கனியமுதே! – 37
622
0
அத்தியாயம் – 37
நாராயணனுக்கு காய்ச்சல் பிடித்துக் கொண்டது. அவரை சிரமப்பட்டு எழுப்பி அமரவைத்து, “ஒழுங்கா இருக்காம இப்படி போயி கீழ விழுந்து மண்டையை உடைச்சுக்கிட்டு வந்தா காய்ச்சல் வராம என்ன பண்ணும்?” என்று புலம்பிக் கொண்டே கஞ்சியை டம்ளரில் ஊற்றிக் கொடுத்தாள் தாமரை.
“அடியேய்… மண்டையை உடைச்சுக்கிட்டு வந்தவன ஆசுபத்திரிக்கு கூட்டிட்டு போகாம, கிணத்துக்கரையில உக்கார வச்சு கொடம் கொடமா தண்ணியை தலையில ஊத்துனது யாருடி? அதோட விட்டியா! எழும்பிச்சம் பழ ஜூஸு வேற! என்னைய கொல்ல குடும்பத்தோட சேர்ந்து சதி பண்ணிட்டடி நீ…” – உடலில் தெம்பு இல்லை என்றாலும் நா அடங்க மறுத்தது அவருக்கு.
“ஏங்க! என்னங்க பேச்சு இது? வாய கழுவுங்க முதல்ல”
“போடி போடி… எல்லாம் எனக்கு தெரியும். உன்ன சொல்லி தப்பில்ல. உன் குடும்பம் அப்படி… உன் தம்பிக்கு ஒரு தங்கமான பொண்ண கட்டிவச்சேன். அவன் என்ன பண்ணினான்!” என்று ஆரம்பித்தவர் மலையமானை பிரித்து மேய்ந்தார்.
தாமரை அரண்டு போனாள். “எம்மா! இந்த ஆளு ஒரு முடிவோடுதான் இருக்காரு. இதுக்கு மேல அவரை இங்க வச்சுக்கிட்டு இருந்தேன்னா அந்த கனி புள்ள மண்டையை கழுவி குடும்பத்தை கலச்சுப்புடுவாரு. நா அவரை அழைச்சுக்கிட்டு என் வீட்டுக்கு போறேன்” என்றாள் தாயிடம்.
அலமேலுவுக்கும் அதுவே சரியென்று பட, ஒருவழியாக நாராயணனின் குடும்பம் தங்கள் கூட்டுக்கு இடம் பெயர்ந்தது. அவர் உடல்நிலை சீர்படும் வரை மலையமான் தினமும் தமக்கையின் வீட்டுக்கு சென்று உதவிகள் செய்து வந்தான்.
அப்படியே பத்து நாட்கள் கழிந்தது. தாமரை அதிரசமும் பணியாரமும் செய்து எடுத்துக் கொண்டு, புடவை பூ பழங்களோடு கண்ணாடி வளையல்களையும் வாங்கி கொண்டு தம்பி மனைவிக்கு செய்ய வேண்டிய சீரோடு தாய் வீட்டுக்கு வந்தாள்.
வாங்கி வந்ததையெல்லாம் தாம்பூலத்தில் வைத்து அவள் கனிமொழியிடம் கொடுத்த போது அவளால் கண்ணீரை கட்டுப் படுத்தவே முடியவில்லை.
“எதுக்கு கண்ணு அழுவுற! என்ன கண்ணு உனக்கு குறை!” என்று அலமேலு மருமகளிடம் உயிரைவிட்டார்.
“ஒன்னும் இல்ல அத்த… ஒன்னும் இல்ல… குறையெல்லாம் ஒண்ணுமே இல்ல… இது சந்தோஷம்… ” என்று மாமியாருக்கு சமாதானம் கூறிவிட்டு, “தேங்க்ஸ் அண்ணி” என்றாள் தாமரைக்கு.
தாமரைக்கு ஒன்றும் புரியவில்லை. ‘அப்படி என்ன நாம ஊரில் இல்லாததை செஞ்சுட்டோம்! இந்த பழமும் பூவும் ஆயிரம் ரூபாய் வருமா! இதுக்கு போயி எதுக்கு இந்த அழுவு அழுவுறா!’ – தம்பி மனைவியை குழப்பத்துடன் பார்த்தாலும் அவள் எதுவும் சொல்லவில்லை.
அதே நேரம் தோப்பிலிருந்து வீடு திரும்பிய மலையமான் மனைவியின் கலங்கிய முகத்தை பார்த்துவிட்டு, “என்ன?” என்றான் பொதுவாக.
யாரும் பதில் சொல்லவில்லை. கனிமொழி தலை நிமிராமல் மெளனமாக அமர்ந்திருக்க அலமேலுவும் தாமரையும் என்ன சொல்வது என்று புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
“என்ன க்கா?” என்று அக்காவை குறிப்பிட்டு கேட்டான்.”ஒன்னும் இல்ல சும்மா தான்” என்று அவள் உலர, “என்னம்மா?” என்றான் இப்போது தாயிடம் சற்று அதட்டலாக.
“அட ஒன்னும் இல்லடா… தாமரை இதை கொண்டு வந்து குடுத்தா… புள்ளைக்கு எப்படி இருந்துச்சோ… கண்ணால தண்ணி கொட்டிடுச்சு” என்றார் கொஞ்சம் மருமகளின் மனநிலை புரிந்தவராக.
மலையமான் மனைவியை ஊன்றி பார்த்தான். அவள் உதட்டை அழுந்த மூடிக் கொண்டு சிலை போல் அமர்ந்திருந்தாள்.
அநேக ஆண்களை போல் அவனுக்கும் இதெல்லாம் ஒன்றும் புரியாது… பெண்ணாக அவள் மனம் இதற்கெல்லாம் எவ்வளவு ஏங்கி தவித்ததென்று அவளுக்கு மட்டும் தான் தெரியும். இன்னமும் கூட அவன் அவளிடம் இணக்கமான பேசவில்லை. கணவன் என்கிற முறையில் அவளுக்கு தோள் கொடுக்கவில்லை. துன்பங்களை பகிர்ந்து கொள்ளவில்லை… வீட்டுக்கு வந்த விருந்தாளியை கவனிப்பது போல் எட்டி நின்று ஓரிரு வார்த்தைகள் பேசுவதோடு சரி… ஆனாலும் அவளுக்கு அவன் பக்கத்தில் இருக்க வேண்டும் தோன்றுகிறது… தினமும் அவன் முகத்தை பார்க்க வேண்டும் தோன்றுகிறது…
****************
அன்று ஊர் கோவிலில் கனிமொழியின் வளைகாப்பு சிறப்பாக நடந்தது. சொந்தபந்தங்கள் அனைவரும் அவளை ஆசிர்வதிக்க வந்திருந்தார்கள். புன்னகை மாறா முகத்தோடு தன் பெரிய வயிற்றை பட்டுப்புடவையில் மறைத்துக் கொண்டு இரட்டை உயிராக மணைக்கு வரும் மனைவியை தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தான் மலையமான். மனம் நிறைந்து தளும்பியது.
அவளை சேரில் அமரவைத்து கழுத்தில் மாலை அணிவித்து, கன்னத்தில் சந்தனம் தடவி கை நிறைய கலர் கலராக கண்ணாடி வளையல்களை அடுக்கினார்கள். இந்த சொர்கத்தை வேண்டாம் என்று தள்ளி வைத்தோமோ என்றிருந்தது அவனுக்கு. அவள் பெரிய கருவிழிகள் ஒரு முறை தன்னை தீண்டாதா என்று எண்ணினான். அடுத்த நொடியே அவள் நிமிர்ந்து பார்த்தாள். சட்டென்று அவன் கண்கள் பிரகாசமானது. பார்வைக்கு புலப்படா மின்காந்த அலை அவர்களுக்கிடையில் தடம் போட்டுள்ளதோ! கனிமொழியிடம் யாரோ எதையோ சொல்ல அவர்களுக்கிடையே நீண்டிருந்த பார்வை நூல் அறுபட்டது. முகம் வாட மீண்டும் அவள் பார்வைக்காக காத்திருந்தான் அவன்.
வந்திருந்த பெரியவர்களெல்லாம் பொட்டு பூ வைத்து கனிமொழியை வாழ்த்தினார்கள். விருந்தும் காளிப்புமாக விழா சிறப்பாக முடிந்து, வந்திருந்த விருந்தினர்களெல்லாம் கோவிலிலிருந்து புறப்பட்டுவிட, குடும்பத்தினர் மட்டும் எஞ்சி இருந்தார்கள்.
இப்போது கனிமொழியை எங்கு அழைத்துச் செல்வது என்பதில் எல்லோருக்கும் பெரிய குழப்பம். பொதுவாக வளைகாப்பு முடிந்ததும் பெண்ணை பிறந்த வீட்டுக்கு அழைத்துச் செல்வது தான் வழக்கம். ஆனால் கனிமொழி இப்போதுதான் பிரச்சனைகளை எல்லாம் ஒதுக்கிவிட்டு கணவன் வீட்டுக்கு வந்தாள். அதற்குள் மீண்டும் பிறந்த வீட்டுக்கு போகும் சூழல். என்ன முடிவெடுப்பது என்று யாருக்கும் புரியவில்லை.
மலையமானுக்கு ஒரே பதட்டம். சம்பிரதாயத்துக்கு கூட அவனிடம் யாரும் கருத்துக் கேட்கவில்லை. எல்லோருமே கனிமொழிக்கு எது விருப்பமோ அதையே செய்யலாம் என்று கூறிவிட்டார்கள்.
இப்போது அவள் பிறந்த வீட்டுக்கு செல்கிறேன் என்று முடிவெடுத்தால் என்ன செய்வது! அவளிடம் மறுப்பு கூற கூட தனக்கு உரிமை இல்லாதது போல் தோன்றியது அவனுக்கு. காலையிலிருந்து இருந்த மகிழ்ச்சி பூரிப்பு எல்லாம் இப்போது பெரும் பதட்டமாக மாறிவிட்டது. பேசாமல் கோவிலுக்கு வெளியே வந்து ஆலமரத்தடியில் அமர்ந்தான்.
‘போய்விடுவாளோ! போய் விடுவாளோ!’ என்று ஒரே தவிப்பாக இருந்தது. இதை சொன்னால் யார் நம்புவார்கள்! முதலில் யாரிடம் சொல்ல முடியும்! கவலையோடு தனித்து அமர்ந்திருந்தான்.
சற்று நேரத்தில் எல்லோரும் வெளியே வந்தார்கள். “நல்ல நேரம் முடியிறதுக்குள்ள கிளம்பனும் மாப்ள” என்று கூறிய அங்கப்பன், “மாப்பிள்ளைக்கிட்ட சொல்லிட்டு கிளம்பும்மா” என்றார் மகளிடம்.
“சரிப்பா” என்று அவள் தயங்கி நிற்க எல்லோரும் அவர்களை தனிமையில் விட்டுவிட்டு, கொண்டுவந்த பொருட்கள், பாத்திரங்கள் என்று அனைத்தையும் சரிபார்த்து வேனிலும் காரிலும் ஏற்றும் வேலையில் மும்மரமானார்கள்.
கனிமொழி அவனை நிமிர்ந்து பார்க்கவில்லை. தரையை பார்த்தபடியே, “போயிட்டு வரேன்” என்றாள். நெஞ்சுக் கூட்டுக்குள் பிரளயமே வந்தது போல் இருந்தது அவனுக்கு.
‘அவளாத்தானே வந்தா… அவபாட்டுக்கு வீட்ல ஒரு ஓரமா இருந்துட்டு போகட்டும்…’ என்று அலட்சியமாக எண்ணிய எண்ணம் இப்போது அவனை பொசுக்கியது.
‘போகாதே’ என்று சொல்ல முடியாது. ‘போயிட்டு வா’ என்று சொல்ல முடியவில்லை… பசை போட்டது போல் உதடுகள் ஒட்டிக்கொள்ள அவள் முகத்தை பார்த்தபடியே நின்றான். வெகுநேரம் அவனிடமிருந்து பதில் வராததால் அவள் நிமிர்ந்து பார்த்தாள். உடனே அவன் பார்வையை திருப்பிக் கொண்டான்.
அவன் உடனே அப்படி முகத்தை திருப்பிக் கொண்டதில் காயப்பட்டு, “உங்களுக்கு பிடிக்கலைன்னா திரும்பி வரல” என்றாள் மெல்ல. அவளால் முடியாது தான்… ஆனால் சொல்லிவிட்டாள்.
வெடுக்கென்று அவள் பக்கம் திரும்பியவன் “என்ன!” என்றான் சீற்றத்துடன். உள்ளுக்குள் ஏதேதோ பயம்… கெட்ட கெட்ட எண்ணங்கள். வயிறு நிறைய பிள்ளையை சுமந்துக் கொண்டு பிரசவத்திற்கு பிறந்த வீட்டுக்கு செல்லும் பெண் சொல்லும் வார்த்தையா இது! மனம் பதறியது… உணர்வுகளை வெளிக்காட்டாமல் இருக்க பல்லை கடித்துக் கொண்டான்.
ஆனால் கனிமொழிக்கு அப்படி கற்சிலை போல் நிற்க முடியவில்லை. உடைந்து விடுவோம் என்று அஞ்சியவளாக அங்கிருந்து நகர முற்பட்டாள்.
“இப்பதானே இங்க வந்த?” – அவசரமாக கேட்டான். அவள் நின்று அவனை திரும்பிப் பார்த்தாள்.
“உங்களுக்கு தான் பிடிக்கலையே?” என்று அவள் பதில் கேள்வி கேட்க, “முதல்ல எனக்கு பிடிச்சுதான் வந்தியா?” என்றான் அவன் எரிச்சலுடன்.
நெருப்பாக சுட்ட அந்த கேள்வியை ஜீரணிக்க அவன் பார்வையை தவிர்த்து உதட்டை கடித்துக் கொண்டவள், “இனி வரல” என்று மெல்ல முணுமுணுத்தாள். இப்போது சூடுபட்டது அவன். இரண்டு கைகளாலும் தலையை அழுந்த கோதினான். ஏதோ தப்பு நடக்க போவது போல் ஒரே பீதி…
உண்மையில் கனிமொழிக்கு பிறந்த வீட்டுக்கு செல்ல விருப்பம் இல்லை. அதை அவள் சொன்னதும் அனைவரும் ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் வளைகாப்பு போட்டதால் சம்பிரதாயத்துக்கு ஒரு நாள் மட்டும் பிறந்த வீட்டில் இருந்துவிட்டு மறுநாள் மீண்டும் கணவன் வீட்டில் கொண்டு வந்து விடுவதாக முடிவு செய்தார்கள். ஆனால் அந்த விபரம் மலையமானுக்கு தெரியவில்லை.
எல்லா பெண்களையும் போல இவளும் பிரசவத்திற்கு பிறந்த வீட்டுக்கு செல்கிறாள் என்று தான் அவன் எண்ணினான். அப்படி செல்லும் பெண் திரும்ப வரமாட்டேன் என்று வாய்க்கு வாய் சொல்லிக் கொண்டிருந்தால் அவனுக்கு பீதி கிளம்புவது இயல்புதானே!
இயல்பான பேச்சு வார்த்தைகள் இல்லாமல் இருந்ததால் நினைப்பதை பேச வெகு தடுமாற்றமாக இருந்தது அவனுக்கு. இருந்தாலும் சொல்லிவிட்டான். “இப்ப எதுக்கு அங்க போகணும்? இங்க என்ன பிரச்னை?” – அதற்கு மேல் இறங்க முடியவில்லை.
பதில் சொல்ல முடியாமல் தொண்டையை அடைத்தது அவளுக்கு. “இன்னைக்கு மட்டும் தான்” என்றாள் பிசிறுதட்டிய குரலில்.
அவன் வியப்புடன் அவளை பார்த்தான். “இன்னைக்கு மட்டும் தானா! இன்னைக்கு ஒருநாள் மட்டும் தானா!” என்றான் ஆச்சர்யமாக.
அவள் மேலும் கீழும் தலையசைத்தாள். நீண்ட பெருமூச்சு நிம்மதியாக வெளிப்பட்டது அவனிடமிருந்து. பெரிய ரிலீஃப்… ‘அப்பாடா…’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டான்.
அதன் பிறகுதான் அவன் முகத்தில் இறுக்கம் தளர்ந்தது. “காலையிலேயே வந்துடுவியா?” என்றான். அதற்கும் அவள் மேலும் கீழும் தலையசைத்தாள். ‘வாய தெறந்து சொல்ல மாட்டேங்கிறாளே!’ என்று இருந்தாலும் நாளைக்கே அவள் வந்துவிடுவாள் என்பது நிம்மதியை கொடுக்க, “சரி வா” என்று அவளை அழைத்துச் சென்று காரில் ஏற்றிவிட்டான்.
Comments are closed here.