உயிர் துடிப்பாய் நீ!
அத்தியாயம் 32
மணியரசி வந்து உண்மையைச் சொல்லி சென்றபின் மிகன் மனதளவில் நொறுங்கிப் போய்விட்டான்..
அடுத்து என்ன செய்வதென்றும் தெரியாமல், தன் மனதோடும் போராட முடியாமல் கண்களை மூடி படுத்திருந்தான்.
திகழொளியை அவன் இத்தனை நாள் பேசிய பேச்சுக்கள் எல்லாம் அப்போது நியாபகம் வந்து, அவன் மனதை வாள் கொண்டு அறுத்தது. அந்த நொடி சொல்ல முடியாத மரணவேதனையை அனுபவித்தான்.
மரணத்தின் கடைசி நொடி கூட இப்படி வலிக்குமா என்று தெரியாது..ஆனால் அவன் அப்போது அப்படியொரு வலியை அனுபவித்தபடி படுத்து இருந்தான்.
உலகமாறனோ மருமகள் சென்ற பின் மகன் அறையை விட்டே வெளியில் வரவில்லையே? என்று நினைத்தபடி அவனைத் தேடிச் சென்றார்.
மகன் படுத்திருந்த கோலமே அவனின் வேதனையைச் அவருக்கு சொல்லாமல் சொல்லியது..
மெல்ல மகனின் அருகில் அமர்ந்தவர் அவனின் தலையை மென்மையாக வருடினார்..
தந்தையின் மென்மையான வருடலில் கண்விழித்தவன்.தந்தையை அருகில் கண்டுதும் தலையை குனிந்த படி எழுந்து அமர்ந்தான்.
தப்பு செய்த குழந்தையாய் மகன் அமர்ந்திருந்த விதமே அவருக்கு வருத்தத்தை கொடுத்தது.
சில நொடிகள் அமைதியாய் அமர்ந்திருந்தவர் மெல்ல பேச்சு எடுத்தார் " என்னப்பா பிரச்சினை..?ஏன் திகழி அவங்க அம்மா விட்டீற்கு தீடிர்ன்னு போனாள்..?என்றவரிடம் மகனோ பதில் எதுவும் சொல்லாமல் மெளனம் சாதித்தான்.
"ஏதாவது சொல்லுப் பா.. இப்படி பதில் பேசாமல் உட்கார்ந்திருந்தால் என்ன அர்த்தம்? உனக்குள்ளேயே அத்தனையும் போட்டு அழுத்திக்காதே..! இத்தனை வருடம் கழித்தும் திகழியைத் தான் கல்யாணம் செயதுக்குவேன்னு சொன்னே. நானும் நீ நல்லா இருந்தா போதும்ன்னு அவங்க வீட்லே பேசி கல்யாணமும் பண்ணி வச்சுட்டேன்..நீங்க தான் பா வாழனும்..! என்ன பிரச்சினையானாலும் பேசிதீர்த்துகனும்.."என்றார் வருத்ததுடன்.
அப்போதும் தந்தையின் பேச்சுக்கு பதில் பேசாமல் தலையை குனிந்த படியே அமர்ந்திருந்தான் மிகன்.
உலகமாறனோ நெடிய மூச்சுடன் " நீ இன்னும் நீரன் பிரச்சினையை மறக்கவில்லையா..? திகழி நல்ல பெண் பா..! அவளை தள்ளி இருந்து பார்த்த எனக்கே புரியுது! அவளை நேசித்த உனக்கு அவள் குணம் புரியவில்லையா..?"என்ற தந்தையை அடிப்பட்ட குழந்தையாய் நிமிர்ந்து பார்த்தான் மிகன்.
" தம்பி உன்னை நம்பி வந்தவளை நீ தான் பார்த்துக்கணும்.நீரன் குணம் மோசம்ன்னு எனக்கு எப்பவோ தெரியும். உன் அத்தைக்காக நான் அனைத்தையும் பொறுத்துக் கொண்டேன்.ஆனால், நான் இத்தனை நாள் பொறுத்திருந்தது தப்புன்னு இப்ப தோணுது . அவனால் என் மகனின் வாழ்க்கையே இப்ப கேள்விக் குறியாகிடுச்சே..?" என்று கலங்கிப் பேசிய வரை திகைத்துப் பார்த்தான் மகன்.
" தம்பி நீ தான்ப்பா என் உயிர் ! உனக்காக தான் நான் வாழ்வதே..! திகழியுடன் நீ சந்தோஷமா வாழனும் ..! அதை நான் பார்க்கனும்..! என் பேரன் பேத்தியை எல்லாம் நான் பார்த்ததுட்டு தான் உங்கம்மா கிட்ட போகனும்ன்னு நினைச்சேன். ஆனால் நீ என்னை இப்பவே போகவச்சுடாதே..!" என்றவரிடம்..மகனோ "அப்பா.." என்றான் குரல் தழுதழுக்க..
"தம்பி என்ன பிரச்சினை இருந்தாலும் ,முதல்லே நீ போய் திகழியை இங்கே கூட்டிட்டு வா..! நம் வீட்டிற்கு வாழ வந்த பொண்ணு ! கண் கலங்கிட்டு அவங்க வீட்டுக்கு போனா? அது நல்லதில்லை ..! அந்த பாவம் ஏழெழு ஜென்மம் எடுத்தாலும் தீராது .."என்றார் வருத்தத்துடன்..
மகனோ பதில் பேச முடியாமல் "அப்பா ..!"என்று குழந்தை போல் தந்தையின் தோளில் சாய்ந்து கொண்டான்..
அவரோ, ஆறுதலாக மகனை தட்டிக் கொடுத்தபடி "இங்க பாருப்பா உன் மனசை நீரன் ஏதோ சொல்லி கெடுத்து வச்சு இருக்கான். போனவனைப் பற்றி பேசி இனி பயனில்லை..நீங்க வாழவேண்டியவங்க ! திகழி தான் உனக்கு ஏத்த பொண்ணு.! .என்ன பிரச்சினை இருந்தாலும் அவ கிட்ட பேசி சமாதானப்படுத்திக் கூட்டிட்டு வா..!"என்றார் கட்டளையாக..
அத்தனை நேரம் அமைதியாக இருந்தவன்,அதற்கு மேல் தாங்க முடியாமல் தந்தையிடம் தன் மனதிலிருந்ததை எல்லாம் கொட்டித் தீர்த்தான். தன் அத்தை வந்து சொல்லிச் சென்ற உண்மைகளையும் சொன்னான்.
உலகமாறனோ, அதை கேட்டு ஒரு நொடி அதிர்ந்து தான் போனார்! தான் நினைத்ததை விட பிரச்சினை பெரிதாக இருக்கே..என்று நினைத்தார்.
தன் தங்கையை இங்கே அழைத்தே வந்து இருக்க கூடாதா ? என்று முதல் முறையாக எண்ணியவர் மகனிடம் எதையும் காட்டிக் கொள்ளாமல்..
" தம்பி நான் உன்னை புத்திசாலின்னு நினைச்சேனே ! ஆனால், நீ இப்படி ஒரு அடி முட்டாளாக இருந்திருக்கியே ! திகழி கேட்டதில் என்ன தப்பு? நீரன் சொன்னதை நம்புனீயே! ஒரு முறையாவது திகழியிடம் என்ன நடந்ததுன்னு கேட்டாயா? விசாரிச்சீயா? கட்டிய மனைவியை நம்பவில்லை!எவனோ சொன்னதை நம்பி உன் வாழ்க்கையில் நீயே மண்ணள்ளி போட்டுட்டீயே..!" என்றார் கோவமாக..
தந்தையின் கோபத்தைக் கண்டு "அப்பா.."என்றான் எழுப்பாத குரலில்..
அவரோ ,"நான் தான் தப்பு பண்ணிட்டேன்..உங்க அம்மா போனபின் நான் இன்னும் உன்னை சரியாக கவனித்து இருக்கனும். அம்மா பாசத்திற்கு நீ ஏங்க கூடாதுன்னு உங்க அத்தையை இங்கே கூட்டி வந்து தப்பு பண்ணிட்டேன்.நீரனைப் பற்றியும் எதுவுமே தெரியாமல் இருந்து விட்டேன். புத்திர பாசத்தில் உங்க அத்தையும் எல்லாத்தையும் மறைச்சுட்டா..இனி யாரை குறை சொல்லி என்ன செய்ய..உன் வாழ்க்கை உன் பொறுப்பு ! இனியாவது போய் உன் பொண்ட்டாட்டியை கூட்டிட்டு வந்து ஒழுங்கா குடும்ப நடுத்துற வழியைப் பாரு !"'என்று மகனுக்கு புத்தி சொன்னார்.
அவனோ, தலை குனிந்த படியே அமர்ந்திருந்தான்.தந்தையின் முகத்தை ஏறெடுத்துப் பார்க்க கூட அவனுக்கு தைரியம் வரவில்லை ..
மகன் அமைதியாகவே இருப்பதைக் கண்டு.. "நீயெல்லாம் என்னத்தே காதலிச்சையோ தெரியலே.."என்று சலித்துக் கொண்டே எழுந்தார்.
அவனோ "அப்பா.." என்றான் வேறு எதுவும் பேசாமல்..
"செய்யறதை எல்லாம் செய்துட்டு அப்பா..அப்பான்னா என்ன அர்த்தம்..எழுந்து போய் முதல்லே திகழியே கூட்டிட்டு வா.." என்று எரிச்சலுடன் பேசியவரிடம்..
"அப்பா நான் எந்த முகத்தை வைத்துட்டு போறது எனக்கு கஷ்டமா இருக்கு பா.."
" எந்த முகத்தை வச்சுட்டு போறதுன்னா ? இந்த முகத்தை வச்சுட்டுத் தான் போகனும்.. உப்பு திண்ணா தண்ணீ குடிச்சுத் தான் ஆகனும்.. போய் அவ கையிலே ! கால்லே ! விழுந்தாவது கூட்டிட்டு வா!" என்றார் சற்று கோபமாக..
மிகனோ, பதில் சொல்லாமல் சில நொடிகள் அமைதியாக இருந்தவன் இனியும் அமைதியாக இருந்தால் அப்பாவுக்கும் கோபம் வரும் என்று எண்ணியபடி "சரி போறேன்..! "என்றான் தந்தையிடம் சமாதானமாக..
"ம்..! "என்றவர் ஒரு நெடிய பெரூமூச்சுடன் அறையை விட்டுச் சென்றார்.
மிகனோ, அதன்பிறகு வேகமாக கிளம்பி தன் வண்டியை எடுத்துக் கொண்டு, மாமனார் வீடு நோக்கிப் பறந்தான்.
திகழொளி வீட்டிற்கு பெட்டியுடன் வந்தவுடன் பெற்றவர்களுக்கு புரிந்துவிட்டது..கணவன் மனைவிக்குள் ஏதோ சண்டை என்று..
தாய், தந்தையிடம் எதுவும் சொல்லாமல் தன் அறையில் தஞ்சம் புகுந்துந்தவள் ! தம்பியிடம் மட்டும் சுருக்கமாக நடந்ததைச் சொன்னாள்.
அமுதனோ, தமக்கை சொன்னதைக் கேட்டவுடன் வானுக்கும், பூமிக்கும் குதித்தான்.
"அந்த ஆளு திருந்தவே மாட்டாரா? அன்னைக்கே அந்த ஆளை நம்பாதேனேன்னு சொன்னேன் கேட்டீயா? இப்ப நீ தானே கஷ்டப்படறே.." என்று தமக்கையை கடிந்து கொண்டான்.
"அம்மு நானே நொந்து போய் வந்திருக்கேன்! நீயும் என்னைப் நோகடிக்காதே ! என்னால் தாங்க முடியாது.." என்று கண்கலங்கியவளிடம்..
" ஏதோ கோவத்தில் பேசிட்டேன்.. சாரிக்கா ! நீ கவலைப்படாதே எல்லாம் சரியாகும் ,,"என்று அப்போதைக்கு ஆறுதலாக பேசினான்.
திகழொளியோ, அதற்கு மேல் எதுவும் பேசாமல் அப்படியே படுத்து கண்களை மூடிக்கொணடாள்..
அமுதனும் அவளை தொந்தரவு செய்யாமல் அறையை விட்டு வெளியில் வந்தவன், கவலையாக அமர்ந்திருந்த தாய், தந்தையிடம் "சின்ன சண்டை தான் சீக்கிரம் சரியாய்டும்.." என்று பொய்யுரைத்தான்.இப்போதைக்கு அவர்களையும் வேதனைப்படுத்த வேண்டாமென்று..
திகழொளியோ ,இருட்டும் வரை அப்படியே தான் படுத்திருந்தாள்..
அமுதனுக்கும் என்ன செய்வதென்று தெரியாமல், தலையில் கை வைத்தபடி வெளியில் மாடி படிக்கட்டில் அமர்ந்திருந்தான்.
அப்போது மிகன் வேகமாக வந்து வீட்டின் முன் வண்டியை நிறுத்தினான். வண்டிச் சத்தம் கேட்டு எழுந்த அமுதன் மிகனைப் பார்த்ததும் வேகமாக அவனிடம் சென்று "நில்லுங்க ! இப்ப எதுக்கு இங்கே வந்து இருக்கீங்க..?" என்றான் கோபமாக..
"அமுதா உங்கிட்ட இப்ப எதுவும் பேசற மனநிலையில் நான் இல்லை..நான் உடனே உங்க அக்காவே பார்த்துப் பேசனும்..!"
"எதுக்கு இன்னும் அவளை சாவடிக்கவா..?ஏன் இப்படி அவளை உயிரோடு கொல்றீங்க..? உங்களே காதலிச்சதை தவிர அவ வேறே என்ன தப்பு செய்தா..?"
"அமுதா நானே நொந்துபோய் வந்து இருக்கேன்! நீயும் என்னை நோகடிக்காதே..! ப்ளீஸ் வழி விடு! நான் திகழியை இப்ப பார்த்தே ஆகனும்! என்னை நம்பு! இனி உங்க அக்காவை நான் என் கண்ணுக்குள் வச்சு பார்த்துப்பேன்..!"என்றான் மிகன்..
அமுதனுக்கோ, மிகனின் கண்களில் தெரிந்த வலி மனதை ஏதோ செய்ய..எப்படியோ அக்கா நல்லா இருந்தா போதும்! என்று வழி விட்டவன்.. "அக்கா அவ ரூம்லே இருக்கா.." என்றான்.
அதை கேட்டு தலையை ஆட்டிவிட்டு வேகமாக உள்ளே செல்ல திரும்பிய மிகனை "ஒரு நிமிடம்!" என்று தடுத்து நிறுத்திய அமுதன்..
"நீங்க சொல்றது உண்மைன்னு இப்ப கூட நம்பி அக்காவை பார்க்க அனுப்புறேன். ஆனால், மறுபடியும் எங்க அக்கா கண்ணுலே தண்ணீயே பார்த்தேன்! நான் மனுசனா இருக்க மாட்டேன்.."என்று எச்சரித்தான்.
மிகனோ, ஒரு நொடி கண்களை இறுக மூடித்திறந்தவன் பதிலே பேசாமல் உள்ளே சென்றான்.
வரவேற்பறையிலிருந்த பொன்னியும், அறவாணனும் தங்கள் மாப்பிள்ளையை அந்த நேரத்தில் பார்த்து திகைத்தாளும், எதையும் காட்டிக் கொள்ளாமல் இன் முகமாகவே வரவேற்றனர்.
அவர்களிடம் "திகழி எங்கே..?" என்று கேட்டான்..
அவர்களோ " அவ ரூமுலே இருக்கா தம்பி" என்றனர்.
"நான் திகழியை பார்த்துட்டு வரேன்!" என்று மாமனார் மாமியாரிடம் கூறியவன், அவர்களின் பதிலை எதிர்பார்க்காமல் மனைவியின் அறைக்குச் சென்றான்.
திகழொளியோ, வாடிய கொடியாய் சுருண்டு படுத்திருந்தாள்.அவள் கண்களில் நீர் மட்டும் அருவியாக வடிந்து கொண்டிருந்தது.
அறைக்குள் சென்ற மிகன், மனைவி இருந்த நிலையை கண்டு தன்னையே நொந்து கொண்டு அவள் அருகில் சென்று அமர்ந்தான்.
மனைவியிடம் எந்த அசைவும் இல்லாததைக் கண்டு, அவள் கண்களில் வடிந்த கண்ணீரை மென்மையாக துடைத்து விட்டான்..
கணவனின் ஸ்பரிசம் பட்டவுடன் விழிகளை சட்டென்று திறந்தவள், கணவனை அந்த நேரத்தில் அங்கு கண்டவுடன் அடித்தபிடித்து எழுந்து அமர்ந்தாள்.
மிகனோ, "ஒளி.." என்று அழைத்தவனுக்கு, அதற்கு மேல் வார்த்தையே வரவில்லை..எங்கே ஆரம்பித்து எப்படி பேசுவது என்று அவனுக்கு எதுவுமே புரியவில்லை..
இது கனவா? நனவா? என்று புரியாமல் திகைத்து பார்த்த மனைவியை இழுத்து தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டவன், "ஒளி சாரி டா..சாரி டா.." என்றான்..
அவளோ ,எந்த வித எதிர்வினையும் ஆறாறாமல் சிலையாக அமர்ந்திருந்தாள்..
தொடரும்..
Hi friends,
உயிர் துடிப்பாய் நீ ! அடுத்த அத்தியாயம் 32 போட்டாச்சு படித்து விட்டு உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்..
அடுத்த அத்தியாயம் புதன்கிழமை..
நன்றி
அன்புடன்
இனிதா மோகன்