Share Us On
[Sassy_Social_Share]நிழல் நிலவு- 68
290
0
அத்தியாயம் – 68
அர்ஜுனின் கார் மகல்பாட்னா மளிகை வளாகத்தரிக்குள் நுழைந்த போது நேரம் நள்ளிரவை தாண்டியிருந்தது. பாதுகாவலர்களை தவிர மற்றவர்களின் நடமாட்டம் வெகுவாக அடங்கியிருந்தது. வாயிலுக்கு வெகு அருகில் காரை நிறுத்திவிட்டு மிருதுளா கீழே இறங்க உதவி செய்தான் அர்ஜுன். அவள் மிகவும் சிரமப்பட்டாள். வலது கால் முழுவதும் மரத்துப்போனது போல், உணர்வே இல்லாமல் இருந்தது. ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாமல் சோர்ந்து போனாள்.
“ட்ரை பண்ணு மிருது. என்னை பிடிச்சுக்கிட்டு மூவ் பண்ணு” என்று ஊக்குவித்தான் அர்ஜுன்.
“முடியில அர்ஜுன். டேக் மை சேர்” என்று காரிலிருக்கும் வீல் சேரை எடுக்கும்படி அவள் கூறியபோது முடியாது என்று மறுத்துவிட்டு பிடிவாதமாக அவளை நடக்க வைத்தே உள்ளே அழைத்துச் சென்றான். மாடிப்படியை பார்த்ததும் மிருதுளா மலைத்தாள்.
“கீழயே ஏதாவது ஒரு ரூம்ல தங்கிக்கிறேன் ப்ளீஸ்” – கெஞ்சினாள்.
அவள் முகத்தை நிமிர்ந்து பார்த்தால் இளகிவிடுவோம் என்று தோன்ற, அவள் முகத்தை பார்க்காமலே, “உன்னோட ரூம் மேலதான் இருக்கு” என்றான்.
“கஷ்ட்டம் அர்ஜுன். என்னால முடியாது”
“முடியாதுன்னு நெனச்சா முடியாதுதான். ம்ம்ம்… ஏறு, நா இருக்கேன்ல…” – அவன் மிருதுளாவை கட்டாயப்படுத்திக் கொண்டிருக்கும் போது பாதுகாவலன் ஒருவன் அருகே வந்து ஏதோ சொல்ல முற்பட்டான்.
கையை உயர்த்தி தடுத்து, “கூப்பிடுறேன்” என்றான். அவன் முகம் ஏதோ முக்கியமான செய்தியை கொண்டு வந்திருப்பதை உணர்த்தினாலும், அந்த நேரத்தில் அவனுக்கு வெகு முக்கியமானது மிருதுளாவை பலப்படுத்துவதும் அவளுடைய நம்பிக்கையை வலுவேற்றுவதும் தான்.
பாதுகாவலன் விலகிச் சென்றதும் பொறுமையாக மிருதுளாவை மாடிப்படியில் ஏற வைத்து தன்னுடைய அறைக்கு அழைத்து சென்றான்.
“இங்கேயா? என்னோட ரூம்…” – “இனி இதுதான் உன்னோட ரூம்” – அவள் ஆரம்பிக்கும் பொழுதே இவன் முடித்துவைத்தான். அவள் எதுவும் பேசவில்லை.
அவளை குளியலறைக்குள் அழைத்துச் சென்றுவிட்டுவிட்டு வாசலிலேயே காத்திருந்தான். அவள் ரெஃப்ரஷ் ஆனதும், உணவு கொண்டுவந்துக் கொடுத்து பசியாற செய்தான். பிறகு அவளை படுக்கையில் படுக்க வைத்து காயத்திற்கு மருந்து பூசினான். அவள் வலியில் பற்களை கடித்துக் கொண்டு முனகியபோது அவன் உயிர் உருகியது. மயிலிறகால் வருடுவது போல் மெல்ல பட்டும் படாமலும் களிம்பு பூசி கட்டு போட்டான். கால்களுக்கு மசாஜ் செய்துவிட்டான்.
மிருதுளாவுக்கு அழுகை வந்தது. மூன்று நாட்களாக அவள் மருத்துவமனையில் இருந்த போது இந்த வேலைகளையெல்லாம் அவன் செய்ய வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. இப்போதும் கூட அவசியம் இல்லைதான். மாளிகையிலேயே இருக்கும் மருத்துவ குழுவில் ஒருவரை அழைத்தால் போதும். ஆனால் அவன் அதை செய்யவில்லை. தானே அனைத்தையும் செய்தான். தாயின் இடத்தை இட்டு நிரப்பினான்.
முதல் நாள் அந்த வீட்டிற்குள் நுழைந்ததும், முதல்முறை அந்த அறையில் அவனைப் பார்த்ததும் அவளுக்கு நினைவு வந்தது. தன்னிடம் இத்தனை கனிவாக அவன் ஒருநாள் நடந்துகொள்வான் என்று அப்போது அவள் நினைத்துப் பார்த்திருப்பாளா! ஆச்சரியமாக இருந்தது. இதுமட்டுமா ஆச்சரியம்? அவள் வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கும் சம்பவங்கள் அனைத்துமே ஆச்சரியங்கள் தான். கனவிலும் கற்பனையிலும் மட்டுமே நடக்கக் கூடிய சம்பவங்களை அவள் தினம் தினம் நேரில் சந்தித்துக் கொண்டிருக்கிறாளே! “ஹும்ம்ம்” – நீண்ட பெருமூச்சு அவன் கவனத்தை அவள் பக்கம் திருப்பியது.
உள்ளங்காலில் அழுத்தம் கொடுத்து பிடித்துவிட்டபடியே அவள் முகத்தை பார்த்தான். “என்ன?” – அவன் புருவங்கள் உயர்ந்தன.
அவள் இரண்டு கைகளையும் நீட்டி அவனை அருகே அழைத்தாள். அவன் முகத்தில் சின்ன புன்னகை தோன்றியது. மகிழ்ச்சியும் பெருமையாக அவளை பார்த்தான். “வாங்க… இங்க… என் பக்கத்துல” – தன் அருகே படுக்கையை தட்டிக்காட்டினாள்.
அவள் சொன்னபடியே செய்தான் அர்ஜுன். அவனை தன் அருகே சாய்த்துக் கொண்டு அவன் மார்பை தலையணையாக்கினாள் மிருதுளா. அவள் கூந்தலை கோதியபடி எதையோ சிந்தித்துக் கொண்டிருந்தான் அர்ஜுன். நீண்ட மௌனம் அவர்களை ஆக்கிரமித்திருந்தது. அதை முதலில் உடைத்தது மிருதுளாதான்.
“நிறைய மாறிட்டிங்க”
“ம்ம்ம்”
“எப்படி?”
“தெரியல”
“யார் அவங்களாம்? எதுக்காக நம்மள அட்டாக் பண்ணினாங்க?”
“ஓல்ட் ஃபிரண்ட்ஸ். ஏதாவது பழைய கணக்கா இருக்கும். விசாரணை போயிட்டு இருக்கு. தெரிஞ்சிடும்”
“அர்ஜுன் நாம சந்தோஷமா இருக்க போறோம் தானே? அமைதியா… நிம்மதியா…”
“நிச்சயமா?”
“எவ்வளவு நாள் ஆகும்? இதெல்லாம் விட்டு ஒழிச்சுட்டு போறதுக்கு?”
“தூங்கு”
“கார்ல தூங்கிகிட்டே தானே வந்தேன்”
“மூணு மணி ஆயிடிச்சு. எனக்கு ரெஸ்ட் வேணாமா?”
“சாரி. தூங்குங்க” – மெல்ல முணுமுணுத்துவிட்டு அமைதியாக படுத்திருந்தவள் சற்று நேரத்திலேயே ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றாள். அதற்காகவே காத்திருந்தவன் போல் படுக்கையிலிருந்து எழுந்தான் அர்ஜுன். அதுவரை மென்மையாக இருந்த அவன் முகம் அப்போது முற்றிலும் மாறியிருந்தது. மிருதுளாவின் மீது போர்வையை சரியாக இழுத்து போர்த்திவிட்டு சத்தமெழுப்பாமல் அந்த அறையிலிருந்து வெளியேறினான்.
மாடிப்படிக்கு அருகிலேயே அந்த பாதுகாவலன் நின்றுக் கொண்டிருந்தான். கூடவே மாலிக்கும் இருந்தான்.
“அர்ஜுன்” – நண்பனை பார்த்துவிட்டு முன்னோக்கி வந்த மாலிக்கிடம் தலையசைத்துவிட்டு பாதுகாவலனிடம் திரும்பியவன், “என்ன சொல்ல வந்த?” என்றான். அவன் பார்வை மாலிக்கிடம் சென்றது. இப்போது அர்ஜுனும் அவனை பார்த்தான்.
“சுமன் இன்னொசென்ட் அர்ஜுன். மூணு நாளா பேஸ்மெண்ட்ல இருக்கா” – வருத்தத்துடன் கூறினான்.
“அது சுஜித்துக்கும் தெரியும்ல? அப்புறம் ஏன் அவன் வாயை திறக்கல?” – அர்ஜுன் அதட்டினான். அவன் கண்களில் மனிதம் தொலைந்திருந்தது. மாலிக் பதில் சொல்ல முடியாமல் தலை கவிழ்ந்தான். அதற்கு மேல் அர்ஜுன் அங்கு தாமதிக்கவில்லை. பேஸ்மெண்டை நோக்கி நடக்க துவங்கினான். மாலிக் அவனை பின்தொடர்ந்தான்.
*************
காற்றில் கலந்திருந்த அழுக்கு வாடையும், கனத்த இருளோடு போராடிக் கொண்டிருந்த ஒற்றை பல்பின் மங்கலான வெளிச்சமும் அந்த இடத்திற்கே உரிய பிரத்யேக அடையாளம்.
சற்றுநேரத்திற்கு முன் சேவகனாய் மாறி ஒரு பெண்ணுக்கு பணிவிடை செய்து, தன்னில் அவள் தாயை உணரவைத்த ஒரு மனிதனின் இன்னொரு முகம் எத்தனை கோரமானது என்பதற்கு எடுத்துக்காட்டாக அங்கே அமர்ந்திருந்தான் சுஜித். அவன் தலை தொங்கிக் கொண்டிருந்தது. முகம் சிதைந்திருந்தது. ரெத்தம் சிதறியிருந்தது. நாற்காலியோடு அவனை சேர்த்துப் பிணைத்திருந்த வெள்ளை நிற கயிறு சிகப்பாக மாறியிருந்தது. அவனுக்கு எதிரில் எமனாக நின்றுக் கொண்டிருந்தான் அர்ஜுன் ஹோத்ரா.
“யார்?” – உள்ளடங்கிய அந்த குரல் சுஜித்தின் செவிகளுக்குள் ஊடுருவியது.
மெல்ல தலையை உயர்த்தி அர்ஜுனை பார்க்க முயன்றான் அவன். கிழிந்திருந்த ஒரு கண் இமைகள் ஒத்துழைக்க மறுக்க, மறு கண்ணின் அரை பார்வையில் மங்கலாக தெரிந்தது அவன் முகம். ஏமாற்றம் துக்கம் கோபம் எதுவும் இல்லாத உணர்வற்ற முகம்.. கல் முகம்.. சுஜித்தின் தலை மீண்டும் கவிழ்ந்தது.
அர்ஜுனின் பார்வை சுஜித்தை சுற்றி நின்றுக் கொண்டிருந்த மலை மனிதர்களில் ஒருவன் கண்களை சந்தித்தது. பசித்த விலங்கு போல் ஒரே நொடியில் அத்தனை பேரும் டார்கெட்டின் மீது பாய்ந்தார்கள். அறையெங்கும் அலறல் ஒலி எதிரொலித்தது. அதில் சுஜித்தின் குரலோடு ஒரு பெண் குரலும் கலந்திருந்தது. அது சுமனின் குரல். அதுவரை மெல்ல விசும்பியபடி சுவற்றோடு சுவராக ஒண்டி கொண்டு அமர்ந்திருந்தவள், சுஜித் மீண்டும் தாக்கப்பட்டதும் அலறி துடித்தாள். அர்ஜுனிடம் கெஞ்சினாள். அவன் செவியில் எதுவும் ஏறவில்லை.
சுஜித்தின் நினைவுகள் நழுவ துவங்கியது. அதை உணர்ந்தவனாக விரலை உயர்த்தி ஆட்களை விலகச் சொன்னான். சுமன் சுஜித்திடம் பாய்ந்து சென்றாள்.
“சொல்லிடு… எதுவா இருந்தாலும் பேசிடு ப்ளீஸ்…” என்றபடி அவன் முகத்தை கைகளில் ஏந்தியவள், “கடவுளே!” என்று கண்களை மூடிக் கொண்டு வெடித்து அழுதாள்.
அவளுடைய சுஜிதா அது! – அவளால் தாங்க முடியவில்லை.
“வுட் யு லைக் டு டாக்?” – கணீரென்று இடையிட்டது அர்ஜுனின் குரல்.
“ப்ளீஸ்… ஹி’ல் டாக். அடிக்காதிங்க. ப்ளீஸ்” என்று கொஞ்சிவள் சுஜித்திடமும் மன்றாடினாள். அவனோ உயிர் போகும் நிலையில் கூட அத்தனை அழுத்தமாக அமர்ந்திருந்தான்.
“குட். நீ பேச மாட்ட. பேச வேண்டாம்” என்று அழுத்தமாக உரைத்தவன். “டேக் ஹர்” என்று சுமனின் பக்கம் கண்காட்டினான்.
“நோ…. டோண்ட் டேர் டு டச் ஹர்” என்று குழறலுடன் திமிரிக் கொண்டு எழ முயன்றான் சுஜித்.
“வலிக்குதா? எனக்கும் வலிக்குது” – சுஜித்திடம் வன்மத்தை உமிழ்ந்தவன், “ம்ம்ம்…” என்று சுமனை நோக்கி ஆட்களை ஏவினான். அவ்வளவுதான். சுஜித்திடம் மிஞ்சியிருந்த திடம் மொத்தமாக அடிபட்டுப்போனது.
“பக..வா..ன்… தட்ஸ் பகவான்…” – அவசரமாக பேசினான். ‘சுமன்’ என்னும் பலவீனம் அவனை பேச வைத்தது.
“வாட்!” – அர்ஜுனின் புருவம் சுருங்கியது. மிருதுளா உடன் இருக்கும் போது பகவான் எப்படி அத்தனை பெரிய தாக்குதலை நடத்தத் துணிந்தான்! அர்ஜுன் குழம்பினான். அதே குழப்பத்துடன் தான் ஷோபாவும் பகவானிடம் வாக்குவாதம் செய்து கொண்டிருந்தாள்.
Comments are closed here.