Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

நிழல் நிலவு- 55

அத்தியாயம் – 55

அர்ஜுன் வீடு திரும்பும் போது நேரம் நள்ளிரவை தாண்டிவிட்டது. உறக்கம் வராமல் வாசலில் நடைபழகிக் கொண்டிருந்த டேவிட், நண்பனை கண்டதும் நிம்மதியடைந்தான். அர்ஜுன் காரை கராஜில் விட்டுவிட்டு வெளியே வந்த போது, “காலையிலிருந்து எங்க போயிருந்த?” என்றபடி அருகில் நெருங்கியவன் புருவங்கள் முடிச்சிட குழப்பத்துடன் அவனைப் பார்த்தான்.

கண்கள் மிதந்தன… முகம் ஜிவுஜிவுவென்று சிவந்திருந்தது. குடித்திருக்கிறானா! “அ..ர்..ஜு..ன்!” – நம்ப முடியாத வியப்புடன் அவனை ஏறிட்டான்.

“எங்க அவ?” – அவனுடைய முதல் கேள்வியும் மிருதுளாவை பற்றியதாகவே இருந்தது.

“ஸ்லீப்பிங்” – பதிலை பெற்றுக் கொண்டு அவளைத் தேடி வந்தான்.

அறையில் வெளிச்சம் மங்கியிருந்தது. கொடிபோல் கட்டிலில் கண்மூடிக் கிடந்தாள் மிருதுளா. சீரான மூச்சுக்காற்று அவள் ஆழ்ந்த துளியிலிருக்கிறாள் என்றது. அருகில் சென்றான். அவள் கற்றை கேசம் சரிந்து முகத்தில் விழுந்திருந்தது. குனிந்து ஒற்றைவிரலால் அதை ஒதுக்கிவிட்டான். நீர்நிலை கரையில் பூத்த குவளையை நிலவொளியில் காண்பது போலிருந்தது விடிவிளக்கின் வெளிச்சத்தில் அவள் மலர்முகம் – கபடமற்ற முகம். பெருமூச்சுவிட்டான்.

நெற்றிக்கட்டு புதிதாக மாற்றப்பட்டிருந்தது. மலரிதழை தொடுவது போல் அதை நுனிவிரலால் வருடினான். “ஏன் என்னை சந்திச்ச?” என்றபடி அவள் கையை எடுத்து இதழ்பதித்து கண்களுக்குள் பொத்திவைத்துக் கொண்டான்.

மிருதுளாவின் இமைகள் மெல்ல விரிந்தன. அவள் உறங்கவில்லை. மனதில் அத்தனை சஞ்சலமிருக்கும் போது உறக்கம் எப்படி வரும். அவன் வருவதை அறிந்து கண்களை மூடிக் கொண்டிருந்தாள். என்ன செய்கிறான் என்று பார்க்கும் ஆர்வமும் இருந்தது. அவள் எதை எதிர்பார்த்தாளோ மிகச்சரியாக அதையேதான் அவனும் செய்தான். அவள் உறங்குகிறாள் என்று எண்ணி மனதை திறந்தான். மிருதுளாவும் விழிதிறந்தாள். கனிவுடன் அவனை நோக்கினாள்.

“யு லவ் மீ ரைட்?” – முணுமுணுத்த அவள் மெல்லிய குரலில் அர்ஜுன் நிமிர்ந்தான்.

மிதக்கும் அவன் விழிகள் கனிந்த அவள் கண்களோடு கலந்தன. “தூங்காம என்ன பண்ற?” – கடுமையை கொண்டுவர முயன்று தோற்று கரகரத்தது அவன் குரல்.

“யு ஃபீல் ஃபார் மீ…”

“நோ” – நெற்றியோடு நெற்றியை சேர்த்து முரணாய் மறுத்தான்.

முரண்பட்ட அவன் சொல்லையும் செயலையும் ரசித்தவள் மறுகணமே முகம் சுழித்தாள். காரணம் அந்த வாடை… “ஆர் யு ட்ரங்க்?” – ஆச்சரியமாக அவனைப் பார்த்தாள்.

அர்ஜுன் உதடுகளை அழுந்த மூடினான். “ஏழு வருஷத்துக்குப் பிறகு…” – ஆமோதிப்பாக தலையசைத்தான்.

ஏழு ஆண்டுகள் என்றதுமே அவள் மனம் ஆர்த்தியை உள்ளே கொண்டு வந்தது. கூடவே குழந்தையின் நினைவும் வந்தது.

“பையனா பொண்ணா? ஏழு வயசா? இல்ல இன்னும் அதிகமா?” – எழும்பாத குரலில் கேட்டாள்.

அர்ஜுன் அவளை ஊன்றிப் பார்த்தான். ‘ஏழு வயதா இல்லை அதிகமா?’ என்றால் அதைவிட சின்ன வயதாக இருக்க முடியாது என்பது தெரிந்திருக்கிறது. அப்படியென்றால் ஆர்த்தியையும் அவள் மறைந்து ஏழு ஆண்டுகள் ஆகிவிட்டது என்பதும் கூட தெரிந்திருக்கிறது. டேவிட் பேசியிருக்கிறான் என்பதை ஊகிக்க நிமிடத்திற்கும் அதிக நேரம் தேவைப்படவில்லை அவனுக்கு.

அவன் செய்த அத்தனை அராஜகத்திற்குப் பிறகும் அவள் காட்டிய கனிவிற்கு காரணம் தெளிவாக புரிந்தது. மிருதுளா அவனுக்காக வருந்துகிறாள். அவனுக்காக உருகுகிறாள். அவன் பக்கம் நிற்கிறாள் – அதுதானே அவனுடைய தேவை… நெகிழ்ச்சியாக உணர்ந்தான். மீண்டும் அவள் கையை பிடித்து அழுத்தமாக முத்தமிட்டான். அவளை விட்டுவிட விரும்பாதவன் போல் இறுக்கிப் பிடித்துக் கொண்டான். மிருதுளாவின் மறு கை தளிர்விரல்கள் அவன் முன் நெற்றி முடியோடு உறவாடின. இதமாய் இருந்தது. கண்களை மூடி ரசித்தான்.

நெற்றியிலிருந்து கன்னத்திற்கு இறங்கி அவன் தாடியை வருடினாள். மன அழுத்தமெல்லாம் மாயமாய் மறைவது போல் உணர்ந்தான். மனம் லேசாகி பறப்பது போல் தோன்றியது. உருகி குழைந்து அவள் உள்ளங்கையை தோளோடு அணைத்து அதில் தன் கன்னத்தை பதித்துக் கொண்டான்.

கொலைகாரன் என்று சத்தியம் செய்தால் கூட நம்ப முடியாது. அப்படி ஒரு பச்சிளம் சிசு போல் அவள் கண்களுக்கு தோன்றினான்.

அவள் பார்வை அவன் மீதே உறைந்திருந்தது. அதை உணர்ந்துதானோ என்னவோ அவனும் கண்விழித்து அவளை பார்த்தான். நொடியில் முகம் வாடியது. நெற்றி கட்டை மெல்ல வருடி, “வலிக்குதா?” என்றான்.

அவன் கையை நெற்றியிலிருந்து எடுத்து நெஞ்சில் இதயத்திற்கு மேல் வைத்தது, தலையை மேலும் கீழுமாக அசைத்தாள். அவள் இதயத்தில் வலி அவன் கண்களில் தெரிந்தது. மிருதுளா உதட்டை கடித்துக் கொண்டாள்.

“இன்னொரு தரம் இப்படி நடக்கக் கூடாது. ஹெல்ப் மீ… ப்ளீஸ்…” – இறைஞ்சினான்.

அவனுடைய உணர்வுகள் தன்னோடு பின்னியிருப்பதை தெளிவாக உணர்ந்தாள் மிருதுளா. தன் பெற்றோரின் உயிருக்கு ஆபத்து நேராது என்கிற நம்பிக்கை உதித்தது. மகிழ்ச்சியோடு மேலும் கீழும் தலையசைத்தாள்.

முதல் நாள் போலவே அவளை இறுக அணைத்துக் கொண்டு அருகே படுத்தான் அர்ஜுன். அவள் தடுக்கவில்லை. மாறாக அவனோடு அணைந்து கொண்டு, “அர்ஜுன்” என்று மெல்ல அழைத்தாள்.

அவள் உச்சந்தலையில் முத்தமிட்டு, “ம்ம்ம்” என்றான் அர்ஜுன்.

“இந்த பகை… கோபம்… இதெல்லாம் வேண்டாமே அர்ஜுன். விட்டுட கூடாதா?” – சட்டென்று அவன் உடலில் ஒருவித இறுக்கம் வந்ததை அவள் உணர்ந்தாள்.

“எனக்காக… ப்ளீஸ்…” – குரல் குழைந்தது.

சவுக்கடி போல் உள்ளே சுரீரென்றது. அவனுக்குள் அடங்கியிருந்த அசுரன் எழுந்து உறுமினான். அவளுடைய கனிவையும் குழைவையும் சந்தேகத்தோடு உற்று நோக்கினான். பெற்றோருக்காக நடிக்கிறாள் என்று எச்சரித்தான். விருட்டென்று அவளிடமிருந்து விலகி எழுந்தான் அர்ஜுன். மிருதுளா மிரண்டு விழித்தாள்.

“என்ன ஆச்சு அர்ஜுன்?” – மருண்ட அவள் விழிகளை கண்டதும் அவன் மனம் மாறியது.

“இல்ல… ஒன்னும் இல்ல… தண்ணி…”- தடுமாறினான். அவளை மீண்டும் ஒருமுறை காயப்படுத்திவிடக் கூடாது என்று எச்சரிக்கையாக இருந்தான்.

“இதோ கொண்டுவரேன்” – எழுந்து குடுகுடுவென்று சமையலறைக்கு ஓடி தண்ணீர் பாட்டிலோடு வந்தாள். அவன் அதை வாங்கி மடமடவென்று பருகிவிட்டு கட்டிலில் அமர்ந்தான். சட்டையெல்லாம் நனைந்துவிட்டது. அவள் துடைத்துவிட்டாள். முடிச்சிட்டிருந்த புருவத்தை நீவிவிட்டாள்.

“ஒன்னும் இல்லைல?” – மீண்டும் கேட்டாள்.

அவன் இல்லை என்பது போல் தலையசைத்தான். ஆனால் அது பொய். அவன் மனம் கலங்கியிருந்தது. அந்த கலக்கத்துடனே கண்ணயர்ந்தான்.

கையில் மது கோப்பையை பிடித்தபடி கலகலவென்று சிரித்தார் பகவான். அவருக்கு விருப்பமான காமெடி நடிகர் ஒருவரின் நடிப்பை சிலாகித்து அவரைப் போலவே பேசிக் காட்டியபடி, டைனிங் டேபிள் நிறைய உணவு பதார்த்தங்களை கொண்டுவந்து நிரப்பிக் கொண்டிருந்தாள் ஷோபா.

வயது வித்தியாசம் பார்க்காமல் அவனோடு இறங்கி பழகும் அவர்கள் இருவரும் அர்ஜுன் ஹோத்ராவின் மனதுக்கு நெருக்கமானவர்கள். பகவானுக்கும் அவனுக்கும் பொதுவான விருப்பங்கள் நிறைய இருந்தன. கூடை பந்து விளையாட்டிற்கும் குத்துச் சண்டை பயிற்சிக்கும் மட்டும் அல்ல மது போதைக்கும் ஆண் உலக அந்தரங்க அளவளாவல்களுக்கும் கூட இருவரும் ஒருவருக்கொருவர் நல்ல கூட்டாளிகள்.

குறுகிய காலத்திற்குள் அவர்களுடைய நட்பு விருட்சமாய் வளர்ந்திருந்தது. பகவான் கோர்த்தாவின் நெளிவு சுளிவுகளை அவனுக்கு நுட்பமாகக் கற்றுக் கொடுத்தார். இருவரும் இனைந்து செயல்பட்ட எந்த ஆபரேஷனும் தோல்வியடைந்ததில்லை. இப்போதும் அப்படி ஒரு ஆப்பரேஷனின் வெற்றியைத்தான் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள்.

ஷோபா தன் கையாலேயே சமைத்து அவனுக்கு விருந்து ஏற்பாடு செய்திருந்தாள். ஏழு மாத கருவை வயிற்றில் சுமந்துக் கொண்டிருந்த மனைவியை வற்புறுத்தி நண்பனின் வீட்டிற்கு அழைத்து வந்திருந்தான் அர்ஜுன் ஹோத்ரா.

பகவான் வெகு உற்சாகமாக இருந்தார். வருந்தி வருந்தி அவனை மது அருந்த வைத்தார். மனைவி உடன் வந்திருப்பதை கூட நினைவில்கொள்ளாமல் அவரோடு சேர்ந்து கொண்டாட்டமாக பொழுதை கழித்துக் கொண்டிருந்தான் அர்ஜுன்.

பேச்சும் சிரிப்பும் அமளிப்பட்டது. ஷோபா பரிமாற மற்ற மூவரும் உணவருந்த அமர்ந்தார்கள். ஆர்த்திக்கு கணவன் மீது கடலளவு காதல்… நெஞ்சம் நிறைய ஆசை… அதனால் தான் ஷோபா மற்றும் பகவானின் கண்ணை தட்டிவிட்டு கணவனின் தட்டை தன் பக்கம் இழுத்துக் கொண்டு தன் தட்டை அவனுக்கு தள்ளிவிட்டாள். அதில் ஒரு சந்தோஷம்… வெட்கமும் காதலுமாக கணவனின் கண்களை பார்த்துக்கொண்டே அவனுடைய உணவை சுவைத்தாள்.

ஆமணக்கு கொட்டையில் செய்த பிரத்யேக விஷம் அவன் உணவில் கலந்திருப்பதும், அதை தானும் உண்டு தன் குழந்தையையும் கொன்று கொண்டிருக்கிறோம் என்றும் அவளுக்குத் தெரியாது.

பாதி உணவிலேயே அவளிடம் மாற்றம் தெரிந்தது. பகவான் மிரண்டு போனார். மனைவியை அதிர்ச்சியுடன் பார்த்தார். வெளிறிய முகத்தோடு அவளும் ஆர்த்தியைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

இது எப்படி நடந்ததென்று அவர்களுக்கு புரியவே இல்லை. அவனுக்குத்தானே விஷம் கொடுத்தோம்… அதுவும் மூன்று மணிநேரம் கழித்து மெல்ல மெல்ல கொல்லும் விஷம்.

இரவு நேரம் என்பதால் படுக்கையிலேயே உயிர் போய்விடும். அப்படியே யாருக்கும் தெரிந்தாலும் பிரச்சனை என்ன என்று கண்டு பிடிப்பதற்குள் உயிர் பிரிந்துவிடும் என்று பக்காவாக திட்டம் போட்டிருந்தார்கள்.

பார்த்துப்பார்த்து சமைத்தது போல் விஷத்தையும் ஷோபாவே தன் கையால் தயார் செய்திருந்தாள். ஆனால் இந்த குழப்பம் எப்படி நடந்தது! அவளுக்கு புரியவே இல்லை. – கணவனை பார்த்தாள்.

ஆர்த்தி கர்பிணி… அர்ஜுன் அளவுக்கு எதிர்ப்பு சக்தியில்லாதவள். அவனுக்கு கலந்த விஷம் இவள் உடம்பில் விரைவாக வேலை செய்துவிட்டது. – அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை பார்வையாலேயே முடிவு செய்து கொண்டார்கள்.

விருந்தில் விஷம் கலந்திருப்பதை புரிந்துக் கொள்ள அர்ஜுன் ஹோத்ராவிற்கு நொடி கூட தேவைப்படவில்லை.

“ப-க-வா-ன்” என்று கர்ஜனையுடன் எழுந்தான்.

மறு நொடியே ஷோபாவின் கையில் முளைத்த கைத்துப்பாக்கி துப்பிய தோட்டா அர்ஜுன் ஹோத்ராவின் நெஞ்சை துளைத்தது. “ஆஆஆ…” – துள்ளி துடித்து தரையில் விழுந்தான். மீண்டும் இன்னொரு தோட்டா… “ஆஆஆ…” – மீண்டும் துடித்து அந்த உடல்.

“அ…ர்…ஜு…ன்….!!! அ…ர்…ஜு…ன்….!!!” – உலுக்கி எழுப்பினாள் மிருதுளா.

விரண்டு எழுந்தான் அர்ஜுன். வியர்த்துக் கொட்டியது. உடல் வெடவெடவென்று நடுங்கியது. கண்கள் இலக்கில்லாமல் எங்கெங்கோ அலைந்தது.. எதையோ தேடியது…

“அர்ஜுன்… ப்ளீஸ்… வேக் அப்…” – பதற்றத்துடன் உலுக்கினாள் மிருதுளா.

“ஹாங்…” – சட்டென்று நிகழ்வுக்கு மீண்டு அவளை குழப்பத்துடன் பார்த்தான்.

“என்ன ஆச்சு?”

“என்ன?”

“கத்துனீங்களே! உடம்பெல்லாம் தூக்கிப் போட்டுச்சு. ஏதாவது கனவா?” – அவன் தலை கோதினாள்.

அவள் கையை தட்டிவிட்டு, “தள்ளிப் போ” என்றான் கடுமையாக. மிருதுளா விழித்தாள்.

“அர்ஜுன்… ஆர் யு ஓகே?” – பயத்துடன் கேட்டாள். அவன் பதில் சொல்லவில்லை.

ஏதோ சிந்தனையில் அமர்ந்திருந்தான். அன்றைய நினைவுகள் அலையலையாய் மேலெழுந்தன.

இருமுறை அவனை சுட்டு தள்ளிவிட்டு, ஒழிந்தான் என்று இருவரும் ஓடிவிட்டார்கள். இருந்த பதட்டத்தில், ஆர்த்தி உயிரை இழுத்துப் பிடித்துக் கொண்டிருக்கிறாள் என்பதை கவனிக்க தவறிவிட்டார்கள். அதுதான் அவர்கள் செய்த பெரும் பிழை.

தட்டுத்தடுமாறி அலைபேசியை தேடியெடுத்து, நடந்த அசம்பாவிதத்தை ராகேஷ் சுக்லாவிற்கு தெரியப்படுத்திய ஆர்த்தி, ஆட்கள் வந்து பார்க்கும் போது கணவன் மார்பில், தோட்டா துளைத்த இடத்தில் துணியை வைத்து அழுத்தியபடி அவன் மீதே பிணமாய் கிடந்தாள்.




Comments are closed here.

You cannot copy content of this page