கனியமுதே! – 36
612
0
அத்தியாயம் – 36
மொடா குடி இல்லை என்றாலும் அடிக்கடி மது அருந்தும் பழக்கம் நாராயணனுக்கு உண்டு. உடன் இருந்தவரை தாமரை கண்டித்துக் கொண்டே இருந்தாள். இப்போது மைத்துனனோடு சண்டையிட்டுக் கொண்டு மனைவியை தள்ளி வைத்ததிலிருந்து அவருக்கு கொண்டாட்டம் ஆகிவிட்டது. கிடைத்தது சந்தர்ப்பம் என்று மதுக்கடையை குத்தகைக்கு எடுத்துக் கொண்டு அங்கேயே குடியிருக்க துவங்கிவிட்டார்.
வீட்டுக்குள் இருக்கும் தாமரைக்கு அவருடைய லீலைகள் எல்லாம் பெரிதாக தெரியவில்லை. கோபமாக போனவர் கோபம் தணிந்ததும் தானாக வருவார் என்று முதலில் எண்ணினாள். ஆனால் அவர் வரவில்லை. ஓரிரண்டு நாட்களுக்கு மேல் அவளால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. தம்பியின் மீது கோபம் வந்தது.
“இருந்தாலும் இவன் அப்படி புடிச்சு தள்ளி இருக்கக் கூடாது ம்மா” என்று தாயிடம் வருத்தப்பட்டாள். அடுத்த இரண்டு நாட்கள் கழித்து தானாகவே வீட்டுக்குச் சென்றாள்.
ஆனால் நாராயணன் உக்கிரமான கோபத்தில் இருந்தார். “அவன் என்னைய தள்ளி விடறான்! நீ பார்த்துகிட்டு நிக்கிற! இப்போ எதுக்குடி இங்க வந்த?” என்று மனைவியிடம் சண்டை பிடித்தார்.
அவர் சாதாரணமாக சண்டை போட்டால் அவருக்கு மேல் ஏறி தாமரை பேசுவாள். ஆனால் இப்போது அவர் குடித்துவிட்டு போதையில் ரகளை செய்கிறார். குழந்தையும் பயத்தில் ஒடுங்குகிறாள். என்ன செய்ய முடியும் அவளால். முடிந்த அளவுக்கு போராடி பார்த்துவிட்டு மீண்டும் தாய் வீட்டுக்கே வந்துவிட்டாள்.
எப்படி போனதென்றே தெரியாமல் நாட்கள் இறக்கை கட்டி கொண்டு பறந்துவிட்டது. அதை ஈடுகட்டுவது போல் இப்போது மலையமானின் பைக்கும் வேகமெடுத்து காற்றில் பறந்தது. அரைமணி நேரத்தில் அடைய வேண்டிய அந்த மதுக்கடையை பதினைந்தே நிமிடத்தில் அடைந்திருந்தான்.
மதுக்கடை வாயிலில் ஆட்கள் குழுமியிருக்க, ஒரே கூச்சலும் தள்ளுமுள்ளுமாக இருந்தது. மலையமான் வண்டியை நிறுத்தும் போதே நாராயணனின் குரலில் வந்து விழுந்த நாராசமாக வார்த்தைகள் அவன் செவியை தீண்டியது. அவமானத்துடன் பல்லை கடித்துக் கொண்டு கூட்டத்தை விளக்கி உள்ளே நுழைந்தான்.
நெற்றியில் வழியும் இரத்தத்தை பொருட்படுத்தாமல் கடைக்காரனிடம் எகிறி எகிறி சண்டையிட்டுக் கொண்டிருந்தார். மலையமானுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. கடைக்காரன் அமைதியாகத்தான் பேசிக் கொண்டிருந்தான். அவனுக்கு அடி எதுவும் படவில்லை. யாரோடு சண்டை… எப்படி இவருக்கு அடி பட்டது என்று எதுவும் புரியவில்லை அவனுக்கு.
அவரிடம் நெருங்கியதும், “இங்க என்ன பிரச்சனை பண்ணிக்கிட்டு இருக்க நீ?” என்று பெரிதாக ஒரு அதட்டுப் போடு அவர் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தான்.
“நீ எதுக்குடா இங்க வந்த?” என்று இப்போது அவருடைய கோபம் இவன் பக்கம் திரும்பியது.
“காலையிலிருந்து பிரச்சனை பண்றாருண்ணே! வரும் போதே அடிபட்டு இரத்தத்தோடு தான் வந்தாரு. வண்டிலிருந்து விழுந்திருப்பாரு போல” என்று கடைக்காரன் விளக்கம் கொடுத்தான்.
“நீ பார்த்தியாடா? நா வண்டிலேருந்து விழுந்ததை நீ பார்த்தியா?” மீண்டும் அவர் கடைக்காரனிடம் சண்டைக்கு போக, மலையமான் அவரை படாதபாடுபட்டு தன் வண்டியில் ஏற்றி கொண்டு வீட்டுக்கு கிளம்பினான்.
வீட்டுக்கு வந்து சேரும்வரை அவர் பேசிய பேச்சுக்களையெல்லாம் காது கொடுத்து கேட்க முடியாது. அப்படியே வண்டியோடு வயலுக்குள் தள்ளிவிட்டுவிடலாமா என்றிருந்தது அவனுக்கு. பல்லை கடித்து பொறுத்து கொண்டான்.
சட்டையெல்லாம் ரத்தமாக வந்து இறங்கிய கணவனை பார்த்ததும் பதறிப் போனாள் தாமரை.
“நடிக்காதடி… உன் ட்ராமாவெல்லாம் எனக்கு தெரியும்” என்று அவளை அலட்சியப்படுத்தினார் நாராயணன்.
பெருங்குரலெடுத்து அழுத தமக்கையை, “அவருக்கு ஒன்னும் இல்ல க்கா. லேசான அடித்தான்… பேசாம இரு” என்று மலையமான் அதட்டினான்.
அலமேலு வழக்கம் போல சுச்சுவேஷனுக்கு தகுந்தாற் போல் லிரிக்ஸ் போட்டு ஒப்பாரியை துவங்கினார்.
அவரை ஒரு பக்கம் அதட்டி அமர வைத்துவிட்டு, மாமனை வலுக்கட்டாயமாக கிணற்றங்கரைக்கு இழுத்துச் சென்று குளிக்க வைத்தான். தாமரை அவருக்கு உடை மாற்றி காயத்தை சுத்தம் செய்து மருந்து போட்டாள்.
“ஆசுபத்திரிக்கு கூட்டிட்டு போகாம இப்படி வீட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டியேடா” என்று தம்பியிடம் குறை பட்டாள்.
“ஆமா…மாம்.. இந்த போதையோட ஆசுபத்திருக்கு கூட்டிட்டு போனா ரொம்ப அழகா இருக்கும்” என்று அவளிடம் கடுப்படித்துவிட்டு, நனைந்துவிட்ட தன்னுடைய சட்டையை கழட்டிப் போட்டுவிட்டு துண்டை எடுத்துக் கொண்டு குளிக்க போனான் மலையமான்.
குளித்துவிட்டு வரும் போது கனிமொழி கூடத்தில் நின்றுக் கொண்டிருந்தாள்.
“தங்கச்சி… நீ எப்படிம்மா இங்க! இதுங்க எல்லாம் பிசாசு கூட்டம். என்னைவே அடிச்சு துரத்தி உட்டுடுச்சுங்க. நீ தங்கமான பொண்ணு. உன்ன போயி இந்த கூட்டத்துக்கிட்ட மாட்டிவுட்டுட்டனே! அதுதான் எனக்கு ரொம்ப கவல” என்று கனிமொழிக்கு பாடம் எடுத்துக் கொண்டிருந்தார் நாராயணன்.
மலையமானுக்கு பகீரென்றிருந்தது. ‘அவளுக்கே இப்ப தான் புத்தி வந்துருக்கு! இந்த ஆளு அதையும் கெடுத்துடுவாரு போலருக்கே! விட்டா… அவ கையை புடிச்சு இழுத்துகிட்டு போயி வீட்டுல விட்டுட்டு வந்துடுவாரு போல!” என்று எண்ணிக் கொண்டே வேக நடைபோட்டு அவர்களை நெருங்கியவன், மனைவியை பார்த்து, “நீ எதுக்கு இங்க நிக்கிற? காலையில முடியாம தானே இருந்த! போயி படு” என்று அதட்டினான்.
உடனே பெரிதாக சிரித்தார் நாராயணன். “வந்துட்டாய்யா நல்லவன்! இத்தனை நாளா எங்கப்பா போயிருந்த? அன்னைக்கு தோப்புல வேலக்காரனுவலுக்கு முன்னாடி அந்த புள்ளைய அடிச்சு துரத்துன! இப்ப என்ன அக்கறை சக்கரை பொங்கல் கணக்கா பொங்கிகிட்டு வருது!” என்றார் முழு சகுனியாக மாறி.
வெலவெலத்துப் போனவனின் பார்வை அனிச்சையாக மனைவியின் பக்கம் பாய்ந்தது. முகம் செத்துப் போய்விட, யாரையும் ஏறிட்டு பார்க்காமல் கீழே குனிந்துக் கொண்டாள் அவள்.
“வாயை வச்சுக்கிட்டு சும்மா இருக்க மாட்டிங்களா நீங்க?” என்று கணவனிடம் பாய்ந்தாள் தாமரை.
“ஐயோ! அவருக்கு கொஞ்சம் எலும்பிச்சம் பழத்த புழிஞ்சு குடுடி” என்று திண்ணையிலிருந்து கத்தினார் அலமேலு.
“அத உங்க அம்மா வாயிலேயே கொண்ட ஊத்துடி… அப்படியாது அந்த ஒப்பாரி ஓயுதான்னு பார்ப்போம்” என்று அதற்கும் பதில் சொன்னார் நாராயணன்.
பொந்திலிருந்து எட்டிப்பார்க்கும் எலி போல திண்ணையிலிருந்து தலையை மட்டும் நீட்டி உள்ளே எட்டிப் பார்த்தார் அலமேலு. அதை பார்த்ததும் கனிமொழிக்கு தன் கவலை மறந்து சிரிப்பு வந்தது.
தாமரை எலுமிச்சை சாறில் உப்பும் தண்ணீரும் கலந்து இஞ்சி துண்டை நறுக்கிப் போட்டு கொண்டு வந்து கொடுத்தாள்.
குளித்ததில் பாதி போதை தெளிந்துவிட்டது. இதையும் குடித்தால் மிச்சம் மீதி இருக்கும் போதையும் தெளிந்துவிடும் என்று எண்ணி தெளிவாக அதை குடிக்க மறுத்தார் நாராயணன்.
“யோவ் மாமா, ஒழுங்கா குடிச்சிடு… இல்லா… மூக்கை பிடிச்சுக்கிட்டு வாயில ஊத்திவிட்டுடுவேன்” என்றான் மலையமான்.
அவர் அவனை முறைத்தார். பிறகு, “பார்த்தியாம்மா… இவன் சரியான வம்புணி… என்கிட்டையே இப்படி பேசுறானே! உன்ன என்னென்ன பண்ணியிருப்பான்!” என்றார்.
‘இந்த ஆளு இன்னைக்கு தேரை இழுத்து நடுத்தெருவுல விடாம ஓயமாட்டாரு போல!’ என்று .தோன்றியது அவனுக்கு.
“எப்படியோ போன்னு விடாம உன்னைய ஒயின் ஷாப்புக்கு வந்து கூட்டிட்டு வந்தேன் பாரு… நீ பேசுவ”
“நா கூப்பிட்டேனா உன்ன? நீதான் என்னைய அடிச்சு விரட்டிட்டியே! அப்புறம் எதுக்குடா வந்த?” என்று அமர்ந்திருந்த சேரிலிருந்து ஆவேசத்துடன் எழுந்தார்.
மீண்டும் சண்டை வர போகிறது என்று தாமரையும் அலமேலுவும் பதறிக்கொண்டு அவர்களுக்கு நடுவில் வர எத்தனிக்க, கனிமொழி முந்திக் கொண்டு, “உட்காருங்க அண்ணா” என்றாள்.
“அண்ணனா! என்னையாவா சொன்ன!” என்று நாராயணன் வாய்விட்டே கேட்டார்.
“கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நீங்க என்னை தங்கச்சின்னு சொன்னிங்கள்ல… நா அண்ணன்னு சொல்ல கூடாதா?” என்றாள் கனிமொழி.
அவளுடைய பேச்சில் அவருடைய கோப உணர்வுகள் அன்பின் பக்கம் திசை திரும்பியது.
“ஆமாம்மா… ரொம்ப கரெக்டு… நீ எனக்கு தங்கச்சி.. நா உனக்கு அண்ணன்… சரிதானே?” என்றார்.
“சரிதான்” என்று புன்னகையுடன் கூறியவள், “உட்காருங்க” என்று மீண்டும் வலியுறுத்தினாள்.
“நீ சொல்லிட்டல்ல தங்கச்சி… இதோ… உட்கார்ந்துட்டேன்” என்று உடனே அமர்ந்தார்.
தாமரையின் கையிலிருந்த லெமன் ஜூஸை வாங்கி அவரிடம் நீட்டி, “குடிங்க ண்ணா” என்றாள்.
அவருக்கு விருப்பம் இல்லை… “இது மட்டும் வேண்டாம்மா” என்றான் பாவமாக. போதை முக்கியமல்லவா!
கனிமொழி தாமரையை பார்த்தாள். ‘விடாத… குடிக்க சொல்லு’ என்று கண்களாலேயே தம்பி மனைவிக்கு இன்ஸ்டரெக்ஷன் கொடுத்தாள் தாமரை.
மலையமானுக்கு ஆச்சரியமாக இருந்தது. ‘இதுங்க ரெண்டுக்கும் எப்ப கனெக்ஷன் ஆச்சு! இவ வந்து ஒரு நாள்தானே ஆகுது! அதுக்குள்ள எல்லாரையும் கரெண்ட் பண்ணிட்டா!’ என்று எண்ணினான்.
நாத்தனார் சொன்னபடியே கனிமொழி நாராயணனை மேலும் வற்புறுத்த அவர் “என்னம்மா நீ” என்று முனகி கொண்டே அதை வாங்கி குடித்தார்.
அதற்கு பிறகு அரை மணிநேரம் வெறும் எம்ஜிஆர் பாட்டாக பாடி தள்ளியவர் அப்படியே உறங்கிப் போனார்.
மலையமான் பண்ணைக்கு கிளம்பி வந்தான். ஒரே நாளில் வீட்டில் உள்ளவர்களை எல்லாம் தலைகீழாக மாற்றிவிட்டாளே என்று எண்ணியவனின் மனமும் அப்படி மாறியிருந்தது என்பது தான் உண்மை. பச்சையாக சொல்ல வேண்டும் என்றால் நாராயணன் சொன்னது போல அவன் மனதில் அவள் மீது பாசம் சர்க்கரை பொங்கலாக பொங்கத்தான் செய்தது. அதை வெளியே சொன்னால் முதலில் நாராயணன் காரி துப்புவார். பிறகு ஊரில் உள்ளவர்கள்…
“ண்ணே! மாட்டையெல்லாம் அவுத்து கட்டுங்க… ஒரே இடத்துல கட்டிக் கெடந்தா மடி செத்துப் போகும்” என்று வேலையாட்களிடம் பேச்சு கொடுத்து சிந்தனையை வேறு பக்கம் திருப்ப முயன்றான்.
“அதெல்லாம் அவுத்து கட்டியாச்சு தம்பி. செவலைக்கு மடிப்புண்ணு… நீதான் போயி மருந்து வாங்கியாரானும்” – அவர் அவனுக்கு வேலை சொன்னார்.
‘அவள பத்தி யோசிச்சாலே நமக்கு மூளை மழுங்கி போயிடும்’ என்று எண்ணிக் கொண்டு, “சரிண்ணே… சரிண்ணே… வாங்கிட்டு வந்துடறேன்.. நீ வேலையை பாரு” என்று அங்கிருந்து நழுவினான்.
‘இப்படி உடனே மாறி குட்டிக்கரணம் போடுற இந்த மானங்கெட்ட குரங்கு மனசுக்கு கோவம் ஒரு கேடு… ரோஷம் ஒரு கேடு…!’ – தன்னைத்தானே அசிங்கமாக திட்டிக் கொண்டு மருந்து கடைக்கு கிளம்பினான்.
Comments are closed here.