் இன்முகமாக வரவேற்று, “நடந்தா வந்திங்க? அவரை கொண்டு வந்து விட சொல்லியிருக்க வேண்டியதுதானே?” என்றார்.
“அவரு எங்க வீட்ல இருக்காரு… போன் பண்ணி கூப்பிட்ட உன் மகன் வண்டியை எடுத்துக்கிட்டு ஒரு எட்டு என் வீட்டுக்கு வந்திருக்கலாம். அதை சொல்றதுக்கு யாரு இருக்கா இந்த வீட்ல” என்று தாயிடம் நொடித்துக் கொண்டாள்.
தமக்கையின் பேச்சை காதில் வாங்காமல், “அடியேய் அம்மு குட்டி… எங்கடி போன இத்தனை நாளா? மாமாவை பார்க்க வரவே மாட்டேங்கிற!” என்று தாயை வால் பிடித்துக் கொண்டு வந்த அபியை தூக்கிக் கொஞ்சினான் மலையமான்.
‘ஒரு கஷ்டம்னு போயி நின்னப்ப கை கொடுக்க முடியல. இப்ப எந்த உரிமையில்லை இவ்வளவு எகத்தாளமா பேசிகிட்டு வருது இந்த அம்மா! எல்லாம் இவன் கொடுக்கற இடம். கொஞ்சமாவது ரோஷம் இருக்கா! அம்மாகிட்ட கூட எகிறுவான் ஆனா அக்காகிட்ட வாயையே திறக்க மாட்டான்’ – கடுப்புடன் எண்ணியபடி, அவர்கள் வீட்டுக்குள் நுழைந்ததுமே நெல்லிமரத்தடிக்கு செல்லலாம் என்று வெளிப்புறம் நோக்கி அடியெடுத்து வைத்தாள் கனிமொழி.
குழந்தையை தூக்கிக் கொஞ்சிக் கொண்டிருந்தவனின் கவனம் சட்டென்று மனைவியிடம் திரும்பியது.
“எங்க போற? எல்லாருக்கும் தான் டிரஸ் வாங்கிட்டு வந்திருக்கேன். உட்கார்ந்து பாரு” என்று அவளை தடுத்தான்.
அவனுடைய பேச்சை கேட்க அவளுக்கு விருப்பம் இல்லை. ஆனால் தாமரைக்கு முன் அவனை அவமானப்படுத்தவும் முடியவில்லை.
கூடத்தில் சுவற்றோரமாக இருந்த பைகளை பார்த்ததும், தரையில் அமர்ந்து ஒவ்வொரு பையாக எடுத்து பிரித்துப் பார்க்க துவங்கினாள் தாமரை. அவளுக்கு சமமாக தரையில் அமர மனமில்லாமல், அங்கே கிடந்த பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்து, தாமரை விரித்துப் பார்க்கும் துணிகளை தானும் பார்ப்பது போல் பாவனை செய்தாள் கனிமொழி.
முதலில் அபி குட்டிக்கு அழகான ஃபராக் இருந்தது. அடுத்து அலமேலுவுக்கு அம்சமான சேலையும் நாராயணனுக்கு மினிஸ்டர் வைட் வேட்டி சட்டையும் இருந்தது.
“மாமாவுக்கு தான் க்கா அது. நல்லா இருக்கா?”
“ம்ம்ம்ம்…ம்ம்ம்… வேட்டி சட்டையில என்ன வித்தியாசம்! எல்லாம் ஒரே மாதிரிதானே இருக்கும்” – தாமரையின் பேச்சை கனிமொழி மட்டும் அல்ல, அலமேலுவே ரசிக்கவில்லை.
‘இவளை கடைக்கு கூட்டிட்டு போகலைன்னு எவ்வளவு மோடி போடுறா! ஒவ்வொரு காசையும் எம்புள்ள எவ்வளவு கஷ்டப்பட்டு சம்பாரிக்கிறான்! கொஞ்சமாவுது புத்தி இருக்கா இவளுக்கு’ என்று மனதிற்குள் புலம்பினார். வெளியில் சொல்லவா முடியும்! ஒப்பாரி வைத்துக் கொண்டு போய்விடுவாள். பிறகு பத்து நாட்களுக்கு இந்த பக்கம் திரும்ப மாட்டாள். பேத்தியை பார்க்காமல் இருக்க முடியாதே! வாயை இறுக்கமாக மூடிக் கொண்டு மெளனமாக அமர்ந்திருந்தார்.
வழக்கம் போல் மலையமான் தமக்கையின் பேச்சை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. “ம்மா… உனக்கு பிடிச்சிருக்கம்மா? இந்த கலரு உன்கிட்ட இல்லைல…” என்று தாயிடம் கேட்டான்.
“எனக்கு நல்ல்ல்லா புடிச்சிருக்குப்பா. அருமையா இருக்கு கலரு” – ஆனந்தத்துடன் கூறினார் தாய். தாயின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியில் அவன் அகம் மகிழ்ந்துப் போனான்.
அடுத்து தாமரை எடுத்தது ஒரு பட்டுப்புடவை பை.. தமக்கையின் கையில் அந்த பை வந்ததுமே மலையமானின் பார்வை மனைவியிடம் சென்றது.
கணவனின் பார்வை பார்வை தன் மீது நிலைத்திருப்பதை அவளால் உணர முடிந்தது. நிமிர்ந்து பார்க்கக் கூடாது என்று நினைப்பதற்குள் அவள் பார்வை தானாக உயர்ந்து அவன் கண்களை சந்தித்துவிட்டது.
ரசனையான… அன்பா… அல்லது அதற்கும் மேல் ஏதாவதா! என்ன பார்வை அது! அவனுடைய முரட்டு முகத்துக்கு சம்மந்தமே இல்லாத அந்த பார்வை அவளை குழப்பியது. அன்யோன்யமான பார்வையை பறிமாறி அவர்கள் கண்களால் உறவாடிக் கொண்ட சில நொடி பொழுதில்,
“பதினைஞ்சாயிரமா!” என்று மலையிலிருந்து உருட்டிவிடப்பட்ட பாறை போல் அவர்களுடைய மோனத்தில் குறுக்கிட்டது தாமரையின் கடினமான குரல்.
நொடியில் அவர்களுடைய கவனம் அவள் பக்கம் திரும்பியது. அந்த பட்டுப்புடவையை திருப்பித் திருப்பி பார்த்துக் கொண்டிருந்தவள் முகத்தில் அதிர்ச்சியும் அதை மறைக்கும் முயற்சியும் இருந்தது.
“யாருக்குப்பா இந்த புடவை?” – மருமகளுக்குத் தான் எடுத்திருப்பான் என்று தெரிந்தாலும் அதை அவன் வாயால் சொல்லட்டும் என்றே கேட்டார் அலமேலு.
“கனிக்குதாம்மா.. கல்யாணத்தன்னைக்கு நல்ல புடவை எடுக்க முடியல. அதான் இப்ப எடுத்துக்கிட்டு வந்தேன்” – கனிந்த குரலில் கூறினான்.
என்னதான் அவள் கோப முகமூடியை போட்டுக் கொண்டாலும், பிடிவாதத்தை வலுக்கட்டாயமாக இழுத்துப் பிடித்துக் கொண்டாலும் அந்த கணம் அவள் மனதிற்குள் ஒரு சின்ன மகிழ்ச்சி தலை தூக்கியதை அவளால் மறுக்கவே முடியாது.
“நல்லா இருக்குப்பா. இங்க குடு தாமரை பார்ப்போம்” – மகளிடமிருந்து புடவையை கையில் வாங்கிப் பார்த்த அலமேலு, அதை மருமகளிடம் நீட்டி, “கையில வாங்கி பாரு கண்ணு…” என்றார்.
மறுக்க தோன்றாமல் அதை கையில் வாங்கிய கனிமொழி புடவையை மெல்ல வருடினாள். ஏனோ தெரியவில்லை.. அவள் மனம் நெகிழ்ந்தது. நெஞ்சுக்குள் ஏதோ அடைப்பது போல் தோன்றியது.
மலையமானின் முகத்தை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. “நல்லா இருக்கு” என்று கூறி புடவையை மீண்டும் அலமேலுவிடம் நீட்டினாள்.
“பெட்டியில வச்சுக்க கண்ணு… திருவிழாவுக்கு கட்டிக்கிட்டு போகலாம்” என்றார்.
அதற்கு என்ன பதில் சொல்வது என்று கனிமொழி யோசிப்பதற்குள், “சரிம்மா… நா கிளம்புறேன். அவரு இந்நேரம் வீட்டுக்கு வந்திருப்பாரு” என்று எழுந்தாள் தாமரை.
சட்டென்று தமக்கையின் பக்கம் திரும்பிய மலையமான், “எங்கக்கா போற! உன்னோட புடவையை எடுத்து பாரு” என்றான்.
தாமரையின் முகம் வாடியிருந்தது. அன்று வரை அந்த வீட்டில் அவளுக்குத்தான் எல்லா சிறப்பும். அவளுக்கு மிஞ்சித்தான் மற்றவர்களுக்கு… இன்று எல்லாம் மாறிவிட்டது. கீழே பிடித்துத் தள்ளப்பட்டுவிட்டது போல் உணர்ந்தாள். அவளுக்குள் ஏதோ ஒரு எதிர்மறை உணர்வு… தப்பென்று அவளுக்கே தெரிகிறது. ஆனாலும் தவிர்க்க முடியவில்லை.
“இருக்கட்டும் மலையா.. நீ நல்லாத்தான் வாங்கிட்டு வந்திருப்ப. நா வீட்ல போயி பார்த்துக்கறேன். லேட் ஆயிட்டு” என்றாள்.
“இந்த ஒரு புடவையை பார்க்க உனக்கு எவ்வளவு நேரம் ஆயிடும்? லேட் ஆனா நா கொண்டு வந்து விடறேன். நீ பையை பிரிச்சு பாரு” என்றான் பிடிவாதமாக.
அதற்கு மேல் தட்டி பேச முடியாமல் பிரித்துப் பார்த்தாள். நல்ல புடவையாகத்தான் இருந்தது. ஆனால் பட்டுப்புடவை இல்லை… விலையும் பதினைந்தாயிரம் இல்லை… சிரமப்பட்டு சிரித்து, “நல்லா இருக்கு” என்றாள்.
கனிமொழியின் புடவையை பார்க்காமல் இதை முதலில் பார்த்திருந்தால் நிச்சயமாக மகிழ்ந்திருப்பாள் தான். ஆனால் இப்போது முடியவில்லை. உரிமையாக தம்பியிடம் சண்டை கூட போட முடியாத அளவுக்கு அவளுக்குள் என்னவோ செய்தது. அதற்கு மேல் அங்கே தாமதிக்காமல் கிளம்பிவிட்டாள்.
வீடு வந்து சேர்ந்த பிறகும் அவளால் அவளுடைய எண்ணப்போக்கை கட்டுப்படுத்த முடியவில்லை. கண்ணீர் விட்டு அழுதாள். ஒருவேளை அவளுடைய கணவன் அவளை தம்பியின் கையை எதிர்பார்க்காத நிலையில் வைத்திருந்தால் அவளுக்கு இப்படியெல்லாம் தோன்றாதோ என்னவோ! மனம் பாரமாகவே இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக தன்னை தேற்றி கொண்டாள்.
தம்பி தனக்காக எவ்வளவோ செய்திருக்கிறான்.. இப்போது அவனுடைய வாழ்க்கைக்காக சிலவற்றை செய்கிறான். செய்யட்டுமே… அவன் நன்றாக இருந்தால் தானே நமக்கும் நிம்மதி.. அவன் வாழ்க்கை கெட்டு சீரழிந்து போனால் நமக்கு தாங்க முடியுமா என்றெல்லாம் ஏதேதோ எண்ணி தன்னுடைய எதிர்மறை எண்ணங்களை கட்டுக்குள் கொண்டு வந்தாள். அதன் பிறகு உண்மையான மகிழ்ச்சியோடு தம்பி வாங்கி கொடுத்த புடவையை ஒருமுறை எடுத்து பார்த்தாள். தோளில் போட்டு கண்ணாடிக்கு முன் நின்று அழகு பார்த்தாள். அப்போதும் அவள் கண்களில் கண்ணீர் வந்தது.. அது ஆனந்தத்தில் வந்த கண்ணீர்.
அன்று இரவு அலமேலு மகள் வீட்டுக்கு கிளம்பிய பிறகு கட்டிலை தூக்கிக் கொண்டு வாசலுக்கு போன மலையமான் கும்பகர்ணன் போல் குறட்டைவிட ஆரம்பித்துவிட்டான். கனிமொழிக்கு தான் உறங்கவே முடியவில்லை. அவனுடைய பார்வையும்.. குரலும்… ஏன் குணமும் கூட அவளை கண்மூட விடவில்லை.
தன் குடும்பத்து ஆண்களிடம் பார்க்காத பல குணங்களை அவள் மலையமானிடம் கண்டாள். அவளுடைய தந்தைக்கு பண்ணை மட்டும் தான் எல்லாம்… வீடு குடும்பமெல்லாம் மாற்றாந்தாய் பிள்ளைகள் தான். அவளுடைய அக்காள் கணவன் சீனு நல்லவன் தான். ஆனால் தன் விருப்பத்திற்கு மட்டுமே முதலிடம் கொடுப்பான். மற்றவர்களெல்லாம் அவனுக்கு தகுந்தாற் போல் வளைந்து கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பான்.
ஆனால் மலையமான் வேறு மாதிரி இருந்தான். வீட்டில் உள்ள அனைவருக்கும் சேர்த்து ஒற்றை ஆளாக உழைத்தான். அப்படி உழைக்கிறவர்களிடம் இருக்கும் கோபமும் தலை கணமும் அவனிடம் சிறிதும் இல்லை. எல்லோரையும் அனுசரித்துப் போகிறான். விட்டுக் கொடுக்கிறான். பொறுப்பாக இருக்கிறான். பாசமாக இருக்கிறான். ஏன் படிக்காமல் போய்விட்டான்! கொஞ்சம் படித்திருந்தாலும் சென்னை பெங்களூர் என்று எங்காவது போய் நன்றாக வாழ்ந்திருக்கலாமே என்றெல்லாம் எண்ணங்கள் ஓட திடுக்கிட்டுப் போனாள்.
‘பாவி… படுபாவி! ஒரு புடவையை வாங்கிட்டு வந்து கொடுத்து எப்படியெல்லாம் மனசை கலைக்கப் பார்க்கிறான்!’ – நெஞ்செல்லாம் படபடத்தது. ஜக்கிலிருந்த தண்ணீரை எடுத்து மடமடவென்று குடித்துவிட்டு படுத்தாள். அதன் பிறகும் உறங்க முடியவில்லை. இப்போது உறக்கம் வராததற்கு காரணம் வேறு…
கொசுவலைக்குள் காற்று வராமல் அவள் அவஸ்த்தை படுவதை எப்படி தெரிந்துக் கொண்டானோ… பத்து நாட்களுக்கு முன் ஒரு ஸ்டாண்ட் ஃபேன் வீட்டுக்கு வந்துவிட்டது. புது ஃபேன் என்றதாலோ என்னவோ காற்று சில்லென்று வீசும்… பதட்டத்தில் ஒரு ஜக் தண்ணீரை வேறு குடித்துவிட்டாள். கனத்த வயிறு படுக்க விடவில்லை. எழுந்து அமர்ந்தாள்.
‘கொல்லைப்புறம் போக வேண்டுமே! தனியாக எப்படி!’ – மொபைல் டார்ச்சை சமையலரைப் பக்கம் அடித்து பார்த்தவளுக்கு சமையலறைக்குள் தனியாக செல்லவே பயமாக யிருந்தது. இதில் கொல்லை புறத்திற்கு எப்படி செல்வாள்! கடவுளே!
வாசல்பக்கம் எட்டிப்பார்த்தாள். கும்பகர்ணன் நன்றாக உறங்கி கொண்டிருந்தான். ‘இவனிடம் உதவி கேட்பதற்கு விடியும் வரை உட்கார்ந்தே இருக்கலாம்’ – ஃபேனை எல்லாம் அமர்த்திவிட்டு போர்வையை போர்த்திக் கொண்டு வீம்புடன் அமர்ந்தே இருந்தாள்.
இயற்கையோடு போட்டி போட்டு வென்றுவிட முடியுமா என்ன! வேறு வழியே இல்லாமல் பூனை குட்டி போல் எழுந்து வாசலுக்கு வந்தாள்.
அடித்துப் போட்டது போல் உறங்கி கொண்டிருந்தான் மலையமான். இவனை எப்படி எழுப்புவது! எழுப்பி என்ன சொல்வது! சங்கடத்துடன் ஓரிரு நிமிடங்கள் நின்றவள், பிறகு மொபைல் டார்ச்சை ஆன் செய்து அவன் முகத்துக்கு நேராக அடித்தாள்.
சட்டென்று உறக்கம் களைந்து விழித்த மலையமான் கனிமொழியை கண்டு, கனவா நிஜமா என்று எதுவும் புரியாமல் ஒருகணம் குழம்பி, பின் நிஜம்தான் என்று உணர்ந்து, “எ..என்ன… என்ன ஆச்சு?” என்று பதட்டத்துடன் எழுந்தான்.
ஒரு நொடி தயங்கியவள், “பின் பக்கம் போகணும்” என்றாள் மெல்ல. உறக்கக்கலக்கமோ என்னவோ.. அவனுக்கு அப்போதும் ஒன்றும் புரியவில்லை.
அவன் விழிப்பதை பார்த்துவிட்டு, “பின் பக்கம்…” என்று கொஞ்சம் அழுத்தி சொன்னவள், “இருட்டு… பயமா இருக்கு” என்றாள் தொடர்ந்து.
அவனுக்கு விளங்கிவிட்டது… “பயமா! நா இருக்கும் போது உனக்கு என்ன பயம்…! வா…” என்று முன்னோக்கி நடந்தான்.
அவளுக்கு தான் சங்கடமெல்லாம். அவனிடம் அதன் சாயல் கூட இல்லை. வெகு இயல்பாக அவளை அழைத்துக் கொண்டு கொல்லைப்புறத்துக்கு சென்றவன், காத்திருந்து அவளை மீண்டும் வீட்டுக்குள் அழைத்து வந்தான்.
“தேங்க்ஸ்” – எங்கோ பார்த்தபடி முணுமுணுத்தாள் கனிமொழி. அதற்கு அவன் எதுவும் சொல்லவில்லை.
“படுத்துக்க.. வெளியிலதான் இருப்பேன். எதுனாலும் கூப்பிடு, என்ன?” என்றான். குரலில் நெருக்கம் இருந்தது. தலையை மேலும் கீழும் ஆட்டிவிட்டு கொசுவலைக்குள் நுழைந்துக் கொண்டாள் அவள்.
மலையமான் சின்ன புன்னகையுடன் வாசலுக்கு வந்தான். அவளிடம் மாற்றம் தெரிவது போல் தோன்ற அவன் மனம் உல்லாசத்தில் ஊஞ்சலாடியது. ஆனால் இன்னொரு பக்கம், அவள் சாதாரணமாக பார்ப்பதையும், வேறு வழியில்லாமல் நம்மிடம் வந்து நிற்பதையும் நாம் தான் பெரிதாக நினைத்துக்கொள்கிறோமோ என்று பயமாகவும் இருந்தது. மகிழ்ச்சியும் பயமும் கலந்த ஒருவித கிளர்வுற்ற மனநிலை அவனை ஆக்கிரமித்துக்கொள்ள, கனவுகளோடு கண்மூடினான்.
Comments are closed here.