Breaking News

புதிய எழுத்தாளர்கள் வரவேற்கப்படுகிறார்கள். தொடர்புக்கு – sahaptham@gmail.com

Share Us On

[Sassy_Social_Share]

கனியமுதே! – 39

அத்தியாயம் – 39

மறுநாள் அதிகாலையே மலையமான் பண்ணைக்கு செல்ல வேண்டும் என்பதை அறிந்திருந்த கனிமொழி அன்று இரவே வீட்டுக்கு செல்லலாம் என்று தானாகவே முன்வந்து கூறினாள். மலையமானுக்கும் அதே எண்ணம் தான் இருந்தது. அதனால், “ஆசுபத்திரிக்கு போயி குழந்தையை பார்த்துட்டு அப்படியே வீட்டுக்கு போயிடலாமா?” என்றான். அவளுக்கும் அதுவே சரியென்று பட அப்படியே செய்தார்கள்.

 

கனிமொழியை அழைத்துக் கொண்டு வந்ததால் வண்டியை மாமனாரவீட்டிலேயே போட்டுவிட்டு அவளோடு காரில் வந்தவன், அவளை வீட்டில் இறக்கிவிட்டுவிட்டு நடந்தே பண்ணைக்கு சென்றான். அங்கு வேலைகளெல்லாம் சரியாக நடந்திருக்கிறதா, மாலை எத்தனை லிட்டர் பால் கண்டது என்று எல்லாவற்றையும் சரிபார்த்துவிட்டு வீட்டுக்கு திரும்பும் போது மணி நள்ளிரவை தாண்டியிருந்தது.

 

மருமகளுக்கு துணையாக அலமேலு கூடத்தில் படுத்திருந்தார். மகனை கண்டதும் “சாப்பாடு எடுத்து வைக்கவாப்பா?” என்று எழுந்தார்.

 

“மணி என்ன ஆகுது, இப்ப சாப்பாடு எடுத்து வைக்கவான்னு கேட்கற? நா கடையில வாங்கிட்டு வர சொல்லி பண்ணையிலேயே சாப்பிட்டுட்டேன், நீ படும்மா” என்று தாயை படுக்கச் சொன்னான். அவர் பாயை சுருட்டிக் கொண்டு திண்ணைக்கு போய்விட இவன், அட்டை தடுப்புக்கு உள்ளே எட்டிப் பார்த்தான். கனிமொழி உறங்கி கொண்டிருந்தாள்.

 

‘கும்பகர்ணி.. மதியம் தான் அப்படி தூங்கினா… இப்பவும் தூங்கிட்டாளே!’ என்று எண்ணிக் கொண்டே வெளியே வந்தான். மாடுகளோடு வேலை செய்துவிட்டு வந்தது கசகசவென்று இருந்தது. கிணற்றங்கரைக்கு போய் குளித்துவிட்டு வந்து, வழக்கம் போல் கயிற்றுக் கட்டிலை எடுத்து வாசலில் போட்டுக்கொண்டு படுத்தான். தூக்கமே வரவில்லை.

 

மாலை அந்த குழந்தையை பார்த்துவிட்டு வந்ததிலிருந்து ரோஜாப்பூ குவியல் போல் அந்த சின்ன உருவம் அவன் கண்ணைவிட்டு போகவில்லை. தனக்குப் பிறக்கப் போகும் குழந்தையும் இப்படித்தான் இருக்குமோ! என்கிற கற்பனை அவனை படுக்கவிடவில்லை. எழுந்து வீட்டுக்குள் சென்றான்.

 

விடிவிளக்கின் வெளிச்சத்தில் மனைவியின் முகத்தை ஆசையோடு பார்த்தவன் அவள் நெற்றியில் முத்தமிட்டு அவள் பக்கத்தில் படுத்துக் கொண்டான். கை தானாக மனைவியின் மேடிட்ட வயிற்றை மென்மையாக தொட்டுப் பார்த்தது. கனிமொழி ஆழ்ந்து உறங்கவில்லை… அரைகுறை உறக்கம்தான். கணவனின் ஸ்பரிசத்தில் கண்விழித்து அவன் பக்கம் திரும்பினாள்.

 

“தூங்கு தூங்கு” – அவள் உறக்கத்தை கெடுக்க மனமில்லாமல் அவசரமாக அதே நேரம் மெல்லிய குரலில் கூறினான்.

 

“ஏன் இவ்வளவு லேட்?” – உறக்கக் கலக்கத்துடன் முணுமுணுத்தாள்.

 

“நீதான் குறட்டை விட்டுட்டியே! அப்புறம் நா எப்ப வந்தா என்ன? கும்பகர்ணி!” என்று அவள் மூக்கோடு மூக்கை உரசி கொஞ்சினான்.

 

“நீங்கதான் விடிய விடிய ஆந்தை மாதிரி முழிச்சிருந்து வேலை பார்க்கறீங்க. நானாவது தூங்குறேனே. நான் தூங்கினாதான் குழந்தையும் தூங்கும்” என்றாள்.

 

குழந்தை பேச்சு வந்ததுமே அவன் உற்சாகமாகிவிட்டான். சட்டென்று கையை தலைக்கு கொடுத்து ஒருக்களித்துப் படுத்தவன், “கனி…” என்றான் குழைந்த குரலில்.

 

“ம்ம்ம்…”

 

“நமக்கு என்ன குழந்தை பிறக்கும்னு நினைக்கிற?” – ஆசையாக கேட்டான்.

 

“தெரியலையே!”

 

“ப்ச்… நீ ஏதாவது யோசிச்சிருப்பல்ல! என்ன குசந்தை பிறக்கும்னு தோணுது…?” என்று அழுத்திக் கேட்டான்.

 

அவள் புருவம் சுருங்கியது. தீவிரமாக சிந்தித்துப் பார்த்துவிட்டு, “நா இதை பற்றி யோசிக்கவே இல்லையே” என்றாள். அவன் முகம் ஏமாற்றத்துடன் வாடியது.

 

“நீங்க ஏதாவது யோசிச்சீங்களா?” என்றாள் அவள்.

 

ஓரிரு நொடிகள் அவளை நிலைத்துப் பார்த்தவன் பிறகு எதுவும் சொல்லாமல் மல்லார்ந்து படுத்து, விட்டத்தின் இருளை வெறித்தான்.

 

அவனுடைய மனநிலை சட்டென்று மாறிவிட்டதை உணர்ந்து, “என்ன ஆச்சு?” என்றாள் கனிமொழி.

 

அவன் பதில் சொல்லாமல் பெருமூச்சுவிட்டான். பதிலை எதிர்பார்த்து கனிமொழி அவனை பார்த்துக் கொண்டிருக்க, “நல்லாதானே இருந்தோம்! சும்மா இருந்த வக்கீலாம்மா திடீர்ன்னு எதுக்கு அந்த பிரச்சனையை கிளப்பிவிடனும்! உன்னையும் வருத்தி.. நானும் நிம்மதி இல்லாம… எவ்வளவு கஷ்ட்டம்! ச்சே…” என்றான் வருத்தமும் கோபமுமாக.

 

முகம் வாட பார்வையை விளக்கிக்கொண்டாள் கனிமொழி. ஆறி வந்த காயத்தை மீண்டும் கிளறிவிட்டது போல் இருந்தது. அவன் ஏதாவது சமாதானம் சொல்லி இருக்கலாம். சொல்வானா என்று எதிர்பார்த்தது அவள் மனம். ஆனால் அவன் எதுவும் பேசவில்லை. தன் சிந்தனையிலேயே மூழ்கிவிட்டான். அவளுக்கும் அவனை தேற்றவேண்டும் என்று தோன்றவில்லை. தான் பட்ட துன்பங்களை அசைபோட்டபடி புரண்டு படுத்து கண்மூடிக் கொண்டாள்.

 

இரண்டு நாள் கழித்து ஏதோ பேங்க் வேலையாக டவுனுக்கு போன மலையமான் திரும்பி வரும் போது ஒரு துணிக்கடை பையோடு வந்து மனைவியிடம் கொடுத்தான்.

 

பிரித்துப் பார்த்தாள் கனிமொழி. உள்ளே, பிறந்த குழந்தைக்கு அணிவிக்கும் அழகிய ஃப்ராக் ஒன்று இருந்தது. தன் அக்கா குழந்தைக்கு வாங்கியிருக்கிறான் என்கிற எண்ணத்தில் முகம் மலர்ந்தவள், “பாப்பாக்கு வாங்குனீங்களா? அப்படியே கொடுத்துட்டு வந்திருக்கலாமே” என்றாள்.

 

ஒரு நொடி புரியாமல் அவளை பார்த்தவன், பிறகு புன்னகைத்து, “இல்ல இல்ல… இது அந்த பாப்பாவுக்கு இல்ல. உள்ள கொண்டு போயி வையி” என்றான்.

 

“பாப்பாவுக்கு இல்லையா? யாருக்கு?” என்றாள் விடாமல்.

 

அவளுக்கு பதில் சொல்லாமல் உள்ளே வந்து சட்டையை கழட்டி ஆணியில் மாட்டியவன், திரும்பாமலே கொல்லைப்புறத்திற்கு செல்ல எத்தனித்தான்.

 

அவள் விடவில்லை. “கேட்கறேனே.. சொல்லுங்க” என்றாள்.

 

சிரமப்பட்டு தயக்கத்தை உடைத்து, “இது… நம்ம பாப்பாவுக்கு” என்றான்.

 

கனிமொழிக்கு ஒரே ஆச்சரியம். வியப்புடன் கணவனை விழிவிரித்து பார்த்தவள், “பிறக்கறதுக்கு முன்னாடியே டிரஸ் வாங்கிட்டு வந்துட்டிங்க!” என்றாள்.

 

“ம்ம்ம்.. நல்லா இருந்தது… அதான்” என்று சொல்லிக் கொண்டே கொல்லைப்புறத்திற்கு சென்றான்.

 

துண்டை எடுத்துக் கொண்டு கணவனை பின்தொடர்ந்து சென்றவள், “பெண் குழந்தைதான்னு உங்களுக்கு எப்படி தெரியும்? ஒருவேளை ஆண் குழந்தை பிறந்துச்சுன்னா என்ன செய்விங்க?” என்றாள்.

 

“அதெல்லாம் நமக்கு பொண்ணுதான். நீ வேணா பாரு” என்றான்.

 

கனிமொழி கண்கள் ஒளிர கணவனைப் பார்த்தாள். அவளுக்கும் பெண் குழந்தைக்குத்தான் ஆசை. அவனும் அதையே சொல்ல அவளுக்கு மகிழ்ச்சி பெருகியது.

 

“எப்படி சொல்றிங்க?” என்றாள்.

 

“தோணுது” என்று தோளை குலுக்கினான் அவன். அதற்கு பிறகு குழந்தைகளுக்கான ஷூ, ஸ்வட்டர், குல்லா, படுக்கை விரிப்பு என்று பல ஐட்டங்கள் வீட்டுக்கு வந்து கொண்டே இருந்தது.

 

அதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அலமேலு, “இதல்லாம் இப்பயே வாங்க கூடாதுப்பா. முதல்ல குழந்தை நல்லபடியா பிறக்கட்டும்” என்றார்.

 

ஆனால் மலையமானுக்கோ ஆசை அளவில்லாமல் சென்றுக் கொண்டிருந்தது. அதன் விளைவாக குழந்தைக்கு வயிற்றில் இருக்கும் போதே பெயர் கூட சூட்டிவிட்டான்.

 

ஆம், அன்று ஒரு நாள் இரவு வாசலில் காற்றோட்டமாக கட்டில் போட்டு மனைவியோடு அமர்ந்து பேசிக் கொண்டிருந்த போது, “நிலா எப்படி இருக்கு?” என்றான்.

 

அவன் வானத்தில் இருக்கும் நிலாவைதான் சொல்கிறானோ என்று எண்ணியவள் மேலே அண்ணார்ந்து பார்க்க, அவன் அவளை நெருங்கி அமர்ந்து, ஒரு கையால் இடுப்பை சுற்றி வளைத்து மறுகையால் வயிற்றை மென்மையாக தொட்டு, “நிலா” என்றான்.

 

இன்னும் சில நாட்கள் கழித்து “N” எழுத்து பொறித்த தங்க சங்கிலி ஒன்று வாங்கி வந்தான். கனிமொழிக்கு ஒரு பக்கம் சந்தோஷம், இன்னொரு பக்கம் பயம்… “இதெல்லாம் இப்பவே வாங்கணுமா… இன்னும் கொஞ்ச நாள் தானே” என்றாள் மெல்ல.

 

“ஏன் ஏன்? என்ன? அம்மா சொன்னதுனால பயப்படறியா? அம்மா அந்த காலத்து மனுஷி. இப்படி தான் ஏதாவது சொல்லிக்கிட்டு இருக்கும். அதுக்கெல்லாமா பயப்படுவ?” என்று மனைவியை தோளோடு அணைத்து சமாதானம் செய்தான்.

 

அடுத்த சில நாட்களில், நள்ளிரவு நேரத்தில் உறங்கி கொண்டிருக்கும் போது கனிமொழிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அமளிதுமளியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். மறுநாள் மாலை வரை படாதபாடுபட்டும் குழந்தை பிறக்கவில்லை. லேபர் வார்டில் அலறும் அவளுடைய அலறல் சத்தம் வெளியே வராண்டா வரை கேட்டது. நெருப்பில் நிற்பது போல் தவித்துப் போனான் மலையமான்.

 

“என்னம்மா இவ்வளவு நேரம் ஆகுது?” என்று தாயிடம் எறிந்து விழுந்தான்.

 

‘‘மழப்பேறும், மகப்பேறும் மகேசனுக்கே வெளிச்சம்” என்றார் அவர் மேலே கையை காட்டி.

 

மலையமான் தாயை வெறித்துப் பார்த்தான். என்னவோ அவர் சதி செய்து குழந்தையை பிறக்க விடாமல் செய்வது போல் அதனை கோபம் அந்த பார்வையில்.

 

அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த தாமரைக்கு சிரிப்பு வந்தது. அடக்கிக் கொண்டு, “ம்மா, அவனே பயந்து கெடக்கான். நீ வேற எதையாச்சும் புலம்பணுமா. பேசாம இரேன்” என்றாள்.

 

“என்ன சொன்னுச்சு அம்மா இப்ப?” என்றான் இப்போது தமக்கையை பார்த்து.

 

“ஏன் லேட் ஆவுதுன்னு கேட்டல்ல?”

 

“ஆமாம்”

 

“சாமிக்கு தான் தெரியுமாம்” என்று தாமரை சொல்ல மலையமான் தலையை அழுந்த கோதிக் கொண்டான்.

 

அங்கப்பன் டீ ஃபிளாஸ்க்கும் பேப்பர் குவளைகளையும் கொண்டு வந்து மனைவியிடம் கொடுத்து, “எல்லாருக்கும் ஊத்தி கொடு” என்றார்.

 

மிகுந்த பதட்டத்தில் இருந்தவர், கை நடுக்கத்துடன் அதை வாங்குவதைக் கண்டு, “நா ஊத்தி தரேன். நீங்க உட்காருங்க” என்று தாமரை உதவிக்கு வந்தாள்.

 

குடும்பமே தங்கள் வீட்டுக்கு வரவிருக்கும் புதுவரவை எதிர்நோக்கி காத்திருந்த தருணத்தில், உள்ளேயிருந்து மீண்டும் ஒரு பயங்கரமான அலறல் ஒலி ஓங்கி ஒலிக்க, மலையமான் பயந்து போய் வாசல் பக்கம் ஓடியேவிட்டான். மருத்துவமனைக்கு எதிரில் இருந்த மெடிக்கல் ஷாப் வாசலில் வந்து நின்றவனுக்கு கை காலெல்லாம் உதறியது.

 

‘அடேங்கப்பா! இந்த ஒரு கஷ்டத்துக்காகவே பொண்ணுங்க கால்ல விழுந்து கெடக்கலாம் ய்யா’ என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டான்.

 

எங்கிருந்துதான் வந்ததோ… திடீரென்று வானம் இருட்டிக் கொண்டு வர, இடியும் மின்னலுமாக மழை அடித்து ஊற்றியது. அப்போதும் கடையின் ஓரமாக ஒதுங்கி நின்றானே தவிர மருத்துவமனை கட்டிடத்திற்குள் செல்லவில்லை. மனம் கலங்கி… இதயம் கனத்து… தவித்துப் போய் நின்றான்.

 

“மாப்ள… எதுக்கு மழையில நெனைஞ்சுக்கிட்டு அங்க நிக்கிறிங்க? இப்படி உள்ள வாங்க” – மழை வந்ததால் மருமகனை தேடி வந்து மருத்துவமனை கட்டிடத்திற்குள் அழைத்தார் அங்கப்பன்.

 

“இல்ல மாமா… நீங்க போங்க.. நா அப்புறம் வரேன்” என்றான். முகத்தில் பயம் படர்ந்திருந்தது.

 

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே தாமரை ஓடி வந்தாள். அவள் வருவதை முதலில் பார்த்தது மலையமான் தான். ஒரு நொடியில் அவன் முகமே சவக்களை அடைந்துவிட்டது. என்னவோ ஏதோ என்று விதிர்விதிர்த்துப் போய் அசையாமல் நின்றான்.

 

“மாமா, கனிக்கு குழந்தை பிறந்துடிச்சு” என்றாள் வந்த வேகத்திலேயே. வெளியே கடையில் நின்றுக் கொண்டிருந்த மலையமானை அவள் கவனிக்கவில்லை.

 

ஆனால் தமக்கை சொன்ன செய்தி அவனுக்கு புரிந்துவிட இரண்டே எட்டில் மருத்துவமனை கட்டிடத்திற்குள் நுழைந்து அவர்களை நெருங்கியவன், “க்கா… கனி எப்படி இருக்கா?” என்றான்.

 

நேற்று வரை குழந்தையை பற்றி மட்டுமே எண்ணிக் கொண்டிருந்தவனுக்கு இப்போது ஒரு துளி கூட குழந்தையை பற்றிய எண்ணம் இல்லை.

 

“இனிமே தான் தெரியும். வா போயி பார்க்கலாம்” என்று அழைத்தாள். மூவரும் ஓட்டமும் நடையுமாக ஓடினார்கள்.

 

பதினைந்து நிமிடத்தில் நர்ஸ் குழந்தையை தூக்கிக் கொண்டு வெளியே வர, மலையமான் அவரை தள்ளிக் கொண்டு உள்ளே நுழைந்தான்.

 

“சார், குழந்தையை பார்க்கலையா?” என்ற நர்ஸின் குரல் அவன் செவியை எட்டியதாகவே தெரியவில்லை.

 

முகமெல்லாம் வீங்கி, கண் இமைகள் தனித்து, தலை களைந்து அரை மயக்கத்தில் கிடந்தாள் கனிமொழி.

 

“நல்லா இருக்காங்க சார், கொஞ்ச நேரத்துல ரூம்க்கு கூட்டிட்டு வந்துடுவோம்” என்று யாரோ சொன்னார்கள். அவன் பார்வை மனைவியின் முகத்திலிருந்து எங்கும் விலகவில்லை.

 

கணவனைப் பார்த்ததும் கனிமொழியின் கண்களிலிருந்து மீண்டும் கண்ணீர் அருவியாக கொட்ட துவங்கியது. எங்கோ தூர தேசத்தில் காணாமல் போன குழந்தை தாயை கண்டதும் ஓடிவந்து கட்டி கொண்டு சலுகை சொல்லுமே, அப்படி ஒரு அழுகை. அவனுக்கும் தொண்டையை அடைத்தது. அவசரமாக மனைவியை நெருங்கி அவள் கையை பிடித்துக் கொண்டான்.

 

“நார்மல் டெலிவரியே இல்லாம போய்ட்ட இந்த காலத்துல, அவ்வளவு அழகா கோ-ஆப்ரேட் பண்ணி குழந்தை பெத்துக்கிட்ட பொண்ணு நீ… இப்ப என்ன அழுகை?” – டாக்டர் உரிமையாக அதட்ட, மலையமான் முற்றிலும் நெகிழ்ந்து போனவனாக மனையின் நெற்றியில் முத்தமிட்டான்.

 

அவன் கையை பிடித்துக் கொண்டே நன்றாக உறங்கிவிட்டாள் கனிமொழி. மனைவியை தனி ரூமுக்கு மாற்றும் வரை அவனுக்கு குழந்தையை பற்றிய சிந்தனையே எழவில்லை. பிறகு தாமரைதான் கொண்டு வந்து குழந்தையை அவன் கையில் கொடுத்தாள்.

 

“பாரு, உன் மகன் யாரு மாதிரி இருக்கான்னு பார்த்து சொல்லு” என்றாள் சிரித்துக் கொண்டே.

 

“மகனா!” என்று தூக்கி வாரிப் போட்டது அவனுக்கு.

 

“ஆமா! ஏன்? என்ன இப்பதான் தெரியிற மாதிரி கேட்குற?” என்றாள் அவள் ஆச்சரியமாக. இவ்வளவு நேரமாக, என்ன குழந்தை என்று கூடவா கேட்காமல் இருந்தான் என்கிற ஆச்சரியம் அவளுக்கு.

 

மலையமானுக்கு இப்போதும் நம்ப முடியவில்லை. குழந்தை மீது போடப்பட்டிருந்த துணியை தூக்கிப் பார்த்துவிட்டு, உறங்கி கொண்டிருக்கும் மனைவியை பரிதாபமாக பார்த்தான்.

 

“என்னடா?” – தாமரைக்கு ஒன்றுமே புரியவில்லை.

 

“கனிக்கு தெரியுமா?”

 

“என்ன தெரியுமா?”

 

“பையன்னு”

 

“அதெல்லாம் பிறந்ததுமே சொல்லி இருப்பார்களே! ஏன்? பொம்பள புள்ளைய எதிர்பார்த்தீங்களா?” என்றாள். மலையமான் பதில் சொல்லாமல் குனிந்து ஏக்கத்துடன் மகனை பார்த்து, “நிலான்னு பேரே வச்சுட்டோம்” என்றான். தாமரை கலகலவென்று சிரித்தாள்.

 




Comments are closed here.

You cannot copy content of this page