கர்வம் அழிந்ததடி -(நிழல் நிலவு - பாகம் 2)
அத்தியாயம் - 1
நொய்டா பெருநகரத்தின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது அந்த 'பப்'. சிகப்பு, மஞ்சள் ஊதா என்று கலர் கலரான வெளிச்சம் பக்கம் மாற்றி பக்கம் ஒளிர்வதும் மங்குவதுமாக, அங்கே ஒலித்துக் கொண்டிருந்த டிஜே-வின் இசைக்கு ஏற்ப நடனமாடிக் கொண்டிருந்தது. ஆல்கஹாலின் ஆதிக்கம் தலைக்கேறிய இளங்காளைகளும் கன்னிகைகளும் அந்த பெரிய ஹாலில் கூடி இரவை கொண்டாடிக் கொண்டிருந்தார்கள்.
திடீரென்று அங்கே சின்ன சலசலப்பு! இளம் பெண் ஒருத்தி ஆக்ரோஷமாகக் கத்திக் கொண்டிருந்தாள். அவளுக்கு எதிரில் நின்றவனின் முகத்தில் அலட்சியம் புன்னகையாக வழிந்தது. அது இன்னும் அவள் ஆத்திரத்தை அதிகப்படுத்த, அதுவரை வாய்வார்த்தையாகக் கத்திக் கொண்டிருந்தவள் கைகலப்பில் இறங்கினாள். அவ்வளவுதான்! அவன் தன் மிருகத்தனத்தை வெளிப்படையாக காட்ட துவங்கினான். அவனோடு அவன் நண்பர்களும் சேர்ந்துகொள்ள மிரண்டு போனாள் அந்த பெண்.
அங்கு ஒரு பெரிய கும்பலே இருந்தது... ஆனால் ஒருவரும் தன்னிலையில் இல்லை. ஆட்டம் பாட்டம் என்று குதூகலித்துக் கொண்டிருந்தவர்களுக்கு ஒரு சின்ன பெண்ணின் துன்பமோ, கோபமோ ஆத்திரமோ எதுவும் கண்ணில் படவில்லை.
தனக்கு இங்கு யாரிடமிருந்தும் உதவி கிடைக்கப்போவதில்லை என்பதை உணர்ந்துக் கொண்டவள் எப்படியோ அவர்களிடமிருந்து விலகி கூட்டத்திற்குள் புகுந்து வாயிலை நோக்கி ஓடத் துவங்கினாள். அவர்களும் கூட்டத்தை விலக்கிக்கொண்டு அவளை துரத்திப் பிடித்து, பிரைவேட் ஏரியாவிற்கு இழுத்துச் செல்ல முயன்றார்கள்.
இரத்தத்தில் கலந்திருந்த ஆல்கஹாலோ அல்லது மூளையை ஆக்கிரமித்திருந்த போதை வஸ்துவோ, ஏதோ ஒன்று அவர்களை மூர்கர்களாக மாற்றி இருந்தது.
அந்த பெண் அவர்களை பயங்கரமாக எதிர்த்தாள். அவர்களிடமிருந்து தப்ப முயன்று எதிர் திசையில் விசை கொடுத்து இழுத்தாள். இழுத்த வேகத்தில் அறுபட்ட ரப்பர் பேண்டு போல், தூரத்தில் நின்று கொண்டிருந்த ஒரு மலை மனிதனின் மீது போய் விழுந்தாள்.
ஆறடிக்கும் மேலான உயரம்... அகண்ட உருவம்.. செக்யூரிட்டி கார்டாக இருக்கும், உதவி கேட்கலாம் என்று ஆவலுடன் அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்தவள் திகைத்தாள்.
அடர்ந்த தாடி மீசைக்குள் செதுக்கி வைத்த கல் போல் புதைந்திருந்தது அவன் முகம். புருவத்திற்கு மேலே பெரிய தழும்பு, சிவந்த கூர்மையான கண்கள்... விடைத்த நேர் நாசி... அழுந்த மூடிய உதடுகள்... துரத்திக் கொண்டு வருபவர்களை விட இவனை பார்க்கப் பயமாக இருந்தது அவளுக்கு.
தப்பிக்க வேண்டும் என்கிற ஒரே எண்ணம் பிரதானமாக இருக்க அவனிடமிருந்தும் விலக முயன்றாள். அதே நேரம் அவளை துரதிக் கொண்டிருந்த மிருகங்களில் ஒன்று அங்கே பாய்ந்து அவள் கையை பிடித்து இழுக்க, தன்னியல்பாக அவள் மீண்டும் அந்த மலை மனிதனிடம் ஒட்டிக் கொண்டு அவன் சட்டையை இறுக்கமாக பற்றிக் கொண்டாள்.
"ஹெல்ப் மீ... ஹெல்ப் மீ... ப்ளீஸ்... " - கத்தினாள்.
ஆனால் அவன் புருவம் சுருங்கிய விதமே அவளுக்கு உதவும் எண்ணமெல்லாம் அவனுக்கு துளியும் இல்லை என்பதை காட்டிவிட, அவள் இன்னும் அவனோடு ஒட்டிக் கொண்டு, "சார் ப்ளீஸ்... ப்ளீஸ்... ப்ளீஸ்... " என்று கெஞ்சினாள்.
அதற்குள் அவளை சூழ்ந்துகொண்ட மிருகக் கூட்டம், "ஹேய் மித்து, நாங்க இருக்கும் போது சார்கிட்ட ஏன் கெஞ்சிகிட்டு இருக்க? வா எங்க கூட" என்று அவளை தங்கள் பக்கம் இழுக்க, இப்போது அந்த மலை மனிதனின் கை அவள் கையை பற்றியிருந்தது. வியப்புடன் அவள் பார்வை அவன் பக்கம் திரும்ப, அவன் முகத்தில் அத்தனை கொடூரம். என்ன நடக்கிறது என்பதை அவள் உணர்வதற்குள், அவள் கையை பிடித்திருந்தவன் பொத்தென்று கீழே விழுந்தான். முகம் எங்கு உடைந்ததோ குபுகுபுவென்று இரத்தம் பெருகியது.
சுற்றியிருந்த கூட்டம் அதிர்ந்து கூச்சலும் குழப்பமுமாக விலகிக் கொள்ள, இவள் பார்வை அவன் பக்கம் மீண்டும் திரும்பியது. கண்களில் வெறியும் ஆக்ரோஷமுமாக கீழே கிடந்தவனை ஓரிரு நொடிகள் பார்த்தவன் பிறகு அவள் முகத்தை ஏறிட்டான். அதுவரை கோபம் கொப்பளித்துக் கொண்டிருந்த அவன் முகத்தில், என்னவென்றே சொல்ல முடியாத ஒரு பாவம்.. அந்த பெண் புரியாமல் அவனை பார்த்தாள்.
"மி..ரு..து..!" - மெல்ல முணுமுணுத்தான். அந்த பெயர் அவன் நெஞ்சுக்குள் ஆயிரம் ஊசிகளாக இறங்கியது. “மிருது?” - மீண்டும் ஒரு முறை உச்சரித்தான். இந்தமுறை கேள்வியாக.
"நோ..” என்று இழுத்தவள், “மித்து... மித்ரா..." என்று பதட்டத்தை மறந்து அவனை படிக்க முயன்றாள்.
அதற்குள் கீழே கிடந்தவனுக்கு சிலர் உதவ, அவனுடைய நண்பர்கள் அந்த முரட்டு மனிதனை சூழ்ந்துகொண்டார்கள். அவ்வளவுதான்... அடுத்த சில நிமிடங்களில் அந்த ஹால் போர்க்களமாக மாறியிருந்தது. சூழ்ந்து நின்ற நண்பர்கள் கூட்டம் சிங்கத்தின் மீது பாயும் ஓநாய்கள் போல அவன் மீது பாய, அனைவரையும் கடித்துக் குதறும் சீற்றம் நிறைந்த வேங்கையாக மாறினான் அவன். ஓரிரு நிமிடங்கள் மட்டுமே நடந்த அந்த யுத்தத்தில் எலும்பு உடைபடாமல் அவனிடமிருந்து ஒருவர் கூட தப்பி இருக்க முடியாது.
திரைப்படத்தில் கடைசி காட்சியில் வரும் போலீஸ் போல, அந்த மனமகிழ் மன்றத்தின் பாதுகாவலர்கள், அவனிடம் சிக்கி சிதைந்து கொண்டிருந்தவர்களை காப்பாற்ற கடைசியாக வந்து சேர்ந்தார்கள். ஒருவருக்கு மூவராக சேர்ந்து இழுத்துப் பிடித்தும் அவனை கட்டுப்படுத்த முடியவில்லை. 'மிருது' என்கிற அவளுடைய அரை பெயரே அவனை முழு மிருகமாக மாற்றி இருந்தது.
எங்கிருந்தோ ஓடிவந்த இன்னும் இரண்டு பாதுகாவலர்களும் சேர்ந்து ஐந்து பேராக அவனை சுற்றி வளைத்து போராடினார்கள். வெகு நேரத்திற்கு பிறகே அவனுடைய சீற்றம் சற்று மட்டுப்பட்டது. அப்போதும் முழுமையாக அவன் அமைதியடைந்து விடவில்லை. பாதுகாவலர்கள் வெகு சிரமப்பட்டு அவனை வெளியே இழுத்துக் கொண்டு வந்தார்கள்.
பெரிய அடிதடிதான்... ஆனால் போலீசுக்கு தெரியப்படுத்த முடியாது. அங்கே அதிகமாக புழங்கும் போதை வஸ்த்து அதற்கு இடம் கொடுக்கவில்லை. முடிந்த அளவுக்கு அவனை சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பினார்கள்.
தன் காரில் வந்து அமர்ந்தவனுக்கு நெஞ்சுக்குள் ஏதேதோ செய்தது. மண்டை ஓட்டுக்குள் பின்னிக் கிடைக்கும் நரம்புகள் எல்லாம் தெறித்தன. கார் கதவை இறுக மூடிக் கொண்டு 'ஓ'வென்று பெருங்குரலில் கத்தினான். உள்ளே பிடித்துக் கொண்ட தீ அணைவதாக தெரியவில்லை. அவனே பற்றி எறிந்தான். இதய துடிப்பு அதிகமானது... மூச்சு சீரற்று போனது... கை காலெல்லாம் நடுக்கம் கண்டது. அவசர அவசரமாக டேஷ் போர்டை திறந்து, உள்ளே இருந்த ஏதோ மருந்தையும் சிரஞ்சையும் எடுத்து கையில் ஏற்றி கொண்டான்.
இரண்டே நிமிடம்... அவனுடைய ஆன்சைட்டி என்னும் கட்டுப்பாடற்ற உணர்வு பெருக்கம் மெல்ல மட்டுப்பட்டது. அப்படியே காற்றில் மிதப்பது போல்... லேசாக... கனமில்லாமல்... சுகமாக... கண்கள் சொருகியது... கைகள் வலுவிழந்து துவண்டு விழ... தலை பாரம் தாளாமல் துவள ஸ்டியரிங்கில் கவிழ்ந்து நினைவிழந்தான். ஏற்கனவே அருந்தி இருந்த மது... கூடவே பெயர் சொல்ல முடியாத போதை மருந்து... இரண்டுமாக சேர்ந்து அவன் மூளையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து அவனை நினைவிழக்க செய்துவிட்டது.
*************
இருள்... அடர்ந்த காரிருள்... ஒளியும் ஓசையும் இல்லாத அடர்ந்த அத்துவானம்... அங்கே அவன் மட்டும் தனித்து நின்றான். திக்குத் தெரியாத தனிமை காட்டில் தவித்து நின்றான்... ஓவென்று பெருங்குரலில் கத்தினான்.. ஆனால் அவன் குரல் அவனுக்கே கேட்கவில்லை. கண்களை கசக்கி, விழிகளை அகல விரித்து பார்த்தான். சூழ்ந்திருக்கும் கருமையை விளக்க முடியவில்லை. தூரத்தில் எங்கோ ஒரு குரல்...
'அர்ஜுன்... அ..ர்..ஜு..ன்...' - அவள் குரல்.. மிருதுளாவின் குரல்... மூடியிருந்த இமைகளுக்குள் அவன் விழிகள் உருண்டன. 'மிது... மிதூ....' - உதட்டில் மெல்லிய முணுமுணுப்பு...
"அசைவு தெரியுது... ஏதோ முணுமுணுக்கறார்" - இப்போது ஏதோ ஒரு புது குரல் அவன் செவியை தீண்டியது. இமைகளை பிரித்துப் பார்த்தான். பார்வை தெளிவில்லாமல் காட்சிகள் மங்கி தெரிந்தன. கண்களை மூடி மீண்டும் திறந்தான். இப்போது பார்வை மெல்ல மெல்ல தெளிவு பெற்றது. கையில் இண்டர்காமை பிடித்தபடி அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் ஊதா நிற உடை அணிந்திருந்த ஒரு பெண். மருத்துவமனை சீருடை போல் இருந்தது. எங்கிருக்கிறோம் என்று சுற்றும் முற்றும் பார்த்தான். அவன் ஊகம் சரிதான்... பெருமூச்சுடன் மீண்டும் விழிகளை மூடினான்.
"மிஸ்டர் அபிமன்யு. யு ஆர் ஆல்ரைட்... ஸ்டே அவேக்" - ரிசீவரை வைத்துவிட்டு அவனை நோக்கி வந்தாள் அந்த பெண்.
அவன் மீண்டும் இமைகளை பிரித்தான். அவள் அவன் கையை பிடித்து நாடியை சோதித்தாள். கீழ் இமையை இழுத்து கண்களுக்குள் பேனா டார்ச்சை அடித்துப் பார்த்துவிட்டு, "ஸ்டராங் மேன்" என்று கூறி புன்னகையித்தாள். அதற்குள் அறை கதவை திறந்து கொண்டு மருத்துவர் உள்ளே வந்தார்.
கேஸ் ஷீட்டை செவிலியிடமிருந்து வாங்கி பார்த்துவிட்டு அவனை பரிசோதித்தார். கூடவே, "இந்த லக் எப்பவும் கை கொடுக்காது அபி. நீ உன் மேல கொஞ்சமாவது அக்கறை எடுத்துக்கணும்" என்றார் கண்டிக்கும் தொனியில்.
அதே சமயம் மீண்டும் அரை கதவு திறக்கப்பட்டது. அபிமன்யுவின் பார்வை வாயிலை நோக்க, உள்ளே நுழைந்தவர் பிரமிளா... அவனுடைய தாய். முகத்தில் கடுமை டன் கணக்கில் ஏறியிருந்தது. அப்படியே அபிமன்யுவின் முகம். நல்ல உயரம். தொடர் உடற்பயிற்சியால் உறுதி பெற்றிருந்த உடல் அமைப்பு. நேர் கொண்ட பார்வை... நிமிர்ந்த நன்னடை.. அத்தனையும் ஏர்ஃபோர்ஸ் ஆஃபீசருக்கான சிக்னேச்சரஸ்... ஆனால் இப்போது இல்லை... அவர் எக்ஸ்... அதாவது வேலையிலிருந்து ஓய்வு பெற்று எக்ஸ் ஏர்ஃபோர்ஸ் ஆஃபீசர் ஆகி மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது.
அவருடைய நிமிர்வுக்கு காரணம் அவர் பார்த்த வேலை மட்டும் அல்ல. அவர் உடலில் ஓடும் ராஜ வம்சத்து இரத்தமும் அதில் கலந்தோடும் கர்வமும் சேர்ந்து அவர் தலையை சற்று கூடுதலாகவே நிமிர்த்தியிருந்தது. கூடவே அவர் தந்தை ஊட்டி வளர்த்த நாட்டுப்பற்று...
அந்த காலத்தில் அத்தனை சொத்துக்கள் இருந்த போதும் அனைத்தையும் ஒதுக்கிவிட்டு, தன் இளம் வயதிலேயே குடும்பத்திலிருந்து விலகி, சுபாஷ் சந்திரபோஸின் சுதந்திர படையில் சாதாரண வீரனாக சேர்ந்து போராடியவர் பிரமிளாவின் தந்தை. சுதந்திரத்திற்கு பிறகே திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு பதினைந்து ஆண்டுகள் கழித்து வெகு தாமதமாக பிறந்தவர் தான் பிரமிளா.
தன் வம்சத்தின் ஒற்றை வாரிசு பெண்ணாக பிறந்த போதும் அவரை நாட்டு சேவைக்கு தயார் படுத்தி ஏர்ஃபோர்ஸில் பணியமர்த்தினார். வீரமும் செருக்கும் மிகுந்த மனிதர். அவருடைய இரத்தம் பிரமிளாவின் மூலம் அபிமன்யு வரை கடத்தப்பட்டிருந்தது.
பிரமிளாவை பார்த்ததும் மருத்துவர் தலையசைக்க, செவிலி மரியாதையுடன் விலகி நின்றாள். அபிமன்யு முகத்தை திருப்பிக் கொண்டான். கத்தி பார்வையால் தன்னை துளைக்கும் தாயை அவனால் எதிர்கொள்ள முடியவில்லை.
அவர் பார்வை இப்போது மருத்துவரிடம் திரும்பியது. "ஹௌ இஸ் ஹி நௌ?" - உணர்வுகள் துடைக்கப்பட்ட குரலில் கேட்டார்.
"கிட்டத்தட்ட இது சூசைட்னு தான் சொல்லணும்... பிழைச்சதே பெரிய விஷயம். மறுபிறப்புன்னு நெனச்சுக்கோங்க" என்றார்.
பிரமிளாவின் முகத்தில் ஒரு சின்ன இறுக்கம்... அவ்வளவுதான்... அதற்கு மேல் அவரிடம் எந்த எதிர்வினையும் இல்லை. ஓரிரு நிமிடங்கள் மகனை மெளனமாக பார்த்துக் கொண்டிருந்தவர், "த்ரீ டேஸ் ஆபிஸர்வேஷன்ல இருக்கட்டும். அப்புறம் என்ன செய்யலாம்னு யோசிக்கலாம்" என்ற மருத்துவரின் குரலில் அவர் பக்கம் திரும்பினார்.
"எனக்கு அபிகிட்ட கொஞ்சம் தனியா பேசணும்" மெல்ல, அதே சமயம் உறுதியாக சொன்னார். அந்த குரலை மறுக்க முடியாமல்,
"இப்போ தான் கான்ஷியஸ் வந்திருக்கு. ரொம்ப ஸ்ட்ரெஸ் கொடுக்க வேண்டாம்" என்று கூறிவிட்டு அறையிலிருந்து வெளியேறினார் மருத்துவர். செவிலியும் அவரை பின்தொடர்ந்து செல்ல, இப்போது அந்த அறையில் தாயும் மகனும் மட்டுமே இருந்தார்கள்.
அபிமன்யு தாயின் பக்கம் திரும்பவே இல்லை. "அபி, நா உன்கிட்ட பேசறதுக்காகத்தான் இங்க நின்னுட்டு இருக்கேன்" - அதட்டலும் கண்டிப்புமாக ஒலித்தது அவர் குரல்.
ஆழ மூச்செடுத்து அவர் பக்கம் திரும்பிய அபிமன்யு, "மாம் ப்ளீஸ், ஐம் டயர்ட். லெட் மீ டேக் எ நாப். நாம அப்புறம் பேசலாம்" என்றான். அவர் முகம் கோபத்தில் சிவந்தது.
"மூணு நாளா தூங்கிட்டு தான் இருந்த" என்றார்.
அவன் திடுக்கிட்டுப் போய் அவரை பார்த்தான். அவர் தன் மொபைலை அவனிடம் திருப்பிக் காட்டினார். தேதியை பார்த்தவன் அதிர்ச்சியுடன் தாயை பார்த்தான். மூன்று நாட்கள் விழிப்பு வராமல் கிடந்திருக்கிறான்... கிட்டத்தட்ட கோமாவில்... அதிர்ச்சி இல்லாமல் எப்படி இருக்கும்!
"இது ஃபர்ஸ்ட் டைம் இல்ல, ஃபோர்த் டைம். நாலு முறையும் செத்து பிழைச்சிருக்க" என்றார் கடுமையாக.
தாய்க்கு சளைத்தவனா மகன்! பத்து வருஷத்துக்கு முன்னாடியே எனக்கு டெத் சர்டிபிகேட் எடுத்தாச்சுமா"என்றான் ஒரு நக்கல் சிரிப்புடன்.
"நீ வார்லயோ இல்ல அசைன்மென்ட்லையோ செத்துருந்தேன்னா சந்தோஷமா ஏத்துக்கிட்டிருப்பேன். ஆனா இப்படி கோழை மாதிரி சூசைட்ல சாக ட்ரை பண்றதை தான் சகிக்க முடியல" என்றார்.
அபிமன்யு விரக்தியாக புன்னகைத்தான். "செத்துருக்கலாம்... இந்த பெயின் இருந்திருக்காது" என்றான்.
"இந்த வலியிலிருந்து தப்பிக்க சாகனுன்னு அவசியம் இல்ல. கரெக்ட்டா உன்னோட புரோட்டோகால்ஸையும் ரூல்ஸையும் ஃபாலோ பண்ணி இருந்தாலே போதும்" என்றார் கடுமையாக.
அபிமன்யு ஆழ மூச்செடுத்தான். "உங்களுக்கு புரியாது மாம். என்னால புரிய வைக்கவும் முடியாது. லீவ் மீ அலோன்" என்றவன் தலையை இடமும் வளமும் உருட்டினான். அவனுக்குள் ஏதோ ஒருவித அழுத்தம் கூடுவதையும் அதை தாக்குப்பிடிக்க முடியாமல் அவன் சிரமப்படுவதையும் உணர்ந்தவர், "ரிலாக்ஸ்... ரிலாக்ஸ் அபி.. ரிலாக்ஸ்" என்றார் அவசரமாக.
வெளியே நின்று உள்ளே நடப்பதை கவனித்துக் கொண்டிருந்தாளோ என்னவோ... சரியான நேரத்தில் செவிலி உள்ளே வந்து, "நான் பார்த்துக்கறேன் மேடம்" என்றாள்.
கூடவே சிரஞ்சில் மருந்தை ஏற்றி அவன் உடம்பில் செலுத்தினாள். மெல்ல மெல்ல அவன் இறுக்கம் தளர்ந்து கண்களை மூடினான். மகனையே ஓரிரு நொடிகள் விழியாகற்றாமல் பார்த்த பிரமிளா திரும்பி வாயிலை நோக்கி நடந்தார்.
Please Leave your comments here
www.sahaptham.com