Share Us On
[Sassy_Social_Share]நிழல் நிலவு- 74
405
0
அத்தியாயம் 74
மீட்டிங் தொடங்கி பத்து நிமிடம் இருக்கும். இரு பக்கத்திலிருந்தும் பேச்சு வார்த்தை நாசுக்காக துவங்கியது. கேங் வார் ஆரம்பித்ததிலிருந்து தங்கள் பக்கம் ஏற்பட்ட இழப்புகளை எடுத்துக் கூறினார்கள். ராகேஷ் சுக்லாவை தங்களிடம் ஒப்படைக்கவில்லை என்றால் இந்த வார் முடிவிற்கு வர வாய்ப்பே இல்லை என்று கோர்த்தாவின் பக்கத்திலிருந்து அர்ஜுன் சொன்னான். பகவானின் முகம் சீற்றத்தில் சிவந்தது. ராகேஷ் சுக்லா தங்களிடம் இல்லை என்பதை அழுத்தம் திருத்தமாகக் கூறினார். நொடி பொழுதில் அங்கே சூழ்நிலை பதட்டமானது. இரு பக்கத்திலிருந்தும் ஆளாளுக்கு ஒவ்வொன்றை சொல்ல சலசலப்பு எழுந்தது. அதே நேரம் வாயிலில் யாரோ உள்ளே நுழையும் அரவம் தெரிந்தது.
அனைவருடைய பார்வையும் வாயில் பக்கம் திரும்ப, ஷோபா மகிழ்ச்சியுடன் எழுந்தாள்.
“மிருது!” – ஆனந்த அதிர்ச்சியில் குரல் உடைந்து தழுதழுத்தாள். அமர்ந்திருந்த சேரை பின்னுக்கு தள்ளிவிட்டு அவசரமாக எழுந்து மகளிடம் அவள் நெருங்க முற்பட, அவளை முந்திக் கொண்டு மிருதுளாவிடம் விரைந்த அர்ஜுன் அவள் கையைப் பிடித்து பின்னுக்கு இழுத்து, “இங்க என்ன பண்ற?” என்றான் உறுமலாக.
“அர்ஜுன், ராகேஷ் ஜீ உயிரோடவே இல்ல. இந்த மீட்டிங் ஒரு டிராப்” என்றான் டேவிட்.
ஒரு கணம் அர்ஜுனின் முகத்தில் இனம் காண முடியாத உணர்வு வந்து போனது. பிறகு பல்லை கடித்துக் கொண்டு, “உன்கிட்ட நா என்ன சொன்னேன், நீ என்ன பண்ணிக்கிட்டு இருக்க இடியட்” என்று அடி குரலில் கத்தினான்.
அதே நேரம் எங்கிருந்தோ பாய்ந்து வந்த தோட்டா உள்ளே மீட்டிங் அறையில் அமர்ந்திருந்த ஒருவனின் கதையை முடித்தது. என்ன நடக்கிறது என்பதை உணர்ந்து மற்றவர்கள் பதட்டமும் பரபரப்புமாக பாதுகாப்பான இடத்தில் பதுங்க முயல, அதற்குள் அடுத்தடுத்து சீறிப்பாய்ந்த தோட்டாக்கள் குழு பேதமின்றி அனைவரின் மீதும் பாயத் துவங்கியது. கூடவே கருப்பு சீருடை அணிந்த உருவங்கள் சில மின்னல் வேகத்தில் மறைவிடங்களை மாற்றி பதுங்குவதை கவனித்த டேவிட் கமாண்டோ குழு ஒன்று உள்ளே இறங்கியிருப்பதை புரிந்துக் கொண்டு அர்ஜுனுக்கு சிக்னல் கொடுத்தபடி தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்தான். மறுகணமே உதிரம் கசிய அவனும் கீழே விழுந்தான்.
“டேவிட்” என்று அலறியபடி மிருதுளா அவனிடம் பாய, அர்ஜுன் அவள் கையைப் பிடித்து கீழே இழுத்து சாய்க்க, அதற்குள் மகளை பாதுகாக்கும் பதட்டத்தில் ஷோபா மறைவிடத்திலிருந்து சற்று தலையை வெளியே நீட்ட அவள் மூளை சிதறியது. மிருதுளா வீறிட்டு அலறியபடி தாயிடம் பாய முயன்றாள். அவளை தன்னோடு சேர்த்துப் பிடித்துக் கொண்டு அவள் முகத்தை வலுக்கட்டாயமாக தன் நெஞ்சோடு சேர்த்துப் பிடித்துக்கொண்டான். அந்தக் கோரத்தை அவள் பார்த்துவிட்டாளே என்று அவன் மனம் பதைபதைத்து.
சற்று நேரத்திலெல்லாம் திமுதிமுவென்று உள்ளே நுழைந்த கமாண்டோக்கள் சிலர் அர்ஜுனை சுற்றி வளைக்க மற்றும் சிலர் மறைந்திருந்தவர்களை துப்பாக்கி முனையில் வெளியே இழுத்து வந்து மண்டியிட வைத்தார்கள். மிருதுளா மிரட்சியுடன் சுற்றும் முற்றும் பார்த்தாள். அவளுடைய தந்தையும் இழுத்துவரப்பட்டார். அர்ஜுன் அவள் முகத்தை திருப்ப முயன்றான். பார்வையை மறைக்க முயன்றான். என்ன நடக்க போகிறது என்று அவள் யோசிப்பதற்குள் அவள் கண் எதிரிலேயே அவள் தந்தையை மண்டியிடச் செய்து பின்னந்தலையில் சுட்டு தள்ளினார்கள்.
மிருதுளா துடிதுடித்துப் போனாள். சற்று நேரத்திற்குள் அவள் உலகமே தலைகீழாக புரண்டுவிட்டது. கதறி துடித்தவளை அர்ஜுன் தன்னோடு சேர்த்து அணைத்துக்கொள்ள அவன் பிடியிலிருந்து அவளை கமாண்டோக்கள் பிரிக்க முயன்றார்கள். அவன் மறுத்து அவளை தன்னோடு இன்னும் இறுக்கமாக பிணைத்துக் கொண்டான். அவனுடைய மறுப்பிற்கு மதிப்பு கொடுத்து பின்வாங்க அவர்கள் என்ன கோர்த்தாவின் ஆட்களா? அரசாங்கம் அனுப்பிய கமாண்டோக்கள். அவளை அவனிடமிருந்து பிரித்துவிட்டு அர்ஜுனையும் சுட்டுத்தள்ளப் போகிறார்கள் என்று எண்ணி, பெருங்குரலில் கத்தியபடி அவள் அவனோடு மேலும் இறுக்கமாக ஒட்டிக்கொள்ள, அவள் எதிர்பார்ப்பிற்கு முற்றிலும் எதிர்மறையாக இருந்தது அதற்கு மேல் அங்கே நடந்த சம்பவம்.
அர்ஜுனின் மறுப்பிற்கு கமாண்டோக்கள் கட்டுப்பட்டார்கள். அப்போதுதான் மிருதுளாவின் கவனத்தில் ஒன்று பட்டது. அர்ஜுனை சுற்றி வளைத்திருந்த கமாண்டோக்களின் துப்பாக்கிகள் அவனை குறி வைக்கவில்லை. எதிர் திசையில் குறிபார்த்திருந்தது. அதாவது அவனுக்கு முதுகுக்காட்டி அவனை ஆபத்திலிருந்து பாதுகாப்பவர்கள் போல் சுற்றி வளைத்திருந்தார்கள். அந்த வளையத்திற்குள் மிருதுளாவையும் அவன் நிறுத்திக்கொள்ள அவர்களிடம் மறுப்பு இல்லை. மாறாக, “கமான் ஆஃபீஸர். லெட்ஸ் மூவ்” என்று மரியாதையுடன் விளித்து அவனை அங்கிருந்து அழைத்துச் செல்ல, அவளையும் விடாமல் அவன் இழுத்துக் கொண்டே போக, ‘ஆஃபீஸர்’ என்ற அந்த ஒற்றை வார்த்தையில் இடியே விழுந்துவிட்டார் போல் அவனை நிமிர்ந்து பார்த்தாள் மிருதுளா.
**************
மிருதுளாவின் உணர்வுகளுக்கு சமாதி கட்டப்பட்டு மூன்று முழு நாட்கள் முடிந்துவிட்டது. ஆம், அன்று நடந்து முடிந்த விபரீதத்திற்குப் பிறகு அவளுக்குள் ஏதோ மரத்துப் போனது போல், உள்ளே எதுவுமே தோன்றவில்லை. சிந்தனைகள் கூட எதுவும் இல்லை. மூளை, மனது இரண்டுமே வெறுமையாக இருந்தது. தலை சிதறிக் கிடந்த தாயும் தந்தையும் அவள் மனக்கண்ணை விட்டு அகலவில்லை. ஆனால் அது எப்படி, யாரால், ஏன் நடந்தது போன்ற எந்த யோசனையும் இல்லை. இப்படி ஆகிவிட்டதே என்று வலிக்கவும் இல்லை. அழுகையும் வரவில்லை. செத்துப்போன பிணம் போல் அப்படியே அமர்ந்திருந்தாள்.
அவளிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை என்றாலும், அவ்வப்போது யாரோ ஒரு ஆஃபீஸர் வந்து அவளிடம் ஏதேதோ கேட்டுவிட்டு சென்றார். ஓரிருமுறை மருத்துவ பரிசோதனை கூட செய்தார்கள். மற்றபடி அந்த அறையும் இருளும் தனிமையும் தான். ஆம், அவள் இருப்பது ஒரு இன்டராகேஷன் அறை. மூன்று நாட்களாக அந்த அறையில் தான் இருக்கிறாள். பசி உறக்கம் எதுவும் இல்லை. தனிமை – வெறுமை, வெறுமை – தனிமை அதற்கு மேல் எதுவும் இல்லை என்று அவள் அமர்ந்திருக்கும் சமயத்தில், கண்ணாடி தடுப்புக்கு வெளியே நின்று அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் அவன், அர்ஜுன் ஹோத்ரா! இல்லையில்லை.. அபிமன்யு! துஷ்டர்களுக்கு எதிராக களமிறங்கி சக்கரவியூகத்தில் சிக்கி அழிந்த துவாபர யுக அபிமன்யு அல்ல. இவன் புதியவன். கோர்த்தா என்னும் கொள்ளை கூட்டத்திற்குள் சத்தமில்லாமல் ஊடுருவி, உளவு பார்த்து, களமாடி வெல்ல வியூகம் அமைத்து கொடுத்துவிட்டு, வெற்றிகரமாக வெளியே வந்த கலியுக அபிமன்யு.
ஊர் எல்லையில் நிற்கும் வீரனார் போல அந்த விசாரணை அறைக்கு வெளியிலேயே மூன்று நாட்களாக நின்று கொண்டிருக்கிறான். உள்ளே சென்று அவளை நேருக்கு நேர் சந்திக்கவும் தைரியம் இல்லை, அவளை விட்டு விலகிச் செல்லவும் மனம் இல்லை.
“அந்த பொண்ணு மேல உனக்கு இவ்வளவு கன்ஸர்ன் இருக்கு. உள்ள போய் பாரேன்” – ராஜ்வீர் அவன் தோள் தொட்டார். கோர்த்தா ஆபரேஷனுக்கு தலைமை அதிகாரி. அந்த ஆபரேஷனை பொறுத்தவரை ‘ப்ளூ ஸ்டார்’ என்பது தான் அவருடைய அடையாளம்.
அவனிடம் பதில் இல்லை. ஒரு பெருமூச்சு மட்டுமே வெளிப்பட்டது.
“அபி, உன்னோட மிஷன் சக்ஸஸ் ஆயிடிச்சு. எதிர்மறை விளைவுகள் இருக்கத்தான் செய்யும். ரியாலிட்டியை ஃபேஸ் பண்ணு. யு ஆர் எ டாம் ஃபைட்டர் மேன்” என்றார்.
அவர் சொல்வது உண்மைதான். அவன் ஒரு போராளி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் போராளிகள் ரோபோக்கள் அல்லவே! என்னதான் இரட்டை பயிற்சி எடுத்திருந்தாலும் இப்படி வருட கணக்கில் அண்டர்கவர் ஆபரேஷனில் இருக்கும் போது அவர்களுடைய உண்மையான உணர்வுகள் சில நேரங்களில் வெளிப்பட கூடும். நிழல் உலகத்தில் அவர்கள் பழகும் ஆட்களோடு நட்போ பிரியமோ உருவாவதை தவிர்க்க முடியாது. அப்படி உருவான அந்த பிணைப்பை ஒரு கட்டத்தில் அவர்கள் கைவிட்டே ஆகவேண்டும். இப்படி மனித இயல்புக்கு முரணான விஷயத்தை தனக்குள் வலுக்கட்டாயமாக திணிக்கும் பொழுது உட்சபட்ச மனஅழுத்தம் ஏற்படுவதுண்டு. அதனால்தான் அண்டர்கவர் ஆபரேஷனில் இருந்து வெளியே வரும் அதிகாரிகள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவது மிகவும் கடினமாகிறது. சில சமயங்களில் முடியாமலே கூட போய்விடுகிறது. அவனுக்கும் அந்த அழுத்தம் இருந்தது. போஸ்ட் ட்ரமாடிக் ஸ்ட்ரெஸ்!
அதிலிருந்து அவனை வெளியே கொண்டு வருவதற்கு முழு சப்போர்ட் கொடுக்க வேண்டியது ராஜ்வீரின் கடமை. ஆனால் அவன் ட்ரீட்மெண்டிற்கு ஒத்துழைக்க மாட்டேன் என்கிறான். அவளைவிட்டு விலக மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறான்.
நிழல் வாழ்க்கையில் அமைந்த உறவுகளோ நட்புக்களோ நிஜ வாழ்க்கையில் நிலைக்க முடியாது என்பதை அவன் புரிந்துகொள்ள வேண்டும் என்பது அவருடைய எண்ணம். ஆனால் அவனுடைய எண்ணம் அவனுக்கு. அதில் அவள் மட்டும் தான் இருக்கிறாள் என்பதை அவர் அறிந்திருக்கவில்லை.
அவர் சொல்வதெல்லாம் அவன் காதில் ஏறியதா என்பதே சந்தேகம். அவன் பார்வை அவளிடமிருந்து அசையவே இல்லை.
அவள் பகவானுடைய மகள். கடந்த சில மாதங்களாக கோர்த்தா குழுவோடு வசித்திருக்கிறாள். இறுதி நாள் ஆபரேஷன் நடந்த போது கூட சம்பவ இடத்தில் இருந்திருக்கிறாள். இது போன்ற காரணங்களால் அவளுடைய பெயரும் விசாரணை பட்டியலில் இடம் பிடித்திருந்தது. அர்ஜுன் என்கிற அபிமன்யு அதை கடுமையாக எதிர்த்தான். மூன்று நாட்களாக அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்து அவளுடைய பெயரை பட்டியலிலிருந்து இன்றுதான் நீக்க முடிந்தது. அதை அவளிடம் சொல்லி இங்கிருந்து அவளை வெளியே அழைத்துச் செல்ல வேண்டும். உடன் வருவாளா அல்லது விட்டுச் சென்றுவிடுவாளா? உள்ளுக்குள் பதைபதைத்தது.
அவன் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவள் தலையை மெல்ல மேஜையின் மீது சரித்தாள். ஏதோ சரியில்லையோ என்று அவன் யோசித்து முடிப்பதற்குள் அவள் நாற்காலியிலிருந்து கீழே சரிந்துவிட்டாள். பதறியடித்துக் கொண்டு உள்ளே ஓடினான் அவன்.
************
மருந்து வீரியத்தில் நன்றாக உறங்கி கொண்டிருந்தாள் மிருதுளா. மூன்று நாட்களாக நீர் கூட அருந்தாததால் உடம்பில் நீர் சத்து குறைந்து மயங்கிவிட்டாள். ட்ரிப்ஸ் ஏறிக் கொண்டிருந்தது. அருகிலேயே அவன் அமர்ந்திருந்தான்.
வெகு நேரம் கழித்து அவள் கண்விழித்த போது முதல் பார்வையிலேயே அந்த முகம்தான் அவள் கண்ணில் பட்டது. முகம் பரிட்சையமானது தான். ஆனால் அந்த முகத்திற்கு சொந்தக்காரனை தான் அவளுக்கு தெரியவில்லை. அவன் யாரோ ஒரு புதியவன். அறிமுகமற்றவன். அந்நிய பார்வையோடு அவனை நோக்கினாள். ‘யார் நீ?’ என்னும் பார்வை.
ஆம், அன்று அவளுடைய பெற்றோரும் பழகிய தோழனும் குண்டடிப்பட்டு மறைந்து போன போது, அவள் அனைத்துமாக நம்பியிருந்த அவளுடைய அர்ஜுன் காற்றில் மறைந்துவிட்டான். அர்ஜுன் என்கிற ஒருவன் அவளுடைய ரியாலிட்டியில் இல்லாமலே போய்விட்டான். அவளுடைய மொத்த உலகமும் அழிந்து போய் நிர்கதியாகிவிட்டாள். ஆனால் அவளுக்கு வலிக்கவில்லை. மனதிற்குள் கவலை தோன்றவில்லை. காரணம், இப்போது அவளோடு யாரும் இல்லை, எதுவும் இல்லை. வாழ்வில் ஆசையோ பிடிப்போ கூட இல்லை. எப்போது வாழ்க்கை முடியும், அல்லது முடித்துக்கொள்ளலாம் என்று தான் தோன்றியது. அயர்வுடன் கண்களை மூடினாள்.
அவளுடைய அந்நியப் பார்வையும், உணர்வற்ற நிலையும் அவன் இதயத்தை அறுத்தது. நிவாரணம் தேடி அவன் கை தானாக நீண்டு அவள் நுனிவிரலை வருடியது.
அந்த நுனிவிரல் ஸ்பரிசத்தில், சமாதிகட்டப்பட்ட அவள் உணர்வுகளெல்லாம் உயிர்பெறுவது போல் தோன்ற, உள்ளுக்குள் மின்னல் போல் சுரீரென்று ஒரு வலி. மூடிய விழிகளை திறக்காமல் கையை விலக்கிக் கொண்டாள். அவன் உதடுகள் அழுந்த மூடின.
ஒரு வாரம் கழிந்துவிட்டது. மிருதுளா இன்னமும் மருத்துவமனையில் தான் இருக்கிறாள். அவளிடம் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. அவள் டீப் டிப்ரஷனுக்குள் சென்றுக் கொண்டிருப்பதாக மருத்துவர் கூறினார். ஸ்பெஷல் கேர் கொடுத்து அவளை மீட்டெடுக்கவில்லை என்றால் நிலைமை விபரீதமாகிவிடும் என்றார். அடி வயிற்றிலிருந்து சுருண்டு எழுந்த ஓர் உணர்வு அவன் நெஞ்சை அடைத்தது. துக்கமும் பயமும் கலந்த அந்தக் கலவையான உணர்வு மூச்சு குழலை நெறிப்பது போல் தோன்ற கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டான்.
“மிஸ்டர் அபிமன்யு, அவங்களுக்கு ஒரு ஸ்பெஷல் டாக்டர் வேணும்.”
“அரேன்ஞ் பண்ணுங்க” – கனத்த குரலில் கூறினான்.
அவன் கேட்டுக் கொண்டது போலவே அவளுக்கு மனநல சிறப்பு மருத்துவர் ஏற்பாடு செய்யப்பட்டார். தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டது. தன் கண் எதிரே அரங்கேறிய பெற்றோரின் படுகொலைக்கு, இரண்டு வாரங்களுக்கு பிறகு அவள் கண்களிலிருந்து கண்ணீர் கசிந்தது. கூடவே இருந்த தோழனை இழந்ததுவிட்ட வலியை அப்போதுதான் மனம் உணரத் துவங்கியது. இல்லாத ஒருவனை எண்ணி மனக்கோட்டை கட்டிவிட்ட ஏமாற்றம் அவள் உயிரை குடித்தது. புரையோடு போன புண்ணை கீறிவிட்டால் சீழும் ரத்தமும் பொங்குமே, அப்படித்தான் இருந்தது அவள் உள்ளமும் அப்போது. துரோகம், வலி, ஏமாற்றம், இழப்பு, துக்கம் எல்லாம் அவளுக்குள் பொங்கிப் பொங்கி எழுந்தது. அவளால் தாங்க முடியவில்லை. மருத்துவரை கட்டிப் பிடித்துக் கொண்டு தேம்பி தேம்பி அழுதாள்.
வழக்கம் போல அவள் பார்வை படாத இடத்திலிருந்து அவளை பார்த்துக் கொண்டிருந்த அபிமன்யு, யார் என்றே தெரியாத மருத்துவரை அவள் அப்படி கட்டிப் பிடித்துக் கொண்டு கதறி அழுததைக் கண்டு கலங்கி போனான். அவளுடைய துக்கம் அவனை வெகுவாகப் பாதித்தது. பாறையை விழுங்கியது போல் மனம் கனத்து போய்விட, அன்று இரவு உறங்க முடியாமல் வெகு நேரம் நடந்துக் கொண்டே இருந்தவன் நள்ளிரவுக்கு மேல் அவள் அனுமதிக்கப்பட்டிருந்த அறை பக்கம் வந்தான்.
வெளியிலேயே நின்று அவள் முகத்தை மட்டும் பார்த்துவிட்டு போகலாம் என்று கண்ணாடி வழியாக அறைக்குள் பார்த்த போது படுக்கை காலியாக இருந்தது. சட்டென்று மனம் பதற உடனே உள்ளே நுழைந்தான். நொறுங்கி போன கண்ணாடி சிற்களாக வெறும் தரையில் கை ஒரு பக்கம் கால் ஒரு பக்கமாக சிதறிக் கிடந்தாள் அவள்.
மயங்கி விழுந்துவிட்டாளோ என்று எண்ணி இவன் கீழே குனிந்த போது, அவள் மூடியிருந்த கண்களை திறந்து அவனை பார்த்தாள். ஓரிரு நொடிகள் அந்த விழிகளின் வழியாக மனங்களுக்குள் ஏதேதோ பரிமாற்றம், அர்த்தமில்லா தேடல்.. அவள் இதழ்கள் மெல்ல பிரிந்தன.
“தூங்க முடியல.. வலிக்குது.. நெஞ்சுக்குள்ள.. ஆழத்துல.. ரொம்ப வலிக்குது” – அவன் கண்களில் கண்ணீர் கசிந்தது. உதடுகளை அழுந்த மூடிக் கொண்டு நன்றாக குனிந்து அவளை தூக்கினான். அவள் எதிர்க்கவில்லை. பின்னியிருந்த பார்வைகள் ஒன்றைவிட்டு ஒன்று விலகவில்லை. பூமாலை போல் தன் கையில் துவண்டுக் கிடந்தவளை மெத்தையில் படுக்க வைத்தான்.
“பேர் என்ன?” – மெல்லிய குரலில் கேட்டாள்.
அவன் தாடை இறுகியது. அவள் கண்களை சந்திக்க முடியாமல் பார்வையை தாழ்த்தியபடியே போர்வையை அவள் மீது இழுத்துவிட்டபடி, “அபிமன்யு” என்றான்.
“பேர் கூட நிஜம் இல்ல..” – கசப்புடன் புன்னகைத்தாள்.
சட்டென்று அவள் பார்வையை சந்தித்தவன், “பேர் மட்டும்தான் நிஜம் இல்ல. மற்ற எல்லாமே நிஜம்தான்” என்றான்.
அவள் மறுப்பாக தலையசைத்தாள். அவள் முகத்தை தன் கைகளுக்குள் அடக்கி, அவள் கண்களை ஆழ்ந்து நோக்கியவன், “அந்த பேர் மட்டும் தான் நானா? அந்த பேருக்குள்ள என்ன அடக்கிடுவியா நீ?” என்றான்.
அவனுடைய கேள்விக்கு பதில் சொல்லாமல், “உன்னோட பழகினவங்க, சாப்பிட்டவங்க, சிரிச்சவங்க, விளையாண்டவங்க எல்லாரையும் கொன்னுட்டியே! அவ்வளவு பெரிய அரக்கனா நீ!” என்று வேறு கேள்வி கேட்டாள்.
உள்ளுக்குள் வலித்தாலும் அதன் சாயல் சிறிதும் அவள் முகத்தில் இல்லை. “ஒரு அரக்கனை கொல்லனும்னா அவனைவிட பெரிய அரக்கனா நா மாறனும். அது என்னோட வேலை” என்றான்.
“இதைவிட மோசமான வேலை வேற எதுவுமே இருக்க முடியாது”
“நான் சாக்கடையை சுத்தம் பண்றவன்… மேல துர்நாற்றம் வீசத்தான் செய்யும். அதுக்கு பயந்து வேலையை விட்டுட்டா நாடு நாறிடும்…”
வேதனையுடன் அவள் கண்களை மூடிக் கொண்டாள்.
“மிருது, என்னை பாரு… லுக் அட் மீ” அவளை உலுக்கி எழுப்பியவன், “எல்லாம் முடிஞ்சிடிச்சு. இனி எந்த பிரச்சனையும் இல்ல. நமக்கு பின்னாடி யாரும் இல்ல. நாம யாருக்கும் பயப்பட வேண்டாம். நம்மள துரத்தி யாரும் வர மாட்டாங்க. இனி நீயும் நானும் மட்டும் தான். எனக்கு நீ உனக்கு நான். பழசையெல்லாம் மறந்துடு. புதுசா வாழ்க்கையை ஆரம்பிக்கலாம். சந்தோஷமா வாழலாம். நீ எப்படி சொல்றியோ அப்படி” என்று பேசிக் கொண்டே போனவன் அவள் முகத்தில் தெரிந்த மாற்றத்தைக் கண்டு பேச்சை நிறுத்தினான்.
கோபம் என்று ஒற்றை வார்த்தையில் சொல்லிவிட முடியாது. அவதாரமெடுத்த காளியின் முகத்தில் தெரியும் ஆக்ரோஷம் அவள் முகத்தில் அப்போது தெரிந்தது. முகமெல்லாம் செக்கச்செவேலென்று சிவந்து போய்விட, பற்களை கடித்துக் கொண்டு இரண்டு கைகளையும் அவன் நெஞ்சில் கொடுத்து அப்படியே அவனை பின்னால் தள்ளிவிட்டுவிட்டு எழுந்து நின்றாள்.
அவளிடமிருந்து அவ்வளவு வேகத்தை எதிர்பார்க்காத அபிமன்யு தடுமாறி காலை தரையில் ஊன்றினான்.
“எல்லாத்தையும் மறக்கனுமா! சந்தோஷமா வாழனுமா! எப்படி உன்னால இப்படி பேச முடியுது! உன் கைய பாரு.. பாரு.. எவ்வளவு பேரோட இரத்தம்! டேவிட் உனக்காகவே வாழ்ந்தான்! அவனை கூட கொன்னுட்டியே!” என்று மேல்மூச்சு வாங்கக் கத்தியவள், “உனக்கு மனசே இல்லையா!” என்றபடி பாய்ந்து அவன் சட்டையைப் பிடித்து உலுக்கி, முகமெல்லாம் கீறி, கன்னத்தில் அறைந்து பித்துப் பிடித்தவள் போல் நடந்துக் கொண்டாள்.
அவள் கைகளைப் பிடித்து அவளை கட்டுப்படுத்த முயன்றான் அவன்.
“என் அம்மாவை, அப்பாவை, என்னை எல்லாரையும் கொன்னுட்ட.. என் அர்ஜுனையும் கொன்னுட்ட.. நீ நிஜம் இல்ல.. விடு.. என்னை விட்டுடு..” – துள்ளி திமிறி அவனிடமிருந்து விலகினாள்.
அவன் செயலற்றவனாக அவளை பார்த்தான். இயலாமையின் வேதனை அவன் முகத்தில் தெரிந்தது.
“நீ உடைஞ்சு போயிருக்க. என்னால மட்டும் தான் உன்ன சரி செய்ய முடியும். உன்கூட என்னை இருக்க விடு. உனக்கு நா வேணும், எனக்கும் நீ வேணும்” – மன்றாடினான்.
“இல்ல, எனக்கு நீ வேண்டாம்” – மறுப்பாக தலையசைத்தாள் மிருதுளா. அவனுக்கு வலித்தது. அவளை எப்படி சமாதானம் செய்வது என்று புரியாமல், “மை ஃபீலிங்ஸ் ஆர் ட்ரூ. என்னால உன்ன விட முடியாது” என்றான் தவிப்புடன்.
“நா உன்னவிட்டு போறேன்” என்றாள் மிருதுளா உறுதியாக.
அவன் முகம் வெளிறிப் போனது. “நோ.. நோ.. யு காண்ட்.. விடமாட்டேன். மிருது ப்ளீஸ். நா உன்ன ப்ரொடக்ட் பண்ணனும். கேர் பண்ணனும்.. லவ் பண்ணனும்.. நீ இல்லாம என்னால வாழ முடியாது. ஐ காண்ட் லீவ் யு” – நெஞ்செல்லாம் வறண்டு போய் தவித்தான்.
அவன் அப்படி தவிக்கும் போது அவள் அடிவயிற்றை பிசைந்தது. நெஞ்சுக்குள் கூர்மையாக ஏதோ பாய்ந்தது. நேசித்துவிட்டாளே!
‘மி..ரு..து!’ – அம்மாவின் குரல் எங்கோ தூரத்தில் கேட்டது. மூளை சிதறி அவள் மண்ணில் விழுந்தது மனக்கண்ணில் தோன்றி மறைய, அவள் கண்களில் இரத்தக் கண்ணீர் வடிந்தது.
“என்னை பாதுகாக்க நீ தேவையில்லை. என்னால என்னை பார்த்துக்க முடியும். இப்போ சொன்னியே, உன்னோட ஃபீலிங்ஸ் எல்லாம் ட்ரூன்னு. அதுல ஒரு பர்சன்ட் உண்மை இருந்தாலும் நீ என்னை தடுக்கக் கூடாது. என் பின்னாடி வரக் கூடாது. நா எங்க இருக்கேன்னு தேடக் கூடாது” என்று அவன் கண்களை பார்த்து உறுதியாக கூறிவிட்டு அந்த அறை வாயிலை நோக்கி நடந்தாள்.
அதிர்ச்சியும் திகைப்புமாக ஓரிரு நொடிகள் அசையாமல் நின்றவன், அவள் கதவில் கை வைத்ததும், “போயிடு.. என்கிட்டேருந்து எவ்வளவு தூரம் ஓட முடியுமோ அவ்வளவு தூரம் ஓடிப் போயிடு. நா உன்ன தேடி வரமாட்டேன். உன் பின்னாடி அலைய மாட்டேன். ஆனா என்னைக்காவது ஒரு நாள் நீ என் முன்னாடி வந்த.. அதுக்கப்புறம் நீ செத்தாலும் என் கூட தான்” என்று கத்தினான். கோபம், ஆற்றாமை, இயலாமை எல்லாம் கலந்திருந்தது அவன் குரலில்.
ஒரு நொடி தயங்கி நின்ற மிருதுளா, திரும்பிப் பார்க்காமல் அங்கிருந்து வெளியேறினாள். சற்று நேரம் அசைவற்று இறுகி நின்ற அபிமன்யு, விருட்டென்று திரும்பி ஜன்னல் பக்கம் சென்றான். கீழே மிருதுளா வாயில் கேட்டை நோக்கி சென்றுக் கொண்டிருந்தாள். கிழக்கே வானம் வெளுக்க துவங்கியது. அவர்கள் வாழ்வு இருளில் மெல்ல மெல்ல மூழ்கிக் கொண்டிருந்தது.
நிழல் நிலவை தொடர்ந்துக் கொண்டே இருக்கும்…
Comments are closed here.