Your browser does not support JavaScript!

லாகின் செய்வதில் சிரமம் இருப்பவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய மின்னஞ்சல் - sahaptham@gmail.com


ஒரு கரண்டி காபிப் பொடி - சிறுகதை / - ராம் ஸ்ரீதர் -

RS DHAR

Member
Vannangal Writer
Messages
31
Reaction score
22
Points
8
ரோகினியின் குரலை காலையில் கேட்டவுடன் குமரனுக்கு தலைவலி ஆரம்பித்தது.

"ஒரு நாள் என்றால் பரவாயில்லை. தினமும் இவ்வளவு தண்ணீராக பால் என்றால் தயிர் மட்டும் எப்படி கெட்டியாக வரும்?"

ரோகினி சொல்லி முடிக்கும் முன், குமரனின் தாயார் அடுப்பங்கரை உள்ளேயிருந்து சத்தமாக, "பால் திக்காக வேண்டும் என்றால் கூடுதல் யார் பணம் தருவார்? வீட்டுல உக்காந்துகிட்டு இவ்வளவு பேச்சுக் கூடாது"

இதற்கு மேலும் படுப்பதற்கு சாத்தியம் இல்லை என்பது தெரிந்ததால் குமரன் மெதுவாக எழுந்து, படுக்கையைச் சரி செய்துவிட்டு பாத்ரூமுக்குள் சென்றான்.

இந்த யுத்தம் ஒரு நாள், இரண்டு நாள் சமாச்சாரம் இல்லை. கிட்டத்தட்ட அவனுக்கு கல்யாணமாகி வந்ததிலிருந்தே நடந்து வருகிறது.

ரோகிணி ஆகட்டும், அல்லது அவன் அம்மாவாகட்டும், இரண்டு பேருமே ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல.

அம்மாவுக்கு வயதாகிவிட்டது என்று சிறிதளவு கூட ரோகிணி இரக்கம் காட்டுவது இல்லை. ரோகிணி இந்த வீட்டில் வாழ வந்தவள் என்று அம்மாவும் கரிசனம் காட்டுவது இல்லை. சரிக்கு சமமாக தினமும் மல்லுக்கட்டி, முடிவாக இரண்டு பக்கமுமே உருளுவது என்னமோ குமரன் தலைதான்.

பாத்ரூமிலிருந்து வெளியே வந்தவன், பொதுவான குரலில், "காபி கிடைக்குமா?" என்றான்.

அருகில் காய்ந்த துணிகளை மடித்துக் கொண்டிருந்த ரோகிணி உடனே பதில் சொன்னாள்.

"காபி குடிக்கணும்னா, கிச்சன் பக்கம் போய் உங்க அம்மாகிட்ட கேக்கணும். இங்கிருந்து குரல் கொடுத்தா காபி என்ன பறந்து வருமா?"

குமரன் அவளிடம் எதுவும் பேசாமல் கிச்சன் சென்றான். ரோகிணியிடம் எது சொன்னாலும் அது விதண்டாவாதத்தில்தான் முடியும். சச்சரவு அதிகமாகி அலுவலகம் கிளம்ப நேரம் ஆகிவிடும்.

அங்கு போய் இவர்கள் இருவரையும் விட மிக மோசமான மனிதர் ராம்தாஸ், அவரிடம் எப்போதும் போல அர்ச்சனை வாங்கிக் கட்டிக் கொள்ள முடியாது.

ராம்தாஸ், ஆபீஸில் குமரனின் மேலதிகாரி. அவருக்கும், எல்லோரையும் போல பிடித்தவர், பிடிக்காதவர் என இரண்டு லிஸ்ட் உண்டு. துரதிர்ஷ்டவசமாக, குமரன் அதில் இரண்டாவது லிஸ்டில் இருந்தான். அவன் எது செய்தாலும், எப்படிச் செய்தாலும் அதற்கு ஒரு மாற்றுக் கருத்தைச் சொல்லி தினமும் உபதேச ரத்தினமாலை ஒன்றை இலவசமாக வழங்குவார் ராம்தாஸ்.

அலுவலக சிக்கலை ஒப்பிடும்போது, வீட்டில் நடக்கும் சண்டை எவ்வளவோ தேவலை. கண்டுகொள்ளாமல் போய்விடுவது உத்தமம் என்பது குமரன் கடந்த இரண்டு வருடங்களில் கற்றுக்கொண்டது.

யார் பக்கம் நியாயம் இருந்தாலும், அவன் பேச ஆரம்பித்தால், இரண்டு பக்கமும் இருந்து இடி இவன் மேல் விழ ஆரம்பிக்கும்.

அந்தத் தலைவலி அவன் அலுவலகம் சென்று வந்த பின்பும், விட்ட அதே இடத்திலிருந்து தொடரும் தொல்லையைத் தாங்குவதுதான் மிகவும் எரிச்சலான ஒரு விஷயம்.

அடுப்படி வாசலில்அவன் தாயார் ஒரு டம்ளர் காபியோடு காத்திருந்தாள்.

"இந்தப் பாரு குமரா. பால் கெட்டியா வேணும்னா, கொஞ்சம் கூட செலவு செய்து ஃபுல் க்ரீம் மில்க் அப்படின்னு ஆவின்ல வருது. அது வாங்கி குடுத்தா நல்லா திக்கா காபி, தயிர் இதெல்லாம் கிடைக்கும். ஆனா செலவு அதிகம்தான். அது வேண்டாம்னு பார்த்தால் காலையிலேயே உன் பொண்டாட்டி பஜனை பாட ஆரம்பிச்சிட்டா......" குமரன் தாயார் குரலில் ஒரு ஆயாசம் தெரிந்தது.

கையில் டம்ளரை வாங்கிக் கொண்டு காபியை பருக ஆரம்பித்தவன், "விடும்மா, இன்னும் நாலு அஞ்சு மாசம் ஆச்சுன்னா ரோகினியும் வேலைக்கு போக ஆரம்பிச்சுடுவா. அதுக்குப்பிறகு இது போல டெய்லி காலை சுப்ரபாதம் நீ கேக்க வேண்டாம்......"

சொல்லி முடிக்கும் முன், பின்னாலிருந்து ரோகினியின் குரல் ஏராளமான வெப்பத்துடன் வெளிப்பட்டது.

"நான் ஒரு வார்த்தை சொன்னது உங்களுக்கு சுப்ரபாதமா? சபாஷ். அதெப்படி அம்மா, பிள்ளை ரெண்டு பேரும் ஒரே மாதிரி இருக்கீங்க?"

"இதென்ன கேள்வி? என் மகன் என்னை மாதிரிதானே இருப்பான்? இது என்ன அதிசயம்?"

மிக அதிசயமாக அம்மாவின் பதிலுக்கு இன்னொரு பதில் சொல்லாமல் நொடித்துக்கொண்டு போய்விட்டாள் ரோகிணி.

===================================

எதிர்பார்த்தது போலவே அலுவலகம் வந்து சேர நேரமாகிவிட்டது. இன்று வழக்கத்திற்கு மாறாக, ராம்தாஸ் அவர்களின் உதவியாளர் ஷாலினி வாசலிலேயே குமரனை நிறுத்தி வைத்து,

"டெய்லி லேட்டா வரணும்னு ஏதாவது பிரார்த்தனையா?" என்று கேட்க, ஷாலினிக்குப் பதில் சொல்ல முடியாவிட்டால் ராம்தாஸ் போன்றவர்களைச் சமாளிக்க முடியாது.

குமரன் அங்கேயே நின்று, "ஷாலினி, பதில்உள்ளே வந்து, சொல்லலாமா, இல்லாட்டி பதில் சொன்னால்தான் உள்ளேயே வர அனுமதி கிடைக்குமா?" என்றான் கிண்டலாக.

அவன் குரலைக் கேட்டு, வெளியே வந்த ராம்தாஸ், "இன்னிக்கி மதியம் அலுவலக ஆடிட் வரும்போது உன்னுடைய பிரச்சனையை முக்கியமா அவங்ககிட்டகொண்டு போகப் போறேன். ஒரு நாள், ரெண்டு நாள் கிடையாது. தினமும் லேட். அலுவலக நுழைவில் பயோமெட்ரிக் சென்ஸர் இருந்து எவ்வளவு நிமிடம் லேட் அப்படின்னு காமிச்சு, கடைசியில் அதனால் சம்பளம் கட் பண்ணும் போது நான் வேண்டாதவனாக ஆயிடுவேன். யாரையும் கேள்வி கேட்டா, அது பிடிப்பதில்லை" என்று சொல்லி நிறுத்தினார்.

குமரன் பதில் சொல்ல ஆரம்பித்தவன், அதில் உபயோகம் எதுவுமில்லை என்று அப்படியே நிறுத்திக்கொண்டு உள்ளே சென்றான்.

====================================

லஞ்சுக்குப் பிறகு அவனுடைய மொபைலில் ரோகிணி அழைத்தாள்.

"லவ் மேரேஜ்தான். ஆனா, என்னிக்காவது நான் உங்ககிட்ட ஏதாவது தேவையில்லாம கேட்டு உங்களைக் கஷ்டப்படுத்தி இருக்கேனா? ஒரு நாள் போல ஒரு நாள் உங்க அம்மா காலையிலேயே என் மீது குத்தம் கண்டுபிடிக்க ஆரம்பிச்சா அது ராத்திரி வரை தொடரும். லவ் பண்ணும் போதே உங்க ஜாதியிலேயே ஒரு பொண்ணு கிடைக்கலையா? எதுக்காகத் தேடிவந்து என்னை லவ் பண்ணி, கல்யாணம் பண்ணிக்கிட்டு, இப்போ எதற்கெடுத்தாலும் உங்க அம்மாகிட்ட பேச்சு வாங்கிக்கணும்?"

குமரன் எதுவும் பேசாமல்அமைதியாக இருந்தான். ரோகிணி தொடர்ந்தாள்.

"நமக்கு கல்யாணம்ஆகி இரண்டு வருஷம் ஆச்சு. குழந்தை இல்லைனா, பெண் மட்டுமே காரணம் இல்லை அப்படிங்கறது உங்க அம்மாவுக்குத் தெரியாது. உங்களுக்குத் தெரியும்தானே? அப்புறம், ஒரு நாளாவது இது மாதிரி உங்க அம்மா என்னைத் தப்பு சொல்லும் போது எனக்கு சப்போர்ட் பண்ணி பேசி இருக்கீங்களா?"

இனிமேலும் பதில் சொல்லவில்லை என்றால் அந்தப் பேச்சு அலுவலக நேரம் முடியும்வரை தொடரும் என்பதால்,

"ரோகிணி, இவ்வளவு நாள் பொறுத்துகிட்ட. இன்னும் நாலஞ்சு மாசம் தான். வேலைக்குப் போக ஆரம்பிச்சா, இந்த பிரச்சனை தொடராது. கவலைப்படாதே. குழந்தை விஷயம் அம்மாவுக்கு புரியலை. நான் பேசறேன். அப்புறம் வேலை கொஞ்சம் ஜாஸ்தியா இருக்கு. காலையிலேயே லேட்டா வந்ததால ஆரம்பிச்ச அக்கப்போர் இன்னும் முடியல. இப்போ ரொம்ப நேரம் போனில் பேச முடியாது. ஸாரி, சாயங்காலம் பேசலாம்."

பதில் எதுவும் வரும்முன் இணைப்பைத் துண்டித்தான்.

====================================

கதவு தட்டப்பட்ட சப்தம் கேட்டது. அருகிலிருந்த ரோகிணி கதவைத் திறந்தபோது, வெளியே எதிர்வீட்டு சாவித்ரி மாமி நின்றிந்தார்.

ரோகிணியைப் பார்த்து ஒரு பளீர் புன்னகை வீச, ரோகிணி கொஞ்சம் அசந்துதான் போனாள். 'மாமிக்கு என்ன ஒரு ஐம்பது வயது இருக்குமா? ஒரு நாள் டல்லாக இருந்து பார்த்ததில்லை.

எப்போதும் மஞ்சள் பூசி, புத்துணர்வுடன் ஒரு புன்னகை அணிந்து.....மாமி பாஸிடிவிடிக்கு ஒரு உதாரணம்தான்'.

"ரோகிணி, என்னம்மா அப்படியே நின்னுட்ட? நான் செத்த உள்ள வரலாமா?" ரோகிணி சட்டென நகர்ந்து கொண்டு,

"ஓ, மன்னிச்சிக்கிங்க மாமி, ஸாரி. உள்ள வாங்க" என்றாள்.

உள்ளே நுழைந்த சாவித்ரி மாமி, "ரெண்டு ஹெல்ப். ஒண்ணு, ஒரு கரண்டி காபி பொடி குடு. கோதாஸ் தானே வாங்குறீங்க. அப்புறம், உன்கிட்ட யுஎஸ் மாடல் ப்ளக் இருக்குமா? என்னோடது கீழ விழுந்து உடைஞ்சு போச்சு. நம்ம இந்தியன் மாடல் ப்ளக்ல எங்காத்து எலெக்ட்ரிக் குக்கர் வேல பண்ணாது" என்றாள்.

மாமியின் இரு மகன்களும், மருமகள்களும் அமெரிக்காவில் இருக்கிறார்கள். எனவே அவர்கள் வீட்டில் எல்லாமே யுஎஸ் மாடல் பொருட்கள் இருப்பதில் ஆச்சரியமில்லை.

"ஒரு நிமிஷம் மாமி, குமரன் ஒரு முறை ப்ராஜக்ட்காக நியூயார்க் போயிட்டு வந்தபோது ஒரு யுனிவர்சல் அடாப்டர் கொண்டுவந்த ஞாபகம். பார்க்கிறேன்" என்று உள்ளே சென்றாள்.

பீரோவிலிருந்து எடுத்துவிட்டுத் திரும்பியபோது பின்னாலேயே சாவித்ரி மாமி நிற்பதைக் கண்டு ஒரு கணம் துணுக்குற்று பின் சமாளித்துக் கொண்டாள்.

"இதோ மாமி" நீட்டினாள்.

"என்ன தூக்கமா?" என்ற மாமியின் கேள்விக்கு ஒரு நிமிடம் லேட்டாகப் புரிந்துகொண்ட ரோகிணி தலையாட்டினாள். கேள்வி குமரன் தாயாரைப் பற்றி எனப் புரிந்தது.

ஐந்து நிமிட அளவளாவலுக்குப் பிறகு சாவித்ரி மாமி வெளியேறினார்.

மாலை ஏழு மணி சுமாருக்கு உள்ளே நுழைந்த குமரன், அதிசயப்படும் அளவுக்கு அவனுடைய அம்மாவும், ரோகிணியும் அருகருகே அமர்ந்து டிவி பார்க்கும் மும்முரத்தில் இருந்தார்கள்.

"மழை வர்ற மாதிரி இருக்கு" என்று நக்கலாக சொல்லியபடி உள்ளே சென்றான்.

மறுநாள் அதிகாலை பூஜை மணியோசை கேட்டு எழுந்தான் குமரன்.

'நம் வீட்டில் இவ்வளவு சீக்கிரம் பூஜையா?' ஆச்சரியப்பட்டுக்கொண்டே அறையிலிருந்து வெளியே வந்தவன், ரோகிணி குளித்து, ஸ்வாமி படங்களுக்கு பயபக்தியாக சாம்பிராணி காட்டுவதைப் பார்த்தான்.

"ஆடி வெள்ளிடா. இந்தா காபி. நாங்க ரெண்டு பேரும் கோயிலுக்குப் போயிட்டு வர்றோம். ஹாட்பேக்ல இட்லி இருக்கு. சாப்பிட்டுட்டு லாக் பண்ணிக்கிட்டு வேலைக்கு போ. லஞ்சு வெளியே சாப்டுக்கோ.." என்ற அவன் அம்மா, ஒரு சிறிய இடைவெளிவிட்டு, "சைவம்" என்று சொல்லி அகன்றாள்.

குமரன் தலையாட்டிவிட்டு பாத்ரூமுக்குள் நுழைந்தான்.

சிறிது நேரம் கழித்து வெளியே வந்தவன் மேலும் ஆச்சரியமடைந்தான். அவனுடைய வீட்டுக்கு வெளியே இருந்த துளசிச் செடி அருகே அவன் அம்மா நின்றிருக்க, ரோகிணி அவர் காலில் விழுந்து கும்பிட்டுவிட்டு எழுந்திருப்பதைக் கண்டான். "என்னதான் நடக்குது?" என்று ஆச்சரியப்பட்டான்.

அவன் அப்படியே பேஸ்த் அடித்து நிற்பதைப் பார்த்து சிரித்தவாறே உள்ளே நுழைந்த ரோகிணி அவனருகே வந்து மிக மெதுவாக,

"என்னங்க ஆச்சரியமா இருக்குதா? நேத்து ஒரு கரண்டி காபிப் பொடி கடன் வாங்க வந்த சாவித்ரி மாமி, எப்போதும் போல ஸீன் போட்டுட்டு, கொஞ்சம் நேரம் கழிச்சு வெளிய போறதுக்கு முன்னாடி, உங்க அம்மாவை நான் எப்படி எப்படி சென்டிமெண்டா அட்டாக் பண்ணலாம்னு ஐடியா குடுத்தாங்க. அதோட ஆரம்பம்தான் இது. இனிமே பாருங்க. எங்களுக்குள்ள சண்டை, சச்சரவு வராம பாத்துக்கிறேன். வந்தாலும் நான் உங்கம்மாவை அப்படியே சென்டிமென்ட் பேசியே கவுத்துடறேன். கவலைப்படாதீங்க" என்று கண் சிமிட்டிவிட்டு நகர்ந்தாள்.

"ஒரு நிமிஷம் ரோகிணி, அப்பிடி அந்த சாவித்ரி மாமி என்னதான் ஐடியா சொன்னாங்க?" என்றான் குமரன் மெதுவான குரலில்.

"நீங்க என்னை எப்போ பார்த்தாலும் திட்டிகிட்ட இருக்கீங்கன்னு நான் அப்பப்போ உங்க அம்மா கிட்ட சொல்லி, கண்ணைக் கசக்கனும். அவ்ளோதான்" என்று சொல்லி சிரித்தாள் ரோகிணி.

குமரன் காபியைக் குடித்தபோது அது மிக ருசியாக இருப்பதாக உணர்ந்தான். .
================================
 
Top Bottom