கனியமுதே! – 30
1057
0
அத்தியாயம் – 30
அப்போது கனிமொழிக்கு ஐந்தாம் மாதம் துவக்கம்… நாளுக்கு நாள் மெலிந்துக் கொண்டிருந்தவளுக்கு வயிறே தெரியவில்லை. மகள் இப்படி உடைந்து உருகுலைந்துக் கொண்டிருப்பதை சகிக்காமல், சீற்றம் கொண்ட புலியாக ஒருநாள் கணவனிடம் பாய்ந்தார் மணிமேகலை.
“உங்களாலதான் எல்லாம்… இந்த கல்யாணம் சரிப்பட்டு வராதுன்னு அன்னைக்கே சொன்னேன். கேட்டிங்களா! அன்னைக்கு அந்த கல்யாணத்தையும் நீங்கதான் பண்ணி வச்சீங்க… இன்னைக்கு இந்த பிரச்சனையையும் நீங்க தான் இழுத்து வச்சிருக்கீங்க…” என்று கத்தினார். அன்று கணவன் மனைவி இருவருக்கும் பெரும் சண்டையாகிவிட்டது.
கனிமொழி பெரும் மன அழுத்தத்தில் இருந்தாள். பிரேக்கிங் பாய்ண்ட் என்பார்களே… அப்படி ஒரு விளிம்பு நிலையில் இருந்தது அவளுடைய மனநிலை. விறல் நுனியால் தொடுவது போல் சின்னதாக யாராவது ஏதாவது சொன்னாலே உடைந்து ஊற்றாக போய்விடும் நிலையில் இருந்தவளுக்கு அன்று பெற்றோர் போட்டுக் கொண்ட சண்டை பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டது. மூன்று நாட்கள் தொடர்ந்து உறங்காமல் தவித்தாள். நான்காவது நாள் தான் அந்த முடிவுக்கு வந்தாள்.
‘சாட்சிக்காரன் கால்ல விழறதுக்கு பதிலா சண்டைக்காரன் கால்லையே விழலாம்…’ – அந்த முடிவை எடுப்பது ஒன்றும் அவ்வளவு சுலபமாக இல்லை.. அதுவும் கனிமொழிக்கு… பலநாள் போராட்டம்.. மிகப்பெரிய மன அழுத்தம்… நெருக்கடி… இதெல்லாம் தான் அவளை இறங்கி வர செய்தது.
“ம்மா… நா அவரை போயி பார்த்துட்டு வரேன்” என்று மகள் சொன்ன போது மணிமேகலைக்கு வெறுப்பாகத்தான் இருந்தது. அந்த காட்டுப்பயலிடம் தன் மகள் இறங்கி போவதா என்று… ஆனாலும் அவருக்கு வேறு வழி இல்லை… துளி அளவு கூட விருப்பம் இல்லை என்றாலும் ட்ரைவரை அழைத்து வண்டியை எடுக்க சொன்னார்.
கார் வீட்டுப்பக்கம் திரும்பிய போது, “பண்ணைக்கு போங்கண்ணா… இந்த நேரத்துல அங்கதான் இருப்பாரு” என்று அவனுடைய இருப்பிடத்தை சரியாக கணித்து சொன்னவள், காரை தோப்புக்கு வெளியிலேயே நிறுத்த சொல்லிவிட்டு இறங்கி நடந்து பண்ணைக்கு சென்றாள்.
அவளை பார்த்ததுமே வேலையாட்களுக்கு ஆச்சர்யம்… “வாம்மா.. வாம்மா.. ” என்று ஆர்பாட்டமாக வரவேற்று நலம் விசாரித்துவிட்டு பின்பக்கம் மீன் குளத்தில் நின்று கொண்டிருந்த மலையமானுக்கு செய்தி சொல்ல ஓடினார்கள்.
அவர்களை தடுத்துவிட்டு தானே அவனை தேடி மீன் குளத்துப்பக்கம் சென்றாள்.
பள்ளத்தில் இறங்கி மீன்களுக்கு தீனி வைத்துவிட்டு மேலே ஏறியவன் அவளை அங்கு சற்றும் எதிர்பார்க்கவில்லை. சட்டென்று திகைத்து நின்றுவிட்டான். அழுந்த மூடிய உதடுகளை தவிர முகத்தில் எந்த உணர்வும் இல்லை.
அவனை நேருக்கு நேர் பார்க்கும் வரை இருந்த தைரியம் இப்போது எங்கு போனதென்றே தெரியவில்லை கனிமொழிக்கு. அடிவயிற்றிலிருந்து அலை போல் உணர்வுகள் பொங்கி எழுந்து நெஞ்செல்லாம் நிறைந்துவிட திணறிப் போய் நின்றாள்.
அவன் தன்னை வரவேற்று குசலம் விசாரிப்பான் என்றெல்லாம் அவள் நினைக்கவில்லை. ஆனால் ‘எதுக்கு இங்க வந்த? என்ன வேணும்?’ என்று கோபத்தை காட்டியேனும் அவளிடம் பேசுவான் என்று நினைத்தாள். ஆனால் அவனோ பாறை கூட தோற்றுவிடும் அளவுக்கு இறுகி போய் நின்றான்.
உயிரே போனாலும் இவன் எதிரில் மட்டும் ஒரு சொட்டு கண்ணீர் விட்டுவிடக் கூடாது என்கிற வைராக்கியம் அவளுக்குள் பிறந்தது. பொங்கிப் பொங்கி மேலெழும் ஆத்திரத்தை விழுங்கி கொண்டு, லேசாக மேடிட்டிருந்த தன் அடிவயிறை தொட்டு, “அஞ்சு மாசம் ஆயிடிச்சு. அப்படி என்ன நா பண்ணிட்டேன்… திரும்பிக் கூட பார்க்காத அளவுக்கு?” என்றாள்.
ரெண்டு வார்த்தை கோர்வையாக பேசுவதற்குள் குரல் பிசுறுதட்டி அவளை காட்டிக் கொடுக்க முயன்றது. பிடிவாதமாக கட்டுப்படுத்திக் கொண்டு அவன் கண்களுக்குள், தவறவிட்ட எதையோ தேடுவது போல் கூர்ந்து பார்த்தாள்.
மலையமானிடம் சலனம் இல்லை. அவளுடைய கலங்கிய முகம்.. கரகரத்த குரல்.. மேடிட்ட வயிறு… எதுவுமே அவன் கல் மனதை கரைக்கவில்லை. உணர்வுகளற்ற வெற்று பார்வையை மட்டும் அவளுக்கு பதிலாக கொடுத்துவிட்டு அங்கிருந்து விலக எத்தனித்தான்.
“நீங்க பதில் சொல்லலன்னானா இங்கிருந்து போக மாட்டேன்” – ஆத்திரத்துடன் ஓங்கி ஒலித்த அவள் குரல் அவனை தடுத்து நிறுத்த நின்று அவளை திரும்பிப் பார்த்தான். கோபத்தின் சாயல் தெரிந்தது அவன் கண்களில்.
“நீ அன்னைக்கு பேசினது எல்லாம் வெறும் வார்த்தை இல்ல. எல்லாமே உண்மை… அந்த உண்மை உன் நெஞ்ச உருத்திக்கிட்டே இருக்கு. உறுத்தலோட… இதையெல்லாம் சகிச்சுக்கிட்டு நீ என்கூட வாழணும்னு அவசியம் இல்ல” என்றான் தன் பண்ணையை சுட்டிக்காட்டி.
“என்ன உறுத்தல்? எதை சகிச்சுக்கிட்டு வாழறாங்க? எல்லாத்தையும் நீங்களே முடிவு பண்ணிடுவீங்களா? அன்னைக்கு நான் பேசினது எல்லாம் கோவத்துல பேசினது. அதுக்கெல்லாம் அர்த்தமே இல்ல…”
“என்னோட அம்மாவை என்னைக்காவது நீ அத்தைன்னு சொல்லியிருக்கியா? இன்னைக்கு… இந்த நிமிஷம் வரைக்கும் என்னோட குடும்பத்துல உள்ளவங்கள நீ உறவு சொல்லி கூப்பிட்டது இல்ல. உன்னால முடியல… மனசுல இருக்கது தானே வார்த்தையா வரும்! அன்னைக்கு நீ பேசின அத்தனையும் உன் மனசுலேருந்து பேசினது” என்றான் கடுமையாக.
திகைத்துப் போனாள் கனிமொழி. ஓரிரு நிமிடங்களுக்கு அவளால் எதுவுமே பேச முடியவில்லை. உண்மை சுட்டது… ஆம், மலையமானை ஏற்று கொண்ட அளவுக்கு அவனுடைய குடும்பத்தினரை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர்களை தன்னுடைய உறவாக அவள் ஒருமுறை கூட நினைக்கவில்லை. அதை அவன் கண்டுபிடித்து சொல்லிவிட்ட அதிர்ச்சியில் வாயடைத்து நின்றவள், “நா… நா மாத்திக்கிறேன்…” என்றாள் மெல்லிய குரலில்.
அவன் முகம் ஜிவு ஜிவுவென்று சிவந்து கடுத்தது. “உன்கிட்ட நா கேட்டனா? பிச்சையா போடுற எனக்கு? அப்படி ஒன்னும் நீ கஷ்ட்டப்பட்டு உன்ன மாத்திக்க தேவையில்லை. நீ நீயாவே இரு… என்னை என் வழில போக விடு” என்றான் சீற்றத்துடன்.
“அப்போ இந்த… இந்த குழந்தைக்கு… என்ன பதில் சொல்ல போறீங்க?” – கோர்வையாக பேச முடியவில்லை அவளால். ‘தெருவில் விடுவது போல் அவளை அப்படியே விட்டுவிட்டு கைகழுவ முடிவே செய்துவிட்டானா!’ – இதயத் துடிப்பின் வேகம் எக்குத்தப்பாக எகிறியிருக்க உடம்பெல்லாம் நடுங்கியது.
மலையமான் நிதானமாக பதில் சொன்னான். “விதியோ… விபத்தோ… எப்படியோ வந்துடுச்சு… வேணுன்னா நீ வளர்த்துக்க. இல்ல… இந்த பட்டிக்காட்டானோட பிள்ளையை வளர்க்க பிடிக்கலைன்னா கொடுத்துட்டு… நான் வளர்த்துக்கறேன். ஆனா, எப்படி இருந்தாலும் இந்த பிள்ளைக்கு அப்பா… இல்ல அம்மா.. ரெண்டு பேர்ல ஒருத்தர் மட்டும் தான் இருக்க முடியும்” என்றான் தீர்மானமாக.
நொறுங்கிப் போய்விட்டாள் கனிமொழி… ‘விதியோ… விபத்தோவா! எப்படியோ வந்துவிட்டதா! பாவி!’ என்று குமுறியது அவள் உள்ளம். அவ்வளவு நேரமும் அடக்கி வைத்திருந்த கண்ணீர் கடகடவென்று கொட்டிவிட்டது. தாங்கவே முடியவில்லை அவளுக்கு. பிள்ளையை கூட வெறுக்கிறவனிடம் அப்படி வந்து கெஞ்சிக் கொண்டிருக்க வேண்டுமா என்கிற வீம்பு மேலெழ, புறங்கையால் கன்னத்தை துடைத்துக்கொண்டு வேகமாக அங்கிருந்து விலகி நடந்தாள்.
அடுத்து வந்த நாட்களில் மீண்டும் படுக்கையில் சாய்ந்துவிட்டாள். அவளை தேற்றி எடுக்கவே பெரும் பாடாகிவிட்டது மணிமேகலைக்கு. மகள் படும் துன்பத்தை பார்க்கப் பார்க்க மலையமான் மீதும் அவன் குடும்பத்தின் மீதும் பெரும் வெறுப்பு குன்று போல் வளர்ந்துக் கொண்டிருந்தது அவர் மனதில்.
கீர்த்திக்கு ஏழாவது மாதம் துவங்கிவிட்டதால் அவளுடைய பிரசவ நேரத்தில் உடன் இருப்பதற்காக மணிமேகலையை அழைத்தார்கள். ஆனால் கனிமொழியை விட்டுவிட்டு அவரால் எப்படி செல்ல முடியும்! எனவே கீர்த்தியை இந்தியாவிற்கு அனுப்பும்படி சொன்னார் அங்கப்பன்.
அதற்கு, கர்பம் தரித்த இரண்டு பெண்கள் ஒரே வீட்டில் இருக்கக் கூடாது என்று சீனுவின் வீட்டுப் பெரியவர்கள் கொடி பிடித்தார்கள். ஆனால் அந்த சம்பிரதாயத்தை எல்லாம் அனுசரிக்கும் நிலையிலா அவர்கள் இருந்தார்கள்!
தன்னுடைய இரண்டு மகள்களையும் ஒரே வீட்டில் வைத்து தன்னால் கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்ள முடியும் என்று மணிமேகலை உறுதியாக சொல்லிவிட, சீனு முணுமுணுத்து கொண்டே மனைவிக்கு டிக்கெட் எடுத்தான். இன்னும் இரண்டு நாட்களில் அவள் வரவிருக்கிறாள். அதனால் ஆள் வைத்து அவளுடைய அறையை சுத்தம் செய்து கொண்டிருந்தார் மணிமேகலை.
அன்றைக்கு பார்த்து கனிமொழிக்கு உடல் உபாதை படுத்தி எடுத்தது. வாந்தி மயக்கம் என்று சோர்ந்து கிடந்தாள். மகளை ஒரு பக்கம் பார்ப்பதும், வேலையாட்களை ஒரு பக்கம் விரட்டுவதுமாக பரபரப்பாக இருந்தார் தாய்.
தோப்பிலிருந்து வந்த அங்கப்பன், “நாளைக்கு சம்மந்தி வீட்லேருந்து வரங்களாம்” என்று மனைவியிடம் சத்தமாக சொல்லிக் கொண்டே வீட்டுக்குள் நுழைந்தார்.
சோபாவில் படுத்திருந்த கனிமொழி விருட்டென்று எழுந்து தந்தையை ஆவலுடன் பார்த்தாள். தன்னுடைய மாமியார் வீட்டிலிருந்துதான் ஆட்கள் வருகிறார்கள் என்று ஒரு கணம் அவள் எண்ணி எதிர்பார்ப்புடன் எழுந்து அமர்ந்துவிட, அங்கப்பன் திகைத்து நின்றுவிட்டார். சட்டென்று அவளுக்கும் நடப்பு நிலவரம் புரிந்துவிட்டது.
‘கீர்த்தியின் வீட்டிலிருந்து வருகிறார்கள்!’ – ஏமாற்றத்துடன் மீண்டும் சோபாவில் படுத்து கொண்டாள். மணிமேகலை அழாத குறையாக மகளை பார்த்துவிட்டு, கணவனை முறைத்தார்.
மகளையும் மனைவியையும் ஓரிரு நொடிகள் மெளனமாக ஏறிட்டவர், “கீர்த்தி வீட்லேருந்து நாளைக்கு வரங்களாம்… ஏர்போட் போகணும். நைட் கிளம்பினா சரியா இருக்கும். நான் மட்டும் அவங்களோட போயிட்டு வரேன். நீ கனியோட இரு” என்று கூறிவிட்டு உள்ளே சென்றார்.
மறுநாள் கீர்த்தியை ஏர்போட்டிலிருந்து ரிஸீவ் பண்ண அவளுடைய மாமனார் வீட்டிலிருந்து மூன்று கார்களில் ஆட்கள் வந்து இறங்கினார்கள். அவர்களோடு அங்கப்பனும் தன்னுடைய காருக்கு ஒரு ட்ரைவரை போட்டுக் கொண்டு கிளம்பினார்.
ஏதோ திருவிழாவிற்கு செல்வது போல் மகிழ்ச்சியும் சிரிப்புமாக கோலாகலமாக எல்லோரும் கிளம்புவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் கனிமொழி.
Comments are closed here.