Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


BK NOVEL அருவிக்கரைக் கோயில் - Tamil Novel

Status
Not open for further replies.

Nithya Karthigan

Administrator
Staff member
Messages
607
Reaction score
782
Points
93
வணக்கம் 🙏🙏🙏,
வண்ணங்கள் நெடுந்தொடர் போட்டியில் கலந்துகொள்ளும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐.

போட்டியின் விதிமுறைகள், காலக்கெடு மற்றும் பரிசுகள் பற்றிய விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் விபரமாக குறிப்பிடப்பட்டுள்ளது. மீண்டும் ஒருமுறை அதை படித்துப் பார்த்துவிட்டு உங்களுக்கு முழு சம்மதம் என்றால், உங்களுடைய கதையை இந்த திரியில் தொடர்ந்து பதிவிடவும்.

உங்களுடைய கதை வாசகர்களை மகிழ்விக்கும் வகையில் அமையவும் போட்டியில் நீங்கள் வெற்றிபெறவும் வாழ்த்துகிறேன்.

மனமார்ந்த வாழ்த்துக்கள் 😍😍😍

நன்றி...
- நித்யா கார்த்திகன்

 
Last edited:

sairenu

New member
Vannangal Writer
Messages
12
Reaction score
3
Points
3

அருவிக்கரைக் கோயில்​





1 - அன்று…​



அரண்மனையெங்கும் விளக்குகள் மின்ன, நிலமகள் அணிந்திருந்த தங்க நெற்றிப்பட்டம் போல் ஒளிர்ந்தது மதுரை மாநகரின் அரண்மனை.

"உனக்கு நான் சளைத்தவளா? நீ மண்ணில் மின்னினால் நான் வானில் மின்னுவேன்" என்று சவால்விட்டுத் தாரைகள் புடைசூழத் தங்கவொளி வீசியது முழுநிலா.

வைகைக்கரையெங்கும் ஜனத்திரள். குழந்தைகள், குடும்பத்தினர். காதலர்கள். முதியோர்கள். வயது வேறுபாடின்றி எல்லோரும் நிலவை ரசிக்க ஆற்றங்கரைக்கு வந்திருந்தார்கள்.

இருளைத் தோற்கடித்துக் கொண்டு மதுரை மாநகர் ஜகஜ்ஜோதியாகத் தெரிய, மக்கள் அனைவரின் முகங்களிலும் மகிழ்ச்சியின் ஒளி தெரிந்தது.

இருளில்லாத அந்த இரவின் இருள் முழுவதும் ஒரே ஒரு முகத்தில் குடியேறியிருந்தது.

ஆம், அரண்மனை மேலுப்பரிகையில் நடைபோட்டுக் கொண்டிருந்த பாண்டிய மன்னனின் முகத்திலும் மனத்திலும்தான் இருள் நிரம்பியிருந்தது.

நிம்மதியின்றி நடையிட்டுக் கொண்டிருந்த மன்னன் வேறு ஒருவர் அங்கு வேகவேகமாய் வரும் அரவம் கேட்டு நின்றான்.

"பாண்டியர் புகழ் வாழ்க! பாண்டிய மன்னர் அறமும் புகழும் ஓங்குக! வணக்கம் மன்னவா!" என்றவாறே அருகில் வந்து வணங்கி நின்றார் தலைமை அமைச்சர் ஸ்ரீவல்லபர்.

"வணக்கம். வாருங்கள் அமைச்சரே!" என்று வரவேற்ற பாண்டிய மன்னன் மீண்டும் நடையிடத் தொடங்கினான்.

அமைச்சர் பொறுமையாக அமைதியாக நின்றிருந்தார்.

சிறிதுநேரத்தில் "அமைச்சரே! ஒரு முக்கியக் காரணத்திற்காகத்தான் உம்மை அழைத்தேன்" என்றான் பாண்டியன்.

அமைச்சர் புன்சிரித்தார். "பௌர்ணமி இரவு. பாண்டிய மன்னர் தன் மனைவிகளோடு களிக்காமல், கலை நிகழ்ச்சிகள் எல்லாவற்றையும் ரத்து செய்துவிட்டு, மேல் உப்பரிகையில் நிம்மதியின்றி நடந்துகொண்டு, தன் அமைச்சரையும் அழைக்கிறார் என்றால் விஷயம் முக்கியமானது என்றே கருதுகிறேன், அது என்னவென்று தெரியாதபோதும்" என்றார்.

பாண்டியனின் கண்கள் இந்தக் கேலியில் சிவந்தன. பிறகு மெதுவே அமைதியாயின.

"சிவபாத சித்தரை இன்று சென்று கண்டிருந்தேன். அவர் கூறிய விஷயங்கள் என்னைக் கலக்கிவிட்டன. அதனலேயே தெளிவின்றி வார்த்தைகளை உரைக்கிறேன். அமைச்சர் மன்னிக்க வேண்டும்" என்றான் பாண்டிய மன்னன்.

அமைச்சர் நடுநடுங்கிக் கைகூப்பினார். "மன்னவா! இளம் வயதில் தங்களை எடுத்து வளர்த்தவன் என்ற உரிமையைச் சில நேரம் என்னை அறியாது பாராட்டிவிடுகிறேன். மன்னர் அதற்காக என்மீது கோபப்படுதலும் தண்டித்தலும் எது செய்தாலும் நியாயமே. ஆயின் மன்னவரின் பொறுமையே என்னைக் காயப்படுத்திவிடுகிறது. 'இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண நன்னயம் செய்துவிடல்' என்ற பொய்யாமொழியின் உருவமே மன்னர்தாம்" என்றார் நெகிழ்ச்சியுடன்.

பாண்டிய மன்னனும் நெகிழ்ந்தான். இறுகியிருந்த கட்டுறுதியான அவன் தேகம் சற்றுத் தளர்ந்தது. "அமைச்சர் குற்றம் செய்திருந்தாலன்றோ தண்டிப்பதும் மன்னிப்பதும்? என் தந்தைக்குச் சமானர் – அறிவுரைப்பதற்கும் இடித்துரைப்பதற்கும் தங்களுக்குச் சகல உரிமையும் உள்ளது" என்றவன் "அமைச்சரே! இந்தப் பேச்சுகளெல்லாம் இருக்கட்டும். நான் உங்களை அழைத்த காரணத்தைச் சொல்லிவிடுகிறேன். நேரங்கடத்துவது நல்லதல்ல. தாமதிக்கும் ஒவ்வொரு விநாடியும் ஆபத்து அதிகரிக்கிறது" என்றான்.

"மன்னர் இவ்வளவு கவலைப்படுவதைக் கண்டால்… தேசத்திற்கு ஏதோ பெரிய ஆபத்து வரப் போவதாகச் சிவபாத சித்தர் கூறினார் என்று ஊகிக்கிறேன்…"

பாண்டியன் சிறிதுநேரம் மௌனமாகவிருந்தான். அமைச்சர் அவன் பேசுவதற்காகக் காத்திருந்தார்.

ஒரு பெருமூச்சு விட்டு, மன்னன் பேசத் தொடங்கினான்.

"அமைச்சரே! இந்த ஜடாவர்மப் பாண்டியன் மகுடம் தரிக்கையில் எத்தனைப் பிரச்சனைகள் இருந்தது என்பதைத் தாங்கள் நன்கறிவீர்கள். அவைகள் யாவும் ஈசனுடைய அருளாலும் சிவபாத சித்தரின் ஆசியாலும் தங்களைப் போன்ற பெரியோர்களின் வழிகாட்டுதலாலும் விலகிவிட்டன. அன்றிலிருந்து இன்றுவரை என் செங்கோல் வளையாதிருக்க வேண்டும், பாண்டிய தேசத்திற்கு நலமும் வளமும் மிக்கதான ஆட்சியை நல்க வேண்டும், சைவ நெறி சிறக்க ஆள வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி வருகிறேன்…"

"இவையெல்லாம் நான் நன்கறிந்தவைதானே, அரசே! ஏன், பாண்டியநாட்டின் சிறு குழந்தையைக் கேட்டாலும் இந்த உண்மைகளை எடுத்தியம்புமே?" என்றார் ஸ்ரீவல்லபர் குழம்பியவராக.

"சில நாட்களில் புதிய ஆண்டு பிறக்கிறது. வருகின்ற சார்வரி ஆண்டு மிகப் பெரிய சோதனை ஒன்றைக் கூடவே கொண்டு வருகிறது என்றார் சித்தர் சுவாமிகள்…" என்று ஸ்ரீவல்லபர் கூறியதை கவனிக்காதவனாய் நிலவை வெறித்தவாறே உரைத்தான் ஜடாவர்மப் பாண்டியன்.

"என்ன சோதனையோ? படையெடுப்புகள் ஏதேனும்…" என்று இழுத்தார் அமைச்சர்.

"ஆம், படையெடுப்புதான். இந்த நானிலமே இதுவரை கண்டும் கேட்டுமிராத பயங்கரமான படையெடுப்பு!"

"என்ன சொல்கிறீர்கள் மன்னவா? வடநாடு ஏதேனும் தென்னகத்தை நோக்கிப் படையெடுத்து வரப் போகிறதா? அல்லது கிழக்கிலிருந்து தட்டைமூக்குச் சாதியர் போருக்கு வரப் போகிறார்களா?..."

ஜடாவர்மப் பாண்டியன் மென்மையாகச் சிரித்தான்.

"இவர்களுடைய படையெடுப்புகள் கண்ணுக்குத் தெரியுமே, அமைச்சர் பெருமானே! கண்களுக்குப் புலப்படாத ஒரு படையெடுப்பு நிகழப் போகிறது! இது பல்லாண்டுகளுக்கு நீடிக்கலாம் என்றும் அறிகிறேன்! மகாபாரதப் போரைவிடக் கொடுமையாகவும் வேகமாகவும் இந்தப் படையெடுப்பு அழிவினை ஏற்படுத்தலாம்!" மெலிதாக ஆரம்பித்த மன்னனின் குரல் ஆவேசத்தில் உயர்ந்துகொண்டே போனது.

"இச்சிறுமதியேனுக்குப் புரிய வேண்டி மன்னர் சற்று விளக்கமாகப் பேசுமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்றார் ஸ்ரீவல்லபர்.

"வருகிற ஆண்டில் ஒரு புதுவகை நோய்க்கிருமி இந்தப் பூமியைத் தாக்கவிருக்கிறதாம். அதன் தாக்கம் பாரதத்தின் பல பகுதிகளில் உணரப்பட்டாலும், முக்கியமாகப் பாண்டிய நாட்டில்தான் அதிகமாகக் காணப்படுமாம்!"

"என்ன சொல்கிறீர்கள் மன்னா? ஏன் நோய்த்தாக்கம் பாண்டிய நாட்டில் அதிகமாக இருக்க வேண்டும்?"

"அமைச்சர் பெருமானே! பாரதத்தின் மிக அதிகமான போக்குவரத்துடைய துறைமுகம் நம் கொற்கைத் துறைமுகம். மிக அதிகமாக வடநாடுகளிலிருந்தும் அயல்நாடுகளிலிருந்தும் வணிகர்கள் புழங்கும் தலைநகர் நம் மதுரை. தினந்தோறும் சேர, சோழ, நடு நாடுகளிலிருந்தும், வட நாடுகளிலிருந்தும், ஏன் அயல் நாடுகளிலிருந்தும்கூட, அரசாங்கத் தூதர்களும், பக்தர்களும், உல்லாசப் பயணிகளும் நம் பாண்டிய நாட்டிற்கு வந்துகொண்டேயிருக்கிறார்கள்…"

"அப்படியானால் இந்த நோய், தொற்று வகையைச் சேர்ந்ததா? வெளிநாடுகளிலிருந்து இங்கே பரவப் போகிறதா?"

ஜடாவர்மப் பாண்டியன் பெருமூச்செறிந்தான்.

"கலங்காதீர்கள் மன்னவா! நம் மருத்துவக் குழுக்களைத் தயார்நிலையில் வைப்போம். ஆதுரசாலைகளில் எல்லாம் மருந்துகளைச் சேமித்து வைத்துக் கொள்வோம். எப்போதுமே ஆபத்துகளைக் கண்டு அஞ்சுவதைவிட, தைரியமாக எதிர்கொள்வதே நல்லது. சிவபாத சித்தருக்கு நன்றி! வரப்போகும் ஆபத்து முன்பே தெரிந்துவிட்டது. இனி நாம் தயாராக இருக்கவேண்டியதே அவசியம்" என்றார் அமைச்சர் ஆறுதலாக.

ஜடாவர்மனிடமிருந்து மற்றொரு பெருமூச்சே பிறந்தது. நிலவை வெறித்தவாறே யோசனையில் ஆழ்ந்திருந்தான் அவன்.

"அரசே…" என்ற ஸ்ரீவல்லபரின் அழைப்பில் கலைந்த பாண்டியன் "அமைச்சரே! தாங்கள் உண்மை நிலையை அறிய மாட்டீர்கள். இப்போது வரவிருக்கும் நோய்த்தொற்று மருத்துவர்களுக்கு அடங்கக்கூடியதல்ல! தற்போதிருக்கும் நம் மருத்துவ ஞானத்தில் இவ்வகைத் தொற்றைக் குணப்படுத்த மருந்துகளே இல்லை!" என்று கூறினான்.

"மன்னவா!" என்று அலறினார் அமைச்சர். "தாங்கள் கூறுவதைக் கேட்டால்… உலகம் அழியும் யுகப்ரளயம் போன்ற ஆபத்தாகவன்றோ காணுகிறது!"



ஜடாவர்மன் சோகத்துடன் புன்னகைத்தான். "பௌர்ணமி நாளன்று நான் மனைவியரோடு களிக்காமல், கலைகளில் ரமிக்காமல் இங்கே நடைபோட்டுக் கொண்டு, என் அமைச்சரையும் அழைத்ததற்கான காரணம் இப்போதாவது முக்கியமென்று தோன்றுகிறதா அமைச்சரே? என்ன விஷயம் என்று தெரிகிறதா?" என்றான். அவன் குரலில் கேலியில்லை, குத்திக்காட்டுதலுமில்லை. வருத்தமே நிறைந்திருந்தது.

அமைச்சர் ஜடாவர்மனை நெருங்கினார். "ஜடாவர்மா! நீ வீரன். இந்தப் பெருமைமிகு தேசத்தின் தலைவன். துன்பங்கள் வரும்போது துவண்டுவிடக் கூடாது. அவற்றை எதிர்கொண்டு வெல்ல என்ன வழி என்று பார்க்கக் வேண்டும்" என்றார் ஆதரவாக.

"தாங்கள் கற்றுத்தந்த முக்கியப் பாடமாயிற்றே இது, மாமா! என் கவலையெல்லாம் வரப்போகும் ஆபத்தைக் குறித்தல்ல, அதனை வெல்லும் வழியைக் குறித்துத்தான்" என்றான் ஜடாவர்மன்.

"என்ன சொல்கிறாய் குழந்தாய்?"

"ஆம் மாமா. சிவபாத சித்தரிடம் இந்த ஆபத்தை வெல்லும் வழியுண்டா என்று கேட்கவே செய்தேன். அவர் கூறியது என்னை கவலைப்பட வைத்தது ஒருபுறமிருந்தாலும், அதீத வியப்பிலாழ்த்திவிட்டதும் உண்மை!"

"அது என்ன அத்தகைய வியப்பைத் தரும் வழி?"

ஜடாவர்மன் கூறிய பதிலைக் கேட்டதும் ஸ்ரீவல்லபரும் பெரும் அதிர்ச்சியடைந்து "வேந்தே!" என்று கூவினார்.

(தொடரும்)​

 

sairenu

New member
Vannangal Writer
Messages
12
Reaction score
3
Points
3

2 - இன்று…​

"வசந்த்!" ஆச்சரியத்துடன் கூவினாள் ராஜி. "வர குறைஞ்சது பத்து நாள் ஆகும்னு சொன்னே! ரெண்டே நாளில் வந்துட்டியே! என்ன, தேடிப் போனது கிடைச்சதா?" உற்சாக பலூனாய் வசந்தை நெருங்கிய ராஜி அவன் முகத்தைப் பார்த்ததும் சட்டென்று சுருங்கிப் போனாள். "சரி, உள்ளே வா" என்றாள்.

உடலெல்லாம் புழுதி கப்பி, சுண்டிப் போன முகத்துடன் காரிலிருந்து இறங்கி உள்ளே வந்தான் வசந்த். ராஜியிடம் எதுவும் பேசாமல் நேராகத் தன் அறைக்குச் சென்றுவிட்டான்.

ராஜி? 28 வயது. அசர அடிக்கிற அழகு இல்லையென்றாலும் பாந்தமாக, குடும்பப்பாங்காக இருந்தாள். எலக்ட்ரானிக்ஸ் எஞ்சினியரிங் படித்துவிட்டுச் சில வருடங்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தவள் ஒரு வருடம் முன்பு வசந்தோடு சேர்ந்து அம்மி மிதித்து அருந்ததி பார்த்தவுடனே ராஜினாமாச் செய்துவிட்டாள்.

வசந்த்? 29 வயது. ஆர்க்கிடெக்ட். அப்பாவுடைய கன்ஸ்ட்ரக்‌ஷன் பிஸினஸிலேயே பார்ட்னராக இருக்கிறான். பணத்திற்குக் கவலையில்லாத வாழ்க்கை. இப்போது ஆறுமாத காலமாக ஆலயங்களில் கட்டுமானம் மற்றும் பல விஷயங்களை ஆராய்ச்சி செய்து வருகிறான்.

வசந்த் முகம் கழுவி உடைமாற்றிக் கொண்டு வந்தபோது ராஜி சுடச்சுடக் காப்பியும், ட்ரேயில் ஸ்னாக்ஸும் தயாராக வைத்திருந்தாள்.

ஒரு க்ரீம் கேக்கை மென்று தின்றுவிட்டு மிக்ஸரை அள்ளி வாயில் போட்டுக் கொண்டபோது வசந்தின் முகத்தில் தெளிவு வந்திருந்தது. காப்பிக் கோப்பையை ஏந்திக் கொண்டவன் "வாயேன் ராஜி, ஸிட்-அவுட்டில் உட்கார்ந்து காஃபியைக் குடிப்போம். கெட் அ கப்" என்றான்.

ராஜி சோகையாகப் புன்னகைத்துத் தானும் சிறிய கப் ஒன்றில் காப்பியை ஊற்றிக் கொண்டு அவனைத் தொடர்ந்தாள்.

ராஜபாளையத்தில் அவர்கள் வீட்டின் முன்னால் ஒரு ஸிட்-அவுட் உண்டெனினும், வீட்டுக்குப் பின்னாலிருக்கும் ஸிட்-அவுட் பெரியது. பின் கேட் வழியே பிள்ளையார் கோயில் தெரியும். காற்றும் நன்றாக வரும். எனவே வசந்தும் ராஜியும் அங்குதான் அமருவார்கள்.

சில நிமிடங்கள் மௌனமாகக் கழிந்தன. பிறகு ராஜியே மௌனத்தைக் கலைத்தாள். "வெல், வசந்த்?"

"வெல், டியர்…" என்று இழுத்தான் வசந்த். "இலஞ்சிக் குமரன் கோயிலை முழுவதுமாக ஆராய்ந்து பார்த்துவிட்டோம். நாம் தேடுவது கிடைக்கல. ரெண்டு நாள் ரெஸ்ட் எடுத்துட்டு மறுபடியும் அங்கே போகணும்."

"வசந்த், ஒண்ணு கேட்கலாமா?"

"ராஜி! நீ பலமுறை என் கிட்ட இப்படி ஆரம்பிச்சு ஒரே கேள்வியைக் கேட்டிட்டிருக்க. நானும் பதில் சொல்லிச் சொல்லி அலுத்துப் போயிட்டேன். நமக்குக் கிடைச்ச தகவலுக்கு எல்லா விதத்திலும் பொருந்திப் போவது இந்தக் கோயில்தான்!"

"வசந்த்! நம்ம தமிழ்நாட்டில் திரும்பிய பக்கமெல்லாம் கோயில் இருக்கு…"

"ப்ளீஸ்! நம்மகிட்ட இருக்கற குறிப்புகளைப் பாரு. தமிழ்நாட்டிலுள்ள ஆலயம்னு பொதுவா சொல்லல. பாண்டிய மண்டலத்தைச் சேர்ந்த ஆலயம்னு தெளிவா சொல்லியிருக்காங்க. 'இளங்குமரனார் ஆலயம்' – முருகர் கோயில். விசேஷமாய் நாம பார்க்கிற இந்த ஆலயத்திற்குக் குமரன் கோயில்னே பேரு. மலைகள் சூழப்பட்ட ஆலயம்னு அடுத்த குறிப்பு. குற்றால மலையடிவாரத்தில் அமைஞ்சிருக்கு. ஆலயத்திற்கு இடப்புறம் ஆறு பிரவகிக்கிறதுன்னு அடுத்த குறிப்பு. சித்ரா நதி ஆலயத்திற்கு இடப்பக்கம் ஓடுது. அருகே சிவனார் துலங்க என்று சொல்லப்பட்டதற்கு ஏற்ப, இருவாலுக நாதர் கோயிலிலேயே குடிகொண்டிருக்கார். திருமணக் கோலந்தனில் இருமாது இலங்க அருள்செய் மணவாளா – இருமாதுங்கறது வள்ளி தெய்வானைன்னு குழந்தைகூடச் சொல்லிடும். இந்தக் கோயிலில் கருவறையிலேயே வள்ளி தேவானையோட முருகர் காட்சி தரார். சூழும் சிவகடாக்ஷ பூமிங்கறதைப் பார் – குற்றாலத்தைவிடச் சிறந்த சிவக்ஷேத்திரம் உண்டா?"

"அதெல்லாம் சரிதான் வசந்த், 'ஐவர் வணங்கும் வரதராஜ பெருமாளே'ங்கிற குறிப்பு…"

"அதைப்பற்றியும் ஆயிரந்தரம் சொல்லிட்டேன்" - வசந்தின் குரல் உயர்ந்தது. "பிரம்மன், மும்முனிவர்களான காசியபர், துர்வாசர், கபிலர், அகத்தியர் ஆகிய ஐவர் வணங்கிய மூர்த்தின்னு அர்த்தம். வரதராஜ குமரன் என்பது இவர் சிறப்புப் பெயர். முருகனைப் பெருமாள்னு அழைக்கிற வழக்கமுண்டு. அருணகிரிநாதர்…"

"நாம் எண்ணுகிற காலத்திற்கு மிகவும் பிற்பட்டவர்!"

"நடைமுறையில் உள்ளதைத்தானே அவரும் எழுதியிருக்கணும்? ஏன் இப்படி எரிச்சல் மூட்டற?"

சுதாரித்துக் கொண்டாள் ராஜி. "ஓகே வசந்த். யூ ஆர் த எக்ஸ்பர்ட். இந்தத் தடவை இல்லேன்னாலும் அடுத்த முறை நாம தேடறது கிடைச்சிடும், பாரேன். அடுத்த முறை நானும் வரட்டுமா?" என்று கேட்டாள்.

"நீ எதுக்கு…" என்று ஆரம்பித்த வசந்தின் பேச்சு "ராஜி! ராஜி!" என்ற அழைப்பைக் கேட்டுத் தடைபட்டது.

"யாரது வாசல்ல?" என்று குரல்மாறக் கேட்டான் வசந்த்.

"உங்க ஃப்ரெண்ட் வம்சீதரன் மாதிரி இருக்கே!" என்றாள் ராஜி சற்று வியப்புடன்.

"ஏன், இதிலென்ன ஆச்சரியம்? அவன் அடிக்கடி இங்கே வந்து போகிறவன்தானே?" என்றவாறே எழுந்தான் வசந்த்.

மனைவியைச் சந்தேகிக்கிற குணம் உடையவனில்லை என்றாலும் வம்சீதரனின் வருகையும் உரிமையான அழைப்பும் அவன் நெஞ்சில் சிறு கீறல்களைப் போட்டிருந்தன.

*****

"ராஜீ! என்ன பண்ற உள்ளே?" என்று உரத்த குரலில் அழைத்துக் கொண்டிருந்தது வம்சீதரன்தான்.

"ராஜி காஃபி குடிக்கறாள். எங்கிட்ட பேசலாமே!" என்றவாறே வெளியே வந்தான் வசந்த்.

"அடேய் வசந்த்! எப்போடா வந்தே, பழி?" என்று கேட்டவாறே அவன் முதுகில் தட்டினான் வம்சீதரன்.

வம்சீதரன்?

வசந்தின் வயது. எப்போதும் திருமண் துலங்கும் புன்னகை மாறாத முகம். ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர். வசந்தோடு பள்ளியில் ஒன்றாகப் படித்தவன். டிகிரி, எம் ஏ சம்ஸ்கிருதம். தொழில் – ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய ஜவுளிக்கடையில் பார்ட்னர்.

"இன்றைக்குத்தான்" என்றான் வசந்த் சுருக்கமாக.

"முந்தாநாளும் இங்கே வந்திருந்தேன். நீ தென்காசி போயிருக்கறதா ராஜி சொன்னா. இன்றைக்கு ஒரு வேலையா ராஜபாளையம் வந்தேன். நீ எப்போ ரிடர்ன் பண்ணுவன்னு கேட்டுட்டுப் போகலாம்னு இங்கே வந்தேன். உன்கிட்ட ஒரு ஹெல்ப் கேட்கணும் வசந்த். உனக்கு டயர்டா இருந்தா அப்புறம் வரேன்" என்றான் வம்சீதரன் கடகடவென்று.

வசந்த் முகத்தில் புன்னகையை வரவழைத்துக் கொண்டவனாய் "அதெல்லாம் ஒண்ணுமில்ல, நீ முதல்ல உள்ளே வா" என்று அழைத்துப் போனான்.

"வாங்க வம்சி" என்றாள் ராஜி.

"ஆமாம்மா."

"வீட்ல எல்லோரும் சுகந்தானே?"

"ஓ! நல்ல சௌக்கியம்."

வம்சியின் அப்பாவித்தனமான குரல், ராஜியின் பால்போன்ற முகம் இரண்டையும் பார்த்த வசந்துக்கு ஒரு நிமிடம் வெட்கமாக இருந்தது.

சே! என்ன மனிதன் நான்? இந்த வம்சியோடு எனக்கு எத்தனை ஆண்டுப் பழக்கம்? அவன் குணம் தெரியாதா என்ன? இந்த ராஜி! என் பிஸினஸை விட்டுட்டு நான் இந்த ப்ராஜக்டில் இறங்கியிருக்கேன். ஒரு வார்த்தை இதுவரை ஆட்சேபித்திருப்பாளா? எவ்வளவோ ஊக்கம் கொடுத்துத் தானிருக்கிறாள். இவளைப் போயா…

"வம்சிக்கு டீ கொண்டுவா ராஜி" என்றான் வசந்த்.

"இல்லைடா, வீட்டுக்குச் சீக்கிரம் போயாகணும். கிளம்பும்போதே குழந்தைக்கு லேசா உடம்பு சரியில்லை. என்னன்னு பார்க்கணும். இப்போ உள்ள காலம் எல்லாம் பயமாயிருக்கே…"

"போலாண்டா. ஒரு வாய் டீ சாப்பிட்டா ஒண்ணும் ஆகாது. நீ என்னிடம் ஏதோ பேசணும்னு வேற சொன்ன…"

ராஜி எழுந்து டீ போடச் சென்றாள்.

"வசந்த்! என் தம்பி ஆராமுதனை உனக்குத் தெரியுமில்லையா?"

"சென்னையில் இருக்கான் இல்லையா?"

"அவனே! அவன் ஃப்ரெண்ட் ஒருத்தன் நாளைக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் வரான். அவனுக்கு ஏதோ கோவில்லாம் பார்க்கணுமாம். நீ கூட வந்து சுற்றிக் காண்பிப்பாயா?"

வசந்த் தயங்கினான். "டேய், இன்னும் ரெண்டு நாள்ள நான் திரும்பத் தென்காசி போகணும். இந்த ரெண்டுநாள் நல்லா ரெஸ்ட் எடுத்துக்கணும்னு நினைச்சேண்டா. தப்பா நினைச்சுக்காதே…"

"வசந்த்! வர ஆளு பெரிய பப்ளிஷர். ஆன்மீகப் பத்திரிகை நடத்தறான். நீன்னா அவன் கேட்கும் கேள்விகளுக்குத் தெளிவா விளக்கம் சொல்லுவ. உனக்குத் தெரிஞ்ச அளவிற்கு யாருக்குமே கோயில் ஆர்க்கிடெக்சர், சிலைகள், கல்வெட்டுகள் பற்றிய விஷயங்கள் எல்லாம் தெரியாது. ப்ளீஸ் கொஞ்சம் ஹெல்ப் பண்ணுடா! நம்ம சுமோ காரை ட்ரைவரோட உன்னிடம் தந்துடறேன். ராஜியை வேணும்னாலும் கூட்டிக்கோ. ஃபுட் எல்லாம் நம்ம வீட்டிலிருந்தே ப்ரிப்பேர் பண்ணித் தரேன். ப்ளீஸ்!"

வசந்த் தளர்ந்தான். "சரி… எங்கெல்லாம் கூட்டிப் போகணும்?"

"ஆண்டாள் கோயில், வடபத்ரசாயி கோயில்… அப்புறம்… மடவார் விளாகம்…"

"அப்படிச் சொல்லு! வைஷ்ணவனுக்குச் சிவன் கோயிலுக்கு வரதுக்குத் தயக்கமாயிருக்கு, அதான் வேலையை எங்கிட்ட தள்ற, இல்ல?" என்றான் வசந்த் சிரித்தவாறே. அப்போது பார்த்துத் தேனீருடன் அறைக்குள் வந்த ராஜியும் சிரித்தாள்.

"என்ன விஷயம் வசந்த்? எந்தச் சிவன் கோயிலுக்குப் போகணும்?"

வசந்தும் வம்சியும் மாறிமாறி விஷயத்தை அவளிடம் சொன்னார்கள். ராஜியின் முகம் மலர்ந்தது. "வசந்த்! நாம ரெண்டுபேரும் சேர்ந்து வெளியே போய் எத்தனையோ நாளாச்சு! இப்போ கோயில்களுக்குப் போற சான்ஸ் கிடைச்சிருக்கு. போயிட்டு வருவோம்டா!" என்றாள் ஆர்வத்துடன்.

"நீ எதுக்குன்னேன்? காரில் இடம் காண வேண்டாமா?" என்றான் வசந்த்.

"அதான் வம்சி சுமோவைத் தரேங்கறானே? யாரெல்லாம் வராங்க வம்சி?" என்றாள் ராஜி.

"என் தம்பியோட ஃப்ரெண்ட், அவனுடைய ரெண்டு ஸிஸ்டர்ஸ்…"

"அப்படிச் சொல்லு! ரெண்டு ஸிஸ்டர்ஸா? அவங்களைச் சைட் அடிக்கறதுக்காக என்னை வராதேங்கறியா?" என்றாள் ராஜி வசந்தை முதுகில் அடித்து.

வசந்த் ஒரு விநாடி அவளைப் பார்த்தான்.

நான் உன்னைச் சந்தேகித்ததற்குத் தெய்வம் பழிவாங்குகிறதா? நீ இங்கே இருக்கும்போது நான் எங்கே யாருடன் சுற்றுகிறேனோ என்று கவலைப்படுகிறாயா ராஜி?

"சரிதான் போ, பெண்கள் வராங்கன்னே எனக்கு இப்பத்தான் தெரியும். அதோட இப்போ யார் வம்சிகிட்ட வரேன்னு சொல்றது? நீதான், நான் இல்லை" என்றான் வசந்த்.

"ப்ளீஸ், போலாம் வசந்த். நானும் வரேன். எனக்கு நீ எக்ஸ்ப்ளெய்ன் பண்றதைக் கேட்க ஆசையா இருக்கு!" என்று கெஞ்சினாள் ராஜி.

"சரி ஒட்டிக்கிட்ட. நீயும் வந்து தொலை. வரோம்டா வம்சி, போதுமா?" என்றான் வசந்த் விளையாட்டுக் கோபத்துடன்.

இன்னும் சிறிதுநேரம் வேடிக்கையாகப் பேசிக் கொண்டிருந்துவிட்டுக் கிளம்பினான் வம்சி.

"அந்த ரெண்டு பொண்ணுங்களும் என்ன பண்றாங்க? படிக்கறாங்களாமா?" என்றான் வசந்த் வெளியே வந்ததும்.

"இல்லை, வந்து…" சற்றே தயங்கித் தொடர்ந்தான் வம்சி. "டிடெக்டிவ் ஏஜன்சி நடத்தறாங்க!"

(தொடரும்)
 
Last edited:

sairenu

New member
Vannangal Writer
Messages
12
Reaction score
3
Points
3

3 - அன்று…​

"என்ன, ஒரு மாலவன் ஆலயத்தைப் புதுப்பிக்க வேண்டுமா?" என்று வியப்புடன் கேட்டார் ஸ்ரீவல்லபர்.

"ஆம். அப்படித்தான் சித்தர் கூறினார்."

"ஜடாவர்மா! நீ என்றுமே சமயங்களுக்குள் வேற்றுமை பார்க்கிறவன் அல்ல என்றாலும் சுத்த சைவன். பல சிவாலயங்களைப் புதுப்பித்திருக்கிறாய். உன்னிடம் இதைக் கூறியவரோ சிவபாத சித்தர். ஆச்சரியமாக உள்ளதே! தவறாகப் புரிந்துகொண்டுவிட்டாயா குழந்தாய்? ஒருவேளை மால்மருகன் என்று கூறியிருப்பாரோ?" என்றார் ஸ்ரீவல்லபர்.

"என்ன மாமா, இவ்விஷயத்தில் நான் அலட்சியம் காட்டுவேனா? மீண்டும் மீண்டும் கேட்டு ஊர்ஜிதம் செய்துகொண்டதையே உங்களிடம் கூறுகிறேன். மாலவன் ஆலயத்தையே நான் புதுப்பிக்க வேண்டும். அதுவும் ஏதேனும் ஒரு ஆலயத்தை அல்ல, ஒரு குறிப்பிட்ட ஆலயத்தை! அது தற்போது பழமையடைந்து காடுகளுக்கிடையில் மறைந்திருக்கிறதாம்…"

"பாழடைந்த என்று கூறாமல், பழமையடைந்த என்று கூறும் உனது பண்பை மெச்சுகிறேன், குழந்தாய்! அக்கோயிலைப் புதுப்பித்துவிட்டால் நோய் மறைந்துவிடுமா?" என்று கேட்டார் ஸ்ரீவல்லபர். அவர் கேள்வியில் மெலிதான கேலியிருந்ததை ஜடாவர்மன் உணர்ந்தான்.

"ஏன் மாமா, மறையாதா என்ன? தன்வந்த்ரி ஸ்வரூபமன்றோ மாலவன்!"

"பக்தி நோக்கத்தில் நீ கூறுவதைப் பாராட்டுகிறேன், குழந்தாய்! ஆனால் நடைமுறை வாழ்வில்?"

ஜடாவர்ம பாண்டியன் மென்மையாகச் சிரித்தான். "மாமா, நம்மைப் போல் மாயையால் மறைந்த மதியினை உடையோர்தாம் நடைமுறை வாழ்வு என்று சொல்லிக் கொண்டு தெளிவில்லாத முறைகள் மூலம் நடவாத ஒன்றைத் துரத்திக் கொண்டிருப்போம். சித்தர் பெருமக்கள் அப்படிப்பட்டோரல்ல, மாமா! நடந்தது, நடப்பது, இனி நடக்கப் போவது எல்லாம் அறிந்த பெருமக்கள். அவர்கள் கருணையாலேயே நம் விவகாரங்களில் தலையிட்டு நாம் நன்மையடையும்படிச் செய்கிறார்கள். இல்லையேல் சிவனிலேயே ஈடுபட்டுச் சிவமயமாய் ஆன பெரியோர்கள் ஏகாந்தத்திலேயே லயிப்பர் அன்றோ?"

ஸ்ரீவல்லபர் அமைதியானார். பிறகு "சரி, எந்தக் கோயிலைப் புதுப்பிக்க வேண்டும் என்கிறார்?" என்று கேட்டார்.

"காடுகளில் மறைந்திருக்கிறதாம் மாமா. அடையாளங்கள் கூறியிருக்கிறார். முக்கியமாக, அக்கோயில் மலையடிவாரத்தில் இருக்கிறதாம். அதைப் புதுப்பிக்கும்போது அருகிலுள்ள சிவன் கோயிலின் அடையாளங்களைத் தெரிந்து கொள்வோமாம். அங்கேதான் இருக்கிறது நோயை வெல்லும் ரகசியம்" என்றான் ஜடாவர்மன்.

"சிவாலயத்தை நேராகக் கண்டறிய முடியாதா?"

"முடியாது என்பது சித்தர் வாக்கு. அக்காலத்தில் இந்தத் திருமால் கோயிலுக்குச் சென்று வழிபட்ட பின்தான் சிவாலயத்திற்குச் செல்வார்களாம். சிவனும் சிவகுமாரனான முருகனும் இணைந்து கோயில்கொண்ட ஆலயமாம் அது. இப்போது சிவாலயம் மறைந்திருக்கிறது, அதனைக் கண்டறியும் வழி மாலாலயத்தில் இருக்கிறது."

"சரி, அப்படியானால் உடனே வேலையை ஆரம்பிக்கலாமே! கஷ்டம் வரப்போவது உண்மையென்றாலும், அதன் நிவாரணத்திற்கு வழி தெரிந்துவிட்டபோது எதற்காகக் கவலைப்பட்டுக் கொண்டு உப்பரிகையில் நிற்கவேண்டும்?" என்றார் ஸ்ரீவல்லபர் சற்றுக் கோபமாகவே.

ஜடாவர்மன் புன்னகைத்தான். "மாமா, என் கவலைக்குக் காரணம் இல்லாமல் இல்லை. அந்த ஆலயத்திற்குள் நுழையவே முடியாதபோது, அதனை நாம் எப்படிப் புதுப்பித்துக் குடமுழுக்குச் செய்வது?"

"ஆலயத்திற்குள் நுழைய முடியாதா? ஏன் மன்னா?"

"மந்திரியாரே, அது பெரிய கதை. தாங்கள் கட்டாயம் அதை அறிய வேண்டும், கேளுங்கள்" என்று ஆரம்பித்தான் ஜடாவர்மப் பாண்டியன்.

********

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன், அந்த ஊரில் பெருமாள் கோயில் தேஜோமயமாக விளங்கிற்று. ஊரும் மிகுந்த செழுமையும் வளமும் நிறைந்ததாகத் திகழ்ந்தது.

கஞ்சிக் கவலை இல்லாத ஊரில் கலைகளும் பக்தியும் சிறந்து விளங்கின. அங்கு நாட்டில் தலைசிறந்து விளங்கிய இசைக் கலைஞர்களும் நாட்டியக் கலைஞர்களும் வாழ்ந்தார்கள்.

அந்தக் கலைஞர்களின் பட்டத்துராணி போல் திகழ்ந்தாள் நித்திலவல்லி என்னும் நாட்டியத்தில் சிறந்த எழிலரசி. அந்நாட்டின் பிரமுகர்கள் அனைவரும் அவளுக்குத் தாஸர்களாய் விளங்கத் தயாராக இருந்தபோது, அவள் ஏழைப் புலவன் ஒருவனை மணந்துகொண்டாள்! அவர்களுக்கு மகளாகப் பிறந்தவளே செண்பகா.

பிறக்கும்போதே செண்பக மலரின் மணத்தோடு பிறந்த அந்தத் தேவதையை மலர் போன்று வளர்த்து மாலவனுக்கே அர்ப்பணம் செய்ய வேண்டும் என்பது அவள் தாய்தந்தையரின் விருப்பமாக இருந்தது. அதன்படியே செண்பகாவும் சிறுவயதிலேயே கலையரசியாகவும், பண்பிற் சிறந்தவளாகவும், பக்தியில் நிகரற்றவளாகவும் இருந்தாள்.

செண்பகாவிற்கு பனிரெண்டு வயது நடந்தபோது, வடநாட்டு மன்னன் ஒருவனுடைய படையெடுப்பு நிகழ்ந்தது. அப்போரில் பாண்டியநாடு தோற்றது.

அந்த மன்னன் முன்பு நட்பு நோக்கத்துடன் பாண்டிய நாட்டிற்கு வந்திருக்கிறான். அப்போது அவனும் பாண்டிய மன்னனும் வீற்றிருந்த அரசவையிலே நித்திலவல்லியின் நடனம் நடைபெற்றது. இந்நிகழ்வு நடந்து பதினைந்தாண்டுகளாகிவிட்டபோதும், அவன் நித்திலவல்லியை மறக்கவேயில்லை. மதுரையைக் கைப்பற்றியவுடன் அவள் எந்த ஊரிலிருக்கிறாள் என்று அறிந்துகொண்டு, அவ்விடத்திற்கு அவளைச் சந்திப்பதற்கென்றே வந்தான்.

நித்திலவலி திருமணம் செய்துகொண்டுவிட்டாள் என்று அறிந்த மன்னன் மிகவும் வருந்தினான். ஆனால் செண்பகாவைக் கண்டதும் அவள் நித்திலவல்லியைப் போன்றே இருப்பதையும், அவளும் நாட்டியத்தில் சிறந்த தேர்ச்சி பெற்று வருவதையும் கண்டு மனம் மகிழ்ந்து அவளைத் தன் தேசத்திற்கு அழைத்துச் சென்று வளர்க்க நித்திலவல்லியிடம் அனுமதி கேட்டான்.

நித்திலவல்லிக்குப் பகையரசனோடு தன் மகளை அனுப்பச் சிறிதும் மனமில்லை. அத்துடன் சென்பகாவை அவ்வூர் ஆலயத்திற்கே அர்ப்பணிக்கவிருப்பதாகவும் அதனால் மன்னன் அவளைத் தன் நாட்டுக்கு அழைத்துச் செல்லக் கூடாது என்று வேண்டிக் கேட்டுக் கொண்டனர் நித்திலவல்லியும் அவள் கணவனும்.

மன்னன் சிரித்தான். "அமைதியாகச் சொன்னால் நீங்கள் கேட்கமாட்டீர்கள் என்றால் அடாவடியாகத்தான் சொல்லவேண்டும்" என்றான். செண்பகா கதறக் கதற அவளை இழுத்துச் சென்றான். ஆலயத்தின் வாயிலில் அவனைத் தடுக்க முயன்ற நித்திலவல்லியையும் அவள் கணவனையும் வாளால் வெட்டினான். அவர்கள் துடிதுடித்துக் கிடக்க, செண்பகாவைத் தேரிலேற்ற முயன்றான்.

அப்போது செண்பகா அவன் பிடியிலிருந்து விடுவித்துக் கொண்டு ஆலயத்துள் ஓடினாள். உட்பிராகார மதில்மீது ஏறி, ஒரு கோபுரத்தின்மீதும் ஏறிவிட்டாள். தவித்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்த ஊர் மக்களை நோக்கி, "எங்கள் குடும்பத்தினர் இவ்வூருக்குப் பல நன்மைகள் செய்துள்ளார்கள். இவ்வூரின் புகழையும் உயர்த்தினார்கள். அவர்களுக்கு உதவ இவ்வூர் மக்கள் யாரும் வரவில்லை. தர்மமில்லாத ஊரில் தெய்வமெதற்கு? இனி இவ்வூர் ஆலயத்துள் யாரும் வரமாட்டார்கள். ஆலயத்து இறைவனும் வெளியே வரமாட்டான்!" என்று சாபமிட்டு, கோபுரத்திலிருந்து கீழே குதித்து உயிர்நீத்துவிட்டாள்.

அன்றிலிருந்து அவளுடைய ஆன்மா ஆலயத்தைச் சுற்றிச் சுற்றி அலைகிறது. ஆலயத்துள் யாரையும் அது வரவிடுவதில்லை. ஆலயத்தில் பூஜைகள் நின்றன, எவ்விதத் திருவிழாக்களும் நடக்கவில்லை. எவ்வித மாந்த்ரீக முயற்சிகளாலும் செண்பகாவின் ஆன்மாவைச் சாந்தியடையச் செய்யவோ, ஆலயத்தைவிட்டு வெளியேற்றவோ இயலவில்லை. கோயில் களையிழந்தது. ஊர் வளமிழந்தது. மக்களனைவரும் அவ்வூரைவிட்டுச் சென்றுவிட்டனர். காலப்போக்கில் அவ்வூர் பாழடைந்தது. காட்டில் ஒரு பகுதியாகிவிட்டது.

அதன்பின் அவ்வூரைப் பற்றிய, அங்கு வாழ்ந்த கலைஞர்களைப் பற்றிய நினைவுகளும் அனைவர் மனதிலிருந்தும் நீங்கிவிட்டது.

*****

"ஆனால் எங்கோ பாண்டியநாட்டின் காடுகளுக்கு இடையில் அந்த ஆலயம் இன்னும் இருக்கிறது, மாமா. அங்கு செண்பகாவின் ஆன்மாவும் சுற்றித் திரிந்து வருகிறது" என்று முடித்தான் ஜடாவர்ம பாண்டியன்.

ஸ்ரீவல்லபர் அயர்ந்து போயிருந்தார். "ஜடாவர்மா! அந்த ஆலயத்தையா கண்டுபிடிக்க வேண்டும்?" என்று பலவீனமான குரலில் கேட்டார்.

"ஆம் மாமா. கண்டுபிடித்து, செண்பகாவின் ஆன்மாவைச் சாந்தியடையச் செய்து, மீண்டும் ஆலயத்துள் மக்கள் பிரவேசிக்குமாறு செய்து, அதற்குக் குடமுழுக்கும் செய்ய வேண்டும்" என்றான் பாண்டியன்.

ஸ்ரீவல்லபர் தளர்ந்து உப்பரிகையின் கைப்பிடிச் சுவரைப் பிடித்துக் கொண்டார்.

ஜடாவர்மன் வருத்தத்துடன் சிரித்தான். "என் கவலையின் பொருள் இப்போது உங்களுக்குப் புரிந்திருக்குமே, மாமா" என்றான்.

"ஆலயத்தை எப்படியாவது கண்டுபிடித்துவிடலாம். அந்தச் சிறுமியின் ஆன்மாவைச் சாந்தியடையச் செய்வது எப்படி? அதுதான் என் மனத்தை வருத்துகிறது" என்றார் ஸ்ரீவல்லபர்.

"நீங்கள் ஆலயத்தைக் கண்டுபிடித்துக் கொடுங்கள். அவள் ஆன்மாவைச் சாந்தியடையச் செய்வது என் வேலை" என்றான் ஜடாவர்மன்.

"எப்படி அரசே? எப்படிச் செய்வாய் அதை?" என்று ஸ்ரீவல்லபர் வியப்புடன் கேட்டார்.

"குருதிக்குப் பதில் குருதி. உயிருக்குப் பதில் உயிர். துரோகத்திற்குப் பதில் தியாகம்" என்றான் ஜடாவர்மன் உறுதியுடன்.
 

sairenu

New member
Vannangal Writer
Messages
12
Reaction score
3
Points
3

4 இன்று…​

முதல் பார்வையிலேயே வசந்துக்குத் தர்மாவைப் பிடித்துப் போனது. கண்ணியமான தோற்றம். மரியாதையான பேச்சு. ராஜியிடம் சகஜமாகப் பழகினாலும் "ஸிஸ்டர்" என்ற விளி இல்லாவிட்டாலும் சகோதரத்துவம் மிளிர்ந்த நடத்தை.

அவனுடைய இரு சகோதரிகள். ஒருத்திக்குத் தர்மாவின் ஜாடை அப்பட்டமாகத் தெரிந்தது. இன்னொரு பெண்ணில் முகம் மாறுபட்டாலும் தர்மாவின் அதே கண்கள். ஆனால் அந்த இரண்டு பெண்களின் கண்களிலும் தர்மாவின் கண்களில் தெரிந்த ஆழமான அமைதி தெரியவில்லை. குறும்பும் துறுதுறுப்பும் குடிகொண்டிருந்த கண்கள்.

"சரியான வால் நட்சத்திரங்கள்" என்று எண்ணிச் சிரித்துக் கொண்டான் வசந்த்.

வார்த்தைக்கு வார்த்தைத் தர்மாவை வம்புக்கிழுத்துக் கலாய்த்தார்கள். அவன் எதற்கும் பிடிகொடாமல் சிரித்த முகத்துடன் மௌனமாகவே இருந்தான். அதோடு துப்பறியும் நிறுவனமும் அவன் தங்கைகள் நடத்துவதுதான் என்று தெரிந்தபோது "சரி, இவன் ஒரு சாதாரண பிஸினஸ்மன்" என்று வசந்துக்கும் ராஜிக்கும் உருவான அபிப்ராயம், ஆலயங்களைச் சுற்றிப் பார்க்கும்போது உடைந்தது.

ஒவ்வொரு ஆலயத்திலும் அவன் செய்த பாராயணங்கள், சொல்லிய பல புராணக் கதைகள், ஒவ்வொரு சிற்பத்தையும் அலசிய விதம், எடுத்துக் கொண்ட குறிப்புகள், வசந்திடம் கேட்ட நுட்பமான கேள்விகள் எல்லாம் "இவன் ஒரு படிப்பாளி, பண்டிதன்" என்று பிரகடனம் செய்தன.

வசந்த் சுதாரித்துக் கொண்டான். "கற்றாரைக் கற்றாரே காமுறுவர்" என்பதுபோல் மேதாவியான ஒருவன் தான் கூறுவதைக் கவனிக்கிறான் என்ற எண்ணம் அவனுக்குள் உற்சாகத்தைக் கிளப்பிவிட்டது. அவனுடைய விளக்கங்கள் அன்று அற்புதமாகவும் அபூர்வமாகவும் அமைந்தன. ராஜியின் பெருமையான பார்வை அவனைவிட்டு அகலவே இல்லை.

ஆண்டாள் ஆலயத்தில் தர்ஷினி சில பாசுரங்களைப் பாடினாள். ராஜியும் இணைந்து கொண்டாள்.

"நீயும் பாடறதுதானே?" என்றான் வசந்த், தன்யாவை நோக்கி.

"நான் ஒரு டிடக்டிவ். பாடறது என் வேலை இல்லை" என்றாள் தன்யா.

"பாடத் தெரியாதுன்னு ஒத்துக்க மாட்டா" என்று முதன்முறையாகத் தன்யாவை வாரினான் தர்மா.

"நீ? உனக்குப் பாடத் தெரியுமா?" என்று கேட்டாள் ராஜி. வெகு இயல்பாக அவர்கள் எல்லோரும் ஒருமைக்குத் தாவியிருந்தார்கள்.

"நான் ஒரு பப்ளிஷர். பாடறது என் வேலை இல்லை" என்றான் தர்மா, எல்லோருடைய பலத்த சிரிப்புக்கிடையில்.

மதிய உணவு வம்சீதரன் அனுப்பியிருந்தான். வெய்யில் அதிகம்தானென்றாலும் ஒரு குளிர்ச்சியான மரநிழலில் சுமோ நிறுத்தப்பட்டது. மரத்தடியிலேயே பெட்ஷீட் விரித்து எல்லோரும் அமர்ந்தார்கள். ராஜி எல்லோருக்கும் உணவைத் தட்டில் போட்டு நீட்டினாள்.

"டிடக்டிவ் வேலை கஷ்டமில்லை? எப்படி அதைக் கேரியரா தேர்ந்தெடுத்தீங்க?" என்று கேட்டாள் ராஜி, தனக்கும் ஒரு ப்ளேட்டில் புளியோதரையை வைத்தவாறே.

சர்க்கரைப் பொங்கலைச் சுவைத்துக் கொண்டிருந்த தன்யா "எதில்தான் டிடக்டிவ் வேலை இல்லை? கத்திரிக்காய் வாங்கும்போது அதில் சொத்தை இல்லையான்னு பார்க்கறியே, அது டிடக்ஷன் தானே? அந்தத் தத்துவத்தை அப்படியே மனிதர்களுக்கு அப்ளை பண்ண வேண்டியதுதான்" என்றாள்.

"அப்படிப் பார்த்தா விஞ்ஞான ஆராய்ச்சிகூட டிடக்ஷன், மருத்துவத் துறையில் டிடக்ஷன், எங்கும் டிடக்டிவ் வேலை இருக்கு, எல்லோரும் டிடக்டிவ் தான்ன்னு சொல்வே போலிருக்கே?"

"சந்தேகமென்ன?" என்றாள் தன்யா.

"ராஜி, கொஞ்சம் யோசிச்சுப் பாரு. பக்தி என்பது என்ன? தத்துவம் என்பது என்ன? உண்மையை நோக்கிய தேடல்தானே? அதுவும் பின்னே டிடக்ஷன் தான்" என்றான் தர்மா.

"இது இவனோட பெட் தியரி. இந்த லைனில் பேச ஆரம்பிச்சா பேசிக்கிட்டே இருப்பான்" என்றாள் தன்யா குறும்பாக.

"அப்போ ஆர்க்கியாலஜி, சரித்திர ஆராய்ச்சி இதெல்லாம்கூட டிடக்ஷன் தானே?" என்றான் சம்பத் யோசனையாக.

"கண்டிப்பா. எனக்கு ஒரு டைம் மெஷின் இருந்தா நான் பொன்னியின் செல்வன் காலத்தில் போய் இறங்கி, ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார்னு கண்டிபிடிப்பேன். என் கனவுகளில் ஒன்று அது" என்றாள் தன்யா, கண்கள் பளிச்சிட.

"எனக்குச் சகுனியைப் பற்றித் தெரிஞ்சுக்கணும்னு ஆசை. சூதாட்டத்திற்குப் பின்புலம் என்ன – பலர் சொல்கிற மாதிரிக் கௌரவர்கள் மீது அவனுக்கிருந்த வன்மமா, அல்லது பாரதம் சொல்கிற மாதிரி மிஸ்ப்லேஸ்ட் அஃபெக்ஷனா என்று பலமுறை யோசிச்சிருக்கேன்" என்றாள் தர்ஷினி.

"தர்மா, உன்னுடைய டிடக்ஷன் கனவு என்ன?" என்றான் வசந்த் சிரித்து.

தர்மாவும் சிரித்தான். "அது புதுசு இல்லை. கற்பகோடி காலம் எல்லோரும் தேடும் உண்மை தான். ஆத்மா!" என்றான். இப்படி ஆரம்பித்துப் பல சித்தாந்தங்களைப் பற்றியும் சொல்லிக்கொண்டே போனான்.

"இவனை இந்த விஷயத்தில் கிளப்பிவிடாதேன்னு சொன்னேனா இல்லையா?" என்றாள் தன்யா, அவன் நிறுத்தியதும்.

"பேசாம இரு. ஆத்மா பற்றிய விளக்கங்கள் இத்தனை எளிமையாகவும் இன்ட்ரெஸ்டிங் ஆகவும் நான் கேட்டதே இல்லை" என்றாள் ராஜி.

சம்பத் ஆழ்ந்த யோசனையில் விழுந்தான்.

*****

சுற்றுவட்டாரக் கோயில்கள் எல்லாம் பார்த்து முடித்து தர்மா, தன்யா, தர்ஷினி மூவரையும் அவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூரில் தங்கியிருந்த வீட்டில் இறக்கிவிடும்போது மணி இரவு ஒன்பதாகிவிட்டது.

"நீங்களும் வாங்களேன், சேர்ந்து டின்னர் சாப்பிடலாம்" என்று அழைத்தான் தர்மா.

"தாங்க் யூ, வீட்டுக்கே போயிடறோம். டின்னர் சமையல்கார அம்மா ரெடி பண்ணி வெச்சிருப்பாங்க" என்றாள் ராஜி.

தன்யாவும் தர்ஷினியும் நல்ல ட்ரிப்புக்கும் விளக்கங்களுக்கும் நன்றிகூறி வீட்டுக்குள் சென்றார்கள். ராஜி காரில் ஏறிக்கொண்டாள்.

தர்மாவும் வசந்தும் கைகுலுக்கினார்கள்.

"இன்னும் எத்தனைநாள் ஸ்டே?" என்று கேட்டான் வசந்த்.

"ஒரு கேஸ் விஷயமா தென்காசி பக்கத்தில் ஒரு ஊருக்கு வந்தோம், கொரோனா ஸ்கேருக்கு முன்னாடி. அந்த கேஸ் முடிஞ்சபோது கொரோனா ஆரம்பிச்சது. குற்றாலத்தில் ஒரு ரிசார்ட்லதான் தங்கியிருந்தோம். அங்கே ஒரு கேஸ். இப்போ ஊருக்குப் போகணும். அதுக்கு முன்னாடி சின்னதா கோயில்கள் விஸிட் பண்ணலாமேன்னு நினைச்சோம். நாளைக்கு ரெஸ்ட், கொஞ்சமா ஷாப்பிங். நாளை மறுநாள் புறப்படலாம்னு இருக்கோம்" என்றான் தர்மா.

"டிக்கெட்ஸ் வாங்கிட்டியா?" என்று கேட்டான் வசந்த்.

"என்ன டிக்கெட்? காரில்தான் போறதா இருக்கோம், பாதுகாப்புக்காக."

வசந்த் ஒரு விநாடி யோசித்தான். பிறகு "உங்க ரிடர்ன் ட்ரிப்பைக் கொஞ்சநாள் தள்ளிப் போட முடியுமா? எனக்குக் கொஞ்சம் உதவி வேணும்" என்றான்.

*************

இடம்: வசந்தின் வீடு

"யெஸ் வசந்த். நாங்க என்ன உதவி செய்யணும்?" என்றாள் தன்யா. தர்ஷினி கையில் டேப்லட்டும் ஸ்டைலஸும் ஏறியிருந்தது, குறிப்பெடுத்துக் கொள்ள. தர்மா அங்கு நடப்பதற்கும் தனக்கும் சம்பந்தமே இல்லை என்பதுபோல் பிரம்மமாக அமர்ந்திருந்தான்.

ராஜி டீக்கோப்பைகளுடன் வந்து எல்லோருக்கும் டீ கொடுக்கும்வரை வசந்த் மௌனமாக இருந்தான். அவள் அமர்ந்ததும் பேசலானான். "அஜாதசத்ரு என்ற மன்னனைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?" என்று கேட்டான்.

"பாண்டவர்களில் மூத்தவரான யுதிஷ்டிரரின் பெயர் அது" என்றான் தர்மா. "வடநாட்டிலும் அந்தப் பெயரில் ஒரு மன்னன் இருந்திருக்கான்."

"யெஸ்" என்றான் வசந்த். "தென்னாட்டிலும் அந்தப் பெயரில் ஒரு பாண்டிய மன்னன் வெகு காலத்திற்கு முன்னால் இருந்திருக்கான். அவன் தன் இரட்டைச் சகோதரனோடு சேர்ந்து ஆண்டதா கேள்வி."

"நானும் கேள்விப்பட்டிருக்கேன். ரொம்ப நேர்மையான மன்னர்கள்னு சொல்வாங்க" என்றான் தர்மா.

"இந்த அஜாதசத்ரு பல துறைகளில் தன் நாடு முன்னேறக் காரணமாக இருந்தான்னு சொல்வாங்க. அதில் முக்கியமா இரண்டு விஷயங்கள் அவன் தனிக் கவனம் செலுத்தினானாம்…"

"ஒண்ணு, கோயில்களைப் புதுப்பிச்சுக் கட்டறது, இன்னொண்ணு என்ன?" என்று கேட்டாள் தர்ஷினி மெல்லிய குரலில்.

"இன்னொண்ணு…" என்று ஆரம்பித்த வசந்த் சட்டென்று நிறுத்தினான். "அவன் கோயில்களைப் புதுப்பிச்சான்னு உனக்கு எப்படித் தெரியும்?" என்று வியப்புடன் கேட்டான்.

"மன்னர்களுக்கு ரொம்பப் பிடிச்ச வேலையாச்சே அது! அதைவெச்சு கெஸ் பண்ணினேன்" என்றாள் தர்ஷினி.

"எமகாதகி! சரி. இரண்டாவது என்னன்னு சொல்றேன். அது இத்தனைச் சுலபமா நீங்க கெஸ் பண்ண முடியாது…" நாடகத்தனமாக நிறுத்திய வசந்த் தொடர்ந்தான். "நோய் தீர்க்கும் வழிகளை ஆராய்வது!"

"ஓ!"

"ஆமா. அந்த மன்னன் மிகவும் கருணையானவன்னு சொல்றாங்க. அவன் ஆட்சிக் காலத்தில் பெரும் நோய் ஒன்று உலகைத் தாக்கினதாகவும், அதற்காக அவன் அச்வினீ தேவதைகளுக்குப் பெரிய யாகம் ஒன்று செய்ததாகவும் தெரியுது. அப்போ அச்வினீ தேவதைகள் அந்த நோய் நீங்க வழி செய்ததோடு மேலும் இம்மாதிரி நிகழ்வுகள் வந்தால் எதிர்கொள்வதற்கென்று அபூர்வ மூலிகைகளும் சித்த வைத்திய நூல் ஒன்றும் தந்தாங்களாம். அதை ஆதாரமா வெச்சுக்கிட்டு இவன் நாடுமுழுவதும் கோயிலை ஒட்டி மூலிகை வனங்களும், அதற்குப் பக்கத்திலேயே ஆதுரசாலைகளும் அமைச்சிருக்கான்.

"ஆனால் மிகக் கொடூரமான சில நோய்களைக் குணமாக்கும் மூலிகைகள் அவன் யாகம் நடத்திய மலைப்பகுதியில் மட்டும்தான் விளைந்தன. அங்கே இருந்த சிவன் கோயிலை இவன் புதுப்பிச்சுக் கட்டி, அதில் வேறெங்கும் இல்லாத அதிசயமா அச்வினீ தேவதைகளுக்குச் சன்னிதி கட்டியிருக்கான். அந்தச் சன்னிதியில்தான் அவர்கள் கொடுத்த வைத்திய நூலும் பாதுகாப்பா வைக்கப்பட்டிருக்கு."

"சரி. இதில் நாங்க எங்கே வரோம்?"

"அந்தக் கோயிலைத்தான் நான் தேடிக்கிட்டிருக்கேன். சில குறிப்புகளை வைத்து, அந்தக் கோயிலைப் பற்றிய அடையாளங்கள் தென்காசிக்குப் பக்கத்தில் இருக்கற திருவிலஞ்சிக் குமரன் கோயிலில் இருக்குன்னு தெரிஞ்சுக்கிட்டேன்.

"என்னைப் போன்ற ஆராய்ச்சியாளர்கள் ஒரு குழுவா சேர்ந்து நாலுபேர் இருக்கோம். இரண்டு முறை அந்தக் கோயிலுக்குப் போய் ஆராய்ச்சி பண்ணிட்டோம். எங்களுக்குத் தேவையான தகவல் கிடைக்கவேயில்லை. நீங்களும் என்னோடு வந்து தேடிப் பார்த்தா, உங்க டிடக்டிவ் பார்வைக்கு ஏதாவது கிடைக்கலாம் இல்லையா?"

வசந்த் முடித்தான்.

தன்யாவும் தர்ஷினியும் தர்மாவை ஆவலுடன் பார்த்தார்கள்.

தர்மாவின் முகத்தில் ஒரு சின்னச் சிரிப்பு விளையாடியது.

"ஒய் நாட்?" என்றான்.

"ஹே!" என்று கத்தி ஹை-ஃபைவ் செய்து தங்கள் ஆனந்தத்தைத் தெரிவித்தார்கள் தன்யாவும் தர்ஷினியும்.
 

sairenu

New member
Vannangal Writer
Messages
12
Reaction score
3
Points
3

5 - அன்று…​

பல ஒற்றர்கள் ஏவப்பட்டார்கள். சித்தர் குறிப்பிட்ட மாலாலயத்தைத் தேடிக் கண்டுபிடிக்க.

மிகவும் உற்சாகமாக அவர்களைப் பணியில் ஏவிய ஜடாவர்மனும் ஸ்ரீவல்லபரும் நாளாக, ஆக மனந்தளர்ந்தார்கள். காடுகளில் எங்கு தேடியும் அப்படி ஒரு ஆலயத்தின் சுவடுகளே இல்லை என்பதைத் தவிர, பாழடைந்த அந்த ஊரைப் பற்றியோ, நித்திலவல்லி, செண்பகா என்ற பெயர்களையோ, யாரும் அறிந்திருக்கவில்லை.

"சிவபாத சித்தரையே மீண்டும் கேட்கலாமா? உத்தேசமாக எந்தத் திசையில் ஆலயம் உள்ளது என்பதுபோன்ற குறிப்புகளை அவர் கொடுத்தாலும் போதுமே" என்றார் ஸ்ரீவல்லபர் கவலையோடு.

"அவர் திரிகூடமலைக்குச் செல்லப் போவதாகக் கூறினார் மாமா. அங்குள்ள காடுகளில்தான் அவரைத் தேடவேண்டும்" என்றான் ஜடாவர்மன்.

"சரி, ஒற்றர்களை அனுப்புவோம்" என்றார் ஸ்ரீவல்லபர்.

ஜடாவர்மப் பாண்டியன் சிரித்துவிட்டான். "மாமா, நாம் பேசுவது சிவபாத சித்தரைப் பற்றி என்பதை மறந்துவிடாதீர்கள். நீங்கள் ஒரு படையையே அனுப்பினாலும், அவருக்கு விருப்பம் இல்லையெனில் அவர் கண்ணில் தென்படவே மாட்டார்" என்றான்.

"இப்போது என்ன செய்வது? தொடர்ந்து தேடுவதற்கு ஏற்பாடுகள் செய்யலாமா? நம் ஆதுரசாலைகளையும் வைத்தியர்களையும் தயார்நிலையில் வைக்க நாம் திட்டங்களைத் தீட்டி அவற்றைச் செயல்படுத்தவும் வேண்டும்…"

"நான் ஒன்று சொல்லட்டுமா, மாமா?" என்றான் ஜடாவர்மன்.

"என்ன இது அனுமதி கேட்டுக் கொண்டு? மன்னர் பெருமான் கட்டளையிடுங்கள்."

"ஆகட்டும். கட்டளையே இடுகிறேன். நீங்கள் இன்றிலிருந்து இந்தத் தேசத்தை நிர்வகிக்கும் பொறுப்பை முழுவதுமாக வகிக்க வேண்டியது. நம் ஆதுரசாலைகளை விரிவாக்கித் தயார்நிலையில் இருத்தும் பொறுப்பையும் உங்களிடமே அளிக்கிறேன்" என்று ஜடாவர்மன் சொன்னதைக் கேட்டதும் துடித்துப் போனார் ஸ்ரீவல்லபர்.

"என்ன அரசே! தாங்கள் ஆட்சியைத் துறக்கப் போகிறீர்களா? அது கோழைகளின் செயலன்றோ? அதற்குள் மனமுடைந்து போகலாமா?" என்று தவிப்புடன் கேட்டார்.

"முடிதுறக்கப் போவதாக யார் சொன்னது? என்னை நீங்கள் அவ்வளவு பொறுப்பில்லாதவனாகவா மாமா வளர்த்திருக்கிறீர்கள்?" என்று ஜடாவர்மன் கேட்டதும்தான் நிம்மதியானார் ஸ்ரீவல்லபர்.

"அமைச்சர் பெருமானே, நான் திரிகூட மலைக்குச் சென்று மீண்டும் சிவபாத சித்தரைச் சந்திக்க இயலுமா என்று பார்க்கப் போகிறேன். மனமார வேண்டினால் அவர் என் முன் தோன்றுவார் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அவர் மூலம் ஆலயம் இருக்குமிடத்தை அறிந்து அங்குள்ள பிரச்சனைகளைத் தீர்த்துவிட்டு நான் நகரம் திரும்புகிறேன். அதன்பின் ஆலயக் குடமுழுக்கை நடத்திவிடலாம்" என்று விளக்கினான் ஜடாவர்மன்.

ஸ்ரீவல்லபர் தயங்கினார். "அதற்கு நீங்கள் தனியாகச் செல்ல வேண்டுமா அரசே? நானும் உடன் வருகிறேனே" என்றார்.

"அமைச்சரே! பேரிடர் ஒன்று வெகுவேகமாகப் பாண்டிய மண்டலத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் நான் தங்களைத் தவிர வேறு யாரையும் நம்பித் தேசத்தை விட்டுச்செல்ல இயலாது."

"சரி, உடன் நம் தளபதியையும், சில வீரர்களையுமாவது…"

"இல்லை, தளபதி உங்களுக்குத் தேவை. வீரர்களை அழைத்துச் சென்று காட்டில் கூட்டம் போட்டேனென்றால் சித்தர் என் முன்னால் வர மாட்டார். நான் தனியாகத்தான் இந்த முயற்சியில் இறங்க வேண்டும்" என்றான் ஜடாவர்மப் பாண்டியன்.

ஸ்ரீவல்லபர் பெருமூச்செறிந்தார்.

****

அரசு ஊழியர்கள் அனைவருக்கும் வேண்டிய உத்தரவுகளைப் பிறப்பித்துவிட்டு, தன் மனைவியர், மக்களிடம் விடைபெற்றுக் கொண்டு ஜடாவர்மன் சில நாட்களிலேயே மதுரையைவிட்டுக் கிளம்பிவிட்டான்.

அன்றிரவு தளபதி வெற்றிவேலர் ஆரோக்கியத்துறை அமைச்சரைச் சந்தித்தார்.

"மன்னர் தங்களிடம்தான் வெகுநேரம் பேசிக் கொண்டிருந்தார். ஏதேனும் பிரத்யேகக் கட்டளைகள் பிறப்பித்துள்ளாரா?" என்று விசாரித்தார்.

அமைச்சர் சற்றே தயங்கினார். பிறகு "ஆதுரசாலைகளுக்கு அதிக நிதி ஒதுக்கியிருப்பதாகவும், வைத்தியர்கள் பலரையும் ஆதுரசாலைகளில் சேர்க்கும்படியும், அனைத்து மருந்துகளையும் தயார்நிலையில் வைக்கும்படியும் உத்தரவிட்டார்" என்றார்.

"நீங்கள் சொல்வதைப் பார்த்தால் ஏதோ நோய்த்தொற்று நம் பாண்டிய மண்டலத்தைப் பீடிக்கப் போகிறது என்றல்லவா காண்கிறது?' என்றார் வெற்றிவேலர் யோசனையுடன்.

"ஆ… மாம். அவர் ஏதும் சொல்லவில்லை, ஆனால் அப்படித்தான் ஊகிக்கத் தோன்றுகிறது" என்றார் அமைச்சர்.

"என்ன, வெற்றிவேலரே, வெகுநேரமாக ஆரோக்கிய மந்திரியிடம் தனித்துப் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்? அது அத்தனை ஆரோக்கியம் இல்லையே" என்றவாறே உள்ளே நுழைந்தார் ஸ்ரீவல்லபர்.

'இந்தப் பாண்டிய நாட்டைப் பிடித்த ஆபத்தான கிருமி இவன்தான். புகை நுழையாத இடத்தில்கூட இவன் நுழைந்துவிடுவான்' என்று எண்ணி, ஸ்ரீவல்லபரை ஒரு குரோதப் பார்வை பார்த்தார் தளபதி. உடன் மிகவும் கஷ்டப்பட்டு அதனை மாற்றிக் கொண்டு, வலிந்து ஒரு புன்னகை புரிந்தார்.

"மன்னர் அவருக்கு ஏதேனும் விசேஷக் கட்டளையிட்டுள்ளாரா என்று கேட்டேன், அவ்வளவே! அப்படி ஏதேனும் இருந்தால், நம் படைகளும் அவருக்கு உதவலாமே என்றுதான்…"

"ஏன், ஆரோக்கிய மந்திரி ஏதேனும் போரில் ஈடுபட்டிருக்கிறாரா?" என்று கேலியாகக் கேட்டார் ஸ்ரீவல்லபர்.

"முதன் மந்திரிக்குத் தெரியாமல் அப்படியெல்லாம் இந்தத் தேசத்தில் நடைபெற்றுவிடுமா?" என்று திருப்பினார் தளபதி. "ஏதேனும் நோய்த்தொற்று பரவுவதாக மன்னர் கூறினாரா என்றுதான் விசாரித்துக் கொண்டிருக்கிறேன்."

"அப்படியா மந்திரியாரே? என்னிடம் அப்படி ஒன்றும் மன்னர் சொல்லவில்லையே? தங்களிடம் சொல்லியுள்ளாரா?" என்று ஆரோக்கிய மந்திரி பக்கம் திரும்பினார் ஸ்ரீவல்லபர்.

இவர்கள் சொற்போரில் அகப்பட நானா கிடைத்தேன் என்று தவித்த ஆரோக்கிய மந்திரி "இல்லை. மன்னர் ஆதுரசாலைகளைத் தயாராக வைக்கச் சொன்னாரேயன்றி, நோய்த்தொற்று எதுவும் வரப் போவதாகக் குறிப்பாகச் சொல்லவில்லை" என்றார்.

"அவர் சொல்லாதபோது நாமாக இல்லாததை ஊகிப்பது தவறன்றோ?" என்று கேட்டார் ஸ்ரீவல்லபர் புன்னகை மாறாமல்.

"ஆம்" என்று சொல்லிவிட்டு அவருக்கும் தளப்திக்கும் வணக்கம் செலுத்தி, விட்டால் போதுமென்று வெளியேறினார் ஆரோக்கிய மந்திரி.

******

ஒரு மௌனம். ஸ்ரீவல்லபரும் வெற்றிவேலரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு நின்றனர்.

"வெற்றிவேலரே! மன்னர் இப்போது தலைநகரத்தில் இல்லை. மிக முக்கியமான காரியத்திற்காக அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கிறார். இந்நிலையில் வதந்திகளைப் பரப்புவது தவறு என்று பழுத்த அனுபவமுள்ள தங்களுக்கு நான் சொல்லிப் புரிய வேண்டிய அவசியம் இல்லை…" என்று மௌனத்தைக் கலைத்தார் ஸ்ரீவல்லபர்.

"முக்கியமான காரியம்! இரகசியமான காரியமும் போலிருக்கிறது! இல்லையெனில் முதன்மந்திரியும் மன்னரும் மட்டுமே பேசி இப்படிப்பட்ட அவசர முடிவு எடுப்பார்களா?" என்றார் வெற்றிவேலர்.

"அதிலிருந்தே உங்களுக்கு விஷயம் புரிந்திருக்க வேண்டும். மீண்டும் மீண்டும் அதனை ஆராய்வதில் பலனென்ன? காரியம் இரகசியமென்றால் அதனை யாரிடம், எப்போது தெளிவுபடுத்துவது, அல்லது இரகசியமாகவே வைத்திருப்பது என்பதை முடிவெடுக்கும் முழு உரிமையும் மன்னருக்குத்தான் உண்டு என்பதை மறந்துவிடாதீர்கள்" என்றார் ஸ்ரீவல்லபர் தண்மையாக.

"உரிமை! யார் கொடுத்த உரிமை அது? மன்னன் எதேச்சதிகாரமாகச் செயல்படலாம் என்று எந்தச் சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிறது? மந்திராலோசனை செய்யாமல் மன்னன் ஒரு முடிவெடுக்கலாம் என்றோ, அதனைச் செயல்படுத்தலாம் என்றோ இந்த மன்னருக்குக் கற்றுக் கொடுத்தவர்கள் யார்? சொல்லுங்கள் அமைச்சரே!" என்று உறுமினார் வெற்றிவேலர்.

ஸ்ரீவல்லபர் ஏதோ சொல்ல முயன்றார். அதற்குள் வெற்றிவேலரே தொடர்ந்தார். "ஸ்ரீவல்லபரே! நம் பாண்டிய மண்டலத்தின் முந்தைய மன்னரின் பட்டமகிஷிக்குக் குழந்தைகள் இல்லை. எதிர்பாராதவிதமாகச் சேரர்களுடனான போரில் நம் மன்னர் அகால மரணமடைந்தார். ஆனால் அப்போது போரில் நாம் வென்றிருந்தோம். வீரத்தால் நம்மைப் பணியவைக்க முடியாதபோது மன்னர் மரணமடைந்ததைக் காரணம் காட்டிச் சேரநாடு நம் பாண்டிய மண்டலத்தை அடிமைப்படுத்த முயன்றது. அப்போது தாங்கள்தாம், மந்திரி மண்டலம் என்னை மன்னனாகத் தேர்ந்தெடுத்த பின்னரும்கூட, இரண்டு வயதே நிரம்பியிருந்த ஒரு பச்சிளம் பாலகனை, மன்னரின் இரண்டாவது மனைவியின் மகனை மன்னனாக அரியாசனத்தில் அமர்த்தினீர்கள். அவனுக்குக் கல்வியும் போர்க்கலையும் கற்பித்து அவனை நல்ல மன்னனாக்கினீர்கள். அதுவரை தாங்களே இந்தத் தேசத்தை நிர்வகித்தும் வந்தீர்கள்…"

"அந்தக் கோபம் – வெற்றிவேலரை நான் மன்னனாகவிடவில்லை என்ற கோபம் – இன்னமும் அவரைவிட்டு நீங்கவில்லை போலிருக்கிறது!" என்று இப்போதும் குரலை உயர்த்தாமலே கூறினார் ஸ்ரீவல்லபர்.

"அதனை நான் எப்போதோ மறந்துவிட்டேன் என்பது அமைச்சருக்கே தெரியும். என் சிந்தனை எப்போதும் இந்தத் தேசத்தின் நன்மையைக் கோரியே இயங்குகிறது. பண்டு நான் மன்னனாக விரும்பியதும் அதற்காகவே! தலைமுறை தலைமுறையாகப் பாண்டிய சிம்மாசனத்திற்கு விசுவாசமானவர்கள் என் குடும்பத்தினர். ஆனால் அதற்காக, ஆபத்து நேர்ந்திருக்கும் சமயத்தில் அரியணைப் பொறுப்புகளைத் துறந்து ஓடுகிறவர்…"

"…எச்சரிக்கிறேன், தளபதியாரே! மன்னர் எங்கு போயிருக்கிறார், எதற்காகப் போயிருக்கிறார் என்று தெரியாமல் ஏதேதோ சொல்லாதீர்கள்!" என்றார் ஸ்ரீவல்லபர். இன்னமும்கூட அவர் குரல் உயரவில்லையாயினும் அதில் கோபத்தின் அனல் தெரிந்தது.

"தெரியாததால்தானே சொல்கிறேன்! தெரிந்துவிட்டால் ஏன் சொல்லப் போகிறேன்?" என்றார் தளபதி.

"மன்னர் தன்னைப் பற்றியும் தன் செயல்களைப் பற்றியும் விளக்கமாகச் சொன்னாலே விசுவாசமாயிருப்போம், அவர் சொல்லவில்லையெனில் அதுவும் ஏதோ காரணத்திற்காகத்தான் என்பதை உணர மாட்டோம் என்று சொல்வது என்ன விசுவாசமோ தெரியவில்லை! என்றாலும் தளபதி, நீர் மன்னனுக்கு நன்மையைக் கருதியே இந்த உண்மையை அறிந்துகொள்ள விரும்புகிறீர்கள் என்று நம்பி, தங்களிடம் சொல்கிறேன். அரசியல் விவகாரங்களில் இரகசியம் காக்க வேண்டியதன் அவசியத்தைத் தளபதிக்கு நான் போதிக்க வேண்டியதில்லை என்று நினைக்கிறேன்…"

தளபதி ஒப்புக்கொள்ளவுமில்லை, மறுக்கவுமில்லை. 'மேலே சொல்லுங்கள்' என்பதுபோல் முகபாவம் காட்டினார்.

"தளபதியாரே, சிறிதுகாலத்திற்கு முன்பு சிவபாத சித்தரைச் சந்தித்தார் மன்னர். அவர் நம் பாண்டிய மண்டலத்தின் சுபிக்ஷத்திற்கு வேண்டி, ஒரு சிவாலயத்தைக் கண்டுபிடித்து அதற்குக் குடமுழுக்குச் செய்யக் கட்டளையிட்டுள்ளார். சித்தர் குறிப்பிட்ட சிவாலயத்தைப் பற்றிய குறிப்புகளை அவரிடம் கேட்டு வருவதற்காக, திரிகூட மலைக் காடுகளுக்குச் சென்றிருக்கிறார். விஷயம் அவ்வளவுதான். மதுரையில் திருவிழாக்காலம் தொடங்குவதால் ஆரோக்கிய மந்திரியைக் கவனமாக இருக்கச் சொல்லியிருக்கிறார். அவ்வளவுதான் விஷயம்" என்றார் ஸ்ரீவல்லபர்.

"இதற்கு இத்தனை இரகசியம் காக்க வேண்டிய அவசியம் என்ன என்று புரியவில்லையே" என்றார் வெற்றிவேலர் சந்தேகமாக.

"நாம் கண்டுபிடிக்க முயலும் சிவாலயத்தின் குறிப்புகள் இரகசியமான ஓரிடத்தில் இருக்கின்றன. அவ்விடத்தில் ஆபத்துகள் அதிகம். மன்னர் அவற்றைத் தனியாகவே சந்திக்க விரும்புகிறார். யாரையும் ஆபத்திற்கு ஆளாக்க அவர் விரும்பவில்லை" என்றார் ஸ்ரீவல்லபர்.

வெற்றிவேலர் புன்னகைத்தார். "இளம்வயது. சாகஸங்களைத் தேடிச் செல்லத்தான் தோன்றும்" என்று ஒப்புக்கொண்டார்.

ஸ்ரீவல்லபர் நிம்மதிப் பெருமூச்செறிந்தார்.

*****

"முதன்மந்திரி சொன்ன கதையை நீங்கள் நம்புகிறீர்களா, அப்பா?" என்று கேட்டான் சுபாங்கன்.

"நானென்ன, சிறு குழந்தைகூட அதை நம்பாது. பாண்டிய நாட்டை நோக்கி ஏதோ உற்பாதம் வந்துகொண்டிருக்கிறது என்று ஊகிக்கிறேன். அது ஏதேனும் நோய்த்தொற்றாக இருக்கலாம். அதை வெளியே சொல்லிவிட்டால், மன்னனுடைய ஆட்சியை மக்கள் குறைகூறுவார்களே என்றுதான் மன்னனும் மந்திரியும் உண்மையை மறைக்கிறார்கள்" என்றார் வெற்றிவேலர். "உற்பாதம் நிகழ்ந்தபிறகு, அதற்குப் பரிகாரம் தேடித்தான் மன்னர் நாட்டைவிட்டுச் சென்றிருந்தார் என்று சொல்லிவிடலாமே!"

"அடப்பாவிகளா! இப்போது நாம் என்ன செய்வது, அப்பா?" என்று கேட்டான் சுபாங்கன்.

"மகனே! உன்னை மன்னனாக்குவதற்குச் சிறந்த வாய்ப்பு இது என்றே எனக்குத் தோன்றுகிறது. ஆபத்து நேரத்தில் மக்களை நிர்க்கதியாக விட்டுவிட்டுச் சென்றுவிட்டார் மன்னர் என்பதை மக்கள் புரிந்துகொள்ளுமாறு நாம் நம் ஆட்களைக் கொண்டு பிரச்சாரம் செய்ய வேண்டும். மன்னன் நாட்டிற்குத் திரும்பி வரவே கூடாது. அப்படியே வந்தாலும், மக்கள் அவனை அரியணையிலிருந்து இறக்க வேண்டும்."

"இரண்டும் நடக்கவில்லையென்றால்?"

"அவன் இறக்க வேண்டும்."

(தொடரும்)
 

sairenu

New member
Vannangal Writer
Messages
12
Reaction score
3
Points
3

6 - இன்று…​

"வாவ்! எங்க கோவைக்கு அருகில் வருகிற க்ளைமேட் இங்கேதான். ஸெட்டில் ஆனா இங்கேதான் ஆகணும்" என்றான் தர்மா, தென்காசியை அடைந்ததும்.

"இப்போ ரொம்பக் கச்சடா ஊராகிடுச்சு, கூட்டம் ஜாஸ்தி. அதுக்குத் தகுந்த சுத்தம், ஏற்பாடுகள் இல்லே" என்றான் வசந்த்.

"இது ஒரு மீட்டிங் ப்ளேஸ் – முக்கியமான ஜங்க்ஷன். கேரளாவிலிருந்து ஷாப்பிங் வரவங்க, தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலிருந்து குற்றாலத்திற்கு வர டூரிஸ்ட்ஸ் – கூட்டம் அதிகமாத்தான் செய்யும்" என்றான் தர்மா.

இவர்கள் பேசி முடிப்பதற்குள் ஆனைப்பாலம் தாண்டி மேலகரம் கிராமத்திற்குள் நுழைந்துவிட்டார்கள். அதனைக் கடந்ததும் வலப்புறம் போன பாதையில் திரும்பினார்கள். சிறிதுநேரம் பயணத்திலேயே வந்துவிட்டது திருவிலஞ்சிக் குமரன் கோயில்.

கோயிலின் முன்னால் இருந்த பெரிய வெளியில் கார் நின்று தர்மா, தன்யா, தர்ஷினி இறங்கி, வெகுநேரம் வாய்பேசாது பிரமித்து நின்றார்கள்.

"என்ன? என்னாச்சு மக்களே?" என்று கேட்டான் வசந்த். ராஜி புரிந்தவளாய்ப் புன்னகைத்தாள்.

"வயல்களும் தென்னந்தோப்புகளும் காற்றும்… கூடவே கோயிலும்… அழகான வீடுகளும்…" என்று மனதின் பரவசத்தைச் சொல்ல இயலாமல் தடுமாறினான் தர்மா.

"சென்னை மக்களுக்கு இதெல்லாம் புதுசாத்தான் இருக்கும்" என்றாள் ராஜி. "இங்கேயே பிறந்து வளர்ந்தா…"

எல்லோரும் இயற்கையை ரசிப்பதிலிருந்து திரும்பி அவளை உற்றுப் பார்த்தார்கள்.

"அப்பவும் புதுசாத்தான் இருக்கும்" என்று முடித்தாள்.

"வெல் செட் ராஜி" என்று பாராட்டினான் தர்மா.

வசந்த் ராஜியைத் திரும்பிப் பார்த்தான்.

உன் அப்பாவின் ஜாடை தெரியும் முகம் உனக்கு. பேரழகான உடலமைப்பு என்றோ கவர்ச்சியான உடைகள் என்றோ சொல்லிவிட முடியாது. பெரிதான கவரக்கூடிய குரலமைப்போ, அசர அடிக்கும் பேச்சோ கிடையாது. பிறகு ஆண்கள் எதனால் உன்னிடம் கவரப்படுகிறார்கள்? எப்படி உன்னோடு இயல்பாகப் பேசுகிறார்கள்? வெகுநாட்கள் தெரிந்தவர்கள்போல் பழகுகிறார்கள்? உன்னிடம் ஏதோ ஒரு கவர்ச்சி இருக்கிறது, நீயறியாமலே!

நீ கள்ளங்கபடில்லாமல் இருக்கலாம், ஆண்கள் எல்லோரும் அப்படிப்பட்டவர்கள் இல்லை பெண்ணே! இந்தத் தர்மா… பார்வைக்கு நல்லவனாகத் தெரிகிறான். ஆனால் அவனைப் பற்றி நமக்கு என்ன தெரியும்? கவனம் வேண்டும் கண்ணம்மா! எல்லாரோடும் ஒரு டிஸ்டன்ஸ் மெயிண்டெயின் பண்ணிக்கறது கொரோனாவுக்கு மட்டுமல்ல, குடும்பத்துக்கும் நல்லது.


மனதில் மட்டும் இவ்வாறான சிந்தனைகள் ஓடிக்கொண்டிருக்க, முகம் மட்டும் ராஜியைப் பார்த்துப் புன்னகைத்தது.

*****

"இது செல்வகுமார், இது பழனி, இது ஆண்டனி" என்று அறிமுகம் செய்தான் வசந்த். "இவங்க தர்மா, தன்யா, தர்ஷினி."

"உங்களைப் பற்றி வசந்த் சொன்னான்" என்றான் செல்வகுமார். "நான் ஹிஸ்டரி ப்ரொஃபஸர். பழனி ஆர்க்கியாலஜிஸ்ட். ஆண்டனி கோயில் ஆகமங்களில் எக்ஸ்பர்ட்" என்றான்.

"வசந்த் – கட்டுமானம், சிலை அமைப்பு இதில் எக்ஸ்பர்ட்" என்று சேர்த்துக்கொண்டாள் ராஜி.

"ராஜிக்கு எப்போதும் வசந்த் பற்றித்தான் கவலை" என்றான் ஆண்டனி.

"அப்படித்தானே இருக்கணும்" என்று சிரித்தார் பழனி. அந்தக் குழுவில் அவர் மட்டுமே நடுத்தர வயதாய்த் தெரிந்தார்.

"எப்போதும் உள்ளது சரி சார், ஆனா இங்கே வந்தாச்சுன்னா கொஞ்சம் நம்ம ப்ராஜக்ட் பற்றிக் கவலைப்பட்டா தேவலை எல்லோரும்" என்றான் செல்வகுமார்.

"இல்லைடா, அப்படி ப்ராஜக்ட் பற்றி மட்டும் கவலைப்படறது நீங்க செய்யலாம், ஆனா எங்களுக்கு நம்ம எல்லாரோட சேஃப்டியைப் பற்றிய கவலையும் இருக்கு" என்றாள் ராஜி.

அங்கிருந்த கலகலப்பான சூழ்நிலை சட்டென்று கலைந்து ஒரு இறுக்கம் பரவியது.

வசந்த் சுதாரித்துக் கொண்டான். "செல்வா, எல்லாருக்கும் காப்பி போடு. நான் நம்ம கெஸ்ட்களுக்குத் தங்கற இடத்தைச் சுற்றிக் காண்பிக்கறேன்" என்றான்.

*****

பெரிதாகச் சுற்றிப் பார்க்க ஒன்றுமில்லை.

இவர்கள் வந்த கார்கள் ஒரு வீட்டின் பின்புறம் அனுமதி பெறப்பட்டு நிறுத்தப்பட்டிருந்தன. தங்குவதற்கு அந்த வீட்டின் மாடியிலேயே சிறிய ஹால், ஆஸ்பெஸ்டாஸ் போட்டு. அதிலேயே சிறிய பாகம் தடுக்கப்பட்டு, பாத்ரூம் வசதிகள்.

ஒரு கேரவான் கோயிலுக்கு முன்னாலேயே நிறுத்தப்பட்டிருந்தது. அதில் ஆய்வுக்கூடத்திற்கான வசதிகள்.

கோயிலைச் சாங்கோபாங்கமாக, நிதானமாகத் தரிசனம் செய்தார்கள். அப்போது இந்தக் கோயிலை ஆய்வுக்குத் தேர்ந்தெடுத்த காரணங்களை வசந்த் விளக்கிச் சொன்னான். தர்மா, தன்யா, தர்ஷினி கவனமாகக் கேட்டுக் கொண்டார்கள்.

கோயிலைவிட்டு வெளியே வந்தபோது கோயிலுக்கு எதிரேயிருந்த வெளியில் தேரடிக்குப் பின்னால் ஒரு ஷீட்டை விரித்துக் கொண்டிருந்தான் ஆண்டனி. அதில் எல்லோரும் அமர்ந்தவுடன் செல்வகுமாரும் ராஜியும் காப்பிக் கோப்பைகளுடன் வந்தார்கள்.

"ஸோ, மூலிகைகள் இருக்கற சிவாலயத்தைப் பற்றிய குறிப்புகள் இங்கே இருக்கும்ன்னு நினைக்கறீங்க" என்றாள் தர்ஷினி, இதுவரை சொல்லப்பட்ட எல்லாவற்றையும் கவனமாகக் குறிப்பெடுத்தவாறே.

"ஆக்சுவல்லி, ஜடாவர்ம பாண்டியனுக்கு அடையாளம் காட்டப்பட்ட கோயில் ஒன்று, அவனாக அடையாளங்களைக் குறித்துவைத்த கோயில் ஒன்று. இரண்டு கோயில்களில் எது இந்தக் கோயில் என்று தெரியலை. ஆனால் செப்பேட்டில் கிடைத்த ஆதாரங்கள்படி…" என்று ஆரம்பித்து மறுபடியும் எல்லாவற்றையும் விளக்கினான் வசந்த்.

காப்பியைக் குடித்ததும் மற்ற எல்லோரும் கோயிலை நோக்கிப் போய்விட்டார்கள். வசந்தும் ராஜியும் மட்டுமே அமர்ந்திருந்தார்கள்.

"நாங்க தேட வேண்டியது என்னன்னு இப்போ நல்லா புரிஞ்சுதா?" என்று கேட்டான் வசந்த்.

"அது நல்லா புரிஞ்சது. நாங்க தேட வேண்டியது என்னன்னுதான் புரியலை" என்றாள் தன்யா.

"எங்க வொர்க்கிலே ஹெல்ப் பண்ண…"

"வசந்த், ப்ளீஸ். டோண்ட் இன்சல்ட் அவர் இண்டலிஜென்ஸ்" என்றான் தர்மா புன்னகைத்து.

வசந்த் ராஜியை முறைத்தான். பிறகு "நாங்க முதன்முதலில் வரும்போது எங்களோடு செல்வகுமார் வரலை. வேறு ஒரு ஹிஸ்டரி புரொஃபஸர் வந்திருந்தார்" என்றான்.

"அவருக்கு என்னாச்சு?" என்றாள் தன்யா.

"தலையில் அடிபட்டுக் கோமாவில் கிடக்கார். பத்து நாளாச்சு."

"ஆக்ஸிடெண்ட் இல்லை" என்றாள் ராஜி.

"அது தெரியும்" என்பதுபோல் அவளைப் பார்த்தாள் தன்யா. பிறகு மறுபடி வசந்தை ஏறிட்டாள். "ஆக, எங்க வேலை – செக்யூரிட்டி டீடெய்ல், இல்லையா?"

"அப்படிச் சொல்ல முடியாது. நாங்க தேடற விஷயத்தைச் சீக்கிரம் கண்டுபிடிக்கணும் என்கிறதுதான் முதல் ப்ரையாரிட்டி. இங்கே வந்து கிட்டத்தட்ட ஒரு மாசமாச்சு, நாங்க நினைச்சதைக் கண்டுபிடிக்க முடியலை. நடுவிலேயே இந்த ப்ரொஃபஸர் தாக்கப்பட்ட மேட்டர். அது அவரோட எதிரிகள் யாரோ செய்தது, பர்சனல் மேட்டர்னுதான் போலீஸ் சொன்னாங்க. இருந்தாலும் மற்ற டீம் மெம்பர்ஸ் மனதில் ஒரு பயம் இருக்கும் இல்லையா? அதான்…"

"மாரல் சப்போர்ட்?"

"அதேதான்."

"ஓகே" என்றாள் தன்யா, முழுவதுமாக ஒப்புக்கொள்ளாதவளைப் போல்.

அப்போது "வசந்த்! கொஞ்சம் இங்கே உடனே வா" என்று பழனி சார் பரபரப்பாகக் கூப்பிடும் சப்தம் கேட்டது.

(தொடரும்)
 

sairenu

New member
Vannangal Writer
Messages
12
Reaction score
3
Points
3

7 அன்று…​

ஒரேநாளில் திரிகூடமலைக் காடுகளை அடைந்துவிட்டான் ஜடாவர்மன்.

உடல் கெஞ்சிற்று, ஓய்வுக்கு. மனம் "இந்த மலையின் அழகை நின்று பாரேன்" என்று கெஞ்சிற்று. குதிரை தன் கண்களால் தன் களைப்பைக் காட்டிக் கெஞ்சிற்று.

கிராமத்தில் தங்கிவிட்டு மறுநாள் காடுகளுக்குச் செல்லலாம் என்ற சிந்தனையே அவனுக்கு வரவில்லை. மாலை மங்குவதற்குள் அவன் காடுகளுக்குள் வெகுதூரம் சென்றுவிட்டான்.

ஒரு நீர்நிலையை அடைந்து அங்கே குதிரையை நிறுத்தினான். அதன் அருகிலேயே இருந்த பெரிய மரத்தின்மேல் அன்று இரவு படுத்து உறங்குவது என்று நிச்சயித்துக் கொண்டான்.

திடும்மென்று அந்த மரத்தின் பின்னாலிருந்து ஒருவர் வெளிவந்தார். "ஆரப்பா அது?" என்றார். அடர்ந்த காடுகளுக்கிடையில் ஒரு மனிதனைக் கண்டதில் அவர் ஒன்றும் பயந்ததுபோல் தெரியவில்லை.

"வணக்கம். தாங்கள் வைத்தியர்போல் காணப்படுகிறீர்கள்" என்றான் ஜடாவர்மன், அவர் கையிலிருந்த மூட்டையிலிருந்து வெளியே தெரிந்த மூலிகைகளைக் கண்டதும்.

"வைத்தியர் அப்படித்தான் காணப்படுவார். நீ கூடத்தான் ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவனைப்போல் காணப்படுகிறாய்" என்றார் அவர்.

ஜடாவர்மன் சிரித்துக் கொண்டான். "முக்கியமான ராஜகாரியமாக வந்திருக்கிறேன்" என்று மட்டும் அவரிடம் சொன்னான். தன்னை யாரென்று அவர் தெரிந்து கொள்ளவில்லை என்பது அவனுக்கு ஆறுதலாக இருந்தாலும், ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவன் என்று அறிந்து கொண்டுவிட்டாரே என்று வியப்பாகவும் இருந்தது.

"நல்லது இரவில் காட்டைக் கடந்து பிரயாணம் செய்ய மாட்டாய் என்று நினைக்கிறேன். இஷ்டமிருந்தால் என்னோடு வந்து என் வீட்டில் தங்கலாம்."

"இல்லை ஐயா, நான் வந்ததே காட்டுக்குத்தான். இங்கேயே தங்கிக் கொள்கிறேன்.

வைத்தியர் ஜடாவர்மனை வியப்புடன் ஏறிட்டார். "நீயும் மூலிகை பறிக்க வந்தாயா?"

"அது போன்று ஒரு வேலை" என்று மட்டும் குறிப்பிட்டான் மன்னன்.

"சரி, காட்டின் விளிம்பில்தான் என் வீடு உள்ளது. இரவு தங்கிக் கொண்டு காலை விடிந்ததும் வரலாமே" என்று மீண்டும் வலியுறுத்தினார் வைத்தியர்.

"ஐயா, தங்கள் கருணை உள்ளத்திற்கு நன்றி. ஆனால் இந்த அன்பை ஏற்றுக்கொள்ள இயலாத நிலையிலிருக்கிறேன். நான் தேடிவந்தது ஒருவேளை இரவில் அகப்பட்டதென்றால்? வேலை முடியும்வரை இங்கிருந்து செல்ல இயலாது" என்றான் ஜடாவர்மன் உறுதியாக.

"ஊஹும், நீ மூலிகைகளைத் தேடி வந்தவன்போல் தோன்றவில்லை. மூலிகை வைத்தியனுக்கு எந்த மூலிகை எப்போது அகப்படும் என்று நன்றாகவே தெரியும்" என்றார் வைத்தியர்.

"நான் மூலிகை தேடி வந்தேன் என்று எப்போது சொன்னேன்" என்றான் ஜடாவர்மன் புன்னகையுடன்.

"உண்மை, சொல்லவில்லைதான். நல்லது. இந்தா, இதனைப் பெற்றுக் கொள். இதனையாவது மறுக்காதே" என்றவாறே ஒரு மூட்டையை அளித்தார் வைத்தியர்.

"என்ன ஐயா இவை? எனக்கு மூலிகைகள் வேண்டாம்" என்றான் ஜடாவர்மன்.

"அரும்பாடுபட்டுத் தேடியெடுத்த மூலிகைச் செல்வங்களை அவற்றுக்கு அவசியமில்லாத உனக்கு அளிப்பதற்கு எனக்கு இன்னும் பைத்தியம் பிடிக்கவில்லை" என்றார் வைத்தியர். "இது உணவு. நீ உணவருந்தவில்லை என்பது உன் முகத்தைப் பார்த்தாலே தெரிகிறது. இந்தக் குளத்து நீர் வேண்டாம், வேறு எங்கேனும் நீர்நிலைக்கருகில் அமர்ந்து உண்டுவிட்டு உன் வேலையைப் பார். வயதானவன் சொல்லும் இதையாவது கேட்டுக்கொள், எதிர்த்து வாதாடாதே" என்றார் வைத்தியர்.

ஜடாவர்மன் கண்ணில் நீர் துளிர்த்துவிட்டது. தடுமாறிக் கொண்டு நன்றி கூறியவன், அவர் அளித்த உணவு மூட்டையை வாங்கிக் கொண்டான். "இந்த மனவளமல்லவா மண்ணின் வளமாக விகசிக்கிறது! இவர்களுக்கு வரவிருக்கும் நோய்க்கிருமியால் எவ்வித ஆபத்தும் வந்துவிடக் கூடாது. உயிரைக் கொடுத்தேனும் இந்த உத்தமர்களைக் காக்க வேண்டும்" என்று மனதிற்குள் உறுதிபூண்டான்.

அவனுடைய நன்றியை லட்சியம் செய்யாமல் "வருகிறேன்" என்று தடியை ஊன்றிக் கொண்டு கிளம்பிவிட்டார் வைத்தியர்.

திடீரென்று நினைத்துக் கொண்டவன்போல் பாண்டியன் "ஐயா" என்று அழைத்தான்.

"என்ன வேண்டும்?" என்று திரும்பினார் வைத்தியர்.

"இங்கே மலையில் சித்தர்கள் நடமாட்டம் உண்டா? நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?" என்று கேட்டான்.

"ஓ! சித்தர்களைத் தேடி வந்தவனா நீ? சரிசரி, இந்தக் காட்டில் இராத்தங்கப் போவதாக நீ சொன்னதுமே நான் புரிந்து கொண்டிருக்க வேண்டும்" என்று தனக்குத்தானே சொல்லிக் கொள்பவரைப் போல் மொழிந்தவர் அவனை உற்று நோக்கினார். "திரிகூடமலை என்றுமே சித்தர் பூமிதானே" என்றார்.

"தாங்கள் பார்த்திருக்கிறீர்களா என்பதே என் கேள்வி."

"சிலமுறை பார்த்திருக்கிறேன்."

"யாருடனாவது பேசியிருக்கிறீர்களா?"

"சித்தர்களோடு நாம் பேச முடியாது, தம்பி! அவர்கள்தாம் நம்முடன் பேசுவார்கள், நமக்கு ப்ராப்தமிருந்தால்" என்றார் வைத்தியர்.

பாண்டியன் புரிந்ததைப் போன்று தலையை ஆட்டினான். "என் கேள்வி என்னவென்றால், சித்தர்களுள் ஒருவரை நாம் அவசியம் சந்திக்க வேண்டுமெனில், அதற்கு ஏதேனும் வழி இருக்கிறதா? அவரை அழைப்பதற்கு ஏதேனும் முறை இருக்கிறதா…"

அந்த இருளிலும் வைத்தியரின் பார்வை ஊசிபோல் குத்த, ஜடாவர்மன் நிறுத்தினான். "சித்தர்களை நீ சந்திக்க முடியாது, ப்ராப்தமிருந்தால் அவர்கள் உன்னைச் சந்திப்பார்கள் என்று இப்போதுதானே சொன்னேன்? நீயும் தெரிந்த விஷயம்போல் தலையாட்டினாயே?"

"வைத்தியர் ஐயா, என் நிலையைப் புரிந்துகொள்ளுங்கள். மிக, மிக முக்கியமான, அவசரமான காரணத்திற்காய் நான் சித்தர் ஒருவரைச் சந்தித்தாக வேண்டும். இந்தக் காட்டைப் பற்றித் தெரிந்தவர் நீங்கள். சித்தர் நடமாட்டம் அதிகமாக இருக்கும் பகுதி எது? சித்தர்களை அழைப்பதற்கு மந்திரம் ஏதேனும் இருக்கிறதா? இவை போன்ற தகவல்களையே தெரிந்துகொள்ள விரும்பினேன்" என்றான் ஜடாவர்மன்.

வைத்தியர் சிறிதுநேரம் அமைதியாக இருந்தார். பிறகு, "என் பின்னால் வா" என்று சொல்லிவிட்டுக் காட்டின் உள்ளே வேகமாகச் சென்றார். அடர்ந்த செடிகொடிகளுக்கு இடையில் குதிரையையும் பிடித்துக் கொண்டு அவருக்குப் பின்னால் போக ஜடாவர்மன் திணறினான்.

சிறிதுதூரம் சென்றதும் மரங்களுக்கு இடையில் சிறிய வெளி காணப்பட்டது. அங்கே ஒரு லிங்கம் இருந்தது. லிங்கத்தைச் சுற்றிலும் யாரோ கற்களைக் கொண்டு மூன்றடி உயரத்தில் சிறிய சுவர் கட்டியிருந்தார்கள்.

"இங்கேயே காத்திரு. இந்த ஆலயத்திற்குச் சித்தர் பெருமக்கள் வருவதுண்டு. உனக்கு அதிர்ஷ்டமிருந்தால் உன் கண்ணில் அவர்கள் தெரியலாம்" என்று சொல்லிவிட்டு மீண்டும் காட்டில் நுழைந்து மறைந்தார் வைத்தியர்.

*****

ஜடாவர்மன் கற்சுவற்றுக்கு வெளியே அமர்ந்தான். நீளநீளச் சுவாசங்களால் தன் உடலையும் மனத்தையும் சாந்திப்படுத்தினான்.

மிக மெல்லியதாய்ச் "சலசல"வென்ற சப்தம் அவன் காதுகளுக்கு எட்டவே, அந்தத் திசையில் சென்று அருகிலேயே சிறிய வாய்க்கால் ஒன்றைக் கண்டான். அதன் தூய தெள்ளியதான நீரைப் பருகி, அதன் அருகிலேயே அமர்ந்து வைத்தியர் தந்த உணவையும் அருந்தினான். பிறகு மீண்டும் ஆலயத்தின் அருகில் வந்து அமர்ந்துவிட்டான்.

பொழுது விடிந்தது. காலை உணவுக்கு வாய்க்கால் நீரையே அருந்திவிட்டு ஆலயத்திற்கு வந்துவிட்டான். இப்படியே மூன்று நாட்கள் கழிந்தன. ஆலயத்திற்குச் சித்தர்கள் யாரும் வரவில்லை, அவன் கண்ணிலும் எந்த நடமாட்டமும் தென்படவில்லை.

நான்காம் நாள் காலை அவன் துயில் நீங்கியபோது, அவனுக்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

ஆம், சிவலிங்கத்திற்கு இரவில் பூஜை நடந்திருப்பதற்கான அடையாளங்கள் தெரிந்தன. மலர்கள் கிடந்தன. லிங்கத்திற்கு வஸ்திரம் சார்த்தப்பட்டிருந்தது. நிவேதன அன்னப் பருக்கைகள் ஓரிடத்தில் தெரிந்தன.

இரவில் சித்தர்கள் இங்கு வந்திருந்திருக்கிறார்கள்! பூஜை நடத்தியிருக்கிறார்கள்! பாவி நான், ஏதும் அறியாதவனாய் உறங்கியிருக்கிறேன்.

ஜடாவர்மன் அங்கும் இங்கும் பித்துப்பிடித்தவன்போல் ஓடினான். எங்கானும் சித்தர்களின் காலடி தெரிகிறதா, எவ்விடத்திலாகினும் அவர்கள் சென்ற பாதையின் அறிகுறி தெரிகிறதா என்று தேடினான்.

என்ன செய்கிறேன் நான்? ஆலயத்தை ஒட்டியே இருந்திருக்கிறேன், அவர்கள் வந்துபோனதை என்னால் அறிய முடியவில்லை. மண்ணிலும் காற்றிலும் எதைத் தேடிக் கொண்டிருக்கிறேன்?

ஜடாவர்மன் ஒருமுறை தன் தலையை உதறினான். சித்தர்கள் மனம் வைக்காமல் தான் அவர்களைக் காண்பது என்பது நடவாத காரியம் என்பதை ஆணித்தரமாகத் தனக்கு உணர்த்தியிருக்கிறார்கள் என்று புரிந்துகொண்டான்.

ஜடாவர்மன் லிங்கத்தின் அருகேயே வந்து அமர்ந்தான். பசி, தூக்கம் பாராது திருவைந்தெழுத்தை ஜபிக்கலானான். நீரருந்துவதையும் நிறுத்திவிட்டான்.

ஐந்து நாட்கள் கழிந்தன. ஜடாவர்மன் பாதி மயக்க நிலைக்குப் போய்விட்டான். மனம் மாத்திரம் திருவைந்தெழுத்தை சதா உருப்போட்டுக் கொண்டிருந்தது.

இரவி மறைந்தான். இரவு உதித்தது. பால்போன்ற ஒளி படர்ந்தது. மயங்கியிருந்த ஜடாவர்மன் ஏனோ சட்டென்று விழித்துக் கொண்டான்.

ஆஹா!

அன்று முழுநிலவு போலும். அதன் தங்க ஒளியில் காடு சுவர்க்கம் போன்று காட்சியளித்தது.

"டக், டக்" என்ற காலடியோசைகள் ஜடாவர்மனுக்குக் கேட்கவாரம்பித்தன. யாரோ வருகிறார்கள்!

இந்தச் சிந்தனை ஜடாவர்மன் உள்ளத்தில் தோன்றி மறைவதற்குள் மரங்களுக்கிடையில் உருவங்கள் காணப்பட்டன. ஜடாவர்மன் சுதாரிப்பதற்குள் அங்கே பத்து, பதினைந்து பேர் கூடிவிட்டார்கள். ஆ! சித்தர்கள் அன்றோ!

வந்தவர்கள் அவனைச் சட்டை செய்யவும் இல்லை. நேராக லிங்கத்தை நோக்கி நடந்தார்கள். பூஜைப் பொருட்களைச் சுற்றிலும் பரப்பினார்கள். ஒருவர் ஜடாவர்மன் கண்ட வாய்க்காலுக்குச் சென்று குடத்தில் நீர் கொணர்ந்தார்.

பாலாபிஷேகமேபோல் வானில் பௌர்ணமிச் சந்திரன் பிரகாசிக்க, சித்தர்கள் சிவபெருமானுக்குச் சாங்கோபாங்கமாகப் பூஜைகளை நடத்தினார்கள். மந்திரச் சப்தம் தவிர வேறு பேச்சுகளே இல்லை.

பூஜை நிறைவடைந்ததும் ஒரு சித்தர் எல்லோருக்கும் பிரசாதங்களை வழங்கினார். ஒதுங்கி நின்றுகொண்டிருந்த ஜடாவர்மனுக்கும்கூட அவை வழங்கப்பட்டன.

சித்தர்கள் ஒவ்வொருவராகக் கோயிலுக்கு அடுத்திருந்த வெளியில் ஓரிடத்திற்குச் சென்று அங்கிருந்து மறைந்தார்கள். அந்த அற்புதக் காட்சியைக் கண்டு பேச்சிழந்து நின்றான் ஜடாவர்மன்.

"என்ன பாண்டியா! என்னைத் தேடி வந்தாய், என்னைக் காணாமல் எங்கோ பார்த்துக் கொண்டிருக்கிறாய்?" என்ற குரல் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பினான் ஜடாவர்மன். அங்கே சிவபாத சித்தர் புன்னகையுடன் நின்று கொண்டிருந்தார்.

(தொடரும்)
 
Status
Not open for further replies.
Top Bottom