கனியமுதே! – 29
947
0
அத்தியாயம் – 29
மலையமான் இப்போதெல்லாம் இரவில் வீட்டுக்கு வருவதில்லை. பண்ணையிலேயே படுத்துவிட்டு, மறுநாள் காலை நேர வேலைகளையெல்லாம் முடித்துவிட்டு பதினோரு மணிக்கு மேல் தான் வீட்டுக்கு வருவான். வந்ததும் குளித்து சாப்பிட்டுவிட்டு சற்று நேரம் படுத்து எழுந்து மீண்டும் பண்ணைக்கு செல்வான். கனிமொழியோடு பிரச்னை வந்த பிறகு இதுதான் அவனுடைய புது வழக்கம்.
அன்றும் அப்படிதான்… காலையும் அல்லாத மதியமும் அல்லாத அந்த இடைப்பட்ட நேரத்தில் வீட்டுக்கு வந்தான். தாமரையும் அப்போது தாய் வீட்டில் தான் இருந்தாள். முதல்நாள் நல்ல சேதியோடு மகள் வீட்டுக்கு போன தாய் அவளையும் கையேடு அழைத்துக் கொண்டு வந்திருந்தார். மகனை சமாதானம் செய்ய வேண்டுமே! இப்போதெல்லாம் அவன் அலமேலுவின் முகத்தைக் கூட பார்த்து பேசுவதில்லை. கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் சுருக்கமாக பதில் வரும். அதற்கு மேல் அவனிடம் நெருங்க முடிவதில்லை. அதனால் தான் அவருக்கு மகளின் துணை தேவைப்பட்டது.
மலையமான் குளித்துவிட்டு வந்து சாப்பாட்டில் அமரும் வரை இருவரும் எதுவும் பேசவில்லை. அவன் சாப்பிட ஆரம்பித்து சற்று நேரத்திற்குப் பிறகு அலமேலுதான் மெல்ல வாய் திறந்தார்.
“நேத்து உன் மாமனார் வந்திருந்தாருப்பா…” என்றார்.
அவனிடம் எந்த பிரதிபலிப்பும் இல்லை. அவர் பேசியது காதில் விழுந்ததா என்றே தெரியாத அளவுக்கு அவன்பாட்டுக்கு சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.
அலமேலுவும் தாமரையும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
“கனி உண்டாயிருக்காலாம்” – இப்போது தாமரை சற்று அழுத்தமான குரலில் சொன்னாள். கையில் எடுத்த உணவை வாயில் வைக்கப் போனவன் அப்படியே உறைந்தான். முகமும் உடலும் கல்லாய் இருகிவிட்டது. ஒரு கணம் தான்… அதற்குள் சுதாரித்துக் கொண்டான். யாரையும் நிமிர்ந்து பார்க்கவும் இல்லை… பதில் சொல்லவும் இல்லை.. மீண்டும் உணவில் கவனமானான்.
பெண்கள் இருவரும் ஆச்சரியப்பட்டுப் போனார்கள். எவ்வளவு பெரிய விஷயம்! இவன் என்ன எதுவுமே சொல்லாமல் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான் என்று…
“மலையா, இனி கனி அங்க இருக்கக் கூடாதுப்பா… போயி கூட்டிட்டு வந்துடு” – மனம் கோணாமல் மகனுக்கு அறிவுரை கூறினார் அலமேலு.
சாப்பிட்டு முடித்துவிட்டு எழுந்து கை கழுவியவன், தாயை நிமிர்ந்து பார்த்து, “இப்ப இல்ல… இனி எப்பவுமே அவ இங்க வர மாட்டா” என்றான் உறுதியான குரலில்.
வாயடைத்துப் போனார் அலமேலு. தாமரைக்கு சுர்ரென்று கோபம் வந்தது. ‘அவ ராங்கி புடிச்சவதான்.. அதுக்காக அப்படியே விட்டுட முடியுமா! அதுவும் குழந்தைன்னு ஆன பிறகு!’ என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டவள், “கல்யாணம்னா ஆயிரம் நல்லது கெட்டது இருக்கும்… எல்லாத்துக்கும் இப்படி அத்துக்கிட்டு போகணும்ன்னா ஊர்ல குடும்பத்தையே பார்க்க முடியாது. எல்லாரும் தனித்தனியா வீடு கட்டிக்கிட்டு போக வேண்டியது தான்” என்று நொடித்தாள்.
அதையெல்லாம் அவன் காதில் போட்டுக்கொள்ளவில்லை. சாப்பிட்டுவிட்டு சற்று நேரம் படுப்பவன் அன்று அதை கூட செய்யாமல் உடனே சட்டையை எடுத்து மாட்டிக் கொண்டு பண்ணைக்கு கிளம்பிவிட்டான்.
“என்னம்மா இவன்… இப்படி மாறி போயிட்டான்! புருஷன் பொண்டாட்டி சண்டை யாருக்கு வரல.. ஏன் இப்படி பண்றான்!” என்று தாயிடம் புலம்பினாள் தாமரை.
அவன் பண்ணைக்கு போன சற்று நேரத்திலெல்லாம் அங்கப்பன் வீட்டுக்கு வந்தார். மீண்டும் அலமேலுவிடம் பேசிவிட்டு மலையமான் மனநிலை பற்றி விசாரித்தார். தான் அவனிடம் பேசுவதற்காகத்தான் வந்ததாகவும் சொன்னார்.
அலமேலு சங்கடத்துடன், “அவன் இன்னமும் கோவமா தான் இருக்கான்” என்றார் சற்று இழுத்து.
அங்கப்பனுக்கு எதுவும் பேச முடியவில்லை. இரண்டு மூன்று நாட்கள் கழித்து நாராயணனை அழைத்துப் பேசினார். அவரும் மலையமானிடம் பேசிப் பார்த்துவிட்டு கையை விரித்தார். வேறு வழியில்லாமல் கடைசியாக அவரே அவனுடைய பண்ணைக்கு நேரில் சென்று அவனை சந்தித்தார்.
முகத்தில் எந்த வேறுபாட்டையும் காட்டாமல் அவரை நல்லவிதமாக வரவேற்று நாற்காலி போட்டு அமரச் சொன்னான். அதுவரை அவருக்கு சந்தோஷம் தான்… ஆனால் அதற்கு பிறகு அவனுடைய பேச்சு அவருக்கு உவப்பாக இல்லை. மாமா என்கிற வார்த்தையை முழுவதுமாக தவிர்த்துப் பேசினான்.
‘வாங்க… உட்காருங்க… என்ன சாப்பிடறிங்க?’ – இப்படி…
அவருக்கு சங்கடமாக இருந்தது. அவன் எந்த அளவுக்கு ‘மாமா’வை தவிர்த்தானோ, அதைவிட அதிகமாக இவர் ‘மாப்பிள்ளை’யை பயன்படுத்தினார்.
‘இருக்கட்டும் மாப்பிள்ளை… நீங்க உட்காருங்க மாப்பிள்ளை…’ – இப்படி
இருவருடைய கண்ணாமூச்சி ஆட்டமும் கனிமொழியின் பெயரை எடுத்ததும் முடிவுக்கு வந்தது.
“கனி உண்டாயிருக்கு மாப்ள… போன வாரம் வீட்டுக்கு வந்து அம்மாகிட்ட சொல்லிட்டு போனேன்” என்றார் தயக்கத்துடன்.
அவன் பதில் சொல்லாமல் பார்வையை விலக்கிக் கொண்டான்.
“அது சின்ன புள்ள… என்ன தப்பு பண்ணியிருந்தாலும் மனசுல வச்சுக்காம மன்னிச்சுக்கங்க மாப்ள.. என் பெண்ணுக்காக நா மன்னிப்பு கேட்கறேன்” என்றார் கௌரவத்தையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு.
“என்னைய தர்ம சங்கடப்படுத்தாதிங்க” என்றான் மலையமான்.
“கனிய கூப்பிட்டுக்கங்க மாப்ள.. அதுக்கும் இங்க வரணும்னு தான் இருக்கு” என்றார்.
அவன் அதற்கு பதிலே சொல்லவில்லை. “இந்த நேரத்துல அது மனசு சங்கடப்படக் கூடாது மாப்ள” என்றார் மேலும் கெஞ்சுதலாக.
அப்போது அவரை நேரிட்டுப் பார்த்தவன், “அப்படின்னா, உங்க பொண்ணு உங்க வீட்ல இருக்கறது தான் நல்லது. அங்க தான் எல்லா வசதியும் இருக்கு. நான்…” என்று ஏதோ சொல்ல வந்தவன் சட்டென்று நிறுத்திக் கொண்டான்.
திகைப்புடன் அவனைப் பார்த்தவர், “இப்படி பேசினா எப்படி மாப்ள? கனிக்காக இல்லைன்னாலும் குழந்தைக்காக பாருங்க மாப்ள” என்றார்.
“உங்க முகத்துக்காகன்னு நெனச்சு ஒரு தரம் தப்புப் பண்ணிட்டேன். அதே தப்ப இன்னொரு தரம் பண்ண கூடாதுன்னு நினைக்கிறேன். ஊருக்காக.. உறவுக்காக குடும்பத்துக்காக குழந்தைக்காகன்னு ஆயிரம் காரணத்தை சொல்லி நீங்க ஒன்னு சேர்த்து வச்சாலும்… மனசு இனங்கலன்னா ஒருத்தருக்கொருத்தர் கசந்து வாழனும். அப்படி ஒரு வாழ்க்க தேவையில்லைங்க” என்று நிறுத்தியவன், ஒரு சின்ன தயக்கத்திற்குப் பிறகு, “உடைஞ்ச சங்கு என்னைக்கும் ஒன்னு சேராது. விட்டுடுங்க” என்றான். நங்கூரமிட்டது போல் வெகு அழுத்தமாக இருந்தது அந்த குரல்.
அங்கப்பனுக்கு ஒரு கணம் உள்ளம் குலுங்கிவிட்டது. ஆனால் சமாளித்துக் கொண்டார்.
‘அவனுடைய மன கஷ்ட்டம் அவனை அப்படி பேச வைக்கிறது’ என்று தன்னைத்தானே தேற்றி கொண்டவர், “உங்க கோவம் எனக்கு புரியுது மாப்ள… இப்ப எந்த முடிவும் எடுக்க வேண்டாம். கொஞ்ச நாள் போகட்டும்” என்று கூறிவிட்டு கிளம்பினார்.
மருமகனிடம் சொன்னபடியே ஓரிரு மாதங்கள் அமைதியாக இருந்தார். அதன் பிறகு குடும்பத்தில் இருப்பவர்களிடம் தொடர்ந்து பேசி அவனுக்கு அழுத்தம் கொடுத்தார். ஆனால் அவன் தன்னுடைய பிடிவாதத்திலிருந்து இறங்குவதாக இல்லை.
அடுத்து உறவினர்கள் நண்பர்கள் என்று அடுத்த கட்ட முயற்சியில் இறங்கினார். ஊரில் உள்ள பெரியவர்கள், உறவில் உள்ள மூத்தவர்கள் என்று சமாதானத்திற்கு கூட்டத்தை அனுப்பினார். எதுவும் எடுபடவில்லை. பஞ்சாயத்துக்கு வந்தவர்கள் அவர்களை எப்படியாவது வாழ வைத்துவிட வேண்டுமே என்கிற பேராவலுடன் அவனை தொடர்ந்து துரத்தினார்கள். அவன் அசைந்து கொடுக்கவில்லை.
இப்படியொரு கல் மனிதன் அவனுக்குள் இருப்பான் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. உண்மையில் மலையமானே அதை அறிந்திருக்கவில்லை. அவனுக்கும் அது ஆச்சரியம் தான்.
முதல் நாள் குழந்தையை பற்றி அறிந்த ஒரு கணம் அவனுக்குள் மின்சாரம் பாய்ந்தது போல் ஒருவித அதிர்வு ஏற்பட்டது என்னவோ உண்மைதான். ஆனால் அதற்கு பிறகு அவனுக்குள் எந்தவிதமான சலனமும் இல்லை. அந்த குழந்தையை பற்றி எந்த ஒரு கற்பனையோ.. ஆசையோ.. பாசமோ… எதுவுமே இல்லை. மனம் மரத்துப் போய்விட்டது போல் எதையுமே அவனால் உணர முடியவில்லை.
யார் யாரோ என்னென்னவோ சொல்லி அவனை சமாதானம் செய்ய முயற்சி செய்தார்கள். அவனுடைய பிடிவாதத்தை வியப்புடன் பார்த்து, சமயத்தில் அவனை திட்ட கூட செய்தார்கள். ஆனால் அவனுக்கு எதுவும் தோன்றவில்லை. அவள் வேண்டாம் என்பதை தவிர…
கனிமொழி வேலையை விட்டுவிட்டு வீட்டில் அடைந்துக் கிடந்தாள். ஆரம்பத்தில் இல்லாத உடல் உபாதைகள் இப்போது அவளை புரட்டிப் போட்டுக் கொண்டிருந்தன. போதா குறைக்கு அவனிடமிருந்து வேறு எந்த தகவலும் இல்லை.
குழந்தை விஷயத்தைப் பற்றி தெரிந்ததும் ஓடி வந்துவிடுவான் என்று இவள் எதிர்பார்த்திருக்க மாதங்கள் இரண்டு உருண்டோடிய பிறகும் அவன் வராததில் மாளா கவலை அவளுக்கு. பிள்ளை என்று தெரிந்தால் பேயும் இறங்கிவிடாதா! இவன் எப்படி இவ்வளவு பிடிவாதமாக இருக்கிறான்! ஒருவேளை அவனுக்கு இன்னும் விஷயமே தெரியவில்லையோ! அப்பா சொல்லி அனுப்பிய செய்தி அவனை சென்று சேரவே இல்லையோ! – அவள் மனம் தவித்தது. இரவு படுத்திருந்தவள் எழுந்துச் சென்று அம்மாவை எழுப்பி அது பற்றி கேட்டாள்.
“அம்மா, அவருக்கு இன்னும் நியூஸ் போகவே இல்ல போல. இல்லன்னா எப்படி இவ்வளவு நாள் வராம இருப்பாரு!” என்றாள் தவிப்புடன்.
“இதுக்குதான் என்னைய இப்போ எழுப்புனியா! இவ்வளவு நேரம் தூங்காம என்ன பண்ணிக்கிட்டு இருந்த?” – அம்மா கடிந்து கொண்டார்.
“தூக்கம் வரமாட்டேங்குது ம்மா”
“உன் மூஞ்சியை போயி கண்ணாடில பாரு, எப்படி இருக்குன்னு! கொஞ்சமாவது உடம்பு மேல அக்கறை இருக்கா உனக்கு? இதுல ஒரு குழந்தை வேற வர போகுது! அதை எப்படி பார்ப்ப?” – மகளுடைய கேள்விக்கு பதில் சொல்லாமல் பேச்சின் திசையை வேறு பக்கம் திரும்புவதில் தீவிரமாக இருந்தார் மணிமேகலை.
காரணம் மகளுடைய போக்கு அவருக்கு கவலையை கொடுத்திருந்தது. தினமும் இரவில் உறக்கம் வராமல் தவிக்கும் மகளை பார்த்துப் பார்த்து நொந்து போனார். அந்த பட்டிக்காட்டானுக்காக இவள் இவ்வளவு ஏங்குவாள் என்று அவர் கனவிலும் நினைத்ததில்லை. ஆனால் திருப்பங்கள் நிறைந்ததுதானே வாழ்க்கை!
“நீங்க பார்த்த மாப்பிள்ளை தானே! உங்களால தானே இந்த பிரச்சனையும் வந்தது. எப்படியாவது சரி பண்ணுங்க” என்று கணவனை தூண்டிக் கொண்டே இருந்தார். அவரும் முயற்சி செய்து கொண்டே இருந்தார். நாட்கள் தான் சிட்டாக பறந்து கொண்டிருந்தனவே ஒழிய அவன் மனம் மாறியபாடில்லை. அதற்கு பிறகுதான் கனிமொழி அந்த முடிவை எடுத்தாள்.
Comments are closed here.