Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

நிழல் நிலவு- 63

அத்தியாயம் – 63

நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் உள்ளது போல், நடந்து முடிந்த சம்பவத்திற்கும் இரண்டு நியாயங்கள் இருக்கக் கூடும் என்று நம்பிக் கொண்டிருந்தாள் மிருதுளா. தன் பெற்றோரின் நியாயத்தை அர்ஜுனிடம் எடுத்துரைத்து அவனை சமாதானம் செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தாள். இப்போது அனைத்தும் பாழாகிவிட்டது. கண்ணீர் வற்றி வறண்டு போன அவள் கண்கள் விட்டத்தை வெறித்துக் கொண்டிருந்தன.

ஒரு கர்பிணி பெண்ணை கொன்றுவிட்டு கொஞ்சம் கூட குற்றஉணர்ச்சியில்லாமல் பேசியவள் அவளை பெற்றவளே தானா! கதவுக்கு கூடுதல் தாழ்ப்பாள் போட்டு பூட்டிக்கொள்ளும் பயந்த பெண் தானே அவள் அறிந்த தாய். இங்கு இருப்பவள் யார்? அவளுக்கு கொஞ்சமும் அறிமுகமற்ற இந்த பெண் யார்? – மிருதுளாவின் நெஞ்சு எரிந்தது. பெற்ற தாயை கூட அறிந்துகொள்ளாமல் போய்விட்ட முட்டாள்தனம் அவளை வேதனைப்படுத்தியது.

அவன் முகத்தில் எப்படி விழிப்பது? என்ன சொல்லி மன்னிப்பு கேட்பது? கிட்டத்தட்ட ஐந்துமணிநேரம் ஆகிவிட்டது. இந்நேரம் மாத்திரையின் வீரியம் குறைந்திருக்கும். விழித்திருப்பான். என்ன யோசிப்பான்? எப்படி உணர்வான்? – நினைக்கும் பொழுதே நெஞ்சுக்குள் ஏதோ பிசைவது போல் இருந்தது. குற்றம் இழைத்தவளாய் தவித்தாள்.

‘நீ என்னைவிட்டு போகக் கூடாது. போக விடமாட்டன்’ – அவனுடைய குரல் அவள் சிந்தையிலிருந்து நீங்க மறுத்தது. ‘இப்போது என்ன முடிவெடுப்பான்? எப்படி ரியாக்ட் செய்வான்?’ – இதயம் வலித்தது.

அனைத்தையும் உதறிவிட்டு அவனிடம் ஓடிவிட வேண்டும் போல் இருந்தது. ஆனால் முடியாது. அவளுடைய நெருக்கம் அவனுக்கும் ஆபத்தை கொண்டுவந்து சேர்த்துவிடும். ராகேஷ் சுக்லா… அந்த மீசைக்கார மனிதரின் கண்களில் தெரியும் வெறி மிருதுளாவின் முதுகுத்தண்டை சில்லிடச் செய்தது.

வலுவிழந்து ஒடுங்கி போர்வைக்குள் புகுந்துக் கொண்டாள். கண்களை மூட முடியவில்லை. அவன் நினைவு நெஞ்சை அழுத்தியது. சுழலுக்குள் சிக்கிக் கொண்டது போல் உணர்ந்தாள். அதிலிருந்து தப்பிக்க விரும்பி உறங்க முயன்றாள். உறங்கிவிட்டால் எல்லாம் மறந்துவிடுமே! தற்காலிகமான விடுதலைதான். ஆனால் அது அவளுக்கு அப்போது மிகவும் அவசியமானது. பித்துப்பிடிக்கும் நிலையிலிருந்து தப்பிக்க வேண்டுமெனில் அவள் சற்று நேரம் உறங்கியே ஆக வேண்டும். முயன்று இமைகளை இழுத்து மூடினாள். வெகுநேரம் பிடித்தாலும் அவளுடைய முயற்சிக்கு பலன் கிடைக்கவே செய்தது. மிருதுளாவை உறக்கம் தழுவியது.

எவ்வளவு நேரம் கழிந்ததோ தெரியாது. ஒரு மெல்லிய சத்தம்… மூச்சுவிடுவது போன்றதொரு காற்று சத்தம்… அவளுக்கு வெகு அருகில்… காதோரம்… திடுக்கிட்டு விழித்தாள். சட்டென்று ஒரு வலிய கரம் அவள் வாயை அழுந்த மூடியது. விழிகள் தெறிக்க உற்றுப் பார்த்தாள். அவன்… அர்ஜுன்!!! அவளுக்கு மிக அருகில், துப்பாக்கியை அவள் நெற்றி பொட்டுக்கு நேராக குறிபார்த்தபடி, கண்களில் கோப கனலுடன் குனிந்து நின்றுக் கொண்டிருந்தான்.

அவள் இதயம் தாறுமாறாக துடித்தது. பிராணவாயு ஏறுக்கு மாறாக உள்ளே வெளியே ஓட்டம் பிடித்தது. ஏனென்றே புரியாமல் கண்களில் கண்ணீர் தாரைதாரையாய் வழிந்தது. இமைகளை சிமிட்டி கண்ணீரை அடக்க முயன்றாள். நெஞ்சில் கைவைத்து அழுத்தி இதயத்தின் துடிப்பை கட்டுப்படுத்த முயன்றாள். எதுவும் முடியவில்லை.

கொடூர கொலைகாரனின் தீவிரத்துடன் அவளை துளைத்தது அவன் பார்வை. அவனுடைய மூச்சுக்காற்றின் வெப்பமும் அதிலிருந்த கோபத் தகிப்பும் அவள் முகத்தில் வந்து மோதியது. திகைப்புடன் அவனை பார்த்துக் கொண்டே இருந்தவள் அப்போதுதான் அதை கவனித்தாள். அவன் தாடையோராம் ஏதோ சின்ன சின்ன புள்ளிகளாக… கழுத்துப்பகுதியில் கூட… என்ன அது! – புரியாமல் பார்வையை மேலும் கூர்மையாக்கியவள் திடுக்கிட்டாள். ‘ஐயோ… கடவுளே…!’

ரெத்தம்!!!! முகம், கழுத்து, தாடை எங்கும் ரெத்த புள்ளிகள்… அடிவயிற்றிலிருந்து கிளம்பிய அவள் அலறல் அவன் கைகளுக்குள் சிக்கித் திணறியது. கத்த முடியாமல் திமிறினாள்.

“ஷ்ஷ்ஷ்…. சின்ன சத்தம் கூட வர கூடாது. காட் மீ?” – உணர்வுகளற்ற அந்த குரல் மிகவும் அபாயகரமானது. மிருதுளா தலையை மேலும் கீழும் அசைக்க முயன்றாள்.

“லுக் அட் திஸ். லோடட் கன். கீழ தூங்கற யார் முழிச்சாலும் மேல அனுப்பிடுவேன், ஐ மீன் இட்” – எச்சரித்தான். அவள் மூளை எங்கோ ஓடியது…

‘கீழ தூங்கற யார் முழிச்சாலும்! கீழ தூங்கற! யாரோ உயிரோட இருக்காங்க… தூங்குறாங்க… அம்மா… அம்மா… அப்பா… ஐயோ… யாரு…’ – அவள் உயிர் துடித்தது. அடக்க முடியாத கண்ணீர் அருவி போல் கொட்டியது.

“கெட் அப்…” – கையை விலக்கிவிட்டு ஆணையிட்டான். வலுவிழந்து தொய்ந்த உடலை தூக்கி நிறுத்த முடியாமல் துவண்டு கிடந்தாள் மிருதுளா.

“ஐ… ரிப்பீட்… கெட்… அப்…” – கண்களை உருட்டி அடி குரலில் உறுமினான். உடல் வெடவெடக்க எழுந்து நின்றாள் மிருதுளா.

“வாக்… ம்ம்ம்…” – முழுகில் துப்பாக்கியை வைத்து அழுத்தி அவளை முன்னோக்கி தள்ளினான்.

மூச்சுவிடக் கூட பயந்தவளாக மெல்ல அடியெடுத்துவைத்து வெளியே வந்தாள். ஹாலில் விடிவிளக்கு எரிந்துக் கொண்டிருந்தது. மங்கலான வெளிச்சத்தில் பார்வை செலுத்தி பெற்றோரின் அறையை பார்த்தபடியே மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்துக் கொண்டிருந்தவள் திடுக்கிட்டு நின்றாள். சோபாவில் ஒரு ஆண் தலை தொங்கி கொண்டிருந்தது.

“அப்பா…” – கதறியது அவள் உள்ளம். என்ன இருந்தாலும் பெற்றவராயிற்றே! ரெத்தம் துடிக்காதா? அசைவற்று நின்றவளை துப்பாக்கி முனையால் முன்னோக்கி தள்ளினான்.

அவளால் முடியவில்லை. கால்கள் ஒத்துழைக்கவில்லை… அந்த நேரம் உள்ளே ஒரு இருமல் சத்தம்… தாயின் குரல்… ஓவென்று உள்ளே உணர்வுகள் பொங்கின. அழுகை நெஞ்சை அடைத்தது. கைகளால் வாயை பொத்திக் கொண்டாள். மூச்சு காற்றுக்கு திணறியது நெஞ்சுக்கூடு… மீண்டும் முதுகில் ஒரு அழுத்தல்… முன்னோக்கி நடந்தாள். சோபா அருகில் வந்துவிட்டது.

பயம்… பதட்டம்… தவிப்பு… அழுகை… அனைத்தையும் மீறி தந்தையை கடைசியாக ஒருமுறை பார்க்க வேண்டும் என்கிற ஆசை… மெல்ல திரும்பினாள். அவள் புருவம் சுருங்கியது. பார்வையை குவித்து மீண்டும் உற்று நோக்கினாள். அடுத்த நொடியே தரையில் சரிந்து சத்தமில்லாமல் குலுக்கினாள்.

இறந்துகிடக்கும் அந்த மனிதனை யார் என்று அவளுக்கு தெரியாது. அவன் எப்போது அந்த வீட்டுக்குள் வந்தான் என்றும் தெரியாது. ஆனால் அது அவள் தந்தை இல்லை… அவர் சாகவில்லை. அர்ஜுன் அவரை கொல்லவில்லை… ஒருநொடி விடுதலையை உணர்ந்தவள் மறுநொடியே கூசிப் போனாள். இப்போது இங்கு செத்துக் கிடப்பவனும் ஒரு மனிதன் தானே? கொன்றுவிட்டானே! ஒரே நொடியில் அவனுடைய வாழ்க்கையை முடித்துவிட்டானே! இதை எப்படி சகிப்பது? இதை எப்படி ஏற்பது? – பொங்கிப் பெருகிய உணர்வுப் பேரலையில் நெஞ்சே வெடித்துவிடும் போலிருக்க, விருட்டென்று எழுந்து வெளியே ஓடினாள்.

சூழ்ந்திருந்த கும் இருட்டில் மறைந்து நின்ற அந்த கருப்பு கார் அவள் பார்வைக்கு புலப்படவில்லை. ஓடி வந்த வேகத்தில் காரில் இடிபட்டு சுருண்டு கீழே விழுந்தாள். உடலில் அடி எங்கு பட்டதென்றே உணர முடியவில்லை. அந்த அளவுக்கு சிந்தனை புற விஷயத்திலிருந்து விலகி அவன் செயலில் சிக்குண்டிருந்தது. அவளை பின்தொடர்ந்து வந்த அர்ஜுன், கீழே கிடப்பவளை இழுத்து காருக்குள் தள்ளி கதவை மூடிவிட்டு ட்ரைவர் இருக்கையை ஆக்கிரமித்தான்.

கருப்பு கையுறைக்குள் மறைந்திருந்த அவன் கைகள் ஸ்டியரிங் வீலை இறுக்கிப் பிடித்தன. அவன் காதோரம் வடிந்த வியர்வை புடைத்திருந்த கழுத்து நரம்பில் இறங்கியது. இறுகிய தாடையும் விடைத்த நாசியும் ஏறி இறங்கும் வெப்ப மூச்சுக்காற்றும் எரிமலையை ஒத்திருந்தது. மிருதுளாவின் கண்ணீர் நிற்கவில்லை. அவளுடைய அழுகையும் செருமலும் அந்த பயணம் முழுவதும் தொடர்ந்தது. அவன் எதையும் கண்டுகொள்ளவில்லை. கருமமே கண்ணாக காரை வெகுவாக விரைந்து செலுத்தியவன் வீடு வந்து சேர்ந்ததும் வேகத்தை குறைத்து கராஜிற்குள் நுழைந்து இன்ஜினை நிறுத்திவிட்டு அவள் புறம் திரும்பினான்.

கண்களில் வெறுப்பையும் குரலில் அந்நியத் தன்மையையும் கொண்டு, “உன்ன கொன்னுருக்கணும்… உன் உடம்ப கிழிச்சு உள்ள இருக்க ஷோபாவோட ரெத்தத்த மொத்தமா வெளியே எடுத்திருக்கணும்… என்னையே ட்ரக் பண்ணியிருக்க! என் சாப்டலேயே கை வச்சிருக்க! அப்படியே உன் அம்மா மாதிரி!” – அவன் பேசப் பேச குறைந்திருந்த அழுகை மீண்டும் பொங்க மிருதுளா தேம்பினாள்.

சட்டென்று ஆத்திரம் மேலிட அவள் கழுத்தை இறுக்கிப் பிடித்தான். “நடிக்காத… என்னை ஏமாத்தியிருக்க… பொய் சொல்லியிருக்க… உன் கழுத்தை திருகனும் போல இருக்கு… உன் மூச்சை நிறுத்தணும் போல இருக்கு” என்று பற்களை நறநறத்தபடி உறுமியவன் அவளை உதறி பின்னுக்குத் தள்ளினான்.

கன்றி சிவந்துவிட்ட கழுத்தை கைகளால் தாங்கிக்கொண்டு பரிதாபமாக அவனை ஏறிட்டாள். சந்தேகம் நிறைந்த முகம்… நம்பகமில்லாத பார்வை… அவள் மனம் வெகுவாய் புண்பட்டது. “அ…ர்…ஜுன்…”, உடைந்த குரலில் மெல்ல முணுமுணுத்தாள்.

“டோண்ட்… டோண்ட் டேர் டு டேக் மை நேம் அகைன்” – ‘இன்னொரு முறை என் பெயரை உச்சரிக்க துணியாதே’, என்று எச்சரித்துவிட்டு வேகமாக காரிலிருந்து இறங்கியவன் கதவை ஓங்கி அறைந்து சாத்திவிட்டு வீட்டுக்குள் விரைந்தான்.

நொருங்கிப் போனாள் மிருதுளா. முகத்தை கைகளில் புதைத்து தேம்பி அழுதாள். துக்கத்தோடு சேர்ந்து அவள் உயிரும் உணர்வும் கூட கண்ணீரில் கறைந்துவிட்டதோ என்னவோ! சக்தியெல்லாம் வற்றி போய், நெஞ்சு கூடு வறண்டுவிட்டது. உள்ளுக்குள் எதுவுமே இல்லாதது போல் காலியாக உணர்ந்தாள்.

வானில் தோன்றிய வெளிச்சக் கீற்று கராஜிற்குள்ளும் மெல்ல எட்டிப்பார்த்தது. இன்னும் சில நாழிகைகளில் பொழுது புலர்ந்துவிடும். ஆனால் அவளோ காரிருளுக்குள் சிக்கிக் கொண்டு திசை தெரியாமல் அலைமோதினாள். எந்தப் பக்கம் செல்வது? யாருக்காக நிற்பது? எது நியாயம்? யார் மீது தவறு? எதுவுமே அவளுக்கு புரியவில்லை.

மெல்ல காரிலிருந்து இறங்கி வீட்டிற்குள் வந்தாள். உள்ளே வெளிச்சம் இல்லை. அவன் கண்ணில் படாமல் அப்படியே அறைக்குள் சென்று அடைந்துகொள்ள வேண்டும் போல் இருந்தது. ஆனால் முடியவில்லை. மனம் சோர்ந்திருந்தது. உடல் நலிந்திருந்தது. தெம்பில்லை. தைரியம் இல்லை. தக்கை போல்… பெரும் வெள்ளத்தில் தத்தளிக்கும் துரும்பு போல் தன்னை உணர்ந்தாள். அவள் ஷோபாவின் ரத்தத்தில் உதித்தவளாக இருக்கலாம். ஆனால் அது மட்டுமே அவள் அல்ல. பகவானின் மகளாக இருக்கலாம்… ஆனால் அவள் வேறு. இழுத்துப் பிடித்த தைரியத்துடன் ஹாலில் பார்வையை செலுத்தினாள்.

டீப்பாயில் அவன் அணிந்திருந்த கையுறையும் அதன் மீது துப்பாக்கியும் இருந்தது. அருகில், சோபாவில் கைகளால் தலையை தாங்கியபடி குனிந்து அமர்ந்திருந்தான் அர்ஜுன். அவனிடம் ஒரு தளர்வு தெரிந்தது. சோர்வாக காணப்பட்டான். இதற்கு முன் அவனை இப்படி ஒரு நிலையில் அவள் பார்த்ததே இல்லை. உள்ளுக்குள் கூர்மையாய் ஏதோ பாய்வது போல் உணர்ந்தவள், கண்களை இறுக மூடிக் கொண்டு அப்படியே நிலைக்கதவில் சாய்ந்தாள். அந்த வலியை சகித்து மீள ஓரிரு நிமிடங்கள் பிடித்தது. அதன் பிறகு கண்களை திறந்தாள். அவன் அதே நிலையில்தான் அமர்ந்திருந்தான். அவள் வந்ததை அவன் அறியாமல் இருக்க வாய்ப்பில்லை. ஆனாலும் அவளை நிமிர்ந்து பார்க்க விழையவில்லை. உள்ளே வலித்தது…

“ஹூ இஸ் ஹி?” – நைந்த குரலில் கேட்டாள். அர்ஜுன் நிமிர்ந்து பார்த்தான்.

“அங்க… அந்த ஆள்…” – தடுமாறினாள்.

“ஜெனார்த்… ஜெனார்த் நாயக்…” – வறண்ட குரலில் கூறினான்.

“யார் அவர்?”

“உன் அப்பாவோட பாஸ். என் சாப்பாட்டுல உன்னோட அம்மா விஷம் கலந்தது இவனுக்காகத்தான்”

“உங்க சாப்பாட்டுல விஷமா! என் அம்மாவா!”

“இதுல என்ன ஆச்சரியம்? ஏழு வருஷத்துக்கு முன்னாடி உன் அம்மா செஞ்சதைத்தான் நீ நேத்து செஞ்சுட்டு போன” என்றான் சாதாரணமாக. மிருதுளா திகைத்துப்போனாள். சாதாரணமாக செய்துவிட்ட குற்றம் இப்போது பெரும் பாவமாக தோன்றியது அவளுக்கு.

“நீ ஒன்னும் ஃபீல் பண்ணாத. என்கிட்ட விளையாடினா கண்டிப்பா பே-பேக் பணியாகணும். எங்க ஓடினாலும் விட மாட்டேன். உன்னையும் சேர்த்துதான்”

மிருதுளா அவனை வெறித்துப் பார்த்தாள். “பழி வாங்கிட்டிங்க… யு ஜஸ்ட் கட் யுவர் ரிவெஞ்…” – வறண்டு போயிருந்த கண்களில் மீண்டும் கண்ணீர் திரண்டது.

“இல்ல… இன்னும் முழுசா என் பழி தீரல” – கண்கள் பளபளக்க நிமிர்ந்து அமர்ந்தான். பகீரென்றது அவளுக்கு. அவளுடைய பெற்றோரை கொன்றால் தான் அவன் பழியுணர்வு தீருமா?

“அர்ஜுன்” – தவிப்புடன் இரண்டே எட்டில் அவனிடம் நெருங்கினாள். அவன் காலடியில் அமர்ந்து கைகளை பற்றிக் கொண்டாள். “போ..து..ம்… போதும் அர்ஜுன்… இதுக்குமேல வேண்டாம்.. இந்த கை… இந்த கைல இன்னொரு மனுஷனோட ரெத்தம் வேண்டாம்… ப்ளீஸ்…” – பற்றியிருந்த அவன் கைகளில் முகத்தை புதைத்துக் கொண்டு கதறியழுதாள்.

வெடுக்கென்று அவள் பிடியிலிருந்து கையை உருவிக் கொண்டு எழுந்தவன், “குட் ட்ரை… ஆனா இந்த நாடகம் என்கிட்ட செல்லாது” என்றான் கடுமையாக.

“இல்ல அர்ஜுன்… நா நடிக்கல. என்னை பாருங்க. என் முகத்தை பாருங்க” – அவன் தாடையை பிடித்து தன்பக்கம் திருப்பி கண்ணோடு கண் கலந்து, “நமக்காக… நம்ம எதிர்காலத்துக்காக…ப்ளீஸ்… அவங்க பண்ணினது தப்புதான். மன்னிக்க முடியாத தப்பு. அதுக்கு என்ன தண்டனை வேணுன்னாலும் கொடுங்க. போலீஸ்கிட்ட பிடிச்சு கொடுங்க. ஜெயிலுக்கு அனுப்புங்க. ஆனா உங்க கையால கொன்னுடாதிங்க அர்ஜுன். அந்த ரெத்தம்… அது என்னை பெற்றவங்க ரெத்தம்… வேண்டாமே அர்ஜுன்” – யாசித்தாள்.

அர்ஜுன் அவளை தீர்க்கமாக பார்த்தான். “நிச்சயமா முடிப்பேன். என் கையாலேயே அவங்க ரெண்டு பேரையும் முடிப்பேன்” – சூளுரைப்பது போல் கூறினான்.

மிருதுளாவின் முகம் மாறியது. கோபம்… ஆத்திரம்… அவள் முகமெல்லாம் ரெத்தமாக சிவந்துவிட்டது. ஆவேசமாக அவன் கைகளை பிடித்து தன் கழுத்தில் வைத்து தன்னைத்தானே நெரித்துக்கொள்ள முயன்றபடி, “கொன்னுடுங்க… கொன்னுடுங்க… என்னை முதல்ல கொன்னுடுங்க…” என்று வெறிபிடித்தவள் போல் கத்தினாள்.

ஓரிரு நிமிடங்கள் அவள் போக்கில் தன் கையை விட்டிருந்தவன் பிறகு தானாகவே பிடியில் அழுத்தத்தை கூட்டினான். மிருதுளா சட்டென்று நிதானத்திற்கு வந்தாள். மூச்சுக்குழல் மெல்லமெல்ல இறுகுவதை உணர்ந்தாள். அவள் கண்கள் விரிந்தன. நெஞ்சு படபடத்தது. தன்னை மீறி அவன் கைகளை தன் கழுத்திலிருந்து அகற்ற முயன்றாள். ஆனால் அவன் பிடி இளகவில்லை.

“யு ஆர் ரைட்… கொல்லனும்… உன்னைத்தான் முதல்ல கொல்லனும். அதுதான் என்னோட விருப்பம். அதுதான் என்னோட அசைன்மெண்ட். ஆனா முடியல… உன்ன என்னால கொல்ல முடியல” – ஆத்திரத்துடன் அவளை கீழே தள்ளிவிட்டான்.

பெரும் கேவலம் இருமலுமாக சுவாசத்திற்கு போராடியபடி தரையில் சென்று மோதியவளின் முகமெல்லாம் ரெத்தவோட்டம் தடைபட்டதில் கருத்துப்போயிருந்தது. கழுத்தை பிடித்துக் கொண்டு மேல்மூச்சு வாங்கியபடி எழ முயன்றவள் தோற்று மீண்டும் தரையில் விழுந்தாள்.

உடல் விறைக்க அவள் படும் துன்பத்தை ஓரிரு நொடிகள் சகித்தவன், சட்டென்று குனிந்து அவளை தாங்கிப் பிடித்து சோபாவில் அமரவைத்தான். அவன் உதடுகளில் அழுத்தம்… கண்களில் வலி… விரல்களில் நடுக்கம்… மென்மையாய் அவள் கழுத்தை வருடிவிட்டான். “ஒன்னும் இல்ல… யு ஆர் ஆல்ரைட்… காம் டௌன்…” – முதுகை தடவிக்கொடுத்தான். அவள் சற்று நிதானப்பட்டதும் தண்ணீர் கொண்டு வந்து பருகச் செய்தான்.

அவள் கண்களில் வடிந்த கண்ணீரை மென்மையாய் துடைத்துவிட்டான். அந்த மென்மை மிருதுளாவின் மனதை மயிலிறகாக வருடியது. அந்த இணக்கமும் அன்பும்தான் அவளுடைய அடிப்படை தேவை என்பது போல் அப்படியே அவன் கையில் கன்னத்தை பதித்துக் கண்களை மூடிக் கொண்டாள். அதே கைதான் சற்று நேரத்திற்கு முன் ஒரு மனிதனை கொலை செய்தது என்பதை கூட அந்த நொடியில் மறந்துவிட்டாள்.

அர்ஜுன் அவள் முகத்தை கைகளில் தாங்கி கண்களை சந்தித்தான். “என்னால இந்த உலகத்துல யாரை வேணுன்னாலும் கொல்ல முடியும். ஆனா உன்ன…” – தலையை குறுக்காக அசைத்து, “முடியாது… என்னால முடியாது” என்றான்.

“ஏன்?” – கலங்கிய கண்களுடன் குரல் கறகறக்க கேட்டாள்.

அவள் நெற்றியில் இதழ்பதித்து, “ஏன்னா, நீதான் என்னோட வீக்கனஸ்” என்றவன், தொடர்ந்து கண்கள், கன்னங்கள், நாசி, தாடை என்று இடம்மாறி இடம் முத்தமிட்டுக் கொண்டே, “நீதான் என்னோட பவர், நீதான் என்னோட சந்தோஷம், நீதான் என்னோட கவலை, நீதான் என்னோட வாழ்க்கை, நீதான் என்னோட ஜீவன்” என்று கூறிக் கொண்டே வந்தான்.

அப்போதுதான் மிருதுளா அதை கவனித்தாள். அவன் கண்களில் கண்ணீர் திரையிட்டிருந்தது. அவள் நெகிழ்ந்து உருகிப் போனாள். இமைக்காமல் அவன் கண்களை பார்த்து, “ஐ நோ அர்ஜுன்… ஐ நோ யுவர் ஹார்ட்” என்று கூறி நுனி காலில் எக்கி அவன் இதழோடு இதழ் பொறுத்தினாள்.

கடுமையான முடிவுகளும், கசப்பான உண்மைகளும், தீராத வலிகளும், அறியப்படாத ரகசியங்களும் நிறைந்த கனமான அவன் மனதை ஒற்றை இதழொற்றலில் லேசாக்கிவிட்டாள் மிருதுளா.

ஆழிப்பேரலையில் அகப்பட்ட துரும்பாக அல்லாடிக் கொண்டிருந்தவனை அமைதியான மேக நதியில் மிதக்கச் செய்தது அவள் கொடுத்த அந்த ஒற்றை முத்தம். திக்குத் தெரியாமல் காரிருளில் சுற்றிக் கொண்டிருந்தவனை நட்சத்திரக் காட்டில் தொலைந்து போகச் செய்தது அவள் கொடுத்த அந்த ஒற்றை முத்தம். மலை மீதிருந்து உருளும் பாறை போல் கட்டுகளற்று ஓடிக் கொண்டிருந்தவனை மலர் பொதியில் புதைத்து வைத்தது அவள் கொடுத்த அந்த ஒற்றை முத்தம்.

அவன் எடுத்துக் கொண்டான். அவள் அள்ளிக் கொடுத்த அளவில்லா அன்பை தடையில்லாமல் ஏற்று தனதாக்கிக் கொண்டவன், அவள் தடுமாறி திணறிய போது முத்தமிடும் முறையை தனதாக எடுத்துக் கொண்டான். மனமொத்து அவனோடு இசைந்தவள், ஏதோ இடையிட்ட சிதனையால் அவன் தயங்கி பின்வாங்க முயன்ற போது அவன் சட்டை காலரை கொத்தாக பற்றி முன்மொழிந்தாள். வழிமொழிய வேண்டியவனோ பஞ்சுக்காட்டில் பற்றவைத்த தீ போல் அவளை மொத்தமாக ஆக்கிரமித்து பஸ்பமாக்கினான்.

அவர்களை சுற்றி பின்னப்பட்டிருந்த வலை மிகவும் வலுவானது. பிரச்சனைகள் தீவிரமானது… சிக்கல்கள் தீர்க்க முடியாதது… ஆனால் பாறையில் வேர்விட்ட செடி போல் அவர்களுக்குள் ஊடுருவியிருந்த காதல் அனைத்தையும் விட ஆழமானது… தீர்க்கமானது… தீராதது…




Comments are closed here.

You cannot copy content of this page