Share Us On
[Sassy_Social_Share]கனியமுதே! – 15
2149
0
அத்தியாயம் – 15
மலையமானுக்கு சற்றும் குறையாமல் கலங்கிப் போயிருந்தது கனிமொழியின் மனம். தெளிவாக யோசித்து தீர்க்கமாக முடிவெடுத்துத்தான் இரண்டு நாட்களுக்கு முன் அந்த வழக்கறிக்காரை சென்று சந்தித்தாள்.
கனிமொழியின் பிரச்சனைகள் அனைத்தையும் கவனமாக கேட்டு தெரிந்துக் கொண்டவர், “என்ன எதிர்பார்த்து என்கிட்ட வந்திருக்க? நா எந்த விதத்துல உனக்கு ஹெல்ப் பண்ணனும்?” என்றார் பிசிறற்ற குரலில்.
கனிமொழி சற்று நேரம் எதுவும் பேசவில்லை. பிறகு, “என்னை இந்த கல்யாணத்துலேருந்து ஃபிரீ பண்ணிவிடுங்க” என்றாள்.
“யு மீன் டிவோர்ஸ்?”
வழக்கறிஞர் அந்த வார்த்தையை சொன்னவுடன் அவள் முகத்தில் அதிர்வு தெரிந்தது. அதை கவனித்துக் கொண்டே, “உனக்கு முழுசா டைவர்ஸ் வேண்டாம்னா ஜுடிஷியல் செப்பரேஷன் க்ளைம் பண்ணலாம். அஃபிஷியலா கணவன் மனைவிதான்.. ஆனா சேர்ந்து இருக்க வேண்டிய அவசியம் இல்ல” என்று இன்னொரு ஆப்ஷன் கொடுத்தார்.
அவர் கொடுத்த இரண்டாவது ஆப்ஷனில் அவளுக்கு விருப்பம் இல்லை. பிரிவது என்று முடிவெடுத்துவிட்டால் மொத்தமாக பிரிந்துவிடுவதுதான் நல்லது. அவனாவது தனக்கு தகுந்த வாழ்க்கையை அமைத்துக் கொள்வானே! தானும் கெட்டு அவனையும் கெடுக்கும் எண்ணம் அவளுக்கு இல்லை.
“டிவோர்ஸுக்கே அப்ளை பண்ணிடலாம்” என்றாள் ஜீவனற்ற குரலில்.
கனிமொழி கூறிய விபரங்கள் அனைத்தையும் அங்கே மற்றொரு சேரில் அமர்ந்து குறிப்பெடுத்துக் கொண்டிருந்தாள் ஜுனியர் லாயர்.
“கல்யாண பத்திரிக்கை போட்டோஸ் உன்னோட ஐடி ப்ரூஃப் உன் ஹாஸ்பண்டோட ஐடி எல்லாம் கொண்டு வந்திருக்கியாம்மா?”
“அவரோட ஐடி தவிர மற்ற எல்லாம் இருக்கு” – போனில் ஏற்கனவே பேசிவிட்டு வந்திருந்ததால் தேவைப்பட்ட அனைத்து டாக்குமெண்ட்ஸும் கைவசம் கொண்டு வந்திருந்தாள்.
அனைத்தையும் ஒரு காப்பி எடுத்து காகிதத்தின் பின் பக்கம் கையெழுத்திட்டு ஜீனியர் லாயரிடம் கொடுத்ததோடு, அவள் கேட்ட கூடுதல் தகவல்களையும் கொடுத்து முடித்துவிட்டு மீண்டும் முதன்மை வழக்கறிக்காரை சென்று சந்தித்தாள்.
“அடுத்த வாரத்துல ஒரு நாள் வாம்மா. டாக்குமெண்ட்ஸ் ரெடியா இருக்கும். சைன் பண்ணி கொடு, கேஸ் ஃபைல் பண்ணிடலாம்” என்றார்.
அவரிடம் ஆமோதிப்பாக தலையசைத்துவிட்டு வந்தவள் தான்… மூன்று நாட்களாக மனதில் ஏதோ பெரிய பாரத்தை ஏற்றி கொண்டது போல் துவண்டு போனாள். எப்படி கல்லூரிக்கு போகிறாள் பாடம் எடுக்கிறாள் என்பது கூட தெரியாத அளவுக்கு மனநிலை மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது. காரணம் வேறொன்றும் இல்லை… குற்றஉணர்ச்சி…
ஏழு மாதங்களாக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அவளுடைய அனைத்து தேவைகளையும் பார்த்துப் பார்த்து பூர்த்தி செய்தவன்! அவனையா கோர்ட் வரை இழுத்து அசிங்கப்படுத்துவது! – நன்றி உணர்வுடன் கூடிய ஒரு கனிவு.. அதை அன்பு என்று கூட சொல்லலாம். அந்த உணர்வுதான் அவளை பாடாய்படுத்தியது. அவனிடமிருந்து விலகியிருந்தால் அந்த உணர்விலிருந்து விடுபட்டுவிட கூடுமோ என்று எண்ணி நாட்களை கடத்தினாள்.
கனிமொழி லாயரை சந்தித்துவிட்டு வந்தது வீட்டில் யாருக்கும் தெரியாது. சொல்ல வேண்டும் என்று அவளுக்கு தோன்றவில்லை. அவளுக்கே அந்த முடிவில் இப்போது திடமில்லை. அப்படி இருக்கும் போது எதற்காக அதைப்பற்றி மற்றவர்களிடம் சொல்லி குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்று மெளனமாக இருந்தாள். ஆனால் உள்ளுக்குள் ஒரே போராட்டம்.. மலையமானை பிரிவதா வேண்டாமா என்று அவள் மனம் இரண்டாக பிரிந்து யுத்தம் செய்தது. வெற்றியும் இல்லாமல் தோல்வியும் இல்லாமல் தொடரும் யுத்தத்தில் அவள் சோர்ந்து போனாள்.
அன்று இரவு மகளிடம் பேசினார் அங்கப்பன். “மாப்ள ரொம்ப வருத்தப்பட்டாரும்மா” என்றார்.
அவன் வருத்தப்பட்டான் என்கிற செய்தியே அவளுக்கு வலித்தது. பதில் பேசாமல் மெளனமாக அமர்ந்திருந்தாள்.
அதன் பிறகு வெகுநேரம் மலையமானை பற்றிய நல்ல விஷயங்களையெல்லாம் மகளுக்கு எடுத்துக் கூறினார் அங்கப்பன். அவர் சொல்லித்தான் அதெல்லாம் அவளுக்கு தெரிய வேண்டும் என்பது இல்லை. அவன் நல்லவன்… திறமையானவன்.. அவள் மீது அன்பு கொண்டவன் என்பதிலெல்லாம் அவளுக்கு எந்த மாற்று கருத்தும் இல்லை. ஆனால் தனக்கு தகுதியானவனா என்கிற கேள்வியில் தான் அவள் மனதில் தடுமாற்றம் எழுகிறது. அந்த தடுமாற்றத்துடனே இன்னும் சில நாட்கள் கழிந்தன.
கனிமொழி பிறந்த வீட்டுக்கு வந்து பத்து நாட்களாகிவிட்ட நிலையில் அங்கே மலையமானுக்கு அழுத்தம் அதிகரித்தது. வீட்டுப்பக்கம் தலை வைத்துக் கூட படுக்க முடியாத அளவுக்கு அலமேலுவின் புலம்பல் அதிகமாகியிருந்தது. பண்ணையில் வேலை செய்பவர்களெல்லாம் அறிந்தவர் தெரிந்தவர்கள் தான் என்பதால் அவளை பற்றிய கேள்விகள் அதிகமாக எழ துவங்கியிருந்தன. எங்காவது பொது இடங்களில் உறவினர்களை சந்தித்தால் அவர்கள் அவளை பற்றி எதுவும் கேட்டுவிடக் கூடாதே என்கிற எண்ணம் அவனுக்குள் ஒருவித பதட்டத்தை கொடுத்தது. அவள் தானாக முடிவெடுக்கட்டும் என்று காத்திருக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டான்.
அன்று மாலை கனிமொழி கல்லூரியிலிருந்து வீட்டுக்கு வந்த போது வாசலில் அந்த பைக்கை பார்த்ததுமே அவளுக்கு படபடவென்று ஆகிவிட்டது. அவன் முகத்தை பார்க்க முடியாத அளவுக்கு குற்ற உணர்ச்சி.. பார்த்தாக வேண்டுமே என்கிற பயம்.. பத்து நாட்கள் கழித்து பார்க்க போகும் மகிழ்ச்சி.. எல்லாம் கலந்த ஒரு விசித்திரமான உணர்வு அவளை ஆட்கொண்டது. உள்ளே ஏதோ ஒரு பெரிய திரை நட்சத்திரம் அமர்ந்திருப்பது போல, ஒரு ரசிகையின் மனநிலையோடு.. தயக்கமும் அதை மறைக்கும் முயற்சியுமாக சங்கடத்துடன் உள்ளே நுழைந்தாள்.
சோபாவில் அமர்ந்து அங்கப்பனுடன் பேசிக் கொண்டிருந்த மலையமான் அவள் உள்ளே நுழைவதை அறிந்தும் நிமிர்ந்து பார்க்கவில்லை. அது எதுவும் அவள் கருத்தில் பதியவில்லை. அவளுடைய கவனமெல்லாம், கதர் சட்டையும் காவி வேட்டியும் அணிந்திருந்தவன், அந்த எளிமையான உடையிலும் எவ்வளவு கம்பீரமாக இருக்கிறான் என்பதில் தான் இருந்தது.
தன்னையறியாமல் அவள் பார்வை அவனை ரசனையுடன் வருட, “வந்துட்டியாம்மா” என்று குரல் கொடுத்து மகளின் ரசனையை கலைத்தார் அங்கப்பன். அவளுடைய பார்வை தந்தையிடம் திரும்பியது.
“மாப்ள உன்ன பார்க்கத்தான் வந்திருக்காரு. பேசிகிட்டு இரு… எனக்கு வெளியே வேலை இருக்கு, போயிட்டு வந்துடறேன்” என்று கூறி அவர்களுக்கு தனிமை கொடுத்து விலகினார். அதன் பிறகுதான் அவன் பார்வை அவள் பக்கம் திரும்பியது… தீர்க்கமான பார்வை.. துளைக்கும் பார்வை… சங்கடத்துடன் பார்வையை விலக்கிக் கொண்டவள், “வாங்க” என்று முணுமுணுத்தாள்.
“பரவால்ல, எதுக்குடா வந்தேன்னு கேட்காம வாங்கன்னு சொல்ற!” என்றான் குத்தலாக.
அவள் உதட்டை கடித்துக் கொண்டாள். அவனுக்கு அவள் மீது கோபம், ஆத்திரம், ஆற்றாமை எல்லாம் இருந்தது. ஆனால் எதையுமே அவளிடம் காட்ட முடியவில்லை. தன் மனதை திறந்து உள்ளதை உள்ளபடியே அவளிடம் கொட்டும் உரிமையை இன்னும் அவள் அவனுக்கு கொடுக்கவில்லை. அதை தானாக எடுத்துக்கொள்ளும் மனிதனும் அவன் அல்ல. தன்னுடைய மன உணர்வுகள் அனைத்தையும் அடக்கிக் கொண்டு அமைதியாக அவளிடம் கேட்டான்,
“எப்போ வீட்டுக்கு வர்ற?” – ஊர் உலகம் கொடுக்கும் அழுத்தத்தைத் தாண்டி அவன் மனமே, அவளை விட்டுவிடாதே என்று ஓலமிட்டுக் கொண்டிருந்தது. அந்த குரலை அவனால் புறக்கணிக்க முடியவில்லை.
பத்து நாட்களாக மனதில் அழுத்திக் கொண்டிருந்த பாரமெல்லாம் நொடியில் வடிந்துவிட்டது போல் உணர்ந்தாள் கனிமொழி. தன்னைத்தேடி அவன் வந்துவிட்டான் என்பதில் அத்தனை மகிழ்ச்சி அவளுக்கு. கண்ணாடி போல் மனதை பிரதிபலித்தது அவள் முகம். மலையமான்தான் குழம்பிப் போனான்.
‘ஒரு காரணமும் இல்லாம அவளாவே தான் விட்டுட்டு ஓடி வந்தா.. இப்ப என்னமோ நமக்காகவே காத்துக்கிடந்தவ மாதிரி ரியாக்ஷன் குடுக்குறா! ராங்கி பிடிச்சவ.. எனக்குன்னு வந்து வாச்சிருக்கா பாரு!’ – அலுத்து கொண்டாலும் அவள் முகத்தில் மலர்ச்சியை கண்டதும் அவனுக்குள் ஒருவித நிம்மதி.. தவறான முடிவுகள் எதையும் எடுத்துவிடமாட்டாள் என்கிற நம்பிக்கை பிறந்தது. மூச்சுக்குழலுக்குள் அடைத்துக் கொண்டிருந்த ஏதோ ஒன்று விலகியது போல் ஆசுவாசமாக உணர்ந்தான்.
‘உன்ன நல்..லா வச்..சு செய்றாடா மலையா!’ என்று எண்ணிக் கொண்டான்.
கையிலிருந்த புத்தகங்கள் கைப்பை அனைத்தையும் டீபாயில் வைத்துவிட்டு அவனுக்கு எதிரில் அமர்ந்தவள், “காபி டீ ஏதாவது சாப்பிட்டீங்களா?” என்றாள். அவனுடைய வீட்டில் அவளை எப்படி பார்த்துக் கொண்டான்! பதிலுக்கு அவள் இந்த அளவுக்கு கூட உபசரிக்கவில்லை என்றால் எப்படி! – பதிலுக்கு பதில் தான் செய்கிறாளாம்.. மற்றபடி அவளுக்கு அவன் மீது ஸ்பெஷல் அக்கறையெல்லாம் எதுவும் இல்லையாம்.. தனக்குத்தானே சொல்லிக் கொண்டாள்.
“நா இங்க காபி குடிக்கறதுக்கு வரல.. கேட்டதுக்கு பதில் சொல்லு” – வெடுக்கென்று பேசினான்.
இது போல் அவன் அவளிடம் பேசியதில்லை. இதுதான் முதல் முறை… அவள் முகம் வாடிவிட்டது.
“நீபாட்டுக்கு இப்படி சொல்லாம கொள்ளாம வந்து உட்கார்ந்துக்கிட்டா என்ன அர்த்தம்? என்னைய பார்த்தா எப்படி தெரியுது உனக்கு?” – சீறினான். அவனுக்குள் இருக்கும் கோபத்தில் ஒரு சதவிகிதம் கூட வெளிப்படவில்லை. அதற்கே கனிமொழியிடம் பெரிய பாதிப்பு இருந்தது. எச்சிலை கூட்டி விழுங்கி தொண்டைக்குள் திரண்ட ஆத்திரத்தை உள்ளுக்குளேயே விழுங்கி கொண்டாள். கண்களில் கண்ணீர் கோர்த்துவிடாமல் கண்களை சிமிட்டிக் கொண்டாள்.
“என்னை பார்த்து பதில் சொல்லு. உன்கிட்ட கெஞ்சணுமா நான், ம்ம்ம்? வாயை திறந்து பேசு” – அதட்டினான். நிமிடத்திற்கு நிமிடம் அவனுடைய பேச்சில் சூடு ஏறி கொண்டே போனது. உள்ளே அடக்கி வைத்திருந்த உணர்வுகளெல்லாம் அவனை மீறி கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறி கொண்டிருக்க, கனிமொழிக்கு அவன் காட்டும் கடுமையை தாங்க முடியவில்லை.
“எனக்கு ஒரு பிரேக் தேவைப்பட்டுச்சு… அதான் வந்தேன்…” – அவசரமாக கூறினாள். கோபம் குறைந்து அவனை பழைய மலையமானாக பார்க்க வேண்டும் என்பது மட்டும்தான் அப்போது அவளுடைய எண்ணமாக இருந்தது.
“முதல் நாளு என்னோட கோயிலுக்கு வந்தவளுக்கு மறு நாள் என்ன பிரேக்கு? எதுக்குடா இவனோட கோயிலுக்கு போனோம்னு நெனச்சு ஓடியாந்துட்டியா?” என்றான். கோபத்தையும் மீறிய ஒரு வலி தெரிந்தது அவன் குரலில்.
அடிபட்டவள் போல் அவனை பார்த்தாள் கனிமொழி. அவன் புதிதாக எதையும் சொல்லவில்லை. அவள் எதை நினைத்து செய்தாளோ அதைத்தான் சொன்னான். ஆனால் அவன் வாயிலிருந்து… வலி நிறைந்த குரலில் அதை கேட்கும் பொழுது அவனைவிட அதிகமாக அவளுக்கு வலித்தது.
“ஏன் இப்படியெல்லாம் பேசுறீங்க?” என்றாள் கரகரத்த குரலில். அந்த குரலும் கன்றிவிட்ட அவள் முகமும் அவனை சற்று நிதானப்படுத்தியது.
“எப்ப வீட்டுக்கு வர்ற?” என்றான் மீண்டும் முதலில் கேட்ட அதே கேள்வியை.
“கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. ரூம்ல சில திங்ஸ் இருக்கு, எடுத்துக்கிட்டு அம்மாகிட்ட சொல்லிட்டு வந்துடறேன்” என்று கூறிவிட்டு உள்ளே சென்றாள்.
அவள் தன்னோடு அப்பொழுதே புறப்படுவாள் என்று எதிர்பார்க்காத மலையமானின் பார்வை வியப்புடன் அவளை பின்தொடர்ந்து.
Comments are closed here.