கனியமுதே! – 40
749
0
அத்தியாயம் – 40
மூன்று நாள் கழித்து மருத்துவமனையிலிருந்து டிஸ்சாரஜ் செய்து, கனிமொழியை பிறந்த வீட்டுக்கு அழைத்து வந்தார்கள். மலையமானும் கூடவே வந்து மாமனார் வீட்டில் தங்கினான்.
அங்கு ஏற்கனவே கீர்த்தியும் பிரசவமாகி குழந்தையோடு தங்கியிருந்தாள். மலையமான் மட்டும் இல்லை என்றால் மணிமேகலைக்கு மிகவும் சிரமமாகத்தான் இருந்திருக்கும். ஆனால் இப்போது எல்லாம் வெகு சுலபமாக இருந்தது. மணிமேகலைக்கு நேரத்திற்கு சமைத்துக் கொடுப்பதும் கீர்த்திக்கு அவ்வப்போது உதவி செய்வதும் மட்டும் தான் வேலை. மற்றபடி கனிமொழியையும் குழந்தையையும் வெகு நேர்த்தியாக கவனித்துக் கொண்டான் மலையமான்.
மனைவிக்கு தேவையான உதவிகளை செய்வது, குழந்தையை குளிக்க வைப்பது, இரவில் குழந்தை விழித்து அழும் போதெல்லாம் டயப்பர் மாற்றி உறங்க வைப்பது என்று எந்த வேலையும் விளக்கில்லாமல் அனைத்தையும் செய்தான். கனிமொழிக்கே ஆச்சரியம். “இதெல்லாம் எப்படி உங்களுக்கு தெரியுது?” என்றாள்.
“தெரியிறதுக்கு என்ன இருக்கு? நம்மளா செய்ய வேண்டியதுதான்” என்றான் அவன் சாதாரணமாக.
“பயமா இல்லையா! தம்பி ரொம்ப குட்டியா இருக்கானே!”
“அபி குட்டி பிறந்தப்ப, எல்லாம் செஞ்சிருக்கேன். அம்மாவுக்கு தனியா பார்க்க முடியாதுல்ல”
மருமகன் சொன்ன பதில் கனிமொழியின் உள்ளத்தை தொட்டதோ இல்லையோ! மணிமேகலையை அசைத்துவிட்டது.
“நீ ரொம்ப கொடுத்து வச்சவடி கனி. இந்த மனுஷன் உன்ன எந்த காலத்திலேயும் கஷ்ட்டப்பட விடமாட்டாரு” என்றாள் ஒரு நாள் மகளிடம் தனியாக.
கனிமொழியும் அதை உணர்ந்தே இருந்ததால் மெல்லிய புன்னகையை மட்டும் பதிலாகக் கொடுத்தாள்.
மலையமான் மகனுக்கு ‘நிலவன்’ என்று பெயரிட்டான். “நிலாவ நிலவன்னு மாத்திட்டிங்களா!” என்று சிரித்தாள் கனிமொழி.
“நீதான் ஏமாத்திட்டியே! பொண்ணுதான் பிறக்கும்னு நெனச்சேன். பையனை பெத்து கொடுத்துட்ட” என்று செல்லமாக குறைபாட்டான்.
“அதெல்லாம் என் கையிலையா இருக்கு?” என்றவள், “நீங்க தான் குழந்தை பிறக்குறதுக்கு முன்னாடியே பொண்ணுதான்னு அவ்வளவு ஸ்ட்ராங்கா சொன்னிங்க. உங்க ப்ரிடிக்ஷன் தப்பா போச்சு. நா என்ன செய்யட்டும்!” என்று அவள் கோபித்துக்கொள்ள, குழந்தையை தொட்டிலில் கிடத்திவிட்டு, “நீ ஒன்னும் செய்ய வேண்டாண்டி என் சக்கரக்கட்டி” என்று அவளை பின்னாலிருந்து கட்டிக் கொண்டான் மலையமான்.
குழந்தை பிறந்து பதினைந்து நாள் கடந்த பிறகு மதிய நேரத்தில் ஒரு நாள் பண்ணைக்கு சென்றான் மலையமான்.
அவன் இல்லாத நாட்களில் ஆட்கள் பண்ணையை நன்றாக தான் கவனித்துக் கொண்டார்கள் என்றாலும் அவனுக்கு திருப்தி படவில்லை. நிறைய குறைகள் கண்ணில் பட்டன. அதிலும் மாடுகள் சற்றே இளைத்திருப்பதை போல் தோன்ற வருத்தம் மேலிட்டது.
“என்னண்ணே மாடெல்லாம் மெலிஞ்சு போயி கெடக்கு” என்று மாடுகளை தடவித் தடவிக் கொடுத்தான்.
“இல்லையே தம்பி, அப்படியேதான் இருக்கு! பாலு அளவு கூட குறையலையே” என்று வேலையாள் சொன்ன சமாதானம் அவன் காதில் ஏறவில்லை.
அன்றிலிருந்து தினமும் மதிய நேரத்தில் ஒருமுறை பண்ணைக்கு வருவதை வழக்கமாக்கிக் கொண்டான்.
கணவனுடைய வேலை பளு அதிகமாகிவிட்டதை உணர்ந்த கனிமொழி, “நீங்க பண்ணையை பாருங்க. நா தம்பியை கவனிச்சுக்கிறேன். நைட் மட்டும் தூங்க இங்க வந்துடுங்க” என்றாள்.
மனைவியின் கரிசனம் மனதிற்கு இதமாக இருந்தாலும் அவளுடைய அறிவுரையை கேட்டுக்கொள்ள மனமில்லை. தினமும் அதிகாலை பண்ணைக்கு போய்விட்டு பத்துமணிக்கு வீட்டுக்கு வந்து குழந்தையை குளிக்க வைத்து அவனுக்கு தேவையானவற்றை செய்துவிட்டு மதியம் பண்ணைக்கு போய் பால் கறந்து ஊற்றி கணக்கு எழுதிவிட்டு இரவு ஏழு எழரை மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்துவிடுவதை வழக்கமாக்கிக் கொண்டான்.
மூன்று மாதம் இப்படியே கழிந்தது. கீர்த்தியின் குழந்தைக்கு விழா செய்து மாமனார் வீட்டுக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு சில நாட்கள் தங்கி இருந்துவிட்டு அவள் கணவனோடு வெளிநாட்டுக்கு பறந்துவிட்டாள்.
“நாமளும் நம்ம வீட்டுக்கு கிளம்பிடுவோம்ங்க. அங்கன்னா உங்களுக்கு வந்து போக ஈஸியா இருக்கும்” என்றாள் கனிமொழி.
“இல்ல இல்ல… இன்னும் கொஞ்ச நாள் போகட்டும்” என்று மறுத்த மலையமான் வீடு கட்ட ஏற்பாடு செய்தான். சிரமம் தான். ஆனால் வேறு வழியில்லை. குழந்தையை வைத்துக் கொண்டு ஒரு மழைக்கு கூட தாங்காத அந்த ஓட்டை வீட்டில் காலம் தள்ளுவது முடியாத காரியம் என்று தெரிந்ததால், கொஞ்சம் சேமிப்பும் கொஞ்சம் கடனுமாக வாங்கிப்போட்டு வீட்டை துவங்கிவிட்டான்.
கனிமொழிக்கு மிகுந்த மகிழ்ச்சி. பணத்தைப் பற்றி அவள் கவலைப்படவில்லை. தேவைப்பட்டால் தந்தையிடமிருடந்து வாங்கிக்கொள்ளலாம் என்று எண்ணினாள். அங்கப்பனும் கொடுக்க காத்துக் கொண்டிருந்தார். அந்த விஷயத்தில் மட்டும் மலையமான் தன் பிடிவாதத்தை விடவில்லை.
ஒரு கட்டத்தில் வீட்டு வேலைகள் தடைபட்டுத் தடைபட்டு நடந்து கொண்டிருப்பதை அறிந்து கனிமொழி கணவனிடம், “அப்பா கொடுக்கற பணத்தை வாங்கிக்கோங்க. அப்புறமா நாம சம்பாதிச்சு திருப்பி கொடுத்துடலாம்” என்றாள் அவனுடைய சுய மரியாதையையும் புரிந்துகொண்டவளாக.
வழக்கம் போலவே, “பார்த்துக்கலாம் கனி. தேவைப்பட்டா சொல்றேன்” என்று அவன் முடித்துக்கொள்ள அவளுக்குள் வருத்தம் மேலிட்டது.
‘முன்னாடி தான் ஏதேதோ மனக்கசப்பு. இப்போதான் எல்லாம் சரியாயிடிச்சே! வாங்கிக்கிட்டா என்ன!’ என்று தோன்றினாலும் அதை கணவனிடம் வெளிப்படையாக அவளால் கேட்க முடியவில்லை.
***********************
பெரிய பந்தல்… தென்னங்கீற்று தோரணங்கள்… வரவேற்பில் குலைதள்ளிய வாழைமரம்… மைக் செட் மியூசிக்… கலர் கலராய் சீரியல் விளக்கு அலங்காரம் என்று அந்த அதிகாலை வேளையில் அமர்க்களப்பட்டது மலையமான் கட்டிய புது வீடு.
நாதஸ்வர ஓசை முழங்க சொந்தபந்தங்கள் புடைசூழ ஆர்ப்பாட்டமான சீர்வரிசையோடு விழாவுக்கு வந்து சேர்ந்தார் அங்கப்பன். கையில் குழந்தையோடு கணவன் பக்கத்தில் நின்று பிறந்த வீட்டு சொந்தங்களை வரவேற்ற கனிமொழியின் முகம் பூரிப்பில் மலர்ந்திருந்தது.
நிலவன் தாயிடமிருந்து தந்தையிடம் தாவிக் கொண்டே இருந்தான். அவனை கணவனிடம் கொடுத்துவிட்டு, வந்திருந்தவர்களை உள்ளே அழைத்துச் சென்றாள். அங்கே அலமேலுவும் தாமரையும் அவர்களை வரவேற்று வீட்டை சுற்றிக் காட்டினார்கள். பெரிய பங்களா இல்லை என்றாலும் எல்லா வசதிகளையும் உள்ளடக்கிய அளவான அழகான வீடு.
மலையமான், மற்றவர்களை வரவேற்று உபசரித்து, விருந்துண்ண அழைத்துச் சென்று, பரிமாறும் இடத்தில் வேலையெல்லாம் சரியாக நடக்கிறதா என்பதை, அங்கே மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்த நாராயணனிடம் விசாரித்துவிட்டு மீண்டும் பந்தலுக்கு வந்து அங்கே அமர்ந்திருப்பவர்களிடம் ஓரிரு வார்த்தை பேசிவிட்டு, வெற்றிலை பாக்கு தாம்பூலத்தை எடுத்து அவர்களுக்கெல்லாம் கொடுத்தான். அதுவரை நிலவன் அவன் கையிலேயே தான் இருந்தான். எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள்.
“பையனுக்கு அப்பா இருந்துட்டா போதும் போலருக்கே!” என்று கேட்டபடி குழந்தையின் கன்னத்தில் செல்லமாக கிள்ளி அவனை அழ வைத்துவிட்டார் ஒரு பெரியவர்.
அவர் கிள்ளியதில் அழுதானோ அல்லது அவர் மீசையை பார்த்துவிட்டு அழுதானோ! கத்தி தீர்த்துவிட்டான் நிலவன்.
“கனி…!” என்று இவன் வாசலிலிருந்து குரல் கொடுக்க, வீட்டுக்குள்ளிருந்து பால் பாட்டிலோடு ஓடிவந்தாள் கனிமொழி.
இருவரும் சேர்ந்தே குழந்தையை சமாதானப்படுத்தினர். அந்த ஒரு காட்சியே அவர்களுக்குள் இருந்த அன்யோன்யத்தையும் புரிதலையும் பறைசாற்ற போதுமானதாக இருந்தது.
விழா நல்லபடியாக முடிந்து சொந்தபந்தங்களெல்லாம் கிளம்பிய பிறகு அன்று இரவு மகள் மருமகன் மற்றும் பேரன் மூவருக்கும் திருஷ்டி கழித்தாள் மணிமேகலை.
அந்த குடும்பத்தில் மலையமானை அதிகமாக அலட்சியப்படுத்திய ஒரு ஆள் மணிமேகலைத்தான். இன்று அதே மணிமேகலையின் மனதில் அவன் பெரிதாக உயர்ந்து நின்றான். அதற்கு காரணம் அவன் சம்பாதிக்கும் பணம் மட்டும் அல்ல. மனிதர்களிடம் அவன் நடந்துகொள்ளும் விதம், குடும்பத்தை அவன் பார்க்கும் பாங்கு, எல்லோரிடமும் அவன் காட்டும் அக்கறை… இவையெல்லாம் அவனை ஒரு பெரிய மனிதனாக உயர்திக் காட்டியது.
அங்கப்பன் அவனுக்கு கை கொடுத்தார். “நீங்க நல்லா வருவீங்கன்னு எனக்கு தெரியும் மாப்ள… இன்னும் நீங்க எவ்வளவோ உயரத்துக்கு போக வேண்டியது இருக்கு. போவீங்க… எனக்கு நம்பிக்கை இருக்கு” என்றார் நிறைவாக.
“உங்க ஆசீர்வாதம் மாமா” என்றான் அவன் தன்னடக்கத்துடன்.
புதுமனை புகுவிழா முடிந்து பத்து நாட்கள் கழிந்திருக்கும். வழக்கம் போல இரவு பத்து மணிக்கு மேல் பண்ணையிலிருந்து வீடு திரும்பிய மலையமான் குளித்துவிட்டு வாசலுக்கு வந்து அமர்ந்துவிட்டான்.
சாப்பாடு எடுத்து வைத்துவிட்டு வெளியே வந்த கனிமொழி, “என்ன ஆச்சு? சாப்பிடலையா? இங்க வந்து உட்கார்ந்துட்டிங்க! சாப்பாடு எடுத்து வச்சுட்டேன் வாங்க” என்றாள்.
அவன் கைகாட்டி அவளை பக்கத்தில் அழைத்தான். ‘என்ன ஆச்சு இன்னைக்கு!’ என்று யோசித்தபடி அருகில் வந்தவளை கையை பிடித்து பக்கத்தில் அமர்த்திக் கொண்டான்.
“என்ன?” என்றாள் அவள்.
அவன் பதில் சொல்லாமல் அவள் மடியில் படித்துக் கண்மூடிக் கொண்டான்.
“ஏதாவது பிரச்சனையா?” – அவன் தலையைக் கோதியபடி கேட்டாள்.
ஓரிரு நிமிடங்கள் எதுவும் பேசாமல் கண்மூடிக் கிடந்தவன் மெல்ல கண்விழித்து அவள் முகத்தை பார்த்து, “வீடு பிடிச்சிருக்கா?” என்றான்.
அவள் ஆம் என்பது போல் மேலும் கீழும் தலையை அசைத்து, “ரொம்ப” என்றாள்.
“நிலவனுக்கு ஒரு வயசு ஆகப்போகுது. இனி நீ உனக்கு பிடிச்சது என்னவோ அதை செய்யி… வேலைக்கு போகணும்னா போ… படிக்கணும்னா படி…” என்றான்.
“கொஞ்ச நாள் ஆகட்டும். இப்போ என்ன அவசரம்”
“உன்னோட கனவு… அதை எப்பவும் நீ விட கூடாது” – தீர்க்கமாக சொன்னான்.
தான் முன்பு ஒருமுறை சொன்ன வார்த்தை இன்னமும் அவனை உறுத்தி கொண்டிருக்கிறதோ என்கிற சந்தேகம் அவளுக்கு மேலெழுந்தது.
“என்மேல இன்னமும் உங்களுக்கு கோவமா?” என்றாள் தடுமாற்றத்துடன்.
“ச்சே.. ச்சே.. ஏன் அப்படி நெனைக்கிற?” என்றான் அவன் உடனடி மறுப்புடன்.
“இல்ல… தோணுச்சு…” என்று ஒரு நொடி தயங்கியவள், “அப்பாகிட்டேருந்து எந்த ஹெல்ப்பும் எடுத்துக்க மாட்டேங்கிறீங்களே!” என்றாள் மெல்லிய குரலில்.
அவன் புரியாமல், “என்ன! எதை சொல்ற?” என்றான்.
“முன்னாடி நமக்குள்ள ஏதேதோ மிஸ்அண்டர்ஸ்டாண்டிங்… அப்பா கொடுத்த பணம் நிலம் எதையும் நீங்க வாங்கிக்கலை. ஆனா இப்போ, இந்த வீடு கட்டும் போது அவ்வளவு கஷ்ட்டப்பட்டிங்க! அப்போ கூட அப்பா கிட்டேருந்து எந்த ஹெல்ப்பும் எடுத்துக்கலையே! என்மேல இருக்க கோவத்துலதானே?” என்றாள் வருத்தத்துடன்.
மலையமான் சட்டென்று எழுந்து அமர்ந்தான். அவளை கூர்ந்து பார்த்தான். பிறகு கபகபவென்று சிரித்தான்.
“ஏன் சிரிக்கிறீங்க?” – குழப்பத்துடன் கேட்டாள்.
“மாமாகிட்ட பணம் வாங்காதத்துக்கு உன் மேல இருக்க கோவம் மட்டும்தான் காரணமா இருக்க முடியுமா?” என்றான் அவள் நெற்றியோடு நெற்றி முட்டி.
“வேற என்ன?” என்றாள் அவள் புரியாமல்.
“இந்த வீட்டை நானே, என்னோட காசுல உனக்காக கட்டணும்னு நெனச்சேன்… அதுக்கு பேர் என்ன? கோவமா?” என்றான். கண்களில் காதல் ததும்பியது.
கனிமொழியின் விழிகள் விரிந்தன. “பொய்தானே?” என்றாள். வாய் தான் அப்படி சொன்னது… முகமோ பூவாய் மலர்ந்தது.
“காதலிக்கிறவன் பொய் சொல்வாங்கறது உண்மை தான்… ஆனா இது பொய் இல்ல…” என்றான் நுனி மீசையை முறுக்கியபடி.
கனிமொழி இப்போது உதட்டை கடித்து சிரிப்பை அடக்கிக் கொண்டாள். நாணத்தால் சிவந்திருந்த அவள் முகத்தை கைகளில் ஏந்தி, சிறைப்பட்டிருந்த அவள் இதழ்களை விடுவித்து சிறை செய்தான் மலையமான்.
– சுபம்
Comments are closed here.