Share Us On
[Sassy_Social_Share]கனியமுதே! – 14
1701
0
அத்தியாயம் – 14
கணவனோடு கோவிலுக்கு சென்று வீடு திரும்பும் வரை உல்லாசமாக இருந்த கனிமொழியின் மனம் இரவு படுக்கையில் விழுந்த போது வெகுவாக கலங்கிப் போயிருந்தது. வீம்புக்காக என்று நினைத்துக் கொண்டு தான் அவனோடு கோவிலுக்கு கிளம்பினாள். ஆனால் அதன் பிறகு நடந்ததெல்லாம் என்ன! அவனுடைய அருகாமை எப்படி அவளுடைய விருப்பு வெறுப்பை மறக்கடித்து! அக்கறையாக நான்கு வார்த்தை பேசினால் அவளுடைய பிடிவாதம் கரைந்து போய்விடுமா என்ன! கோவில் கூட்டத்தில் அவளுக்கு எந்த சங்கடமும் ஏற்பட்டுவிடாமல் பத்திரமாக பாதுகாத்தான் என்பது உண்மைதான்.. அதை இல்லை என்று மறுக்க முடியாது. ஆனால் அதை ஒரு பாடிகாட் கூட செய்வானே! அதற்காகவா அவள் மனம் நெகிழ்ந்துவிட்டது! இதெல்லாம் எங்கு போய் முடியுமோ என்கிற சிந்தனை அவளுக்குள் ஒருவித அச்சத்தை கிளப்பியது.
ஆம், தன்னுடைய கனவுகளையெல்லாம் மூட்டைகட்டி தூர எறிந்துவிட்டு அவனோடு இந்த பட்டிக்காட்டில் வாழ்க்கை நடத்த தயாராகிவிடுவோமோ என்கிற அச்சம் அவளுக்குள் தலை தூக்கியது. அப்படியே அவள் தயாரானாலும் எத்தனை நாட்களுக்கு அவளால் இந்த சூழ்நிலையை தாக்குப் பிடிக்க முடியும்!
ஆசை மோகம் எல்லாம் குறைந்து வாழ்க்கை நிலைப்படும் போது, லண்டனில் வாழும் அக்காவையும், உடன் படித்த தோழிகளின் சொகுசு வாழ்க்கையையும் கண்டு அவளுக்குள் ஏக்கம் தலைதூக்காதா! அதன் பிறகு அவர்களுடைய வாழ்க்கை எப்படி இருக்கும்! – கனிமொழியின் சிந்தனை எதிர்காலத்துக்கும் நிகழ்காலத்துக்கும் ஓடி ஓடி ஓய்ந்து போனது. உறக்கமே வரவில்லை.
மறுநாள் காலை அவள் கண்விழித்த போது வழக்கம் போல் மலையமான் பண்ணைக்கு சென்றிருந்தான். அவள் கல்லூரிக்கு செல்லும் நாட்களில் காலை நேரத்தில் இருவரும் சந்திக்க முடியாது. இரவு அவன் பண்ணையிலிருந்து திரும்பும் போதுதான் சந்தித்துக்கொள்வார்கள்.
என்னவோ, அப்போதைக்கு அவனை பார்க்க வேண்டியதில்லை என்பதே அவளுக்கு நிம்மதியாக இருந்தது. பரபரவென்று குளித்து தயாராகி கைப்பையுடன் வாசலுக்கு வந்தாள். மலையமானின் பைக் நேராக அவளுக்கு எதிரில் வந்து நின்றது.
அவளுக்குத்தான் அவனை பார்க்க வேண்டாம்.. ஆனால் அவனுக்கு அவளை பார்த்தாக வேண்டுமே! முதல் நாள் இரவு அவள் கையை பிடித்துக் கொண்டு திருவிழாவை சுற்றி வந்த நினைவு அவன் நெஞ்சுக்குள் குழலிசையாய் ரீங்காரமிட்டுக் கொண்டிருக்க, கல்லூரிக்கு கிளம்பும் முன் இன்னொருமுறை அவள் அருகாமையை அனுபவிக்கும் ஆர்வத்தோடு அரக்கப்பரக்க ஓடிவந்தான்.
கணவனை பார்த்ததும், எதிர்பாராத நேரத்தில் கடன்காரனை கண்டுவிட்டது போல் திகைத்து நின்ற கனிமொழி, “காலேஜுக்கா?” என்கிற அவனுடைய அபத்தமான கேள்வியில் புருவம் உயர்த்தினாள்.
“இல்ல, சீக்கிரம் கிளம்பிட்ட போல தெரியுதே! அதான் கேட்டேன்”
“இல்லையே.. கரெக்ட் டைம் தான்” – முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு மணிக்கட்டை திருப்பிப் பார்த்தபடி முணுமுணுத்தாள். மலையமானின் பார்வை அவளை பருகியது. அவளும் அதை உணர்ந்தாள்.
“லேட் ஆயிடிச்சு. வரேன்…” – தடுமாற்றத்துடன் கூறிவிட்டு தன்னுடைய ஸ்கூட்டியை எடுத்தாள். கண்ணிலிருந்து மறையும் வரை அவன் பார்வை அவளை தொடர்ந்துக் கொண்டே இருந்தது.
அந்த பார்வை அவளுக்குள் கோபத்தை தூண்டிவிட்டது.. பார்வையாலும் பேச்சாலும் அவன் தன்னை குழப்புகிறான்.. தன் மனதை கலைக்கிறான் என்று குற்றத்தை அவன் பக்கம் திருப்பி கோபத்தை பற்றுக்கோளாக பிடித்துக் கொண்டாள். கோபமாக தான் என்றாலும், கல்லூரிக்கு சென்று சேரும்வரை அவன் நினைவுகள் தான் அவளை ஆக்கிரமித்திருந்தன.
கனிமொழி ஸ்டாஃப் ரூமிற்குள் நுழைந்து மேஜை டிராயரில் பையை வைத்ததுதான் தாமதம், எங்கிருந்தோ ஓடி வந்து அவள் எதிரில் நின்றாள் ப்ரீத்தி. மலர்ந்த முகம்.. பளீர் புன்னகை.. கூந்தலில் கொஞ்சம் அதிகமாகவே பூ…
அவளை பார்த்ததுமே தன் பிரச்சனைகள் அனைத்தையும் மறந்துவிட்டு, “ஹேய்… என்னடி விசேஷம்! ஒரு மார்க்கமா இருக்க!” என்றாள் கனிமொழி உற்சாகத்துடன்.
ப்ரீத்தியின் முகம் குப்பென்று சிவந்தது. “பார்த்ததுமே கண்டுபிடிக்கிற அளவுக்கா இருக்கேன்” என்றாள்.
“அடிப்பாவி! அப்போ என்னோட கெஸ்ஸிங் கரெக்ட் தானா! சொல்லவே இல்ல! யாரு.. எப்போ.. எப்படி???” என்று கனிமொழி கேள்விகளை அடுக்கிக் கொண்டே போக, “வெயிட்… வெயிட்… வெயிட்… எல்லாத்தையும் சொல்றேன். வா என் கூட” என்று அவளை கேன்டீன் பக்கம் தள்ளிக் கொண்டு போனாள். ஆளுக்கு ஒரு டீயை வாங்கி கொண்டு இருவரும் ஒரு மரத்தடி பக்கம் ஒதுக்கினார்கள்.
“விக்ரம்…” – என்று கூறி தன்னுடைய அலைபேசியில் இருந்த ஒரு புகைப்படத்தை காட்டினாள் ப்ரீத்தி.
அழகன்… ப்ரீத்திக்கு பொருத்தமானவன்..”வாவ்…!!” என்று ஆர்பரித்தபடி, மகிழ்ச்சியோடு தோழியை கட்டிக் கொண்ட கனிமொழி, “கங்கிராட்ஸ் டி” என்றாள்.
“அப்புறம்.. பையன் என்ன பண்றாரு?” என்று மேற்கொண்டு விசாரித்தாள்.
அரபு தேசம் ஒன்றில் கட்டிடக்கலை பொறியாளராக பணியாற்றிக் கொண்டிருப்பதாக கூறினாள்.
“கல்யாணத்துக்கு பிறகு நீயும் அப்ராட் போயிடுவியா?” – அவளுக்குள் சின்ன கலவரம்.
“ம்ம்ம்… பாஸ்போர்ட் எடுக்க அப்ளிகேஷன் அனுப்பிட்டேன்”
“சூப்பர் டி…” – அதுவரை உண்மையான மகிழ்ச்சியோடு பேசிக் கொண்டிருந்த கனிமொழியின் மனதில் அந்த கணத்தில் ஒரு சின்ன சஞ்சலம் ஏற்பட்டது. மனித மனம்தானே! சஞ்சலத்திற்கு என்ன குறைச்சல்!
கனிமொழி ப்ரீத்தியை விட புத்திசாலி.. படிப்பில் கெட்டிக்காரி. வசதி வாய்ப்பிலும் பலமடங்கு உயர்ந்தவள். ஆனால் என்ன பிரயோஜனம்?
ப்ரீத்திக்கு நதி போல ஓடும் வாழ்க்கை அமைந்திருக்கிறது. அவளுடைய வாழ்க்கையோ குட்டை போல் தேங்கி கிடக்கிறது. தோழியின் மீது அவளுக்கு நிச்சயமாக பொறாமை இல்லை. ஆனால் தன்னை அறியாமலேயே ஒரு ஒப்பீடு அவள் மனதில் எழுந்துவிட்டது.
அந்த ஒப்பீடு அவள் மனதில் எழுந்துவிட்டதால் அவளை பெரிய பாதகி என்றெல்லாம் எண்ணிவிட முடியாது. அவளுடைய இடத்தில் ப்ரீத்தி இருந்திருந்தால் இன்னும் அதிகமாக கூட யோசித்திருக்கலாம். அது மனித இயல்புதான். கனிமொழியிடமும் அந்த இயல்பு இருந்தது. அவ்வளவுதான்…
அன்று முழுவதும் அவளால் எதிலும் கவனம் செலுத்த முடியவில்லை. தன்னுடைய வாழ்க்கை இப்படி அநியாயமாக ஒரு பட்டிக்காட்டில் சிக்கிக் கொண்டதே என்று எண்ணியெண்ணி மாய்ந்து போனாள். முதல்நாள் மலையமானோடு கோவிலுக்கு சென்றது மிகப் பெரிய தவறு என்று எண்ணியவள், இந்த வாழ்க்கை தனக்கு ஒருபோதும் ஒத்துவராது.. ஏதாவது ஒரு உறுதியான முடிவை எடுத்தாக வேண்டும் என்று யோசித்தாள். அப்போதுதான் அந்த பெண்மணியின் நினைவு அவளுக்கு வந்தது.
சில நாட்களுக்கு முன் அவர்களுடைய கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, ‘விமன் எம்பவர்மென்ட்’ பற்றி பேசிய புகழ்பெற்ற பெண் வழக்கறிகர் அவர். தன்னுடைய பிரச்னையை அவரால் முடிவுக்கு கொண்டுவர முடியும் என்று நம்பினாள் கனிமொழி.
மலையமானுக்கு அன்று முழுவதும் வேலையே ஓடவில்லை. மனைவியை பற்றிய சிந்தனைகள் அவன் மண்டையை குடைந்தன. முதல் நாள் அவன் கையை பிடித்துக் கொண்டு திருவிழாவில் வளம் வந்தவள் மறுநாள் சொல்லாமல் கொள்ளாமல் கல்லூரியிலிருந்து நேராக பிறந்த வீட்டுக்கு சென்றுவிட்டாள். அவளுடைய தந்தையோ சமாதானத்திற்காக ஏதேதோ காரணங்கள் சொன்னார். அவையெல்லாம் வெறும் மழுப்பல்கள் தான் என்பது அவனுக்கு நன்றாகவே புரிந்தது.
ஆனால் புரியாத விஷயம் என்னவென்றால், வெகு சில நேரங்களில் அவள் அவனிடம் நன்றாக பேசியிருக்கிறாள்.. சிரித்திருக்கிறாள்.. கள்ளப்பார்வை கூட பார்த்திருக்கிறாள். அவள் மாறி கொண்டிருப்பதாக நினைத்தானே! எல்லாம் வெறும் கற்பனைதானோ! இல்லையென்றால் திடீரென்று எதற்காக அவள் பிறந்த வீட்டுக்கு செல்ல வேண்டும்!
திருமணமாகி கிட்டத்தட்ட ஆறு ஏழு மாதங்களாகிவிட்டது. ஒருமுறை கூட பிறந்த வீட்டுக்கு செல்ல வேண்டும் என்றோ அங்கு தங்க வேண்டும் என்றோ அவள் யோசித்ததாகக் கூட அவனுக்கு தெரியவில்லை. அவனுடைய எளிமையான வாழ்க்கை முறையில் அவள் தன்னை பொருத்திக்கொள்ள வெகுவாக போராடி ஓரளவுக்கு வெற்றியும் கண்டுவிட்டாள் என்று தான் தோன்றுகிறது. அப்படி இருக்கும் போது இப்போது காரணமில்லாமல் அவள் அங்கு சென்று மூன்று நாட்கள் தங்கியிருக்கிறாள் என்பதை அவனால் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை.
தென்னை மரங்களுக்கு சொட்டு நீர் பாசனத்திற்கு பொருத்தப்பட்டிருந்த குழாய்களில் அடிக்கடி தேங்காய் விழுந்து பழுதாகிவிடுவதால் தரமான பைப் மாற்ற ஆட்களை வர சொல்லியிருந்தான். வேலை நடந்து கொண்டிருந்தது. நின்று மேற்பார்வை பார்க்க வேண்டியவனுக்கோ அங்கே நிலைகொள்ளவில்லை. நாராயணனுக்கு கால் செய்து அழைத்தது, “கொஞ்ச நேரம் இங்க இருந்து பார்த்துக்க மாமா. எனக்கு வேற வேலை ஒன்னு இருக்கு. முடிச்சிட்டு வந்துடறேன்” என்று சொல்லிவிட்டு வண்டியை எடுத்தவன், நேராக மாமனாரின் பண்ணைக்கு சென்றான். அங்கே அவர் இல்லை. வீட்டுக்கு சென்றிருப்பதாக வேலைக்காரர்கள் சொன்னார்கள்.
வீட்டுக்கு செல்ல அவனுக்கு கொஞ்சம் தயக்கமாக இருந்தது. தோப்பில் நின்றபடியே வந்துவிட்டான். வீட்டுக்கு இப்படியே செல்ல முடியாது. வீட்டுக்கு சென்று குளித்துவிட்டு புறப்படும் அளவுக்கு பொறுமை இல்லை. அலைபேசியில் பேசுவதும் சரியாக இருக்காது. அங்கேயே குறுக்கும் நெடுக்குமாக நடந்தவன் பிறகு அலைபேசியை எடுத்து அவருக்கு அழைத்தான்.
“இங்கதான் மாமா… பண்ணைக்கு வந்தேன். நீங்க வீட்டுக்கு கிளம்பிட்டிங்கனு ஆளுங்க சொன்னாங்க. எப்ப வருவீங்க?” என்று விசாரித்தவன் அவர் மாலை வருவதாக சொன்னதும் சோர்ந்து போனான். அதுவரை என்ன செய்வது!
பொறுமை எள்ளளவும் இல்லை. ஏதோ ஒரு பதட்டம்.. அவள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாள் என்பதை உடனடியாக தெரிந்துகொண்டே ஆகவேண்டும் என்பது போன்ற துடிப்பு அவனை நிற்க விடமால் துரத்தியது. கிட்டத்தட்ட பைத்தியம் பிடிக்காத குறைதான் என்று கூட சொல்லலாம்.
“என்ன மாமா சொல்றா? ஏன் இன்னும் வீட்டுக்கு வராம இருக்கா?” – பொறுக்க முடியாமல் அலைபேசியிலேயே கேட்டுவிட்டான்.
“அதான் சொன்னேனே மாப்ள. சும்மா ரெண்டு நாள் இருந்துட்டு போகலாம்னு வந்ததாதான் சொன்னுச்சு. இப்ப காலேஜுக்கு போயிருக்கு. வந்ததும் வீட்டுக்கு கூட்டிட்டு வர்றேன்” என்றார்.
இன்னொரு முறை கட்டாயத்தின் பெயரில் அவள் தன்னுடைய வீட்டுக்கு வர வேண்டாம் என்று நினைத்தவன் உடனடியாக அவரை மறுத்தான். “இல்ல மாமா, அவ தானா முடிவெடுக்கட்டும். வற்புறுத்தாதீங்க. எதுவா இருந்தாலும் இப்பவே ஒரு முடிவு எடுத்துடுவோம்” என்றான். இதற்கு மேல் அவனால் இந்த அழுத்தத்தை பொறுக்க முடியாது. வாழவும் முடியாமல் சாகவும் முடியாமல் என்ன வேதனை இது!
“என்ன மாப்ள நீங்க இப்படி சொல்றீங்க!” என்றார் அங்கப்பன் வருத்தத்துடன்.
“கல்யாணம் ஆகி ஏழு மாசம் ஆச்சு மாமா. இந்த ஏழு மாசத்துல அவ மனசு மாறலைன்னா எப்பவும் மாற மாட்டா. அதனால எதுவா இருந்தாலும் அவளே யோசிச்சு ஒரு முடிவுக்கு வரட்டும். எந்த முடிவா இருந்தாலும் சீக்கிரம் எடுக்கறது எல்லாருக்கும் நல்லது” என்று கூறிவிட்டு அலைபேசியை அணைத்தான்.
Comments are closed here.