Share Us On
[Sassy_Social_Share]கனியமுதே! – 28
1053
0
அத்தியாயம் – 28
கனிமொழிக்கு காய்ச்சல் குறையவே இல்லை. முகத்தில் காயத்தோடு அலங்கோலமாக அவள் வீட்டுக்கு வந்து மூன்று நாட்களாகிவிட்டது. மகளை அந்த நிலையில் பார்த்ததும் கொதித்துப் போய்விட்டார் மணிமேகலை. அவளிடம் விபரம் கேட்டால் பதில் சொல்லாமல் அறையில் சென்று அடைந்துக் கொண்டாள். அவளை பின்தொடர்ந்து வந்த நாராயணன் தான், “மலையனுக்கும் கனிக்கும் கொஞ்சம் வாக்குவாதம் ஆயிட்டு. அவன் கொஞ்சம் கோவப்பட்டுட்டான்” என்றார் தயக்கத்துடன்.
அங்கப்பன் அப்படியே அமர்ந்துவிட்டார். அவர் முகத்தில் ஈ ஆடவில்லை. அவருக்கு மகள் மீது கோபம் தான். அவள் செய்தது எதையும் சரி என்று வாதாட நினைக்கவில்லை அவர். அதே சமயம் மருமகன் கை நீட்டியதையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதற்கெல்லாம் தான் தானே காரணம் என்று மனம் நொந்தார்.
ஊரார் பேச்சுக்கு பயந்து பொருந்தாத திருமணத்தை மகளுக்கு செய்துவைத்து, அவள் வாழ்க்கையை அழித்துவிட்டோமே என்று உடைந்து போய்விட்டார்.
கணவரின் நிலையைப் பார்த்து பயந்து போன மணிமேகலை வெளிப்படையாக மலையமானை திட்டி ஆர்ப்பாட்டம் செய்யவில்லையே தவிர மனதிற்குள் சாபமே கொடுத்தாள்.
நாராயணன் அவர்களுக்கு பலவிதமாக ஆறுதலும் சமாதானமும் சொல்லிவிட்டு கிளம்பினார். அன்று இரவே கனிமொழிக்கு காய்ச்சல் வந்துவிட்டது. என்ன மருந்து கொடுத்தும் சரியாகவில்லை. உடம்பில் பட்ட காயத்திற்கு மருந்து கொடுக்கலாம்… மனதில் பட்ட காயத்திற்கு என்ன மருந்து கொடுக்க முடியும்?
பெற்றோரிடம் சின்னதாக திட்டு கூட வாங்காதவள். அமைச்சர் வீட்டில் தந்தை தன்னிடம் கோபமாக பேசியதற்குத்தான் அன்று அவ்வளவு பதில் பேச்சு பேசினாள். அப்படிப்பட்டவளை கைநீட்டிவிட்டானே! அதுவும் வேலையாட்களுக்கு முன்பு… ஆற முடியவில்லை அவளுக்கு. அதைவிட அவன் பேசிய வார்த்தைகள் இன்னும் ரணமாக வலித்தது. அழுதே கரைந்தாள்.
அவனுக்கெல்லாம் இவ்வளவு மதிப்பு கொடுத்து அழ வேண்டுமா என்று மணிமேகலைக்கு கடுப்பாக இருந்தது. அவளுக்கும் முதலில் கொதிப்பாகத்தான் தான் இருந்தது. இப்போதும் அந்த கோபம் இருக்கிறது. ஆனால் கோபத்தை இப்படித்தானா காட்டுவது.! அழுது வடிந்து கொண்டு!
“கனி, எந்திருச்சு மூஞ்சியை கழுவிட்டு வேலையை பாரு… இப்படியே படுத்து அழுதுகிட்டு இருந்தா காய்ச்சல் எப்படி போகும்!” என்று மகளை அதட்டினாள்.
அதெல்லாம் கனிமொழிக்கு செவிடன் காதில் ஊதிய சங்குதான்… அவள் காய்ச்சலிலிருந்தும் கவலையிலிருந்தும் ஓரளவுக்கு தேறி வரவே ஒருவாரம் ஆகிவிட்டது. அதுவரை கல்லூரிக்கு கூட செல்லவில்லை. அன்று தான் நீண்ட விடுமுறைக்குப் பிறகு கல்லூரிக்கு கிளம்பினாள். கிளம்பும் போதே என்னவோ போல் இருந்தது. காய்ச்சலில் படுத்து எழுந்த உடம்பு.. சோர்வு இருக்கத்தானே செய்யும் என்று எண்ணி கொண்டு கல்லூரிக்குப் புறப்பட்டாள்.
எண்ணியது போலவே காலையில் இருந்த களைப்பு மாலை வீடு திரும்பும் போது இல்லை. சற்று தெம்பாகவே வீடு வந்து சேர்ந்தாள். ஆனால் முழுமையாக குணமாகிவிட்டாள் என்று சொல்ல முடியாது. தினமுமே காலை படுக்கையிலிருந்து எழும் போது சற்று சிரமமாகத்தான் இருந்தது. உறங்காமல் கழியும் இரவு விடியலை இனிமையாகவா கொடுக்கும் என்கிற எண்ணத்துடன் சிரமப்பட்டு எழுந்து கல்லூரிக்கு தயாராவாள்.
இப்படியே ஒரு மாதம் கழிந்துவிட்டது. இடையில் ஒரு முறை நாராயணனை பண்ணைக்கு அழைத்துப் பேசினார் அங்கப்பன். அன்று கனிமொழிக்கும் மலையமானுக்கும் என்னதான் பிரச்சனை நடந்தது என்று கேட்டார். உண்மையில் நாராயணனுக்கு நடந்த விபரம் முழுவதும் தெரியாதல்லவா… ஏதோ வாக்கு வாதம் என்பதுவரை தான் அவருக்கும் தெரிந்திருந்தது. அரசால் புரசலாக வேலையாட்களிடம் விசாரித்ததில் அவர்களுக்கும் தம்பதிகள் என்ன பேசிக் கொண்டார்கள் என்கிற முழு விபரம் தெரியவில்லை.
அங்கப்பனுக்கு நம்பிக்கை அற்றுப் போய்விட்டது. அன்று அமைச்சர் வீட்டில் மகள் கண்டபடி பேசிய போது அத்தனையையும் பொறுத்துக் கொண்டு சிலை போல நின்றவன், இப்போது கை நீட்டி அடித்திருக்கிறான் என்றால் என்ன அர்த்தம்! அன்று பேசியதை விடவும் மோசமாக ஏதோ பேசி அவனை அவமதித்திருக்கிறாள். அதுவும் அவனுடைய பண்ணைக்கே போய்… வேலையாட்களுக்கு முன்பாக! இனியும் இருவருக்கும் ஒத்துப் போகுமா! பெரியவர்கள் உட்கார்ந்து பேசி சமாதானம் செய்து மீண்டும் இருவரையும் சேர்த்து வைத்தாலும் அவர்கள் ஒத்து வாழ்வார்களா! ஒருவரை ஒருவர் கொத்திப் பிடுங்கி கொண்டு வாழும் வாழ்க்கையில் என்ன நிம்மதி இருக்கும்! – ஏதேதோ எண்ணி இருவருக்கும் சமாதானம் செய்யும் முயற்சியை பற்றி யோசிக்கவே தயங்கினார்.
கோபம்.. ஏக்கம்.. கவலை.. பயம்… என்று கனிமொழியின் நாட்கள் கழிந்து கொண்டிருந்தன. ‘என்னை எப்படி நீ ஒதுக்கலாம்… அடிக்கலாம்!’ என்கிற கோபம்… அவன் அருகாமைக்கான ஏக்கம்… அது கிடைக்காத கவலை… கடைசிவரை கிடைக்காமலே போய்விடுமோ என்கிற பயம்… எல்லாம் அவளை அலைக்கழித்தது. நிம்மதியான உறக்கமே இல்லை. தினமுமே அவனுடைய நினைவுகளும் கனவுகளும் அவளுடைய இரவுகளை மென்று விழுங்கி ஏப்பம் விட்டுக் கொண்டிருந்தன.
அந்த சமயத்தில்தான் அவள் தனக்குள் ஏதோ மாற்றத்தை உணர்ந்தாள். சட்டென்று மனதிற்குள் பரபரப்பு தோன்ற தேதியை கணக்கிட்டுப் பார்த்தாள். இதயத் துடிப்பு அதிகமானது. முதலில் சின்னதாக பயம்… பிறகு ‘இருக்குமா… இருக்குமா…’ என்கிற ஏக்கம். கல்லூரியிலிருந்து வரும் பொழுதே மெடிக்கல் ஷாப்பிற்கு சென்றுவிட்டு தான் வீட்டுக்கு வந்தாள். மனம் பரபரத்தது. உடனடியாக செய்ய வேண்டியதை செய்துவிட்டு ரிசல்ட்டுக்காக விழியாகலாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
எதிர்பார்த்தபடி இரண்டு கோடுகள் வந்ததை பார்த்ததும் மனதிலிருந்த பயமெல்லாம் வடிந்து அப்படி ஒரு ஆசுவாசம்… அமைதி…. நிம்மதி… வெகு நாட்கள் கழித்து நிம்மதியாக மூச்சுவிடுபவள் போல் நெஞ்சை பிடித்துக் கொண்டு வேக மூச்சுகளை உள்ளிழுத்து வெளியேற்றினாள்.
‘இப்ப வந்து கேளுடா டைவர்ஸு..!’ என்று மனதிற்குள் அகங்காரம் பொங்கியது. அதில் பேரானந்தம் கலந்திருந்தது. அவனை கட்டுப்படுத்திவிட்ட ஆனந்தம்…
உண்மையில் அது அவனை கட்டுப்படுத்திவிட்டதில் விளைந்த ஆனந்தமா அல்லது அவனோடு ஒன்று சேரப்போகும் ஆனந்தமா! அதை பகுத்துப் பார்க்கும் மனநிலை அப்போது அவளுக்கு இல்லை.
‘என்னைய வேணான்னு சொன்னேல்ல…! இப்போ உன் பிள்ளைக்காக என்கிட்ட கெஞ்ச போற பாரு…!’ என்று மனதோடு அவனிடம் சவால்விட்டாள். ஏனென்றே தெரியாமல் கண்களில் கண்ணீர் கசிந்தது. வெகு நேரம் அறையில் தனியாக அமர்ந்திருந்தாள். அந்த தனிமை அவளுக்கு வெகுவாக தேவைப்பட்டது. ஆனால் அதை கொடுக்கும் எண்ணம் மணிமேகலைக்கு இல்லை. சிரமப்பட்டு படியேறி மாடிக்கு மகளுடைய அறைக்கு வந்தார்.
“என்ன இங்கேயே உட்கார்ந்திருக்க? கீழ வந்து காபி குடி” என்றபடி அவளுக்கு அருகில் அவநதவர், அவள் கையில் இருந்த பொருளை பார்த்துவிட்டு, “என்னது இது!” என்றார் பதட்டத்துடன். என்னவென்று அவருக்கு தெரிந்துவிட்டது.
“பாசிட்டிவ்” என்றாள் மகள் கையில் இருந்த ப்ரங்னன்ஸி கிட்டை காட்டி.
“என்னடி சொல்ற!” அவர் கேட்ட விதத்திலேயே அந்த செய்தி அவருக்கு உவப்பானதாக இல்லை என்பதை புரிந்துக் கொண்ட மகள், “ஏம்மா?” என்றாள்.
“இப்போ இருக்க பிரச்சனையில் இது எதுக்குடி இப்போ?” என்றார் வெறுப்புடன்.
கனிமொழிக்கு பதில் சொல்ல முடியவில்லை. முகம் வாட தலை குனிந்துக் கொண்டாள். மகளுடைய முகம் வாடும் போதுதான் அதற்கு முன் அவள் முகத்தில் இருந்தது மகிழ்ச்சி என்பதை உணர்ந்தவர், அவளை குழப்பத்துடன் பார்த்தார்.
“என்கிட்ட உங்க எல்லாருக்குமே எப்பவும் ஓரவஞ்சனைதான்… கீர்த்திக்குன்னா ஒரு மாதிரி… எனக்குன்னா வேற மாதிரி” என்று முணுமுணுத்தாள் கனிமொழி.
அதிர்ந்து போன மணிமேகலை, “கனி! ஏண்டி இப்படி பேசுற” என்றார் மனத்தாங்களுடன்.
“கீர்த்தி கன்சீவ் ஆனப்ப மட்டும் பால் பாயசம் வச்சு சந்தோஷமா கொண்டாடுனீங்க. இப்போ எனக்கு மட்டும் மூஞ்சிய தூக்கிக்கிற? என் பிள்ளை என்ன மட்டமா?” என்றாள் மகள் கோபத்துடன்.
ஆம்… கீர்த்தியும் சமீபத்தில் தான் கருத்தரித்திருந்தாள். தமைக்கைக்காக மகிழ்ந்து கொண்டாடியவர்கள் இப்போது தனக்கு என்று வரும் போது மட்டும் வேறு மாதிரி நடந்துகொள்கிறார்களே என்றிருந்தது அவளுக்கு.
“கீர்த்தி விஷயமும் உன் விஷயமும் ஒண்ணா? அவ புருஷன் என்னைக்காவது அவளை அதிர்ந்து பேசியிருக்காரா? ஆனா இவன்…? உன்ன கை நீட்டி அடிச்சிருக்கான். அவன் பிள்ளைக்காக நா சந்தோஷப்படணுமா?” – தாய் எரிச்சலை காட்டினார்.
கனிமொழிக்கு முசு முசுவென்று கோபம் பொத்துக் கொண்டு வந்தது. “அது எங்க விஷயம். நீ அவரை அவன் இவன்னு பேசாத…” – நுனிநாசி சிவந்து விடைக்க ஆத்திரத்துடன் கூறினாள்.
மணிமேகலைக்கு ஒன்றுமே புரியவில்லை. ‘அந்த காட்டுப்பய இவள அடிச்சு மூஞ்சியை உடைச்சு அனுப்பி வச்சான். நா அவனை, அவன்-இவன்னு கூப்பிடக் கூடாதாமா!’ – பற்களை நறநறத்தார்.
ஆனாலும் அதற்கு மேல் அவரால் மக்களிடம் வாக்குவாதம் செய்ய முடியவில்லை. யோசனையுடன் அமர்ந்துவிட்டார்.
கணவனை பிரிவதில் கனிமொழிக்கு விருப்பம் துளியும் இல்லை என்பது தெளிவாக புரிந்துவிட்டது. அதோடு இப்போது குழந்தையும் உண்டாகிவிட்டது என்பதால் இனி அவர்களை சேர்த்து வைப்பது தான் முறை.
ஆனால் இனியும் மகளை அந்த ஓட்டை வீட்டில் குடித்தனம் பண்ண விடக்கூடாது. அவர்கள் வசதியாக வாழ கட்டாயம் வழி செய்தாக வேண்டும். இப்போதுதான் குழந்தை வந்துவிட்டதே..! பிள்ளைக்காக அவனும் இறங்கி வந்துதானே ஆக வேண்டும்! என்றெல்லாம் கணக்கு போட்டுக் கொண்டு மகளை ஏறிட்டார்.
“நாளைக்கு போயி டாக்டரை பார்ப்போம். இப்போ அப்பாவுக்கு போன் பண்ணி வர சொல்றேன். அவர்கிட்ட பேசி அவங்க வீட்ல போயி பேச சொல்லுவோம். உன் புருஷன் வந்து கூப்பிட்ட பிறகு நீ அங்க போனா போதும். போறதுக்கு முன்னாடி, வீடு கட்ட மனை போட்டாகணும். இப்பவே எல்லாத்தையும் பேசி முடிச்சுக்கணும். எதையும் பேசாம நீபாட்டுக்கு மூட்டையை கட்டிக்கிட்டு கிளம்பிடக் கூடாது” என்று மகளை கண்டித்துவிட்டு கீழே இறங்கிச் சென்று அலைய்ப்பேசியை எடுத்து கணவனுக்கு விபரம் கூறினார்.
விஷயத்தை கேட்டதுமே கோடி ரூபாயை கொட்டிக் கொடுத்தது போல் இருந்து அங்கப்பனுக்கு. “அப்படியா சொல்ற! நல்லா தெரியுமா? அதெல்லாம் வீட்லேயே எப்படி தெரியும்? புள்ளையை பார்த்தா எதுவும் வித்தியாசமா தெரியலையே!” என்று ஆயிரம் சந்தேகங்கள் கேட்டார். பிறகு மகளுடைய மனநிலையை பற்றி கேட்டார்.
மனைவியிடமிருந்து மகளை பற்றிய விபரங்களை தெரிந்துக் கொண்டவர் இரவு வீட்டுக்கு கிளம்பும் போது சம்பந்தி வீட்டுக்கு வண்டியை விட்டார்.
வீட்டில் அலமேலு மட்டும் தான் இருந்தார். அவரை பார்த்து விஷயத்தை சொல்லிவிட்டு, மலையமானிடம் பேசி அவனை சற்று சாந்தப்படுத்தும் படி கூறினார். நாளை வந்து அவனை சந்திப்பதாகவும் கூறிவிட்டு விடைபெற்றார்.
அலமேலுவுக்கு தலைகால் புரியாத மகிழ்ச்சி. ஊரில் உள்ள தெய்வங்களுக்கெல்லாம் ஆயிரமாயிரம் நன்றி கூறிவிட்டு, மகள் வீட்டுக்கு ஓட்டம் பிடித்தார். தன் மகிழ்ச்சியை உடனே யாரிடமாவது சொல்லி பூரிக்க வேண்டும் என்றிருந்தது அவருக்கு. குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தெரிந்து கடைசியாக மலையமானின் காதை எட்டியது விஷயம்.
Comments are closed here.