Share Us On
[Sassy_Social_Share]நிழல் நிலவு-57
288
0
அத்தியாயம் – 57
ராகேஷ் சுக்லாவின் வார்த்தை நெஞ்சுக்குள் ஈட்டி போல் பாய்ந்தது. குரல் வேண்டுமானால் அவருடையதாக இருக்கலாம். ஆனால் கேள்வி அவளுடையது – ஆர்த்தியுடையது.
‘என்னுடைய இடத்தில் என்னை கொன்றவர்களின் மகளா!’ – அவள் ஆன்மாவின் அழுகுரல் செவியில் ஒலித்தது. நாணருந்த வில் போல் விறைத்து நிமிர்ந்தான் அர்ஜுன். முகமெல்லாம் முத்துமுத்தாக வியர்த்துவிட்டது. தீ பிடித்துக் கொண்டது போல் உள்ளம் எரிந்தது. இறுகிய முகத்துடன் மதுக்கோப்பையை கையில் எடுத்தான்.
“என் அன்பு மனைவிக்காக” என்றபடி கோப்பையை உயர்த்தினான். ஓரிரு நொடிகள் அவன் முகத்தை ஊன்றிப் பார்த்த ராகேஷ் சுக்லா, தன்னுடைய கோப்பையை எடுத்து, “நம்புறேன்” என்று சியர்ஸ் செய்தார்.
முழு கோப்பையையும் ஒரே மடக்கில் தொண்டையில் சரிதான் அர்ஜுன். முகம் ஜிவுஜிவுவென்று சிவந்து போனது. கிளாஸை கணீரென்று டேபிளில் வைத்துவிட்டு, “ஆர்த்தி உங்க மக மட்டும் இல்ல” என்றான்.
அவர் பதில் சொல்லாமல் அவன் முகத்தை வெறித்துப் பார்த்தார். பிறகு ஆமோதிப்பாக தலையை மேலும் கீழும் அசைத்தார்.
“உன் மனைவியையும் குழந்தையையும் கொன்னு உன்ன தனிமரமா ஆக்கின மாதிரி, அவனோட மனைவியையும் மகளையும் கொன்னு அவனை தனிமரமா ஆக்கி… அதுக்கப்பறம் அவனை கொல்லுவேன்னு சபதம் எடுத்திருக்க. மறந்துடலையே?” – புருவங்கள் நெரிய கனத்த குரலில் கேட்டார்.
அர்ஜுன் ஹோத்ராவின் முகம் இரும்பு குண்டலம் போல் இறுகியது.
“அவ என் மனைவி – வயித்துல என்னோட குழந்தையோட செத்துட்டா… இங்க… என் நெஞ்சுல…” – என்று தன் மார்பை தட்டிக்காட்டியவன், “இங்க எரியிற நெருப்பு இன்னும் அணையல… அணையாது” என்றான்.
ராகேஷ் சுக்லாவின் கண்களில் ஈரம் தெரிந்தது. கோப்பையில் மதுவை நிரப்பி மடமடவென்று குடித்தார்.
“உன்ன நம்பணுன்னுதான் விரும்பறேன். ஆனா கண்ணுக்குள்ள விழுந்த துரும்பு மாதிரி ஒரு விஷயம் என்னை உருத்திக்கிட்டே இருக்கு. க்ளீயர் பண்ணு” – என்றார்.
“கேளுங்க. என்ன டவுட்?”
“அவளுக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்குற? அவளை ஏன் பாதுகாக்கற? உயிரைக் கூட கொடுக்க துணியிற போலருக்கே!”
“புரியல” – தாடையை தடவினான்.
“பிதர்கானிகா – ஹோட்டல் – கன் ஷாட் – இப்போ புரியுதா?”
ஆர்த்தியின் நினைவில் நெகிழ்ந்திருந்த மனம் சட்டென்று எச்சரிக்கை உணர்விற்கு தாவியது. அவருக்கு எந்த அளவுக்கு விஷயம் தெரிந்திருக்கும் என்கிற சிந்தனையோடு தலையை மேலும் கீழும் அசைத்தான்.
“உன்னோட உயிரை கூட பொருட்படுத்தாம அவளை காப்பாத்தியிருக்க – என் பொண்ணு உன்ன காப்பாத்தின மாதிரி. இதுக்கு ஒரே ஒரு அர்த்தம்தானே இருக்க முடியும்?” – கோரப்பசியில் உறுமும் அகோரன் அட்சரசுத்தமாக அவரோடு பொருந்திப்போவான்.
அர்ஜுன் அலட்டிக்கொள்ளாமல் தலையை குறுக்காக அசைத்தான். அவர் புருவம் சுருங்கியது.
“அன்னைக்கு டார்கெட் மிருதுளா இல்ல. வந்தது பகவானோட ஆள்”
“வாட்?”
“வர்ற இன்பர்மேஷன் எல்லாத்தையும் நம்பாதீங்க. சில நேரங்கல பொய்கள் ரொம்ப பக்கத்துல இருக்கும்”
நெற்றி சிந்தனையில் சுருங்க மீசையை நீவினார் சுக்லா.
“வந்தவன் மிருதுளாவை எச்சரிக்கவோ இல்ல தூக்கவோ கூட முயற்சி செய்திருக்கலாம். நா இடையில புகுந்துட்டேன். ஃபயர் பண்ணிட்டான்” – அர்ஜுன் விளக்கம் கொடுத்தான்.
“இன்னொரு இழப்பு என் பக்கத்துலேருந்து இருக்கக் கூடாது. சீக்கிரம் முடி. முதல்ல அம்மாவையும் பொண்ணையும். அடுத்து பகவானை” – உறுதியாக கூறினார் சுக்லா. முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல் ஆமோதிப்பாக தலையசைத்தான் அர்ஜுன்.
*************************
வெளியே நன்றாக மழை பெய்து கொண்டிருந்தது. வராண்டாவில் கிடந்த பிரம்பு நாற்காலியில் கன்னத்தில் கைவைத்தபடி சோகமாக அமர்ந்திருந்தாள் மிருதுளா. சூடான காபி கப்புடன் அங்கே வந்தான் டேவிட்.
“எந்த கோட்டையை பிடிக்கணும்?” – அவளுடைய மனநிலையை இயல்பாக்க முயன்றபடி இன்னொரு நாற்காலியில் அமர்ந்தான்.
பெருமூச்சுடன் அவன் பக்கம் திரும்பினாள் மிருதுளா.
“சொன்னா ஹெல்ப் பண்ண போறியா என்ன?” – கேலி போல் தன் நிராசையை வெளிப்படுத்தினாள்.
அவளிடம் காபி கப்பை நீட்டி, “இந்த காபி மேல சத்தியம் செய்யட்டுமா?” என்றான் டேவிட் மென்புன்னகையுடன். அவன் எதிர்பார்த்தபடியே மிருதுளாவின் முகத்திலும் புன்னகை மீண்டது. காபியை கையில் வாங்கி கொண்டு, “என்னவோ போல இருக்கு. எங்காவது வெளியே போயிட்டு வரலாமா?” என்றாள்.
“அவ்வளவுதானே கிளம்பு”
“மழையா இருக்கே! வேணுன்னா கொஞ்சம் லேட்டா கிளம்பலாம்”
“ப்ச் ப்ச்… கிளம்பனும்னு முடிவு பண்ணியாச்சு. அப்புறம் மழையென்ன வெயிலென்ன. எல்லாமே அனுபவம்தான். கிளம்பு” – ஊக்கினான். மகிழ்ச்சியோடு புறப்பட்டாள் மிருதுளா.
மிருதுளாவின் அருகாமை இதயத்தை இதமாக்க, விசிலொலியில் பாடலை இசைத்தபடி மிதமான வேகத்தில் காரை செலுத்தி, இலக்கில்லாமல் சிட்டியை சுற்றி வந்தான் டேவிட். அவனிடம் பேச்சு கொடுத்து ஆர்த்தியை பற்றி அறிந்துகொள்ள முயன்றாள் மிருதுளா.
அவளை திரும்பிப் பார்த்து புன்னகைத்த டேவிட், “பிரச்னையை மறந்து ரிலாக்ஸ் பண்ணத்தான் வெளியே வந்தோம். அதைப் பற்றி யோசிக்காத” என்று கூறி அவளுடைய முயற்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தான்.
இப்பொது மட்டும் அல்ல, காலையிலிருந்தே பல முறை பலவிதங்களில் கேட்டுப் பார்த்துவிட்டாள். கழுத்தை அறுத்தால் கூட அந்த பெண்ணை பற்றி ஒரு வார்த்தை பேசமாட்டான் என்று தோன்றியது.
ஆனால் மிருதுளா அந்த பெண்ணோடு பலவிதங்களில் தொடர்பு கொண்டிருக்கிறாள். அவள் அர்ஜுனின் மனைவி. அவளுடைய மரணத்தில் மிருதுளாவின் பெற்றோர் சம்மந்தப்பட்டிருக்கிறார்கள். இன்று அவர்களுடைய உயிரும் ஆபத்தில் இருக்கிறது. இதையெல்லாம் சுமூகமாக சரி செய்ய வேண்டும் என்றால் அவளுக்கு எல்லாம் தெரிந்தாக வேண்டும். மனம் நிலைகொள்ளாமல் அலைபாய்ந்தது.
“டேவிட்”
“ம்ம்ம்”
“பக்கத்துலதான் நான் தங்கியிருந்த ரூம் இருக்கு. என்னோட ஃபிரண்டை பார்க்கணும். போகலாமா?” – மெல்ல கேட்டாள்.
டேவிட் சற்று யோசித்தான். “ப்ளீஸ்…” – மிருதுளா கெஞ்சினாள்.
“அர்ஜூன்கிட்ட சொல்லாம் வந்திருக்கோம்” – தயங்கினான்.
அனிச்ச மலர்போல் வாடிவிட்டது அவள் முகம். அவனுக்கு என்னவோ போல் இருந்தது. அவள் கேட்டதை செய்யாமல் இருக்க மனம் வரவில்லை. அர்ஜுன் இதை விரும்ப மாட்டான் என்று தெரிந்தும் காரை அவள் சொன்ன திசையில் திருப்பினான்.
மிருதுளாவை வீட்டுக்குள் அனுப்பிவிட்டு வாயிலிலேயே காவலாக நின்றான் டேவிட்.
மிருதுளாவை பார்த்ததும் அந்த தோழிக்கு மிகுந்த ஆச்சரியம். சமீபகாலமாக அவளுடைய நடவடிக்கையில் பெரிய மாற்றம் இருப்பதை கவனித்துக் கொண்டிருந்தவள் அந்த பெண். அதுமட்டும் அல்ல… மிருதுளா ஏதோ பெரிய காரியங்களிலெல்லாம் ஈடுபடுவதாகவும் கல்லூரியில் ஒரு பேச்சு அடிபட்டுக் கொண்டிருந்தது. அதற்கு தகுந்தாற் போல் இப்போது அடித்து ஊற்றும் மழையில், தலையில் ஒரு பெரிய கட்டுடன், யாரோ ஒரு புது மனிதனுடன் அவள் திடிரென்று வந்து நின்றதும் அவளுக்கு சற்று பதட்டமாகிவிட்டது. என்ன ஏது என்று விசாரித்தாள்.
மிருதுளா விரிவாக எதையும் கூறாமல் பூசி மெழுகி சமாளித்துவிட்டு கல்லூரியைப் பற்றி விசாரித்தாள். தன்னைத் தேடி யாரேனும் வந்தார்களா என்று கேட்டாள்.
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே அந்த தோழியின் அலைபேசியிக்கு ஒரு அழைப்பு வந்தது. அழைத்தவள் ஷோபா.
மிருதுளாவிற்கு ஒரே ஆச்சரியம். அலைபேசியை வாங்கி, “நா இங்க இருக்கேன்னு உங்களுக்கு எப்படி தெரியும்?” என்றாள் முதல் கேள்வியாக.
“ஃபாலோ பண்ணிகிட்டேதான் இருக்கேன். உன்ன நெருங்க முடியாம தவிச்சுக்கிட்டிருக்கேன். அடிச்சானா உன்ன? ரொம்ப கஷ்ட்டப்படுத்தினானா?” – வேதனையுடன் கேட்டாள்.
மிருதுளாவிற்கு தொண்டையை அடைத்தது. அழ வேண்டும் போல் இருந்தது.
“என்னம்மா நடக்குது?” என்றாள் கலக்கத்துடன்.
“எல்லாத்தையும் சொல்றேன். ஒன்னுவிடாம சொல்றேன். ஆனா போன்ல இல்ல. நீ எப்படியாவது அவனுக்கு தெரியாம அந்த வீட்டைவிட்டு மட்டும் வெளியே வந்துடு. உன்ன என்கிட்ட கொண்டுவந்து சேர்க்க ஆளுங்க சுத்திக்கிட்டே இருக்காங்க”
“ஆர்த்திக்கு என்ன ஆச்சு? உங்களுக்கும் கோர்த்தாவுக்கும் என்ன சம்மந்தம்? அர்ஜுன் எதுக்கு உங்கள துரத்தணும்?”
“ஒரு கேள்விக்கும் என்னால இப்போ பதில் சொல்ல முடியாது”
“எனக்கு பைத்தியம் பிடிச்சிடும்”
“நீ ஷோபாவோட பொண்ணு. பகவானோட ரெத்தம். உன்னால அங்கிருந்து எஸ்கேப் ஆக முடியும்”
“எனக்கு அப்படி செய்ய விருப்பம் இல்ல”
“உன்ன கொன்னுடுவான்”
“ஐம் ஹிஸ் லவ்”
“மண்ணாங்கட்டி…” – கடுங்கோபத்துடன் வந்து விழுந்தது வார்த்தை. மிருதுளா சட்டென்று மௌனமானாள்.
“மிருது… என்னால ரொம்ப நேரம் பேச முடியாது. சொல்றத நல்லா கேட்டுக்கோ. அவனை நம்பாத. என்னையும் உன்னோட அப்பாவையும் உயிரோட பார்க்கணும்னா எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அந்த வீட்டைவிட்டு வெளியே வா” – அழைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது.
நடந்த எதையும் அறியாத டேவிட், எதார்த்தமாக உள்ளே வந்து “கிளம்பலாமா?” என்றான் மிருதுளாவிடம். அவள் முகத்தில் தெரிந்த வித்தியாசத்தில் அவன் புருவம் சுருங்கியது.
“என்ன ஆச்சு?” என்றான். ஒன்றும் இல்லை என்பது போல் மிருதுளா தலையசைத்துவிட்டு தோழியிடம் விடைபெற்று புறப்பட்டாள்.
வெளியே மழை ஓய்ந்திருந்தது. மிருதுளாவின் மனம் கலங்கிப் போயிருந்தது. இருதலைக்கொள்ளி எறும்பாக இரண்டு பக்கமும் போக முடியாமல் தவித்தாள்.
“என்ன ஆச்சு மிருது? ஆர் யு ஓகே?” – அவளுடைய முகவாட்டம் உறுத்த மீண்டும் கேட்டான்.
“மெடிக்கல் ஷாப்புக்கு போ டேவிட்”
“ஏன்? என்ன ஆச்சு? உடம்பு ஏதும் சரியில்லையா?” – காரை மெடிக்கல் ஷாப் எதிரில் நிறுத்தியபடி கேட்டான். அவள் மீதிருந்த அக்கறை அவனை வேறுவிதமாக சிந்திக்கவிடவில்லை. அதுவே அவளுக்கு வசதியாகிவிட்டது.
“ஆமாம்… நீ இங்கேயே இரு… நா வாங்கிட்டு வந்துடறேன்”
“இல்லல்ல… நானும் வரேன்”
“பர்சனல் டேவிட். புரிஞ்சுக்கோ… கொஞ்சம் ஸ்பேஸ் கொடு” – முகத்தை சுழித்துக் கொண்டு பட்டென்று கூறிவிட்டாள். கன்னத்தில் அறை வாங்கியது போல் திகைத்துப் போய் அமர்ந்துவிட்டான் டேவிட்.
அர்ஜூனாக இருந்திருந்தால் இவ்வளவு சுலபமாக சமாளித்திருக்க முடியாது என்கிற எண்ணத்துடன் மருந்து கடைக்குள் நுழைந்து டேவிட்டின் கண்ணை தட்டுவதற்காக ஒரு பொருளையும், தான் உண்மையில் வாங்க நினைத்த இன்னொரு முக்கியமான பொருளையும் வாங்கிக்கொண்டு வெளியே வந்தாள் மிருதுளா.
Comments are closed here.