கனியமுதே! – 25
1018
0
அத்தியாயம் – 25
மீன் பண்ணையில் பிஸியாக வேலை செய்து கொண்டிருந்த போதுதான் அங்கப்பனுக்கு அந்த அழைப்பு வந்தது. மினிஸ்டரின் பிஏ தான் அழைத்திருந்தார். வியப்புடன் அழைப்பை ஏற்று என்னவென்று இவர் விபரம் கேட்க, “அய்யா உங்கள உடனே பார்க்கணும்னு சொல்றாங்க” என்றார் அவர்.
“ஐயாவா! என்னையா! என்ன விஷயம்னு தெரியுமா?” என்று மேலும் விபரம் கேட்டார் அங்கப்பன்.
“நீங்க வாங்க… ஐயாவே சொல்லுவாங்க… ஐயா வீட்லதான் இருக்காங்க. அரைமணி நேரத்துல வந்துடலாமா?”
“ம்ம்ம், வந்துடலாம். உடனே கிளம்பிடறேன்” என்று கூறி அழைப்பை துண்டித்துவிட்டு ட்ரைவரை அழைத்து வண்டியை எடுக்கச் சொன்னார். ‘மினிஸ்டர் தன்னை எதற்காக அழைத்திருக்கிறார்!’ என்கிற கியூரியாசிட்டி அவர் பயணத்தின் வேகத்தை இன்னும் அதிகப்படுத்த, சொன்ன நேரத்திற்கு முன்பாகவே அமைச்சருடைய வீட்டுக்கு வந்துவிட்டார்.
அலுவலக அறையில் அமைச்சர் அவருக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறார் என்று பிஏ சொல்ல இவர் உள்ளே சென்றார். அங்கே ஒரு மத்திய வயது பெண்மணியுடன் ஏதோ பேசிக் கொண்டிருந்த மினிஸ்டர், அங்கப்பனை பார்த்ததும் சீற்றத்துடன் கையிலிருந்த ஃபைலை டேபிளில் தூக்கிப் போட்டார்.
“உங்க மேல இருக்க மரியாதையில தான் கல்யாணத்துக்கு வந்தேன். ஆனா நீங்க என்னங்க பண்ணி வச்சிருக்கீங்க?” என்றார் கடும் கோபத்துடன்.
அங்கப்பனுக்கு எதுவும் புரியவில்லை. ‘வீட்டுக்கு அழைத்தவர் மரியாதைக்கு அமர கூட சொல்லாமல் இப்படி எடுத்தெறிந்து பேசுகிறார்! அதுவும் யாரோ ஒரு பெண்மணிக்கு எதிரில்!’ என்று ஆத்திரப்பட்டார்.
அவரும் சமூகத்தில் ஒரு பெரிய மனிதர். அவரிடம் இப்படியெல்லாம் யாரும் பேசியதில்லை. பேசிவிடவும் முடியாது. அந்த அளவுக்கு அவர் நடந்துகொள்ள மாட்டார். இது என்ன இவர் இப்படி பேசுகிறார் என்கிற ஆதங்கத்துடன், “ஐயா என்ன சொல்றிங்கன்னு புரியல. என்ன ஆச்சு?” என்றார் இறுகிய குரலில்.
“என்னன்னு சொல்லுங்கம்மா” என்றார் அந்த பெண்மணியிடம்.
தன்னை ஒரு வழக்கறிஞர் என்று அறிமுகப்படுத்திக் கொண்ட அந்த பெண்மணி, “உங்க பொண்ணு கொஞ்ச நாள் முன்னாடி விவாகரத்து வாங்கி தர சொல்லி டாக்குமெண்ட்ஸோட என்னை பார்க்க வந்தாங்க. அவங்களோட ஃபைல பார்த்துகிட்டு இருந்த என்னோட ஜுனியர் வேலையை விட்டு போய்ட்டா. ஃபாலோ-அப்ஸ் இல்லாம இருந்த ஃபைல்ஸ் எல்லாம் இன்னைக்கு தான் எடுத்து பார்த்தேன். பத்திரிக்கைல ஐயா பேர் இருந்தது. அதான் ஐயாவோட கவனத்துக்கு கொண்டு வந்தேன். அந்த ஒரு நாளுக்கு பிறகு பொண்ணு என்கிட்ட வரல. வேற லாயர் யார்கிட்டேயாவது போயி விஷயம் லீக் ஆகி ஐயா பேரு கெட்டுட கூடாதுல்ல” என்றார்.
அதிர்ந்து போனார் அங்கப்பன். “என்னம்மா சொல்றிங்க… என் பொண்ணு அப்படியெல்லாம் தன்னிச்சையா போயி எதுவும் பண்ணாதும்மா. நீங்க ஏதோ தப்ப சொல்றிங்க” என்றார் மகள் மீதான அதீத நம்பிக்கையுடன்.
“என்னத்த தப்பா சொல்றாங்க! அந்த பொண்ணு தான் தெள்ள தெளிவா எழுதி கொடுத்திருக்கே! மாப்பிள்ளையை மாத்தி பிடிக்காத கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க, விடுதலை வாங்கி கொடுங்கன்னு! பத்திரிக்கைல இருக்க மாப்ள பேரு ஒன்னு… கல்யாண ஃபோட்டோவுல இருக்கறவன் வேற ஒருத்தன்! என்ன எழவுய்யா இதெல்லாம்? பொண்ணுக்கு பிடிக்காத கட்டாய கல்யாணத்த மினிஸ்டர் பண்ணி வச்சுட்டாருன்னு பத்திரிகை காரனுவளுக்கு தெரிஞ்சா என் பேரு நாறிடும்” என்று கொதிப்புடன் கத்தினார்.
“அப்படியெல்லாம் ஒன்னும் நடக்காதுய்யா. நா என் பொண்ணுகிட்ட பேசுறேன். நீங்க கவலை படாதீங்க” என்றார் அங்கப்பன்.
“நீ கிழிச்ச…” என்று சட்டென்று ஒருமைக்கு தாவியவர், “உன்னையெல்லாம் பெரிய மனுஷன்னு நம்பி என் தலையை கொண்டு வந்து உன் பிரச்சனைக்குள்ள விட்டேன் பாரு! என்னைய சொல்லணும். நீ முதல்ல உன் பொண்ண ஃபோனை போட்டு கூப்பிடு. எதுவா இருந்தாலும் என் முன்னாடியே பேசி பிரச்னையை தீர்த்துக்கிட்டு போங்க. நீ பாட்டுக்கு வீட்ல போயி அந்த பொண்ண மிரட்டி… திரும்பவும் எதுவும் குறுக்கு சாலு ஓட்டம…” என்று எரிந்து விழுந்துவிட்டு, தன்னுடைய பிஏவை அழைத்து, “என்னடா ஆச்சு? அந்த பையன் வரானா இல்லையா?” என்றார் குறையா கோபத்துடன்.
“கிளம்பிட்டாப்ல ய்யா… கொஞ்ச நேரத்துல வந்துடுவாப்ல” என்றார் அவர்.
அங்கப்பன் அவமானத்தில் குறுகி போய்விட்டார். எந்த அவமானத்தை சந்திக்க பயந்து இந்த திருமணத்தை நடத்தினாரோ… அதே திருமணம் இப்போது அவரை அவமானப்படுத்திவிட்டது. தாங்க முடியாத துக்கம் அவர் நெஞ்சை அடைக்க முகமெல்லாம் சிவந்து முத்துமுத்தாக வியர்த்துவிட்டது. அவருக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்கிற பயம் அங்கிருந்தவர்களுக்கு வந்துவிட, அந்த வழக்கறிஞர் சட்டென்று எழுந்து, “ஐயா உட்காருங்க பேசிக்கலாம்” என்று அவரை பிடித்து சேரில் அமர வைத்தார்.
அமைச்சரின் மனமும் சற்று இளகிவிட, “இப்ப வருத்தப்பட்டு என்ன பிரயோஜனம். உக்காருங்க… பேசி தீர்த்துக்கலாம்” என்றார் சற்று சமாதானமாக. பிறகு தண்ணீர் கொண்டுவர சொல்லி அவருக்கு அருந்த கொடுத்தார். அவர் சற்று ஆசுவாசமான பிறகு தன் பிஏவை பார்த்து “அந்த பொண்ண போன் பண்ணி வர சொல்லு” என்றார்.
கனிமொழிக்கு கால் செய்து விஷயத்தை சொல்லமால் மினிஸ்டர் வீட்டுக்கு வர சொன்னார்கள். அவள் தயங்கினாள். பிறகு அங்கப்பன் போனை வாங்கி அவளை அங்கு வர சொன்னார். அவர்கள் பேசி முடித்த சற்று நேரத்திலெல்லாம் மலையமான் அங்கு வந்துவிட்டான்.
அவனிடமும் சத்தம் போட்டார் மினிஸ்டர். “அந்த காலத்து மனுஷங்கதான் மாட்டுக்கு மூக்கணாங்கயிறு கட்டுற மாதிரி பொண்ணுக்கு தாலிய கட்டி போட்டாங்கன்னா உனக்கு என்னப்பா வந்தது? இந்த காலத்து பையன் விபரமா இருக்க வேண்டாம்?” என்று கடிந்து கொண்டார்.
அவர் ஏன் திட்டுகிறார்… எதற்கு இந்த உதாரணங்களை எல்லாம் சொல்லுகிறார் என்று புரியாமல் விழித்தான் அவன்.
“உன் பொண்டாட்டிக்கு உன்னோட வாழ பிடிக்கலையாம். விவாகரத்து கேட்டு வக்கீலை போயி பார்த்திருக்கு. என்ன சொல்ற நீ?” என்று போட்டு உடைத்தார்.
அதிர்ந்து போனான் மலையமான். அங்கப்பனை போலவே அவனும் அவர் சொன்னதை நம்பவில்லை. குழப்பத்துடன் மாமனாரை பார்த்தான். அவர் அவனை நிமிர்ந்துக் கூட பார்க்க முடியாதவராக தலை குனிந்து அமர்ந்திருந்தார்.
வழக்கறிகர் டாக்குமெண்ட்ஸை அவனிடம் கொடுத்தார். புரட்டிப் பார்த்தவனுக்கு தன் கண்களையே நம்ப முடியவில்லை. அதில் இருந்த ஆங்கில வார்த்தைகள் புரியவில்லை என்றாலும், பத்திரிகை புகைப்படம் மற்றும் இதர படிவங்கள் எல்லாம் அவனுக்கு புரியும் விதமாகவே இருக்க கலக்கத்துடன் ஃபைலை மூடி வைத்துவிட்டு எழுந்துவிட்டான்.
பதட்டம் அவனை நிற்கவோ நிலைகொள்ளவோ விடவில்லை. உடனே வெளியே செல்ல வேண்டும் போல் கால்கள் பரபரக்க, வெகு சிரமப்பட்டு தன்னை கட்டுப் படுத்திக் கொண்டு நின்றான். வக்கீல் வரைக்கும் போயிருக்கிறாளே என்று மனம் வெகுவாய் வலித்தது. அந்த நேரத்தில் தான் கனிமொழி உள்ளே வந்தாள்.
மகளை பார்த்ததுமே அங்கப்பனுக்கு அப்படி ஒரு ஆத்திரம் வந்தது. மந்திரியே என்றாலும் அவர் முன் தன்னை கைகட்டி நிற்க வைத்துவிட்டாளே என்கிற ஆத்திரம்… அவர் தன்னை ஒருமையில் பேசியதற்கும்… அவரை எதிர்த்து தன்னால் ஒன்றும் பேச முடியாமல் போனதற்கும் இவள் தானே காரணம் என்கிற ஆத்திரம்…
“என்னை சந்தி சிரிக்க வச்சுட்டியேடி” என்று சீற்றத்துடன் எழுந்து கையை ஓங்கி கொண்டு மகளிடம் பாய்ந்தார்.
அங்கே நின்றுக் கொண்டிருந்த மினிஸ்டரின் பிஏ மற்றும் அந்த வழக்கறிஞர் பெண்மணி இருவரும், “சார்… சார்…” அவரை மடக்கி பிடித்துவிட்டார்கள்.
மலையமான் மட்டும் அசையவே இல்லை. அவள் பக்கம் திரும்பிப் பார்க்கவும் இல்லை.
கனிமொழி எதுவும் புரியாமல் திகைத்தது ஒரு கணம்தான். வழக்கறிஞரையும் தங்கள் திருமணத்தை நடத்தி வைத்த மந்திரியையும் ஒரே இடத்தில் பார்த்ததும் விஷயம் என்னவென்று அவளுக்கு விளங்கிவிட்டது. அடுத்த நொடியே அவளுக்குள்ளும் பெரும் சீற்றம் உண்டானது.
“செய்றதெல்லாம் செஞ்சுட்டு எதுக்கு இப்ப என்கிட்ட பாஞ்சுகிட்டு வர்றிங்க?” என்று மேல்மூச்சு வாங்க இரைந்தாள்.
“அறைஞ்சேன்னா பாரு கழுத… என்கிட்டயே குரல உசத்துரியா! என்ன தைரியம் இருந்தா வக்கீல் வரைக்கும் போயிருப்ப! உன்னையெல்லாம் கொன்னா கூட தப்பு இல்ல” என்று கத்தியவரின் உடல் கோப கொதிப்பில் நடுங்கியது.
அவளுக்கும் அதே நிலைதான்… “கொல்லுங்க… நீங்க செஞ்சுவச்ச கல்யாணத்துக்கு அது எவ்வளவோ மேல்…” என்று கத்தினாள்.
“என்னடி வாய்க்கு வாய் பேசுற?” அவர் மேலும் பாய, “அப்படிதான் பேசுவேன்” என்று அவளும் அழுத்தமாக சொன்னாள்.
அதற்கு மேல் அமைச்சர் அவர்களை பேச விடவில்லை. “அங்கப்பன்! என்ன இது! இங்க வந்து இப்படி சத்தம் போட்டுக்கிட்டு இருக்கீங்க! அமைதியா உட்காருங்க” என்று அவரை அதட்டி அடக்கிவிட்டு கனிமொழியிடம் திரும்பினார்.
இவ்வளவு களோபரம் அங்கு நடந்து கொண்டிருக்கும் போதும் மலையமான் அசையவில்லை. வேரூண்றிய மரம் போல் இறுகி போய் நின்றான்.
“என்னம்மா பிரச்சனை? எதுக்கு இவ்வளவு கோவப்படற? பெத்தவங்க நல்லது தானே செய்வாங்க உனக்கு?” – கனிமொழியை அமைதிப்படுத்த முயன்றார் அமைச்சர்.
“அதெல்லாம் எங்க தெரியுது! பெத்து வளர்த்து படிக்க வச்சு ஆளாக்கினதுக்கு என்னை தலை குனிய வச்சுட்டா” என்றார் அங்கப்பன் இடையில்.
அவர் அதை சொல்லாமல் இருந்திருந்தால் ஒருவேளை அவள் அவ்வளவு பேசியிருக்க மாட்டாளோ என்னவோ! ஆனால் அவர் அதை சொன்னதும் அப்படி ஒரு ஆத்திரம் பொத்துக் கொண்டு வந்தது அவளுக்கு.
“பெத்து.. வளர்த்து… படிக்க வச்சு… எதுக்கு என்னை ஆளாக்குனீங்க? இப்படி ஒரு மொட்டை பட்டிக்காட்டுல கொண்டு போயி தள்ளி விடுறதுக்கா? படிக்க வச்சேன் படிக்க வச்சேன்னு இன்னொரு தரம் சொல்லாதீங்க. என்னை படிக்க வச்சு என்ன பிரயோஜனம். படிப்பறிவே இல்லாத ஆளை தானே என் தலையில கட்டிவிட்டிங்க! அவரோட சேர்ந்து நான் மாடு மேய்க்கவும் சாணி அள்ளவும் தான் முடியும்.. வேற என்ன பண்ண முடியும்”
“ஊரு உலகத்துல போயி பாருங்க. ஒவ்வொரு பெத்தவங்க பிள்ளைங்களுக்கு எப்படிப்பட்ட வாழ்க்கையை அமைச்சு தர்றாங்கன்னு. இன்னைக்கு கூட ஒரு கல்யாணத்துக்கு போயிட்டு தான் வர்றேன்.. பணம் படிப்பு அழகு… எதுலேயும் அவ எனக்கு சமம் இல்ல.. ஆனா அவளுக்கு அமைஞ்ச வாழ்க்கை! நீங்க கட்டி வச்ச மாப்பிள்ளையை அந்த கல்யாணத்துக்கு விருந்தாளியா கூட என்னால கூட்டிட்டு போக முடியல. பேச வந்துட்டிங்க” என்று கண் மண் தெரியாத கோபத்தில் வார்த்தைகளை கொட்டிக் கவிழ்ந்தாள்.
“ஏய்… வாய மூடு… வாய மூடு கழுத… உன்ன பெத்ததுக்கு ஒரு கழுதையை வளர்த்திருக்கலாம்… பொதி சுமக்கவாச்சும் உதவியிருக்கும். நீ என் உயிரை எடுக்காம ஓயமாட்ட போலருக்கு” மீண்டும் குதித்துக் கொண்டு அங்கப்பன் எழ, மற்றவர்கள் அவரை பிடித்து அமரவைக்க, கனிமொழியின் கோபம் கொதிநிலையை அடைந்தது.
“ஓய தான் மாட்டேன். எதுக்கு ஓயனும்? நீங்க என்ன சொன்னாலும் பதில் பேசாம தலையை ஆட்டிக்கிட்டே இருந்த காலமெல்லாம் மலையேறிடுச்சு. இனி என் இஷ்டத்துக்கு தான் நடப்பேன்… பேசுவேன்…” என்று குரலை உயர்த்தி அழுத்தம் திருத்தமாக சொன்னாள்.
அங்கப்பன் மடார் மடாரென்று தலையில் அடித்துக் கொண்டார். மலையமான் கண்களை இறுக மூடிக் கொண்டான். சகிக்கவே முடியாத கேவலம் இது அவனுக்கு.
“அங்கப்பன்… கொஞ்சம் அமைதியா இருங்க” என்று அவரை அடக்கிய அமைச்சர், “பாரும்மா, இது நான் நடத்தி வச்ச கல்யாணம். நீ கோர்ட்டுக்கெல்லாம் போயி கேவலப்படுத்தக் கூடாது. உனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லைன்னா ரெண்டு பேரும் பேசி மியூச்சுவலா பிரிஞ்சிடுங்க. செட்டில்மென்ட் எல்லாம் அவுட் ஆஃப் கோர்ட் பேசிக்கலாம். பிரச்சனை வர கூடாது” என்றார்.
‘பிரிவு… அவுட் ஆஃப் கோர்ட் செட்டில்மென்ட் ‘ என்கிற வார்த்தைகள் அவளை சற்று நிதானத்திற்கு கொண்டு வந்தது. பேசுவதை நிறுத்திவிட்டு மேல் மூச்சு வாங்க அமைச்சரையே பார்த்தாள்.
அவள் என்ன சொல்ல போகிறாள் என்று அனைவரும் அவளையே பார்த்துக் கொண்டிருக்க… மலையமான் வாய் திறந்தான்.
“எங்க எப்ப கையெழுத்து போட சொன்னாலும் போடறேன். என்னால எந்த பிரச்சனையும் வராது” என்று அமைச்சரிடம் கூறிவிட்டு அங்கப்பனிடம் திரும்பியவன், “இனி உங்க பொண்ணு என் வீட்டுக்கு வர வேண்டாம். இன்னையோட எல்லாம் முடிஞ்சிடிச்சு” என்றான் வறண்ட குரலில்.
அப்போதுதான் கனிமொழி அவனை ஏறிட்டு பார்த்தாள். அதுவரை அவனை பார்க்கவே இல்லை என்று சொல்ல முடியாது. அவனும் அதே அறையில் தானே இருந்தான். அவன் இருக்கிறான் என்று தெரிந்து தான் அவ்வளவும் பேசினாள். அவன் என்ன செய்துவிட போகிறான் என்கிற எண்ணம். இப்போதும் அந்த எண்ணம் இருக்கத்தான் செய்தது.
‘பிரிவா!’ என்று அதிர்ந்து, இதயம் ஒரு கணம் நின்று துடித்தாலும் மறுகணமே அவள் இதழ்கடையோராம் சற்று அலட்சியமாக மேல்நோக்கி உயர்ந்து தாழ்ந்தது.
‘எல்லாம் முடிஞ்சதா! ம்ம்ம்… அப்புறம்!’ என்று நக்கலாகத்தான் நினைத்தாள். அவளை பிரிந்து அவனால் எத்தனை நாட்களுக்கு இருக்க முடியும். அதுவும் இந்த ஒரு மாத காலம் அவளோடு பின்னிப் பிணைந்து வாழ்ந்துவிட்டு! நான்கு நாட்கள் கூட தங்கமாட்டான். வழக்கம் போல அந்த பழைய ஓட்டை வண்டியை எடுத்துக் கொண்டு அவளை தேடி வந்துவிடுவான். முன்பு போனது போல அவன் கூப்பிட வந்ததும் உடனே போகக் கூடாது… நன்றாக இழுக்கடித்து தான் செல்ல வேண்டும்… என்று மனதிற்குள் பலவற்றையும் எண்ணிக் கொண்டிருந்தவளுக்கு அவனுடைய கோபம் ஒரு பொருட்டாகவே தோன்றவில்லை.
தோன்றும் அளவுக்கு அவன் முகத்திலும் பெரிதாக எந்த கவலையும் தெரியவில்லை. சின்ன இறுக்கம்… அவ்வளவுதான்…
அவள் என்ன புதிதாகவா இதையெல்லாம் பேசுகிறாள்! எப்போதும் அவள் பேசுவது தானே! இன்று இரண்டு பேருக்கு முன்னிலையில் பேசியிருக்கிறாள். கல்யாணத்தன்று கூட எல்லோர் முன்னிலையிலும் பேசினாள் தானே! அப்போது பெரிதாக எடுத்துக் கொள்ளாதவன் இன்று என்ன பெரிதாக ரோஷப்படுகிறான்! பிரிவாம்! கையெழுத்தாம்! – கடுப்புடன் அவள் முகத்தை திருப்பிக்கொள்ள, அவள் பக்கம் பார்வையை திருப்பாமல் அங்கிருந்து வெளியேறினான் மலையமான்.
Comments are closed here.