கனியமுதே! – 22
991
0
அத்தியாயம் – 22
தென்னந்தோப்பை சுற்றி கட்டியிருந்த கம்பி வேலி, மண் உள்வாங்கியதால் ஒருபக்கம் இழுத்துக் கொண்டு சாய்ந்துவிட, அதை நிமிர்த்தி, கல் தூணை சரியாக ஊன்றி.. வேலியை இழுத்து கட்டி கொண்டிருந்தான் மலையமான். அவன் மனம் முதல் நாள் நடந்த சம்பவங்களை அசைப்போட்டு மனைவியிடமே சுற்றிக் கொண்டிருந்தது.
அவனோடு பண்ணைக்கு வந்தது… தோளோடு தோள் உரச தென்னந்தோப்பை சுற்றி வந்தது… மாடுகள் சண்டையிட்டுக் கொண்டபோது அவன் அவளுடைய கையை உதறிவிட்டு சென்றதற்காக கோபித்துக் கொண்டது… பிறகு சமாதானமாகி அவனோடு சேர்ந்து உணவருந்தியது, அனைத்துமே அவள் தன்னிடம் காட்டும் நெருக்கமாகத்தான் அவனுக்குத் தோன்றியது.
அதுமட்டும் அல்ல, அன்று இரவு உறங்காமல் அவனுக்காக காத்துக் கொண்டிருந்தாளே! ஏன் காத்துக்கொண்டிருந்தாள்! அதன் பிறகு நடந்தது என்ன! விறகடுப்பை பற்ற வைக்கிறேன் என்று ரகளை செய்து அவனை குலைநடுங்க வைத்தவள் அடுத்து செய்தது என்ன!
அணைப்பு! அவன் நெஞ்சில் முகம் புதைத்த நெருக்கமான அணைப்பு! அவளே முன்னெடுத்த அணைப்பு! – இதை எப்படி அவனால் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியும்! அவன் பிறந்து வளர்ந்த சூழல் நவநாகரீகங்களுக்கு பழக்கப்பட்டது அல்ல. இயல்பான தொடுதல் அணைப்பு எல்லாம் அவன் வாழும் சூழலில் நடைமுறையில் இல்லாதது. அவனைப் பொறுத்தவரை கணவன் என்கிற நெருக்கம் மனதில் எழாமல் அவளால் அப்படி நடந்துக் கொண்டிருக்க முடியாது. அதனால் தானே அவன் மனம் சஞ்சலப்பட்டது! அதனால் தானே அவளிடம் நெருங்கினான்! பிறகு ஏன் அப்படி ஓடினாள்! ஏதோ விருப்பம் இல்லாதவளை அவன் கட்டாயப்படுத்தியது போல! இது முதல் முறையல்ல… இதற்கு முன்னும் பல சந்தர்ப்பங்களில் இதே போல் நடந்து கொண்டிருக்கிறாள். இன்னும் எத்தனை முறை! – அவன் மனம் முரண்டியது.
‘உண்டு என்றால் உண்டு… இல்லை என்றால் இல்லை’ என்று எதுவாக இருந்தாலும் பட்டவர்த்தனமாக தெரிந்துக் கொண்டே ஆக வேண்டும் என்று தோன்றியது. இப்படி குழம்பிக் குழம்பி சஞ்சலப்பட்டு நிலைகொள்ளாமல் தத்தளிப்பதை அவன் விரும்பவில்லை.
எதிர்பாராத திருமணம் தான்… பொருந்தாத திருமணம் தான்… எப்படியோ நடந்துவிட்டது. இனி பின்வாங்க முடியாதே! திகட்ட திகட்ட காதலித்து, உருகிக் கரைந்து வாழவில்லை என்றாலும் மனக்கசப்பில்லாத ஒரு வாழ்க்கையை இருவரும் வாழ்ந்துதானே ஆக வேண்டும்!
அதை சாத்தியப்படுத்த பணம்தான் பிரதானம் என்றால் அதை அவன் சம்பாதித்துவிடுவான். அதற்காகத்தானே ஓடிக் கொண்டிருக்கிறான்… நில்லாத ஓட்டம்…! இடைவிடாத ஓட்டம்! – வேலியை கட்டி முடித்துவிட்டு பெருமூச்சுடன் நிமிர்ந்தான்.
“அண்ணே! மாட்டையெல்லாம் ஷெட்டுல அவுத்துக் கட்டி குளிப்பாட்டுங்க. எனக்கு வெளியே கொஞ்சம் வேலை இருக்கு. வர லேட் ஆகும்” என்று பண்ணையில் வேலை செய்பவரிடம் கூறிவிட்டு கைகால் கழுவியவன், சட்டையை மாட்டிக் கொண்டு பைக்கை கிளப்பினான்.
வீட்டில் கனிமொழி கல்லூரிக்கு தயாராகிக் கொண்டிருந்தாள். இவனை பார்த்ததுமே முகத்தில் அப்படி ஒரு மலர்ச்சி…
இதை எந்த கணக்கில் எடுத்துக்கொள்வது என்றிருந்தது அவனுக்கு. அவள் முகத்தை பார்த்தும் பார்க்காமல் கொல்லைப்புறத்திற்கு சென்று, சட்டையை கழட்டிவிட்டு கிணற்றில் நீர் இறைத்தான்.
அவளை பஸ் ஸ்டாப்பில் கொண்டு போய் விடுவதற்கு குளித்துவிட்டு எல்லாம் தயாராக மாட்டான். பண்ணையிலிருந்து வந்தபடியே நேராக மனைவியை ஏற்றி கொண்டு பேருந்து நிறுத்தத்திற்கு செல்வான். அதற்குத்தான் நேரம் சரியாக இருக்கும். இன்றைக்கு என்ன கிணற்றங்கரைக்கு போகிறான்!
“குளிக்க போறிங்களா! பஸ் வந்துடுமே!” – உள்ளே இருந்து குரல் கொடுத்தாள் கனிமொழி.
“வரட்டும் வரட்டும்…” என்றபடியே தலையில் தண்ணீரை ஊற்றிக் கொண்டு சோப்பு போட்டு நன்றாக குளித்துவிட்டு வந்து உடை மாற்றினான்.
அவசரமாக தன்னுடைய பொருட்களை கைப்பையில் சேகரித்தபடியே, “பஸ் போயிட போகுது…” என்று அவள் புலம்பிக் கொண்டிருக்க, “எனக்கு இன்னைக்கு டவுன்ல ஒரு வேலை இருக்கு. உன்ன அப்படியே காலேஜில்ல கொண்ட விட்டுடறேன்” என்றான் அவன்.
உண்மையில் அவனுக்கு டவுனில் வேலையெல்லாம் இல்லை. அவளோடு பேச வேண்டியிருந்தது. வண்டியில் போகும் போதே பேசிக்கொள்ளலாம் என்று தான் கிளம்பினான். டவுனுக்கு… அதுவும் அவள் வேலை செய்யும் இடத்திற்கு செல்லும் போது பண்ணையிலிருந்து வந்தபடியே செல்ல முடியாது என்று தான் குளித்துவிட்டு, பெட்டிப் போட்டு வைத்திருந்த வெள்ளை வேட்டி சட்டையை உடுத்திக்கொண்டு தயாரானான்.
எப்போதும் தன்னுடைய தோற்றத்தில் அக்கறை கொள்ளாமல் லுங்கியும் டி-ஷர்ட்டுமாக பண்ணைக்கும் வீட்டுக்கும் சுற்றிக் கொண்டிருப்பவன், இன்று மிடுக்காக தயாராகி நின்ற போது அவனுடைய உயரத்திற்கும் கட்டுக்கோப்பான உடல் வாகுக்கும், ‘நல்லா தான் இருக்கான்!’ என்று கனிமொழியே எண்ணினாள்.
வீட்டிலிருந்து புறப்பட்டு ஒரு ஐந்து நிமிடத்திற்கு இருவருமே எதுவும் பேசவில்லை… கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வயற்காடுதான்… நடுவில் அவனுடைய வண்டி மட்டும் தான் சென்றுக் கொண்டிருந்தது.
“பத்து மாசம் ஆச்சு” என்று பேச்சை ஆரம்பித்தான் மலையமான்.
“என்ன பத்து மாசம்?” – புரியாமல் கேட்டாள் கனிமொழி.
“நமக்கு கல்யாணம் ஆகி”
அவளிடமிருந்து எந்த பதிலும் இல்லை. “என்ன பேச்சை காணும்?” – மீண்டும் அவனே பேச்சை வளர்த்தான். அப்போதும் அவளிடம் பதில் இல்லை. உடனே வண்டியை ஓரம்கட்டிவிட்டான்.
“என்ன பண்றிங்க? காலேஜுக்கு நேரம் ஆச்சு?” பதறியபடி வண்டியிலிருந்து இறங்கினாள் கனிமொழி.
“இப்போ மட்டும் பேச்சு வருதா?” – நக்கலாகக் கேட்டான்.
“ப்ச்… இப்போ நா என்ன சொல்லணும்?”
“நீ என்ன நினைக்கிறேன்னு சொல்லு. எனக்கு புரியல… ஒரு நேரம் இப்படி இருக்க… ஒரு நேரம் அப்படி இருக்க. நா என்னன்னு எடுத்துக்கறது?”
“எப்போ எப்படி இருக்கேன்?” என்று அவள் புரியாதவள் போல் கேட்க, அவன் சற்று நேரம் அவள் முகத்தையே வெறித்துப் பார்த்தான். பிறகு, “நேத்து நைட் எதுக்கு அப்படி ஓடின? அப்படி என்ன நா உன்ன பண்ணிடுவேன்? உன்னோட விருப்பம் இல்லாம?” என்றான் வருத்தமா… கோபமா என்று சொல்ல முடியாத குரலில்.
கனிமொழிக்கு பதில் சொல்ல முடியவில்லை. அவன் முகம் பார்ப்பதை தவிர்த்து வேறெங்கோ பார்த்தபடி நகத்தை கடித்தாள். விரல்களில் மெல்லிய நடுக்கம் தெரிந்தது.
“எதுக்கு இப்படி உதறுது கையெல்லாம்?”
“எனக்கே புரியல” – மெல்ல முணுமுணுத்தாள்.
மலையமான் வண்டியை விட்டு இறங்கி அவளிடம் நெருங்கினான். அவள் அசையாமல் நின்றாள். அவள் கையை பிடித்து நடுங்கும் அவள் விரல்களை நீவினான். மெல்ல அவனிடமிருந்து கையை உருவிக் கொண்டாள் அவள்.
அவனுக்குள் ஓர் இறுக்கம் வந்தது… “சகிச்சுக்கவே முடியாத அளவுக்கு இருக்கேனா?” என்றான் வறண்ட குரலில்.
அப்போதும் அவள் பார்வை அவனை சந்திக்கவில்லை. எங்கோ வெறித்திருந்த பார்வை தாழ்ந்து தரையில் பதிந்தது… பதட்டம் அதிகமானதன் அறிகுறியாக கீழுதட்டை மடித்துக் கடித்தாள்.
“கனிமொழி… நான் என்ன செய்யணும்? என்கிட்டேருந்து உனக்கு என்ன வேணும்” – தளர்ந்து போய் கேட்டான்.
“டைம்…” – பார்வையை உயர்த்தி அவன் கண்களை நேருக்கு நேர் சந்தித்து கூறினாள் கனிமொழி.
“டைமா!” என்று அவன் புரியாமல் பார்க்க, ‘ஆம்’ என்பது போல் தலையசைத்து, “என்னோட கனவையெல்லாம் மூட்டை கட்டி தூக்கிப் போடணும்… புது கனவை உருவாக்கணும்… ரியாலிட்டியை ஏத்துக்கணும்… அதுக்கு டைம் வேணும்” என்றாள்.
அவள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் ஆணி அடித்தது போல் அவனுக்குள் இறங்கியது. சரி செய்யவே முடியாத அளவுக்கு அவள் வாழ்க்கையை பாழாக்கி விட்டோமோ என்று கலங்கிப் போனான்.
அவளுடைய கனவுகளை பற்றி கேட்கும் திராணியே இல்லை அவனிடம். அதெல்லாம் தன் கற்பனைக்கும் எட்டாத விஷயங்களாகத்தான் இருக்கும் என்கிற எண்ணம்.
வேரூன்றிய மரம் போல் அவன் இறுகிப் போய் நிர்ப்பதைக் கண்டு, “டைம் ஆயிடிச்சு” என்றாள் கனிமொழி. பதில் சொல்லாமல் வண்டியை ஸ்டார்ட் செய்தான் அவன்.
அந்த சம்பவத்திற்கு பிறகு அவனை வீட்டில் பார்க்கவே முடியவில்லை. இதோ… பத்து நாட்கள் ஆகிவிட்டது. அவளோடு பைக்கில் செல்லும் சற்று நேர பயணத்திற்காக பழுதுபட்டுக் கிடந்த அவளுடைய வண்டியை அன்று வரை கண்டுகொள்ளாமல் இருந்தவன், அன்று மாலையே மெக்கானிக் ஷெட்டில் உள்ளவர்களை துரிதப்படுத்தி, பைக்கை பழுது பார்த்து வீட்டில் கொண்டு வந்து வைத்துவிட்டான். அதன் மூலம் அவளை பேருந்து நிறுத்தத்திற்கு அழைத்துச் செல்லும் வேலையையும் தவிர்த்துக் கொண்டான்.
கனிமொழிக்கு நம்பவே முடியவில்லை! அவனுடைய தவிர்ப்பை அல்ல.. அவன் தன்னை தவிர்த்தால் தன்னுடைய நிம்மதி குலையும் என்பதை! ஆம்… அவனை பார்க்காத முதல் இரண்டு நாட்கள் பெரிதாக எதுவும் தெரியவில்லை. ஆனால் அடுத்தடுத்த நாட்களில் அவளுக்குள் ஒருவித தேடல்! தவிப்பு! ஏமாற்றம்!
‘என்ன கருமம் இதெல்லாம்’ என்று கோபம் வந்தது.. சுற்றி இருப்பவர்களிடம் எல்லாம் எரிச்சலை கொட்டினாள். பொருட்களை போட்டு உடைத்தாள். பைத்தியமாகி விட்டோம் என்று எண்ணி தலையில் அடித்துக் கொண்டாள். ஆனால் நெஞ்சு கூட்டுக்குள் ஒளிந்திருந்த இதயம் தனக்குள் ஒரு பெரிய ரகசியத்தை மறைத்து வைத்திருந்தது. அதன் பாரம் அவள் உறுதியை அசைத்துப் பார்த்தது. வார இறுதிக்காக காத்திருந்தாள். சாப்பாட்டுக்கு வீட்டுக்கு வந்துதானே ஆக வேண்டும் என்று எண்ணினாள். ஆனால் அவன் வரவில்லை. ஆள் தான் வந்தது.. அடுக்கு டப்பாவில் நிரப்பியிருந்த சாப்பாட்டை எடுத்துச் செல்ல. காற்று போன பலூன் போல் புஸ்ஸென்று ஆகிவிட்டது அவளுக்கு.
‘போடா டேய்… நீ வீட்டுக்கு வந்தா என்ன.. வரலைன்னா எனக்கு என்ன! உன்ன பார்க்க இங்க யாரும் ஏங்கல’ என்று வீம்புடன் நினைத்துக் கொண்டாள். ஆனாலும் மனம் ஏக்கத்துடன் தென்னந்தோப்பையே சுற்றிக் கொண்டிருந்தது.
மகன் வீட்டுக்கு வராமல் இருந்தது அலமேலுவுக்கு பெரிய துன்பம். ஒரு பெண்ணை திருமணம் செய்து வீட்டில் கொண்டுவந்து வைத்துவிட்டு அவன் வீட்டுப் பக்கமே வராமல் இருந்தால் என்னவென்று எடுத்துக்கொள்வது! அவர்களுக்குள் சண்டை ஏதும் வந்ததாகவும் தெரியவில்லை. என்ன பிரச்னை என்று தெரியாமல் தவித்துப் போனார். மகனிடம் பல முறை கேட்டு பார்த்துவிட்டார். அவனோ “வேலை” என்று ஒரே வார்த்தையில் சொல்லி முடித்துவிட்டான். நம்பும்படியாகவா இருக்கிறது!
தாமரைக்கு கனிமொழியின் மீதுதான் சந்தேகம். இவள் தான் ஏதாவது சொல்லி அவனை விரட்டியிருப்பாள் என்று எண்ணிக் கொண்டாள். அவள் மீது கோபம் கொள்ள இன்னொரு கூடுதல் காரணம் கிடைத்துவிட்டதால் அவர்களுக்குள் முட்டளும் மோதலும் அதிகமானது.
உனக்கென்ன அவ்வளவு திமிர் என்பது தாமரையின் எண்ணம்… நீயெல்லாம் எனக்கு ஒரு ஆளா என்பது கனிமொழியின் எண்ணம்… இருவருக்கும் நடக்கும் போட்டா போட்டியில் அலமேலு தான் மாட்டிக் கொண்டார். சமாளிக்க முடியாமல் மகனை தேடி சென்றார்.
“என்னப்பா வீட்டுக்கே வராம இருக்க? பார்க்கறவங்க என்ன பேசுவாங்க” என்றார் வருத்தத்துடன்.
“வேலை இருக்கும்மா. என்ன பண்ண சொல்ற?” என்றான் மகன் எரிச்சலுடன்.
“வீட்டுக்கே வராம வேலை செஞ்சு அப்படி யாருக்குடா சொத்து சேர்க்கற?” – தாயும் கோபத்துடன் குரலை உயர்த்தினார்.
“ஆமாம், அப்படியே நா சொத்து சேர்த்து ஊரையே வாங்கிட்டேன். ஏம்மா நீ வேற..” என்று அலுத்து கொண்டவன், “குடியிருக்க ஒரு வீடு கட்ட முடியாம சுத்திகிட்டு இருக்கேன். நா வீட்டுக்கு வந்தா என்ன வரலைன்னா என்ன?” என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டான்.
மகனின் புலம்பல் தாயின் செவியை எட்டவில்லை என்றாலும், மகனுக்கும் மருமகளுக்கும் ஏதோ பிணக்கு உள்ளது என்பதையும் அதனால்தான் அவன் வீட்டுக்கு வரவில்லை என்பதையும் அவனுடைய நடவடிக்கையிலிருந்து புரிந்து கொண்டவர், “இன்னைக்கு ராத்திரி தாமரை அவ வீட்டுக்கு போகணுமாம். நானும் கூட போறேன். நீ வீட்டுக்கு வந்துடு. அந்த புள்ள தனியா இருக்கும்” என்றார்.
“என்னது!” என்று நிமிர்ந்தவன், “நீ எதுக்கு அங்க போற? பேசாம வீட்ல படு” என்றான்.
“அதெல்லாம் சரியா வராது. எனக்கு அங்க போனாதான் நல்லா தூக்கம் வருது. நா போறேன்” என்று கிளம்பிவிட்டார்.
“ம்மா… எனக்கு வேலை இருக்கு… என்னால வர முடியாது” என்று அவன் கத்தியதை அவர் கண்டுகொள்ளவே இல்லை.
Comments are closed here.