Share Us On
[Sassy_Social_Share]கனியமுதே! – 12
1706
0
அத்தியாயம் – 12
மலையமானின் பண்ணைக்கு அன்று கால்நடை மருத்துவர் வந்திருந்தார். மாடுகளுக்கு தடுப்பூசி போட்டுவிட்டு அவர் கிளம்பிய போது தாமரை ஒரு தூக்கு வாலியோடு தம்பியை பார்க்க வந்தாள்.
“அக்கா! வா வா… என்ன இவ்வளவு தூரம் நடந்து வந்திருக்க!”
“இந்தா, கொழுக்கட்டை சுட்டேன். மாமா டவுனுக்கு போனவர் இன்னும் வரல.. அதான் நானே கொண்டு வந்தேன். சாப்பிடு”
“வீட்டுக்கு கொண்டு போயிருக்க வேண்டியது தானே… அங்க வந்து சாப்பிட்டுக்குவேனே. எதுக்கு இவ்வளவு தூரம் நடந்து வந்த?”
“அதுக்கு என்ன… நீ சாப்பிடு, ஆறிட போகுது”
கையை கழுவிவிட்டு வந்து வாலியை திறந்து வாசம் பிடித்துவிட்டு ஒரு கொழுக்கட்டையை கையில் எடுத்துக் கொண்டு “ஆளுங்களுக்கு குடு” என்றான்.
வாலியின் மூடியில் தம்பிக்கு நான்கைந்து கொழுக்கட்டைகளை எடுத்து வைத்துவிட்டு, வேலை செய்து கொண்டிருந்தவர்களிடம் ஆளுக்கு ஒன்றாக எடுத்து நீட்டினாள்.
ருசித்து சாப்பிட்டுவிட்டு மடமடவென்று தண்ணீர் குடித்தான். வயிறே நிறைந்துவிட்டது.
“சாப்பிட போக லேட் ஆயிட்டு… நல்ல நேரத்துல தான் கொண்டு வந்திருக்க” என்று சிரித்தான்.
“வீட்டுக்கு சாப்பிட கூட போகாம எதுக்கு இந்த பண்ணையிலேயே இப்படி கெடையா கெடக்குற?” – தமக்கையாக கடிந்துகொண்டாள்.
“டாக்காரு வந்துட்டாரு க்கா. வேலை இருந்துச்சு, இல்லைன்னா போயிருப்பேன்”
“சரி நா கிளம்புறேன்”
“இரு கொண்டுவந்து விடறேன்”
“இல்ல இல்ல… இங்க நம்ம வீட்டுக்குத்தான் போறேன். நீ வேலையை பாரு” என்று கூறியவள் சற்று தயங்கி நின்று, “புடவை ரொம்ப நல்லா இருந்துச்சு மலையா. வீட்டுக்கு போயி பார்த்த பிறகு தான் கவனிச்சேன். நல்ல கலரு… ஜாக்கெட்டு தைக்க கொடுத்துட்டேன்” என்றாள் மலர்ந்த முகத்தோடு.
மலையமானுக்கு திருப்தியாக இருந்தது. வண்டியை எடுத்து, “சரி ஏறு, வீட்ல இறக்கி விடறேன்” என்றான்.
உரிமையையும் கோபத்தையும் வெளிப்படையாக காட்டும் அளவுக்கு அவர்கள் பாசத்தை வார்த்தைகளால் வெளிப்படுத்துவதில்லை. அவர்கள் பரிமாறிக் கொள்ளும் உணர்வுகளுக்கும் பேசிக் கொள்ளும் வார்த்தைகளுக்கும் உள்ள தொடர்பை வெளியாட்களால் உணர முடியாது. அது அவர்களுடைய பிரத்யேக மொழி.
மலையமானின் பைக் மரத்தடியில் வந்து நிற்கவும் கனிமொழியின் ஸ்கூட்டி வாசலுக்கு வரவும் சரியாக இருந்தது. இருவரின் பார்வையும் ஒன்றை ஒன்று சந்தித்துக் கொண்டதை கவனிக்காமல் தாமரை இறங்கி வீட்டுக்குள் சென்றுவிட, கனிமொழி வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு, தன்னுடைய கைப்பை மற்றும் இதர சாமான்களை சீட்டுக்கு அடியிலிருந்து எடுப்பது போல் கீழே குனிந்துக் கொண்டாள்.
வண்டியை திருப்பிக் கொண்டு பண்ணைக்கு திரும்பிய மலையமானின் மனம் மனைவியின் பார்வையையே அசைபோட்டுக் கொண்டிருந்தது.
“ஏம்மா உன் மருமகளுக்கு வீட்டுக்கு வர்றவங்கள வா ன்னு கூப்பிடற மரியாதை கூட தெரியல… என்னத்த படிச்சு கிழிச்சா” – வீட்டுக்குள் நுழைந்த கனிமொழி தாமரையின் பேச்சில் திகைத்து நின்றாள்.
‘விருந்தாளி மாதிரி எப்பவோ ஒருதரம் வர்றவங்களை வரவேற்கலாம். தினமும் வர்றவங்களுக்கெல்லாம் ஆரத்தியா கரைக்க முடியும்!’ – கடுப்புடன் எண்ணியபடி கைப்பையை கட்டிலில் தூக்கி எறிந்தாள்.
மகள் பேசியது மருமகள் காதில் விழுந்துவிட்டது என்பதை புரிந்துக் கொண்ட அலமேலு பதறினார்.
“காபி குடிக்கிறியா கண்ணு… கைய காலை கழுவிட்டு வர்றியா..” என்று புலம்புரியாமல் உளறினார்.
கனிமொழியின் கடுகடுத்த முகத்தை கண்டுவிட்டு தாமரைக்குமே மேலே பேச முடியவில்லை.
“கொழுக்கட்டை சுட்டேன். சாப்பிடும்மா” என்று வாலியை தாயிடம் நீட்டினாள். அதை வாங்கி ஓரமாக வைத்துவிட்டு, அடுப்பை பற்ற வைத்து காபி போட்டார் அலமேலு.
மகளுக்கு ஒரு டம்ளரில் ஊற்றிக் கொடுத்துவிட்டு மருமகள் உடைமாற்றி கொண்டு வந்ததும், இரண்டு கொழுக்கட்டையை தட்டில் எடுத்து வைத்து காபியோடு கொண்டு போய் கொடுத்தார்.
“காபியை மட்டும் வைங்க.. கொழுக்கட்டையை எடுத்துட்டு போயிடுங்க” என்றாள் கனிமொழி இறுகிய குரலில்.
“ஏன் கண்ணு…?” – பாவமாக கேட்டார்.
“பிடிக்காது” – கொஞ்சம் கூட தயக்கமில்லாமல் வெட்டிப் பேசும் மருமகளை அலமேலு இயலாமையுடன் பார்க்க தாமரையோ கோபத்துடன் முறைத்துப் பார்த்தாள்.
அன்று முதல் நாள் திருவிழா… காலையிலேயே வீடு வாசலெல்லாம் கழுவி.. குளித்து முடித்து பால் அபிஷேகத்திற்கு மகனுடைய பண்ணையில் கறந்த பசும்பாலை எடுத்துக் கொண்டு கிளம்பிய அலமேலு இரவு உடையோடு நிற்கும் மருமகளைக் கண்டுவிட்டு, “என்ன கண்ணு… இன்னும் குளிக்காம இருக்க. நேரமாச்சே! அபிஷேகத்துக்கு பால் கொண்டு போகணுமே” என்றார்.
“எனக்கு இன்னிக்கு காலேஜ் இருக்கு. என்னால கோவிலுக்கு வர முடியாது. நீக்க போயிட்டு வாங்க” என்று கூறிவிட்டு தன்னுடைய வேலையை பார்க்க போய்விட்டாள் கனிமொழி. முதல் வருடம்.. மருமகளோடு கோவிலுக்கு செல்லலாம் என்று எண்ணியிருந்த அலமேலு ஏமாற்றத்துடன் தனியாகவே நடையை கட்டினார்.
திருவிழா நேரத்தில் குளத்தில் வலைவிரிக்க வேண்டும் என்பதுதான் மலையமானின் கணக்கு. அவன் எதிர்பார்த்தபடியே மீன்களெல்லாம் பெருத்துவிட்டன. வியாபாரியை வர சொல்லி வலையை விரித்தான். அன்று முழுவதும் மீன் பிடிக்கும் வேலை நடந்தது. பக்கத்திலேயே இருந்து எத்தனை கிலோ கிடைக்கிறது என்பதை கவனமாக பார்த்து குறித்துக் கொண்டிருந்தான். மாலை வரை வேலை இழுத்துக் கொண்டு போன பிறகும் ஒரு குளத்தில் மட்டும் தான் மீன் பிடித்து முடிந்திருந்தது. இரண்டு நாள் கழித்து அடுத்த குளத்தை பார்த்துக் கொள்ளலாம் என்று அவர்களை அனுப்பிவிட்டு வீட்டுக்கு வந்தான்.
வாசலில் விளையாடிக் கொண்டிருந்த அபி மாமனைப் பார்த்ததும் துள்ளி ஓடினாள். “ஏய் ஏய்…. கிட்ட வராதடி.. மாமா மேல மீன் கவிச்சு அடிக்குது” என்று ஒதுங்கிப் போனவன்,
“என்ன மாப்ள… எத்தனை கிலோ கண்டுச்சு?” என்ற நாராயணனின் குரலில் நின்றான்.
“இவ்வளவு நேரம் அங்க தானே மாமா இருந்த”
“கணக்கு நோட்டு உன் கையில தானே இருந்துச்சு. நானா பார்த்தேன்”
“மீனெல்லாம் நல்ல வெய்ட்டா தான் மாமா இருந்துச்சு. இந்த தடவ பரவால்ல…” என்று கூறிவிட்டு குளிக்க கொல்லைப்புறத்திற்கு சென்றான். அவன் குளித்துவிட்டு உள்ளே வந்த போது சமையல் கொட்டகையில் தாமரை தாயுடன் அமர்ந்து ஏதோ பேசிக் கொண்டிருந்தாள்.
“வாக்கா…” – தமக்கையை வரவேற்றான் மலையமான்.
“வரேன் வரேன்… நீ என்ன இன்னைக்கு பார்த்து மீன்பிடிக்க கிளம்பியிருக்க. கோயிலுக்கு வந்திருக்கலாம்ல…”
“இன்னைக்கு தானே டிமாண்டு அதிகம்… இல்லைன்னா விக்க விக்க கொஞ்ச கொஞ்சமாத்தான் பிடிக்க முடியும். ரெண்டு நாள் மூணு நாள் ஆயிடும். இப்பல்லாம் ஆள் கூலி அதிகம்ல”
“ம்ம்ம்… இப்படி ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்கு பார்த்து செலவு பண்ணி எல்லாத்தையும் கொண்டு போயி பட்டுப்புடவையில போட்டுட்டு வா…” – நீட்டி முழக்கினாள். அவள் ஏன் அப்படி பேசினாள்.. அந்த வார்த்தை அவள் வாயில் எப்படி வந்தது.. அவளுக்கே புரியவில்லை. இப்படியெல்லாம் யோசிக்க கூடாது என்று அவள் தனக்குத்தானே சொல்லிக் கொண்ட பாடமெல்லாம் ஒரு நொடியில் எங்கோ மறைத்துப் போய்விட வாயை விட்டுவிட்டாள்.
சரியாக அந்த நேரம் பார்த்து எதற்கோ கொட்டகைக்கு வந்த கனிமொழி தாமரை சொன்னதை கேட்டுவிட்டாள். மலையமானின் பதில் எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்காக வாயை இறுக மூடிக் கொண்டு மெளனமாக நின்றாள். அவனோ கனிமொழி அங்கு நிற்பது தெரிந்தும் எதுவுமே சொல்லாமல் உள்ளே சென்றுவிட்டான்.
அவளுக்கு கோபம் பொங்கியது. தாமரையின் மீது ஒரு பங்கு கோபம் என்றால் அவளுடைய பேச்சை கண்டிக்காத மாமியார் மீதும் கணவன் மீதும் இரு மடங்கு கோபம்.
‘இதென்ன பெரிய ஊரில் இல்லாத புடவையா! என்னிடம் என்னென்ன ராகத்தில் உடைகளும் நகைகளும் இருக்கிறது என்று இவர்களுக்கு தெரியுமா?’ என்று ஆத்திரத்துடன் எண்ணினாள். மறுநாள் காவடி… எல்லோரும் கோவிலுக்கு புத்தாடை அணிந்து செல்லும் நாள்.
அலைபேசியோடு வாசலுக்கு வந்தவள் தாய்க்கு அழைத்து மறுநாள் அவளுக்கு என்னென்ன தேவை என்பதை பட்டியல் போட்டாள். அவளுடைய உயரம் என்ன என்பதை அவர்களுக்கு நினைவுபடுத்த வேண்டும் அல்லவா!
இங்கு நடக்கும் உள்குத்து விவகாரங்கள் எதுவும் தெரியாமல் அங்கப்பன் எதார்த்தமாக மகளுக்கு தேவையான புடவை மற்றும் அணிமணிகள் அனைத்தையும் அன்று இரவே கொண்டு வந்து கொடுத்துவிட்டு சென்றார்.
முதல் நாள் போலவே வீடெல்லாம் கழுவி கோலம் போட்டு, குளித்து முடித்து மாவிளக்கு மாவை இடித்து கிளறி எடுத்துக் கொண்டு கோவிலுக்கு செல்ல தயாராகிக் கொண்டிருந்தார் அலமேலு.
குளித்துவிட்டு வந்த கனிமொழி தந்தை கொண்டுவந்து கொடுத்த விலை உயர்ந்த பட்டுப்புடவையையும் நகைகளையும் அணிந்துக் கொண்டாள்.
அர்ச்சனைக்கு தேவையான தேங்காயை உரித்து எடுத்துக் கொண்டு உள்ளே நுழைந்த மலையமான் கனிமொழியின் கெட்டப்பைக் கண்டுவிட்டு புருவம் உயர்த்தினான். அழகாகத்தான் இருந்தாள்.. ஆனால் ஆடம்பரமான அழகு. அதுவும் இல்லாமல் அன்று அவன் வாங்கி கொடுத்த புடவையை அவ்வளவு ஆசையாக வருடிப் பார்த்தவள், இன்று அதை உடுத்தாமல் ஏன் வேறு புடவையை உடுத்தியிருக்கிறாள் என்றும் புரியவில்லை அவனுக்கு.
கனிமொழியின் மனதில் என்ன ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை மலையமான் தான் அறியவில்லை. ஆனால் அலமேலு நன்றாகவே அறிந்திருந்தார். தாமரை சொன்ன ஒரு வார்த்தைக்காக இவ்வளவு வீம்பு பிடிக்கிறாளே என்று எண்ணியபடி, “என்ன கண்ணு, தம்பி எடுத்து கொடுத்த புடவையை கட்டலையா?” என்றார்.
“அந்த புடவை உங்க பொண்ணுக்கு பிடிச்சிருக்கு போலருக்கே! வேணுன்னா அவங்களை எடுத்துக்க சொல்லுங்க. என்கிட்ட அதைவிட நல்ல புடவை நிறைய இருக்கு” என்றாள் வெடுக்கென்று.
மலையமான் திடுக்கிட்டு மனைவியைப் பார்த்தான். “என்ன பேச்சு இது?” – தன் தாயிடம் அவள் அப்படி பேசியிருக்கக் கூடாது என்கிற கண்டிப்புடன் அதட்டினான்.
கனிமொழிக்கு கோபம் பொங்கியது. மையிட்ட தன் பெரிய விழிகளை உருட்டி கணவனை முறைத்தாள்.
எங்கே சண்டை பெரிதாகிவிடப் போகிறதோ என்கிற பயத்தில், “சரி சரி விடுங்க… கோயிலுக்கு கிளம்பனும் நேரமாயிடிச்சு” என்று இடையில் புகுந்து பேச்சை மாற்றிவிட முனைந்தார் அலமேலு.
கோபம் குறையாத கனிமொழியோ மேலும் பேச்சை வளர்த்தாள். “எனக்கு பட்டுப்புடவை வேணும்னு உங்க பையன் கிட்ட நா கேட்டேனா? இல்ல உங்க பையன் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிற பணத்தை எனக்காக செலவு செய்யுங்கன்னு நா சொன்னேனா? எதுக்கு நேத்து உங்க பொண்ணு அப்படி பேசினாங்க?”
“அட தெரியாம பேசிட்டா கண்ணு. அதையெல்லாம் பெருசா எடுத்துக்குவியா நீ! கெளம்பு கண்ணு” – அலமேலு எப்படியாவது சூழ்நிலையை சுமூகமாக்கிவிட வேண்டும் என்று தவிக்க, மலையமான் நாசி விடைக்க நெற்றி நரம்பு புடைக்க மனைவியை முறைத்தான். அதற்கெல்லாம் அஞ்சுகிறவளா அவள்!
‘நேத்து உன் அக்காவை முறைக்க முடியல. இப்ப என்னை முறைக்கிறியா! போடா டேய்…’ – தலையை சிலுப்பிக் கொண்டு போய்விட்டாள்.
கோவிலுக்கு செல்ல தயாராகி தாய் வீட்டுக்கு வந்த தாமரை கனிமொழியின் புடவையை பார்த்துவிட்டு திகைத்தாள். பிறகு தாயிடம் கண் ஜாடையிலேயே, ‘என்ன விஷயம்?’ என்று கேட்டாள்.
ஒன்றும் இல்லை என்று தலையை அசைத்தவார் பிறகு தனியாக இருக்கும் போது, ‘ஜாக்கெட்டு தைக்கலையாம்’ என்று சமாளித்தார். அவள் நம்பவில்லை என்பது வேறு விஷயம்.
வீட்டில் எல்லோரும் புத்தாடை அணிந்து ஜக ஜோதியாக கோவிலுக்கு செல்ல தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில் மலையமான் மட்டும் பழைய கைலியோடு பண்ணைக்கு செல்ல வண்டியை எடுத்தான்.
அப்போதுதான் அலமேலுவுக்கு ஒன்று உரைத்தது. அன்று எல்லோருக்கும் துணி எடுத்துக் கொண்டு வந்தவன் அவனுக்கென்று ஒன்றும் வாங்கிகொள்ளவில்லை. அதை கவனித்து கேட்கவும் ஆளில்லை.
“யப்பா தம்பி… உனக்கு சட்டை எதுவும் எடுத்துக்கலையாய்யா!” – ஆற்றாமையுடன் கேட்டார் அலமேலு. தானும் கவனிக்காமல் விட்டுவிட்டோமே என்கிற தவிப்பு அவருக்கு.
“எனக்கு என்னம்மா… அதான் வீட்ல அத்தனை சட்டை கிடக்கே!” என்றான் அலட்சியத்துடன்.
“என்னப்பா நீ… இது கல்யாணம் ஆகி முதல் வருஷம். ஒரு சட்டை எடுத்துக்கிட்டிருக்கலாமே ய்யா” – வருத்தத்துடன் கேட்டார்.
“பரவால்ல விடும்மா… நா என்ன கோயிலுக்கா வர போறேன்”
“ஏன் ஏன்… வராம எங்க போற?”
“பண்ணைக்கு! பால் கறக்க ஆள் வந்துரும்மா”
“ஒரு நல்ல நாள் பெரிய நாள் இல்லையாப்பா உனக்கு? இப்படி கெடந்து பாடு படறியே!” – வயிற்றெரிச்சலாக இருந்தது அந்த தாய்க்கு.
அவனுக்கு அதெல்லாம் ஒன்றும் பெரிதாக தெரியவில்லை. செய்யும் தொழிலே தெய்வம் என்று எண்ணி கோவிலை விட பண்ணத்தான் முக்கியம் என்று போய்விட்டான்.
கோவிலில் கூட்ட நெரிசலில் சிக்கி சின்னாபின்னமானதாலோ அல்லது மகனை பற்றிய கவலையாலோ அலமேலுவின் உடல் அன்று வெகுவாக சோர்ந்துவிட்டது. தலைவலி வேறு… கோவிலிலிருந்து வந்ததும் உடை மாற்றிக் கொண்டு ஒரு மாத்திரையை போட்டுக் கொண்டு படுத்தவர் தான்.. அடித்துப் போட்டது போல் உறங்கிவிட்டார்.
மாலை ஐந்து ஐந்தரை மணியிருக்கும்… மலையமான் வீட்டுக்கு வந்து குளித்துவிட்டு சமையலறையில் போய் பாத்திரங்களை திறந்து பார்த்தான். எதுவுமே இல்லை, எல்லாம் காலியாக இருந்தது. பசி வேறு வயிற்றை கிள்ளியது.
கூடத்துக்கு வந்து கனிமொழியை பார்த்தான்… அவள் ப்ரெடில் ஜாமை தடவிக் கொண்டிருந்தாள். “என்ன ஆச்சு, சமைக்கலையா?” என்றான்.
அவள் பதில் சொல்லாமல் தோளை குலுக்கினாள். அவனுக்கு இருந்த பசியில் அவள் காட்டிய அலட்சியம் கோபத்தை கிளற, “கேட்டா வாயை திறந்து பதில் சொல்ல மாட்டியா?” என்றான் சிடுசிடுப்பாக.
“சமையலை பற்றி எனக்கு என்ன தெரியும்? நானா இங்க சமசிச்சுகிட்டு இருக்கேன். உங்க அம்மாவை கேளுங்க” என்றாள் குரலை உயர்த்தி.
அதுவரை உலகத்தை மறந்து உறங்கி கொண்டிருந்த அலமேலு மருமகள் போட்ட சத்தத்தில் விரண்டடித்துக் கொண்டு எழுந்தார்.
“மெதுவாம்மா மெதுவா… ஒன்னும் இல்ல. எதுக்கு இப்படி படபடன்னு எந்திரிக்கிற” தாயிடம் கேட்டவன், மனைவியின் பக்கம் திரும்பி, ‘எதுக்குடி இப்படி கத்துற?’ என்பது போல் அவளை பார்த்தான். அவளும் பதிலுக்கு முறைத்தாள்.
“எப்ப ப்பா வந்த… மணியாயிடிச்சா… அசந்து தூங்கிட்டேன். ஐயையோ ஒன்னும் சமைக்கலையே! கொஞ்சம் இருப்பா… அஞ்சு நிமிஷத்துல ஏதாவது செஞ்சு கொடுக்குறேன்”
“இரு இரு… ஒரு நாள் சமைக்கலன்னா ஒன்னும் கொறஞ்சு போயிடாது.. நா கடையில போயி வாங்கிட்டு வரேன். உனக்கு என்ன பண்ணுது? ஏன் ஒரு மாதிரி இருக்க? மாத்திரை ஏதாவது வாங்கிகிட்டு வரவா?” என்று தாயிடம் விசாரித்து அவளுடைய தேவைகளை கேட்டுக் கொண்டு வண்டியை கிளப்பினான்.
மகன் அந்த பக்கம் போனதும் அலமேலுவின் பார்வை மருமகளிடம் சென்றது. கட்டிலில் ஒயிலாக அமர்ந்து பிரட் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். மலையமானின் பசியை பற்றி அவள் அலட்டிக்கொள்ளவே இல்லை.
அவள் அப்படி அக்கறை அற்றவளாக இருப்பது அலமேலுவிற்கு மிகுந்த வேதனையாக அளித்தது. தான் இல்லை என்றால் உழைத்து களைத்து வரும் தன் மகனுக்கு ஒரு வாய் தண்ணீர் கொடுக்க கூட ஆள் இல்லையே என்கிற ஆற்றாமை கண்ணீராக பெருகியது.
“ஏறச்சொன்னால் எருதுக்குக் கோபம் இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோபமாம். வீட்ல இருக்க ஒவ்வொருத்தரும் இப்படி ஒவ்வொரு விதமா இருந்தா குடும்பம் எப்படி விளங்கும்? எல்லாம் என் தலையெழுத்து… விரலுக்கு ஏத்த வீக்கம்.. உரலுக்கு ஏத்த உலக்கைன்னு அததுக்கு தகுந்த எடத்துல தகஞ்சிருந்தா இந்த தலையெழுத்து எதுக்கு? காலையிலிருந்து காட்டுல கெடந்து காஞ்சுட்டு வர்றவனுக்கு ஒரு வாய் காஞ்சி ஊத்த ஆள் இல்ல” – என்று ஏதேதோ புலம்பிக் கொண்டே கண்ணீருடன் கொல்லைப்புறத்திற்கு போய்விட்டார்.
அவர் பேசியதில் பாதி கனிமொழிக்கு புரியவே இல்லை. புரிந்திருந்தால் பூகம்பம் இன்னும் பெரிதாக வெடித்திருக்கும்.
சற்று நேரத்திலெல்லாம் உணவு பொட்டலங்களுடன் வீடு திரும்பிவிட்டான் மலையமான். தாயிடம் அந்த பொட்டலங்களை கொடுத்துவிட்டு கைகால் கழுவிக் கொண்டு கொட்டகைக்கு வந்தவன், “அவளையும் கூப்பிடும்மா…” என்றான்.
“நீ முதல்ல சாப்பிடுப்பா…” – மருமகள் மீது வருத்தத்தில் இருந்த அலமேலு மகனுக்கு முதலில் தட்டை வைத்தார்.
“அவளும் ஒன்னும் சாப்பிடல போலருக்கே ம்மா…” – அவளை விட்டுவிட்டு உணவருந்த அவனுக்கு மனம் வரவில்லை.
“நா கூப்பிட்டுக்குறேன் நீ உட்காரு”
அலமேலு வற்புறுத்தி சொல்லியும் கூட அவனால் உட்கார முடியவில்லை. “எடுத்து வைம்மா வரேன்” என்றபடி தானே கூடத்திற்கு சென்று அவளை அழைத்தான்.
“சாப்பிடலாம் வா”
“வேண்டாம்”
“ப்ச்.. எனக்கு சரியான பசி. அடம் பண்ணாம வா” – அதட்டினான்.
“உங்களுக்கு பசிச்சா நீங்க போயி சாப்பிடுங்க. எனக்கு வேண்டாம்” – அவள் பிடிவாதமாக கூற அவனுடைய பொறுமை பறந்துவிட்டது. அவள் கையைப் பிடித்து தரதரவென்று கொட்டகைக்கு இழுத்துச் சென்று, “உட்காரு. மூணு தட்டுல சாப்பாடு போடும்மா. அப்படியே நீயும் கையை கழுவிட்டு சாப்பிடு” என்றான்.
அவ்வளவு பசியிலும் அவனால் தன்னை எப்படியோ போ என்று விட்டுவிட முடியவில்லை என்பதை கண்டுகொண்டாள் கனிமொழி. தான் நினைத்தால் அவனை முழுமையாக கட்டுப்படுத்திவிடலாம் என்று நம்பினாள். அந்த நம்பிக்கை அவளுக்குள் ஒரு சின்ன கர்வத்தை கொடுத்தது. கர்வம்… அது ஒரு ஆபத்தான ஆபரணம் என்பதை அப்போது அவள் அறிந்திருக்கவில்லை.
Comments are closed here.