Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

நிழல் நிலவு- 71

அத்தியாயம் – 71

இந்தியப் பெருங்கடலில், இந்தியாவின் எல்லையிலிருந்து வெகுதூரம் தள்ளி ஈக்வேடார் கோட்டுக்கு வெளியே, இந்தோனேஷியா எல்லையில் நங்கூரமிடப்பட்டிருந்தது ஒரு கார்கோ கப்பல். அதாவது சரக்கு கப்பல்.
விசாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து புறப்படும் டேங்கர் கப்பல்களில் சில கப்பல்கள் நடுக்கடலில் நிறுத்தப்பட்டு, ஒரிஸாவிலிருந்து மீன்பிடி படகுகளின் மூலம் கொண்டுவரப்படும் கனிமங்கள் அவற்றில் ஏற்றப்பட்டு, இந்தோனேஷியா எல்லையில் நிறுத்தப்பட்டிருக்கும் கார்கோ கப்பலுக்கு கொண்டு சேர்க்கப்படுவதும், அந்தக் கப்பலின் மூலம் இந்தியாவின் கனிமங்கள் சட்ட விரோதமாக வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதும் பல ஆண்டுகளாக நடந்துக் கொண்டிருக்கும் கோர்த்தாவின் ரகசிய ஆபரேஷன்.
கொலை செய்தவனை கொலைகாரன் என்று நிரூபிக்க வேண்டுமென்றால் கொல்லப்பட்டவனின் உடல் சாட்சிக்கு வேண்டும். இல்லை என்றால் உடல் கிடைக்கும் வரை அது மிஸ்ஸிங் கேஸாக மட்டுமே கருதப்படும். அதே நிலை தான் இங்கும் இருந்தது.

கோர்த்தாவின் பிரதான சரக்குக்கப்பல் ஒரு அல்ஜீரிய கம்பெனியின் பெயரில் இருந்தது. அது இந்திய எல்லைக்குள் வருவதே இல்லை. டேங்கர் கப்பல்களில் கூட கனிமங்கள் நடுக்கடலில் தான் ஏற்றப்படுகிறது என்பதால் அது அதிகாரிகளின் கணிப்பிற்கு அப்பாற்பட்டதாக இருந்தது.
அரசு நிர்ணயித்த அளவை விட கோர்த்தா பல மடங்கு அதிகமாக கனிமங்களை வெட்டியெடுப்பது ஊரறிந்த ரகசியம் என்றாலும் அதை நிரூபிக்க சிறு துறுப்புக் கூட கிடைக்கவில்லை. கோர்த்தாவின் வியாபார கட்டமைப்பு அத்தனை நெருக்கமாக இருந்தது. அதிகாரிகள் உள்ளே ஊடுருவ முடியாமல் தடுமாறினார்கள். அந்த நேரத்தில் தான் கோர்த்தாவின் வியாபார தலைமை மாறியது.
வயதில் மூத்தவர் என்பதாலோ என்னவோ பழைய தலைவர் டெக்னாலஜியை நம்பமாட்டார். சேட்டிலைட் போன் என்றாலுமே வியாபார சம்மந்தப்பட்ட தகவல்களை போனில் பரிமாறக் கூடாது என்பதை கட்டளையாகவே பிறப்பித்திருந்தார். மின்னஞ்சல்களையும் தள்ளியே வைத்திருந்தார். ‘கொரியர்-மேன்’ முறையிலேயே அவர் தகவல்களை பரிமாறிக் கொண்டார். அதுமட்டும் அல்ல, பேமண்ட் வராமல் ஒரு பிடி சரக்கைக் கூட கைமாற்ற மாட்டார். வெகு கறாரான ஆள்.
புதிய தலைவர் அத்தனை கெடுபிடி காட்டவில்லை. கழுகு போல் காத்திருந்த அதிகாரிகளுக்கு அது வசதியாகிவிட்டது. தொலைபேசி உரையாடல்கள் ஒட்டு கேட்கப்பட்டன. மின்னஞ்சல்கள் இடைமறித்துப் படிக்கப்பட்டன. அதன் தாக்கம் மிகப்பெரியதாக இருந்தது.
வழக்கம் போலவே அன்றும் சரக்கை ஏற்றிக் கொண்டு கார்கோ கப்பலை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கோர்த்தாவின் ஐந்து டேங்கர் கப்பல்கள் பல இடங்களில் இந்திய ராணுவ கப்பல்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டது. மற்றொரு இந்திய ராணுவ கப்பல் இந்தோனேஷியா எல்லை வரை பயணித்தது. அதிலிருந்த அதிகாரிகள் கோர்த்தாவின் சரக்குக் கப்பலை ரேடியோவில் தொடர்பு கொண்டு கப்பலின் அடையாள விபரங்களை கேட்டார்கள்.
சரக்குக் கப்பலில் இருந்தவர்கள் தங்களிடம் விபரம் கேட்பது ஆஸ்திரேலியா நாட்டு கடற்படை என்றே நினைத்தார்கள். இந்திய கடற்படை அவ்வளவு தொலைவிற்கு தங்களை மோப்பம் பிடித்து வருவார்கள் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. எனவே ரேடியோ தொடர்பில் வந்தவர், இந்திய உச்சரிப்புடன் கூடிய ஆங்கிலத்தில், அல்ஜீரியாவை சேர்ந்த சரக்குக் கப்பல் என்று கூறி, கப்பலின் பெயர் மற்றும் லாயிட்ஸ் பதிவு எண்ணை கூறினார்.
அவர் கூறிய விபரங்கள் அனைத்தும் போலியானது என்பதை ஏஐஎஸ் கருவியின் மூலம் சில நொடிகளில் தெரிந்துக் கொண்ட கடற்படையினர் அடுத்த சில நிமிடங்களில் தாக்குதலை ஆரம்பித்து, கோர்த்தாவின் கார்கோ கப்பலை தங்களுடைய கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தார்கள்.
***********
அதே நேரம் மகல்பாட்னாவிலிருந்து சுஜித் சிங்கை அழைத்துக் கொண்டு ராகேஷ் சுக்லாவின் கோட்டையை நோக்கி புறப்பட்ட கார் பாதி வழியிலேயே தாக்குதலுக்கு உள்ளானது. காரிலிருந்தவர்கள் எதிர்தாக்குதல் நடத்த வேண்டும் என்று யோசிப்பதற்குள், அவர்களுடைய கார் சல்லடையாக துளைக்கப்பட்டு இரத்தத்தில் குளித்திருந்தது. சில நிமிடங்கள் காத்திருந்து மறைவிடத்திலிருந்து வெளியே வந்த கூலி கொலையாளிகள், தாக்கப்பட்ட காரில் வந்த யாரும் உயிரோடு மிஞ்சவில்லை என்பதை உறுதி செய்துக் கொண்டு பகவானுக்கு தகவல் கொடுத்தார்கள்.
சுஜித் கோர்த்தாவின் ஆள் என்பதை தாண்டி அவன் மீது தனிப்பட்ட முறையிலும் கடுமையான கோபத்தில் இருந்தார் பகவான். அர்ஜுனை முடிக்க வேண்டும் என்பதற்காகத்தான் சுமனை கடத்தி சுஜித்துடன் டீல் பேசினார். அவனும் ஒப்புக்கொண்டு துப்புக் கொடுத்தான். பிறகு எப்படி அது நடந்தது? அர்ஜுனை காப்பாற்ற அந்த ஹோட்டலில் இன்னொரு டீம் எப்படி திடீரென்று முளைத்தது? அவருடைய திறமையான ஆட்கள் எப்படி பலியானார்கள்? சுஜித் டபுள் கேம் ஆடியிருக்கிறான். தன்னை ஏமாற்றி காதலியை காப்பாற்றிக் கொண்டு, அந்த பக்கம் அர்ஜூனுக்கும் தகவல் கொடுத்திருக்கிறான் என்பது தான் அவருடைய எண்ணம். அந்த எண்ணத்தில் எழுந்த கோபம் தான் இந்த தாக்குதல்.
‘எதிரியை கூட விட்டுவைக்கலாம். துரோகியை விட முடியுமா?’ ஜெகன் நாயக்கின் படுகொலையால் அவருக்குள் எழுந்திருந்த அகங்கார பேய்க்கு கிடைத்த சின்ன தீனி தான் சுஜித்தின் உயிர். அவருக்கு இன்னும் வேண்டும்! நிறைய வேண்டும்!
“அடுத்த இலக்கில் கவனம் செலுத்து!” – பசித்த புலியின் உறுமலாக ஒலித்தது அவர் குரல்.
*************
குண்டடிப்பட்டு சிகிச்சையில் இருந்த மிருதுளாவை மருத்துவர் பரிசோதித்துக் கொண்டிருந்தார். கூடவே அர்ஜுனும் இருந்தான்.
“நயன்ட்டி பர்சன்ட் காயம் ஆறிடுச்சு. இனி சப்போர்ட் இல்லாம நடக்க ட்ரை பண்ணுங்க. முடியலைன்னா அடுத்த வாரத்துல ஸ்கேன் பண்ணி பார்த்துடலாம்” என்றார்.
“இப்போவே எழுந்து நட” என்று அர்ஜுன் அவளை ஊக்கப்படுத்த, அலைபேசி அவனை அழைத்தது. எடுத்து பேசியவனின் முகம் சட்டென்று மாறியது.
ஏதோ சொல்ல வாயெடுத்த மருத்துவரை கையை உயர்த்தி தடுத்தவனின் முகத்திலிருந்த தீவிரம் அந்த அறையில் இருந்த மற்ற இருவரையுமே அச்சம் கொள்ளச் செய்தது.
அந்த பக்கத்திலிருந்து வந்த செய்தியை எந்த இடையீடும் இல்லாமல் உள்வாங்கிக் கொண்டு அழைப்பை துண்டித்துவிட்டு மெத்தையில் அமர்ந்தான்.
“சார்” மெல்ல அழைத்த மருத்துவரை,
“ஐ’ல் கால் யூ லேட்டர். ப்ளீஸ் லீவ் நௌ” என்று கத்தரித்து பேசினான். அவர் பதில் பேசாமல் வெளியேறிவிட்டார். மிருதுளாவின் மென்கரம் அவன் தோளில் படிந்தது.
“எனிதிங் சீரியஸ்?” பீதியுடன் கேட்டாள். அடுத்த நொடி தரை தளத்திலிருந்து எழுந்த ‘ஓ’ என்ற அலறல் ஒலி அந்த கட்டிடத்தையே அதிரச்செய்தது.
************
கத்தி கதறினாள் சுமன். தரையில் விழுந்த மீனாக துள்ளி துடித்தாள். தாங்கிப் பிடிக்க முயன்றவர்களை எல்லாம் உதறித் தள்ளினாள். மேடிட்ட வயிறோடு தலைவிரி கோலமாக நடுவீட்டில் ஆக்ரோஷமாக நின்று கோர்த்தாவை சபித்தாள், அர்ஜுன் அழிந்து போவான் என்றாள். கொந்தளிக்கும் கோபத்தில் அவள் நா குழறியது, முகம் நெருப்பாய் தகதகத்தது, கண்களில் கண்ணீர் இரத்தமாக வடிந்தது.
சத்தம் கேட்டு அர்ஜுன் கீழே இறங்கி வர, அவனோடு படிக்கட்டை பிடித்துக் கொண்டே மிருதுளாவும் வந்தாள். அவர்களை பார்த்ததும் வெறிப்பிடித்தவள் போல் பாய்ந்தாள் சுமன். அவளை மூன்று பேர் சேர்ந்து வலுவாக பிடித்துக் கொண்டார்கள். துள்ளி திமிறியவள் முடியாமல் போனதும், “கொன்னுட்டியேடா” என்று கத்தினாள்.
அர்ஜுன் இறுகிப் போய் பாதி படிக்கட்டிலேயே நின்று விட்டான். மிருதுளாவும் மிரட்சியுடன் சுமனை பார்த்தாள். என்ன விஷயம் என்று உறுதியாக தெரியவில்லை என்றாலும், சுஜித்திற்கு ஏதோ ஆகிவிட்டது என்பது மட்டும் புரிந்து போக அடிவயிறெல்லாம் தடதடத்தது. தோழியை நெருங்கக் கூட பயந்தவளாக உறைந்துப் போய் நின்றாள்.
“எவ்வளவு அடி, எவ்வளவு சித்திரவதை, என் கண்ணு முன்னாலேயே உயிரைக் கூட விட்டு வைக்காம இப்படி என்னை கதற வச்சுட்டியே! என் வாழ்க்கையை அழிச்சுட்டியே! நல்லா இருக்க மாட்ட அர்ஜுன். நீ நல்லாவே இருக்க மாட்ட!” வயிறு காந்த, நெஞ்செல்லாம் தீ பற்றிக் கொண்டது போல் எரிய, அபலையாய் சுமன் இட்ட ஓலம் மிருதுளாவின் நெஞ்சை உலுக்கியது.
பாதுகாவலர்கள் சுமனை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று அறைக்குள் தள்ளி கதவை அடைக்க முயன்றார்கள். அவர்களுக்கு ஒத்துழைக்க மறுத்து கத்தியபடி எதிர் திசையில் இழுத்து அவர்களோடு போராடினாள் சுமன்.
“ஏய்!” என்று கத்தியபடி எங்கிருந்தோ ஓடிவந்த மாலிக் சுமனை பிடித்திருந்த பாதுகாவலர்களை தள்ளி விட்டுவிட்டு அவளை தன் பிடியில் கொண்டுவந்தபடி, “அவளோட மனநிலை புரியலையா உனக்கு?” என்று அர்ஜுனை முறைத்தான்.
அதற்குள் தன்னுடைய கோபம், ஆத்திரம், அகங்காரம் அனைத்தையும் மாலிக்கின் மீது காட்ட துவங்கியிருந்தாள் சுமன். அதனை பொறுத்துக் கொண்ட மாலிக், அவளுடைய வலியை தனதாக ஏற்றுக்கொள்ள தயங்கவில்லை. சற்று நேரத்திலேயே அவளுடைய ஆக்ரோஷமும், கோபமும் அழுகையாக மாறியது. தாய் பசுவை பிரிந்த கன்று போல ‘ஓ’ வென்று கதறியவளை தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டான் மாலிக். அது விரசமில்லாத, அன்பை மட்டுமே வெளிப்படுத்தும் அணைப்பு.
எந்த உணர்வும் இல்லாமல் கற்சிலை போல் அவர்களை பார்த்துக் கொண்டு நின்ற அர்ஜுன் கீழே இறங்க எத்தனித்தான். சம்பவ இடத்தில் என்ன நடந்தது என்பதை விசாரிக்க வேண்டிய கடமை அவனை அழைத்தது. ஆனால் மிருதுளா அவன் கையைப் பிடித்து தடுக்க, அவன் திரும்பிப் பார்த்தான். கலவரம் சூழ்ந்த முகத்துடன் அவனை ஏறிட்டவள், “நீங்களா?” என்றாள்.
கலக்கமும் தவிப்புமாக வெளிப்பட்ட அந்த ஒற்றை வார்த்தை அவன் மனதில் சுருக்கென்று தைத்தது. ஓரிரு நொடிகள் அவளை இமைக்காமல் பார்த்தவன் மறுப்பாக தலையசைத்துவிட்டு திரும்பினான்.
“பின்ன எப்படி?” அவளிடமிருந்து அவசரமாக வெளிப்பட்டது அடுத்த கேள்வி.
‘உன் அப்பாதான் என்று நுனி நாக்கில் இருந்த வார்த்தைகளை கொட்டிவிடலாம். ஆனால் அவள் தாங்குவாளா?’ “ஸீ யூ லேட்டர்” முணுமுணுத்துவிட்டு படியிறங்கினான்.
*****************
தான் கட்டியெழுப்பிய சாம்ராஜ்யம் தன் கண் எதிரிலேயே சரிந்துக் கொண்டிருக்கும் கசப்பான உண்மை ராகேஷ் சுக்லாவின் நம்பிக்கையை அசைத்துப் பார்த்தது. சோதனைகளை கடக்காமல் அவர் இந்த நிலையை அடைந்துவிடவில்லை. ஆனால் இன்று வந்திருப்பது சோதனை அல்ல. அடிப்படையே ஆட்டம் கண்டுவிட்டது. ஒருபக்கம் கோர்த்தாவின் பிரதான கார்கோ கப்பல் பிடிபட்டுவிட்டது. இன்னொரு பக்கம் சுஜித்தை தொடர்ந்து இரண்டு நாள் இடைவெளியில், அஞ்சனி லால் அவருடைய வீட்டில் படுக்கையிலேயே கொல்லப்பட்டுக் கிடந்தார். விபரீதம் அதோடு நின்றுவிடவில்லை. அடுத்து வந்த நாட்களில் கோர்த்தாவின் முக்கிய பிரமுகர்கள் குறிவைத்து படுகொலை செய்யப்பட்டார்கள். அனைத்தும் ப்ரொஃபஷனல் டச். நன்கு திட்டமிட்டு சிந்தாமல் சிதறாமல் முடிக்கப்பட்ட ஆபரேஷன்ஸ். என்ன நடக்கிறது என்று அவர் யோசிப்பதற்குள் தளபதிகள், ஆலோசகர்கள் பலரும் தட்டி வீழ்த்தப்பட்டார்கள். நிலைகுலைந்து போனார் சுக்லா.
மிக நுட்பமாக தகவல்கள் பரிமாறப்படவில்லை என்றால் இத்தனை பலமாக கோர்த்தாவை தாக்குவது என்பது இயலாத காரியம். கூடவே இருந்தவர்கள் கூட அறியாத வண்ணம், அன்று இரவு இருளில் கரைந்த நிழல் போல தடம் தெரியாமல் மகல்பாட்னாவிற்கு பயணம் செய்து அதிகாலையில் அர்ஜுனை சந்தித்தார்.
அது அர்ஜுனின் அலுவலக அறை. உள்ளே ராகேஷ் சுக்லா அமர்ந்திருக்க அவருக்கு எதிரில் நின்றுக் கொண்டிருந்தான் அர்ஜுன். காற்றில் ஆக்சிஜனின் அளவு குறைந்துக் கொண்டிருந்தால் எப்படி இருக்கும். அப்படித்தான் இருந்தது அந்த அறையின் சூழ்நிலை. வெகு இறுக்கமான சூழ்நிலை. சுக்லா அர்ஜுனின் கண்களுக்குள் கூர்ந்து பார்த்தார். அவனுக்குள் ஒளிந்திருக்கும் ரகசியங்களை படித்துவிடுவது போன்ற பார்வை. அர்ஜுன் அவருடைய பார்வையை தயக்கமின்றி எதிர்கொண்டான்.
“ஷிப் மாட்டிடுச்சு. உள்ள இருந்த ஆளுங்க நூறு பேருக்கும் மேல அரெஸ்ட் ஆகியிருக்காங்க. மொத்த சரக்கும் இப்போ கவர்மெண்ட் கையில. எப்படி நடந்தது? ஏதாவது ஐடியா இருக்கா?” உள்ளடங்கிய குரலில் கேட்டார்.
அவர்களுடைய வியாபார தடத்தைப் பற்றியோ, அந்தக் கப்பலைப் பற்றியோ இத்தனை ஆண்டுகளில் இப்போதுதான் அர்ஜுனுக்கே தெரியும். அரசாங்கத்திற்கு எப்படி தெரிந்திருக்க முடியும்! புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட வியாபார தலைவர் மூலம் தான் விஷயம் லீக் ஆகியிருக்க முடியும். அதைத்தான் அவரிடம் அர்ஜுனும் கூறினான். ஆனால் அதிலும் ஒரு ஓட்டை இருந்தது. சமீபத்தில் கொல்லப்பட்ட கோர்த்தாவின் முக்கிய பிரமுகர்களின் அந்த நபரும் ஒருவர். தகவல் கொடுப்பவர்களையே கொலை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. அப்படியென்றால் அவர் நேரடியாக துரோகம் செய்யவில்லை. ஆனால் துரோகம் அவர் மூலமாகத்தான் நடந்திருக்கிறது. அந்த விளக்கத்தை சுக்லாவே கூறினார்.
“பிசினஸ் ஹெட் ஃபோன் டேப் ஆகுது.”
“எப்படி?
“அதைத்தான் நான் கேட்கறேன் எப்படி?” அவருடைய பார்வை மாறியது.
“வாட் டூ யூ மீன்?
“அவரு தான் பிசினஸ் ஹெட் அப்படிங்கற விஷயம் எப்படி வெளிய போச்சு. கரெக்ட்டா அவரோட போனை எப்படி டார்கெட் பண்ணினாங்க?”
“அப்படின்னா எலி ரொம்ப நெருங்கின வட்டத்துல இருக்கு” அர்ஜுனின் முகம் தீவிரமானது.
“எஸ்.. டாப் லெவல்ல க்ளீனப் ப்ராஸஸ் பண்ணனும்.
“ம்ம்ம்”
“அதுக்கு முன்னாடி இன்னொரு வேலை இருக்கு.”
“என்ன?”
“வேர் இஸ் ஷி?”
“யாரு?”
“நா யாரை கேட்கறேன்னு உனக்கு தெரியும்.”
“மிருதுளாவையா?”
அவர் வாய் திறக்கவில்லை. ஆனால் அவருடைய பார்வை பதில் சொன்னது.
“நோ.. மிருதுளா இதுல சம்மந்தப்படல” திட்டவட்டமாக மறுத்தான்.
“நூத்துக்கணக்கான எவிடன்ஸ், சாலிட் எவிடன்ஸ், எனக்கு எதிரா மாட்டியிருக்கு. இது சாதாரண விஷயம் இல்ல. யாரையும் விடமாட்டேன். யு திங்க் யு கேன் ஸ்டாப் மீ?” கடுகடுத்தார்.
“ஐம் சாரி. நா ஏற்கனவே சொல்லிட்டேன். மிருதுளாவுக்கும் இந்த குழப்பத்துக்கும் எந்த சம்மந்தமும் இல்ல. நீங்க அவளை விசாரிக்க முடியாது” பதட்டமோ, தயக்கமோ சிறிதும் இல்லாமல் வெகு நிதானமாக கூறினான்.
ராகேஷ் சுக்லாவின் முகம் மாறியது. அவர் உள்ளத்தின் கொதிப்பு முகத்தை கோரமாக மாற்றியது.
“ஆர்த்தியை நியாபகம் இருக்கா உனக்கு? உனக்காக உயிரை விட்டவ. என் பொண்ணு. யூ ஸ்டில் ரிமெம்பர் ஹர்?” வார்த்தையால் குத்தினார்.
அவருடைய வார்த்தைகள் அர்ஜுனை பாதிக்கத்தான் செய்தது. ஆனால் காட்டிக்கொள்ளும் அளவிற்கு அவன் பலகீனமாக இல்லை. நிமிர்வாகவே நின்றான்.
தன்னை காப்பாற்றுவதற்காகத்தான் அவள் உயிரை விட்டாள் என்கிற உண்மை அவன் மனதை குடைந்தாலும், பகையின் ஆணிவேர் அவர்தான் என்பதை சொல்ல அவன் தயங்கவில்லை.
“ஆர்த்தியோட உயிர் பலியானதுக்கு காரணம் நீங்க சேர்த்து வச்ச பகை, நா இல்ல. அப்பாவோட பகைக்கு பலியான கடைசி பொண்ணு ஆர்த்தியாவே இருக்கட்டும். மிருதுளாவை அந்த வரிசையில சேர விடமாட்டேன்” உறுதியாகக் கூறினான்.
அந்த நேரடி மோதலை சற்றும் எதிர்பார்க்காத சுக்லா, அர்ஜுனை வெறுப்புடன் பார்த்தார். “துரோகி” வன்மத்துடன் வார்த்தையை உமிழ்ந்தவர் சட்டென்று அந்த அறையிலிருந்து வெளியேறினார்.
அவர் அங்கிருந்து வெளியே செல்லப் போகிறார் என்று எண்ணி அர்ஜுன் பெருமூச்சுடன் கண்களை மூடித் திறக்க, அவரோ சட்டென்று படியேறி மாடிக்கு விரைந்தார்.
அதை சற்றும் எதிர்பார்க்காத அர்ஜுன் அவரை தடுக்க முயன்றபடி அவர் பின்னால் ஓடினான். கண்மூடி திறக்கும் நேரம் தான். அதற்குள் அவர் அவனுடைய அறைக்குள் நுழைய, கூடவே அவனும் உள்ளே நுழைந்தான்.
மின்னல் வேகத்தில் யாரோ உள்ளே நுழைவதை உணர்ந்து விருட்டென்று கட்டிலிலிருந்து எழுந்த மிருதுளா, அங்கே கடும் கோபத்துடன் நின்ற ராகேஷ் சுக்லாவை கண்டதும் மிரண்டு போனாள்.
மனிதத்தின் சாயல் துளியும் இல்லாத அரக்கனாக மாறியிருந்த ராகேஷ் சுக்லா இரத்த தாகத்துடன் அவளைப் பார்த்தார். அவர் கையிலிருந்த துப்பாக்கி அவள் நெற்றியை குறிப்பார்த்திருந்தது.
“வெயிட்! அவசரப்படாதீங்க, பேசிக்கலாம்” அவர் முதுகுக்கு பின்னால் நின்றுக் கொண்டிருந்த அர்ஜுனின் இதயம் நின்று துடித்தது, முகமெல்லாம் சூடாகி சிவந்துவிட்டது, உடல் முழுவதும் வியர்வையில் குளித்துவிட்டது.
அடர்ந்த மீசைக்கு கீழே தடித்திருந்த அவர் உதடுகள் அலட்சியமாக நெளிந்தன. “இவளை.. இந்த டாஷை உன்னால என்கிட்டேருந்து காப்பாத்த முடியும்னு நினைக்கிற?” நக்கலாகக் கேட்டார்.
அடுத்த நொடியே பாய்ந்த தோட்டா, அவர் பின்னந்தலையில் இறங்கி நெற்றியை துளைத்துக் கொண்டு வெளியே தெறித்து விழுந்தது. மாமிச மலை போல அவர் சடலமாக மண்ணில் சரிந்தார்.
“சாரி மிஸ்டர் சுக்லா” மெல்ல முணுமுணுத்தான் அர்ஜுன்.




Comments are closed here.

You cannot copy content of this page