கனியமுதே! – 23
1105
0
அத்தியாயம் – 23
இரவு நெருங்க நெருங்க அவனுக்கு வீட்டு நினைவாகவே இருந்தது. ‘அம்மா உண்மையாவே போயிடுமோ!’ என்று யோசித்துக் கொண்டே இருந்தான். ஏழு எட்டு மணிக்கு மேல் வேலையில் கவனம் சிதறியது. இரவு உணவும் வரவில்லை… ‘போய்ட்டாங்களோ! சாப்பாட்டுக்கு முன்னாடியேவா போய்ட்டாங்க! இருட்டுக்கு பயப்படுவாளே!’ என்று சிந்தனை முழுக்க முழுக்க அவளையே சுற்றி கொண்டிருந்தது. அடிக்கடி போனை எடுத்துக் பார்த்தான். அழைப்பாளா… அழைப்பாளா… என்று மனம் ஏங்கியது. இல்லை… அவள் அழைக்கவில்லை… ஒன்பது மணிக்கு மேல் நிலைகொள்ள முடியாமல் சாப்பாடு வாங்குவதற்காக அனுப்புவது வீட்டுக்கு ஆள் அனுப்பினான்.
சென்றவன், பத்து நிமிடத்தில் ஒரு பெரிய அடுக்கு டப்பாவை தூக்கிக் கொண்டு திரும்பி வந்தான். அதை பார்த்ததும் வீட்டில் ஆள் இருப்பதை புரிந்துக் கொண்டவன் நிம்மதியானான். கனிமொழி தனியாக இல்லை என்கிற நிம்மதி… மறு நொடியே மனதில் ஒரு சோர்வு… இனி வீட்டுக்கு செல்ல முடியாது… அவளை பார்க்கவும் முடியாது! அவ்வளவு நேரமும் அவளை பார்க்கப் போகும் உற்சாகம் தன்னையறியாமல் அவனுக்குள் இருந்திருக்கிறது என்பதை அப்போதுதான் உணர்ந்தான்.
“சாப்பாடு கொண்டு வந்துட்டேன் தம்பி… வா… வந்து சாப்பிடு” – கேரியரோடு வந்தவர் கொட்டகையில் சென்று நின்றுக் கொண்டு அவனை அழைத்தார்.
“அப்படியே வை ண்ணே.. நா வந்து சாப்பிட்டுக்கறேன்” – ஷெட்டுக்குள் இருந்தபடி கூறினான். அவனுக்கு சாப்பிடும் மனநிலையெல்லாம் இல்லை. பசித்தா வீட்டுக்கு ஆள் அனுப்பினான். அவள் தனியாக இருக்கிறாளா என்பதை தெரிந்துகொள்ளத்தானே அனுப்பினான். தெரிந்து கொண்டாயிற்று… இனி என்ன! – காரணம் தெரியாத கோபம் உள்ளுக்குள் ஊற்றெடுக்க, மாடுகள் நீர் அருந்தும் தொட்டியில் விறுவிறுவென்று தண்ணீரை நிரப்பினான்.
ஆட்கள் பால் பாத்திரங்களையெல்லாம் கழுவி வைத்துவிட்டு வீட்டுக்கு கிளம்பினார்கள். இரவு காவலுக்கு இருக்கும் வேலையாள் மட்டும் தான் இருந்தார்.
“என்ன தம்பி… இன்னும் சாப்பிடலையா?” என்றபடி தன்னுடைய கயிற்று கட்டிலில் அமர்ந்து வெற்றிலைப் பாக்கு பொட்டலத்தை எடுத்தார்.
வேலை மெனக்கெட்டு வீட்டுக்கு போய் சாப்பாட்டை வாங்கி கொண்டு வந்த மனிதர் இரண்டாம் முறையாக கேட்டுவிட்டார். அதற்கு மேலும் உணவை அலட்சியப்படுத்தக் கூடாது என்பதால் கொட்டகைக்குள் வந்து அடுக்கு டப்பாவை பிரித்தான். உள்ளே ஜாம் தடவிய பிரெட் இருந்தது. துள்ளிக் கொண்டு எழுந்தான் மலையமான்.
“அண்ணே! வீட்ல யார் இருந்தது?”
“ஏன் தம்பி… தங்கச்சிதான் இருந்தது”
“தங்கச்சியா! யாரு.. கனியா?”
“ஆமா தம்பி”
“என்ன ண்ணே சொல்ற? அம்மா இல்ல?”
“அவங்களையெல்லாம் காணுமே தம்பி… இந்த பாப்பா மட்டும் தான் இருந்துச்சு”
வாயில் கெட்ட கெட்ட வார்த்தையாக வந்தது அவனுக்கு… “முதல்லயே எதுக்கு ண்ணே சொல்லல” என்று அதட்டிக் கொண்டே வண்டியை உதைத்து உறுமவிட்டவன், அவர் என்ன பதில் சொன்னார் என்பதை கேட்பதற்கு அங்கு நிற்கவில்லை.
புயல் போல பறந்து இரண்டே நிமிடத்தில் வீட்டு வாசலில் வந்து நின்றான். நேரம் பதினோரு மணியாகிவிட்டது. வீட்டுக்கு உள்ளே வெளியே என்று எல்லா பக்கமும் மின்விளக்குகள் எரிந்துக் கொண்டிருந்தன. வண்டியை நிறுத்திவிட்டு இறங்கி வந்து கதவில் கைவைத்து தள்ளினான். உள்ளே தாழிட்டு மூடியிருந்தாள் அவள். உறங்கிவிட்டாளா அல்லது பயந்துகொண்டே அமர்ந்திருக்கிறாளா என்று தெரியாமல் சற்று நேரம் வாசற்படியிலேயே நின்றவன், “கனி” என்று அழைத்துவிட்டு மெல்ல கதவை தட்டினான்.
“யாரு?” பதட்டத்துடன் ஒலித்தது அவள் குரல்.
“நாந்தான்…” – சங்கடத்துடன் சொன்னான் மலையமான்.
அதன் பிறகு சற்று நேரம் அவளிடமிருந்து எந்த பதிலும் இல்லை. ஓரிரு நிமிடங்களுக்குப் பிறகு கொலுசொலி கேட்டது. எழுந்து வருகிறாள் என்று ஊகித்துக் கொண்டான். ஊகம் சரிதான்… கனிமொழி கதவை திறந்தாள். முகத்தில் கடுமையான கோபம்… அவளை பார்க்கவே சங்கடமாக இருத்தது அவனுக்கு.
“தூங்கலையா” என்றான் வீட்டுக்குள் வந்து. அவள் முகம் மேலும் இறுகியது.
“இப்போ தான் சாப்பாட்டை திறந்தேன். நீ தனியா இருக்கேன்னு தெரியாது” – விளக்கம் கொடுத்தான்.
அவள் பதில் சொல்லாமல் முகத்தை திருப்பிக் கொண்டு கட்டிலில் போய் அமர்ந்துக் கொண்டாள். முகத்தில் பயத்தின் சாயல் இன்னமும் இருந்தது.
“நிஜமாவே நீ தனியா இருப்பேன்னு நினைக்கல” – வருத்தத்துடன் கூறினான்.
“உங்க அம்மா உங்ககிட்ட சொல்லிட்டு தானே போனாங்க! எனக்கு தெரியும்” – அவன் முகத்தை பார்க்காமல் பேசினாள். குரலில் கோபம் கொப்பளித்தது.
“அம்மா உன்ன தனியா விட்டுட்டு போகாதுன்னு நெனச்சேன். ரொம்ப பயந்துட்டியா?”
“வீட்டை சுத்தி தென்னை மரம்… எல்லா பக்கமும் கும் இருட்டு… எங்க பார்த்தாலும் ஆள் நிக்கிற மாதிரியே இருக்கு. பயப்பட மாட்டாங்களா?”
“ஒரு போன் பண்ணியிருந்திருக்கலாம்ல?”
வெடுக்கென்று நிமிர்ந்தவள், “எதுக்கு? எதுக்கு பண்ணனும்…? வீட்டுக்கே வராதவங்ககிட்ட போன் பண்ணி, எனக்கு பயமா இருக்கு… என்கூட வந்து இருங்கன்னு கெஞ்சணுமா?” – படபடவென்று வெடித்தாள். பார்வை அவனை பஸ்பமாக்க விழைந்தது.
அவளுடைய அந்த கோபமும் சுட்டெரிக்கும் பார்வையும் குளுகுளுவென்றிருந்தது அவனுக்கு.
“நானாவா போனேன்… நீதானே அன்னைக்கு அப்படியெல்லாம் சொன்ன?”
“எப்படியெல்லாம் சொன்னேன்?”
அந்த சம்பவத்தை நினைத்ததுமே அவனுடைய குளுகுளு மனநிலை மாறி மீண்டும் இறுக்கம் சூழ்ந்தது.
“டைம் வேணும்… கனவை தூக்கிப் போடணும்னு…”
“அதுக்கு இதுதான் அர்த்தமா?” – கனிமொழி அவனை முறைத்தாள்.
“வேற என்ன அர்த்தம்? எனக்கு தெரியல… நீதான் டீச்சரம்மாவாச்சே! சொல்லிக் கொடு”
“இண்ட்ரஸ்ட் இல்லாதவர்களுக்கு எதையும் சொல்லிக் கொடுக்க முடியாது” – போர்வையை தலைவரை இழுத்துப் போர்த்திக் கொண்டு படுத்துவிட்டாள்.
அவனுக்கு சத்தியமாக ஒன்றும் புரியவில்லை. ‘நமக்கு இண்ட்ரஸ்ட் இல்லையா! அதை இவ சொல்றா!’
“ஓய்! எந்திரி… என்ன சொன்ன இப்ப?” – கட்டிலுக்கு அருகில் வந்து நின்றுக் கொண்டு அழைத்தான். அவளிடம் அசைவில்லை. ‘இவளுக்கு இதே வேலையா போச்சு’ – கோபம் வந்தது. “கனி… எந்திரிக்கிறியா இல்லையா இப்போ?” – அவளை தொடாமல் கட்டிலை பிடித்து ஆட்டினான்.
அதற்கு மேல் பாசாங்கு செய்ய முடியாமல் முகத்திலிருந்து போர்வையை விலக்கிவிட்டு, “என்ன பிரச்னை உங்களுக்கு?” என்றாள்.
“நீதான்…”
“நான் என்ன பண்ணினேன்?”
“தெளிவா பேசு… அறையும் குறையுமா பேசி என்னை பைத்தியக்காரன் ஆக்காத” – அவள் தான் அவனிடம் ஸ்டேட்டஸ் பார்த்தாள். பணத்தில்.. படிப்பில்.. அழகில் எல்லாவற்றிலும்.. இப்போது அவன் மீது பழி போடுகிறாளே என்கிற ஆதங்கம் அவனுக்கு.
அவன் அப்படி சிடுசிடுவென்று பேசியதில் அவள் மனம் சுணங்கியது. அவள் மட்டும் அவனிடம் கோபப்படலாம்.. ஆனால் அவனுடைய கோபத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்த அளவுக்கு அவள் மனம் அவனிடம் சலுகை கொண்டாடியது. அதெல்லாம் எதையும் அவனிடம் காட்டிவிடக் கூடாது என்கிற பிடிவாதத்துடன், “சரி, இனிமே தெளிவா பேசுறேன். இப்போ தூக்கம் வருது… “தூங்கட்டுமா? என்றாள் முயன்று கொண்டு வந்த கடுமையுடன்.
அவன் பல்லை கடித்தான். “இதுதான் நீ தெளிவா பேசுற லட்சணமா?”
“வேற என்ன?”
“எனக்கு ஏதோ இண்ட்ரஸ்ட் இல்லைன்னு சொன்னியே… எதுலன்னு சொல்லு…”
அவன் இப்படி கேட்டால் அவளால் எப்படி பதில் சொல்ல முடியும்! சங்கடத்துடன், “எனக்கு தூக்கம் வருது” என்று மீண்டும் முகத்தை மூடிக்கொள்ள போனாள்.
சட்டென்று போர்வையை பிடித்து அவள் முயற்சியை தடுத்தவன், “சொல்லாம நீ இன்னைக்கு தூங்க முடியாது” என்றான்.
கனிமொழியின் முகத்தில் நாணத்தின் சாயல்… உதட்டில் மெல்லிய புன்னகை… “விடுங்க” என்று போர்வையை அவனிடமிருந்து விடுவிக்க முயன்றவளின் பார்வை அவனிடம் உறவாடியது.
அவனுக்கு நன்றாகத் தெரியும்… கனிமொழி அவன் பக்கம் சாய்ந்துவிட்டாள்… அவள் மனம் அவனை ஏற்றுக் கொண்டுவிட்டது… ஆனாலும் அவளுக்குள் ஏதோ ஒரு தடை இருக்கிறது. அவள் வாய் திறந்து பேசாமல் அந்த தடையை உடைக்க முடியாது என்பதால், “நீ சொல்லு… நா விடறேன்” என்றான் பிடிவாதமாக.
கனிமொழிக்கு வார்த்தை வரவில்லை… வெளிப்படையாக பேச கூச்சமாக இருந்தது. ஆனால் அவனோ பார்வையைக் கூட விலக்காமல் அவளையே பார்த்துக் கொண்டு நின்றான். பேச வைக்காமல் விடமாட்டான் என்பது புரிந்து போக, மெல்ல எழுந்து அமர்ந்தாள். கைவிரல்கள் பின்னி பிரிப்பதும் நெட்டி எடுப்பதுமாக நேரத்தை கடத்திவிட்டு, “உங்களுக்கு என்னை பிடிக்கல” என்றாள் அவளுக்கே கேட்காத குரலில்.
அவள் எப்போது இவ்வளவு பெரிய முட்டாளானால் என்று அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் மலையமான். காதல் என்னும் நோய் மூளையை மழுங்கடித்து மனிதர்களை முட்டாளாக்கிவிடும் என்பதை அவன் அறியவில்லை… ஆனால் காதலா! அதுவும் கனிமொழிக்கு மலையமான் மீது! எப்படி… எப்போது… எந்த சந்தர்ப்பத்தில்… என்றெல்லாம் யோசித்தால் அதற்கெல்லாம் பதிலே இல்லை… அது ஒரு உணர்வு… மெல்ல மெல்ல இயல்பாய் அவளுக்குள் தோன்றிய உணர்வு… அவளே இன்னும் முழுமையாக அறிந்திடாத உணர்வு…
மலையமான் பிரம்மிப்புடன் அவளையே பார்த்து கொண்டிருந்தான். அவள் குரலில் இருந்த ஏக்கத்தை இன்னமும் அவனால் நம்ப முடியவில்லை. அவன் தானே அவளை எட்டா கனியாக எண்ணிக் கொண்டிருந்தான்! இவள் எப்போதிருந்து இப்படியெல்லாம் யோசிக்க துவங்கினாள் என்று அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. வாய்விட்டு கேட்டேவிட்டான்.
“என்னை உனக்கு பிடிச்சிருக்கா?”
அதுவரை ஒருவித மயக்க மனநிலையில் இருந்தவளை தட்டி எழுப்பியது அந்த கேள்வி. அதுவரை அவனோடு உறவாடிக் கொண்டிருந்த மனதை அடக்கிவிட்டு மூளை சுறுசுறுப்பாகி, அவன் கேட்ட கேள்வியை தனக்குள் இன்னொரு முறை கேட்டுக் கொண்டது.
எவ்வளவு முயன்றும் ‘இல்லை’ என்கிற பதில் அவளுக்கு கிடைக்கவில்லை. அதே சமயம் ‘பிடித்திருக்கிறது’ என்றும் தடையின்றி சொல்ல முடியவில்லை. ஓரிரு நிமிட தயக்கத்திற்கு பிறகு மனதில் தோன்றியதை அப்படியே கூறினாள்.
“பிடிச்சிருக்கா பிடிக்கலையா தெரியல… ஆனா கூடவே இருக்கணும் போல இருக்கு”
அது போதாதா! அவன் முகத்தில் அப்படி ஒரு நிம்மதி… கண்களில் சின்னதாய் ஒரு கர்வம்… சாதித்துவிட்ட பெருமிதம்… அடர்ந்திருந்த மீசை நுனியை மேல்நோக்கி உயர்த்தி முறுக்கிவிட்டபடி அவளை பார்த்தான்.
அதுவரை அவனுக்கு இருந்த தயக்கம் போன இடம் தெரியாமல் போய்விட, கட்டிலில் அவளுக்கு எதிரில் அமர்ந்து கையை நீட்டி அவள் முகத்தை தொட்டான். அவளிடம் எந்த எதிர்ப்பும் இல்லை. இன்னும் சற்று நெருங்கி அமர்ந்து இரு கைகளிலும் முகத்தை ஏந்தினான். அவள் கீழே குனியவும் இல்லை… முகத்தை திருப்பிக் கொள்ளவும் இல்லை. மாறாக கண்களை மூடி அடுத்த நிகழ்விற்காக காத்திருந்தாள்.
மூடியிருந்த அவள் இமைகள் இரண்டிலும் முத்தம் பதித்துவிட்டு அவள் முகம் பார்த்தான். குங்குமம் கூட தோற்றது… அவ்வளவு சிவப்பு அந்த முகத்தில்… கூடவே சின்ன புன்முறுவல்… அது அவனை இன்னும் கொக்கிக் போட்டு இழுக்க, போட்டிருந்த நல்லவன் வேஷத்தை தூக்கி தூர போட்டுவிட்டு, பாவையவள் முகத்தை தன் பக்கம் இழுத்து இதழ்களை சிறை செய்தான். அதுவரை மூடியிருந்த அவள் விழிகள் அகல விரிந்தன. நொடிகள் நிமிடங்களாக மாறியும் நீண்டு கொண்டிருந்த அவர்களுடைய யுத்தத்தை, தடைபட்டுக் கிடந்த மூச்சு காற்று முடிவுக்கு கொண்டு வந்தது.
மூச்சிரைக்க கணவனின் பிடியிலிருந்து விடுபட்ட கனிமொழி அவனை ஆச்சர்யத்துடன் பார்த்தாள். வெட்கமும் பூரிப்பும் சம அளவு கலவையாக அவள் முகத்தில் படர்ந்திருக்க, இதழ்கள் மேலும் சிவந்திருந்தன.
அதை ஆசையோடு பார்த்தவன், “செக்க செவேல்னு… அழகா… தேன் மிட்டாய் மாதிரி இருந்தா… வேற என்ன பண்ண முடியும்?” என்று கொஞ்சினான்.
அவள் விழிகள் வியப்பில் மேலும் விரிய, ‘முரடா! என்று குரலில்லாமல் வாய்க்குள் முணுமுணுத்தாள்.
உதட்டசைவில் அவள் சொன்னதை புரிந்துக்கொண்டாலும், “ஓய்! என்ன சொன்ன! இப்போ என்ன சொன்ன நீ?” என்று அவளை பொய்யாய் அவன் மிரட்ட, அவள் சொல்ல முடியாது என்று பாசாங்கு செய்ய, “நீ சொல்லலைன்னா எனக்கு தெரியாதா! முரடன் என்ன செய்வான் தெரியுமா?” என்று அவளை இழுத்து தன்னோடு இறுக்கிக் கொண்டு, வன்மைக்கும் மென்மைக்கும் இடையே ஒரு தடம் போட்டு அதில் அவளோடு சேர்ந்து பயணிக்கத் துவங்கினான்.
Comments are closed here.