Share Us On
[Sassy_Social_Share]நிழல் நிலவு-53
297
0
அத்தியாயம் – 53
முதல் நாள் நடந்ததெல்லாம் கனவோ என்று கூட தோன்றியது மிருதுளாவுக்கு. பாறையை வைத்துக் கட்டியது போல் கணக்கும் தலை மட்டும் சாட்சி கூறவில்லை என்றால் அனைத்தையும் கனவென்றே அவள் நம்பியிருக்கக் கூடும். ஆனால் அத்தனையும் உண்மை… பொட்டில் அறைந்தது போல் கூறினானே! அவன் பக்கம் நிற்க அவனுடைய மனைவி இருக்கிறாளாம். ம-னை-வி!!! – அந்த நினைவே உயிர்வரை சென்று வலித்தது. அயர்வுடன் கண்களை முடித்த திறந்தாள். குளியலறை கதவு திறக்கும் ஓசையில் உடல் பதறியது. வெளியே ஓடிவிடலாமா… – அவள் முடிவெடுப்பதற்குள், ஈரத்தலையும் வெற்று மார்புமாக இடுப்பில் சுற்றிய தூவாலையோடு வெளியே வந்தான் அர்ஜுன்.
முதுகிலும் கழுத்துப்பகுதியிலும் நகக்கீறல்கள் ரெத்தமாய் சிவந்திருந்தன. தோள்பட்டையில் பட்டிருந்த பல் தடம் கன்றி போயிருந்தது. மனம் உறுத்த உதட்டை கடித்துக் கொண்டு பார்வையை தாழ்த்தினாள் மிருதுளா.
இதற்கெல்லாம் அவள் வருந்தலாமா? இந்த காயம் அவளை பாதிக்கலாமா? எவ்வளவு பெரிய துரோகத்தை செய்தவன்! அவனுக்காக ஏன் அவள் மனம் தவிக்கிறது? எதற்கு உதவும் இந்த பலவீனம்? – கழுவிறக்கமும் கோபமும், அவள் உள்ளத்தில் காற்றும் நெருப்புமாக ஒன்றையொன்று ஆதிக்கம் செய்ய போராடிக் கொண்டிருந்தது.
“இதுதான் லாஸ்ட் டைம். இன்னொரு தரம் இப்படி பண்ணின…” – அவனுடைய கர்ஜனையில் பார்வையை உயர்த்தினாள் மிருதுளா. முகம் ஜிவுஜிவுக்க தோள்பட்டை காயத்தில் மருந்தை பூசியபடி கண்ணாடியில் அவளை பார்த்து பல்லை கடித்தான் அர்ஜுன்.
ஆத்திரம் பொங்கியது அவளுக்கு. “என் தலையில இருக்க காயத்தைவிட இது ஒன்னும் பெருசு இல்ல” – வெடுக்கென்று கூறிவிட்டு எழுந்து வெளிவராண்டாவிற்கு வந்தாள். அவள் முதுகை வெறித்து நோக்கினான் அர்ஜுன்.
கொஞ்சம் கூட குற்றவுணர்வில்லாமல் அவன் நடந்துகொள்ளும் விதத்தை அவளால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. உள்ளம் கொதித்தத்து. கோபத்தில் உடல் நடுங்கியது. மேல்மூச்சு வாங்க வேகமாக வெளியே வந்து பிரம்பு நாற்காலியில் அமர்ந்தாள்.
வெளியே தண்டால் (புஷ் அப்ஸ்) எடுத்துக் கொண்டிருந்த டேவிட் மிருதுளாவை கண்டதும் எழுந்து அவள் அருகில் வந்தான். அவள் கவனம் அவன் பக்கம் பிறழவில்லை. கடுகடுத்த முகத்துடன் கைவிரல்களை பிசைந்தபடி நிலத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். பெருமூச்சுடன் இன்னொரு நாற்காலியை இழுத்துப் போட்டு அவள் அருகே அமர்ந்தான் டேவிட்.
இரவு முழுவதும் அவன் உறங்கவே இல்லை. அவன் கண் எதிரிலேயே அர்ஜுன் மிருதுளாவின் அறைக்குள் உரிமையோடு நுழைந்த போது நெஞ்சுக்குள் ஆணி அறைந்தது போல் இருந்தது அவனுக்கு.
தெரிந்த விஷயம்தான்… அவர்களுடைய பழக்கம் வலுப்பெற்றிருக்கும் என்பது எதிர்பார்த்ததுதான்… ஆனாலும் வலித்தது. வலியென்றால் சாதாரணமானதல்ல… மோசமான வலி. தாங்க முடியாமல் எழுந்து வெளியே ஓடியவன் விடியற்காலையில்தான் வீடு திரும்பினான்.
மிருதுளாவின் அழுகையும் சத்தமும் ஓய்ந்துவிட்ட நேரம் அது. இரவு நடந்த எதைப்பற்றியும் அவன் அறிந்திருக்கவில்லை. ஆனாலும் அவள் தலையில் இருந்த காயமும் முக வாட்டமும் அவனை உறுத்தி கொண்டே இருந்தது. இப்போதும் உறுத்தி கொண்டிருக்கிறது…
“ஆர் யு ஓகே?” – தாழ்ந்த குரலில் அக்கறையோடு கேட்டான்.
அந்த கேள்வியும் அக்கறையும் அர்ஜுனின் அன்பை நினைவுறுத்தி அவள் வலியை இரட்டிப்பாக்கியது. ‘முன்பெல்லாம் அவனும் இப்படித்தானே அடிக்கடி கேட்பான்!’ – பதில் சொல்ல முடியாமல் உதடுகளை அழுந்த மூடிக் கொண்டாள்.
“என்ன பிரச்சனை மிருது? என்கிட்ட சொல்லக்கூடாதா?” – ஒரு நண்பனாக கூட அவள் இதயத்தில் தான் இல்லையோ என்கிற ஏக்கமும் தவிப்புமாகக் கேட்டான் டேவிட்.
மிருதுளாவின் பார்வை உயர்ந்தது. அவனுடைய கண்களில் தெரிந்த அன்பு அவளை அசைத்தது. ஜீவனற்ற புன்னகையை அவனுக்கு பதிலாகக் கொடுத்தாள்.
“அர்ஜுனா?” – அவள் நெற்றி காயத்தை நோக்கியபடி கேட்டான்.
பதில் சொல்லும் அவகாசத்தை அவளுக்கு கொடுக்காமல் அங்கே வந்து சேர்ந்த அர்ஜுன், காபி கப்பை அவள் எதிரில் வைத்துவிட்டு, டேவிட்டை பார்த்து, “என்ன காலையிலேயே விசாரணை?” என்றான் கண்டிக்கும் தொனியில்.
வாய்திறந்து எதுவும் சொல்லாமல் தோளை குலுக்கினான் டேவிட்.
“காபியை குடிச்சுட்டு உள்ள வா. காயத்துக்கு ட்ரெஸிங் மாத்தணும்” – தன்னிடம் தான் பேசுகிறான் என்று தெரிந்தும் மறுமொழி கூறாமல் அழுத்தமாக அமர்ந்திருந்தாள் மிருதுளா.
அர்ஜுனின் தாடை இறுகியது. உதாசீனத்தை அவனால் பொறுத்துக்கொள்ளவே முடியாது. அதிலும் இப்போது, டேவிடிற்கு எதிரில்…. – பல்லை கடித்தான்.
“உன்கிட்ட தான் பேசிக்கிட்டிருக்கேன் மிருதுளா” – குரலை உயர்த்தாமல் உறுமினான்.
அதற்குமேல் அவனை அலட்சியப்படுத்தவும் முடியாமல் அடங்கிப் போகவும் முடியாமல், “என்ன வேணும் உங்களுக்கு?” என்றாள் எரிச்சலுடன்.
“எழுந்து உள்ள வா. கட்டுப்பிரிச்சு மருந்து போடறேன்”
“அதை உங்க மனைவிக்கு போயி பண்ணுங்க” – அவள் யோசிப்பதற்குள் வார்த்தைகள் சீற்றத்துடன் வெளியேறிவிட்டன.
டேவிட் அதிர்ச்சியோடு இருவரையும் மாறிமாறி பார்க்க அர்ஜுனின் முகத்திலோ ரௌத்திரம் தெறித்தது.
அழுத்தமான காலடிகளுடன் உள்ளே சென்றவன் சில நொடிகளிலேயே திரும்பி வந்தான். கையில் மெடிக்கல் கிட் இருந்தது.
இரக்கமற்ற அரக்கன் போல் அவளிடம் நெருங்கியவன் அவள் சுதாரிப்பதற்குள் தலைகட்டை முரட்டுத்தனமாக பிய்த்து எறிந்தான்.
“ஸ்ஸ்… ஆ…” – வலியுடன் தடுமாறி எழுந்தவளை மீண்டும் சேரில் பிடித்து தள்ளினான்.
“அர்ஜுன் என்ன பண்ற நீ?” – பதற்றத்துடன் குறுக்கே பாய்ந்தான் டேவிட்.
அவன் டி-ஷர்ட்டை கொத்தாக பிடித்து அவனை இழுத்துச் சென்று சுவற்றோடு அழுத்தி, “எல்லை மீறாத” என்று எச்சரித்து உதறிவிட்டு மீண்டும் அவளிடம் வந்தான்.
மிருதுளா மிரட்சியுடன் எழுந்துவிலகினாள். “டோன்ட் டச் மீ” – பதட்டத்தில் கத்தினாள். அது இன்னும் அவனை மூர்க்கனாக்கியது.
“யாருக்கு வேணும் உன்னோட ஒப்பீனியன்? நா என்ன வேணாலும் செய்வேன்” – ஆக்ரோஷத்துடன் சூளுரைத்தவன், பஞ்சை பிய்த்து ஆன்டிசெப்டிக் லோஷனில் தோய்த்து எடுத்துக் கொண்டு அவளிடம் நெருங்கினான். பயந்து பின்வாங்கினாள் மிருதுளா.
இடையில் புகுந்து தடுக்க முயன்ற டேவிட்டை இழுத்து கீழே தள்ளிவிட்டு ஒருகையால் மிருதுளாவின் முடியை கொத்தாக பற்றி அவளை அசையவிடாமல் பிடித்துக் கொண்டு, மறுகையால் அவள் காயத்தை தேய்த்து சுத்தம் செய்தான். அவன் செயலில் இளக்கமில்லை… மென்மையில்லை… வெறுப்பும் கோபமும் மட்டுமே விரவியிருந்தது.
வலியில் துடித்து அலறினாள் மிருதுளா. “இப்படி என்னை சித்திரவதை படுத்தறதுக்கு ஒரேடியா கொன்னுடலாம்” என்று அழுதபடி அவன் கையை விளக்க முயன்றாள். கண்களில் கண்ணீர் பெருகியது.
“அஃப்கோர்ஸ் ஆப்டர் யுவர் பேரன்ட்ஸ் ஹனி…” – ‘நிச்சயமாக, உன் பெற்றோருக்கு பிறகு அன்பே’ – நக்கலும் வெறுப்புமாக கூறினான்.
சுருக்கென்றது அவளுக்கு. அவளை கொல்வேன் என்று கூறியதற்காக அல்ல… அவளுடைய பெற்றோருக்கு பிறகு என்கிறானே! அப்படியென்றால்??? – முதுகுத்தண்டு சில்லிட்டு போவது என்பார்களே. அப்படித்தான் இருந்தது அவளுக்கு. அவனை பார்த்தபடியே உறைந்து போனாள். காயத்தின் வலி கூட அவள் புத்தியில் உரைக்கவில்லை. பெற்றோரின் பாதுகாப்பு பெரும் பயமாய் அவளை பீடித்துக் கொண்டது.
கீழே விழுந்த டேவிட் வேகமாக எழுந்து அவர்களிடம் நெருங்கினான். மிருதுளா வெறிபிடித்த அர்ஜுனின் பிடியில் நன்றாக சிக்கியிருந்தாள். அவளை விடுவிக்க முயன்று ஏதேனும் செய்தால் அது அவளுடைய வலியை இன்னும் தான் அதிகமாக்கும் என்பதை உணர்ந்து, “விட்டுடு அர்ஜுன்…. பாவம்” என்று வாய்விட்டு கெஞ்சினான்.
“இவ என்னோட பணயக்கைதி. எப்போ விடணும் எப்போ பிடிக்கணும்னு எனக்கு தெரியும். யு பெட்டர் ஷட்அப்” – நண்பனிடம் சீறினான்.
“ஐ காண்ட் மேன். என்னால முடியாது. அவ எனக்கு பிடிச்ச பொண்ணு. நா எப்படி அமைதியா போக முடியும்?” – குரலை உயர்த்தினான் டேவிட்.
எதிர்பார்த்தபடியே அர்ஜுன் மிருதுளாவை விட்டுவிட்டு டேவிட்டிடம் பாய்ந்தான். அதுதான் சந்தர்ப்பம் என்று உணர்ந்து அவனை இறுக்கமாக கட்டிப் பிடித்துக் கொண்டு, “ஓடிடு மிருதுளா… ரூம்குள்ள ஓடி கதவை சாத்திக்க… ஓடு…” என்று கத்தினான்.
அவள் நினைத்திருந்தால் அப்போது தப்பித்திருக்கலாம். வீட்டைவிட்டு ஓடியிருக்கலாம். அப்படி அவள் ஒட்டியிருந்தால் அர்ஜுன் அவளை தேடி போவான் என்பது வேறு கதை. ஆனால் மிருதுளாவிற்கு அந்த யோசனை எழவே இல்லை. அங்கிருந்த பதட்டமான சூழ்நிலை அவளை யோசிக்கவும் விடவில்லை. டேவிட் சொன்னபடியே அறைக்குள் ஓடி கதவை தாழிட்டுக் கொண்டாள்.
அர்ஜுன் கட்டுப்பாடிழந்து முழு மிருகமாக மாறிவிட்டான். அந்த வீடு போர்க்களமாக மாறியது. யார்யார் மீதோ இருந்த கோபத்தையெல்லாம் டேவிட்டிடம் காட்டினான். டேவிட்டும் அவனை எதிர்க்கவில்லை. அவனிடமிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள மட்டுமே முயன்றான். தொழில் முறை ஃபைட்டர் என்பதால் அது அவனுக்கு சிரமமாகவும் இல்லை.
நடந்த யுத்தத்தில் டேவிட் சோர்வடையவும் அர்ஜுனின் கோபம் தணியவும் சரியாக இருந்தது. இருவருமே தளர்ந்து இரு பக்கம் தரையில் சாய்ந்து கிடந்தார்கள். எவ்வளவு நேரம் கழிந்ததோ… டேவிட்தான் முதலில் எழுந்து அர்ஜுனிடம் வந்தான்.
“பெட்டர் நௌ?” என்று கை நீட்டினான்.
அவன் கையை பிடித்து எழுந்தபடி, “யு ஓகே?” என்றான் அர்ஜுன்.
அவ்வளவுதான்… அதற்கு மேல் அவர்களுக்குள் எந்த பிணக்கும் இல்லை… பகையும் இல்லை. இருவரும் இயல்பாக அவரவர் வேலையை பார்க்க துவங்கினார்கள். ஆனால் இருவர் மனதிலுமே மூடிய கதவிற்கு பின்னால் மிருதுளா என்ன செய்து கொண்டிருப்பாளோ என்கிற கவலை இருந்தது.
Comments are closed here.