Share Us On
[Sassy_Social_Share]கனியமுதே! – 17
1977
0
அத்தியாயம் – 17
“என்ன எழவுக்குய்யா நீயெல்லாம் வேலைக்கு வர்ற? உங்காம திங்காம இப்படி பத்து லிட்டர் பாலை வீணாக்கிட்டியே! இந்த மாட்டுக்கெல்லாம் தீவனம் வச்சு தேத்த நா எவ்வளவு பாடுபட்டேன்னு தெரியுமா உனக்கு? வேலைக்கு வந்த இடத்துல என்னய்யா போனு! பேசாம கண்ணுகுட்டிக்காவது ஊட்டத்துக்கு விட்டிருக்கலாம்! வந்து சேர்ரது எல்லாம் கழுசடை!” – விடிந்தும் விடியாத அந்த ஏகாந்த வேளைக்கு சற்றும் பொருத்தமில்லாமல், கடும் கோபத்துடன் பண்ணையில் வேலை செய்பவரை விட்டு விளாசிக் கொண்டிருந்தான் மலையமான்.
காரணம் வேறொன்றும் அல்ல.. அவர் கன்றுக்குட்டியை அவிழ்த்துவிட்ட நேரம் வீட்டிலிருந்து ஏதோ காரணத்திற்காக போன் வந்துவிட, அழைப்பை ஏற்று என்னவென்று கேட்டார். அந்த நேரம் பார்த்து துள்ளி குதித்து ஓடிக் கொண்டிருந்த கன்று, கறந்து வைத்திருந்த பால் கேனை உதைத்து தள்ளிவிட, பால் கேன் கவிழ்ந்து குபுகுபுவென்று தரையில் பாலாறு பெருகியது.
அவ்வளவுதான்.. ருத்ராவதாரம் எடுத்துவிட்டான் மலையமான். விட்டால் அவரை அடித்தேயிருப்பான். அந்த அளவுக்கு அவன் வெடித்து சிதற காரணம் சிந்திய பால் மட்டும் அல்ல. வேலை பளு ஒரு பக்கம், வேலை முடித்து வீட்டுக்கு சென்றால் அங்கே இருக்கும் நிம்மதியற்ற சூழ்நிலை இன்னொரு பக்கம் என்று அவன் கடுமையான அழுத்தத்திற்கு உள்ளாகியிருந்தான். எந்த விதத்திலும் அவனுக்கு சந்தோஷமில்லை. அனைத்திற்கும் காரணம் அவள் மட்டும்தான்.. கனிமொழி!
குழந்தைக்கு மிட்டாய் காட்டி ஏமாற்றுவது போல், அவனை பார்ப்பதும், உதடு பிரியாமல் சிரிப்பதும், முகத்தில் மலர்ச்சியை காட்டுவதுமாக இருப்பவளை நம்பி இவன் ஒரு அடி முன்னோக்கி எடுத்து வைத்துவிட்டால் போதும், ஏதோ துஷ்டனை கண்டது போல் தூரமாக விலகி ஓடிவிடுகிறாள். திருவிழாவில் அவன் கையை பிடித்துக் கொண்டு சுற்றியவள் மறுநாளே சொல்லாமல் கொள்ளாமல் பிறந்த வீட்டுக்கு ஓடிவிடவில்லையா! அது போல்தான்!
போகட்டும் என்று வீட்டுக் கொடுத்துத்தான் போனான். குறைபட்டுக் கொள்ளவில்லை. சிறுபிள்ளை தனமாக நடந்து கொள்கிறாள், போகப் போக புரிந்து கொள்வாள் என்று எண்ணி அவளுக்கு அவகாசம் கொடுத்து ஒதுங்கி, தன்னுடைய பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் முனைப்பானான். ஆனால் அதுவே அவளுக்கு சாதகமாக போய்விட்டதோ என்று இப்போது தோன்றியது. அவள் அவனிடம் அலட்சியம் காட்டும் போது பொறுத்து கொண்டதன் விளைவு இப்போது அவனை பெற்றவளிடம் கூட மரியாதை இல்லாமல் போய்விட்டது.. அதைத்தான் அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
அன்று அவன் நுங்கு வெட்டிக் கொண்டு வந்தானே.. அன்றிலிருந்தே அவனுக்கு மனஉளைச்சல்தான். அலமேலுவுக்கு ஏற்கனவே ஆஸ்துமா பிரச்சனை இருக்கிறது. அதை கண்டுகொள்ளாமல் அவர் அன்று மகன் கொண்டு வந்த நுங்கில் இரண்டு மூன்றை ஆசைப்பட்டு அருந்திவிட்டார். விளைவு கடுமையான மூச்சிரைப்பு கிளம்பிவிட்டது. மூன்று நாட்களாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று நரம்பு ஊசி போட்டுக் கொண்டு வருவதும், மூக்கில் மருந்தாவி பிடித்துக் கொண்டு வருவதுமாக பிழைப்பு ஓடிக் கொண்டிருக்கிறது.
அந்த பெண்மணியை பார்த்துக்கொள்ளும் கடமை அவளுக்கு இல்லையா! பார்த்துக்கொள்வது என்றால் நர்ஸ் வேலையெல்லாம் செய்ய வேண்டியதில்லை… சமைக்கக் கூட வேண்டாம்… இரண்டு நாள் லீவ் போட்டுவிட்டு துணையாக உடன் இருக்கக் கூடாதா! திடீரென்று ஏதாவது பிரச்சனை என்றால் அவனுக்கு போன் பண்ணி சொல்லக் கூட ஆள் இல்லை. என்ன கருமத்திற்கு அவனுக்கு இந்த திருமணம்! மனதிற்குள் ஒரே புழுக்கம்.. அவளிடம் கொட்டி கவிழ்த்துவிடவும் மனம் வரவில்லை. காயப்படுத்துவது எளிது… ஆனால் வடுவை மாற்ற முடியாது. பல்லை கடித்து சகித்துக்கொண்டான். அந்த ஆத்திரமெல்லாம் வெளி ஆட்களிடம் வெடித்துக் கொண்டு வந்தது.
“தெரியாம நடந்துடிச்சு தம்பி, வேணுமுன்னு பண்ணல. இனிமே சாக்கரதையா இருந்துக்குறேன்” – முணுமுணுத்த மனிதர் இவனைவிட குறைந்தது பதினைந்து வயதிற்கு மூத்தவராக இருப்பார்.
கோபத்தையெல்லாம் கொட்டிவிட்ட பிறகு மனம் நிதானப்பட்டிருக்க, அவருடைய பேச்சு அவனை சங்கடப்படுத்தியது. ‘சின்ன விஷயத்துக்கு போயி இவ்வளவு கத்திட்டோமே! அதுவும் காலங் கருக்கல்ல…’ என்று குற்றவுணர்ச்சியுடன் எண்ணிக் கொண்டவன், “வேணு காரனுக்கு பாலு குறைஞ்சுடும்ல ண்ணே! அதான் டென்சனாயிட்டேன்.. பார்த்துக்கலாம் போ.. போயி வேலையை பாரு” என்று உடனே தன்மையாக பேசி அவரை சமாதானம் செய்துவிட்டு தன்னுடைய வேலைகளை கவனித்தான்.
வேன் வந்ததும் பாலை அளந்து ஊற்றிவிட்டு உடனே வீட்டுக்கு கிளம்பினான். தாய்க்கு எப்படி இருக்கிறதோ என்கிற கவலை அவனை நிற்க விடாமல் துரத்த, வீட்டுக்கு பறந்து வந்தான்.
அலமேலு அம்மாள் அவனை மட்டுமா பெற்றார்! தாமரையும் தன் கடமையை கையில் எடுக்க தம்பிக்கு முன்னதாகவே ஆஜராகியிருந்தாள். அதிகாலை ஐந்து மணிக்கெல்லாம் கையில் ஒரு தூக்கு வாலியோடு.. பனிக்கு பயந்து தலையில் முக்காடை போட்டுக் கொண்டு வந்தவள், தாயை எழுப்பி, கொண்டு வந்த காபியை டம்ளரில் ஊற்றிக் கொடுத்தாள். அந்த குளிருக்கு சூடான காபியை உள்ளே இறக்கியது அவருக்கு இதமாக இருக்க, உடம்பிலும் கொஞ்சம் தெம்பு வந்தது. அதற்கு மேல் படுத்தால் வேலை கெட்டுவிடும் என்று பாயை சுருட்டிக்கொண்டு எழுந்தவரை தடுத்தாள் மகள்.
“எதுக்கு இப்ப எந்திரிக்கிற? விடியிரத்துக்குள்ள இந்த பனியில எந்திரிச்சு இன்னும் இழுத்துக்க போறியா? பேசாம படும்மா” என்று தாயை அதட்டிவிட்டு, கட்டை விளக்கமாற்றை எடுத்துக் கொண்டு வீட்டை சுற்றி உள்ள கொல்லை முழுவதும் கூட்டி பெருக்கி சுத்தம் செய்தாள்.
அலமேலுவிற்கு முடியாமல் போனதிலிருந்து பெருக்கவே இல்லை என்பதால் குப்பை வண்டிக்கணக்காக சேர்த்துக் கிடந்தது. அவ்வளவையும் அள்ளிக் கொட்டிவிட்டு அடுப்படிக்கு வந்தவள் அங்கே போட்டது போட்டபடி கிடப்பதை பார்த்துவிட்டு வெகுண்டாள்.
“இதென்ன மருமக எடுத்த வீடு மாதிரியா இருக்கு! என்னவோ ஆம்பள பயலுக வந்து தங்கியிருக்குற லாட்ஜு மாதிரி, எல்லாம் போட்டது போட்ட எடத்துல கெடக்கு! வெளி வேலையை தான் பார்க்க முடியாது, படிச்சவ..! பணக்காரி..! வீட்டுக்குள்ள சாப்பிட்ட தட்டை கூடவா எடுத்து போட முடியாது. அடுப்படி லெட்சுமி புழங்குற எடம், சுத்தமா இருக்க வேண்டாம்! இதைத்தான் சொல்லிக் கொடுத்து வளர்த்திருப்பாங்க போலருக்கு! இவ கட்டிக்கிட்டு வந்த வீட்டுக்கு வேலை செஞ்சு கொடுக்க மூணாந்தெருவுலேருந்து நா வருவேன்னு காத்துகிட்டு இருந்திருப்பா போல” என்று சகட்டு மேனிக்கு கனிமொழியை திட்டிக் கொண்டே தடபுடவென்று பாத்திரங்களை அள்ளிக் கொண்டு போய் கொல்லைப்புறத்தில் போட்டுவிட்டு, சாணத்தை கரைத்து தரை அடுப்பெல்லாம் மெழுகி கோலம் போட்டாள்.
அவள் போட்ட சத்தத்தில் தான் கனிமொழி கண்விழித்தாள். முதலில் அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. எதற்காக காலையிலேயே இப்படி திட்டிக் கொண்டிருக்கிறாள் என்று புரியாமல் விழித்தாள். அலமேலுவும் தீன குரலில் மகளை அடக்கி பார்த்தார். அவள் அடங்குவதாக தெரியவில்லை. கனிமொழியின் வளர்ப்பை பற்றியெல்லாம் பேச துவங்கிவிட்டாள். அதற்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியாமல் கட்டிலிலிருந்து இறங்கி நேராக சமையலறைக்கு சென்றவள், “என்ன பிரச்சனை உங்களுக்கு?” என்றாள் நேரடியாக.
“என்ன பிரச்சனையா! நீதானே இந்த வீட்டுக்கு மருமக? முடியாம கிடக்குற பொம்பளைக்கு ஒத்தாச பண்ணாம சட்டமா படுத்து தூங்கிப்புட்டு கேள்வி கேக்குற! கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி இந்த வீடு எப்படி கெடந்துச்சு? எல்லாத்தையும் சுத்தம் பண்ணி வச்சிருக்கேன். இதையெல்லாம் செய்யிறதுக்கு நாந்தான் வரணுமா? ஏன் இது உன் வீடு தானே! நீ செய்ய மாட்டியா?”
“என் வீட்ல வேலை செஞ்சுக்க எனக்கு தெரியும். உங்களை யாரும் இங்க கூப்பிடல. வந்தா, வந்த வேலையை மட்டும் பார்த்துகிட்டு போங்க. என்னை அதிகாரம் பண்ணற வேலையெல்லாம் வேண்டாம்” – நங்கூரமிட்டது போல் பேசி தாமரையின் வாயை அடைத்துவிட்டு விறுவிறுவென்று கொல்லைப்புறத்திற்கு போனாள்.
தாமரை திகைத்து நின்றுவிட்டாள். முக்கி முனகிக் கொண்டு படுக்கையிலிருந்து எழுந்து கொல்லைப்புறத்திற்கு வந்த அலமேலு, “பேசாத பேசாதேன்னு சொன்னேனே கேட்டியா? கொட்டின வார்த்தையை அல்ல முடியாது. அது உனக்கும் தெரியல அந்த பொண்ணுக்கும் தெரியல” என்று முணுமுணுத்தபடி சோர்வாக அமர்ந்தார்.
தாமரைக்கு அழுகையும் ஆத்திரமும் தொண்டையை அடைத்தது.
“அவ என்னை இந்த வீட்டுக்கு வர கூடாதுன்னு சொல்லிட்டா. அது உன் காதுல விழுந்ததா இல்லையா? என்னைய குறை சொல்ற! இனிமே இந்த வீட்டு பக்கம் நா தலை வச்சு படுத்தேன்னா ஏன்னு கேளு. உனக்கு முடியலைன்னா நீ என் வீட்டுக்கு வா. பெத்த கடமைக்கு கடைசி வரைக்கும் பார்த்துக்கிறேன். ஆனா மானங்கெட்டு போயி இனி இந்த வீட்டுப்பக்கம் மட்டும் வர மாட்டேன்” என்று கூறி பெருங்குரலில் அழுது கொண்டே அவள் வீட்டைவிட்டு கிளம்பும் போது மலையமான் உள்ளே நுழைந்தான்.
தமக்கையின் அழுகையும் குமுறலும், ஏதோ பிரச்சனை என்பதை உணர்த்த, “என்னக்கா? எதுக்கு அழுவுற?” என்றான்.
“உன் பொண்டாட்டி சொல்லிட்டா ப்பா. இனி இந்த வீட்டுக்கு நா வர கூடாதாம். அப்படியே வந்தாலும் வந்த வேலையை மட்டும் பார்த்துகிட்டு போகணுமாம்… போயிடுறேன்.. இனி இந்த பக்கம் திரும்பிக் கூட பார்க்க மாட்டேன். ” என்று கூறிவிட்டு விறுவிறுவென்று நடையை கட்டினாள்.
மலையமானின் முகம் இறுகியது. “எங்கம்மா அவ?” என்றான் அதட்டலாக தாயிடம். இவ்வளவு கோபத்துடன் அவளிடம் போனால் பிரச்சனை தீரா வினையாகிவிடும் என்று உணர்ந்து, “அட விடுப்பா… தாமரையை பத்தி தெரியாதா உனக்கு? ஒன்னும் இல்லாததை ஊதி பெருசாக்கிடுவா” என்று கூறி மகனின் கோபத்தை அவர் குறைக்க முயன்றுக் கொண்டிருக்கும் போதே கனிமொழி கொல்லைப்புறத்திலிருந்து வீட்டுக்குள் நுழைந்தாள். கடுமையான அவன் விழிகள் அவளையே தொடர்ந்துக் கொண்டிருக்க, அவளோ அவனை ஏறிட்டும் பார்க்காமல் தன்னுனடய ராஜாங்கமான கட்டிலை நோக்கி சென்றாள். கொதித்துப் போனான் மலையமான். அத்தனை நாட்களும் பொறுத்துக் கொண்ட அவளுடைய அலட்சியத்தை அன்று அவனால் பொறுக்க முடியவில்லை.
“என்ன சொன்ன அக்காவ?” என்றான் பெருங்குரலில்.
அப்போதும் அவன் பக்கம் திரும்பாமல், “சொல்லாம போயிருக்க மாட்டங்களே! இன்னொரு தரம் நா வேற சொல்லனுமா?” என்று கூறியபடி தன்னுடைய படுக்கையை தட்டி சுத்தம் செய்வதில் முனைப்பானாள்.
அவ்வளவுதான்.. அவனுடைய பொறுமை கானல் நீர் போல மாயமாய் மறைந்துவிட, இரண்டே எட்டில் அவளிடம் பாய்ந்து அவள் கையிலிருந்த போர்வையை பிடுங்கி தூர எறிந்தான். அப்போதுதான் கனிமொழி அவனை நிமிர்ந்து பார்த்தாள்.. இல்லையில்லை… முறைத்தாள்.
அந்த பார்வையும் அதில் இருந்த திமிரும் எரிகின்ற நெருப்பில் எண்ணையை ஊற்ற, அவன் வார்த்தைகளை தீப்பிழம்பாக கக்கினான்.
“அது என்னோட அக்கா. இந்த வீட்ல பொறந்த பொண்ணு. அதை இங்க வர கூடாதுன்னு சொல்ல நீ யாரு? உனக்கு என்ன அதிகாரம் இருக்கு?” – அழுத்தம் திருத்தமாக கேட்டான்.
கனிமொழியின் முகத்தில் சட்டென்று ஒரு அதிர்வு.. கண்களில் ஏதோ பளபளப்பு… கண்ணீரோ! அதைப் பற்றியெல்லாம் யோசிக்கும் மனநிலையில் அவன் இல்லை. ஆத்திரம் அவனை முழுமையாக ஆட்கொண்டிருந்தது.
“நீயே இந்த வீட்ல விருந்தாளி மாதிரி தான் இருக்கற. அப்படியே இருந்துடு.. நீ உண்டு உன் கட்டில் உண்டு மெத்தை உண்டு, கையில புத்தகம் உண்டுன்னு உன்பாட்டுக்கு இருந்துடு. அதுதான் உனக்கும் நல்லது. மத்தவங்களுக்கும் நல்லது” என்று வெடுவெடுத்துவிட்டு அங்கிருந்து வெளியேறினான். திகைத்துப் போய் நின்றுவிட்டாள் கனிமொழி. அவளால் நம்பவே முடியவில்லை. அவனா இப்படி அவளை எடுத்தெறிந்து பேசிவிட்டான்! விருந்தாளியாம்! அவளுக்கு அந்த வீட்டில் எந்த அதிகாரமும் இல்லையாம்! ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
சாட்டையை வீசுவது போல் வார்த்தைகளை வீசிவிட்டு போய்விட்டான். அவள் மனம் வெகுவாய் காயப்பட்டு போனது. ஆத்திரம் தொண்டையை கவ்விப்பிடித்துக்கொள்ள நெஞ்சுக்குள் உணர்வலைகள் பொங்கிப் பொங்கி அடங்கின. அதற்கு மேல் அங்கு நின்றுக் கொண்டிருக்க முடியாமல் விருட்டென்று திரும்பி கொல்லைப்புறத்திற்கு ஓடி குளியலறைக்குள் நுழைந்துக் கொண்டாள்.
அத்தனை நாட்களும் அவளை உள்ளங்கையில் வைத்து தாங்கியவன் திடீரென்று அன்று தூக்கியெறிந்துவிட்டதை அவளால் தாங்க முடியவில்லை. அவன் தன்னிடம் முகத்தை திருப்பிக் கொண்டு போய்விட்டது எதையோ பெரிதாக இழந்துவிட்டது போல் வலித்தது. அம்மா அப்பா சொந்த பந்தம்… யாருமே இல்லாமல் தனித்துவிடப்பட்டது போல் உணர்ந்தாள். அந்த அளவுக்கு அவன் அவளை பாதித்திருக்கிறான்! மரத்தில் படரும் கொடி போல அவளும் அவனைத்தான் பலமாக பற்றிக் கொண்டு வாழ்ந்திருக்கிறாள்! நினைக்க நினைக்க கண்களில் கண்ணீர் ஆறாக பெருகியது. கட்டுப்படுத்தவே முடியவில்லை. கிட்டத்தட்ட பத்து நிமிடம் கழித்து அவள் வெளியே வந்த போது முகம் வீங்கியிருத்தது, கண்கள் சிவந்திருந்தன.
“என்ன கண்ணு நீ! அவன் ஏதோ கோவத்துல பேசிட்டு போயிட்டான். அதை போயி பெருசா எடுத்துக்கறியே! மூஞ்சியெல்லாம் பாரு.. எப்படி வீங்கி போயிட்டு!” – கிணற்றங்கரையிலேயே மருமகளுக்காக காத்துக் கொண்டிருந்த அலமேலு அவள் வெளியே வந்ததும் சமாதானம் செய்ய முற்பட்டார். அது இன்னும் அவள் துன்பத்தை அதிகப்படுத்திவிட, உதடு துடிக்க மீண்டும் கண் கலங்கினாள்.
அவள் அப்படி கண்கலங்கி நிற்பதை பார்க்க பாவமாக இருந்தது அலமேலுவிற்கு. “விடு கண்ணு, இதுக்கெல்லாம் போயி அழுதுகிட்டு!அவன் வீட்டுக்கு வரட்டும் நா கேக்குறேன். நீ வா, காபி போட்டு தரேன், குடி” என்று அவளை தேற்றி வீட்டுக்குள் அழைத்துச் சென்றார்.
உடல்நிலை சரியில்லாத பெண்மணி தனக்காக எதையும் செய்து சிரமப்பட வேண்டாம் என்று எண்ணி, “லேட் ஆயிடிச்சு. நா கேட்டீன்ல பார்த்துக்கறேன். நீங்க ரெஸ்ட் எடுங்க” என்று கூறிவிட்டு கல்லூரிக்கு புறப்பட ஆயத்தமானாள்.
மனைவியிடம் கடுமையாக பேசிவிட்டு நேராக தமக்கை வீட்டுக்கு தான் வந்தான் மலையமான்.
“என்னக்கா நீ! அவ தான் ஏதோ லூசு மாதிரி பேசிட்டானா, நீபாட்டுக்கு கெளம்பி வந்துடுவியா? நின்னு சண்டை போட வேணாம்?”
“மூஞ்சில அடிச்ச மாதிரி உன்ன யாரு இங்க கூப்பிட்டான்னு கேக்குறா! நா என்ன சண்டை போட முடியும்?” – இங்கே தாமரையும் கண்ணீர் மடையை திறந்துவிட, உடன் பிறந்தவன் அவளை சமாதானம் செய்தான்.
“அவ பேச்சையெல்லாம் பெருசா எடுத்துக்காத க்கா. உனக்கு இல்லாத உரிமை வேற யாருக்கு இருக்கு அங்க? கிளம்பு முதல்ல..”
மலையமான் அப்படி தன்னை தூக்கி வைத்து பேசியது தாமரைக்கு துணிச்சலை கொடுத்ததோ என்னவோ, “நா வரலப்பா.. அவ அவ்வளவு தூரம் பேசின பிறகு ரோசம் இருக்க யாரும் அந்த வீட்டு பக்கம் வர மாட்டாங்க. வேலையும் செஞ்சு கொடுத்துட்டு, பேச்சும் வாங்கிகிட்டு வரணும்னு எனக்கு என்ன தலையெழுத்தா? ஏண்டா தம்பி, அவளை எதுக்கு நீ வீட்ல வச்சிருக்க! அவளால என்ன புண்ணியம் உனக்கு? மகராசி வீட்ல இருக்க எல்லாரையும் அதிகாரம் பண்ணிக்கிட்டு உட்கார்ந்தே பொழுதை கழிக்கிறா! பேசாம விட்டு வெரட்டிட்டு வேற பொண்ண பார்த்து கல்யாணம் பண்ணு. இது ஒன்னும் தேறுற கேஸ் இல்ல” என்றாள்.
சட்டென்று அவன் முகம் மாறிவிட்டது. இறுகிய முகத்துடன் சற்று நேரம் அமைதியாக இருந்தவன், “மாமாவால இந்த வீட்டுக்கு என்னக்கா புண்ணியம்? கட்டின கடமைக்காக நீ பொறுத்து போகல? நா மட்டும் எப்படிக்கா அவளை கைகழுவ முடியும்? இனி இப்படி பேசாத” என்றான் கண்டிப்புடன்.
தாமரையின் முகம் சுருங்கிவிட்டது. “காசு பணம் சம்பாரிக்கலைன்னாலும் என் புருஷன் என்னை வச்சு வாழறாரு. எனக்கு அவரு, அவருக்கு நான்னு எங்க காலம் ஓடுது. உன் கதை அப்படியா சொல்லு?” கண்கள் இடுங்க தம்பியை முறைத்தாள்.
மலையமான் திடுக்கிட்டு நிமிர்ந்தான். சகோதரியிடமிருந்து அப்படி ஒரு வார்த்தையை அவன் எதிர்பார்க்கவில்லை. அவமானத்தில் அவன் முகம் கன்றிவிட்டது.
“அவ பணக்காரியா இருந்தா அவளோட… அவளோட பணமும் படிப்பும் நமக்கு எதுக்கு உதவுது? கட்டின புருஷனையே ஒதுக்கி வைக்கிறவ இனி எதுக்கு நம்ம வீட்டுக்கு? இங்க பாரு மலையா, நா சொல்றத கேளு. காலம் பூரா அவளை தலையில தூக்கி சுமக்கனும்னு உனக்கு என்ன தலையெழுத்து? அவ அப்பாவுக்கு போனை போட்டு வர சொல்லி இங்க நடக்கறதையெல்லாம் சொல்லி இதுக்கு ஒரு முடிவெடு. இல்லைன்னா வெட்டிவிட்டுட்டு வேலையை பாரு. உனக்கென்ன பொண்ணா கிடைக்காது. எல்லாம் இந்த மனுஷனை சொல்லணும். எங்கேயோ போற மாரியாத்தா என் மச்சினன் தலையில வந்து ஏறாத்தான்னு உன்ன கொண்டு போயி மாட்டி வச்சுட்டாரு” என்று அவனுக்கு ஆலோசனை கூறுவதில் துவங்கி புலம்பலில் வந்து நின்றாள்.
மலையமான் எதுவும் பேசாமல் எழுந்து கொண்டான். “எனக்கு டவுன்ல வேலை இருக்கு. வீட்ல அம்மா தனியா இருக்கும். நீ கிளம்பி போ” என்று கனத்த குரலில் கூறிவிட்டு கிளம்பினான்.
அன்று நாள் முழுவதும் அவன் வீட்டுக்கே வரவில்லை. இடையில் ஒரு முறை தாய்க்கு அலைபேசியில் அழைத்து தமக்கை வீட்டுக்கு வந்துவிட்டாளா என்பதை மட்டும் கேட்டு அறிந்து கொண்டதோடு சரி.
தாயையும் சகோதரியையும் அவனால் எதிர்கொள்ள முடியவில்லை. தன்னுடைய வாழ்க்கை அவர்களுக்கு முன் ஒரு கேள்வி குறியாகவும், விவாத பொருளாகவும் மாறிவிட்டதே என்கிற எண்ணம் அவனை சங்கடப்படுத்தியது. அந்த கோபத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு அவன் கனிமொழியை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை.
Comments are closed here.