கனியமுதே! – 33
966
0
அத்தியாயம் – 33
அன்று காலை வண்டிக்கு பால் அளந்து ஊற்றி கணக்கு எழுதிவிட்டு நோட்டை கையோடு வீட்டுக்கு எடுத்துக் கொண்டு வந்தான் மலையமான். குளித்து சாப்பிட்டு முடித்தவன் நிதானமாக திண்ணையில் வந்து அமர்ந்து மாத வரவு செலவு கணக்கை பார்க்க துவங்கினான்.
வீட்டுக்குள் அலமேலுவும் தாமரையும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். கீர்த்தியின் வளைகாப்பு விழாவிற்கு கிளம்ப வேண்டும். சம்மந்தி வீட்டில் நடக்கும் விஷேஷம்… போகாமல் இருக்க முடியாது. இவனிடம் எப்படி சொல்வது! – தாயும் மகளும் கையை பிசைந்துக் கொண்டிருந்தார்கள். வாசலில் நாராயணனின் பைக் சத்தம் கேட்டது.
கை கொடுக்க ஒருவர் வந்துவிட்டார் என்கிற மகிழ்ச்சியில் அவர்கள் வெளியே வந்து பார்க்க, அவரோ, மீசை துடிக்க… மேல் மூச்சு வாங்க மலையமானின் எதிரில் கடுங்கோபத்துடன் வந்து நின்றார்.
அதை கண்டு மலையமான் ஒன்றும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. காரணம் தான் அவனுக்கு தெரியுமே!
அவனுடைய பண்ணையில் மாடுகள் பெருகியிருந்தன. மேய்ச்சல் தீவனம் எல்லாம் நன்றாக இருந்ததால் பால் வளமும் செழிப்பாகவே இருந்தது. மீன் மற்றும் கோழி பண்ணையும் நட்டமில்லாமல் ஓரளவுக்கு லாபக் கணக்கையே காட்டியதால், சமீபத்தில் புதிதாக ஒரு டிராக்டர் கூட கடன் இல்லாமல் கைக்காசை போட்டு வாங்க முடிந்தது அவனால்.
டிராக்டரை தன்னுடைய பயன்பாட்டுக்கு மட்டும் வைத்துக் கொள்ளாமல் ஊரில் மற்றவர்களுக்கும் விவசாய நிலங்களை உழுவ வாடகைக்கு விட்டிருந்தான். டிரைவராக நாராயணன் தான் சென்றுக் கொண்டிருந்தார்.
நான்கு பக்கத்திலும் கால் வைத்திருந்ததால் கணக்கு வழக்கில் வெகு கெடுபிடியாக இருந்தான் மலையமான். அதன் விளைவாக நாராயணனுக்கும் அவனுக்கும் சின்ன வருத்தம் ஏற்பட்டிருந்தது.
டிராக்டர் வாடகை பணத்தை வேலை முடிந்து வரும் போதே வசூல் செய்து கொண்டு வந்துவிடும் நாராயணன் அதை சரியாக மலையமானிடம் சேர்ப்பதில்லை.
அதற்கு இதற்கு என்று செலவுக்கு கணக்கையே சொல்லிக் கொண்டிருந்தார். அதில்தான் இருவருக்கும் வருத்தம் ஏற்பட்டிருந்தது.
மலையமான் பலமுறை அவரிடம், “செலவுக்கு வேணுன்னா கேட்டு வாங்கிக்க மாமா. டிராக்டர் பணத்துக்கு கணக்கு காட்டாத” என்று நேரடியாகவே சொல்லிவிட்டான். அவர் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவன், இரண்டு நாட்களுக்கு முன் டிராக்டர் வாடகைக்கு கேட்டு வந்த ஒருவரிடம் வாடகை பணத்தை தன்னிடம் நேரடியாக கொடுக்கும்படி சொல்லிவிட்டான். அந்த விஷயம் இப்போது அவருக்கு தெரிந்திருக்கும் என்று ஊகித்தவன் நிதானமாக கணக்கு நோட்டை மூடி வைத்துவிட்டு அவரை நிமிர்ந்து பார்த்தான்.
“என்னடா நெனச்சுக்கிட்டு இருக்க? நா என்ன பிச்சைக்கார பயலா இல்ல திருட்டுப் பயலா? உன் பணத்தை எடுத்துக்கிட்டு ஓடிடுவேனா? கண்டவங்கிட்டேயும் என்கிட்ட பணம் கொடுக்க வேண்டாம்னு சொல்லியிருக்க?” என்று குதித்தார்.
“எதுக்கு இப்படி கத்துற? நிதானமா பேசு…” என்றான் மலையமான் பொறுமையாக.
“நீ என்னைய அசிங்கப்படுத்துவ! நா நிதானமா பேசணுமா? உனக்காக உழைக்கிறேண்டா. நாள் பூரா டிராக்டர் ஓட்டி கஷ்ட்டப்படறேன். வேலை செஞ்ச காசை கைல வாங்க கூடாதா?”
“தாராளமா வாங்கிக்க மாமா. நானே கொடுக்கறேன். ஆனா உன்னோட வேலைக்கு மட்டும் தான் கொடுப்பேன். டிராக்டர் பணம் என்னோட கணக்குல வந்துடும்”
“எல்லாமே உன்னோட கணக்குல தானே வருது. நீ முதலாளி.. நா, உனக்கு கீழ வேலை செய்ற வேலைக்காரன்! அப்படித்தானே!” – சீறினார்.
“வார்த்தையை விடாத மாமா. நா அந்த மாதிரி சொல்லவே இல்ல. கணக்கு வழக்கு இல்லாம நீ செலவு பண்ற. அதுக்கெல்லாம் இனி என்கிட்ட காசு இல்ல… அவ்வளவுதான்” என்று மலையமான் கத்தரித்துப் பேச, நாராயணனுக்கு தாங்க முடியவில்லை. ஏதேதோ கண்டதையும் பேசி வானத்துக்கும் பூமிக்கும் குதித்தார். இருவருக்கும் வாக்குவாதம் அதிகமானது.
“மலையா… பேசாத” என்று அலமேலு பதற, தாமரை கணவனை சமாதானம் செய்ய முற்பட்டாள். கோபத்தில் கொதித்துக் கொண்டிருந்தவர் மைத்துனனின் மீது இருந்த கோபத்தை மனைவியின் பக்கம் திருப்பி, “உன்னால தாண்டி எல்லாம்…” என்று மனைவியை இழுத்துப் போட்டு அடித்தார்.
ஒரே நொடியில் மலையமான் தன்னிலை இழந்தான். கையில் இருந்த கணக்கு நோட்டை தூக்கி எறிந்துவிட்டு திண்ணையிலிருந்து வாசலில் குதித்தவன், ஒரே தள்ளில் நாராயணனை குட்டிக்கரணம் அடிக்க வைத்துவிட்டான்.
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்துவிட்ட அந்த சம்பவத்தை யாருமே எதிர்பார்க்கவில்லை. தாயும் சகோதரனும் பார்த்திருக்க நாராயணன் மனைவியை அடித்தார். ஆனால் இப்போது அது பெரிதாக யாருக்கும் தெரியவில்லை. மலையமான் அவரை தள்ளிவிட்டது பெரும் பூதமாகிவிட்டது. அலமேலு வயிற்றிலும் வாயிலும் அடித்துக் கொண்டு அழ, தாமரை பித்துப் பிடித்தவள் போல் யார் பக்கம் போவது என்று தெரியாமல் திகைத்து நின்றாள். பிறகு மலையமானே சுதாரித்து, நாராயணனிடம் சென்று அவரை தூக்கிவிட முயன்றான்.
“கையை எடுடா… உன்ன புள்ள மாதிரி நெனச்சேன்டா… என்னையவே தள்ளி விட்டுட்டல்ல… இனிமே உனக்கும் எனக்கும் எதுவும் இல்லடா.. இன்னையோட எல்லாம் முடிஞ்சுது. அவளுக்காகத்தானே என்மேல கை வச்ச! இனி அவ இங்கேயே இருக்கட்டும். காலம் பூரா நீயே கஞ்சி ஊத்து” என்று கத்திவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
அன்று அவர்கள் வீட்டில் நடந்த களோபரத்தில் கீர்த்தியின் வளைகாப்பு இரண்டாம் பட்சமாகிவிட அதைப்பற்றி அதற்கு மேல் அங்கு யாருக்கும் யோசிக்கக் கூட முடியவில்லை.
அன்று விடிந்து வெகுநேரம் ஆகியும் கனிமொழி கீழே இறங்கி வரவில்லை. கருவுற்றிருக்கும் இரண்டு மகள்களுக்கும், சர்க்கரை நோயாளியான கணவருக்கும் சரியான நேரத்தில் உணவு தயாரித்து கொடுக்க வேண்டும் என்பதால் காலை வேலைகளில் பரபரப்பாக ஈடுபட்டிருந்த மணிமேகலைக்கு, மகளின் நினைவு ஒரு பக்கம் உறுத்திக்கொண்டே இருந்தது.
எட்டு மணி போல சிந்தாமணி வந்ததும் மாடிக்கு சென்று பார்க்க சொன்னார். “பாப்பா எழுந்துட்டு போல க்கா. பெட்டுல காணும்” என்று வந்து சொல்லிவிட்டு பாத்திரங்களை அள்ளிக் கொண்டு கழுவ சென்றுவிட்டாள் அவள்.
அதற்கு மேல் அரை மணிநேரம் கழித்தும் கனிமொழியின் நடமாட்டத்தை காணாததால் மீண்டும் ஹாலுக்கு வந்து மாடியை எட்டிப் பார்த்தார். முழங்கால் வலி மேலே ஏற தடை விதித்தது. “மணி ஒன்பதாக போகுது. இன்னும் எழுந்து வராம என்ன பண்ணுது இந்த பொண்ணு” என்று புலம்பிக் கொண்டே மீண்டும் வேலையை கவனிக்க துவங்கிவிட்டார்.
சீனு ஊருக்கு புறப்பட்டு இரண்டு நாட்களாகிவிட்டதால், தந்தையோடு சேர்ந்து அமர்ந்து காலை உணவை முடித்துவிட்டாள் கீர்த்தி. மணிமேகலை சிந்தாமணியை மீண்டும் மாடிக்கு அனுப்பினார்.
“பாத்ரூம்ல தண்ணி சத்தம் கேட்குது க்கா. பாப்பா குளிக்குது” என்று கூறிவிட்டு அவள் அடுத்த வேலையை கவனிக்க போய்விட்டாள்.
மகள் குளிக்கிறாள் என்று எண்ணி நேரத்தை கவனிக்காமல் தாய் சற்று அலட்சியமாக இருந்துவிட்டார். ஒரு மணிநேரத்திற்கு மேல் ஆகிவிட்டது. வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு, “கிளம்புறேன் க்கா” என்று சிந்தாமணி வந்து நின்றதும், “கிளம்புறியா! டைம் ஆயிடுச்சா!” என்று கையில் இருந்த மாத இதழை கீழே வைத்துவிட்டு நேரத்தை பார்த்தவர் அதிர்ந்தார்.
“என்னடி இன்னும் கனியை காணும்! என்ன பண்றா இன்னும்!” என்று சிரமப்பட்டு மாடிக்கு தானே ஏறினார். கூட சிந்தாமணியும் நடந்தாள்,
அப்போதும் அவளுடைய குளியலறையில் தண்ணீர் சத்தம் கேட்டு கொண்டிருந்தது. கதவை தட்டி, “கனி… கனி..” என்று கூப்பிட்டுப் பார்த்தால் பதிலே இல்லை. பயந்து போய் சத்தம் போட்டு அக்கம் பக்கத்து வீடுகளில் இருந்து ஆட்களை உதவிக்கு அழைத்துவிட்டார். அதற்குள் கீர்த்தி தந்தைக்கு அலைபேசியில் அழைத்து சொல்லிவிட அவரும் பதறிக் கொண்டு வந்துவிட்டார்.
வெளியே இருந்து யார் என்ன சத்தம் போட்டும் உள்ளேயிருந்து எந்த பதிலும் இல்லாததால், கதவை உடைப்பதை தவிர வேறு வழி இல்லாமல் போனது. உள்ளே இருப்பது பெண் என்பதாலும் அது குளியலறை என்பதாலும் சூழ்நிலை சற்று சங்கடமாகத்தான் இருந்தது. ஆனால் வேறு வழியில்லை… ஆட்கள் கதவை உடைக்க, மணிமேகலை முதலில் உள்ளே சென்று பார்த்தார். மூச்சு பேச்சு இல்லாமல் தரையில் கிடந்தாள் கனிமொழி.
பல் துலக்க வந்த போதே விழுந்திருப்பாளோ என்னவோ! சிங்கிள்தான் தண்ணீர் கொட்டிக் கொண்டிருந்தது. “ஐயோ! ஐயோ!” என்று அடித்துக் கொண்ட மணிமேகலை ஆட்களை உள்ளே அழைத்து மகளை தூக்கச் சொன்னார். முதலுதவி கொடுத்து மயக்கத்திலிருந்து எழுப்ப முயன்றார்கள். அவளோ மரக்கட்டை போல் கிடந்தாள். அதற்கு மேல் தாமதிக்கக் கூடாது என்று மருத்துவமனைக்கு தூக்கிவிட்டார்கள்.
ஒரே ஊசி… பத்து நிமிட நேரம்… அவ்வளவுதான். கண்விழித்துவிட்டாள் கனிமொழி… ஆனால் அவளை சுற்றி நின்றவர்கள் எல்லாம் சற்று நேரத்திற்குள் செத்துப் பிழைத்துவிட்டார்கள்.
“பிபி ரொம்ப லோவா இருக்கு. சாப்பிடுவாளா மாட்டாளா?” என்று கேட்டபடியே பிரிஸ்கிரிப்ஷனை கிறுக்கினார் மருத்துவர்.
மணிமேகலை பதில் சொல்ல முடியமால் திணற, அங்கப்பன், “அதுக்கு கொஞ்சம் ஸ்ட்ரெஸ்” என்று மகளுடைய நிலையை விளக்கினார்.
“ரொம்ப நாள் இப்படி இருக்க கூடாது சார். சீக்கிரம் சரி பண்ண பாருங்க. பிபி ஃபிளக்சுவேஷன் இவ்வளவு இருந்தா டெலிவரி டைம்ல ப்ராப்லம் ஆகும். ஏதாவது காப்பிளிகேஷன்ஸ் வந்தா ஆப்பரேஷன் கூட பண்ண முடியாது. ஜாக்கிரதை” என்று கூறி மருந்து சீட்டை நீட்டினார்.
பத்தோடு பதினொன்று… அத்தோடு இது ஒன்று என்பது போல அவர் பேச, பெற்றவர்களின் வயிற்றில் புளியை கரைத்தது. அவர்களுக்குத்தானே மகள்! மற்ற எல்லோருக்கும் சாதாரணம் தான்… மலையமானுக்குக் கூட…! – அப்படிதான் அவர்களுக்கு தோன்றியது. ஆனால் உண்மையில், மலையமானுக்கு கனிமொழி சாதாரணம் தானா!
Comments are closed here.