கனியமுதே! – 26
882
0
அத்தியாயம் – 26
அமைச்சர் வீட்டிலிருந்து கிராமத்தை நோக்கி கிளம்பிய மலையமான் வீட்டுக்கும் செல்லவில்லை பண்ணைக்கும் செல்லவில்லை. மாறாக ஊர் எல்லையை தாண்டி இருக்கும் ஏரிக்கரை பனங்காட்டுக்கு வண்டியை விட்டான். அங்குதான் ஆள் நடமாட்டம் ஏதும் இருக்காது. ஊரில் ஏதாவது சாவு விழுந்தால் அந்த பக்கம் இருக்கும் சுடுகாட்டிற்கு யாராவது வந்து போவார்கள். மற்றபடி மனிதர்கள் யாரையும் அங்கு பார்க்க முடியாது. அவனுக்கும் அதுதான் வேண்டும். அவனுக்கு யாரையும் பார்க்க பிடிக்கவில்லை.. யார் முகத்திலும் விழிக்கப் பிடிக்கவில்லை. மனித வாடையே வேண்டாம் என்பது போல் மனம் வெறுத்துப் போய்விட, விர்ரென்று பனங்காட்டுக்குள் வண்டியை செலுத்தினான்.
மனம் கலங்கிப் போயிருந்ததில் கண்களும் பூத்துவிட்டதோ என்னவோ.. பக்கத்தில் இருந்த பனைமரம் கூட தூரத்தில் இருப்பது போல் தோன்ற ஒரு கணம் அவன் கவனம் தப்பி, மறுகணம் வண்டியின் வேகத்தை குறைப்பதற்குல், முன் பக்க வீல் பனைமர தூரில் ஏறிவிட்டது.
கண் இமைக்கும் நேரம் தான்… என்ன ஏது என்று அவன் சுதாரிப்பதற்குள் வண்டி ஒரு பக்கம் இழுத்துக் கொண்டு போய்விட இவன் ஒரு பக்கம் உருண்டுக் கிடந்தான். கை காலெல்லாம் சிராய்ப்பு… வெள்ளை வேட்டி சட்டையெல்லாம் ரெத்தமும் மண்ணுமாக கறைபடிந்து அவன் நிலையை இன்னும் மோசமாக்கிவிட, உடைந்து போய் ‘ஓ’ வென்று பெருங்குரலெடுத்து அலறினான்.
அடக்க முடியாத பேரலை ஒன்று அவன் அடிவயிற்றிலிருந்து கிளம்ப வாய்விட்டு கத்தி அழுதான். ஆள் அரவமற்ற அந்த காடு முழுவதும் அவன் அலறி அழுத சத்தம் எதிரொலித்தது. அவனால் நிறுத்தவே முடியவில்லை. இது வெறும் துக்கமோ துயரமோ மட்டும் அல்ல… நெஞ்செல்லாம் பற்றி எறிவது போல் தாங்கவே முடியாத உணர்வு… என்னவென்றே தெரியவில்லை…
தோற்று போய்விட்டது போல்… ஏமார்ந்துவிட்டது போல்… அவமானப்பட்டுவிட்டது போல்… எதுவுமே இல்லாதது போல்… என்னவென்றே சொல்ல முடியாத உணர்வு… ஐயோ! உள்ளே பயங்கர வலி! அப்படியே போய் ஏரிக்குள் இறங்கி உயிரை விட்டுவிடலாம் போல் இருந்தது…
அவனுக்கென்று யார் இருக்கிறார்கள்! யாருக்கு அவன் மீது உண்மையான அக்கறை…! பாசம்…! யாருமே இல்லையே! அம்மாவும் அக்காவும் கூட இப்போது அவன் கண்களுக்கு நல்லவிதமாக தெரியவில்லை. அவர்களும் அவனை பணம் காய்க்கும் மரமாகத்தானே பார்த்தார்கள்! சின்ன வயதிலிருந்து அவனுக்கென்று யார் என்ன செய்தார்கள்! அப்பா இறந்ததிலிருந்து அவன் தானே எல்லாம்… பள்ளிக்கு கூட அனுப்பவில்லையே! – தேம்பி தேம்பி அழுதான்.
என்னென்ன வார்த்தைகள் பேசிவிட்டாள்! அவ்வளவு பேருக்கு முன்னால் அவனை நிற்க வைத்து அசிங்கப்படுத்தி… கேவலப்படுத்தி… “ஆ…” அலறினான். அந்த அலறலில் பச்சாதாபம் இல்லை.. கோபம்… பெரும் கோபமிருந்தது… அது அவள் மீதான கோபம் அல்ல.. தன் மீதான கோபம்.
ஒரு மாதம் அவள் அவனோடு கூடி களித்து வாழ்ந்ததும் அப்படியே நப்பிவிட்டானே! எவ்வாவு பெரிய முட்டாள்தனம்! அவள் பெரிய இடத்துப் பெண்… படித்தவள்.. பணக்காரி… எப்படி மறந்தான்! அவ்வளவு பேர் முன்னிலையில் அத்தனையையும் புட்டுப்புட்டு வைத்துவிட்டாளே! – மனம் கொதித்தது அவனுக்கு…
சாதாரணமாக என்றால் அவனுக்கு இவ்வளவு பாதிப்பு இருந்திருக்காதோ என்னவோ! ஆனால் நம்ப வைத்து கழுத்தை அறுத்தது போல், அந்த ஒரு மாதகால வாழ்க்கைக்குப் பிறகும் அவள் அப்படி பேசியதைத்தான் அவனால் தாங்கவே முடியவில்லை.
அவ்வளவு விஷத்தையும் மனதிற்குள் வைத்துக் கொண்டு தான் அவனோடு பழகியிருக்கிறாள்! ஒவ்வொரு நாளும் இவன் அவளிடம் நெருங்கிய போதெல்லாம் என்ன நினைத்திருப்பாள்! நாய் மாதிரி அலைகிறான் என்றா! அல்லது இன்னும் கேவலமாவா! பல்லை கடித்து சகித்திருப்பாளோ! – மண்டை ஓட்டுக்குள் லட்சம் நரம்புகள் எங்கெங்கோ இழுப்படுவது போல் தோன்ற, இரண்டு கைகளாலும் தலையை இறுக்கமாக பிடித்துக் கொண்டு அப்படியே தரையில் மீண்டும் சாய்ந்துவிட்டான். இப்போது சத்தமில்லாமல் அவன் உடல் குலுங்க கண்ணீரில் பூமி நனைந்தது.
ஒவ்வொரு நிமிடத்தையும் உழைப்பில் கரைப்பவன் இப்போது நேரம் போவது தெரியாமல் அப்படியே படுத்துக் கிடந்தான். பாம்பு ஒன்று அவன் மீது ஏறி இறங்கி சென்ற போது கூட அவனுக்கு பதட்டமில்லை. எழுந்துகொள்ள வேண்டும் என்கிற எண்ணமும் இல்லை. வெட்டிப் போட்ட மரம் போல் அவன் பாட்டுக்குக் கிடந்தான்.
தூரத்தில் எங்கோ விழுந்துக் கிடந்த அலைபேசி விடாமல் ஒலித்துக் கொண்டே இருந்தது. அதை எடுக்க வேண்டும் என்றோ… அழைப்பது யாரென்று தெரிந்துகொள்ள வேண்டும் என்றோ அவனுக்கு தோன்றவே இல்லை. சூரியன் கிழக்குப் பக்கம் இறங்க துவங்கி… கொஞ்சம் கொஞ்சமாக இருள் கவிந்தது. எதுவும் அவனை அசைக்கவில்லை. நிலவொளியின் துணையோடு மல்லார்ந்துக் கிடந்தான்.
மருமகள் வீட்டுக்கு வர வேண்டிய நேரத்தில் வரவில்லை என்றதுமே அலமேலு மகனுக்கு அலைபேசியில் அழைக்க துவங்கிவிட்டார். பல முறை முயன்றும் அவன் எடுக்கவில்லை என்றதும் ஏதோ வேலையாக இருக்கிறான் என்று எண்ணி நேராகவே பண்ணைக்கு சென்றார். அங்கு அவன் இல்லை என்றதும் அவருக்கு கவலையாகிவிட்டது. பதட்டத்துடன் மருமகள் வந்துவிடுவாள் என்று காத்துக் கொண்டிருந்தார். ஆனால் அவள் இருட்டிய பிறகும் வீட்டுக்கு வரவில்லை.. மகனும் போனை எடுக்கவில்லை என்பது பெரிய கலக்கத்தை கொடுக்க உடனே மகள் வீட்டுக்கு ஓடி மருமகனிடம் சொன்னார்.
நாராயணனுக்குமே ஆச்சர்யம்தான்.. கனிமொழி இவ்வளவு நேரம் வீட்டுக்கு வராமல் இருக்க வாய்ப்பில்லையே! இவன் எங்கே போனான்! என்று பல எண்ணங்கள் மனதில் ஓட பண்ணைக்கு போய் விசாரித்துவிட்டு டவுனுக்கு கிளம்பினார். கல்லூரியில் சென்று பார்த்துவிட்டு அதன் பிறகுதான் அங்கப்பனுக்கு அழைத்தார்.
“கனி வீட்டுக்கு வரலண்ணே! அங்க ஏதும் வந்துச்சா?” என்றார் தயக்கத்துடன்.
“மாப்ள எதுவும் சொல்லலையா?” என்றார் அவர்.
“மலையனா! ஒன்னும் சொல்லலையே! மதியத்துலேருந்து அவனையும் ஆளையே காணும். பண்ணையிலையும் இல்ல வீட்லயும் இல்ல… என்னண்ணே ஆச்சு?” என்றார்.
அங்கப்பன் சுருக்கமாக விபரம் கூறி கனிமொழி தங்கள் வீட்டில் தான் இருக்கிறாள் என்பதையும் கூறினார்.
நாராயணனுக்கு திகைப்பாக இருந்தது. “என்னண்ணே! இப்பத்தான் ரெண்டு பேரும் ஒன்னும் மண்ணுமா வாழற மாதிரி தெரிஞ்சுது… அதுக்குள்ள இப்படி சொல்றிங்க” என்றார் வருத்தத்துடன்.
அவர் எதுவும் பேசவில்லை. சற்று நேரம் அமைதியாக இருந்தார். பிறகு, “நாளைக்கு வீட்டுக்கு வர்றேன் நாராயணா… நேர்ல பேசிக்கலாம்” என்றார்.
அதற்கு மேல் அவரிடம் பேசுவதற்கு எதுவும் இல்லை என்பதால் நாராயணனும்” சரிண்ணே” என்று கூறிவிட்டு வைத்துவிட்டார். வீட்டுக்கு வந்து விபரம் சொன்ன போது அனைவரும் பதறிவிட்டார்கள்.
“மலையன் இப்ப எங்க போனான்னு தெரியலையே!” என்று கலங்கினார் அலமேலு.
கனிமொழி செய்ததை பற்றி நினைக்கவோ பேசவோ நேரமில்லாதபடி மலையமானை பற்றிய கவலை அவர்களை ஆக்கிரமித்துக் கொண்டது.
“ஏங்க… கடைத்தெரு பக்கம் ஏதும் போயிருக்கானான்னு போயி பாருங்கங்க” என்று கூறி தாய்க்கு தெரியாமல், மது கடையை குறிப்பிடுவது போல் சைகை காட்டினாள் தாமரை.
இது போல் மனம் உடைந்து போகும் தருணங்களிலெல்லாம் ஆண்கள் சுலபமாக தப்பித்துக்கொள்ள மதுக்கடையை நாடுவது தானே வழக்கம் என்பது அவள் எண்ணம். ஆனால் அவள் தம்பி வேறு விதமானவன் என்று அவளுக்கு தெரியவில்லை. ஆனால் நாராயணனுக்கு தெரிந்திருந்தது. மனைவியைப் பார்த்து பல்லை கடித்தவர், “ந்தா… அவன் அங்கேயெல்லாம் போக மாட்டான்” என்றார் எரிச்சலுடன்.
“வேற எங்க போயிருப்பான்!” என்று அவள் மிரட்சியுடன் விழிக்கவும், “எங்கையாவது… காடு கரைன்னு போயி உட்கார்ந்திருப்பான். விசாரிச்சு பார்த்து கூட்டிட்டு வர்றேன்” என்று கூறிவிட்டு கிளம்பினார். ஆனால் அந்த வேலை அவ்வளவு சுலபமானதாக இல்லை.
மலையமான் வழக்கமாக போகும் எல்லா இடங்களையும் அலசிவிட்டார். எங்கும் அவனை காண முடியவில்லை. அவருக்கே பயம் வந்துவிட்டது. ‘எங்க போய்ட்டான்னு தெரியலையே!’ என்று கலங்கிப் போய் மீண்டும் டவுனுக்கு போனார். ஒவ்வொரு ஒயின் ஷாப்பாக சென்று விசாரித்தார். திரும்பவும் கிராமத்துக்கு வந்தார். சாவடியில் அமர்ந்து விடிய விடிய சீட்டு விளையாடுபவர்களிடம், “ஒரு ஐநூறு ரூபாய் காசு கேட்போம்னு பார்க்குறேன்… மலையன் எங்க போனான்னு தெரியல. போனையே எடுக்க மாட்டேங்கிறான்” என்று சாதாரணமாக புலம்புவது போல் புலம்பினார்.
“தம்பி ஏரிக்கரை பக்கம் போனிச்சே” என்றார் ஒருவர்.
உடனே அங்கிருந்து கிளம்பிய நாராயணன் அந்த நேரத்திலும் ஏரிக்கரைக்கு போனார். ஆனால் அது என்ன சின்ன இடமா… உடனே கண்டுபிடிப்பதற்கு… அவன் ஏரிக்கரை ஓரமாக உள்ள பனகாட்டுக்குள் கிடக்கிறான். இவருக்கு எப்படி தெரியும் அவன் எங்கே இருக்கிறான் என்று! அந்த பகுதி முழுவதும் சுற்று சுற்றி வந்தார். ஆளை கண்டுபிடிக்கவே முடியவில்லை.
அவருடைய பயம் அதிகமானது. போன் அடித்துப் பார்த்தார். ரிங் போனதே தவிர அவன் எடுக்கவில்லை. சோர்வுடன் சற்று நேரம் வண்டியிலேயே அமர்ந்துவிட்டவர், இவ்வளவு தூரம் வந்துவிட்டோம் எதற்கும் பனங்காட்டுக்குள்ளும் பார்த்துவிடுவோம் என்று அந்த பகுதிக்குச் சென்றார்.
சற்று தூரத்திலேயே ஒரு ஆள் படுத்திருப்பது போல் தெரிந்தது. அது மலையமான் தான் என்பது அவருக்கு புரிந்துவிட, “ஏய்! மலையா!” என்று சத்தமிட்டபடி வண்டியின் ஹெட்லைட் வெளிச்சத்தை அவனை நோக்கி அடித்தார்.
அவனேதான்… வண்டியை நிறுத்திவிட்டு வேகமாக அவனிடம் நெருங்கியவர், “என்னடா இது! எந்திரிடா முதல்ல” என்று அதட்டினார்.
மாமனின் குரல் கேட்டு திரும்பியவன் அவரை பார்த்துவிட்டு, “இங்க எதுக்கு வந்த நீ” என்கிற கேள்வியுடன் எழுந்து அமர்ந்தான்.
இப்போது அவனிடம் அழுகை சோகமெல்லாம் இல்லை. உணர்வுகளை மூட்டை கட்டி உள்ளுக்குள் புதைத்துக் கொண்டு பழையபடி மீண்டிருந்தான்.
“என்னடா என்னைய கேள்வி கேட்குற! நீ போனையும் எடுக்கல ஒன்னையும் எடுக்கல… நீபாட்டுக்கு இங்க வந்து படுத்துட்ட! அங்க வீட்ல பொம்பளைங்க எல்லாம் பதறி போயி இருக்காங்க. என்னடா!” என்றார்.
“சும்மா நொய் நொய்ங்காத மாமா. நா என்ன சின்ன புள்ளையா! தொலைஞ்சு போறதுக்கு?” என்று எரிந்து விழுந்தான். அவன் இப்படியெல்லாம் பேசுகிறவன் அல்ல என்பதால் நாராயணன் அதற்கு மேல் அவனிடம் வாக்குவாதம் செய்யவில்லை. அவனுடைய மனநிலை தான் அவருக்கு தெரியுமே!
“சரி… சரி… எந்திருகிச்சு வா.. வீட்டுக்கு போகலாம்” என்று அழைத்தார்.
அவனும் மறுக்கவில்லை. எழுந்து… அலைபேசியை தேடி எடுத்துக் கொண்டு வண்டியை நிமிர்த்தினான். அதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தவருக்கு சங்கடமாக இருந்தது. வண்டியை கீழே உருட்டிவிடும் அளவுக்கு போயிருக்கிறான் என்பதே அவருக்கு பெரிதாக இருந்தது. அவன் அடிபட்டுக் கொண்டது அழுததெல்லாம் அவர் கற்பனைக்கே எட்டாத விஷயங்கள்.
மலையமான் வண்டியை நிமிர்த்தி எடுத்துக் கொண்டு ஏரிக்கரை வரைக்கும் வந்தவன்… ஏரிக்கரையில் நிறுத்திவிட்டு தண்ணீரில் இறங்க போனான்.
“டேய் டேய்… என்ன இந்த நேரத்துல தண்ணிக்குள்ள இறங்குற! வீட்டுக்கு வா போகலாம்… குளிக்கணும்னா வீட்ல போயி குளிச்சுக்கலாம்” என்றார்.
“இல்லமாமா… சுடுகாடு வரைக்கும் வந்துட்டேன். தலை முழுகிட்டு வந்துடறேன்” என்றான்.
அவனுடைய பேச்சு நடவடிக்கையெல்லாம் முற்றிலும் அவருக்கு புதிதாக இருந்தது.
“மலையா! என்னடா இதெல்லாம். பெரும் பேச்செல்லாம் பேசாதடா… நாளைக்கு உட்கார்ந்து பேசினா எல்லாம் சரியாயிடும்” என்றார்.
ஆனால் அவன் மனதிற்கு அப்படியெல்லாம் எதுவும் தோன்றவில்லை. அத்தனை நாட்களும் அவன் மனதிற்குள் சுமந்துக் கொண்டிருந்த ஏதோ ஒரு அழகிய உணர்வு இன்று மரித்துப் போய்விட்டது. அதை கொண்டு வந்து இந்த பனங்காட்டில் போட்டு அழுதுவிட்டு… அதோ… அந்த சுடுகாட்டில் எரித்துவிட்டான். இப்போது தலைமுழுகிவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்று தான் தோன்றியது. அதையே செய்துவிட்டு கரையேறினான்.
Comments are closed here.