கனியமுதே! – 31
933
0
அத்தியாயம் – 31
அசுரனும் இறைவனும் கலந்த கலவைதானே மனிதன்! தனக்குள் தாண்டவமாடிக் கொண்டிருந்த அசுரன் அடங்கி மனிதம் மேலெழுந்ததும் மலையமானின் மனம் தவித்துப் போனது. வயிற்று பிள்ளையோடு வந்தவளை வேதனைப் படுத்தி அனுப்பிவிட்டோமே என்று. அப்போதும் அவளை வேதனை படுத்திவிட்டதற்காக மட்டும் தான் வருந்தினான். மற்றபடி அவளோடு சேர்ந்து வாழ வேண்டும் என்கிற யோசனையே அவனை அச்சுறுத்தியது. இன்னொரு அவமானத்தை தாங்க முடியுமா!
கணவன் மனைவிக்கு இடையில் பரஸ்பரம் மரியாதையும் நம்பிக்கையும் இருப்பது அவசியம். அன்பு… காதல் எல்லாம் அடுத்துதான். மரியாதை இல்லாத வாழ்க்கையை சகிப்பது கடிதம். அப்படி கசந்து சகித்து வாழும் வாழ்க்கையில் குழந்தைக்கு எப்படி ஆரோக்கியமான சூழ்நிலை கிடைக்கும்! அதற்கு பிரிவே மேலானதல்லவா! – உணர்ச்சிவசப்பட்டு எடுத்த முடிவை, இப்போது தீர ஆலோசித்து தீர்க்கமாக எடுத்தான். ஒருவரை ஒருவர் வெறுத்துக் கொண்டு இணைந்திருப்பதைவிட பிரிந்து அமைதியாக வாழ்வதே நல்லது எகிற எண்ணம் அவனுக்குள் ஸ்திரம் பட்டது.
கீர்த்தி வீட்டுக்கு வந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. திருமணமாகி நான்கைந்து வருடம் கழித்து கருத்தரித்திருந்ததாலும் வெளிநாட்டிலிருந்து வந்திருந்ததாலும் வீட்டில் அவளுக்கு கொஞ்சம் ஸ்பெஷல் கவனிப்பு. அது மட்டும் அல்ல… அவள் வந்ததிலிருந்து அவளை பார்க்கவென்று அவளுடைய புகுத்தவீட்டு ஆட்கள் வந்து கொண்டே இருந்தார்கள். குடும்பத்தினர் மட்டும் அல்ல… ஒன்று விட்ட இரண்டு விட்ட உறவினர்களில் ஆரம்பித்து ஐந்து தலைமுறை தூரத்து உறவினர்கள் வரை ஒருவர் விடாமல் வந்து போய் கொண்டிருந்தார்கள்.
வருகிறவர்கள் எல்லாம் கனிமொழியை வேறு பார்த்துவிட்டு, “நீயும் இங்கயாம்மா இருக்க! ரெண்டு பேரும் ஒண்ணா இருக்கக் கூடாதே!” என்று வேறு கேட்டு தொலைத்தார்கள். வேண்டாத விருந்தாளியாக அவள் தன்னைத்தானே உணர துவங்கினாள்.
சகோதரிகள் இருவரும் கர்ப்ப காலத்தில் இருக்கும் போது, கீர்த்தியை பார்க்க மட்டும் உறவினர்கள் படையெடுத்துக் கொண்டிருந்தார்கள். அதை பார்க்க பார்க்க, தனக்கென்று யாரும் இல்லாத உணர்வு தானாக அவளுக்குள் வந்து ஒட்டி கொண்டது.
அந்த உணர்வை இன்னும் அதிகமாக்குவது போல் அன்று ஒரு சம்பவம் நடந்தது.
அன்று கீர்த்தியின் ஒன்றுவிட்ட நாத்தனார் தன் கணவன் மற்றும் குழந்தைகளுடன் அவளை பார்க்க வந்திருந்தாள். கீர்த்திக்கு பழவகைகள் சுவீட்ஸ் மற்றும் புடவையோடு கொஞ்சம் கண்ணாடி வளையல்களும் வாங்கி வந்திருந்தாள். வளைகாப்புக்கு முன்பு அவற்றையெல்லாம் கொண்டு வந்து கொடுத்துவிட்டு கர்ப்பிணிகளை வந்து பார்த்துவிட்டு செல்வது அவர்களில் வழக்கம்.
கீர்த்திக்கு அனைத்தையும் வைத்துக் கொடுத்துவிட்டு கனிமொழியை பார்த்து, “நீ இங்க இருக்கது தெரியாதும்மா. தெரிஞ்சிருந்தா ரெண்டு பேருக்குமே வாங்கிட்டு வந்திருப்பேன்!” என்றாள். அவள் உண்மையாகக் கூட சொல்லியிருக்கலாம். ஆனால் கனிமொழிக்கு அது வெகு சங்கடமாக இருந்தது.
“இருக்கட்டும்… பரவால்ல…” என்று அவள் சொல்லும் போதே அந்த பெண் கணவனை பார்த்தாள். ஓரிரு நிமிடங்களில் அவன் கொஞ்சம் வெளியே சென்றுவிட்டு வருவதாக சொல்லிச் சென்றான். சற்று நேரத்தில் அவன் திரும்பி வரும் போது கையில் ஒரு பையுடன் வந்தான்.
“ரெண்டு பொண்ணுங்க இப்படி இருக்கும் போது ஒருத்தருக்கு மட்டும் எப்படிம்மா கொடுத்துட்டு போறது” என்று கூறு கனிமொழிக்கும் வைத்துக் கொடுத்தாள்.
கீர்த்திக்கு வாங்கி வந்தது போல் விலை உயர்ந்த புடவை இல்லை… சாதாரண புடவையும் பொருட்களும் தான். ஆனால் அன்போடு கொடுத்தாள். கனிமொழிக்குத்தான் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ரொம்பவே வலித்தது…
உரிமை இல்லாத பொருட்களை பெற்றுக்கொள்வது யாசகம் போலத்தானே… இந்த பெண்ணும் பாவம் பார்த்துத்தானே அவளுக்கு அந்த பொருட்களை எல்லாம் கொடுக்கிறாள்! முகம் கன்றிப் போய்விட்டது அவளுக்கு. அவள் கொடுக்கும் தாம்பூலத்தை வாங்க கையே எழவில்லை.
“வாங்கிக்க டா..” என்று மணிமேகலைத்தான் உந்தினார். அந்த பெண்ணின் செயலில் மகளின் மனம் மகிழும் என்று அவர் எண்ணியிருக்க, கனிமொழியின் மனம் காயம் பட்டு துடித்தது.
இதையெல்லாம் தாமரை அல்லவா அவளுக்கு செய்திருக்க வேண்டும்! இப்படி இரவலும் யாசகமும் பெற்றுக்கொள்ளும் நிலை வந்துவிட்டதே! – எண்ணங்கள் எங்கெங்கோ ஓடின.
கொரியர் காரன் வாரத்திற்கு ஒரு முறை அமேசான் டப்பாவை தூக்கிக் கொண்டு அவர்கள் வீட்டுக்கு வந்துவிடுவான். எல்லாம் சீனுவின் வேலை.. மனைவி இல்லாத இரவு நேரத்தை நெட்டில் கழிப்பவன், தன் பிறக்காத குழந்தைக்கும் மனைவிக்கும் எதையாவது ஆர்டர் பண்ணி வைப்பான்.
ஒவ்வொரு முறை பார்சல் வரும் போதும் பிரித்துப் பார்த்துவிட்டு தங்கையிடம் ஓடிவருவாள் தமக்கை.
“இது உனக்கு நல்லா இருக்கும் கனி… வச்சுக்கோ… அத்தான் இதே மாதிரி ரெண்டு அனுப்பிட்டாங்க பாரு… ஒன்னு உன்னோட பாப்பாவுக்கு இருக்கட்டும்…” என்று அவளுக்கு வரும் முக்கால்வாசி பார்சலை தங்கைக்கு என்று ஒதுக்கி வைப்பாள். தங்கையின் நிலையை எண்ணி அவளுக்கும் கவலை தான். பாவம் என்று எண்ணினாள். அந்த எண்ணம் தான் கனிமொழியை கொன்று குடித்தது… சில சமயங்களில் கட்டுப்படுத்த முடியாமல், “வேண்டான்னு சொன்னா விட்டு தொலையேன்” என்று கத்திவிடுவாள்.
கீர்த்தி பொறுத்துப் போனாள். இயல்பிலேயே அவள் கொஞ்சம் அமைதியான சுபாவம். கனிக்கு சிறு வயதிலிருந்தே இளையவள் என்கிற செல்லம். இவள் கத்துவதும் அவள் பொறுத்துப் போவதும் இருவருக்கும் பழக்கமான ஒன்றுதான். எனவே தங்கையின் கோபத்தையெல்லாம் கீர்த்தி சாதாரணமாக எடுத்துக் கொண்டாள். ஆனால் கனிமொழி குற்ற உணற்சியில் வெந்து போனாள்.
அக்காவை திட்டிவிட்டதால் அவள் மீது பொறாமை படுவதாக எடுத்துக்கொள்வாளோ என்று எண்ணி தவித்து, தயங்கித் தயங்கி அவளிடம் சமாதானமாக பேசி, பிறகு யாரும் இல்லாத போது தனிமையில், “கோவத்துல காத்திட்டேன். தப்பா எடுத்துக்காத… சாரி” என்று மன்னிப்பு கேட்டு… அவளால் இயல்பாகவே இருக்க முடியவில்லை.
நாட்கள் மெல்ல நகர்ந்து கொண்டிருந்தன. கீர்த்திக்கு ஏழாவது மாதம் நடந்து கொண்டிருப்பதால் வளைகாப்பு செய்ய வேண்டும் என்கிற பேச்சு எழுந்தது.
கனிமொழியை மனதில் வைத்துக் கொண்டு எளிமையாக செய்யலாம் என்று மணிமேகலை சொல்ல அதையே வழிமொழிந்தார் அங்கப்பன். ஆனால், சீனுவின் வீட்டில் யாரும் அதற்கு உடன்படவில்லை. வெகுநாள் காத்திருந்த நல்ல காரியம் அவர்கள் குடும்பத்தில் நடந்திருக்கிறது. அதை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று விருப்பப்பட்டார்கள். கீர்த்திக்கும் அந்த ஆசை இருந்தது. ஆனால் தங்கை ஏங்கிவிட கூடாதே என்று தன் ஆசையை மறைத்துக் கொண்டு, “சிம்பிளா வீட்டோட செஞ்சுக்கலாமேங்க” என்றாள் கணவனிடம்.
சீனுவுக்கு எப்பவும் பிடிவாதம். தன்னுடைய ஆசை விருப்பங்களையெல்லாம் அவ்வளவு எளிதில் வீட்டுக் கொடுக்க மாட்டான். மனைவியை பிரசவத்திற்கு இந்தியாவிற்கு அனுப்பியதே அவன் மனதை நெருடி கொண்டிருந்தது. கர்பமாக இருக்கும் பெண்ணை நோகடிக்க கூடாது என்பதாலும், பெரியவர்கள் இல்லாமல் பிரசவ நேரத்தை சமாளிப்பது சிரமம் என்பதாலும் வேறு வழியில்லாமல் தான் அவளை அனுப்பினான். இப்போது மீண்டும் ஒரு கோரிக்கையுடன் அவள் வந்து நின்றதும் அவனால் கட்டுப்படுத்தவே முடியவில்லை. கடுமையாக கோபப்பட்டுவிட்டான்.
அவள் கலங்கி போய் குரல் உடைந்து பேச முடியாமல் போனை வைத்துவிட்டாள். அதற்கு பிறகு இரண்டு நாட்களுக்கு அவனுடைய அழைப்பை ஏற்கவில்லை அவள்.
தவித்துப் போய்விட்டான் சீனு. டெக்ஸ்ட் மெசேஜிலும் வாய்ஸ் மெசேஜிலும் கெஞ்சிப் பார்த்துவிட்டு வீட்டில் இருந்த மற்ற அனைவருக்கும் மாற்றி மாற்றி போன் செய்து மனைவியோடு பேச முயன்றான். விட்டால் கிளம்பி வந்தே விடுவான் போலிருந்தது. அதற்கு பிறகு தான் கீர்த்தி கொஞ்சம் சமாதானம் ஆகி போனை எடுத்தாள்.
இரண்டு நாட்களின் ஊடலை அலைபேசியில் ஈடுகட்டிவிட முயன்று அவர்கள் இரவெல்லாம் உறங்காமல் பேசிக் கொண்டே இருக்க, கனிமொழியின் முகத்தில் விரக்திப் புன்னகை தோன்றியது.
‘எல்லோருக்கும் ஒரே மாதிரி பிராப்தம் கிடைக்குமா!’ என்று எண்ணியவள் மனதை மலையமானின் நினைவு புழுவாய் அரித்தது.
‘எப்படியெல்லாம் பார்த்துக் கொண்டான்! ஒரே தவறில் தூக்கி எறிந்துவிட்டானே!’ – மனம் அடித்துக் கொண்டது. இரவெல்லாம் அழுது தலையணையை நனைத்தாள்.
மறுநாள் எழுவுமே நடக்காதது போல் எழுந்து நடமாடினாள். ஆனால் அழுது வீங்கிய முகமும் சிவந்திருந்த கண்களும் உண்மை நிலவரத்தை வீட்டில் உள்ளவர்களுக்கு உணர்த்த, மகளை பார்த்துப் பார்த்து நொந்து போனார்கள் பெற்றவர்கள்.
கீர்த்தியின் வளைகாப்பு மிகப்பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஊரில் உள்ள பெரிய மண்டபத்தை புக் செய்து, சொந்தபந்தம்.. அறிந்தவர் தெரிந்தவர் என்று ஊரை வளைத்து அழைப்பிதழ் கொடுத்திருந்தார்கள். நாளைக்கு விழா… இன்று கீர்த்தியை மாமியார் வீட்டுக்கு அழைத்துச் செல்ல வருவதாக இருந்தது. கணவன் வீட்டிலிருந்து மண்டபத்திற்கு வந்து வளைகாப்பை முடித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு பெண்ணை அழைத்து வருவதாக திட்டம்.
இன்னும் சற்று நேரத்தில் எல்லோரும் வந்துவிடுவார்கள்… வீட்டில் அனைவரும் புறப்பட்டு தயாராக இருக்கும் போது கனிமொழி எந்த ஆர்வமும் இல்லாமல் அறையிலேயே சுருண்டுக் கிடந்தாள்.
மணிமேகலைத்தான் மகளை துரிதப்படுத்தி குளிக்க அனுப்பிவிட்டு, வீட்டில் வந்து தங்கியிருந்த நெருங்கிய உறவினர்களை கவனிக்க ஓடினார். சற்று நேரம் கழித்து மீண்டும் மகளுடைய அறைக்கு வந்து பார்த்தால், அவள் குளித்துவிட்டு வந்து அலமாரியில் இருந்த உடைகளையெல்லாம் கலைத்துப் போட்டுக் கொண்டு நைட்டியோடு அமர்ந்திருந்தாள்.
“என்ன கனி! இன்னும் கிளம்பலையா நீ!” என்றார் வியப்பும் சின்ன கோபமுமாக.
“ஒரு ட்ரஸ்ஸும் போட முடியலம்மா” என்றாள் மகள் பரிதாபமாக. ஆம், கனிமொழி குண்டாகியிருந்தாள். வயிறும் சற்று வளர்ந்திருந்தது.
“முதல்லயே பார்க்கலையா நீ!” என்று மகளை கடிந்து கொண்டு அவளோடு சேர்ந்து மணிமேகலையும் தேடினார். உருப்படியாக எந்த உடையும் கிடைக்கவில்லை. புடவை கட்டலாம் என்றால் ஜாக்கெட் அளவு சின்னதாகியிருந்தது. மறுநாள் விழாவிற்கு வாங்கிய புடவை என்ன ஆனதோ என்கிற சந்தேகம் சட்டென்று அவருக்கு எழ, “நாளைக்கு உடுத்திக்கிற புடவைக்கு பிளவுஸ் எந்த அளவு தைக்க கொடுத்த?” என்றார் பதட்டத்துடன்.
கனிமொழி திருதிருவென்று விழித்தாள். “பழைய அளவையே கொடுத்துட்டியா?” என்றார் தாய் சந்தேகத்துடன்.
தலையை மேலும் கீழும் ஆட்டி அவருடைய சந்தேகத்தை ஊர்ஜிதப்படுத்தினாள் கனிமொழி.
மணிமேகலைக்கு கோபம் கண்மண் தெரியாமல் வந்தது. “என்ன பொண்ணு நீ… இந்த அளவுக்கு சிந்தனை இழந்துடுவியா நீ? படிச்ச பொண்ணு தானே? எனக்கும் வயசாகுது. இதுக்கெல்லாமா நான் உன் பின்னாடி வந்துட்டு இருப்பேன்” என்று பொறுக்க முடியாமல் திட்டிவிட்டார்.
அவ்வளவு தான்… ஏற்கனவே பலவீனமான மனநிலையில் இருந்தவள் தேம்பித் தேம்பி அழ துவங்கிவிட்டாள். யார் என்ன சமாதானம் சொல்லியும் அவளை தேற்ற முடியவில்லை. அறையிலேயே அடைந்துக் கொண்டாள். கீர்த்தியின் வீட்டினர் அவளை பற்றி கேட்ட போது, “உடம்பு சரியில்ல. ரெஸ்ட் எடுக்கறா” என்று எல்லோரும் ஒன்று போல சொல்லிவிட்டார்கள். கீர்த்தி கணவன் வீட்டுக்கு கிளம்பும் போது அவளை வழியனுப்ப கூட கீழே இறங்கி வரவில்லை கனிமொழி.
மணிமேகலைக்குத்தான் மிகவும் கவலையாகிவிட்டது. மகள் கணவன் வீட்டுக்கு செல்லும் போது… அதுவும் வளைகாப்புக்கு செல்லும் போது இப்படி ஒரு எதிர்மறை சம்பவம் வீட்டில் நடந்து கனிமொழி காண்ணீரோடு இருந்தது அவரை வருத்தியது. தான் கொஞ்சம் பொறுமையாக இருந்திருக்கலாமோ என்று கவலை கொண்டார். ஆனால் கவலைபட்டுக் கொண்டே இருக்க முடியாதே! கீர்த்தியை அனுப்பிவிட்டு உடனே ட்ரைவரை அழைத்து வண்டியை எடுக்க சொல்லி கடைக்கு புறப்பட்டு கனிமொழிக்கு புது பிளவுஸ் வாங்கி தைக்க கொடுத்து கையேடு வாங்கி வந்தார்.
இப்படி எதிலும் ஆர்வம் இல்லாமல்… தன்னுடைய உடல் மாற்றத்தைக் கூட உணராமல் என்ன நினைத்துக் கொண்டு இருக்கிறாள் கனிமொழி என்று மகள் மீது அவருக்கு கோபம் தான் வந்தது. ஆனால் அதை அவளிடம் காட்டிவிட முடியாது.. காட்டினால் இன்னும் உடைந்து போவாள்! எப்படி தேற்றப் போகிறோம்! என் மகளின் வாழ்க்கையை பாழாக்கிவிட்டானே பாவி! என்று மருமகன் மீது ஆத்திரமாக வந்தது அவருக்கு.
அந்த சம்பவத்திற்கு பிறகு மணிமேகலையின் அக்கறை கனிமொழியின் மீது இன்னும் அதிகமாகியிருந்தது. கண்ணாடி பாத்திரத்தை கையில் வைத்திருப்பது போல் வெகு கவனமாக இருந்தார்.
Comments are closed here.