Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

நிழல் நிலவு-52

அத்தியாயம் – 52

கதவை தாழிட்டு திரும்பிய அர்ஜுன் ஹோத்ராவின் பார்வை, அடிபட்ட மயில் போல் மெத்தையில் உணர்வற்று கிடந்தவள் மீது படிந்தது. கால்கள் வேரூன்றி போனவனாக ஓரிரு நிமிடங்கள் அவளை பார்த்துக் கொண்டே நின்றவன் பிறகு குளியலறைக்குள் சென்று இலகுவான இரவு உடையில் திரும்பினான். கட்டிலுக்கு அருகே சைட் டேபிளில் இருந்த தண்ணீர் குடுவையை எடுத்து தொண்டையில் சரித்துக் கொண்டு, மெத்தையில் அமர்ந்தான். போர்வையை அவள் மீது இழுத்து போர்த்திவிட்டு அதிலேயே தன்னையும் புதைத்துக் கொண்டு அவள் அருகில் நெருங்கிப் படுத்தான்.

திடுக்கிட்டு எழ முயன்றாள் மிருதுளா. பின்னாலிருந்து அவள் வயிற்றை வளைத்துப் பிடித்து அனாசயமாக அவளை தன்னோடு அணைத்துக் கொண்டவன், “ஷ்ஷ்ஷ்… காம் டௌன்…” என்றான் சன்னமான குரலில்.

“அர்ஜுன்…!” – மிருதுளாவின் பதட்டம் நடுங்கும் அவள் குரலில் தெரிந்தது.

பகலெல்லாம் உறங்கிவிட்டதாலோ என்னவளோ உறக்கம் வராமல் விழித்துத்தான் கிடந்தாள் மிருதுளா. அர்ஜுன் உள்ளே வந்தது அவளுக்குத் தெரியும். அவள் அறையில் இருக்கும் போது அவன் உள்ளே வருவதும் போவதும் சகஜம் தான் என்பதால் அவள் அதை பெரிதாக எண்ணவில்லை. உறங்குவது போல் கண்களை மட்டும் மூடிக் கொண்டு அசையாமல் படுத்திருந்தாள். அவன் போர்வையை போர்த்திவிட்ட போது கூட அவளுக்கு வித்தியாசமாக எதுவும் தோன்றவில்லை. போர்த்திவிட்ட பிறகு வெளியே சென்றுவிடுவான் என்றுதான் நினைத்தாள். ஆனால் இது பெரிய அதிர்ச்சி. எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்தால் இப்படி செய்வான்? – கொதித்துப் போனாள்.

அவனிடமிருந்து விடுபட திமிறியபடி, “ஐம் நாட் யுவர் டாய்… விடுங்க என்னை” என்றாள் கோபத்துடன்.

வலிமையான அவன் கரங்களும் தூணை ஒத்த கால்களும் அவள் முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க, சுலபமாக அவள் பின்னங்கழுத்தில் முகம் புதைத்தான். அவள் இதயம் வெடித்துவிடுவது போல் அடித்துக் கொண்டது. பீதியோ பயமோ அடிவயிற்றில் பந்தாய் சுருண்டது. நெஞ்சுக்குழிக்குள் சுரந்த ஒரு விசித்திர உணர்வு அவள் புலன்களை கட்டுப்படுத்த முயல அதிலிருந்து மீண்டு அவள் அவனை எதிர்க்க முயன்றாள்.

“யு ஆர் மேரீட் அர்ஜுன்” என்று அதீத பதற்றத்துடன் நிதர்சனத்தை அவனுக்கு நினைவுபடுத்தினாள்.

அவனோ செவிப் புலனற்றவன் போல் முன்னேறி அவள் செவிமடலில் இதழ்பதித்தான்.

அவள் உடல் வெடவெடத்தது. அவமானம்… தோல்வி… ஏதேதோ எதிர்மறை உணர்வுகள் அலைபோல் மேலெழ, “ஐயோ அர்ஜுன்… ஏன் இப்படி என் பார்வையில ரொம்ப தாழ்ந்து போறீங்க?” என்று வெடித்து பீறிட்ட குமுறலுடன் வார்த்தைகள் வெளியே வந்து விழுந்தன.

ஒரு கணம் அசைவற்று போனவன், உடனே சுதாரித்து, “பிகாஸ் தட்ஸ் ஹௌ ஐ ஆம்” என்றான். கதறியழுதாள் மிருதுளா. தான் அப்படித்தான் என்று எத்தனை சுலபமாக கூறிவிட்டான்!

“இல்ல அர்ஜுன்… நா இன்னமும் உங்கள நம்பறேன். உங்ககிட்ட சரியான காரணம் இருக்கும். இந்த மாதிரி பண்ணாதீங்க. எனக்கு உங்கள நெகட்டிவா பார்க்க வேண்டாம்… ப்ளீஸ்…” – அவள் உடல் குலுங்கியது.

சட்டென்று உறைந்து போனான் அர்ஜுன். மரக்கட்டை மனிதன் போல் அவளை இறுக்கிப் பிடித்திருந்த நிலையிலேயே அசைவற்றிருந்தான். தன் உணர்வில் ஆட்பட்டு உழன்றுக் கொண்டிருந்தவள் அவனிடம் தெரிந்த மாற்றத்தை உணர்ந்து கொள்வதற்குள் அவன் மீண்டுவிட்டான்.

இறகு போல் எடையற்றிருந்தவளை லாவகமாக தன் பக்கம் திருப்பி விடிவிளக்கின் வெளிச்சத்தில் அவள் முகம் பார்த்தான். முகமெல்லாம் சிவந்து வீங்கி கண்ணிமைகள் தடித்து யாரோ போல் இருந்தாள். அவன் உதடுகள் அழுந்த மூடின.

ஒற்றை விரலால் மென்மையாக அவள் நெற்றி கட்டை வருடியபடி மெல்ல பேசினான்.

“என்னை நம்ப வேண்டிய நேரம் முடிஞ்சிடிச்சு ஹனி. இனி என்னோட கொடூரத்தை சாத்திக்கிற மனநிலையை வளர்த்துக்க” – பிசிறற்ற குரலில் அவன் கூறிய விதம் அவளுக்குள் கூர் ஈட்டியாய் பாய்ந்தது.

சகித்துக் கொண்டு, “யு காண்ட் ஹர்ட் மீ” என்றாள்.

காயம்பட்ட அவள் நெற்றியில் முத்தமிட்டு, “இதை மறந்துட்டியா?” என்றான் இறங்கிய குரலில். எவ்வளவு முயன்றும் அந்த நேரத்தில் அவன் குரலில் வெளிப்பட்ட வலியை அவனால் தவிர்க்க முடியவில்லை.

மிருதுளாவின் கண்கள் கலங்கின. இதழ்கள் துடித்தன. அவ்வளவுதான்… அவளை வாரி நெஞ்சோடு அணைத்துக் கொண்டான் அர்ஜுன். சற்று ஓய்ந்திருந்த அழுகை மீண்டும் பெருகியது. மார்பில் உணர்ந்த அவள் கண்ணீரின் ஈரம் அவன் இதயத்தை சுட்டது. கேசம் கோதி முதுகை வருடி அவளை மௌனமாய் ஆறுதல்படுத்தியவன், அவள் ஸ்பரிசத்தில் தானும் சற்று இறுக்கம் தளர்ந்தான். எவ்வளவு நேரம் கழிந்ததோ… மிருதுளாவின் மெல்லிய குரல் மீண்டும் ஒலித்தது.

“நிஜமாவே கல்யாணம் ஆயிடுச்சா?” – ஏக்கமும் தவிப்புமாகக் கேட்டாள்.

அவன் மீது அவள் கொண்டிருக்கும் நம்பிக்கை இன்னும் முழுதாக மரித்துப் போகவில்லை என்பதற்கு சான்றானது அவள் கேட்ட கேள்வி.

“எதையும் யோசிக்காத. தூங்க ட்ரை பண்ணு”

“முடியில அர்ஜுன்” – பரிதாபமாக கூறினாள்.

அவனுக்கு பதில் சொல்ல முடியவில்லை.

“என்னை யூஸ் பண்ணிக்கிட்டிங்களா அர்ஜுன்? எல்லாமே நடிப்பா? எனக்கு அப்படி தோணலையே அர்ஜுன். இப்போ… இது… நம்மளோட இந்த டைம்… இது எ…ப்…படி நடிப்பா இருக்க முடியும்? பாருங்க-பாருங்க… நா இதை சொல்லும் போது உங்ககிட்ட அதிர்வு தெரிஞ்சுதே… நீங்க ஃபீல் பண்ணுனீங்களா? ட்ரு ஃபீல் அர்ஜுன். நமக்குள்ள டெவலப் ஆயிடிச்சு…” – பித்துப்பிடித்தவள் போல் புலம்பினாள்.

“ரிலாக்ஸ் பேபி… நீ ரொம்ப ஸ்ட்ராங்கான பொண்ணு இல்ல”

“ஐம் நாட்”

“ஷோபாவோட பொண்ணு வீக்கா இருக்க முடியாது” – அதை சொல்லும் போது அவன் குரலில் உணர்வுகள் அற்றுப் போனது.

மிருதுளா மௌனமானாள். சில நொடிகள் தான்… மீண்டும் அடுத்த கேள்வியை கேட்டாள். “அம்மாவ எப்படி தெரியும்? என்ன பிரச்சனை உங்களுக்குள்ள?”

சற்று இளகிய அர்ஜுனின் உடல் மீண்டும் விறைத்தது. இரும்பு மனிதன் போல் இலக்கமற்று மாறினான். அதை அவளும் உணர்ந்தாள்.

“பேசி தீர்த்துக்கலாம் அர்ஜுன். நா உங்க பக்கம் இருக்கேன். அவங்ககிட்ட பேசறேன். என்ன நடந்ததுன்னு சொல்லுங்க… ப்ளீஸ்…” – அப்படி ஆரத்தழுவிய நிலையில் அவள் கேட்கும் போது சாதாரண மனிதனாக இருந்தால் அனைத்தையும் கொட்டித் தீர்த்திருப்பான். ஆனால் அவன் இரட்டை பயிற்சி பெற்ற போராளி. அவ்வளவு எளிதில் நிலையிழந்துவிடுவானா என்ன?

“எனக்கு கல்யாணம் ஆயிடிச்சு. என் பக்கம் என்னோட வைஃப் நிப்பா. நீ பகவானோட பொண்ணு. எனக்காக சிரமப்பட வேண்டாம்” – ஓங்கி உச்சந்தலையில் அடித்து அவளை நிலையிழக்க வைத்தான்.

பிரமை பிடித்தவள் போல் சில நொடிகள் அசையாமல் இருந்தவள், திடீரென்று ஹிஸ்டீரியா நோயாளி போல் பயங்கர சத்தத்துடன் அவனிடமிருந்து விலகி ஓடிவிட துடித்தாள்.

அவன் விடவில்லை. அவள் அழுதாள்… கத்தினாள்… அடித்தாள்… பற்களால் அவன் தோளை அழுந்த பற்றிக் கடித்தாள். அவன் அசையவில்லை…

தன் நீண்ட கைகளாலும் கால்களாலும் அவளை பின்னி தன்னோடு இறுக்கிப் பிடித்துக் கொண்டான். மலைப்பாம்பிடம் சிக்கிய இரை போல் துள்ளி துடித்து துவண்டு அவனுக்குள் அடங்கினாள் மிருதுளா. இதயம் மட்டும் வலிக்க வலிக்க துடித்தது. கண்ணீர் நிற்காமல் கசிந்தது. வெகுநேரம் அந்த சித்திரவதையை அனுபவித்து அப்படியே கண்ணயர்ந்தாள். அதன் பிறகும் கூட அவன் உறங்கவில்லை… உறங்க முடியவில்லை… அவள் கண்ணீரில் கரைந்து போய்விட்டது அவன் உறக்கம்.




Comments are closed here.

You cannot copy content of this page