கனியமுதே! – 32
906
0
அத்தியாயம் – 32
கீர்த்தியின் வளைகாப்பு வெகு விமர்சையாக நடைபெற்றுக் கொண்டிருந்த போது, மண்டபத்தில் குழுமியிருந்த கூட்டத்தில் திடீரென்று சலசலப்பு ஏற்பட்டது. அனைவருடைய பார்வையும் வாசல்புரம் ஆவலோடு திரும்புவதும், யாரோ வருவதைக் கண்டு ஆச்சரியப்பட்டு மக்கள் தங்களுக்குள் ஏதோ பேசிக்கொள்வதுமாக இருந்தார்கள்.
அந்த சலசலப்பு மேடையில் இருப்பவர்களின் கவனத்தையும் ஈர்க்க அவர்களுடைய பார்வையும் வாயில்புரம் திரும்பியது. அடுத்த நொடி அனைவர் முகத்திலும் குபீர் மகிழ்ச்சி! கீர்த்தி அமர்ந்திருந்த சேரிலிருந்து எழுந்தே விட்டாள்.
சுற்றியிருந்த பெரியவர்கள் தான், “வளவி போட்டு முடிக்கறதுக்குள்ள எழ கூடாதும்மா” என்று கூறி அவளை மீண்டும் அமரவைக்க முற்பட்டார்கள்.
அவர்கள் கூறுவது எதுவும் அவள் காதில் விழவில்லை. அவளுடைய கவனம் முழுவதும், வேக நடை போட்டு பளீர் புன்னகையுடன் தன்னை நோக்கி விரைந்துக் கொண்டிருக்கும் கணவனிடம் இருந்தது. ஆம், சீனு தான் வந்து கொண்டிருந்தான். சர்ப்ரைஸ் விசிட்…
கீர்த்தியின் முகம் ஆனந்தத்தில் விகசித்தது. சீனுவின் பார்வை மனைவியின் முகத்தை பருகியது… இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடியே இருக்க சுற்றம் சூழல் எல்லம் அவர்களுக்கு மங்களாகி… அவர்கள் பேசுவதெல்லாம் இழுபடும் ரிக்கார்டு போல் எங்கோ தூரத்தில் கேட்டது. அந்த நொடியில் அவர்கள் உலகம் அவர்களுக்கு மட்டுமானதாய் மாறியிருந்தது.
காற்றில் மிதப்பது போல் தான் மேடைக்கு வந்து சேர்ந்தான் சீனு. வந்ததும் மனைவியின் முகத்தை கைகளில் ஏந்தி நெற்றியில் அழுத்தமாய் முத்தமிட்டான். கூட்டத்தில் குபீரென்று சிரிப்பொலி… சிலர் குழந்தைகளின் கண்களை மூடினார்கள். அது சின்ன டவுன் தானே! கூடியிருந்த மக்களெல்லாம் கிராமத்து மக்கள்… அவர்களுக்கு இதெல்லாம் புதிது… சீனுவுக்கோ சுற்றத்தை மறந்த நிலை… இருபது நாள் பிரிவே அவனை அந்த நிலைக்கு தள்ளியிருந்தது. அவனுக்கு சற்றும் குறையாத நிலையில் தான் கீர்த்தியும் இருந்தாள். தன் கன்னத்தை தங்கியிருந்த அவன் கைகளை இறுக்கமாக பற்றிக் கொண்டு நின்றாள். விட்டால் நழுவிவிடுவானோ என்று பயந்தவள் போல…
நடப்பதையெல்லாம் கீழே முதல் வரிசையில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்த கனிமொழியின் கண்களில் கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது. மனமெல்லாம் மகிழ்ச்சியில் தளும்பியது… ஏதோ அவள் கணவனே அவளை தேடி வந்துவிட்டது போல் தமக்கையின் முகத்திலிருந்த மகிழ்ச்சி அவள் கண்களில் ஆனந்த கண்ணீரை உதிரவிட்டது.
சற்று நேரம் தான்… அவள் தன்னை உணரும் வரையிலான அந்த ஒரு சில நொடிகள் தான் அந்த மகிழ்ச்சியை அவளால் அனுபவிக்க முடிந்தது. அதற்கு மேல் அவனுடைய நினைவு நெஞ்சை அழுத்த கண்களில் ஏக்கம் குடியேறியது.
சீனு மேடையை விட்டு கீழே இறங்கவே இல்லை. மனைவியை விட்டும் நகரவில்லை. பேண்ட் பாக்கெட்டிலிருந்து ஒரு சின்ன நகை டப்பாவை எடுத்து, வாங்கி வந்திருந்த தங்க வளையல்களை மனைவிக்கு அணிவித்தான். அவளுக்கு சந்தனம் குங்குமம் வைத்துவிட்டான். அதற்குள் மேடைக்கு இன்னொரு சேர் கொண்டு வரப்பட்டது. கீர்த்திக்கு பக்கத்தில் அவனையும் அமரவைத்து அவன் கழுத்தில் ஒரு மல்லிச்சரத்தை போட்டுவிட்டு அவனுக்கும் நெற்றியில் திலகமிட்டு வாழ்த்தினார்கள். எந்த குறையும் இல்லாமல் நிறைவாக முடிந்தது கீர்த்தியின் வளைகாப்பு.
பந்தி பரிமாறும் இடத்தில் விருந்தினர்களை கவனித்துக் கொண்டிருந்த மணிமேகலையிடம் வந்த கனிமொழி, “டயர்டா இருக்கும்மா. வீட்டுக்கு போறேன்” என்றாள்.
“தனியாவா!” என்று பயந்தார் தாய்.
“நா என்ன சின்ன பிள்ளையா? தனியா இருக்க தெரியாதா எனக்கு?” என்றாள் மகள்.
“சின்ன பிள்ளை கூட பரவால்ல… நீ அதைவிட மோசமா இருக்க” என்று கூறிவிட்டு வெளிய வந்தவர், வீட்டில் வேலை செய்யும் சிந்தாமணியை அழைத்து, “சிந்தா, நீ முதல்ல வந்து சாப்பிடு. கனி வீட்டுக்கு போகணும்னு சொல்றா. நீயும் கூட போ…” என்று கூறி அவளை சாப்பிட வைத்து ட்ரைவரை அழைத்து வண்டியை எடுக்க சொல்லி மகளை வீட்டுக்கு அனுப்பினார்.
கிளம்புவதற்கு முன் சிந்தாமணியிடம் படித்துப் படித்து அவர் சொன்ன ஒரே விஷயம், “வீட்ல எந்த வேலை இருந்தாலும் பரவால்ல. அதையெல்லாம் பார்க்குறேன்னு கனியை தனியா விட்டுடாத. அவ படுக்கறேன்னு சொல்லி ரூமுக்கு போனாலும், நீயும் அடிக்கடி மேல போயி பார்த்துக்கணும்… சரியா…” என்பது தான்.
மணிமேகலை சொல்லி அனுப்பியது போல் கனிமொழி அறையிலெல்லாம் சென்று அடைந்துக் கொள்ளவில்லை. வீட்டுக்கு வந்ததும் ஹால் சோபாவிலேயே சாய்ந்துவிட்டாள். மிகவும் சோர்வாக இருக்கிறாளோ என்று எண்ணிய சிந்தாமணி, “காப்பி கீப்பி போட்டு தரட்டுமா பாப்பா” என்றாள்.
“இல்லக்கா, கொஞ்சம் தண்ணி மட்டும் கொடுங்க” என்று கேட்டு தண்ணீர் வாங்கி குடித்துவிட்டு கையில் மொபைலை எடுத்தாள்.
போலீஸ்காரன் போல் கனிமொழியை பார்த்துக் கொண்டே நிற்க முடியாது என்பதால், “இங்க தான பாப்பா இருப்ப? நா போயி கிச்சன்ல கிடக்குற பாத்திரத்தை கழுவி சுத்தம் பண்ணிட்டு வரவா?” என்றாள்.
“சரிக்கா” என்று கூறி அவளை அனுப்பிய கனிமொழி, அலைபேசியில் கேலரியை ஓபன் செய்தாள்.
மலையமானோடு சேர்ந்து அவள் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும், அவன் வேலை செய்யும் போது அவனுக்கே தெரியாமல் இயல்பாக எடுத்த புகைப்படங்களும் வரிசைகட்டி நின்றன. ஒவ்வொரு புகைப்படமாக பார்த்துக் கொண்டே வர வர பழைய நினைவுகளெல்லாம் அவள் நெஞ்சை அடைத்தது.
கர்பிணி பெண்களின் ஏக்கம் புளிப்பு மிட்டாய்.. தேன் மிட்டாய் என்று வெகு சில்லியாக இருக்கும் என்றுதான் அவள் எண்ணியிருந்தாள். ஆனால் அவளுக்கு இப்போது அப்படியெல்லாம் எதுவுமே தேவைப்படவில்லை. அவனுடைய முகத்தை நேரில் ஒருமுறை பார்க்க வேண்டும்… அவன் கையை இறுக்கி பிடித்துக் கொண்டு அவன் தோளில் சாய்ந்துக்கொள்ள வேண்டும்… அந்த ஏக்கம் தான் அவளை மூச்சுமுட்ட செய்தது.
கானல் நீரை அருந்துவது போல் தீரா தாகத்தோடு கணவனின் நிழற்படங்களை ஒவ்வொன்றாக பார்த்துக் கொண்டே வந்தவள், அவன் கேமராவை பார்த்து அழகாக புன்னகைத்திருந்த ஒரு படத்தை பார்த்ததும் அசைவற்று போய்விட்டாள். அலைபேசியின் வழியாக அவன் தன்னையே பார்த்து புன்னகைப்பது போல் இருக்க, அப்படியே அலைபேசி திரையில் அழுத்தமாக முத்தமிட்டாள். கண்களில் கண்ணீர் கடகடவென்று கொட்டியது.
வேலை ஒரு பக்கம் செய்து கொண்டிருந்தாலும் காரியத்தில் கண்ணாக அடிக்கடி கூடத்தை எட்டிப் பார்த்து கனிமொழியை கவனித்துக் கொண்டிருந்த சிந்தாமணி அப்போதும் எட்டிப் பார்க்க, அவள் அலைபேசிக்கு முத்தமிட்டபடி குலுங்கி அழுவது தெரிந்தது. கையிலிருந்த பாத்திரங்களை அப்படியே போட்டுவிட்டு பதறிப் போய் ஓடிவந்தாள் அந்த பெண்.
“என்ன… என்ன பாப்பா! எதுக்கு இப்படி அழுவுற!” என்று பதட்டமாக கேட்ட சிந்தாமணியின் குரல் கனிமொழியை நிகழ்வுக்கு மீட்டெடுத்தது. அலைபேசியை கீழே வைத்துவிட்டு கண்களை துடைத்துக்கொள்ள முயன்றாள். அந்த சின்ன இடைவெளியில் திரையில் சிரித்துக் கொண்டிருந்த மலையமானின் முகத்தை பார்த்துவிட்ட சிந்தாமணிக்கு துக்கம் பொங்கியது.
பிறந்ததிலிருந்து கனிமொழியை பார்த்துக் கொண்டிருக்கும் பெண் அவள். ஒரே தெருவில் தான் வீடு… வசதி குறைவு என்பதால் அந்த காலத்திலிருந்து மணிமேகலையோடு ஒட்டிக் கொண்டு வீட்டு வேலைகளில் ஒத்தாசை செய்து வந்தவள் பிறகு குடும்பத்தில் ஒருதியாகவே மாறிவிட்டாள். அந்த அளவுக்கு நெருக்கம்…
தன் கண் பார்க்க வளர்ந்து ஆளான பெண் இப்படி வாழ்க்கையில் அடிபட்டு வேதனைப் படுகிறாளே என்று தவிப்பாக இருந்தது அவளுக்கு. கனிமொழிக்கு ஆறுதல் சொல்லி தேற்ற முயன்றாள். அவளுடைய ஆறுதல் பலனளித்ததோ இல்லையோ… கடந்துவந்த நாட்களில், ஏக்கம் மேலிடும் போது அழுவதும்.. அதன் பிறகு தன்னைத்தானே தேற்றிக்கொள்வதும் கனிமொழிக்கு பழக்கமாகி இருந்தது. எனவே சற்று நேரத்திலெல்லாம் சமாதானமாகி கண்களை துடைத்துக் கொண்டு எழுந்துவிட்டாள்.
“நா மேல போயி ட்ரஸ் மாத்திக்கிறேன் க்கா. நீங்க வேலையை பாருங்க” என்று கூறி மாடிக்கு செல்ல எத்தனித்தாள்.
“ஆங்… அதெல்லாம் நீ தனியா போக வேண்டாம். நானும் வரேன்… அக்கா வர்ற வரைக்கும் நா உன் கூடவே இருக்கேன் பாப்பா” என்று கூறி அந்த பெண்ணும் கனிமொழியோடு கூடவே சென்றாள்.
இரண்டு நாள் கழித்து விழா நடந்த பரபரப்பெல்லாம் முடிந்து, கனிமொழி கணவனின் படத்திற்கு முத்தமிட்டு தேம்பித் தேம்பி அழுததை மணிமேகலையிடம் சொல்லி வருத்தப்பட்டாள் சிந்தாமணி.
“இந்த வீட்ல இவ்வளவு இருந்து என்ன க்கா புண்ணியம்? பாப்பா மாப்பிள்ளையை நெனச்சு அழுவோ அழுவுன்னு அழுவுது. எப்படியாச்சும் சமாதானம் செஞ்சு அத புருசனோட சேர்த்து வையுங்க க்கா”
“என்னடி பண்ணறது சிந்தா… கீர்த்தி வளைகாப்பை சருக்கா வச்சு சமாதானம் பண்ணிடலாம்னு பத்து தரம் அந்த வீட்டுக்கு போயிட்டு வந்துட்டாரு. நானும் போயி குங்குமம் சந்தனமெல்லாம் கொடுத்து எல்லாரையும் அழைச்சுட்டு வந்தேன். யாராவது வந்தார்களா பார்த்தியா? அந்த ஆளுதான் பிடிவாதம் புடிச்சுகிட்டு வராம இருந்தாருன்னா, அந்த குடும்பத்துலேருந்து ஒருத்தர் கூட வரல பாரு. சரியான வில்லங்கம் புடிச்ச குடும்பமா இருந்திருக்கு. தெரியாம போயி தலையை குடுத்துட்டோம். என் பொண்ண பார்க்க பார்க்க என் வயிறு எரியுது” என்று வெந்து போனார் மணிமேகலை.
சீனு மாமனார் வீட்டில் தான் தங்கியிருந்தான். ஒருவாரம்… ஒரே வாரம் தான் லீவ்… வளைகாப்பு விழாவில் தான் இருக்க வேண்டும் என்பதற்காகவே வந்திருந்தான். குழந்தை பிறக்கும் சமயத்திலும் வருவதாக பிளான்… எனவே அவ்வளவு நாட்களுக்கு லீவ் கிடைக்காது என்பதால் இன்னும் ஐந்து நாட்களில் அவன் கிளம்பியாக வேண்டும். அதனால், ஒரு கணம் கூட மனைவியை விட்டு பிரியவில்லை அவன். வளைகாப்பு முடித்துவிட்டு கிளம்பிய பெற்றோரை கூட ஓரிருமுறை மாமனார் வீட்டுக்கு வர சொல்லித்தான் பார்த்துக் கொண்டான்.
வந்ததிலிருந்து அவனுடைய முழு நேர வேலை, அவளுக்கு இந்த நேரத்தில் என்னென்ன வசதிகள் தேவைப்படும் என்று யோசித்து யோசித்து அவைகளையெல்லாம் வாங்கி வந்து வீட்டில் நிரப்புவது தான்…
அவள் வசதியாக அமரவும்… தேவைப்பட்டால் அப்படியே கால் நீட்டி படுத்துக்கொள்வது போலவும் வடிவமைக்கப்பட்ட சேர்… கால்களின் வீக்கம் குறைய, பாதங்களுக்கு ஸ்பா மசாஜார்… பிரக்னன்சி பில்லோ… பெல்லி பேண்ட் என்று அனைத்தையும் வாங்கி குவித்தான்.
போதா குறைக்கு லண்டனிலிருந்து வரும் பொழுதும், கால் நோகாமல் நடக்க காலனி… கர்ப காலத்தில் அணியும் வசதியான உடைகள், வயிறில் கோடு விழாமல் இருக்க லோஷன்ஸ், ட்ரை ஃப்ரூட்ஸ், ஆரோக்கிய பாணங்கள் என்று எக்கச்சக்கமாக வாங்கி வந்திருந்தான்.
கணவன் கொண்டு வந்து குவித்த பொருட்களையெல்லாம் பார்த்துவிட்டு கீர்த்தியின் முகம் மலர்வதற்கு பதில் வடித்தான் போனது.
“என்னடி செல்லம்… உனக்காகத்தான் இவ்வளவு தூரம் டிராவல் பண்ணி வந்திருக்கேன். நீ சிரிக்கவே மாட்டேங்கிற?” என்று விசாரித்தான் சீனு.
ஓரிரு நிமிடம் மெளனமாக அவனை பார்த்த கீர்த்தி, “இதெல்லாம் வாங்கின நீங்க ரெண்டு ரெண்டா வாங்கியிருக்க வேண்டாமா?” என்றாள் குழந்தையை கண்டிக்கும் தாயின் தொனியில்.
“ரெண்டா!” என்று அவன் திகைப்புடன் மனைவியை பார்த்தான்.
“கனியும் இருக்கா ல்ல… அவளுக்கும் இதெல்லாம் தேவை தானே”
ஒரு கணம் அவனுக்கு பதில் சொல்ல முடியவில்லை. பிறகு சுதாரித்துக் கொண்டு சொன்னான்.
“அதனால என்ன? ரெண்டு பெரும் ஷேர் பண்ணி யூஸ் பண்ணிக்கோங்க”
“எப்படி? ஒரு பில்லோவை ரெண்டு பேரும் கட்டி பிடிச்சுக்கிட்டு தூங்குவோமா?” என்று எரிச்சல்பட்டவள், தொடர்ந்து “அவளுக்குன்னு தனியா வாங்கி கொடுத்தாலே வேண்டான்னு சொல்லுவா… இதுல எனக்கு நீங்க வாங்கி கொடுத்ததை ஷேர் பண்ணிக்குவாளா?” என்றாள்.
“எனக்கு அதெல்லாம் தோணல கீர்த்தி”
“அது எப்படி தோணாம போகும்? ஒரே வீட்ல ரெண்டு பேரும் இருக்கோம். அவ நிலைமை உங்களுக்கு தெரியும். அவளும் சின்ன பொண்ணு தானே? ஏக்கம் இருக்காதா?”
“என்னடி பேசுற? என்னோட பொண்டாட்டிக்கு வாங்கத்தான் எனக்கு தோணும். வாங்கிட்டு வந்துட்டேன்… அது ஒரு தப்பா… நாளைக்கே போயி உன் தங்கச்சிக்கும் ஒரு செட் வாங்கிட்டு வந்துடறேன். விட்டுடு என்னை” என்றான் கடுப்புடன்.
சீனு பணத்துக்கு கணக்கு பார்க்கும் ரகம் இல்லை என்பது கீர்த்திக்கு தெரியும்.. ஆனால் அவனிடம் ‘தான்… தனது…’ என்கிற எண்ணம் மேலோங்கி இருக்கும். அதை தாண்டி யோசிக்கக் கூட கீர்த்திதான் எடுத்துக் கொடுக்க வேண்டும். இப்போதும் அவர்களுக்குள் அதுதான் நடந்து கொண்டிருந்தது. ஆனால் கனிமொழியால் அதை ஏற்றுக்கொள்ள முடியுமா!
கீர்த்தியின் மீது சரியான கோபம் கனிமொழிக்கு. நம்முடைய தேவைகளை பற்றியும் ஏக்கங்களை அவளுக்கு என்ன தெரியும்! கேட்டு தெரிந்துக் கொண்டாலும் நிறைவேற்றி கிழித்துவிடுவாளா! எதற்காக நம்மை பற்றி அவள் கணவனிடம் உளறி கொண்டிருக்கிறாள்! அவளுடைய கணவன் அவளுக்கு கண்டதையும் வாங்கி கொடுத்தால், வைத்துக் கொண்டு என்ஜாய் பண்ண வேண்டியது தானே! நம்மை எதற்காக உள்ளே இழுக்க வேண்டும்! – ஆத்திரம்… கண்மண் தெரியாத ஆத்திரம்… திறந்திருந்த ஜன்னல் கதவை இழுத்து பட்டென்று மூடினாள்.
சகோதரிகள் இருவருடைய அறையும் அடுத்தடுத்து வரும். இருவருடைய ஜன்னலும் திறந்திருந்தால் ஒரு அறையில் பேசுவது மற்றொரு அறைக்கு கேட்கும். ஏசி இருப்பதால் பொதுவாக ஜன்னலை திறப்பதில்லை. அன்றைக்கு பார்த்து இருவருமே திறந்து வைத்திருக்க, பரிமாறப்பட வேண்டாத செய்தியை சிறப்பாக பரிமாறி வைத்தது காற்று.
கோபம் தணியும் வரை அறையை விட்டு அவள் வெளியே வரவே இல்லை. இரவு உணவிற்கு தாய் அழைத்ததும் தான் கீழே இறங்கினாள். சீனுவும் கீர்த்தியும் ஏற்கனவே டைனிங் டேபிளில் இருந்தார்கள். அவர்கள் முகத்தை நிமிர்ந்துக் கூட இவள் பார்க்கவில்லை.
கீர்த்தி பலமுறை வலிய பேச்சு கொடுத்துப் பார்த்தாள். கேட்ட கேள்விக்கு பதில் சொல்வதற்கு மேல் ஒரு வார்த்தை அதிகம் பேசவில்லை கனிமொழி. முகத்தில் மட்டும் எந்த உணர்வையும் காட்டாமல் சிரமப்பட்டு மறைத்துக் கொண்டாள். சீனுவிற்கு முன் எதையும் காட்டிக்கொள்ள அவள் விரும்பவில்லை. உணவை முடித்துவிட்டு தோட்டத்தில் சற்று நேரம் நடமாடுவதாக கூறிவிட்டு கீர்த்தி வெளியே செல்ல… ஒட்டு புல் போல கூடவே ஒட்டிக் கொண்டு சென்றான் சீனு.
கனிமொழி டிவியை போட்டுக் கொண்டு ஹாலிலேயே அமர்ந்துவிட்டாள். இன்று எப்படியும் கீர்த்தியை தனியாக பிடித்துவிட வேண்டும் என்பது அவள் எண்ணம். அந்த எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ள வாய்ப்பளித்து, தண்ணீர் எடுக்க சீனு உள்ளே வந்தான். சட்டென்று எழுந்து விறுவிறுவென்று தோட்டத்திற்கு சென்ற கனிமொழி, தமக்கையிடம் நெருங்கினாள்.
“வா கனி… இங்க காத்து நல்லா வருது” – தங்கையை எதார்த்தமாக வரவேற்றாள் கீர்த்தி.
நிலவொளியில்… பெரிய வயிறும்… கைகள் நிறைய வளையல்களும்… மலர்ந்த முகமுமாக தமக்கையை பார்த்ததும், அவள் கோபமெல்லாம் வடிந்துவிட்டது. அவள் முகத்தில் தெரியும் கனிவும் அன்பும் அவள் மனதை அமைதி படுத்திவிட, ஓரிரு கணம் சகோதரியை வாஞ்சையாக பார்த்தாள் கனிமொழி.
“கால் தான் அடிக்கடி வீங்கிடுதே! எதுக்கு இவ்வளவு நேரம் நடக்குற?” என்றாள் அக்கறையாக.
“நிறைய நடக்கணும் கனி… அப்போதான் டெலிவரி ஈஸியா இருக்குமாம்… நீயும் நட” என்று சகோதரிக்கு அறிவுரை கூறினாள் கீர்த்தி. அதை பற்றியெல்லாம் நினைக்கும் நிலையிலா கனிமொழியின் மனம் இருக்கிறது!
“இல்ல… நீ நட, நா உள்ள போறேன்” என்று கூறி ஒரு கணம் தயங்கியவள் பிறகு, “உன்னோட ஹஸ்பண்ட் கிட்ட எனக்காக எதையும் வாங்கிட்டு வர வேண்டாம்னு சொல்லிடு. நா யூஸ் பண்ண மாட்டடேன்” என்று சாதாரணமாக கூறிவிட்டு உள்ளே சென்றாள். திகைத்துப் போய் நின்றுவிட்டாள் கீர்த்தி.
மகள் சொல்வதை கேட்க கேட்க மணிமேகலையின் முகத்தில் துயரம் மண்டியது. “எதுக்கும்மா ஜன்னலை திறந்து வச்சுக்கிட்டு பேசுனீங்க? அவ மனசு நொந்து போகுமேம்மா…” என்று கலங்கினார்.
“இப்படி ஆகும்னு யோசிக்கலம்மா. அவ வந்து அப்படி சொன்ன பிறகு தான் நானும் யோசிச்சேன்” என்றாள் கீர்த்தியும் வருத்தத்துடன்.
மகளிடம் சொல்லவில்லை என்றாலும் சீனுவின் மீது மணிமேகலைக்கே கொஞ்சம் வருத்தம் தான். பசியில் இருக்கும் பிள்ளையை பார்க்க வைத்துக் கொண்டு சாப்பிடுவது போல் அவனுடைய செயல்கள் எல்லாம் கொஞ்சம் அதிகப்படியாக தோன்றியது அவருக்கு.
‘அந்த தலைகாணியும் சேரும் என்ன லட்ச ரூபாயா? கனிக்கும் ஒன்னு சேர்த்து வாங்கிட்டு வந்தா குறைஞ்சிடுமா!’ என்கிற எண்ணம் முதல் நாளே அவருக்கு தோன்றியது. ஆனாலும் மாப்பிள்ளையிடம் உரிமைகாட்டி கேட்கவா முடியும்! மெளனமாக இருந்துவிட்டார். அதே மௌனத்தை மகளும் கடைபிடித்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று தோன்றியது.
“கனிக்கு தேவையானதை வாங்கி கொடுக்க பெத்தவங்க நாங்க இருக்கோம். நீ எதுக்கும்மா உன் புருஷன்கிட்ட அதையெல்லாம் கேட்ட? இதையெல்லாம் கேட்டா வாங்குறது?” என்றார் மறைக்க முயன்ற கோபத்துடன்.
“அவருக்கு இப்படியெல்லாம் யோசிக்க தெறியாதும்மா. எப்பவும் போல எனக்கு வாங்கிட்டு வந்துட்டார். நா சொன்னதும் கனிக்கும் வாங்கிட்டு வரேன்னு தான் சொன்னார். ஆனா கனிதான் வேண்டாங்கறா. மீறி வாங்கிட்டு வந்தா சத்தம் போடுவாளோன்னு இருக்கு. அவர்கிட்ட ஏதாவது கோபமா பேசிட்டான்னா என்னமா பண்ணறது?” என்றாள் பயத்துடன்.
“கனி சொன்னதுதான் கரெக்ட். அவரு எதுவும் வாங்கிட்டு வர வேண்டாம். அவரு என்னென்ன உனக்கு வாங்கிட்டு வந்தாரோ, எல்லாத்தையும் லிஸ்ட் போட்டு பேப்பர்ல எழுதி கொடு. நா போயி என் பொண்ணுக்கு நாளைக்கு எல்லாத்தையும் வாங்கிட்டு வரேன்” என்றார் ரோஷத்துடன்.
சொன்னபடியே மூத்த மக்களிடம் லிஸ்டை வாங்கி கொண்டு கடைக்குச் சென்றவர், லிஸ்டில் இருந்ததற்கும் மேலாக கடையில் என்னென்ன பொருட்களையெல்லாம் பார்த்தாரோ அத்தனையையும் வாங்கி கொண்டு வந்தார். பணம் இருந்தால் பொருட்களுக்கா பஞ்சம்! அதுதான் கடை நிறைய கொட்டி வைத்திருப்பார்களே! அத்தனையும் இப்போது கனிமொழியின் அறையில் குவிந்திருந்தது.
கனிமொழிக்கு எரிச்சல் தாளவில்லை… தமக்கையும் தாயும் ஏன் இப்படி சிறுபிள்ளை தனமாக நடந்து கொள்கிறார்கள் என்று அவளுக்கு புரியவே இல்லை. இந்த பொருட்களெல்லாம் இல்லாமல் மனிதன் வாழவே முடியாதா என்று இருந்தது அவளுக்கு. உண்மையில் அவைகளின் மீது அவளுக்கு ஆசையோ ஈடுபாடோ சிறிதும் இல்லை.
அவளுக்கு… அவளுக்குள் காய்ந்து வறண்டுக் கிடக்கும் அவள் ஆத்மாவிற்கு இப்போது தேவைப்படுவதெல்லாம் ஒன்றே ஒன்று தான்… அது அவன்… அவனுடைய அன்பு… அவனுடைய அருகாமை… தவித்த வாய்க்கு தேவைப்படும் தண்ணீர் போல, அவ்வளவு அத்தியாவசியமான தேவை, அது ஒன்று தான் இப்போது அவளுக்கு.
Comments are closed here.