Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

கனியமுதே! – 27

அத்தியாயம் – 27
அன்று நள்ளிரவுக்கு மேல் தான் மலையமானை வீட்டுக்கு அழைத்துக் கொண்டு வந்தார் நாராயணன். அவன் வந்து நின்ற கோலத்தை பார்த்ததுமே திகைத்துப் போனார்கள் அலமேலுவும் தாமரையும். ஆனால் அவனிடம் வெளிப்படையாக எதையும் காட்டிக்கொள்ளவில்லை.

“எங்கப்பா போய்ட்ட இவ்வளவு நேரம்… சாப்பிடறியா? சாப்பாடு எடுத்து வைக்கட்டுமா?” என்று சாதாரணமாகவே பேச முயன்றார்கள்.

அவர்கள் யார் முகத்தையும் நிமிர்ந்து பார்க்காமல், “வேண்டாம்… எல்லாரும் போயி படுங்க” என்று கூறிவிட்டு சட்டை வேட்டியை மாற்றிக் கொண்டு கயிற்றுக் கட்டிலோடு வாசலுக்கு வந்து படுத்தவன் உறங்கவில்லை.. ஆகாயத்தையே வெறித்துக் கொண்டிருந்தான். மனதின் பாரம் குறையவே இல்லை. ஒருவேளை தாயின் முகத்தை பார்த்து பேசி, அவரிடம் தன் குறைகளை கூறி, அவர் மடியில் தலை சாய்த்து அழுதிருந்தால் இந்த குமுறல் அடங்கியிருக்குமோ என்னவோ!

ஆனால் ஏனோ அவனால் அதை செய்ய முடியவில்லை. எல்லோரையுமே விலக்கி வைக்கவே விழைந்தான். யாரோடும் ஓட்ட முடியவில்லை. அவன் மனம் அதற்கு ஒப்பவில்லை. தூய்மையான அன்பு எங்கேயும் இல்லை என்பது போல்… அந்த அகண்ட பிரபஞ்சத்தில் அவன் மட்டும் தனித்து விடப்பட்டது போல் ஏதேதோ தோன்றியது.

ஆகாசத்தில் கணக்கில்லாமல் சிதறி கிடந்த நட்சத்திரங்களை எண்ணிக் கொண்டிருந்தவன், விடியலில் உதிக்கும் வெள்ளி நட்சத்திரம் உதித்துவிட்டதை கவனித்தான். தலைமாட்டில் வைத்திருந்த அலைபேசியை எடுத்து மணி பார்த்தான். மூன்றாகி விட்டது. எழுந்து சட்டையை மாட்டிக் கொண்டு பண்ணைக்கு கிளம்பினான்.

வேலையாட்கள் யாரும் வரவில்லை. இரவு காவலுக்கு இருப்பவர் மட்டும் எழுந்து ஏதோ வேலை செய்து கொண்டிருந்தார். மாடுகள் கட்டிக்கிடக்கும் ஷெட்டில் லைட் எரிந்துக் கொண்டிருந்தது. வண்டியை நிறுத்திவிட்டு ஷெட்டுக்குள் நுழைந்தான். இவனை பார்த்ததுமே மாடுகள் தலையை அசைத்து வரவேற்பது போல் அவனுக்கு தோன்றியது. சில மாடுகள் “ம்மா” என்று கத்தும் சத்தம் கூட அவனிடம் ஏதோ சொல்வது போல் தோன்றியது.

நெஞ்சு குழியிலிருந்து தொண்டை வரைக்கும் ஆத்திரம் அடைத்துக்கொள்ள சட்டென்று கண்களில் கண்ணீர் திரண்டது. மனிதர்களிடம் அவனுக்கு கிடைக்காத, தூய்மையான அன்பை அந்த வாயில்லா ஜீவன்களிடம் உணர்ந்தான். இவைகள் தான் அவனுடைய சந்தோஷம்… அவனுடைய உணர்வு பிரவாகத்தின் போக்கை மாற்ற கூடிய சக்தி அந்த ஜீவன்களுக்குத்தான் இருந்தது. ஒவ்வொரு மாட்டுக்கு பக்கத்திலும் போய் தொட்டு.. தடவி.. தட்டிக் கொடுத்து அவைகளிடம் பேசினான். புல் அள்ளி போட்டான். தண்ணீர் காட்டினான். மந்திரக்கோலை சுழற்றியது போல் அவன் மனதிற்கு அவ்வளவு அமைதி கிடைத்தது.


கனிமொழிக்கும் மலையமான் மீது கோபம்… அப்படி என்ன அவள் இல்லாததை சொல்லிவிட்டாள்! எப்போதும் பேசுவது தானே! அவள் என்ன பேசினாலும்… எது செய்தாலும் அவன் எதையும் பெரிதாக எடுத்துக் கொண்டதில்லையே! இன்று மட்டும் என்ன புதிதாக உறவே வேண்டாமென்று கையெழுத்துப் போட்டுக் கொடுக்கிறேன் என்கிறான்! போட்டுக் கொடுக்கட்டுமே! அவளா வேண்டாம் என்று சொல்கிறாள்!

தாராளமாக கையெழுத்துப் போட்டுக் கொடுத்துவிட்டு போகட்டும். எத்தனை நாட்களுக்கு இந்த ரோஷம் தாக்கு பிடிக்கும் என்று பார்க்க்கலாம். அவளை காணாமல் பைத்தியம் பிடித்து போய்விடுவான். ஒரு வாரம் கூட பொறுக்க மாட்டான். முன்பே அப்படி… இப்போது இந்த ஒரு மாத அன்யோன்யமான வாழ்க்கைக்குப் பிறகு! – என்கிற எண்ணம் தோன்றியதும் முகத்தில் பூரிப்பு… தன்னை பிரிந்து அவனுக்கு நான்கு நாட்கள் கூட இருக்க முடியாது என்கிற எண்ணம் அவள் மனதில் திடமாக தோன்றியது.

ஆனால் அந்த நான்கு நாட்கள், பத்து நாட்களாக கழிந்த பிறகும் மலையமான் அவளை தேடி வரவில்லை. அதற்கு பிறகுதான் அவளுக்கு பயம் வந்தது. யாரிடம் கேட்பது என்று புரியாமல் தத்தளித்தாள். தந்தையிடம் இதைப் பற்றி கேட்பதற்கு வாய்ப்பே இல்லை. அவர் இவளிடம் பேசுவதையே நிறுத்திவிட்டிருந்தார். தாய்க்கும் எதுவும் தெரியாது. வேறு யாரிடம் பேசுவது என்று புரியாமல் திகைத்தாள்.

பிரச்னை நடந்த மறுநாள் அங்கப்பன் மலையமான் வீட்டுக்கு சென்று குடும்பத்தில் உள்ள அனைவரிடமும் பேசினார். மகளுக்காக மன்னிப்புக் கேட்டார். சமாதானம் செய்ய முயற்சி செய்தார். ஆனால் மலையமான் அழுத்தமாக இருந்தான். அவர் மன்னிப்பு என்கிற வார்த்தையை சொன்ன போது மட்டும், “அப்படியெல்லாம் சொல்லாதீங்க” என்றவன் அவருடைய சமாதானங்களை ஏற்றுக்கொள்ளவில்லை.

“இனி சேர்ந்து வாழறது முடியாது. நாளைக்கு அந்த வக்கீலை போயி பார்க்கறேன். எங்க கையெழுத்து போட சொல்றாங்களோ போட்டுடறேன். இதோட முடிச்சுக்குவோம்” என்று உறுதியாக சொல்லிவிட்டான்.

சொன்னபடியே மறுநாள் வக்கீலை பார்த்து பேசி, டாகுமெண்ட்ஸை ரெடி பண்ண சொன்னவன், மீண்டும் இரண்டு நாள் கழித்து போய் கையெழுத்தும் போட்டுவிட்டு வந்தான்.

இது எதுவுமே கனிமொழிக்கு தெரியாது. அவள் பாட்டுக்கு கல்லூரிக்கு செல்வதும், மலையமான் தன்னை தேடி வருவான் என்று காத்துக் கொண்டிருப்பதுமாக நாட்களை கடத்திக் கொண்டிருந்தாள். இப்படியே பத்து நாட்கள் சென்றுவிட்ட பிறகுதான் அவளுக்கு கொஞ்சமாக உரைத்தது.

‘என்ன இன்னும் வராம இருக்கான்!’ என்று யோசித்து மெல்ல தாயிடம் விசாரித்தாள்.

அந்த பெண்மணிக்கு ஏற்கனவே மலையமானை பிடிக்காது. இப்போதாவது அவனை தலைமுழுக ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததே என்று இருந்தவருக்கு இப்போது மகள் அவனைப் பற்றி விசாரித்தும், ‘இது என்னடா புது தொல்லை’ என்று தோன்றியது.

“உனக்கு எதுக்கு அதெல்லாம்? வேண்டாம்னு முடிவு பண்ணியாச்சுன்னா சும்மா மனச அலைய விட கூடாது” என்றார் கண்டிப்புடன். இப்போது அவளுக்கு திக்கென்று இருந்தது.

“ம்மா… என்ன வேண்டாம்னு முடிவு பண்ணியாச்சு? நா எப்போ அப்படி சொன்னேன்? நா ஏதோ அப்பா மேல இருந்த கோபத்துல அன்னைக்கு பேசிட்டேன். அந்த கோபத்துல அவரு ஏதேதோ சொல்லிட்டு போய்ட்டாரு. அதுக்காக..! அப்படியே விட்டுட்டு போயிட முடியுமா?” என்றாள் ஆற்றாமையுடன்.

“அப்பா மேல இருந்த கோபத்துல பேசிட்டியா! அப்புறம் எதுக்கு வக்கீலை பார்க்க போன! போட்டோ பத்திரிக்கை எல்லாம் எதுக்கு கொண்டு போயி கொடுத்த?” என்றார் குழப்பத்துடன்.

“அதெல்லாம் முன்னாடி நடந்ததும்மா.. ஆறு மாசம் கூட இருக்கும். ஆனா அதுக்கு பிறகு எங்களுக்குள்ள எல்லாம் சரியாயிடிச்சு. அப்பாதான் தேவையில்லாம இந்த பிரச்னையை மறுபடியும் கிளறி விட்டுட்டாங்க. அப்பா என்கிட்ட கோபமா நடந்துக்கிட்டதால தான் நானும் ஏதேதோ பேச வேண்டியதா ஆயிடிச்சு” – இப்போது அவளுடைய கோபம் முழுவதும் தந்தையின் பக்கம் திரும்பியிருந்தது.

“நீ இப்படி சொல்ற.. ஆனா அந்த மனுஷன்.. வக்கீலை பார்த்து பேசியிருக்காரு. ரெண்டு நாளா தொடர்ந்து போயி டாக்குமெண்ட்ஸ் எல்லாம் ரெடி பண்ண சொல்லி கையெழுத்தும் போட்டுட்டு போயிட்டாராம். இனி நம்ம பக்கத்துல தான் முடிவெடுக்கணும். நமக்கு என்னென்ன டிமாண்ட்ஸ்னு பேசி முடிவு பண்ணியாச்சுன்னா… மியூட்சுவல் கன்சண்ட் கேஸ் ஃபைல் பண்ணி, முடிஞ்ச அளவுக்கு சீக்கிரம் டைவர்ஸ் வாங்கிடலாம்னு வக்கீல் சொல்லி அனுப்பியிருக்காங்க” என்றார்.

“டைவர்ஸா! என்னம்மா பேசுற!” என்றாள் அதிர்ச்சியுடன். இந்த விஷயம் இவ்வளவு தூரத்திற்கு செல்லும் என்று அவள் எதிரிபார்க்கவே இல்லை.

இதை இப்படியே விட்டால் பிரச்னை பெரிதாகிவிடும். தான் உடனே மலையமானிடம் பேச வேண்டும் என்று தோன்ற உடனே வண்டியை எடுத்தாள். இந்த நேரத்தில் அவன் பண்ணையில் தான் இருப்பான் என்பதால் நேராக பண்ணைக்கே சென்றாள்.

மலையமான் அவள் வந்ததை கவனிக்கவில்லை. ஷெட்டில் மும்மரமாக மாடுகளோடு வேலை செய்து கொண்டிருந்தான். வேலையாள் தான், “பாப்பா வந்திருக்கு தம்பி” என்று அவள் வந்திருப்பதை அவனிடம் வந்து சொன்னார்.

சட்டென்று அவனுக்குள் ஒரு இறுக்கம்… ரெத்த அழுத்தம் கூடி உடம்பெல்லாம் சூடாகிவிட்டது.

அவள் தான் என்று தெரிந்தும், “எந்த பாப்பா?” என்றான் கடுப்பாக.

“அது… நம்ம… பாப்பா தான் தம்பி… கனி” என்றார் அவர் தயக்கத்துடன். கடந்த பத்து நாட்களில் அவர்களுடைய விஷயம் அரசால் புரசலாக ஊர் முழுவதும் பரவியிருந்தது. பண்ணையில் வேலை செய்யும் ஆட்களுக்கு தெரியாமல் போய்விடுமா என்ன! எல்லாம் தெரிந்திருந்ததால் தான் அவர் தயங்கித் தயங்கி பேசினார்.

பதில் சொல்லாமல் மீண்டும் குனிந்து வேலை செய்ய துவங்கினான் மலையமான். எவ்வளவு முயன்றும் உள்ளே பொங்கும் உணர்வு பேரலையை அவனால் அடக்க முடியவில்லை. அன்றைக்கு அவ்வளவு பேசிவிட்டு இப்போது எதற்கு இங்கு வந்திருக்கிறாள் என்கிற ஆத்திரம் அவன் கண்ணை மறைத்தது. அவளை பார்க்கவே விருப்பம் இல்லாதவனாக விறுவிறுவென்று வைக்கோலை அள்ளி மாடுகளுக்குப் போட்டான்.

“தம்பி! புள்ள வந்து தனியா நிக்குதே!” என்றார் அவர் மீண்டும்.

“வேலையா இருக்கேன்னு கிளம்ப சொல்லுங்க” என்றான் அவரை நிமிர்ந்து பார்க்காமல்.

அதை அவளிடம் சொல்ல விருப்பம் இல்லாதவர் போல அந்த மனிதர் அப்படியே அசையாமல் நின்றார்.

“என்ன?” என்றான் அவர் எரிச்சலுடன்.

“நா போட்டுக்குறேன் தம்பி… நீ போயி என்னன்னு கேளு” என்றார் வற்புறுத்தும் குரலில்.

கையிலிருந்த வைக்கோலை கடுப்புடன் கீழே போட்டுவிட்டு ஷெட்டிலிருந்து வெளியே வந்தான். கொட்டகையில் அவனுக்காக காத்துக் கொண்டு நின்றாள் கனிமொழி.

அவளை பார்த்ததுமே அவனுக்கு அப்படி ஒரு ஆத்திரம். அவ்வளவையும் உள்ளுக்குள் அடக்கிக் கொண்டு அவள் எதிரில் வந்து நின்றான்.

நெரிந்த அவன் புருவங்களும், இறுகிய முகமும், ஈட்டி பார்வையும்… மலையமான் தானா என்றிருந்தது அவளுக்கு. நிச்சயமாக அவனிடம் அந்த அந்நியனை அவள் எதிர்பார்க்கவில்லை.

“என்ன ஆச்சு உங்களுக்கு? ஏன் இப்படி இருக்கீங்க?” என்றாள் இறங்கிய குரலில்.

அவன் குனிந்து தன்னையும் தன் ஆடையையும் பார்த்துக் கொண்டான். பிறகு நிமிர்ந்து அவளை நேராக பார்த்து, “மாட்டுக்காரன் இப்படித்தான் இருப்பான். உனக்குத்தான் தெரியுமே!” என்றான்.

அவளுக்கு சுருக்கென்று குத்தியது. “நான் அதை மீன் பண்ணலன்னு உங்களுக்கு தெரியும்” என்றாள் அழுத்தமாக.

அவள் அப்படி அழுத்தமாக தன்னிடம் பேசுவதை வெறுத்தான் அவன். முன்பெல்லாம் அதை சாதாரணமாக எடுத்துக் கொண்டவனுக்கு இப்போது தன்னை அலட்சியப்படுத்தும் தொனி என்று தோன்றியது.

“என்ன விஷயம்? எதுக்கு இங்க வந்த?” என்றான் கடுப்புடன்.

“எதுக்கு வக்கீலை பார்க்க போனீங்க? கையெழுத்தெல்லாம் போட்டுக் கொடுத்தீங்களாம்!”

“நீ கேட்ட… நா கொடுத்துட்டேன். இன்னும் என்ன வேணும்?” – ஆவேசமாக கத்தினான். அவன் உயரம் கூட அரை அடி உயர்ந்துவிட்டது போல் தோன்றியது அவளுக்கு. சட்டென்று ஒரு அடி பின் வாங்கியவள், “எதுக்கு இப்போ கத்துறிங்க!” என்றாள் சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டு.

“நா இப்படித்தான். உனக்குத்தான் இதெல்லாம் பிடிக்காதுல்ல. கிளம்பு” என்று கூறிவிட்டு திரும்பி நடந்தான். அவன் பின்னாலேயே ஓடி வந்து அவனுக்கு எதிரில் வழியை மரித்துக் கொண்டு நின்றாள்.

“இப்படி பேசினா எப்படி? நா எப்போ இதெல்லாம் எனக்கு பிடிக்காதுன்னு சொன்னேன்! சும்மா நீங்களா எதையாவது சொல்லாதீங்க?” – பேசி கொண்டே சென்றவள் அவன் முகம் மாறிய விதத்தில் பேச்சை நிறுத்தினாள்.

“ப்ளீஸ்… அப்படி பார்க்காதீங்க…” என்று கெஞ்சுதலாக கூறியபடி அவன் கையை பிடித்தவள், தொடர்ந்து “அந்த வக்கீலை நான் பார்க்க போனது உண்மைதான். ஆனா அதெல்லாம் நாலஞ்சு மாசத்துக்கு முன்னாடி. அதுக்கு பிறகு தான் நாம சமாதானம் ஆகி சந்தோஷமா இருந்தோமே!” என்றாள்.

அவ்வளவுதான்… அடக்கி வைத்திருந்த கோபமெல்லாம் வெடித்துக் கொண்டு மேலெழ ஒரு கணம் கூட தேவைப்படவில்லை. கடைசி வார்த்தையை அவள் பேசி முடிப்பதற்குள் தன் கையை அவள் பிடியிலிருந்து உதறிக் கொண்டு, ஓங்கிய உயரத்தில் அவள் கன்னத்தில் ஒரு அறை விட்டான். தென்னைமர தூரில் சுருண்டு போய் விழுந்தாள் அவள்.

கண்ணெல்லாம் இருட்டிக் கொண்டு வந்தது… காதில் ஓவென்று இரைச்சல். முகம் முழுவதுமே தீப் பிடித்துக் கொண்டது போல் எரிந்தது. கரடு முரடான அந்த மரத்தின் வேரும் அவள் உடல் பாகங்களில் பலவற்றை பதம் பார்த்துவிட்டது.

சற்று நேரத்திற்கு அவளால் எதுவுமே செய்ய முடியவில்லை. நாள் முழுக்க உழைத்து மரத்துப் போயிருந்த அந்த கையால் அவன் அடித்த வேகத்திற்கு, திடகாத்திரமான ஆண் கூட கலங்கிப் போயிருப்பான். அவள் எம்மாத்திரம்!

கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கு நடந்துவிட்ட சம்பவத்தை கண்டு ஒரு கணம் திகைத்த வேலையாட்கள், பிறகு சுதாரித்துக் கொண்டு, “தம்பி தம்பி… என்ன தம்பி நீ…” என்று சத்தம் போட்டுக் கொண்டே ஓடி வந்து கனிமொழியை தூக்கினார்கள்.

வெறி பிடித்தவன் போல் அவளை உறுத்து விழித்துக் கொண்டிருந்தவன், “என்னைய பார்த்தா எப்படிடீ தெரியுது!” என்று சீறினான்.

‘நாம தான் சந்தோஷமா இருந்தோமே!’ என்கிற வார்த்தை அவனை முழு மிருகமாக மாற்றியிருந்தது.

“வக்கீலை பார்த்ததுதான் பழைய கதை… விளக்கம் சொல்லிட்ட! அன்னைக்கு பேசுனியே! மாட்டுக்காரன்.. மண்ணாங்கட்டின்னு! அந்த பேச்சுக்கெல்லாம் என்ன விளக்கம் சொல்ல போற! சந்தோஷமா இருந்தோம்னு சொல்ற! அவ்வளவு விஷத்தையும் மனசுல வச்சுக்கிட்டு எப்படிடீ சந்தோஷமா இருந்த! என்னைய என்ன முழு முட்டாள்னு நெனச்சுட்டியா!” என்று கத்தினான்.

மிரண்டு போனாள் கனிமொழி… இப்படி ஒரு ஆவேசத்தை அவனிடம் அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ‘அடித்துவிட்டானா! நம்மையா!’ என்கிற எண்ணமே வெகு தாமதமாகத்தான் அவள் மூளையில் உதித்தது. அதிர்ச்சியும் திகைப்புமாக அவன் என்ன பேசுகிறான் என்பதைக் கூட முழுமையாக அவளால் புரிந்துகொள்ள முடியவில்லை. உடல் வெடவெடவென்று நடுங்கியது. நாவெல்லாம் வறண்டு தொண்டை இறுகியது… அது வறட்சியினாலா அல்லது இறுக்கிப் பிடிக்கும் ஆத்திரத்தினாலா என்பதும் புலப்படவில்லை.

“போ தம்பி… புள்ள பயப்படுது… உடம்பெல்லாம் நடுங்குது…” என்று கனிமொழியை பிடித்திருந்த பெரியவர் கூற இன்னொருவன், “வாண்னே, வந்து உட்காரு” என்று மலையமானை இழுத்தான். அதற்குள் அங்கே வந்து சேர்ந்தார் நாராயணன்.

கனிமொழியின் நிலையைப் பார்த்து பதறிவிட்டார். ஐந்து விரலும் அவள் கன்னத்தில் பதிந்திருந்தது. உதட்டில் இரத்தம்… ஒரு பக்கம் காதிலிருந்த தோடு எங்கு போய் விழுந்ததோ தெரியவில்லை. அவள் அணிந்திருந்த ஆடையெல்லாம் சகதி…

“என்னம்மா! என்னம்மா ஆச்சு!” என்று பதறிக் கொண்டு அவளிடம் ஓடி வந்தார். அவரைப் பார்த்ததும் தான் அவள் கண்களில் கண்ணீர் வந்தது. காரணம் சொல்லாமல் தாரை தாரையாக கண்ணீர் வடித்தாள்.

“அடப்பாவி… பாவி… எப்படிடா உனக்கு இந்த புத்தி வந்துச்சு! பொம்பள புள்ளைகிட்ட கை நீட்டியிருக்க!” என்று மைத்துனனிடம் சீறினார். அவர்கள் இருவரும் இருந்த நிலையை பார்த்தாலே போதுமே… விளக்கம் வேறு வேண்டுமா என்ன! மலையமான் அவருக்கு எந்த பதிலும் சொல்லவில்லை. அவனுடைய பார்வை அவளிடம் மட்டுமே நிலைத்திருந்தது.

“உன் அக்கா புருஷன் உசத்தி… உன் ஃப்ரண்டோட புருஷன் உசத்தி… நான் மட்டம்… அப்படித்தானே பேசின! இப்போ இங்க எதுக்கு வந்த? உனக்கு பிடிச்ச மாதிரியான வாழ்க்கையை கொடுக்க துபாயிலேயும் லண்டனிலேயும் எவனாவது காத்துகிட்டு இருப்பான். அவனை தேடி போ… என்கிட்ட வராத” என்றான் வெறுப்புடன். பழுக்கக் காய்ச்சிய இரும்பு கம்பியை கையில் கொடுத்தது போல் துடித்துவிட்டாள் கனிமொழி.

அடக்க முடியாமல் அவள் குலுங்கி அழுவதைக் கண்டு பதறிய நாராயணன் மலையமானிடம் பாய்ந்தார். “டேய் டேய் டேய்… என்னடா பேசுற! பொம்பள புள்ளைகிட்ட பேசுற பேச்சா இது!” என்று அவனை அடக்க முற்பட்டார்.

அவரை ஒற்றை கையில் விளக்கித் தள்ளியவன், அவளிடம் நெருங்கி, “இதுவே நம்மளோட கடைசி சந்திப்பா இருக்கட்டும். அதுதான் நம்ம ரெண்டு பேருக்குமே நல்லது” என்றான்.

அவளால் பதில் சொல்ல முடியவில்லை. அவள் மீது அவன் சுமத்திய குற்றங்களெல்லாம் உண்மை தான் என்றாலும் அவளை எப்படி அவன் கைநீட்டி அடிக்கலாம்! அவனோடு சேர்ந்து வாழ வேண்டும் என்கிற எண்ணம் மலையளவு மனதில் இருந்தாலும், அந்த நிலையில் அவனிடம் இறங்கி பேசவோ… கெஞ்சுவோ… அவளுடைய தன்மானம் இடம் கொடுக்கவில்லை. தன்னை தாங்கிப் பிடித்திருந்தவர்களிடமிருந்து விலகி முகத்தை துடைத்துக் கொண்டு வண்டியை எடுத்தாள்.

“கனி.. கனி… நில்லும்மா” என்று அவளை பின்தொடர்ந்து சென்றார் நாராயணன். மணிக்கணக்காக மூச்சுவிடாமல் இருந்தவன் போல் மேல் மூச்சு வாங்கியபடி அங்கே கிடந்த கயிற்றுக் கட்டிலில் அமர்ந்தான் அவன்.




Comments are closed here.

You cannot copy content of this page