Share Us On
[Sassy_Social_Share]நிழல் நிலவு- 73
291
0
அத்தியாயம் – 73
கண் மூடி கார் கதவில் சாய்ந்திருந்தாள் மிருதுளா. மூடிய இமைகளுக்குள் ஓய்வின்றி உருளும் விழிகள், அமைதியற்ற அவள் மனநிலையை உரக்கக் கூறியது. வாடிய முகமும், தளர்ந்த மேனியுமாக அவள் கிடப்பதைக் கண்டும் காணாதது போல் காரை ஓட்டிக் கொண்டிருந்த டேவிட், நெடுஞ்சாலை ஓரத்தில் இருந்த ஒரு உணவகத்தைக் கண்டு காரை ஓரம் கட்டினான்.
கார் தன் ஓட்டத்தை நிறுத்திவிட்டதை உணர்ந்து விழி திறந்த மிருதுளா, “எந்த ஊர் இது? அர்ஜுன் சொன்ன இடம் இது தானா?” என்றாள்.
தலையை குறுக்காக அசைத்த டேவிட், “பாதி வழிதான் வந்திருக்கோம். ரெஃப்ரெஷ் பண்ணிட்டு ஏதாவது சாப்பிட்டுவிட்டு போகலாம்” என்றான்.
“ரெஸ்ட் ரூம் அந்தப் பக்கம். நான் இங்கயே வெயிட் பண்ணறேன். நீ போயிட்டு வா” என்று அவளுடைய இயற்கை உபாதைகளுக்கு வழிவகை செய்தவன், தனக்கான தேவைகளை பொருட்படுத்தவே இல்லை. கண்ணின் மணி போல கருவிழிக்குள் அவளை பாதுகாத்து, பத்திரமாக கொண்டு சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்த்துவிட வேண்டும் என்பது மட்டுமே அவன் குறியாக இருந்தது.
சில நிமிடங்களில் மிருதுளா வெளியே வந்துவிட, காலியாக இருந்த ஒரு டேபிளில் இருவரும் சென்று அமர்ந்தார்கள். அவர்களிடம் நெருங்கிய வெய்ட்டர் தயாராக இருக்கும் காலை உணவு பட்டியலை படபடவென்று பொரிந்தான். தனக்கு எதுவும் வேண்டாம் என்று மறுத்த மிருதுளாவை பொருட்படுத்தாமல், அவளுக்கும் சேர்த்து தானே ஆர்டர் கொடுத்தான் டேவிட். உணவு அவள் தொண்டை குழிக்குள் இறங்க மறுத்தது.
“ரொம்ப வீக்கா தெரியிற. கொஞ்சமாவது சாப்பிடு” – அக்கறையோடு கூறினான் டேவிட்.
“என்னோட வீக்னஸுக்கு காரணம் பசி இல்லன்னு உனக்கே தெரியும் டேவிட்” – மிருதுளாவின் பார்வை அவனிடம் மன்றாடியது.
அந்தப் பார்வைக்கான அர்த்தம் அவனுக்கு புரியாமல் இல்லை. ஆனால் அவள் கேட்கும் விபரத்தை சொல்லவோ, அவளுடைய வேண்டுகோளை நிறைவேற்றவோ அவனுக்கு எந்த அதிகாரமும் இல்லையே! பதில் சொல்லாமல் எழுந்து கை கழுவச் சென்றான்.
காருக்கு வரும் வரை அமைதியாக இருந்த மிருதுளா, அவன் சீட் பெல்ட்டை அணிந்ததும், “டேவிட் ப்ளீஸ்” என்று மீண்டும் ஆரம்பித்தாள்.
“பிலீவ் மீ மிருது. உனக்கு எது நல்லதோ அதைத்தான் நான் செய்றேன். ரிலாக்ஸா இருக்க முயற்சி பண்ணு, ப்ளீஸ்..” – கனிவுடன் கூறினான்.
அவன் குரலிலும் முகத்திலும் தெரிந்த இளக்கம் அவளுக்குள் நம்பிக்கையை விதைக்க சட்டென்று அவன் கையைப் பிடித்துக் கொண்டாள். கண்ணீர் குளம் கட்டிய கண்களுடன் அவனை நோக்கினாள். “ப்ளீஸ் டேவிட்” – அவள் உதடுகள் முணுமுணுத்தன.
டேவிட் அவளுடைய மன்றாடலை தவிர்க்க முடியாமல் தடுமாறினான். அவள் கைகளுக்குள் சிக்கியிருக்கும் தன் கரத்தை உறுவிக்கொள்ள முயன்றான். அவள் பிடி இறுகியது. “ப்ளீஸ்.. ப்ளீஸ்..” – பற்றுக்கோலை இறுக்கிப் பிடித்துக் கொள்பவள் போல் அவன் கரத்தை இறுக்கிப் பிடித்துக் கொண்டாள். அதற்கு மேல் அவனுடைய உறுதிக்கு ஆயுள் இல்லாமல் போனது.
“இட்ஸ் அபௌட் சுக்லாஸ் ரெஸ்க்யூ ஆபரேஷன். அர்ஜுன் லீட்ஸ் திஸ் ஆபரேஷன் பை பீஸ்.”
“வாட்!” – அதிர்ச்சியும், குழப்பமுமாக வாயைப் பிளந்தாள் மிருதுளா.
‘செத்துப்போன ஒருவனை காப்பாற்றுவதற்கு ஒரு திட்டமா! அதற்கு ஒரு மீட்டிங்கா! அதென்ன.. கடைசியில் ‘பை பீஸ்’ என்றான்! அமைதிப் பேச்சு வார்த்தை யாரோடு நடக்கவிருக்கிறது!’ – அவளுடைய சிந்தனையின் ஓட்டம் வேகமெடுத்தது. அர்ஜுன் யாருக்கோ வலை விரிக்கிறான் என்பது கண்ணாடி போல் அவளுக்குத் தெளிவாக தெரிந்தது.
சுக்லாவின் மரணத்தைப் பற்றி அறிந்தவர்கள் மிருதுளாவும், அர்ஜுனும் மட்டும் தான் என்பதால் அவன் யாரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறான், யாருக்கு வலை விரிக்கிறான் என்பதை புரிந்துக்கொள்வதில் அவளுக்கு குழப்பம் இருந்தது. ஆனால் அவனுடைய பிரதான எதிரி அவளுடைய பெற்றோர் தானே! அவர்களை தான் குறி வைத்துவிட்டானா! அதற்காகத்தான் அவளை அப்புறப்படுத்தினானா! – மிருதுளாவின் வெளிறிய முகத்தைக் கண்டு டேவிட்டின் புருவம் சுருங்கியது.
“மிருது! வாட்ஸ் ராங்?”
“ஆங்!” – பயமும் குழப்பமுமாக அவனை நோக்கினாள் மிருதுளா.
“என்ன ஆச்சு?”
“டேவிட், வி நீட் டு கோ பேக்.”
“வாட்! திரும்பிப் போகனுமா! எதுக்கு?”
மிருதுளா ஓரிரு நொடிகள் அவனை இமைக்காமல் பார்த்தாள். பிறகு “சுக்லா இப்போ உயிரோட இல்ல” என்றாள் மெல்லிய குரலில்.
டேவிடின் முகம் வெகு தீவிரமாக மாறியது. “நோ.. நோ வே..” – அவன் வார்த்தையில் மறுப்பு இருந்தது. ஆனால் குரலில் உறுதி இல்லை. முகத்தில் குழப்பமும், கலவரமும் ஒன்றன் பின் பின்றாக குடியேற, மிருதுளாவை வெறித்துப் பார்த்தான்.
அவன் இதயத் துடிப்பு சட்டென்று அதிகமாகிவிட்டது. முகமெல்லாம் வியர்வை முத்துக்கள் அரும்பிவிட, மூச்சுக்காற்றில் வெப்பம் கூடியது. தொண்டையை கவ்வி பிடித்துக் கொண்ட குரலை வலுக்கட்டாயமாக விடுவித்து, “உனக்கு எப்படி தெரியும்?” என்றான்.
அதற்கு அவள் பதில் சொல்லவில்லை. மாறாக, “நா அர்ஜூன்கிட்ட பேசனும். பெருசா எதுவும் நடக்கறதுக்கு முன்னாடி தடுக்கனும். ப்ளீஸ், கூட்டிட்டு போ” என்றாள்.
பதட்டம் – அவசரப்படுத்தும். தவறை சரியென்றும், சரியை தவறென்றும் குழப்பிவிடும். மனதில் தத்தளிக்கும் ஊகங்களை எல்லாம் உண்மை என்று நம்ப வைக்கும். டேவிட் அப்போது உச்சக்கட்ட பதட்டத்தில் இருந்தான். அதனால்தானோ என்னவோ மிருதுளாவின் வார்த்தைகளை முழுவதும் ஆராயாமல், ஊகங்களுக்கு இடம் கொடுத்து, அவள் சொன்னதை வேறு விதமாக புரிந்துக் கொண்டான்.
‘சுக்லாவை பகவான் தான் கொலை செய்திருக்கிறார். மிருதுளா அதை அறிந்திருக்கிறாள். ஆனால் அதை அர்ஜுனிடம் தெரிவிக்கவில்லை. இப்போது இந்த மீட்டிங் மூலம் பகவான் அர்ஜூனுக்கும் குறி வைத்திருக்கலாம். அது தெரியாமல் இவன் சமாதான பேச்சு வார்த்தை என்று போய் மாட்டிக்கொள்ள போகிறான்’ – இவையெல்லாம் நொடிப்பொழுதில் டேவிட்டின் மனதில் தோன்றிய ஊகங்கள். அதன் உண்மைத்தன்மை பற்றி ஆராயவும், அறிந்து கொள்ளவும் அவனுக்கு பொறுமையில்லை. அவசர அவசரமாக அர்ஜுனை அலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றான். பல முறை முயன்றும் பலன் கிடைக்கவில்லை.
விஷயம் வெகு தீவிரமானது என்பதால் வேறு யாரிடமும் இதைப் பற்றி பேச முடியாது. அப்படி பேசினால் அது மிருதுளாவின் உயிருக்கு ஆபத்தாக கூடும். அதற்கு மேல் அவனால் தாமதிக்க முடியவில்லை. உடனே காரை வந்த வழியிலேயே திருப்பினான்.
***********
ஷூவின் அடிப்பாகத்தில் மறைத்து வைத்திருந்த கையடக்க துப்பாக்கியின் பாகங்களை சேகரித்து கோர்த்து அதில் தோட்டாக்களை லோட் செய்து, கண்ணாடியில் தெரியும் தன் பிம்பத்தை குறிப்பார்த்தான் அர்ஜுன். மனதில் அன்று காலை நடந்த சம்பவம் நினைவிற்கு வந்தது.
இன்னும் சற்று நேரத்தில் நடக்கவிருக்கும் அந்த ரகசிய சந்திப்பிற்கு மாலிக்கும் அழைக்கப்பட்டிருந்தான். ஆனால் அவன் அன்று காலையே அர்ஜுனை சந்திக்க வந்திருந்தான்.
“இனி நான் கோர்த்தாவோட பார்ட்டா இருக்க முடியாது அர்ஜுன். எனக்கு வேறு ஒரு முக்கியமான பொறுப்பு இருக்கு” என்றான்.
அர்ஜுன் அவனை இமைக்காமல் பார்த்தான். “சுமன் ரைட்?”
மாலிக் ஆமோதிப்பாக தலையசைத்தான். “தனியா இருக்கா. வீக்கா இருக்கா. ஐ ஹேவ் டு டேக் கேர் ஆஃப் ஹெர். ப்ளீஸ் என்னை போக விடு” – அவன் உறுதியாக முடிவெடுத்துவிட்டான் என்பதை அர்ஜுன் புரிந்துக் கொண்டான்.
ஆனால் கோர்த்தா போன்ற மிகப்பெரிய நிழலுலக மாஃபியா குழுவிலிருந்து பிரிந்து செல்வது என்பது சாத்தியமில்லாதது. அதுவும் மாலிக் இருந்த பொசிஷன் முக்கியமானது. பல ரகசியங்கள் அவனுக்கு தெரியும். இவன் வெளியேறிவிட்டான் என்று காத்துக் கொண்டிருக்கும் கழுகுகளுக்கு தெரிந்தால் ஒரே நொடியில் கொத்திக் கொண்டு போய்விடுவார்கள். பிறகு எப்படி இவன் சுமனுக்கு அமைதியான வாழ்க்கையைக் கொடுப்பான். பெருமூச்சுடன் நண்பனை ஏறிட்டான் அர்ஜுன்.
“நல்ல முடிவுதான் எடுத்திருக்க. ஆனா சாத்தியப்படாத முடிவு. உனக்கே தெரியாம நீ கோர்த்தாவுக்கு த்ரெட்டா மாறலாம்” – எச்சரித்தான்.
“என்னோட ஐடென்டிட்டி, பிஸிக் எல்லாத்தையும் மாத்திக்கிறேன். யாராலயும் கண்டுபிடிக்க முடியாத வேற ஒரு மனுஷனா மாறிடறேன். என்னால முடியும், அது உனக்கும் தெரியும்.”
அர்ஜுன் ‘ஆம்’ என்று தலையசைத்தான். “எஸ், யு ஆர் ரைட். உன்னால முடியும். உன்னோட விருப்பப்படி நா உன்ன கோர்த்தாலேருந்து விடுக்கிறேன். ஆனா அதுக்கு முன்னாடி கடைசியா நீ எனக்கு ஒரு வேலை செஞ்சு கொடுக்கனும்.”
“நிச்சயமா. என்ன செய்யனும் சொல்லு?” – உற்சாகமாக கேட்டான்.
அர்ஜுன் தன்னுடைய அறைக்கு சென்று ஒரு கவரை கொண்டு வந்து மாலிக்கிடம் நீட்டினான்.
“ஹோட்டல் ‘வுட்-ஹவுஸ்’ ரூம் நம்பர் 333.”
அந்த குறிப்பிட்ட ஹோட்டலில் அறை எண் 333 தங்கியிருக்கும் நபரிடம் அந்தக் கவரை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதை புரிந்துக் கொண்டு, விடைபெற்று கிளம்பினான் மாலிக்.
அலைபேசியை எடுத்து ப்ளூ ஸ்டாருக்கு அழைத்து, இரை ஒன்று வுட்-ஹவுஸை நோக்கி வந்து கொண்டிருக்கிறது என்று கூறியபடி, ஜன்னல் வழியாக கீழே பார்த்தான்.
தன் கையிலிருப்பது டம்மி கவர் என்று அறியாமல் தூண்டில் புழுவை நோக்கி பாயும் மீன் போல காரில் ஏறி ‘வுட் ஹவுஸை’ நோக்கி விரைந்தான் மாலிக்.
அர்ஜுனின் முகத்தில் ஒரு அலட்சிய புன்னகை தோன்றியது. அதே புன்னகை இப்போது கண்ணாடியில் தெரியும் அவனுடைய பிம்பத்திலும் இருந்தது. தலையை உலுக்கிக் கொண்டு துப்பாக்கியை இறக்கியவன், அதை இடுப்பில் சொருகிக் கொண்டு அந்த அறையிலிருந்து வெளியே வந்தான்.
அது ஒரு ரிசார்ட். அங்குதான் சந்திப்பு நடக்கவிருக்கிறது. சந்திப்பு நடக்கவிருக்கும் பகுதிக்கு வெளியே கோர்த்தாவின் ஆட்களும், பகவான் ஆட்களும் ஒன்றாக நின்று, வரும் ஆட்களை சோதித்து அவர்களிடம் இருக்கும் துப்பாக்கி மற்றும் கைபேசியை வாங்கி கொண்டு அவர்களை உள்ளே அனுமதித்துக் கொண்டிருந்தார்கள்.
அர்ஜுனும் சோதிக்கப்பட்டான். ஆனால் ஆயுதத்தை எப்படி மறைத்து உள்ளே கொண்டு வர வேண்டும் என்பது அவனுக்கு தெரிந்திருந்தது. அவனைப் போல் இன்னும் எத்தனை பேர் உள்ளே ஆயுதத்தோடு வந்திருக்கிறார்களோ! உள்ளே வரும் ஆட்களை ஆராய்ச்சி கண்களோடு நோக்கினான். பகவான் மற்றும் ஷோபாவை தவிர கிட்டத்தட்ட அவன் எதிர்பார்த்த அனைவரும் வந்துவிட்டார்கள்.
மணிக்கட்டை திருப்பி கடிகாரத்தில் நேரத்தை பார்த்தான். அவன் முகம் இறுகியது. வரமாட்டாரோ என்கிற எண்ணம் மனதில் தோன்ற உள்ளே சின்ன பதட்டம் உண்டானது. கண்களை மூடி ஆழ மூச்செடுத்தான். வெளியே பரபரப்பு தெரிந்தது. பகவான் தான்! அருகில் ஒரு பெண் உருவம் தெரிந்தது. பார்வையை கூர்மையாக்கினான்.
‘அவளே தான். இருவரும் வந்துவிட்டார்கள்’ – நிம்மதி பெருமூச்சுடன் அவர்களையே பார்த்துக் கொண்டு நின்றான்.
சோதனைகளை எல்லாம் முடித்துக் கொண்டு அர்ஜுனை நோக்கித்தான் இருவரும் வந்தார்கள்.
“வெல்கம்..” – கை கொடுத்தான்.
“தேங்க்யூ, இந்த அமைதி பேச்சுவார்த்தை வெற்றிகரமா முடியனும்” – பகவான்.
“மிருதுளா எப்படி இருக்கா?” – ஷோபா.
“ஷி இஸ் ஃபைன்.”
“வந்திருக்காளா? நாங்க மீட் பண்ணலாமா?”
“வருவா. மீட் பண்ணலாம். முதல்ல பிசினஸ். அப்புறம் பர்சனல். லெட்ஸ் கெட் இன்” – வார்த்தைகளை வளர்க்க விரும்பாமல் அவர்களை உள்ளே அழைத்துச் சென்றான்.
Comments are closed here.