Share Us On
[Sassy_Social_Share]நிழல் நிலவு- 66
302
0
அத்தியாயம் – 66
“நாம லவ் பண்ணினது உண்மை. ரிலேஷன்ஷிப்ல இருந்தது உண்மை. ஆனா இனி என்கிட்ட எந்த எமோஷன்ஸுக்கும் இடம் இல்ல. கோர்த்தால என்னோட பொசிஷன் எனக்கு திரும்ப வேணும். நா இழந்த மரியாதையை திரும்ப சம்பாதிக்கணும். அதுக்கு எனக்கு சுதந்திரம் வேணும். போயிடு… என்னை விட்டு விலகி போயிடு” – அணிந்திருந்த கை உரையை கழட்டியபடி நிர்தாட்சண்யமாக கூறினான் சுஜித்.
அவன் முகம் பாறை போல் இறுகி இருந்தது. வெகுநேர பயிற்சியின் பலனாக உடல் வியர்வையில் குளித்திருந்தது. இமைக்கக் கூட தோன்றாமல் அவனை வெறித்துப் பார்த்த சுமன், தன்னுடைய சமாதான முயற்சிகள் அனைத்தும் மொத்தமாக பொய்த்துப் போய்விட்டதை உணர்ந்தாள். இனி செய்வதற்கு எதுவுமே இல்லை என்பது புரிந்தது. நெஞ்சம் மெல்லமெல்ல மரத்துப் போக, முகத்தில் வறண்ட புன்னகையுடன் தன் அடிவயிற்றை மென்மையாக வருடினாள்.
அவனுக்குள் சுரீரென்று ஏதோ பாய்ந்தது. புருவங்கள் முடிச்சிட்டன. என்ன சொல்ல போகிறாள் என்கிற எதிர்பார்ப்போடு அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். அவள் எதுவுமே சொல்லவில்லை. அனைத்தையும் இழந்துவிட்டவள் போல் தளர்வுடன் திரும்பி நடந்தாள்.
அள்ளித் தெளித்தது போல் அவன் முகமெங்கும் அதிர்ச்சியின் ரேகை. அவளுடைய மௌனத்தை அவனால் நம்ப முடியவில்லை. ‘ஏன் இப்படி எதுவுமே சொல்லாமல் போகிறாள்!’ – அவளை தடுத்து நிறுத்த மனம் உந்தியது. அவள் மௌனத்தை உடைத்து காரணத்தை அறிய உள்ளம் துடித்தது. ஆனாலும் அவன் சிலை போல் நின்றான். தன்னிடமிருந்து விலகிச் செல்லும் அவள் முதுகை வெறித்தபடி அசையாமல் நின்றான்.
அவள் போய்விட்டாள். ‘போ போ’ என்று விரட்டியவனோ பித்தன் போல் நின்ற இடத்திலேயே நின்றான். உள்ளே ‘ஓ’ வென்று ஒரு குரல் ஓங்கி ஒலித்தது. அவள் விட்டுச் சென்ற அதிர்வலைகள் அவனை சுற்றிச் சுற்றி வந்தது. உள்ளுணர்வு சொல்லும் செய்தியை நம்பவும் முடியாமல் நிராகரிக்கவும் முடியாமல் திகைத்து நின்றான். நிமிடங்கள் நாழிகையாக மாறிய போது அவன் அலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது.
***********
நெடுநேரம் நீண்ட சந்திப்பிற்கு பிறகு அர்ஜுன் ராகேஷ் சுக்லாவிடம் தனியாக பேசிவிட்டு விடைபெற்ற போது நேரம் முன்னிரவை தாண்டிவிட்டது. மிருதுளாவை தனியாக விட்டுச்சென்றிருப்பது உள்ளுக்குள் ஒரு அழுத்தத்தை கொடுத்துக் கொண்டே இருக்க, வேகமாக அறைக்கு திரும்பி வந்தான். அறைக்குள் நுழைந்ததுமே அவளை கண்டுவிடும் நோக்கில் கண்கள் அங்கும் இங்கும் அலைய, கால்கள் அந்த பெரிய அறையின் ஒவ்வொரு பகுதிக்கும் வேகமாக சென்று திரும்பி இறுதியாக டெரஸை வந்தடைந்தன. அவள் அங்குதான் இருந்தாள். கூண்டுக்குள் அடைபட்ட வெண்புறா போல் அந்த கண்ணாடி அடைப்பிற்குள் தனித்து நின்றாள். வெளியே சூழ்ந்திருக்கும் இருளுக்குள் ஏதோ ஓர் புள்ளியில் நிலைத்திருந்தது அவள் பார்வை. மனதை அரித்துக் கொண்டிருக்கும் கவலையின் பிரதிபலிப்பு வாடியிருந்த அவள் முகத்தில் தெரிந்தது.
அர்ஜுன் அவளிடம் நெருங்கினான். பின்னாலிருந்து அவள் இடையை வளைத்தான். அவளுடைய மிருதுவான சருமமும், இனிமையான நறுமணமும் அவனை சூழ்ந்திருந்த நெருக்கடியை மறக்கடித்தது. ஆழ மூச்செடுத்து அவள் கழுத்து வளைவில் முகம் புதைத்தான். அவனுக்குள் இருந்த இறுக்கம் மெல்ல தளர்ந்தது. சில மணிநேரங்களுக்கு முன் அந்த அறையிலிருந்து வெளியேறும் போது அவனிடம் இருந்த கோபம் இப்போது துளியும் இல்லை. அவளிடமும் இல்லை. சில மணிநேர விலகல் அவர்களுக்குள் அமைதியை மீட்டிருந்தது. அதுமட்டும் அல்ல, இருவர் பக்கமும் இருக்கும் நியாயம் இருவருக்கும் புரிந்தே இருந்தது.
அவளுடைய எதிர்ப்பை எதிர்பார்த்த அர்ஜுனுக்கு ஆச்சரியம். அவள் இணக்கமாக அவனோடு இழைந்தாள். கையேடு கை கோர்த்தாள். அவன் கேசத்தில் கன்னம் புதைத்தாள். அவன் உள்ளம் துள்ளியது. மகிழ்ச்சி அருவியாய் பெருகியது. அவளுக்காக அவன் எவ்வளவு ஏங்கியிருக்கிறான் என்பது அவனுக்கே ஆச்சரியமாக இருந்தது. பேராவலுடன் அவளை அள்ளிக் கொண்டு உள்ளே வந்து ஆரத்தழுவி ஆக்கிரமித்தான். ஊடலும் கூடலுமாக நாழிகைகள் நழுவிக் கொண்டிருந்த போது அவன் அலைபேசி அழைத்தது. விலக மனமில்லாமல் அவளை கையனைவில் வைத்தபடியே எடுத்து பேசினான். அந்தப் பக்கத்திலிருந்து குரல் கொடுத்தது சுஜித்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு நண்பனின் குரலைக் கேட்டதும் அர்ஜுன் வியப்புடன் அவளிடமிருந்து விலகினான். மிருதுளா சிணுங்கலுடன் அவனோடு மீண்டும் ஒட்டிக் கொண்டாள். கண்களில் குறும்பும் உதட்டோர புன்னகையுமாக அவளை இறுக்கி அணைத்துக் கொண்டு, “டெல் மீ மேன். எனிதிங் சீரியஸ்?” என்றான்.
மிருதுளாவின் நெருக்கம் தந்த மகிழ்ச்சி மனமெல்லாம் வியாபித்திருந்தாலும், ஏதோ நெருக்கடியான சூழ்நிலையில் தான் சுஜித் தன்னை அழைக்கிறான் என்பதை சரியாக ஊகித்தது அர்ஜுனின் தொழில் திறமை.
சுஜித் ஓரிரு நிமிடங்கள் எதுவும் பேசவில்லை. பிறகு, “நா உன்ன பார்க்கணும்” என்றான். குரலில் மறைக்க முயன்ற பதட்டம் தெரிந்தது. அர்ஜுனின் மனநிலை மாறியது. கவனம் முற்றிலும் சுஜித்திடம் திரும்பிவிட, “என்ன விஷயம்?” என்றான் தீவிரமாக.
“பேசணும். போன்ல இல்ல. நேர்ல. உடனே”
அர்ஜுன் எழுந்து படுக்கையறையிலிருந்து அந்த சூட்டின் வரவேற்பு பகுதிக்கு வந்தான். குறுக்கும் நெடுக்குமாக நடந்தபடி யோசித்தான். கோர்த்தா தலைவர்கள் இது போன்ற பொது இடங்களில் ஒன்றாக சந்திக்கும் போது, சந்திப்பு முடிந்ததும் எந்த நேரமாக இருந்தாலும் உடனே களைந்து சென்றுவிடுவார்கள். ஒரே இடத்தில் தங்கமாட்டார்கள். இன்றும் அதுதான் நடந்தது. சந்திப்பிற்கு பிறகு அனைவரும் புறப்பட்டுவிட்டார்கள். அர்ஜுனும் இந்நேரம் பாதிவழி பயணத்தில் இருந்திருக்க வேண்டும். ஆனால் மிருதுளாவுடன் கழிந்த இனிமையான பொழுது அவனை தாமதப்படுத்திவிட்டது. இதற்கு மேலும் இங்கு தாமதிப்பது உசிதமா என்று யோசித்தான்.
“நா அனந்தபூர்கு தான் வந்துகிட்டு இருக்கேன்,. எங்க மீட் பண்ணலாம்னு சொல்லு. வீட்ல இருப்பியா? இல்ல வேற எங்கேயாவது வெளியே மீட் பண்ணலாமா? வெரி அர்ஜென்ட்”
“நா அனந்தப்பூர்ல இல்ல. வெளியே இருக்கேன்” – தன்னுடைய இருப்பிடத்தை நண்பனுக்குத் தெரியப்படுத்தி தன்னை எங்கு சந்திக்க வேணும் என்கிற விபரத்தையும் கூறிவிட்டு அழைப்பை துண்டித்தான் அர்ஜுன்.
அழைப்பொலியுடன், “ரூம் சர்வீஸ்” என்கிற குரலும் சேர்ந்து ஒலிக்க, அர்ஜுன் எச்சரிக்கையுடன் கதவைத் திறந்தான்.
அவன் ஆர்டர் செய்யாத இரவு உணவோடு ஒருவன் நின்றுக் கொண்டிருந்தான். அவன் கண்கள் அர்ஜுனின் கண்களோடு கலந்து, ஏதோ செய்தியை பரிமாறியது.
“உள்ள கொண்டு வந்து வை” என்று அவனுக்கு வழிவிட்டான்.
அவன் உள்ளே வந்து ட்ரேயை டேபிளில் வைப்பதற்குள், சிறு பேப்பரில் ஏதோ குறிப்பு எழுதிய அர்ஜுன் அதை டிப்ஸோடு சேர்த்தது அவனிடம் கொடுத்தான். அவனை அர்த்தத்துடன் பார்த்துவிட்டு சின்ன தலையசைப்புடன் அங்கிருந்து வெளியேறினான் ரூம் சர்வீஸ் மேன்.
மீண்டும் படுக்கையறைக்குச் சென்ற அர்ஜுன் மிருதுளாவை உணவருந்த அழைத்தான். அவள் படுக்கையிலிருந்து எழ மனமில்லாமல் வேண்டாம் என்றாள். அவளை கட்டாயப்படுத்தி எழுப்பினான். அவள் முனகி கொண்டே எழுந்து குளியலறைக்குள் சென்று திரும்பினாள். அதுவரை அவளுக்காக காத்துக் கொண்டிருந்தவன் கதவு திறக்கும் சத்தம் கேட்டு தலையை திருப்ப, மிகச் சரியாக அதே நொடி அந்த அறைக்குள் பாய்ந்தது ஒரு தோட்டா.
கணப்பொழுதில் அவன் தலை தப்பியது. தோட்டா எதிரில் இருந்த சுவற்றில் துளையிட்டு பதிந்தது.
“வாட் த ஹெல்” – சத்தமிட்டபடி அனிச்சையாக கீழே விழுந்தவன் அடுத்த நொடியே, “டௌன் ஆன் எர்த்” என்று மிருதுளாவிடம் கத்தினான்.
அவளுக்கு என்ன ஏது என்று எதுவும் புரியவில்லை. யோசிக்கும் அவகாசமும் இல்லை. அதற்குள் படபடவென்று அடுத்தடுத்து தோட்டாக்கள் பாய்ந்து வர, “ஏ…ய்… கீ..ழ.. படு..” என்று மீண்டும் கத்தினான் அர்ஜுன்.
“ஆ” என்று அலறியபடி காதை மூடிக் கொண்டு கீழே விழுந்தவளுக்கும் சூழ்நிலை புரிந்துவிட்டது.
“என்ன நடக்குது இங்க?” – கத்தினாள்.
“மிருதுளா, எழுந்திருக்காத. ” – அவளை அமைதிப்படுத்த முயன்றான் அர்ஜுன்.
அடுத்த சில நிமிடங்களுக்கு எந்த சத்தமும் இல்லை. தோட்டாக்களின் முழக்கம் அடங்கியிருந்தது.
“அ..ர்..ஜுன்..” – பயந்து போய் அழுதாள் மிருதுளா.
“ஹேய்.. யு ஓகே?” – பதட்டத்துடன் வினவியபடியே தரையில் தவழ்ந்து அவளிடம் சென்று, “ஒன்னும் இல்ல. பயப்படாத” என்று அவளை அரவணைத்து தைரியம் சொன்னான். கூடவே தோட்டாக்கள் பாய்ந்த திசையையும் கவனித்தான். டெரஸ் கண்ணாடியில் துளைகளும் விரிசல்களும் காணப்பட்டன. அந்த பக்கம் ஹோட்டல் நிர்வாகத்தின் இன்னொரு கட்டிடம் உள்ளது. அங்கிருந்துதான் தாக்குதல் நடக்கிறது என்பதை புரிந்துக் கொண்டான்.
முதலில் அறையில் இருக்கும் நடமாட்டத்தை வெளியிலிருந்து கண்காணிக்க முடியாமல் செய்ய வேண்டும். சுவற்றோடு சுவராக ஒட்டியபடி எழுந்து அறையின் மெயின் ஸ்விட்சை அணைத்தான். குபீரென்று எங்கும் இருள் சூழ்ந்தது. மெல்ல தவழ்ந்து படுக்கை அருகே சென்று சைட் டேபிள் டிராயரில் இருந்த தன்னுடைய கை துப்பாக்கியை எடுத்தான்.
அதே நேரம் முதன்மை கதவு பக்கம் ஏதோ சத்தம். அறையின் கதவை பலவந்தமாக யாரோ திறக்க முயல்வது தெரிந்தது. மிருதுளா மிரண்டு போனாள். அவசரமாக அர்ஜுனிடம் பாய்ந்து வந்து அவனோடு ஒண்டி கொண்டாள். அவளை பத்திரமாக சோபா மறைவில் பதுக்கிவிட்டு தாக்குதலுக்கு தயாரானான் அர்ஜுன்.
அடுத்த சில நிமிடங்களில் உள்ளே காலடி சத்தம் கேட்டது. காலடி ஓசையை கணக்கிட்டு வந்திருக்கும் ஆட்களின் எண்ணிக்கையை கணித்தான் அர்ஜுன். கையிலிருக்கும் ஒற்றை கைத்துப்பாக்கி பெரிதும் உதவ வாய்ப்பில்லை என்பது புரிந்தது. என்ன செய்வது என்று அவன் யோசிப்பதற்குள் உள்ளே நுழைந்தவர்கள் திடீரென்று கண்டபடி அங்கும் இங்கும் சுட்டார்கள். டார்ச் வெளிச்சத்தில் அர்ஜுன் எங்கு பதுங்கியிருக்கிறான் என்பதை கண்டறிய முயன்றார்கள்.
மிருதுளா நிலைகுலைந்து போனாள். மரணம் அவள் கண்ணெதிரில் வந்து நின்றது. உடல் வெடவெடத்தது. அர்ஜுனிடம் நெருங்க முயன்றாள். பயம் அவள் முயற்சியை முறியடித்தது.
அப்போதுதான் அங்கு சூழ்நிலை மாறியது. திடீரென்று இன்னொரு குழு உள்ளே நுழைந்து முதலில் நுழைந்த குழுவோடு யுத்தம் செய்தது. தோட்டாக்கள் கண்டபடி பறந்தன. இரத்த வெள்ளமும் அலறல் ஒலியுமாக அந்த அறையே போர்க்களமாக மாறியது. அர்ஜுனின் பார்வை இருட்டிற்கு நன்றாக பழகிவிட்டது. மங்கலான வெளிச்சத்திலும் அவனால் ஆட்களை அடையாளம் காண முடிந்தது. மறைவிடத்திலிருந்து வெளியே வந்து சரியாக குறிபார்த்து சில ஆட்களை முடித்தான். கண்ணிமைக்கும் நேரத்தில் கற்பனைக்கும் எட்டாத கலவரம் நடந்து முடிந்துவிட்டது. அப்போதுதான் அந்த குரல் தீனமாய் அவன் செவியை எட்டியது.
“அர்..ஜு..ன்…” – அவள் குரல்.
Comments are closed here.