கனியமுதே! – 34
1043
0
அத்தியாயம் – 34
கனிமொழிக்கு மனதோடு சேர்ந்து உடலும் பாதிக்கப்பட்டு வருவதை கண்டு பெற்றோருக்கு பதட்டம் அதிகமானது. பிரசவ நேரத்தில் பிரச்சனை வரக் கூடும் என்று அந்த மருத்துவர் எச்சரித்தது பெரும் பீதியை கிளம்பியிருக்க இரவில் உறங்கவே முடியவில்லை அவர்களுக்கு.
மாடியில் மகள் தனியாக இருந்து மீண்டும் அங்கே மயங்கி விழுந்து தங்களுக்கு தெரியாமல் போய்விட்டால் என்ன செய்வது என்கிற பயத்தில் அவளுடைய அறையை கீழே மாற்றினார்கள். இரவில் அவளை தனியாக விடாமல் மணிமேகலை மகளோடு படுத்துக் கொண்டார். கைக்குழந்தை மேல் எப்போதும் ஒரு கண் வைத்திருப்பது போல, பகல் நேரங்களில் அவள் மீது மணிமேகலையின் பார்வை இருந்துக்கொண்டே இருந்தது.
இப்படியே மேலும் ஒரு மாதம் கழிந்துவிட, கனிமொழியின் கர்பம் ஆறாவது மாதத்தை அடைந்திருந்தது. கீர்த்திக்கு செய்தது போலவே கனிமொழிக்கும் வளைகாப்பு செய்துவிட வேண்டும் என்பது பெற்றோரின் எண்ணம். ஆனால் அதற்கு மலையமானும் ஒத்துழைக்க வேண்டுமே! அங்கப்பன் மீண்டும் தன் முயற்சியை தொடங்கினார்.
இந்த முறை மலையமானிடம் நேரடியாக பேசுவதை தவிர்த்து அலமேலுவை பிடித்தார். “பொண்ணுக்கு வளைகாப்பு பண்ணனும் க்கா. உங்க வீட்டு மருமக. நல்லதோ கெட்டதோ… எதுவா இருந்தாலும் நீங்க தான் பார்த்து செய்யணும். செய்ங்க” என்று கூறிவிட்டு கிளம்பினார்.
இப்போது பெரிய பொறுப்பு ஒன்று அலமேலுவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. மகனிடம் பலமுறை அதைப் பற்றி பேச முயன்றார் தாய். அவனோ பிடி கொடுக்காமல் ஓடிக் கொண்டே இருந்தான். அப்படியும் ஒருநாள் பிடித்து நிறுத்தி, “வளைகாப்பு போடணும். உன் கோபத்தையெல்லாம் கொஞ்சம் விட்டுட்டு இறங்கி வாப்பா ” என்று கூறினார்.
வெளியே கிளம்பியவன் அப்படியே திண்ணையில் அமர்ந்துவிட்டான். அரை மணிநேரத்திற்கு அங்கிருந்து எழவே இல்லை. என்ன யோசித்தானோ! முகமெல்லாம் சிவந்து… கன்றிப்போய்… பார்க்கவே சகிக்கவில்லை தாய்க்கு.
‘என் புள்ள இவ்வளவு பாடுபடறானே! அவன் மனசுக்குள்ள என்னன்னெல்லாம் ஓடுதோ தெரியலையே!’ என்று மருகியவர் அவனுடைய என்ன ஓட்டங்களை தடை செய்யாமல் அவனை தனிமையில் விட்டுவிட்டு விலகிச் சென்றுவிட்டார்.
‘வளைகாப்பு’ என்று சொன்னதுமே அவன் முகத்தில் அத்தனை உணர்வு போராட்டங்கள் தெரிந்தது. மகனுக்கு அப்படி ஒன்றும் பாசம் அற்று போய்விடவில்லை என்று அவருக்கு நன்றாகவே புரிந்தது. ஆனால் மனைவியை சேர்த்துக்கொள்ள மட்டும் பிடிவாதமாக மறுக்கிறான். அந்த பிடிவாதத்தை வலுக்கட்டாயமாகத்தான் உடைக்க வேண்டும் என்று நினைத்தவர், அலைபேசியை எடுத்து அங்கப்பனுக்கு அழைத்தார்.
“நீங்க வளைகாப்புக்கு நாள் குறிச்சிட்டு பிள்ளையை கொண்டு வந்து இங்க வீட்ல விடுங்க. நா மலையணுகிட்ட பேசிக்கிறேன். வீட்டுக்கு வந்து நிக்கிற பொண்ண அப்படி ஒன்னும் கழுத்த பிடிச்சு வெளியே தள்ளிட மாட்டான். நா பார்த்துக்கறேன்” என்றார்.
அங்கப்பனுக்கு அதில் கொஞ்சம் தயக்கம் இருக்கத்தான் செய்தது. அவனுடைய சம்மதம் இல்லாமல், பிடிவாதமாக திணித்துவிடுவது போல் மகளை அங்கு கொண்டு போய் விடுவது சரி வருமா என்று தயங்கினார். ஆனால் மணிமேகலைக்கு அப்படி எந்த தயக்கமும் இல்லை. மகளின் துன்பம் எந்த வகையிலாவது தீர்த்தாள் சரி என்பதே அவருடைய கொள்கை. அதற்காக யாரை பிடிவாதப்படுத்தினாலும், கட்டிப்போட்டு காரியம் சாதித்தாலும் அவருக்கு பிரச்சனை இல்லை.
“அந்த அம்மா வர சொல்லிட்டாங்கன்னா கனியை அனுப்ப வேண்டியது தான். அவங்களுக்கு சமாளிக்கிற திறமை இல்லாமலா வர சொல்லியிருப்பாங்க” என்றார்.
“இருந்தாலும், மாப்ள வர சொல்லாம எப்படி…” என்று இழுத்தார் அங்கப்பன்.
“நிலைமை பழையபடி இருந்திருந்தா நானே கனியை அங்க அனுப்பியிருக்க மாட்டேன். ஆனா இப்போ அவ மனசு அவனையே சுத்திகிட்டு கெடக்கு. அதெல்லாம் பொண்ணா பிறந்தவங்களுக்குத்தான் புரியும். நீங்க எதையும் போட்டு குழப்பாம, ஐயரை பார்த்து நல்ல நாள் குறிச்சு வாங்கிட்டு வாங்க” என்றார்.
விரைவிலேயே நாள் குறிக்கப்பட்டது. அலமேலு வளைகாப்புவை ஊர் கோவிலில் வைத்துக்கொள்ளலாம் என்றார். மணிமேகலைக்கு மட்டும் மூத்தமகளுக்கு செய்தது போலவே இளையவளுக்கும் பிரம்மாண்டமாக செய்து பார்க்க வேண்டும் என்கிற ஆசை இருத்தது. ஆனால், கனிமொழியே அதற்கு தடை சொன்னாள். கோவிலிலேயே தன்னுடைய வளைகாப்பு நடக்கட்டும் என்றாள். அதனால் இறுதியில் அதுவே முடிவானது.
வளைகாப்புக்கு இன்னும் இருபது நாட்கள் இருந்தன. கனிமொழியை வீட்டில் கொண்டு வந்து விடும்படி அலமேலு ஒருமுறைக்கு இருமுறை அழுத்திச் சொன்ன பிறகு அன்று மணிமேகலையும் அங்கப்பனும் மகளை அழைத்துக் கொண்டு புறப்பட்டார்கள்.
அத்தியாவசிய தேவைக்கான பொருட்களை மட்டும் ஒரு பெட்டியில் அடுக்கி எடுத்துக்கொண்டு பெற்றோருடன் கிளம்பினாள் கனிமொழி. அலமேலுவும் தாமரையும் வாசலிலேயே காத்திருந்தார்கள். மகனைப் பற்றிய பயம் மனதிற்குள் இருந்தாலும், அதை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு, அவளை ஆலம் சுற்றி வீட்டுக்குள் அழைத்தார்கள்.
கனிமொழி வந்திருக்கிறாள் என்று தெரிந்து அக்கம் பக்கத்து தோப்புக்காரர்கள் எல்லாம் அவளை வந்து பார்த்து நலம் விசாரித்துவிட்டு சென்றார்கள்.
கனிமொழியின் பெற்றோரை அலமேலு நன்றாக உபசரித்து சாப்பிட சொன்னார். அவர்கள் வேண்டாம் என்று மறுத்துவிட நீர் மோர் கலக்கிக் கொடுத்தார். அதை மறுக்காமல் வாங்கி அருந்தியவர்கள் ஒரு மணிநேரத்திற்கு மேலாக அங்கே இருந்தார்கள். மலையமான் வரவில்லை. அவனை சந்தித்துவிட்டு செல்லலாம் என்று அங்கப்பன் சற்று தாமதித்தார். ஆனால் கனிமொழி, “நா பார்த்துக்கறேன். நீங்க கிளம்புங்க” என்று பெற்றோரை அனுப்பி வைத்தாள்.
வெகு நாட்கள் கழித்து வந்திருந்தாலும் அந்த வீடு அவளுக்கு அந்நியமாக தோன்றவில்லை. அந்த வீட்டின் வாசத்திலும் காற்றிலும் அவளுடைய உணர்வுகள் கலந்திருந்தன. மனதிற்குள் இனம்புரியாத மகிழ்ச்சி ஊற்றெடுத்தது. மலையமான் எப்போது வருவான் என்கிற எதிர்பார்ப்பும், வந்து தன்னை பார்த்துவிட்டு கத்துவானோ என்கிற பயமும் கலந்த கலவையான உணர்வோடு அவனுக்காக காத்திருந்தாள்.
“அசதியா இருக்கும். கொஞ்ச நேரம் படுத்து தூங்கேன் கண்ணு” என்றார் அலமேலு.
“இருக்கட்டும் அத்த…” என்றாள் கனிமொழி.
வெடுக்கென்று சமையலறையிலிருந்து எட்டிப் பார்த்தாள் தாமரை. ‘அத்தையா!!!’ என்று எக்களித்தது அவள் மனம். வந்த சிரிப்பை உதட்டுக்குள் அடக்கிக் கொண்டு தாயை பார்த்து, ‘ம்ம்…ம்ம்ம்…’ என்றாள் கேலியாக. எல்லாம் கனிமொழியின் பார்வையில் படாமல் மறைந்து நின்றுதான்…
அலமேலுவுக்கும் ஆச்சரியம் தான். ஆனால் அவர் காட்டிக் கொள்ளவில்லை. முதிர்ச்சியின் பக்குவம் அவரிடம் இருந்தது. மருமகளின் மாற்றத்தை இயல்பாக ஏற்றுக் கொண்டவர், “சரி, அப்படின்னா ட்ரஸ்ஸையாவது மாத்திக்க. இந்த புடவை ரொம்ப கனமா இருக்க மாதிரி தெரியுது” என்றார்.
மலையமானுக்காகத்தான் புடவை உடுத்திக் கொண்டு வந்திருந்தாள் கனிமொழி. அதை அவன் வருவதற்கு முன் மாற்ற விரும்பாமல், “அவர் ஏன் இன்னும் வீட்டுக்கு வரல. இந்நேரம் வந்திருக்கணுமே!” என்றாள்.
“எங்க கண்ணு… இப்பல்லாம் காலையில வந்து குளிச்சிட்டு போறவன் அப்புறம் சாமத்துல தான் வாரான். சில நாளைக்கு அதுவும் இல்ல…” என்றார் வருத்தத்துடன்.
கனிமொழி மௌனமாகிவிட்டாள். ‘அப்படின்னா இப்போதைக்கு வரமாட்டானா!’ – ஏமாற்றத்துடன் பெருமூச்சுவிட்டாள்.
அதற்கு பிறகு சற்று நேரம் மாமியாரோடு சாதாரணமாக பேசிக் கொண்டிருந்தாள். தாமரை, பேசினோம் என்றும் இல்லாமல் பேசவில்லை என்றும் இல்லாமல் பட்டும் படாமலும் ஓரிரு வார்த்தைகள் கேட்டுக் கொண்டதோடு சரி.
ஆனால் கனிமொழி அபிக்குட்டியை பற்றி அதிகம் விசாரித்தாள். அது தாமரையின் மனதிற்கு சமாதானமாக இருந்தது.
“வெயிலுக்கு நல்லது குடி” என்று கனிமொழிக்கு குடிக்க ஜூஸ் போட்டுக் கொடுத்தாள்.
“தேங்க்ஸ் அண்ணி” என்று கனிமொழி வாங்கி கொண்டதும், சட்டென்று தாமரையின் முகம் மலர்ந்துவிட்டது.
“இருக்கட்டும்… இருக்கட்டும்.. தேங்க்ஸ் எல்லாம் எதுக்கு” என்று அவள் வாய் சொன்னாலும், மனம், கனிமொழியின் ‘அண்ணி’ என்கிற அழைப்பில், பூரித்து புளங்காகிதம் அடைந்தது.
வாயெல்லாம் பல்லாக, ‘என்னையும் கூப்பிட்டுட்டா’ என்பது போல தாயை வெற்றி பார்வை பார்த்தாள்.
வெகு நாட்களுக்குப் பிறகு உண்மையிலேயே அந்த ஒரு நொடி அலமேலுவுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. சந்தோஷத்துடன் இருவருக்கும் சேர்ந்தார் போல் கையை சுற்றி தலையில் வைத்து நெட்டி எடுத்து திருஷ்டி கழித்து, “சந்தோஷமா இருங்க” என்றார். அவர் அதை சொன்ன நேரம் வாசலில் பைக் சத்தம் கேட்டது. ‘வந்துட்டான்!’ – மூவரிடமும் சட்டென்று ஒரு விறைப்பு வந்து ஒட்டிக் கொண்டது.
தெந்தந்தோப்பில் வேலை செய்து கொண்டிருந்த போது, பக்கத்துத் தோப்புக்காரர் அவருடைய தோப்பிலிருந்து குரல் கொடுத்தார்.
“என்ன மலையா, உன் பொண்டாட்டி வீட்டுக்கு வந்துருக்கு போல. நீ இங்க நிக்கிற!”
அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. ‘என்ன சொல்றாரு இந்த மனுஷன்!’ என்று குழம்பியவன்,
“உனக்கு யாரு சொன்னது?” என்றான் இந்த பக்கத்திலிருந்து.
அவன் குரலிலிருந்த கடுகடுப்பை கண்டுகொள்ளாமல், “என் பொண்டாட்டித்தான் சொன்னா. இப்படித்தான் பார்த்துட்டு வந்தாளாம். என்னனு போயி பாரு. சண்ட கிண்ட போட்டுடாத. வாயும் வயிறுமா இருக்க பொண்ணு… பாவம்” என்றார் கரிசனமாக.
உண்மைதான்… இப்போது ஊரில் உள்ளவர்கள் எல்லாம் இவனைத்தான் கொடுமைக்காரன் போல பார்த்தார்கள். அதற்கும் கனிமொழியின் மீதுதான் அவனுக்கு கோபம் வந்தது. செய்வதையெல்லாம் அவள் செய்துவிட்டு இப்போது அவனை வில்லனாக்கிவிட்டாளே என்று.
அவருடைய பேச்சை புறந்தள்ளிவிட்டு வேலையை தொடர முயன்றான். ஆனால் முடியவில்லை. மனதிற்குள் ஒருவித இறுக்கம்… புழுக்கம்… வண்டியை எடுத்துக் கொண்டு உடனே வீட்டுக்கு புறப்பட்டான்.
வாசலில் கொட்டிக்கிடந்த திருஷ்டித் தண்ணி, வாசற்படி ஓரத்தில் கிடந்த அவளுடைய காலனி எல்லாம் அவளுடைய வரவை உறுதிப்படுத்த அவன் தாடை இறுகியது.
ஊர் முழுக்க அவனை அசிங்கப்படுத்திவிட்டு இப்போது நல்லவள் வேஷம் போட்டுக் கொண்டு இங்கு எதற்கு வந்திருக்கிறாள் என்கிற ஆத்திரத்துடன் வீட்டுக்குள் நுழைந்தான்.
கணவனை பார்த்ததுமே அடிவயிற்றிலிருந்து தொண்டைக்குழி வரைக்கும் என்னவென்றே சொல்ல முடியாத… மகிழ்ச்சியும் துக்கமும் கலந்த கலவையான ஒரு உணர்வு சுழன்றடித்தது கனிமொழிக்கு. புது இரத்தம் பாய்ந்து முகம் குபீரென்று சிவந்துவிட உடல் வெடவெடவென்று நடுங்கியது.
சேரில் அமர்ந்த்திருந்தவள் கையை ஊன்றி மெல்ல எழுந்து நின்றாள். சுவாசத்தின் வேகம் கூடி, இதயத் துடிப்பை அதிகமாக்கியிருந்தது. அவன் ஏதாவது கேட்டால் கூட அவளால் பதில் சொல்ல முடியாது. அப்படி ஒரு நிலை…
மலையமான் அவளை நிலைத்துப் பார்த்தான். உடல் ஊதி, முகம் வீங்கி, வயிறு பெரிதாகி அடையாளமே தெரியாதபடி மாறியிருந்தாள். அவளை அப்படி பார்த்த முதல் கணம் அவன் தடுமாறி நின்றது உண்மை. ஆனால் தன்னை மீட்டுக்கொள்ளும் திறன் அவனிடம் இருந்தது.
நெரிந்த புருவங்களுடன் தாயின் பக்கம் திரும்பி, ‘என்ன இது?’ என்பது போல் பார்த்தான்.
“வளைகாப்பு போடணும்ல்ல ப்பா… அதான் வர சொன்னேன்” என்றார் அவர் கெஞ்சுதலாக. குரலில் அப்பட்டமான பயம் தெரிந்தது.
அவன் பதிலே சொல்லவில்லை. ஆனால் தாடை இறுகி உதடுகள் அழுந்த மூடிய விதத்திலேயே அவனுடைய கோபம் தெரிந்தது.
தான் இந்த அளவுக்கு இறங்கி வந்த பிறகும் தன்னிடம் ஒரு வார்த்தை பேசாமல் அப்படி அவன் முகத்தை திருப்பிக் கொண்டதில் காயப்பட்டு போனாள் கனிமொழி. இது அவள் எதிர்பார்த்ததுதான் என்றாலும் மனதிற்குள் ஒரு சின்ன நம்பிக்கையும் இருந்தது. இந்த நிலையில் தன்னை பார்த்த பிறகு அவன் மனம் இளக கூடும் என்கிற நம்பிக்கை. அது பொய்த்துப் போய்விட்ட வேதனையை அவள் ஜீரணிக்க போராடிக் கொண்டிருந்த போது, அவன் யாரிடமும் எதுவும் சொல்லாமல் மீண்டும் வாசல் பக்கம் போனான்.
அலமேலு ‘அப்பாடா…’ என்று பெருமூச்சுவிட்டார். நல்ல வேளையாக அவன் எதுவும் சத்தம் போட்டு அந்த பெண்ணை காயப்படுத்திவிடவில்லை என்கிற ஆசுவாசம் அவருக்கு. ஆனால் அவன் தான் வாயை திறக்காமலே அவளை காயப்படுத்திவிட்டானே!
தாமரை மெல்ல வாசல் பக்கம் எட்டிப் பார்த்துவிட்டு, “போன் பேசிகிட்டு இருக்கான்” என்றாள் கிசுகிசுப்பாக.
“பேசட்டும் பேசட்டும்… எப்படியோ நம்மகிட்ட பிரச்னை பண்ணாத வரைக்கும் நல்லது” என்று மகளிடம் கூறிவிட்டு, “போக போக எல்லாம் சரியாயிடும் கண்ணு” என்று மருமகளுக்கு ஆறுதல் சொன்னார் அலமேலு.
கனிமொழி ஆமோதிப்பாக தலையசைத்தாள். ஆனால் அவள் முகம் களையிழந்து விட்டது.
ஒரு பத்து நிமிடம் கழிந்திருக்கும்… மீண்டும் வீட்டுக்குள் வந்தான் மலையமான். யாரையும் நிமிர்ந்து பார்க்காமல், திருமணத்தின் போது கனிமொழி கொண்டு வந்த இரண்டு பெட்டிகளையும் கட்டிலின் மீது எடுத்துவைத்து, அவளுடைய பொருட்களையெல்லாம் அதில் அள்ளி போட்டு மூடினான்.
‘இவன் என்ன செய்கிறான்!’ என்று புரியாமல் எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்க, வாசலில் ஒரு கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. கனிமொழியின் முகம் இருண்டு போனது. நெஞ்சு நின்றேவிடும் போல் இருந்தது.
“மலையா! என்ன பண்ற நீ?” – அதட்டினாள் தாமரை.
“ஐயோ! நா என்ன செய்வேன்” என்று அலமேலு அலறினார்.
எதையும் அவன் காதில் வாங்கவில்லை. மனைவியின் பழைய பெட்டி இரண்டு புது பெட்டி ஒன்று… மூன்றையும் எடுத்துச் சென்று காரின் டிக்கியில் ஏற்றி மூடிவிட்டு, வீட்டுக்குள் நுழைந்தான்.
அன்பு.. பாசம்.. இரக்கம்.. கனிவு.. என்று எந்த மென்மையான உணர்வுகளும் இல்லாத இயந்திரம் போல் இறுகிப்போன முகத்துடன் மனைவியை ஏறிட்டு பார்த்தான். அவளுடைய பார்வை தவிப்புடன் அவன் கண்களை தழுவியது. அவனிடம் எந்த எதிர்வினையும் இல்லை.
அவள் கையை பிடித்து தரதரவென்று இழுக்காத குறையாக வெளியே அழைத்துக் கொண்டு வந்து காருக்கு அருகில் நிறுத்தி, காரின் கதவை திறந்துவிட்டு, “கிளம்பு” என்றான்.
அவன் முகத்தையே விழியாகற்றாமல் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு, கடகடவென்று கண்ணீர் கொட்டிவிட்டது.
அந்த கண்ணீரை இன்னும் சற்று நேரம் பார்த்தல் கூட தன் உறுதி உடைந்துவிடும் என்று பயந்தானோ என்னவோ, சட்டென்று பார்வையை அவளிடமிருந்து பிரித்து ட்ரைவரை பார்த்து, “வீடு தெரியும்ல… கொண்டு போயி விட்டுடு” என்றான்.
அவன் டிரைவரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது, அவனுடைய இரண்டு கன்னங்களையும் தாங்கி தன் பக்கம் திருப்பியது அவளது மென் கரங்கள். இப்போது அவனுக்கு அதிர்ச்சி… அவனுடைய இதயம் படபடவென்று பறையறைந்தது.
கனிமொழி கணவனின் முகத்தை கைகளில் ஏந்தி அவன் கண்களுக்குள் பார்வையால் உறவாடினாள். என்ன நடக்கிறது என்று புரியாமல் அவன் திகைத்து நிற்கும் போதே, எக்கி அவன் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டாள். ஒருவரை ஒருவர் பார்த்தபடி ஓரிரு நொடிகள் மெளனமாக கழிந்த பிறகு, “எனக்கு நெஜமாவே தெரியல… அப்படி என்ன நா பண்ணிட்டேன்” என்றாள் மெல்லிய குரலில். அந்த குரலில் இருந்த இயலாமை… வருத்தம்… ஏக்கம்… எதற்கும் வார்த்தைகள் இல்லை. வார்த்தைகளுக்குள் அடைத்துவிட முடியாத உணர்வுகள் அவை…
இப்போது மலையமானுக்கு நெஞ்சை அடைத்தது காதுகளுக்குள் ‘ஓ’ வென்ற இரைச்சல்… அன்று அவள் பேசிய வார்த்தைகள் எப்படி அவனை பாதித்ததோ, அதற்கு சற்றும் குறைவில்லாமல் இந்த முத்தமும் அவனை புரட்டிப் போட்டுவிட்டது. அசையவே முடியாமல் ஸ்தம்பித்துப் போய் நின்றுவிட்டான்.
“தங்கத்துல தாலி கட்டி
தலவாழ விருந்து வச்சு
தானியமும், தனமூமா…
வண்டிகட்டி வந்தவளே…
கட்டுனவன் தொணையில்லாம
தருசாத்தான் போனியம்மா…!
வண்டி மாட்டு சீரோட
வயக்காட்டு வரப்போட
வாக்கப்பட்டு வந்தவளே!
வீடு வந்து சேராம
வாசலோடு போனியம்மா…!
வாழா வம்சமுன்னு
வழிவழியா வந்த சொல்ல
வழக்கொழிக்க வேணுமுன்னு,
கொல கொழுத்த சொமந்துக்கிட்டு
கெவுருதியா வந்தவளே
கொண்டவன் தொணையில்லாம
கெட்டழிஞ்சு போனியம்மா…!” – ஒப்பாரி வைத்து ஓங்கி அழும் அலமேலுவின் குரலில் தாயின் பக்கம் திரும்பிப் பார்த்துவிட்டு, மனைவியை பார்த்தான். அதற்குள் அவள் காரில் ஏறி அமர்ந்திருந்தாள். அவன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே கார் மெல்ல நகர்ந்து வேகமெடுக்க, எலாஸ்டிக் இழுப்படுவது போல இவன் உயிர் இழுபட்டு அவளோடு சென்றுக் கொண்டிருந்தது.
‘விட்டுட்டியேடா… விட்டுட்டியேடா…’ என்று மனசாட்சி அவனை சாட்டை கொண்டு விளாச துவங்கியதும் அவன் தவித்துப் போனான். ‘இவ்வளவு நாளும் அவ தானே தப்பு செஞ்சான்னு நெனச்சுக்கிட்டு இருந்தோம்! இப்போ எப்படி நமக்கு இந்த குற்றவுணர்ச்சி!’ என்கிற எண்ணமும் குறுக்கே ஓடியது. ஒன்றும் புரியவில்லை. புரிந்துகொள்ள முயலும் நிலையிலும் அவன் இல்லை.
சட்டென்று வண்டியில் ஏறி, உதைத்துக் கிளப்பிக் கொண்டு விரைந்தான். ஓட்டை வண்டியை வைத்துக் கொண்டு காரை விரட்டிப் பிடிப்பதென்றால் சாதாரணமா! காற்று வேகத்தில் பறந்து வந்து காரை மடக்கி நிறுத்தினான்.
ட்ரைவர் எட்டிப் பார்த்து “என்னண்ணே?” என்றான்.
“வண்டியை திருப்பு”
“எங்கண்ணே! வீட்டுக்கா?”
“ஆமாடா… ஏழு தரம் சொல்லனுமா? வண்டியை திருப்பு” – தன் மீது எழுந்த கோபத்தை அவன் பக்கம் திருப்பி எரிந்து விழுந்தவன், மறந்தும் கனிமொழியின் பக்கம் திரும்பவில்லை. அவளும் அவனை நிமிர்ந்து பார்க்கவில்லை. பார்த்தால் உடைந்துவிடுவோம் என்று அவளுக்கு தெரியும்.
“சரிண்ணே… சரிண்ணே…” என்று ட்ரைவர் வண்டியை திருப்பிக் கொண்டு ஊருக்குள் செல்ல, மலையமான் ஊருக்கு வெளியே வண்டியை விட்டான்.
Comments are closed here.