கனியமுதே! – 38
643
0
அத்தியாயம் – 38
பதினோரு மணிக்கு மேல் தான் காலை உணவுக்கு வீட்டுக்கு வந்தான் மலையமான். வாசலில் நெல்லை கொட்டி காயவைத்து, காக்கா விரட்டிக் கொண்டிருந்தார் அலமேலு. அவர் அப்படி சாவதானமாக அமர்ந்திருப்பதிலேயே தெரிந்தது கனிமொழி வீட்டில் இல்லை என்று. எப்படியும் இந்நேரம் வீட்டுக்கு வந்திருப்பாள் என்கிற எதிர்பார்ப்புடன் வந்தவனுக்கு பெருத்த ஏமாற்றம். பெருமூச்சுடன் மரத்தடியில் வண்டியை நிறுத்திவிட்டு இறங்கி வந்தான்.
“என்னம்மா… காலையிலேயே நெல்லை காயவச்சுக்கிட்டு உட்கார்ந்துட்ட? சாப்பாடு ஒன்னும் செய்யலையா?” என்று சிடுசிடுத்தான்.
வந்ததும் வராததுமாக எதற்கு இப்படி கத்துகிறான் என்று புரியாமல், “பழைய சோறு இருக்குப்பா… கருவாடு வறுத்து வச்சிருக்கேன். கைய கால கழுவிட்டு வா, சாப்பிடலாம்” என்றபடி எழுந்தார்.
அவனுக்கு எரிச்சலாக வந்தது… வெறித்துக் கிடைக்கும் அந்த வீட்டுக்குள் செல்ல பிடிக்காமல் வீட்டை சுற்றிக் கொண்டு கிணற்றங்கரைக்கு சென்றான். சட்டைப் பையில் இருந்து அலைபேசி அழைத்தது.
‘இது ஒன்னு… ஒரு வேலை செய்யவிடாம அடிச்சுக்கிட்டே கெடக்கும்’ என்று அலட்சியமாக நினைத்தவன், சட்டென்று நின்றான்.
‘ஒருவேள அவளா இருக்குமோ!’ – உள்மனம் உந்தியது. உடனே அழைப்பை ஏற்று காதுக்கு கொடுத்தான். அழைத்தது அவள் அல்ல… ஆனாலும் அவன் முகம் மலர்ந்தது.
“சொல்லுங்க மாமா” என்றான். ஆம், அங்கப்பன் தான் அழைத்திருந்தார்.
கீர்த்திக்கு பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு அனைவரும் சென்றுவிட்டதால் வீட்டில் கனிமொழி மட்டும் தனியாக இருப்பதாகவும், மலையமான் வந்து அவளை வீட்டுக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் கூறினார்.
கைகால் கழுவ சென்றவன் குளித்துவிட்டு வந்து வேட்டி சட்டை மாற்றினான்.
“என்னப்பா, வெளியே கிளம்புற போல தெரியுது! சாப்பிடலையா?” என்றார் அலமேலு. அவரிடம் விபரம் கூறிவிட்டு வண்டியை எடுத்தவன் அடுத்த சில நிமிடங்களில் மாமனார் வீட்டில் வந்து நின்றான்.
கதவு திறந்தே இருந்தது. வீட்டுக்குள் எந்த சத்தமும் கேட்கவில்லை. தயக்கத்துடன் வீட்டுக்குள் நுழைந்தான். ஹாலில் கிடந்த சோபாவில், இரண்டு கன்னங்களிலும் கையை வைத்துக் கொண்டு சோகமாக அமர்ந்திருந்தாள் கனிமொழி.
அவளை அந்த நிலையில் பார்த்ததும் சற்று நேரம் அப்படியே நின்றுவிட்டான் மலையமான். அவளிடம் அசைவே இல்லை. ஏதோ நினைவில் சிலை போல் அமர்ந்திருந்தாள்.
தன்னுடைய வரவை அவள் உணரவே இல்லை என்பதை புரிந்துக் கொண்டவன் மெளனமாக அவளுக்கு அருகில் சென்று அமர்ந்தான்.
சோபா உள்வாங்கி இன்னொருவரின் இருப்பை அவளுக்கு உணர்த்த மெல்ல திரும்பிப் பார்த்தாள்.
“வாங்க… எப்போ வந்திங்க?” என்றாள் மெல்லிய குரலில். முகம் வெளிறிப் போயிருந்தது.
பயத்தில் இருக்கிறாள் என்பதை புரிந்துக் கொண்டவன், “என்ன ஆச்சு? ஏன் ஒரு மாதிரி இருக்க?” என்று அவள் கையை பிடித்துக் கொண்டான்.
அவள் தலையை குறுக்கும் நெடுக்குமாக ஆட்டி ‘ஒன்றும் இல்லை’ என்றாள். உலர்ந்து போயிருந்த உதட்டை ஈரப்படுத்திக் கொண்டு அவள் எச்சில் விழுங்கிய விதமே அவள் சொல்வது உண்மை அல்ல என்று கூறியது.
“என்ன கனி?” என்றான் மலையமான் கனிவோடு. வெகு நாட்களுக்குப் பிறகு பழையபடி ஒலித்த அவனுடைய நெருக்கமான குரல் அவளை என்னவோ செய்தது. கண்களை மூடிக் கொண்டாள். பிடித்திருந்த அவள் கைகளில் அழுந்த முத்தமிட்டான் அவன். விழி திறந்து அவன் கண்ணோடு கண் கலந்தாள் அவள்.
“என்ன பயம்? நாந்தான் வந்துட்டேன்ல” – அவளை தன் நெஞ்சோடு சாய்த்துக் கொண்டான். அவளும் கோழி குஞ்சு போல் அவனோடு அணைந்து கொண்டாள்.
அன்று காலை கீர்த்தி பட்டபாடும்… அலறிய அலறலும் அவளை நிலைகுலைய செய்துவிட்டது. இதற்குத்தான் ஒரே வீட்டில் இரண்டு கர்பிணி பெண்கள் ஒன்றாக இருக்கக் கூடாது என்று அந்த காலத்தில் சொல்லி வைத்தார்களோ என்னவோ! அவளால் அந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியவில்லை.
மனைவியின் பயத்தை துல்லியமாக உணர்ந்த மலையமான், வாய்மொழி ஏதுமில்லாமல், முடியை கோதி… தோளை தடவி… முதுகை வருடி அவளை தேற்றினான். சற்று நேரத்தில் அவன் சட்டை ஈரமானது. ‘அழுகிறாளா!’ – சுரீரென்று கூர்மையாக அவனுக்குள் ஏதோ பாய்வது போலிருந்தது.
சட்டென்று அவள் முகத்தை நிமிர்த்தி, “என்னடா?” என்றான். அவன் முகத்தை பார்ப்பதை தவிர்த்து மீண்டும் அவன் நெஞ்சில் முகம் புதைத்துக் கொண்டவள், “பயமா இருக்கு” என்று முணுமுணுத்தாள். அவன் உடல் இறுகியது.
முதல்நாள் அவள் பேசிய சில வார்த்தைகளே அவனை அச்சுறுத்திக் கொண்டிருந்தது. அதை முயன்று புறந்தள்ளிவிட்டு தான் அவளுக்கு ஆறுதல் சொன்னான். இப்போது அவள் வாய்விட்டே தன் பயத்தை சொன்னதும் ஷாக் அடித்தது போல் ஆகிவிட்டது அவனுக்கு.
வெடுக்கென்று அவளை தன்னிடமிருந்து விளக்கி, “என்ன பயம்? எதுக்கு பயம்?” என்றான் கோபமாக. அவள் குழப்பமாக அவனைப் பார்த்து, “எதுக்கு திட்டுறீங்க?” என்றாள்.
அப்போதுதான் குரலை உயர்த்திவிட்டோம் என்பதே அவனுக்கு உரைத்தது. மீண்டும் அவளை தன்னோடு இழுத்து அணைத்து கொண்டு, “லூசு மாதிரி பேசினா திட்ட மாட்டாங்களா? ஆசுபத்திரி இருக்கு… டாக்டர் அம்மா இருக்காங்க… எல்லாத்துக்கும் மேல நா உன் பக்கத்துலேயே இருக்கேன். என்ன பயம்?” என்றான் கரகரத்த குரலில்.
அதற்கு மேல் கனிமொழி எதுவும் சொல்லவில்லை. சற்று நேரம் இருவரும் அப்படியே அமர்ந்திருந்தார்கள். பிறகு “சாப்டியா?” என்றான்.
காலையில் வீடு இருந்த பரபரப்பில் சாப்பாட்டையெல்லாம் யாரும் நினைக்கவே இல்லை.
“இல்ல, நீங்க சாப்டிங்களா?” – மெல்ல அவனிடமிருந்து விலகினாள்.
“இல்லையா! காலையிலிருந்து ஒன்னும் சாப்பிடலையா!” – மீண்டும் அவன் குரல் உயர்ந்தது.
“பசிக்கல, வாங்க இப்ப சாப்பிடலாம்” – கணவனை அழைத்துக் கொண்டு சமையலறைக்கு சென்றாள்.
மாவும் இட்லி பொடியும் இருந்தது. தோசை ஊற்றலாம் என்று எடுத்தாள். சட்டையை கழட்டி போட்டுவிட்டு… பணியனோடு, வேட்டியை மடித்துக் கட்டி கொண்டு, “நீ நகரு” என்று அவன் களத்தில் இறங்கினான்.
சற்று நேரத்திற்குள் தக்காளி சட்னி அரைத்து சுட சுட தோசை வார்த்து மனைவிக்கு கொடுத்தான்.
“நீங்களும் வாங்க… ரெண்டு பேரும் சேர்ந்து சாப்பிடலாம்”
“நீ முதல்ல சாப்பிடு” – சமையலறையில் ஒரு சேரை கொண்டுவந்து போட்டு, அவன் தோசை ஊற்றும் அழகை பார்த்துக் கொண்டே சாப்பிட்டு முடித்தாள் கனிமொழி.
மலையமான், தனக்கு நான்கு தோசை ஊற்றி எடுத்துக் கொண்டு டைனிங் ஹால் பக்கம் வந்த போது சிந்தாமணி வீட்டுக்குள் நுழைந்தாள்.
வீட்டு மாப்பிள்ளையை கையில் கரண்டியுடன் சமையல்காரன் கோலத்தில் பார்த்ததுமே திகைத்து நின்றுவிட்டாள். ஆனால் அவன் எதையும் கண்டுகொள்ளவில்லை. “வாங்க… கனி உள்ள இருக்கா” என்று கூறியபடி, கையை கழுவிவிட்டு வந்து சாப்பிட துவங்கிவிட்டான்.
கணவனுக்கு தண்ணீர் எடுத்துக் கொண்டு சமையலறையிலிருந்து வெளியே வந்த கனிமொழி, சிந்தாமணியை பார்த்துவிட்டு புன்னகைத்தாள்.
“என்னை கூப்பிட்டிருக்கலாமல்ல பாப்பா… நீங்களே தோசை சுட்டுக்கிட்டிங்களா?” என்றாள்.
“ஆமாம், ஈசியாதான் இருந்துச்சு… பிரச்னை இல்ல. நீங்க பாத்திரத்தை மட்டும் கழுவிடுங்க”
“மதியம் என்ன சமைக்கட்டும்?”
கனிமொழி கணவனை பார்த்தாள். “கிளம்பிடுவோமா?” என்றான்.
“ஹாப்பிட்டல்லேருந்து நியூஸ் வந்த பிறகு கிளம்பலாமா?” என்றாள் கனிமொழி.
மலையமான் சிந்தாமணியை பார்த்து, “அரிசி, பருப்பு காயெல்லாம் எடுத்து வெளியே வச்சிடுங்க. நா பார்த்துக்கறேன்” என்றான்.
சிந்தாமணிக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. வாயெல்லாம் பல்லாக, “நீங்களா!” என்றாள்.
“இந்த சட்னி நான்தான் அறைச்சேன். வேணுன்னா ரெண்டு தோசை ஊத்தி சாப்பிட்டு பாருங்க” என்றான் சிரித்துக் கொண்டே.
‘இந்த அண்ணே இவ்வளவு நல்லவரா இருக்காரு! பாப்பா எதுக்கு இவரு கூட சண்டை போட்டுக்கிட்டு அவ்வளவு வேதனை பட்டுச்சு!’ என்று ஒரே நொடியில் கட்சி மாறிவிட்ட சிந்தாமணி, ‘எப்படியோ, இப்பவாச்சும் ஒன்னு சேர்ந்தாங்களே!’ என்று எண்ணிக் கொண்டு, “இருக்கட்டுண்ணே.. நீங்க சாப்பிடுங்க” என்று கூறிவிட்டு சமயலறைக்குள் நுழைந்துக் கொண்டாள்.
சாப்பிட்டு முடித்தப் பிறகு கணவன் மனைவி இருவரும் சேர்ந்து அமர்ந்து சற்று நேரம் டிவி பார்த்தார்கள்.
“கொஞ்ச நேரம் படுக்கறியா?” என்றான் மலையமான். கனிமொழி கீர்த்தியை நினைத்து கவலைப்பட்டாள். உடனே அங்கப்பனுக்கு அழைத்து விபரம் கேட்டு, இன்னும் குழந்தை பிறக்கவில்லை.. மற்றபடி பிரச்னை ஒன்றும் இல்லை என்று கூறி மனைவியை சமாதானம் செய்து அவளை ஓய்வெடுக்கச் செய்தான்.
சிந்தாமணி வேலைகளை முடித்துவிட்டு கிளம்பிய பிறகு, மனைவி உறங்கி கொண்டிருக்கும் போதே மதிய உணவை சமைத்து முடித்துவிட்டு மாடிக்கு வந்தான்.
அசந்து தூங்கும் குழந்தை போல் லேசான குறட்டையுடன் நன்றாக உறங்கி கொண்டிருந்தாள் கனிமொழி. எழுப்ப மனமில்லாமல் சற்று நேரம் அவளை பார்த்தபடியே நின்றவன், பிறகு அலைபேசியை எடுத்து பண்ணையில் வேலை செய்பவர்களிடம் பேசிவிட்டு வந்தான். அப்போதும் அவள் விழிக்கவில்லை.
எப்போதும் ஏதாவது வேலை செய்து கொண்டே இருப்பவனுக்கு இவ்வளவு பெரிய வீட்டில் பேச்சு துணைக்கு கூட யாரும் இல்லாமல் இருப்பது என்னவோ போல் இருக்க, சற்று நேரம் அவளுக்கு பக்கத்திலேயே அமர்ந்திருந்தான். பிறகு முதுகு வலித்ததால் கொஞ்சம் சாய்ந்து அமர்ந்தான்… சற்று நேரம் கழித்து இனம் கொஞ்சம் சாய்ந்தான்.. பிறகு எப்போது படுத்தானோ… அவளோடு சேர்ந்து அவனும் குறட்டைவிட துவங்கிவிட்டான்.
அன்றைய மதிய உறக்கத்திலிருந்து முதலில் விழித்தது கனிமொழிதான். மலையமானை தன் அருகில் படுக்கையில் பார்த்ததும் திகைத்தவள் பிறகு மீண்டும் கண்மூடி அமைதியாக படுத்து கொண்டாள். இதே வீட்டில்… இதே அறையில் தான் தனியாக இருந்து கஷ்ட்டப்பட்ட பழைய நினைவுகள் எல்லாம் அவளை வருத்தியது.
அவனிடமிருந்து கொஞ்சம் விலகிப் படுத்து அந்த வருத்தத்தை அசைபோட்டு மனதை புண்ணாக்கிக் கொண்டவள், பக்கத்தில் அசைவு தெரிந்ததும் திரும்பிப் பார்த்தாள். புரண்டு படுத்தவனுக்கு தலையெல்லாம் ஈரமாகியிருந்தது தெரிந்தது. ‘வேர்த்து போச்சே!’ – உடனே அவள் மனம் இறங்கி கணவனுக்காக வருத்தப்பட்டது. விரலால் முடியை கோதிவிட்டாள். பக்கத்திலிருந்து ஒரு துணியை எடுத்து நெற்றி தலையெல்லாம் துடைத்துவிட்டாள். அப்போதும் வியர்வை குறையவில்லை. ஃபேன் போடவே இல்லை என்பதை அப்போதுதான் கவனித்தாள். எழுந்து ஃபேன் ஏசி இரண்டையும் போட்டுவிட்டு மணியை பார்த்தாள்.
அவன் வழக்கமாக பண்ணையில் இருக்க வேண்டிய நேரம். ‘ஐயோ… தூங்கிட்டான்! அங்க என்ன வேலை இருக்கோ தெரியலையே!’ என்று தன்னையறியாமல் அவன் வேலையை பற்றிய அக்கறை மனதில் தோன்றியது.
எழுப்பலாமா என்று யோசித்தாள்… ஆனால் அவன் ஆழ்ந்து தூங்குவதை பார்க்கும் போது எழுப்ப மனம் வரவில்லை. அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போதே ஏசியின் குளிர் அவனை எழுப்பிவிட கண்விழித்துப் பார்த்தான். முன்பு கட்டிலில் அவன் அமர்ந்திருந்த இடத்தில இப்போது கனிமொழி அமர்ந்து, அவன் எப்படி அவளை பார்த்துக் கொண்டிருந்தானோ அதே போல் இப்போது அவள் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். மலையமானுக்கு சிரிப்பு வந்தது. புன்னகைத்தான்.
“எதுக்கு சிரிக்கிறீங்க?” என்றாள் கனிமொழி.
அவன் தலையை குறுக்காக ஆட்டிவிட்டு, அவள் இடுப்பை வளைத்துப் பிடித்து வயிற்றில் முத்தமிட்டான்.
‘வேண்டான்னு சொன்னிங்க!’ – வார்த்தை வாய் வரை வந்துவிட்டது. அப்படியே விழுங்கி கொண்டாள். கேட்டால் மீண்டும் பிரச்சனை செய்து கொண்டு போய்விட்டான் என்றால் என்ன செய்வது என்கிற பயம்.
‘வாழ்க்கையில சில விஷயங்களை அப்படியே ஏத்துக்கிட்டு போக வேண்டியது தான்’ என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள்.
“என்னடா? ஏன் அப்படி பார்க்கற?” என்றான் அவன் நிறைந்த அன்போடு.
“பண்ணைக்கு போக டைம் ஆச்சே! தூங்கிட்டிங்க…” என்றாள் அவள்.
“அதுவா, ஆளுங்ககிட்ட சொல்லிட்டேன். உன்ன விட்டுட்டு எப்படி போக முடியும்?” என்று எழுந்து குளியலறைக்குள் நுழைந்தான்.
அவள் அசையாமல் அப்படியே அமர்ந்திருந்தாள். ‘நடந்த எல்லாத்தையும் அப்படியே மறந்துட்டானா! ஒரு விளக்கம் ஒரு சாரி… எதுவுமே இல்லையே!’ என்று ஏங்கியது மனம். மீண்டும் அந்த மந்திரத்தை தனக்குத் தானே சொல்லிக் கொண்டாள்.
‘வாழ்க்கையில சில விஷயங்களை அப்படியே ஏத்துக்கிட்டு போக வேண்டியது தான்’ – பெருமூச்சுடன் எழுந்து கீழே சென்றாள்.
மலையமான் மாடியிலிருந்து கீழே இறங்கி வந்த போது கனிமொழியின் முகம் நன்றாக மலர்ந்திருந்தது. கணவன் சமைத்து வைத்திருந்த பதார்த்தங்களை எல்லாம் சமையலறையிலிருந்து டைனிங் டேபிளுக்கு மாற்றிக் கொண்டிருந்தாள்.
அந்த பதார்தங்களையெல்லாம் பார்த்ததுமே மாடியிலிருந்து இறங்கிய போது இருந்த கனத்த மனநிலை காணாமல் போயிருந்தது அவளுக்கு. “இதெல்லாம் எப்போ சமச்சீங்க!” என்று புன்னகையுடன் அவனை எதிர்கொண்டாள். தனக்காக இவ்வளவு செய்திருக்கிறான் என்கிற பூரிப்பு தெரிந்தது அவள் முகத்தில்.
“சமச்சுட்டு உன்ன எழுப்பலாம்னு தா மேல வந்துதான். நீ நல்லா தூங்கிட்டு இருந்த. அப்படியே நானும் படுத்துட்டேன்… மாதியான சாப்பாடு சாயங்காலம் சாப்பிடற மாதிரி ஆயிடிச்சு” என்றான். இருவரும் பேசிக் கொண்டே உணவு உண்டு முடித்தார்கள். மருத்துவமனையிலிருந்து நல்ல செய்தியும் வந்து சேர்ந்தது. கீர்த்திக்கு மகள் பிறந்திருந்தாள்.
Comments are closed here.