Share Us On
[Sassy_Social_Share]கனியமுதே! – 13
1813
0
அத்தியாயம் – 13
மூன்று நாள் நடக்கும் திருவிழாவில் ஒரு நாளாவது மகனும் மருமகளும் சேர்ந்து கோவிலுக்கு சென்று வரவேண்டும் என்று பிரயத்தனப் பட்டார் அலமேலு.
மாலை மூன்று மணியிருக்கும்… பண்ணையிலிருந்து நல்ல பசியோடு வீடு திரும்பினான் மலையமான். கோழி அடித்திருந்தார் அலமேலு. குழம்பும் வறுவலும் வாசல் வரை மனமனத்தது.
வண்டியை நிறுத்திவிட்டு, “சாப்பாடு எடுத்து வைம்மா” என்று கூறியபடியே நேராக பின்பக்கம் சென்று கை கால் மூஞ்சி கழுவிவிட்டு, கொடியில் கிடந்த துண்டை எடுத்து முகத்தை துடைத்துக் கொண்டே உள்ளே வந்தான்.
கூடத்தில் சேரை போட்டு ஏதோ புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தாள் கனிமொழி.
‘எடைக்கு எடை திமிரு… திரும்பிக் கூட பார்க்காம எப்படி உட்கார்ந்திருக்கா பாரு…’ என்று மனதிற்குள் வசை பாடினாலும், “வீட்ல எல்லாரும் சாப்பிட்டாச்சாம்மா?” என்று மனைவியை பார்த்தபடியே கேட்டான்.
“சாப்பிட்டாச்சு ப்பா.. நீ உட்காரு” – மகனுக்கு தட்டை வைத்து பரிமாறினார்.
“குழம்பு நல்ல காரசாரமாக இருந்தது. அவன் ருசித்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே கொட்டகையில் சுற்றிக் கொண்டிருந்த காற்றாடியின் வேகம் குறைந்து பின் நின்றே போனது.
“அடக் கடவுளே! கரண்டு போயிட்டே!” – அங்கலாய்த்த அலமேலு, “கண்ணு, அந்த மேசை மேல கெடக்குற விசிறிமட்டையை எடுத்துக்கிட்டு வா” என்று மருமகளை ஏவினார்.
அதற்குள் இங்கு மலையமானுக்கு சலசலவென்று வியர்த்துக் கொட்டிவிட்டது.
படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை கீழே வைக்காமலே விசிறியை கொண்டுவந்து நீட்டினாள் கனிமொழி.
அதை கையில் வாங்கியபடி, “அந்த புக்க அங்குட்டு வச்சுட்டு வா கண்ணு. தம்பிக்கு அந்த சோத்தை எடுத்து போடு” – மகனுக்கு அருகில் அமர்ந்துக் கொண்டு அவனுக்கு விசிறிவிட்டபடி, பரிமாறும் வேலையை மருமகளுக்கு கொடுத்தார். அப்படியாவது அவனிடம் ஏதாவது ஒத்தாசையாக நடந்துகொள்ள மாட்டாளா என்கிற நப்பாசை அவருக்கு.
‘இதென்ன புது பழக்கம்!’ என்று கனிமொழி புருவம் சுருக்கி மாமியாரை பார்க்க, மலையமானோ, “இந்த அம்மா எதுக்கு இப்ப இவளை கூப்பிட்டு வம்பிழுக்குது! என்னை ஒருவேளை சாப்பாட்டை கூட ஒழுங்கா சாப்பிட விடாது போலவே!’ என்று உள்ளுக்குள் பதறினான்.
“என்ன கண்ணு அப்படி பார்க்குற! காத்தாடி ஓடல பாரு.. கரண்டு இல்ல. நா விசிரனும்ல… அதான் உன்ன சோறு போட சொன்னேன்”
‘இவன் என்ன பெரிய சக்கரவர்த்தியா! சாமரம் வீச ஒருத்தர், சேவகம் பண்ண ஒருத்தர்னு சுத்தி சர்வன்ட்ஸை நிறுத்தி வைக்க’ – பல்லை கடித்தாள். அங்கே நறநறப்பது மலையமானுக்கு பீதியை கிளப்ப, “நானே போட்டுக்குறேம்மா” என்றான்.
“ஆங்… அதெல்லாம் எச்சி கையால அன்னக்கரண்டியை தொடக்க கூடாது. நீ போடு கண்ணு… அந்த கிண்ணத்துல குழம்பு இருக்கு பாரு… நல்ல கரித்துண்டா பார்த்து தம்பிக்கு எடுத்து போடு”
‘கெழவி சரியான ஆளு.. கண்ணு கண்ணுனு நைஸ் பண்ணியே காரியத்தை சாதிக்குது’ – மாமியாரை திட்டிக் கொண்டே கணவனுக்கு உணவு பரிமாறினாள் கனிமொழி.
பிடிக்காமல் செய்கிறாள் என்பது அவள் பரிமாறிய விதத்திலேயே தெரிய மலையமானுக்கு என்னவோ போல் இருந்தது.
“சிந்தாம போடு கனிமொழி” – அன்னத்தை அவள் அலட்சியமாக கையாண்ட விதம் அவன் குரலில் கடுமையை கூட்டியிருந்தது.
“எனக்கு இப்படித்தான் போட தெரியும்” – கரண்டியை பொட்டென்று சட்டியில் போட்டுவிட்டு அவனை முறைத்தாள்.
மலையமான் ஓரிரு நொடிகள் அவளை வெறித்துப் பார்த்தன். பிறகு “சரி நீ போட்டது போதும் போ. இனி நா பார்த்துக்கறேன்” என்றான். அவளும் முகத்தை வெடுக்கென்று திருப்பிக் கொண்டு போய்விட்டாள். சாப்பிடும் ஆசையே போய்விட்டது அவனுக்கு. கடமைக்கு தட்டில் இருந்ததை உள்ளே தள்ளிவிட்டு எழுந்தான்.
‘தவளை தண்ணிக்கு இழுக்குது ஓணான் வேலிக்கு இழுக்குது.. இதுக ரெண்டும் எப்ப ஒண்ணா சேர்ந்து பேசி பழகி ஒரு முடிவுக்கு வர்றது. அதுக்குள்ள என் கட்டை காட்டுக்கு போயிரும்’ – நொந்து போன மனதுடன் மகன் சாப்பிட்ட தட்டை எடுத்து வைத்தார்.
உணவுக்குப் பிறகு சற்று நேரம் கூட ஓய்வெடுக்காமல் மீண்டும் பண்ணைக்கு கிளம்பினான் மலையமான்.
“சாயங்காலம் கொஞ்சம் சீக்கிரம் வந்துருப்பா” – மகன் வண்டியில் ஏறியதும் பின்னாலேயே ஓடிச் சென்று கூறினார் தாய்.
“எதுக்கும்மா?”
“இன்னைக்கு என்னால கோயிலுக்கு போக முடியாது. தேங்காய் உடைக்காம இருக்கக் கூடாது. நீயும் உன் பொண்டாட்டியும் சேர்ந்து போயி சாமி கும்பிட்டுட்டு வந்துடுங்க”
அவன் பார்வை கனிமொழியிடம் சென்றது. கரண்ட் இல்லாததால் வீட்டுக்குள் அமர முடியாமல் நெல்லி மரத்தடியில் வந்து அமர்ந்திருந்தவளின் முகம் கடுகடுத்தது.
‘வாங்கி கொடுத்த புடவையை கட்ட மாட்டேங்கிறா! சாப்பாடு போட சொன்னா ஏதோ மாட்டுக்கு வைக்கோலை அள்ளி போடற மாதிரி தூவிவிடறா! இவ என்னோட கோவிலுக்கு வர போறாளா! அட ஏம்மா நீ வேற!’ – அலுத்துக் கொண்டபடி, “ப்ச்… எனக்கு வேலை இருக்கும்மா.. நீ போயிட்டு வந்துடு” என்றான்.
“எனக்கு முடிஞ்சா போக மாட்டேனா?” என்று குரலை உயர்த்தினார் தாய்.
“சரி நா மட்டும் போயிட்டு வந்துடறேன். அவளை தொந்தரவு பண்ணாத” – அவளுக்கு கேட்கக் கூடாது என்று எண்ணி குரலை தாழ்த்தி கூறினான். அவன் எண்ணத்தை தவிடுபொடியாக்கியபடி,
“இதுல என்ன தொந்தரவு வந்து கெடக்கு! புருஷன் பொண்டாட்டி ஒண்ணா கோயிலுக்கு போயிட்டு வாங்கன்னு சொல்றது ஒரு குத்தமா? கண்ணு நீ குளிச்சிட்டு கெளம்பு… நீ போயி பாலை கறந்து வேனுக்கு ஊத்திட்டு உடனே வீட்டுக்கு வா. ராத்திரி நேரத்துல ஆறு ஏழு மணிக்கு மேல கெளம்பி போனாதான் பல்லக்கு ஜக ஜோதியா அழகா இருக்கும். கண்ணு குளிர பார்த்துட்டு வரலாம்” என்றார்.
மலையமான் மீண்டும் கனிமொழியை பார்த்தான். அவள் முகத்தில் சம்மதத்தின் சாயல் சிறிதும் இல்லை. அவளை கட்டாயப்படுத்தவும் அவனுக்கு விருப்பம் இல்லை.
“இல்லம்மா.. நா மட்டும் போயிட்டு வந்துடறேன்” என்று முடிவாக கூறிவிட்டு வண்டியை கிளப்பினான்.
ஆசைகளையும் எதிர்பார்ப்புகளையும் தன்னிடமிருந்து தள்ளியே வைத்திருக்கத்தான் மலையமான் விரும்பினான். அவள் மலை மேல் நிற்கிறாள். அவனோ பள்ளத்தில் கிடக்கிறான். அவளை அன்னார்ந்து பார்த்து ஏங்கி தவிக்க அவன் தயாராக இல்லை. எனவே தான் தனக்கென்று ஒரு தொழிலை உருவாக்கி அதற்குள்ளேயே மூழ்கிக் கிடந்தான். எத்தனை நாட்களுக்கு அப்படியே இருக்க முடியும்? இன்று அலமேலு ஒவ்வொரு முறை அவளை தூண்டும் பொழுதும் அவனுக்குள் எதிர்பார்ப்பு எட்டிப்பார்ப்பதை தவிர்க்க முடியவில்லை.
கனத்த மனதுடன் பண்ணைக்கு சென்றவன் வேலைகளை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பிய போது கனிமொழி கோவிலுக்கு செல்ல தயாராக இருந்தாள்.
கோபம்… அளவில்லா கோபம்… முகமெல்லாம் சிவந்து போகும் அளவிற்கு கோபம்.. ஒருவித அகங்கார மனப்பான்மையுடன் கூடிய கோபம். கோவிலுக்கு தனியாக போனாலும் போவானாம். ஆனால் அவளோடு போக மாட்டானாம். அவனோடு வெளியே செல்ல அவளுக்கு மட்டும் ஆசையா என்ன? பட்டிக்காட்டான்… கருப்பாண்டி… கோபத்தில் கூட மூச்சு வாங்கும் என்பதை மருமகளை பார்த்துத்தான் தெரிந்துக் கொண்டார் அலமேலு.
‘ம்ம்ம்… ரோசக்காரிதான்… ரோசப்பட்டு என்ன செய்றான்னு பார்ப்போம்’ – குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயன்றார்.
“நீ படி கண்ணு. தம்பி தனியாவே கோயிலுக்கு போயிக்கிறானாம். உன்னைய கிளம்ப வேண்டாம்னுட்டான்”
பல முறை அவள் சாதாரணமாக பயன்படுத்திய ‘வேண்டாம்’ என்கிற வார்த்தை இன்று மலையமானின் வாயிலிருந்து வந்த போது அதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவள் வேண்டாம் என்று நிராகரிக்கலாம். ஆனால் அவன் எப்படி அவளை நிராகரிப்பது! அவளுக்கு தோன்றிய அந்த அகங்காரமான உணர்வுக்கு காரணம் வெறும் ஈகோ மட்டும் அல்ல… அதையும் தாண்டி பாறையில் முளைக்கும் செடி போல அவன் மீது ஏதோ ஒரு உரிமை உணர்வு அவளுக்குள் வேர்விட்டிருந்தது. அதை அவளால் உதாசீனப்படுத்த முடியவில்லை. மாற்றுடையை எடுத்துக் கொண்டு குளியலறையை நோக்கி நடந்தாள்.
மருமகள் தயாராவதை, வேட்டி கட்டிய வெள்ளைக்காரனை பார்ப்பது போல் அதிசயமாக பார்த்துக் கொண்டிருந்தார் அலமேலு.
‘ஆங்… ஓங்கணக்கு இப்படியா!’ என்று மருமகளை கையாளும் வழியை அறிந்து கொண்டவர், “எங்க கண்ணு கெளம்புற?” என்றார் எதுவுமே தெரியாத அம்முக்குட்டி போல் முகத்தை வைத்துக் கொண்டு.
“ம்ம்ம்… கோவிலுக்குத்தான். வேண்டுதல் இருக்கு… உங்க பையனுக்கு போன் பண்ணி வீட்டுக்கு வர சொல்லுங்க” – எரிச்சலுடன் சிடுசிடுத்தாள்.
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே வாசலில் பைக் சத்தம் கேட்டது. உடனே அலமேலு கொல்லைப்புறத்திற்கு நழுவிவிட்டார். அவ்வளவு நேரம் அவளிடம் இருந்த திமிரும் தைரியமும் கரைந்து பயம் எட்டிப் பார்க்க எத்தனித்தது. அவன் வேண்டாம் என்று சொல்லியும் கிளம்பியிருப்பது, அவன் பைக் சத்தத்தை கேட்ட பிறகு ஒருவித சங்கடத்தை கொடுத்தது. தான் செய்தது சரியா தவறா என்கிற போராட்டம் அவளுக்குள் பயங்கரமாக யுத்தம் செய்து கொண்டிருந்த நேரத்தில் மலையமான் வீட்டுக்குள் நுழைந்தான்.
முதல்நாள் போல் தகதகவென்று ஜொலிக்காமல் சாதாரண சில்க் காட்டன் சேலையில் இரட்டைச் சர மல்லிகை சூட்டி முகத்தில் சின்ன பதட்டத்துடன் பாந்தமாக அவள் நின்ற அழகு மலையமானை தட்டி வீழ்த்த, வியப்பும் திகைப்புமாக அப்படியே நின்றுவிட்டான்.
அவனுடைய அந்த நிலை, கரைந்து போன அவள் கர்வத்தை மீட்டெடுக்க உதட்டை அலட்சியமாக சுழித்துக் கொண்டு கட்டிலில் அமர்ந்து கைபேசியில் பார்வையை பதித்தாள்.
அவளிடம் என்ன கேட்க வேண்டும் என்று புரியாத தடுமாற்றத்துடன் ஓரிரு கணங்கள் தயங்கியவன் பிறகு, “கோயிலுக்கா கிளம்பியிருக்க?” என்றான்.
அவள் நிமிர்ந்து பார்த்தாள். ‘பார்த்தா எப்படி தெரியுது?’ என்றது அந்த பார்வை.
அதற்கு மேல் அவனால் என்ன சொல்ல முடியும். அமைதியாக கொல்லைப்புறத்திற்கு சென்றான். குழப்பமாகவும் இருந்தது… சந்தோஷமாகவும் இருந்தது.
“சீக்கிரம் குளிச்சிட்டு கெளம்புப்பா… மருமக கெளம்பி ரொம்ப நேரமாச்சு” – பாத்திரங்களை கழுவியபடியே மகனுக்கு குறிப்புக் கொடுத்தார் அலமேலு.
“எம்மா… நீதான் ஏதாவது சொல்லி அவளை கிளப்பிவிட்டியா?” – சந்தேகத்துடன் கேட்டான்.
“அட நா என்னடா சொல்லப் போறேன்! அந்த புள்ள தானாதான் கெளம்பி உட்கார்ந்திருக்கு” என்றார்.
நம்பமுடியவில்லை அவனுக்கு. என்ன சூழ்ச்சி பண்றாளோ தெரியலையே! என்று எண்ணியபடியே குளித்துவிட்டு வந்து வேட்டி சட்டையை அணிந்துக் கொண்டான்.
அவளுடைய பார்வை தன்னை தொடர்கிறதோ என்கிற சந்தேகம் அவனுக்குள் எழுந்தது. அவள்புரம் திரும்பிப் பார்த்தான். ம்ஹும்… இந்த ராங்கிப்பிடித்தவளாவது நம்மை பார்ப்பதாவது! பெருமூச்சுடன், “கிளம்புவோமா?” என்றான்.
மனைவி என்கிற உரிமையோடு ஒரு பெண்ணை பைக்கில் ஏற்றுவது உண்மையிலேயே மிகப்பெரிய ஆனந்தம் தான்.. அதுவும் முதல் முறை என்றால் சொல்லவே வேண்டாம். மலையமானின் அடர்ந்த மீசைக்குள் ஒளிந்திருந்த தடித்த இதழ்களில் மெல்லிய புன்னகை தவழ்ந்தது. உல்லாசமான மனநிலையோடு கோவிலை நோக்கி பைக்கை செலுத்தினான்.
காற்றில் பறக்கும் அவள் கேசம் அவன் கழுத்திலும் கன்னத்திலும் உறவாடி களித்தது. அவள் கூந்தலில் சூட்டியிருந்த மல்லிச்சரத்தின் வாசம் அவன் நாசியை தீண்டி இதயத்தில் நிறைந்தது. தொட்டும் தொடாமல் படும் அவள் பட்டு மேனியின் ஸ்பரிசத்தில் அவன் தன்னையே மறந்தான். அந்த பத்து நிமிட பயண அனுபவம் வாழ்க்கை முழுவதும் அசைபோடும் இனிய நினைவாக அவன் மனதில் பதிந்தது.
கோவிலை சுற்றி மிகப்பெரிய திடல்… அந்த திடல் முழுவதும் கூட்டம்… மைக் செட்டில் பக்தி பாடல்கள் எதிரொலித்தன. காணும் இடமெல்லாம் விளக்கொளி பிரகாசித்தது. ராட்சச ராட்டினங்களும் கடைகளும் ஒரு பக்கமாக ஒதுங்கியிருக்க பலூன் காரர்கள் விற்பனைக்காக சுற்றிச் சுற்றி வந்தார்கள்.
இருசக்கர வாகனம் நிறுத்துமிடத்தில் வண்டியை நிறுத்திவிட்டு மனைவியின் கையைப் பிடித்துக் கொண்டு கூட்டத்திற்குள் நுழைந்தான் மலையமான். இடித்துப் பிடித்துக் கொண்டுதான் உள்ளே வர வேண்டியிருந்தது. ஒரு வழியாக பல்லக்கு நிற்கும் இடத்திற்கு வந்து சாமியை பார்த்துவிட்டார்கள்.
கனிமொழி கையிலிருந்த அர்ச்சனைத்தட்டை ஐயரிடம் நீட்ட, அவர் தேங்காயை உடைத்துவிட்டு விபூதி குங்குமத்தோடு தட்டை திருப்பிக் கொடுத்தார்.
கூட்டத்திலிருந்து விலகி வந்து அவள் விபூதி குங்குமத்தை இட்டு கொண்டு அவனுக்கும் கொடுத்தாள்.
சாமி கும்பிடும் வேலை முடிந்துவிட்டது. உடனே அவளை வீட்டுக்கு அழைத்துச் செல்ல அவனுக்கு மனமில்லை.
“ஏதாவது வேணுமா? கடை பக்கம் போவோமா?” என்றான்.
அவள் யோசித்தாள். “வா அபிக்கு ஏதாவது வாங்கிட்டு போவோம்” என்று அவள் மறுக்கும் முன்பாகவே அவன் ஒரு காரணத்தை கண்டு பிடித்தான்.
இருவரும் எதுவுமே வாங்காமல் கடைகளை சுற்றி வந்தார்கள். ராட்டினத்தை வேடிக்கை பார்த்தார்கள். ஐஸ்க்ரீம் காரன் பக்கத்தில் வந்து ஹாரன் அடிக்க, அவளிடம் கேட்காமலே, ஒரு ஐஸ்க்ரீமை வாங்கி அவளிடம் நீட்டினான்.
‘நைட்ல எதுக்கு ஐஸ்கிரீம்?’ என்று சொல்ல வாயெடுத்தவளுக்கு அவன் முகத்தை பார்த்து அதை சொல்ல முடியவில்லை. அவன் வாங்கி கொடுத்ததை நல்ல பிள்ளையாக சாப்பிட்டாள்.
பிறகு காரணமே இல்லாமல் கோவில் வளாகத்தை ஒரு முறைக்கு இருமுறை சுற்றி வந்து கண்ணில் படும் தெரிந்தவர்கள் அறிந்தவர்களிடமெல்லாம் நலம் விசாரித்துவிட்டு, மறக்காமல் அபிக்கு ஒரு ஆப்பிள் பலூனை வாங்கி கொண்டு இரவு ஒன்பது மணிக்கு மேல் வீடு வந்து சேர்ந்தார்கள்.
பார்க்கும் போதே அவர்களிடம் ஒரு இணக்கம் தெரிய, அலமேலுவின் நெஞ்சம் நிறைந்தது. இருவரையும் கிழக்கு பார்த்து அமரவைத்து திருஷ்டி கழித்தார்.
Comments are closed here.