Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

நிழல் நிலவு-54

அத்தியாயம் – 54

என்ன முயற்சி செய்தும் அவளை பற்றிய எண்ணங்கள் அவனைவிட்டு விலக மறுத்தன. எந்த வேலையில் ஈடுபட்டாலும் கவனம் சிதறியது. அவளுடைய அழுகையும் கூக்குரலும் காதுக்குள் பேரிரைச்சலாய் ஒலித்துக் கொண்டிருந்தது. நெஞ்செல்லாம் பிசைவது போலிருந்தது. ஓரளவுக்கு மேல் அந்த கனத்த உணர்வை தாக்குப்பிடிக்க முடியாத அர்ஜுன், நேராக சென்று படுக்கையறை கதவை படபடவென்று தட்டினான்.

“மிருதுளா… மிருதுளா… கதவை திற… மிரு…து…ளா…” – கத்தினான்.

டைனிங் டேபிள் சேரில் அமர்ந்து தன்னுடைய காயங்களுக்கு முதலுதவி செய்து கொண்டிருந்த டேவிட் அர்ஜுனின் சத்தம் கேட்டு, “ஐயோ கடவுளே!” என்று அரக்கப்பரக்க ஓடிவந்தான்.

“எ… என்ன… என்ன ஆச்சு?” – பதட்டத்துடன் கேட்டான்.

“எனக்கு உள்ள போகணும். டிரெஸ் சேன்ஜ் பண்ணனும். கதவை திறக்க சொல்லு” – எறிந்துவிழுந்தான்.

“சரி சரி…. நீ உட்காரு… நா பேசிக்கிறேன்” – மெல்ல கூறினான். இதையும் தவறாக புரிந்துக் கொண்டு சண்டையை வேறுபக்கம் திருப்பிவிடுவானோ என்கிற சின்ன பதட்டம் அவனுக்கு இருந்தது. அதற்கு தகுந்தாற்போல் அர்ஜுனும் அவனை முறைத்துத்தான் பார்த்தான்.

“அர்ஜுன்… ஐம் யுவர் ஃபிரண்ட்… ஆஃப்டர் ஆல்… ப்ளீஸ்… கொஞ்சம் எனக்கு ஆக்ஸஸ் கொடு. இதை சரி பண்ணிடலாம்” – அவனுடைய மனநிலையை நன்றாக புரிந்துக் கொண்டு நிதானத்துடன் அவனுக்கு எடுத்துக் கூறினான்.

கண்களை மூடி ஆழ மூச்செடுத்து தலையை குறுக்காக ஆட்டினான் அர்ஜுன்.

“இதை சரி பண்ண முடியாது டேவிட். யாராலயும் முடியாது. இது இப்படித்தான்…” – வேதனையுடன் கூறிவிட்டுச் சென்று சோபாவில் தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்தான். நண்பனை பின் தொடர்ந்து சென்று அருகில் அமர்ந்தான் டேவிட்.

“ஏன் இப்படி நம்பிக்கை இல்லாம இருக்க? வி கேன் டூ இட் மேன்”

அர்ஜுன் சற்று நேரம் எதுவும் பேசவில்லை. நிலத்தில் பார்வையை பதித்தபடி அமைதியாகவே அமர்ந்திருந்தவன் பிறகு நிமிர்ந்து நண்பனைப் பார்த்தான்.

“எனக்கு பயமா இருக்கு டேவிட். நானே… இந்த கையாலேயே… அவளை கொன்னுடுவேனோன்னு ரொம்ப பயமா இருக்கு” – அவன் கைகள் நடுங்கியது.

மிருதுளாவின் மீது அர்ஜுனுடைய உணர்வுகள் வெளிப்படுவதும் அதற்கு தானே துணை நிற்பதும் டேவிடின் மனதை வெகுவாய் காயப்படுத்தியது. ஆனாலும் அவன் நண்பனுக்காக நின்றான்.

நடுங்கும் அவன் கைகளை பற்றி அழுத்தினான்.

“நீ அப்படி செய்ய மாட்ட அர்ஜுன். உன்னால முடியாது” என்று அவனுக்கு தைரியம் கொடுத்தான்.

அர்ஜுன் உதட்டை கடித்து உணர்வுகளை விழுங்கிக்கொண்டு கரகரத்த குரலில் மேலும் பேசினான்.

“அவகிட்ட சொல்லு… நா கோவமா இருக்கும் போது வாயை திறக்க வேண்டாம்னு சொல்லு. என்னை மிருகமாக்க வேண்டாம்னு சொல்லு…” என்று கூறிவிட்டு எழுந்து வெளியே சென்றுவிட்டான்.

நண்பனின் மனநிலை டேவிடிற்கு நன்றாக புரிந்தது. தவிர்க்க முடியாத தவிப்பையும் தடுமாற்றத்தையும் உணர முடிந்தது. தன்னுடைய சுய விருப்பங்களை பின்னுக்கு தள்ளிவிட்டு அவனுக்கு உதவி செய்ய வேண்டும் என்பதையே முடிவாக மனதில் ஏற்றுக் கொண்டு மிருதுளாவை தேடித் சென்றான்.

***********************

அர்ஜுனின் கார் ஊரை விட்டு வெகுதூரம் தள்ளி வந்துவிட்டது. சில மணிநேரங்கள் பயணம் என்று கூட சொல்லலாம். சாலையோரம் ஒரு தொலைபேசி பூத் கண்ணில்பட்டது. காரை நிறுத்திவிட்டு இறங்கிச் சென்று ஒரு நம்பரை டயல் செய்தான். அடுத்த முனையில் ப்ளூ ஸ்டார் எடுத்தார்.

“என்னால முடியல… இந்த அஸைன்மென்டை சீக்கிரம் முடிக்க என்ன பண்ணணுமோ பண்ணுங்க. நா இதுலேருந்து வெளியே வரணும். ஐ காண்ட் டேக் திஸ் ஸ்ட்ரெஸ் எனிமோர்” – படபடத்தான்.

ஓர் அழுத்தமான மௌனத்துடன் அவன் சொன்னதை உள்வாங்கி கொண்டவர் , “என்ன பிரச்சனை?” என்றார் மெதுவாக.

ஒரு நொடி அர்ஜுன் மௌனமானான். வார்த்தைகளை தேடி சின்ன தயக்கத்துடன் பதில் சொன்னான். “நா என்னோட கட்டுப்பாட்டை இழந்துக்கிட்டிருக்கேன். அது எனக்கு நல்லது இல்ல”

“நல்ல விஷயம். உனக்கே உன்னோட பிரச்சனை புரியுது. அப்போ சால்வ் பண்றதும் ஈஸி தான் இல்லையா?”

“இல்ல… கண்டிப்பா இது ஈஸி இல்ல. நா ரொம்ப டேஞ்சரஸ் ரூட்ல போயிட்டு இருக்கேன். என்னாலையே என்னை கண்ட்ரோல் பண்ண முடியாத அளவுக்கு ரொம்ப அக்ரஸிவா போயிட்டு இருக்கேன். ஜஸ்ட் டேக் மீ அவுட் ஃப்ரம் திஸ் ஹெல்… ப்ளீஸ்…” – வெளிப்படையாகவே கெஞ்சினான்.

சற்று நேரம் ப்ளூ ஸ்டாரிடமிருந்து எந்த பதிலும் இல்லை. உணர்வுகளின் பிடியில் ஆட்பட்டு தன்னிலையிழந்திருந்த அர்ஜுன் மெல்ல நிதானத்திற்கு வந்து, “ஏதாவது சொல்லுங்க” என்றான்.

“நீ நீயா இல்ல… ஏன்?” – அழுத்தமாக கேட்டார்.

“ஏன்னா எனக்கு பீலிங்ஸ் இருக்கு… எமோஷன்ஸ் இருக்கு…”

“புல்ஷிட்… நீ ஒன்னும் டீனேஜ் பையன் இல்ல. வெல் ட்ரைன்ட் ரிசோர்ஸ். உன்னோட பீலிங்க்ஸை உன்னால கட்டுப்படுத்த முடியாது?” – இதையெல்லாம் என்னிடம் கொண்டுவர வேண்டுமா என்பது போல் கடுகடுத்தார்.

“அங்க உட்கார்ந்துகிட்டு சொல்றது ரொம்ப ஈஸி… இங்க வந்து என்னோட இடத்துல நின்னு பாருங்க தெரியும்” – அவனும் கடுப்படித்தான்.

“உன்னோட இடத்துக்கு நீ மட்டும் தான் சரியான ஆள். அதனால தான் உன்ன அந்த வேலைக்கு அசைன் பண்ணியிருக்கோம். ஆபரேஷனை ஆபரேஷனா பாரு. டார்கெட்டை டார்கெட்டா பாரு. பீலிங்ஸ் அண்ட் எமோஷன்ஸுக்கு அங்க ஒரு வேலையும் இல்ல”

“ஓ காட்! யு காண்ட் அண்டர்ஸ்டாண்ட் மீ”

“எனக்கு ரொம்ப நல்லா புரியுது அர்ஜுன் ஹோத்ரா. நாம வாழற இந்த நிழல் உலகத்துல ரெண்டே வர்க்கம்தான்… ‘ப்ரே அண்ட் ப்ரடேட்டர்’… நீ இரையா இருக்க போறியா இல்ல வேட்டையாட போறியா? முடிவு பண்ணு…”

அவர் சுலமபாக கூறிவிட்டார். ஆனால் தன்னையே அந்த இரண்டாகவும் உணர்ந்த அர்ஜுன் அவருக்கு மறுமொழி கூற முடியாமல் தடுமாறினான்.

“எழுவருஷமா தோண்டிகிட்டு இருக்கற சுரங்கம் இது. தங்கம் கிடைக்கற நேரத்துல பூகம்பத்தை கிளப்பாத. மிருதுளாகிட்டேருந்து விலகு. டார்கெட்டை போக்கஸ் பண்ணு. உன்கிட்டேருந்து அதை மட்டும் தான் நா எதிர்பார்க்கறேன்” – அழுத்தம் திருத்தமாக கூறிவிட்டு அழைப்பை துண்டித்தார்.

ஆத்திரத்துடன் ரிசீவரை தங்கியில் ஓங்கி அடித்துவிட்டு பூத்திலிருந்து வெளியேறினான் அர்ஜுன்.

*********************

புத்தி பேதலித்தவள் போல் சுவற்றில் தெரிந்த ஒற்றை புள்ளியை வெறித்தபடி அசையாமல் அமர்ந்திருந்தாள் மிருதுளா. ஏமாற்றம் வலி பதட்டம் அழுகை அனைத்தையும் பின்னுக்கு தள்ளிவிட்டு ‘ஏன்?’ என்கிற கேள்வி மட்டுமே அவளை முழுவதுமாக ஆக்கிரமித்திருந்தது. எங்கோ யாரோ ‘மிருதுளா… மிருதுளா…’ என்று அவள் பெயரை திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார்கள். இல்லை… கத்திக் கொண்டிருந்தார்கள். கூடவே தடதடக்கும் சத்தம் வேறு. என்னவென்று அவள் புத்திக்கு உரைக்கவே வெகுநேரம் பிடித்தது. செக்கு மாடு போல் அந்த ஒற்றை புள்ளியையே சுற்றிக் கொண்டிருந்த எண்ணங்கள் நிகழ்வுக்கு மீண்ட போது டேவிடின் குரலும் கதவு உடைபடும் சத்தமும் செவியை பிளக்க அவசரமாக எழுந்து ஓடி கதவைத் திறந்தாள்.

“என்ன பண்ணிட்டிருந்த இவ்வளவு நேரம்?” – அவன் முகத்தில் பதட்டமும் குரலில் உள்ளடக்கிய கோபமும் தெரிந்தது.

அதை பொருட்படுத்தி பதில் சொல்லும் நிலையில் அவள் இல்லை. “வேர் இஸ் ஹி?” – அவ்வளவு ரணகளத்திற்குப் பிறகும் அவளிடமிருடந்து எழுந்த முதல் கேள்வி அர்ஜுனைப் பற்றியதாகவே இருந்தது.

“வெளியே போயிருக்கான். நீ ஓகே தானே?”

“ம்ம்ம்…” – தலையை மேலும் கீழும் ஆட்டிவிட்டு கட்டிலில் அமர்ந்தாள்.

“என்ன நடக்குது டேவிட்? எனக்கு சொல்லு ப்ளீஸ்…” – அவளுடைய கேள்விக்கு பதில் சொல்வதை தவிர்த்து அவள் காயத்திற்கு இதமாக மருந்து பூசி கட்டு போட்டபடி,

“ஆர்த்தியை எப்படி தெரியும் உனக்கு?” என்றான்.

மிருதுளாவின் முகம் ரெத்தப்பசையற்று வெளிறியது. ‘அதுதான் அவள் பெயரா! உண்மையாகவே அவனுக்கொரு மனைவி இருக்கிறாளா!’ – நூல் நுனி அளவேயானாலும் அவன் மீதான நம்பிக்கை அவளுக்கு அற்றுப்போகவில்லை என்பதற்கு இன்னொரு சாட்சியாக அதிர்ந்தது அவள் மனம்.

அதிர்ந்த விழிகளோடு அவனை வெறித்து நோக்கினாள். “அர்… அர்ஜுன்… நிஜமாவே… ம்…மேரீடா?” – உதடு துடிக்கக் கேட்டாள்.

“எஸ்… ஆனா அது உனக்கு எப்படி தெரிஞ்சுது?” – வறண்ட குரலில் கேட்டபடி குளியலறைக்குள் சென்று கைகழுவிவிட்டு திரும்பினான்.

“என்னோட அம்மாவை சந்திச்சோம்” – மெல்ல முணுமுணுத்தாள்.

“வாட்! ஷோபாவையா!”

சட்டென்று எழுந்தாள் மிருதுளா. “உனக்கும் தெரியுமா! எல்லாமே தெரியுமா! நீயுமா நடிச்ச?” – அவள் குரல் நடுங்கியது.

“நோ… நா எப்பவும் நடிக்கல… குறிப்பா உன்கிட்ட…” – உறுதியாக மறுத்தான் டேவிட்.

“பொய்…” – மறுப்பாக தலையசைத்தாள். “ஒரு நாள் கூட நீ உண்மையை சொல்லல… அர்ஜுன் என்னை ஏமாத்தறது தெரிஞ்சும்… நீ வாய் திறக்கல. ஓ காட்! இங்க எல்லாமே பொய்… டிராமா… எப்படி நம்பினேன்!” – அழுதாள்.

“மிருது ப்ளீஸ்” – அவளை சமாதானம் செய்ய முயன்று அவள் கையை பிடித்தான்.

“ப்ளீஸ் டோண்ட் டச்..” – வெடுக்கென்று கையை உருவிக் கொண்டு விலகினாள்.

“மிருது…”

“வேர் இஸ் ஷி நௌ?”

ஒரு நொடி மௌனமான டேவிட், “நோ மோர்…” என்றான் கனத்த குரலில்.

மிருதுளா திகைத்துப் போய் அசைவற்று நின்றுவிட்டாள்.

“என்ன! என்ன சொன்ன?” – சரியாகத்தான் கேட்டோமா… அல்லது வேறு யாரையும் சொல்கிறானா! அதிர்ச்சியும் குழப்பமுமாக பார்த்தாள்.

“ஆர்த்தி இப்போ உயிரோட இல்ல…” – தெளிவாக கூறினான் டேவிட்.

விடுதலை உணர்வு… நிம்மதி… முதல் நொடி அவள் உணர்ந்த உணர்வு இதுதான். மறுநொடியே அதிர்ந்தாள். அத்தனை பெரிய ராட்சசியா அவள்! ஒரு பெண்ணின் மரணத்தில் நிம்மதியை உணரும் ராட்சசி! – மனசாட்சி உலுக்க கண்ணீர் கரகரவென்று வழிந்தது.

‘ஓ – மை – காட்!!!’ – தளர்ந்து அமர்ந்தாள். சுயநல பிண்டமாக தன்னை உணர்ந்தாள்.

சற்று நேரம் தன்னைத்தானே சாடியபடி அமர்ந்திருந்தவளுக்கு திடீரென்று அந்த சந்தேகம் வந்தது. சட்டென்று நிமிர்ந்து அவனை பார்த்தாள்.

“என்னோட அப்பா… அவர்… அவருக்கு இதுல… டேவிட்… அப்படி ஒன்னும் இல்லைல?” – தடுமாறினாள்.

டேவிடின் முகம் கருங்கல் போல் இறுகியது.

“ப்ளீஸ் சொல்லு…”

“பகவான், ஷோபா ரெண்டு பேருமே சேர்ந்து பண்ணின ஆப்பரேஷன். அர்ஜுனுக்கு வச்ச குறி… ஆர்த்தியை முடிச்சிடிச்சு”

பகீரென்றது அவளுக்கு. என்ன உளறுகிறான் இவன்!

“நோ… இல்ல… இல்ல டேவிட்… நீ தப்பா சொல்ற. இதுல ஏதோ கன்பியூஷன் இருக்கு. அம்மா ரொம்ப பயந்தவங்க. இதெல்லாம்… இதெல்லாம்… நோ…” – கடுமையாக மறுத்தாள்.

டேவிட் அவளை வெறுமையாக பார்த்தான். இதற்கு முன் அவனிடம் அந்த பார்வையை அவள் சந்தித்ததே இல்லை.

“டேவிட்!!”

“அர்ஜூன்கிட்ட கொஞ்சம் எச்சரிக்கையா இரு மிருதுளா. அவன் காயம்பட்ட புலி. ஆர்த்தியை பற்றி பேசறதை தவிர்த்துடு… ஒரு ஃபிரண்டா என்னோட அட்வைஸ் இது” – சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டு அதை ஜீரணிக்க அவளுக்கு தனிமையையும் கொடுத்துவிட்டு அங்கிருந்து அகன்றான் டேவிட்.

 




Comments are closed here.

You cannot copy content of this page