Share Us On
[Sassy_Social_Share]நிழல் நிலவு- 67
306
0
அத்தியாயம் – 67
தெறித்து விழுந்த தோட்டாக்களும் அருவியாக பெருகிய குருதியும் அந்த அறையை போர்க்களமாக மாற்றியிருந்தது. வேட்டையாட வந்தவர்களை வேட்டையாடி வீழ்த்திவிட்ட வெற்றி களிப்போடு இரண்டாம் அணி நெஞ்சை நிமிர்த்த, அர்ஜுனின் ஆராய்ச்சி பார்வையோ அவர்களை சல்லடையாக துளைத்தது. உடனே முன்னே வந்த அந்த குழுவின் தலைவன், மூன்றிலக்க எண் ஒன்றை கூறி தங்களின் அடையாளத்தை வெளிப்படுத்தினான். அர்ஜுனின் கண்கள் பெருமிதமும் ஆச்சரியமுமாக விரிந்த நேரத்தில்தான் அந்த தீனமான குரல் அவனை அழைத்தது.
“அ..ர்..ஜு..ன்”
அது அவள் குரல். மிருதுளாவின் குரல். என்னவாயிற்று! பெரும்பதட்டத்துடன் குரல் வந்த திசைப் பக்கம் திரும்பினான். தூரத்தில் சோபா மறைவில் அவள் கால்கள் மட்டும் தெரிந்தன. இனம்புரியாத பயம் அவனை பீடித்துக் கொண்டது. பின்னிய கால்களை முரட்டுப் பிடிவாதத்துடன் கட்டுப்படுத்தி அடியை எட்டிப்போட்டு அவளிடம் நெருங்கினான்.
கண்கள் செருக சுய நினைவை இழந்துக் கொண்டிருந்தவளை சுற்றி குளம் கட்டியிருந்தது செங்குருதி. அவ்வளவுதான்.
ஆழ்துளைக்குள் அகப்பட்டுக் கொண்டவன் போல் திணறினான் அர்ஜுன். அவன் உலகம் வெகுவாய் சுருங்கிவிட்டது. காற்றும் வெளிச்சமும் இல்லாத அந்த மாய உலகத்தில் அவன் இதயம் துடிக்கும் ஓசை மட்டும் அகோரமாய் ஒலித்தது. அவன் கண்கள் அவள் மீதே நிலைகுத்தியிருந்து.
‘மிருதுளா!’ – திகைப்பிலிருந்து மீள முடியாதவனாக தடுமாற்றத்துடன் அவளிடம் குனிந்தான்.
ஏந்தியிருந்த துப்பாக்கியை இடுப்பில் செருகிக் கொண்டு முன்னே வந்த ஒருவன், மிருதுளாவை ஆராய்ந்து, “சேஃப் ஸ்பாட் பட் ஹெவி ப்ளாட் லாஸ்” என்றான்.
ஆபத்து இல்லாத இடத்தில்தான் தோட்டா துளைத்திருக்கிறது என்கிற வார்த்தை குறியீடு, அர்ஜுன் தன்னை மீட்டுக்கொள்ள சற்று உதவியது. பற்களை கடித்து உணர்வுகளை விழுங்கி கொண்டு அவளுக்கான முதலுதவிக்கு ஏற்பாடு செய்தான். அடுத்த சில நிமிடங்களில் காவல்துறையின் சைரன் சத்தம் ஹோட்டல் வாசலில் அலற, பின்வாசல் வழியாக அர்ஜுனின் கார் வெளியேறி கொண்டிருந்தது.
கோர்த்தாவிற்கு நெருக்கமான மருத்துவமனையில் அன்அஃபிஷியலாக அனுமதிக்கப்பட்டிருந்தாள் மிருதுளா. தோட்டா துளைத்த இடுப்புப் பகுதி ஆபத்தில்லாத இடம் என்றாலும், அளவுக்கு அதிகமான ரெத்தப்போக்கின் காரணமாக சூழ்நிலை வெகு கிரிட்டிக்கலாகிவிட்டது. அவளை அவசரசிகிச்சை பிரிவுக்குள் அனுப்பிவிட்டு, உன்மத்தம் பிடித்தவன் போல் தலையை பிடித்துக்கொண்டு குனிந்து அமர்ந்தான் அர்ஜுன். எதிர்காலம் இருண்ட காடாக அவனை அச்சுறுத்தியது. அவள் இல்லாத வாழ்க்கையை எண்ணிப்பார்க்கவே முடியவில்லை. உடம்புக்குள் எதுவுமே இல்லாதது போல் வெறும் கூடாக, பலவீனமாக, கோழையாக தன்னை உணர்ந்தான். நிமிடங்கள் நாழிகைகளாக உருண்டுக் கொண்டிருந்தன. அவன் அசையவில்லை. அசைய முடியவில்லை. அதுவரை கடவுளை அவன் பெரிதாக நம்பியதில்லை. ஆனால் அப்போது அவன் மனம் அந்த பரம்பொருளை நாடியது.
“ப்ளீஸ் மிருது… கம் பேக்” – பித்துப்பிடித்தவன் போல் புலம்பினான்.
விரல்களை கோர்த்துக் கோர்த்து பிரித்தபடி பதட்டத்துடன் அவன் அமர்ந்திருந்த போது, “ஷி இஸ் அவுட் ஆஃப் டேஞ்சர் நௌ” என்கிற மருத்துவரின் குரல் கிணற்றுக்குள் ஒலிப்பது போல் எங்கிருந்தோ ஒலித்தது. சட்டென்று நிமிர்ந்தான். அவர் அவனுக்கு பக்கத்தில்தான் நின்றுக் கொண்டிருந்தார். அவனிடம் தான் பேசிக் கொண்டிருந்தார்.
விருட்டென்று எழுந்து, “இஸ் ஷி…. இஸ் ஷி ஓகே?” தடுமாற்றத்துடன் கேட்டான். ரெத்தம் போல் சிவந்திருந்த அவன் விழிகளில் பயமும் எதிர்பார்ப்பும் மண்டியிருந்தது.
அவன் தோளை தட்டிக் கொடுத்த மருத்துவர், “எஸ், ஷி இஸ் ஆல்ரைட்” என்று அவளுடைய நலனை மீண்டும் உறுதிப்படுத்தினார். சட்டென்று அவரை கட்டி கொண்டான் அர்ஜுன். அவன் உடல் நடுங்கியது. கோர்த்தாவில் இருப்பவனுக்கு இத்தனை தவிப்பா என்று வியப்பாக இருந்தது அவருக்கு. அதை தனக்குள்ளேயே மறைத்து, “ரிலாக்ஸ்” என்று அவனை அமைதிப்படுத்தியவர், “மூனுலேருந்து நாலு மணிநேரம் ஆகும் கண்விழிக்க. அதுவரைக்கும் ஆப்ஸர்வேஷன்ல இருக்கட்டும். அதுக்கு பிறகு ரூம்க்கு ஷிப்ட் பண்ணிடலாம்” என்றார்.
“உஃப்…” – நீண்ட பெருமூச்சை வெளியேற்றினான். அதுவறை மூசசுவிடக் கூட முடியாமல் அமர்ந்திருந்ததை அப்போதுதான் உணர்ந்தான். செத்துப் பிழைத்தது போல் இருந்தது.
******************
கோர்த்துப் பிடித்த கையை விடாமல், ரெத்தப்பசையற்று வெளுத்துப் போயிருந்த அவள் முகத்தை பார்த்தபடியே அமர்ந்திருந்தான் அர்ஜுன். அவன் நெஞ்சுக்குள் தீ பற்றிக் கொண்டது போல் எரிந்தது. அரை உயிராய் கிடைக்கும் அவளை பார்க்கப் பார்க்க அவனுக்குள் பழி உணர்வெனும் பேய் தலைவிரித்து ஆடியது. மெல்ல எழுந்து வெளியே வந்தான். அலைபேசியை எடுத்து ப்ளூ ஸ்டாரை அழைத்து, “தாக்க வந்தது யார்?” என்று விசாரித்தான்.
அவருக்கும் விபரம் தெரியவில்லை. மீட்டிங் முடிந்ததும் ஹோட்டலிலிருந்து கிளம்ப வேண்டியவன் கிளம்பாததால் சந்தேகப்பட்டு ஆட்களை அனுப்பியதாக கூறினார். அவருடைய சந்தேகம் தக்க சமயத்தில் அவன் உயிரை மட்டுமல்லாது மிருதுளாவின் உயிரையும் காத்துவிட்டது.
“தேங்க் யூ” என்று கூறிவிட்டு அழைப்பை துண்டித்தவனின் புருவம் சுருங்கியது.
‘மீட்டிங் முடிந்ததும் ஹோட்டலிலிருந்து கிளம்ப வேண்டியவன் கிளம்பவில்லை. ஹோட்டலில் அவனை சந்திக்க வருவதாக சொன்ன சுஜித் இன்னும் கூட வரவில்லை’ – பஸில் கச்சிதமாக பொருந்தியது. அர்ஜுன் உடனடியாக சுஜித்தின் இருப்பிடத்தை டிராக் செய்ய சொன்னான். சற்று நேரத்திலேயே அவனுடைய இருப்பிடம் மகல்பாட்னா என்கிற உறுதி செய்யப்பட்ட தகவல் கிடைக்க, அவன் முகம் கோரமாக மாறியது. அலைபேசியை எடுத்து அழைக்க வேண்டியவர்களுக்கு அழைத்தான். அடுத்த சிலமணிநேரங்களில் சுஜித் சிறைபிடிக்கப்பட்டு அர்ஜுனின் மகல்பாட்னா இல்லத்தின் பேஸ்மெண்டில் அடைக்கப்பட்டான். அந்த நேரத்தில் அவனோடு காரில் இருந்த காரணத்தினால் சுமனும் இலவச இணைப்பாக பிடித்துச் செல்லப்பட்டாள்.
**************
மிருதுளாவுக்கு அடிபட்டு மூன்று நாட்கள் கடந்துவிட்டது. இன்னமும் அவள் ஓரளவுக்கு கூட குணமடையவில்லை. இடுப்பில் காயப்பட்டிருந்ததால் எழுந்து நடக்க முடியாமல் சிரமப்பட்டாள். ஆனால் அவர்களால் ஒரே இடத்தில் தங்கியிருக்க முடியாது. ஏற்கனவே, அவன் தங்கியிருந்த அறையில் நடந்துமுடிந்திருந்த யுத்தத்தை போலீஸ் துளைக்க துவங்கிவிட்டது.
சம்பவம் நடப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னதாகவே அர்ஜுன் அந்த அறையை காலி செய்துவிட்டான் என்று சாட்சிகளை ஜோடனை செய்தும் விசாரணை குழுவின் கழுகு கண் அவனையே குறிவைத்துக் கொண்டிருந்தது. எனவே கோர்த்தாவின் சட்டக்குழு வெகு தீவிரமாக வேலையில் இறங்கியிருந்தது.
அவர்கள், அர்ஜுன் மிருதுளா இருவருமே காவல்துறையிடம் அகப்படக் கூடாது என்றும் உடனடியாக மகல்பாட்னா வரவேண்டும் என்றும் கூறினார்கள். அவனுக்கும் அதுவே சரியென்று பட்டதாலும், பேஸ்மெண்டில் அடைபட்டிருக்கும் சுஜித்தை நேரில் சென்று டீல் செய்ய வேண்டியிருந்ததாலும், மிருதுளாவை கிளப்பிக் கொண்டு மகல்பாட்னா விரைந்தான்.
மிதமான வேகத்தில் காரை செலுத்திக் கொண்டிருந்தான் அர்ஜுன். பக்கத்து இருக்கையில் உறங்கி கொண்டிருந்த மிருதுளா சின்ன முனகலுடன் அசைந்தாள். அவன் கவனம் அவள் புறம் திரும்பியது.
வேகத்தை வெகுவாக குறைத்தபடி, “மிருது, யூ ஓகே? கஷ்டமா இருக்கா? ஓரமா நிறுத்தட்டுமா? சீட்டை நல்லா நீட்டிவிட்டு கொஞ்ச நேரம் படுக்கறியா?” என்றான் கனிந்த குரலில்.
“ம்ஹும்”
“என்ன பண்ணுது?”
“இன்னும் எவ்வளவு நேரம் போகணும் அர்ஜுன்?” – பாவமாக கேட்டாள். அவள் முகத்தில் வலியின் சாயல் நன்றாக தெரிந்தது. உதட்டை கடித்துக் கொண்டான்.
“இன்னும் கொஞ்ச நேரம்தான் குட்டிமா. போயிடலாம்” என்று சொல்லிக் கொண்டே காரை ஓரம்கட்டி நிறுத்தினான்.
சீட் பெல்ட்டை அவிழ்த்துவிட்டு, அவள் புறம் நன்றாக திரும்பி அவளுடைய சீட்டை இன்னும் சற்று பின்னுக்கு தள்ளி அவளை சற்று வசதியாக படுக்க வைக்க முயன்றான். மிருதுளா அவன் கைகளை பிடித்துக் கொண்டாள்.
அவளை இமைக்காமல் பார்த்த அர்ஜுன் அவள் கைகளில் முத்தமிட்டான்.
“பயமா இருக்கு” – மிருதுளா முணுமுணுத்தாள்.
அவன் மீண்டும் முத்தமிட்டான். “நா இருக்கேன்ல” – அது வெறும் ஆறுதல் மட்டும் அல்ல. அவளுக்காக அவன் இருப்பான் என்கிற வாக்குறுதி.
மிருதுளாவின் கண்கள் கலங்கின. “எனக்கு ஏதாவது ஆயிருந்தா என்ன ஆயிருக்கும்” – குளம்கட்டியிருந்த கண்ணீர் கரைபுரண்டது.
பகீரென்றது அவனுக்கு. முகமே மாறிவிட்டது. தாடை இறுக ஓரிரு நொடிகள் அவளை ஊன்றிப் பார்த்தவன், கண்களை முடி திறந்து கசந்த உணர்வுகளை விழுங்கி கொண்டு, “எதுவும் ஆகாது. ஆக விடமாட்டேன்” என்றான் பிடிவாதமான குரலில்.
மிருதுளா ‘இல்லை’ என்பது போல் தலையசைத்தாள். அவன் முகம் மேலும் இறுக்கத்தை பூசிக்க கொண்டது. “என்னை நம்பலையா நீ?” – வறண்ட குரலில் கேட்டான்.
அழகையினூடே சின்ன சிரிப்பு மலர்ந்தது அவள் முகத்தில். தலையை அசைத்து அவனை அருகில் அழைத்தாள். அவளிடம் வெகு நெருக்கமாக சென்றவன் , அவள் நெற்றியோடு நெற்றி வைத்து, “என்ன?” என்றான்.
மலர் மீது அமர்ந்து எழுந்த பட்டாம்பூச்சி போல் தன் பட்டு இதழ்களை அவன் முரட்டு உதட்டின் மீது மென்மையாக ஒற்றியெடுத்து, சின்ன குறுஞ்சிரிப்புடன் கேட்டாள், “கோவமா?”
சட்டென்று அவன் மனநிலை மாறியது. உதட்டோரம் ஒளித்துவைத்த புன்னகையுடன், “கோவமா? உங்கிட்டயா?” என்றான்.
“ஏன்? என்கிட்ட நீங்க கோவப்பட்டதே இல்லையா என்ன?”
“ஹும்ம், கோவப்பட்டிருக்கேன். ஆனா இப்போ முடியாது”
“ஏன்?”
“தெரியாதா உனக்கு?”
“நீங்க சொல்லுங்க” – பிடிவாதத்துடன் கேட்டாள்.
ஓரிரு நொடிகள் அவளை இமைக்காமல் பார்த்த அர்ஜுன், “ஐ அல்மோஸ்ட் லாஸ்ட் யூ. ஃபைட் பண்ணி, கடவுள்கிட்டேருந்து உன்ன ஜெயிச்சிருக்கேன். ஐ வோன் மை லவ். ஐ வோன் மை லைஃப்” – மீண்டும் மெல்ல நெற்றியோடு நெற்றி முட்டினான். கண்கள் வைரம் போல் பளபளத்தன. அவன் மனம் நெகிழிந்திருப்பதை உணர்ந்தாள் மிருதுளா.
“அர்ஜுன்…” – அவன் முகத்தை கைகளால் வருடியபடி மெல்ல அழைத்தாள்.
“ம்ம்ம்” – கண்களை மூடி அவள் ஸ்பரிசத்தை உள்வாங்கியபடி முணுமுணுத்தான்.
“இப்படியே எங்கேயேவாது என்னை கூட்டிட்டு போயிடறீங்களா? இந்த பிரச்சனை, சண்டை, துப்பாக்கி எதுவுமே இல்லாத அமைதியான உலகத்துக்கு”
மூடியிருந்த விழிகளை மெல்ல பிரித்தான் அர்ஜுன். கோபப்படப் போகிறான். எதிர்மறையாக பேசப்போகிறான் என்று எதிர்பார்த்தாள் மிருதுளா. ஆனால் அவன் அப்படி எதையும் செய்யவில்லை. சற்று நேரம் அவள் முகத்தையே ஆழ்ந்துப் பார்த்தவன் பிறகு அவள் நெற்றியில் இதழ்பதித்து, “சீக்கிரமே” என்றான்.
மிருதுளாவின் விழிகள் விரிந்தன. மகிழ்ச்சியில் அவள் முகம் மலர்ந்தது.
“நிஜமாவா? நிஜமாவா சொல்றிங்க?” என்றாள் ஆர்வத்துடன்.
கண்களை மூடித்திறந்து ஆமோதித்தவன், “இப்போ வலி பரவால்லையா? கிளம்புவோமா?” என்றான். முற்றுப்புள்ளி வைத்துவிட்டான். அதற்கு மேல் அவன் பேசமாட்டான். அவள் பேசினாலும் பதில் வராது. பெருமூச்சுடன் தலையை அசைத்தாள் மிருதுளா. கார் மீண்டும் தன் ஓட்டத்தை துவங்கியது.
மிருதுளா ஓரக்கண்ணால் அர்ஜுனை பார்த்தாள். முடிச்சிட்ட புருவங்களுடன் சாலையில் பார்வையை பதித்திருந்தான்.
“என்ன யோசிக்கிறீங்க?” – பேச்சுக்கொடுத்தாள்.
“நத்திங்… ஜஸ்ட் டிரைவிங். நீ தூங்கு. ஸ்ட்ரைன் பண்ணிக்காத. இன்னும் கொஞ்ச நேரத்துல மகல்பாட்னாவை ரீச் பண்ணிடலாம்” – தன்னுடைய சிந்தனையில் அவளை குறுக்கிடவிடாமல் தடுக்க முயன்றான். அதன்பலனாக அவள் ஒரு பத்து நிமிடம் அமைதியாக இருந்தாள். பிறகு மீண்டும் ஆரம்பித்தாள்.
“அர்ஜுன்”
“ம்ம்ம்”
“இஸ் தட் பாஸிபிள்?”
“எது?”
“அதான், நாம இதெல்லாம் விட்டுட்டு… அமைதியா… எங்கேயாவது போயிடறது…”
அவன் அவளை திரும்பிப் பார்த்தான். “கண்ண மூடி படு”
“ப்ளீஸ்…”
“என்ன?”
“சொல்லுங்க”
“இம்பாஸிபிள்னு எதுவுமே இல்ல” – அவள் முகம் மலர்ந்தது.
“சோ, நாம் ஹேப்பியா இருக்க போறோம். அமைதியா. நிம்மதியா. அப்படித்தானே?” – ஏக்கமும் எதிர்பார்ப்புமாக அவள் கேட்ட விதத்தில், அவள் கேட்கும் நிம்மதியை எப்படியாவது அவளுக்கு கொடுத்துவிட வேண்டுமே என்கிற தவிப்பு நெஞ்சை அடைத்தது. சற்று நேரம் மெளனமாக காரை செலுத்தியவன், மெல்ல தலையை மேலும் கீழும் அசைத்து “எஸ்” என்றான். மிருதுளா நிம்மதியாக மூச்சுவிட்டாள்.
Comments are closed here.