Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

நிழல் நிலவு- 56

அத்தியாயம் – 56

மிருதுளா கண்விழித்த போது அர்ஜுன் அறையில் இல்லை. ஒரு கனவு – அது எவ்வளவு பெரிய பயங்கரமான கனவாகவும் இருக்கட்டும். ஆனால் வெறும் கனவு அர்ஜுன் ஹோத்ரா எனும் ஆளுமையான மனிதனை இந்த அளவு பாதிக்கக் கூடுமா? நேற்று இரவு அவன் பதட்டப்பட்டதை அவள் பார்த்தாள். அவன் உடல் நடுங்கியதை உணர்ந்தாள். அவன் பயந்தான்… அந்த பாதிப்பிலிருந்து மீள அவனுக்கு வெகுநேரம் பிடித்தது. அவளால் நம்பவே முடியவில்லை. இது எப்படி சாத்தியம்? – யோசிக்கும் போதுதான் அவளுக்கு அந்த விஷயம் பிடிபட்டது. அது வெறும் கனவாக மட்டும் இருக்க முடியாது.

சிந்தனையுடன் எழுந்து வெளியே வந்தாள். ஹாலில் எதிர்பட்டான் டேவிட். அவனைப் பார்த்ததும் தயங்கி நின்றாள்.

“என்ன மிருது?” – முகத்தை பார்த்தே அவள் ஏதோ கேட்க நினைக்கிறாள் என்று புரிந்துகொண்டான்.

ஒருமுறை சுற்றும்முற்றும் பார்த்து அர்ஜுன் அருகில் என்பதை உறுதி செய்து கொண்டு, “அர்ஜுன் மனைவிக்கு என்ன ஆச்சு?” என்றாள் மெல்லிய குரலில்.

சட்டென்று டேவிட்டின் முகத்திலிருந்த இலகுத்தன்மை மறைந்தது.

“இந்த விஷயத்தை பற்றி எந்த அளவுக்கு என்னால பேசமுடியுமா அந்த அளவுக்கு நா பேசிட்டேன். இனி உனக்கு ஏதாவது தெரியணும்னா அர்ஜுன் மட்டும்தான் சொல்ல முடியும்” என்றான் அந்நிய குரலில்.

கோர்த்தாவின் விசுவாசிகள் அனைவரையும் வெகுவாய் பாதித்திருந்த ஆர்த்தியின் மரணம் டேவிடையும் பாதித்திருந்தது. அதனால்தான் தன்னையறியாமல் அவளிடம் முகத்தை காட்டிவிட்டான். ஆனால் சட்டென்று வாடிவிட்ட அவள் முகம் அவனை சங்கடப்படுத்திவிட்டது. உடனே தணிந்து, “அர்ஜுன் கண்டிப்பா உன்கிட்ட பேசுவான்” என்றான்.

கண்களை எட்டாத புன்னகையில் அவன் முயற்சியை அங்கீகரித்தவள், “இந்த பிரச்னையை சரிபண்ண நினைக்கிறேன் டேவிட். ஹெல்ப் மீ” என்றாள்.

மறுப்பாக தலையசைத்து, “உன்னால முடியாது” என்றான் டேவிட்.

“ட்ரை பண்றேன்”

“வேண்டாம்…”

“ஏன்?”

“பிரச்சனை உன் பேரண்ட்ஸோட முடியட்டும். நீ உள்ள போயி மாட்டிக்காத. ஃபிரீயா விட்டுடு”

“எப்படி டேவிட்? அர்ஜுன் மனசு ரொம்ப பாதிக்கப்பட்டிருக்க மாதிரி தெரியுது. பழிவாங்கறதுக்காக எந்த எல்லைக்கும் போவாரு போலருக்கே!” – பயம் தெரிந்தது அவள் பேச்சில்.

டேவிட் மௌனமானான்.

“என்ன?”

“அர்ஜுனை கேர் பண்றியா நீ?”

“ஏன் அப்படி கேட்கற டேவிட். கண்டிப்பா கேர் பண்ணறேன்”

“அப்போ விட்டுடு. இந்த விஷயத்துல நீ தலையிடாத” – சுலபமாக சொல்லிவிட்டு போய்விட்டான். ஆனால் சம்மந்தப்பட்டிருப்பது அவளுடைய பெற்றோர். மனம் கேட்குமா?

விலகிச் செல்லும் அவன் முதுகையே சற்று நேரம் வெறித்துக் கொண்டிருந்தவள், “அர்ஜுன் எங்க?” என்றாள் சத்தமாக. சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலில் விழுவது மேலல்லவா?

“பின்பக்கம்…” – பதில் கொடுத்தபடியே சமையலறைக்குள் நுழைந்தான் டேவிட்.

‘பின்பக்கமா!’ – வியப்புடன் வெளியே வந்து, வீட்டை சுற்றிக் கொண்டு பின்பக்கம் சென்றாள்.

வெட்டப்பட்ட மரக்கிளைகள் பரவலாகக் கிடந்தன. காற்று பலமாக வீசிக் கொண்டிருந்தது. மழை வரும் போல் வானம் கருத்திருந்தது. ‘எங்கே அவன்?’ – அவள் பார்வை பராமரிப்பற்றுக் கிடந்த அந்த தோட்டத்தை வட்டமடித்து.

காட்டுத்தனமாக வளர்ந்து கட்டுக்கடங்காமல் கிளைவிட்டு வீட்டின் மேல் படர்ந்து கிடந்தது அந்த பெரிய மரம். கிளைகள் மோதி சுவர் சேதமடைய துவங்கியிருந்தது. வேர்கள் ஊடுருவி தரையில் விரிசல்கள் விழ துவங்கியிருந்தது. ஒற்றை மனிதனாய் அந்த மரத்தில் ஏறி கிளைகளை வெட்டி வீழ்த்திக் கொண்டிருந்தான் அர்ஜுன்.

மிருதுளா அவனைத் தேடி மரத்தடிக்கு வந்தாள். அடர்ந்த கிளைகளுக்குள் மறைந்திருந்தவன் அவள் வருகையை உணர்ந்து இலைகளை விளக்கி அவளை பார்த்தான்.

வெட்டி வீழ்த்தப்பட்ட கிளைகளில் இடறி விழுந்துவிடாமல் கவனமாக அடியெடுத்துவைத்து நடந்தாள் மிருதுளா. அவள் பார்வை அங்கும் இங்கும் அலைந்தது. “அர்ஜுன்…” – குரல் கொடுத்தாள்.

“இங்க?” – திடீரென்று ஒலித்த குரலில் திடுக்கிட்டு அண்ணார்ந்து பார்த்தாள். மேலே, மரக்கிளையில் விசை ரம்பத்துடன் அமர்ந்திருந்தான்.

“என்ன பண்றீங்க?”

“தெரியல?”

“தெரியுது. ஆனா நீங்க ஏன் இதை பண்ணிட்டிருக்கீங்க?”

“பிடிச்சிருக்கு… செய்றேன்… நீ உள்ள போ…”

மீண்டும் ரம்பத்தை இயக்கி மேல்கிளையில் அழுத்திப் பிடித்தவன், அவள் அசையாமல் நிற்பதை கண்டு ரம்பத்தின் விசையை கட்டுப்படுத்தினான்.

“உள்ள போன்னு சொன்னேன்ல?” – அதட்டினான்.

“மழை வர மாதிரி இருக்கே”

“கிளை பாதி கட் ஆயிருக்கு”

“காத்து பலமா அடிக்குது”

“நீ உள்ள போ”

“கீழ இறங்கி வாங்க..”

“எனக்கு வேலை இருக்கு”

“இது ரொம்ப ரிஸ்க்”

“காதுல விழால? செவிடா நீ?”

“பிடிவாதம் பிடிக்கிறீங்க”

“நா என்ன செய்றேன்னு எனக்கு தெரியும்”

“நா உள்ள போகமாட்டேன்”

“அப்போ நில்லு… மரம் மேல விழுந்து நசுங்கலாம்” – எரிச்சலுடன் கூறிவிட்டு மீண்டும் ரம்பத்தை இயக்கினான். ஆனால் கைகள் வலுவிழந்தன. கவனம் சிதறியது… அவனால் நினைத்ததை செயல்படுத்த முடியவில்லை. இடையூறாக அவள் நின்றாள். அழுத்தமாக நின்றாள்.

‘அப்படி என்ன பிடிவாதம்? நீ சொன்னால் உடனே நான் மண்டியிட்டுவிட வேண்டுமா?’ – அவனுக்கு கோபம் வந்தது. விட்டுக்கொடுக்காமல் தன் வேலையை தொடர்ந்து செய்தான்.

இருவரும் நீயா-நானா என்று போட்டிபோட்டுக் கொண்டிருந்தார்கள். மரம் அங்கு ஒரு காரணி மட்டும் தான். இவருடைய மனமும் வாதாடிக் கொண்டிருந்த உண்மையான பிரச்சனை வேறு… அந்த நேரத்தில் அங்கே டேவிட் வந்தான்.

“காட் எ நியூஸ் அர்ஜுன்”

“என்ன?”

“சுக்லாஜி பேசணுமாம். கால் பண்ண சொன்னார். உடனே…” – அவசரப்படுத்தினான். அர்ஜுன் கீழே இறங்க வேண்டிய சூழ்நிலை வந்தது.

மிருதுளாவை பார்த்து முறைத்துக் கொண்டே கீழே இறங்கியவன், அவளிடம் நெருங்கி, “டோன்ட் சேலஞ் மீ” என்று கடித்த பற்களுக்கிடையே வார்த்தைகளை உமிழ்ந்துவிட்டு உள்ளே வந்தான்.

அவனை பின்தொடர்ந்து வந்தவள், வெளியே சென்றால்தான் பெற்றோரை தொடர்புகொள்ள வாய்ப்பு கிடைக்கும் என்று எண்ணி “இன்னிக்கு காலேஜ் போறேன்” என்றாள்.

சட்டென்று நின்று அவளை திரும்பிப் பார்த்த அர்ஜுன், “வேண்டாம்” என்றான். அவன் பார்வை அவள் தலையில் போடப்பட்டிருந்த கட்டில் பதிந்திருந்தது.

“ஐம் ஆல்ரைட்… எனக்கு ஒன்னும் இல்ல” – சமாளிக்க முயன்றாள்.

ஒரு கபடச் சிரிப்புடன், “இனி நீ காலேஜ் போக வேண்டிய அவசியம் இல்ல” என்றான்.

“மீன்ஸ்?”

“நீ என்கிட்ட இருக்கேன்னு ஷோபாவுக்கு தெரியப்படுத்தியாச்சு. இனி நடக்க வேண்டியது தானா நடக்கும். நீ ரிலாக்ஸ்டா இரு” – ஏளனம் தெறித்தது அவன் பேச்சில்.

மிருதுளாவின் முகம் விழுந்துவிட்டது. அதை புறக்கணித்துவிட்டு அலைபேசியை எடுத்து சுக்லாவுக்கு தொடர்புகொண்டான். ஒரு குறிப்பிட்ட ஹோட்டலில் தன்னை வந்து சந்திக்கும்படியும் கூறினார்.

போனை அணைத்துவிட்டு வெளியே வந்தான். அவனுடைய வீட்டை கடந்து சென்ற வெண்ணிற ஆக்டிவா சாலையில் கிடந்த கல்லில் ஏறி ஸ்கிட் ஆகி சரிந்தது. அதில் பயணம் செய்த பெண் அர்ஜுனை பார்த்தபடியே கீழே விழுந்து உருண்டாள்.

ஒரு நொடி நிதானித்து அந்த பெண்ணை பார்த்தவன் பிறகு உதவிக்கு ஓடினான். அவளை தூக்கிவிட்டு அடியேதும் பட்டிருக்கிறதா என்று விசாரித்தான். சின்ன சிராய்ப்புகளை தவிர பெரிய அடியேதும் படவில்லை என்று தெரிந்துக் கொண்டு வண்டியை நிமிர்த்திக்கொடுத்தான். அவள் நன்றி கூறிவிட்டு மீண்டும் வண்டியை ஸ்டார்ட் செய்து புறப்பட்டாள். கைமாறிய பென் ட்ரைவோடு வீட்டை நோக்கி நடந்தான் அர்ஜுன்.

*******************

அது ஒரு ஸ்டார் ஹோட்டலின் பார். அர்ஜுன் உள்ளே நுழைந்த போது மது அருந்திக் கொண்டிருந்தார் ராகேஷ் சுக்லா. முகம் கருத்து கண்கள் சிவந்து கடுமையான முகபாவத்துடன் அமர்ந்திருந்தார். ஏதோ சரியில்லை என்று அவன் உள்ளுணர்வு எச்சரித்தது. மனதில் தோன்றிய எதையும் முகத்திலோ பாவனைகளிலோ காட்டிக்கொள்ளாமல் இயல்பாக சென்று அவருக்கு எதிரில் அமர்ந்தான்.

ஓரிரு நொடிகள் அவனை மெளனமாக பார்த்தவர், ஒரு கண்ணாடி கோப்பையில் மதுவை நிரப்பி அவன் பக்கம் தள்ளினார்.

அர்ஜுன் ஒரு கணம் யோசித்தான். பிறகு, “நா குடிக்க மாட்டேன்னு உங்களுக்கு தெரியும்” என்றான்.

“பழக்கமெல்லாம் மாறிடிச்சுங்கறதும் எனக்கு தெரியும்” என்றான் அவர் அழுத்தமாக.

அர்ஜுன் அவரை வெறித்துப்பார்த்தான். “என்னை வேவு பார்க்கறீங்க”

“நிச்சயமா… எல்லாரையும் பார்க்கறேன்… உன்னையும் பார்த்துக்கிட்டே தான் இருக்கறேன்”

அர்ஜுன் சிரித்தான். ஒரு மெல்லிய சிரிப்பு… அந்த சிரிப்பு அவரை இன்னும் ஆத்திரப்படுத்தியது. இன்னொரு கோப்பை மதுவை மடமடவென்று உள்ளே இறக்கினார்.

“இது ஒரு ட்ராப் அப்படின்னு சொன்ன. நம்பினேன்… அவளை வச்சு அந்த பகவானை பிடிக்கப் போறேன்னு சொன்ன. சந்தோஷப்பட்டேன். என்ன நடந்துக்கிட்டிருக்கு?”

“எல்லாம் பிளான் படி கரெக்ட்டா போயிட்டு இருக்கு”

சுக்லா மறுப்பாக தலையசைத்தார். “உனக்கு அவ மேல ஆசைன்னு எனக்கு தெரியும். ஆசை தீர்ற வரைக்கும் வச்சு என்ஜாய் பண்ணிட்டு முடிச்சிடுவேன்னு நெனச்சேன்” என்றார்.

அர்ஜுனின் முகம் கறுத்தது. தாடை இறுகியது. சுக்லா அவனை வெறித்துப் பார்த்தார். “விழுந்துட்ட இல்ல? அவகிட்ட… அந்த பகவானோட ரெத்தத்துக்கிட்ட… ஷோபாவோட பிரதிகிட்ட… விழுந்துட்ட இல்ல?” – கொடூரமாக மாறியது அவர் முகம்.

“இல்ல… அப்படி எதுவும் இல்ல” – சுதாரிக்க முயன்றான். அவர் காதுகொடுக்கவில்லை.

“என் பொண்ணோட இடத்துக்கு – என் மகள் ஆர்த்தியோட இடத்துக்கு கொண்டுவர அந்த துரோகியோட மகள்தானா கிடைச்சா உனக்கு?” – வெறுப்புடன் கேட்டார். விக்கித்துப்போனான் அர்ஜுன்.




Comments are closed here.

You cannot copy content of this page